தன் குஞ்சு பொன் குஞ்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 2,614 
 
 

கா..கா..கா..கா….கிர்..க்ஹா..

ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாய் மனைவியும் குழந்தைகளும் நேற்றைய சாப்பாடையே சாப்பிட்டு கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போன கோபத்தில் சமையலறைக்குள் ஏதாவது கிடைக்குமா என்று ஒவ்வொரு பாத்திரத்தின் மூடியையும் திறந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இதன் சத்தம் இடைஞ்சலாக இருந்தது.

வேகமாய் கொஞ்சம் கோபமாய் வாசல் புறம் வந்தேன். பக்கத்து வீட்டின் காம்பவுண்டின் மேல் நின்று கொண்டு ஜோடியாய் காகங்கள் மூடியிருந்த கதவை பார்த்து சத்தமிட்டு கொண்டிருந்தது.

ஜோடியாய் காணப்பட்ட இரண்டில் ஒன்று அவ்வபொழுது சத்தமிட்டு விட்டு மூக்கை காம்பவுண்ட் சுவற்றின் கீழ் தேய்த்துக்கொள்ளும், மற்றொன்று அடுத்து சப்தமிடும், அடுத்து இது மூக்கை தேய்க்க இன்னொன்று சத்தமிடும். எவ்வளவு விவரமாய் தன்னுடைய வேலையை பகிர்ந்து கொள்கிறது., மனதுக்குள் அந்த எரிச்சலையும் மீறி யோசித்தேன். எப்பொழுதும் இந்த நேரத்தில் பக்கத்து வீட்டு அம்மாள் இவைகளுக்கு சாப்பாட்டை போட்டிருப்பார்களே? இவ்வளவு சத்தத்துக்கும் அவர்கள் வரவில்லை என்றால் கண்டிப்பாய் வெளியூர் சென்றிருக்கலாம்.

இவைகள் கத்துவதை பார்க்க கொஞ்சம் பரிதாபமாய் இருந்தது, சரி நாம் சாப்பிடற பழைய சோற்றையே இதற்கும் போடுவோம் உள்ளே வந்தேன்.. ஒரு தட்டில் கொஞ்சம் சாதத்தை போட்டு எடுத்து வந்து பக்கத்து வீட்டு காம்பவுண்டின் மேல் கொட்டி வைத்து விட்டு, தட்டை எடுத்துக்கொண்டு என் வீட்டிற்கு வந்து நடப்பதை கவனித்தேன்.

நான் அந்த சாதத்தை வைக்கும் வரை சற்று நகர்ந்து போன இரு காக்கைகளும், இப்பொழுது மெல்ல தத்தி வந்தன. இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்து கா..கா..என்று சத்தமிட்டு விட்டு அந்த பழைய சாப்பாட்டை சுற்றி வந்தன. ஒரு காக்கை மெல்ல மூக்கை வைத்து பார்த்து நகர்ந்து கொண்டு கா..கா..சப்தமிட்டன

எரிச்சல் வந்தது, இந்த காக்கைகளுக்கு வந்த வாழ்வை பாரேன்.! பழையதை போட்டால் சாப்பிட மாட்டேனென்கிறது, மனதுக்குள் சொல்லிக்கொண்டவன் அப்படியே அங்கிருந்த படியில் உட்கார்ந்து என்னதான் முடிவெடுக்கிறது பார்த்து விடுவோம் இந்த எண்ணத்தில் கவனிக்க ஆரம்பித்தேன்.

அவைகள் நான் வைத்த சாதத்தை கண்டு கொள்ளவேயில்லை. இவனென்ன பழையது வைப்பது நாமென்ன அதை சாப்பிடுவது ? பழையதை சாப்பிட மறுக்கும் எரிச்சலில், காக்கைகளை சூ..சூ..மெல்ல விரட்டினேன்.

அவைகள் அலட்சியமாய் என்னை பார்த்து, பழையதை போட்டுட்டு விரட்டறதை பாரேன், கேலியாய் பார்ப்பது போல பார்த்து விட்டு பின் முகத்தை திருப்பிக்கொண்டது.. சே..நானாக உன்னிடம் வந்து அசிங்கப்பட்டுக் கொண்டேன். பசிக்கு கத்துகிறாயே என்று உனக்கு சோறு போட வந்த என்னை …நானே எனக்குள் திட்டிக்கொண்டேன்.

பக்கத்து வீட்டு கதவு சடாரென திறக்கும் சத்தம் கேட்டவுடன் இவைகள் என்னை கவனிப்பதை விட்டு விட்டு அவர்கள் வாசலை பார்த்தன. உள்ளேதான் இருந்தார்களா?

பக்கத்து வீட்டு அம்மாள் ஆவி பறக்க ஒரு தட்டில் கலவையாக காணப்பட்ட சாத்ததை எடுத்து வந்தார்கள். அட்டா.. காலையில எழுந்துக்கறதுக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்ச், அதனால சமையல் லேட்டாயிடுச்சு, அதுக்குள்ள கத்தி கூப்பாடு போட்டு ரகளை பண்ணிடுச்சு. என்னை பார்த்து சொல்லிக்கொண்டே வந்தவர்கள் காம்பவுண்டில் இருக்கும் சாப்பாட்டை பார்த்து யாரு நீங்க போட்டீங்களா? நானும் ஆமாம் நீங்கள் ஊர்ல இல்லயோன்னு நினைச்சுட்டு…… இழுத்தேன். பரவாயில்லை, அவர்கள் அந்த சாப்பாட்டை தள்ளி வைத்து விட்டு சுடு சோற்றை காம்பவுண்ட் சுவரின் மேல் கொட்டி விட்டு உள்ளே சென்றார்கள்.

ஒன்று மட்டும் தத்தி தததி வந்து சோற்றை முகர்வது போல் மூக்கை வைத்து விட்டு…கா..கா..சப்தமிட்டது. மற்றொன்று பறந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு அவர்கள் போட்டிருந்த சோற்றை ஒரு கவளம் அலகில் கவ்விக் கொண்டு பறந்தது. இரண்டு நிமிடங்கள் ஆனதும் பறந்து சென்ற காக்கா மீண்டும் காம்பவுண்ட் சுவரில் வந்து உட்கார அதுவரை சாதத்தின் மீது வாய் வைக்காமல் இருந்த மற்றொன்று இப்பொழுது தனது அலகை வைத்து ஒரு கவளம் சோற்றை கவ்விக்கொண்டு பறந்தது. இப்படி மாறி மாறி பறந்த காக்கைகள் அடுத்து செய்த ஆச்சர்யம் !.

சுடு சாப்பாடு குறைவது போல் தென்பட்டதும், இரு காக்கைகளும் நான் வைத்த சோற்றை கொத்தி தின்ன ஆரம்பித்தன. ஐந்து நிமிடங்களில் நான் வைத்த சாதத்தை காலி செய்து விட்டு மீண்டும் சுடு சோற்றை வாயில் கவ்விக் கொண்டு பறந்தன.

என்ன காக்காய் சாப்பிட்டுட்டு போயிடுச்சுங்களா? கேட்டவாறு வந்த பக்கத்து வீட்டம்மாளின் குரல் கேட்டு நினைவுக்கு வந்தேன். என்னங்க உங்க சாப்பாட்டை எடுத்துட்டு போகுது, நான் வச்ச சாப்பாட்டை தின்னுட்டு போகுது சிரித்து கொண்டே கேட்டேன்.

எங்கியாவது குஞ்சு பொறிச்சிருக்கும், அந்தம்மா சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார்கள்.

பாருய்யா ! நீயும் நானும் பழசு சாபிட்டுக்கலாம், நம்ம குஞ்சுக்கு சூடா கொடுக்கலாம்!

என்ன ஒரு பாலிசி !. ஹும்..நமக்கு காலையில பழசுதான் நினைத்துக் கொண்டே,வீட்டுக்குள் வந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *