தண்ணீர் பாவங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 6,046 
 
 

பசுமாடுகளை துன்புறுத்துதோ; பசும்பாலில் தண்ணீர் கலந்து விற்பதோ; தண்ணீரை வீணடிப்பதோ, விற்பதோ அல்லது ஆதாயத்திற்காக ஏமாற்றுவதோ மஹாபாவம். அவ்விதம் தெரிந்தே பாவம் செய்பவர்களுக்கு துர்மரணம் சம்பவிக்கும் என்று கருடபுராணத்தில் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

சென்னையில் ஒரு அபார்ட்மென்ட்.

பெயர் நந்தனம் அபார்மென்ட்ஸ்ட்ஸ். A முதல் F வரை மொத்தம் 6 டவர்ஸ். பன்னிரண்டு மாடிகளைக்கொண்ட ஒரு டவரில் 48 குடியிருப்புகள் வீதம் மொத்தம் 288 குடியிருப்புகள். குடியிருப்பின் சொந்தக்காரர்கள் பலர் துபாயிலும் மற்ற அயல் நாடுகளிலும் வசிப்பவர்கள். .

அபார்ட்மென்டில் பெரும்பாலோர் வாடகைக்கு குடியிருப்பவர்கள். அனைவரும் வசதியானவர்கள். மெத்தப் படித்தவர்கள். மாதா மாதம் நல்ல சம்பளத்தைப் பெறுபவர்கள். பலர் ஐ.டி. கம்பெனிகளிலும், மத்திய அரசாங்க வேலைகளிலும் இருப்பவர்கள்.

அந்த மொத்த குடியிருப்புக்கும் ஒரு செகரட்டரி. அவர் நாற்பத்தைந்து வயதான நரசிம்மன். சிவந்த நிறம். நெற்றி நிறைய வீபூதி அதன் நடுவில் வட்டவடிவ குங்குமம் என எடுப்பான தோற்றம். பொறுப்பானவர் என்று நம்பப்படுபவர்.

ஆனால் அவரை நாம் ரியாலிட்டி செக் செய்தால் இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்கிற வேதனைதான் ஏற்படும். அவருடைய நிழலான நடவடிக்கைகளுக்கு அந்த அபார்ட்மென்டில் வசிக்கும் படித்த முட்டாள்கள் அனைவரும் ஒரு மறைமுகக் காரணம்.

நந்தனம் அபார்ட்மென்டில் நரசிம்மனுக்குத் தெரியாமல் அல்லது அவரை மீறி எதுவும் நடந்து விடமுடியாது.

நரசிம்மனுக்கு பெண்கள் வீக்னெஸ் மிக அதிகம். அபார்ட்மென்டில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் அத்தனை போரையும் நட்பில் வைத்திருந்தார். அதில் பலரை படுக்கையில் தள்ளி அவர்களிடம் உடல் ரீதியான தொடர்பிலும் இருந்தார்.

பல வீடுகளில் வெளியூருக்குச் செல்லும்போது இவரிடம் அப்பாவியாக சொல்லிவிட்டுப் போவார்கள். வேலைக்காரியை நம்பி பல படித்த முட்டாள்கள் வீட்டின் சாவியை ஒப்படைத்துவிட்டுச் செல்வார்கள். இவர் உடனே வீட்டின் வேலைக்காரியைத் தொடர்பு கொண்டு அந்த வீட்டிலேயே அவளுடன் சல்லாபிப்பார். வீடு கிடைக்காத நேரங்களில் தன்னுடைய செகரட்டரிக்கான அறையிலேயே சில்மிஷங்கள் செய்துகொள்வார்.

இது தவிர குடிப்பழக்கமும் அவருக்கு உண்டு. பகலிலேயே மிதமான மப்பில் இருப்பார். ஐடி வாசிகள் அயல் நாடுகளுக்குப் பயணிக்கும்போது அவர்களிடம் ட்யூட்டி ப்ரீ விஸ்கிக்கு சொல்லி வைத்துவிடுவார். இரவு ஏழுமணிக்குமேல் நன்றாக சுதி ஏற்றிக்கொண்டு பில்டிங் செக்ய்யூரிட்டிகளை விரட்டி புலால் உணவு வகைகளை வாங்கிவரச் சொல்லுவார்.

அவருக்கு மாதச் சம்பளம் என்னவோ இருபத்தைந்தாயிரம்தான். ஆனால் அபார்ட்மென்டில் குடியிருப்போர்களை நன்கு ஏமாற்றி நிறையப் பணம் பண்ணிக்கொண்டிருந்தார்.

குறிப்பாக நரசிம்மன் தண்ணீர் லாரிகளின் மூலமாக அடிக்கும் கொள்ளை ஏராளம். கோடிக் கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்படும் மிகப் பெரும்பாலான அபார்ட்மென்ட் வீடுகளுக்கு போதுமான தண்ணீர் வசதி கிடையாது. அனைத்து வீடுகளுக்கும் சேர்த்து ஒன்று அல்லது இரண்டு போர்வெல்கள்தான் இருக்கும். அவற்றிலும் நிலத்தடி நீர் போதுமான அளவு கிடைக்காது. அதனால் அவர்கள் தண்ணீரை வெளியிலிருந்து லாரிகளில் வரவழைத்துக் கொள்வார்கள். அதற்காக மாதா மாதம் தனியாக பெரும்பணம் செலவழிப்பார்கள். இந்தத் தண்ணீரை குளிப்பதற்கும், டாய்லெட் வசதிகளுக்கு மட்டும் உபயோகிப்பார்கள்.

இதுதவிர, குடிப்பதற்கென தனியாக வாட்டர் கேன்களை விலைக்கு வாங்கி வைத்துக்கொள்வார்கள்.

நரசிம்மன் லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்பவர்களிடம் தனியாக டீல் போட்டு வைத்துக்கொள்வார். ஒரு லாரித் தண்ணீரின் விலை ஐந்நூறு ரூபாய். ஒருநாளைக்கு இருபது லாரிகளில் தண்ணீர் வருவதாக கணக்குக் காண்பிப்பார். ஆனால் பதினைந்து லாரிகள் தண்ணீர்தான் வாங்குவார். இதற்கு செக்யூரிட்டிகளும் உடந்தை. தண்ணீர் தரப்படாத ஐந்து லாரிகளின் மூலம் ஒருநாளைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு கிடைக்கும்.

அதில் ட்யூட்டியில் இருக்கும் செக்யூரிட்டிக்கு ஒரு லாரிக்கு நூற்றைம்பதும் நரசிம்மனுக்கு ஒரு லாரிக்கு முன்னூற்றைம்பதும் பிரித்துக் கொள்வார்கள். ஆக நரசிம்மன் ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 1750 சம்பாதித்து விடுவார். தண்ணீர் லாரிகளுக்கு வார விடுமுறைகள் எதுவும் கிடையாது என்பதால் அதுவே ஒரு மாதத்திற்கு 52,500 கிடைக்கும். தவிர அவரது சம்பளம் 25,000. எல்லாமாகச் சேர்த்து அவருக்கு மாதம் எளிதாக 77,500 கிடைக்கும். இதுதவிர, பண்டிகை தினங்களில் லாரிகளின் வரத்து அதிகமாகும்போது நரசிம்மன் அதிலும் தனியாக துட்டு பார்த்துக் கொள்வார்.

ஆக ஒரு ஐடி ஊழியரைவிட; மத்திய அரசாங்க ஊழியரைவிட, நந்தனம் அபார்ட்மென்ட் செகரட்டரியாக நரசிம்மன் அதிகம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

தன்னுடைய செகரட்டரி ரூமையே வேலைக்காரிகளுடன் சில்மிஷங்களுக்கும், தண்ணியடிப்பதற்கும், தங்குவதற்கும் பயன் படுத்திக் கொள்வார். நரசிம்மனின் ஒரேமகன் லண்டனில் படிக்கிறான். மனைவி சென்னையில் குடியிருந்தாலும் மாதம் ஒருமுறைதான் வீட்டிற்குச் செல்வார்.

செக்யூரிட்டிகளுக்கும் நரசிம்மனுக்கும் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டாலும், தண்ணீர் கொள்ளையில் எல்லோருக்கும் பங்கு இருப்பதால், சண்டைகள் சமாதானமாக முடிந்துவிடும். ஆனால் மாணிக்கம் என்கிற செக்யூரிட்டி மட்டும் நரசிம்மனுக்கு அடங்கி நடக்கமாட்டான். காரணம் அவன் நரசிம்மனுக்கு முன்னாலேயே அந்த அபார்ட்மென்டில் வேலைக்கு சேர்ந்துவிட்டான். அவன் மிகவும் பழைய ஆள் என்பதால் அவனுக்கு மட்டும் ஈ டவரின் உச்சியில் ஓவர் ஹெட் டாங்கின் கீழே நான்கு பில்லர்களுக்கு நடுவில் ஹாலோ பிளாக்கில் சுவர் எழுப்பி வீடு கட்டிக் கொடுத்திருந்தார்கள். அவன் ஆர்மியில் வேலைபார்த்தவன் என்பதால் வாட்டசாட்டமாக பலசாலியாக காணப்படுவான்.

அவன் மனைவி மல்லிகாவுடன் அங்கு குடியிருந்தான். அவளும் அங்கிருந்த பல குடியிருப்புகளில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தாள்.

நந்தனம் அபார்ட்மெண்டுக்கு டேங்கரில் ரெகுலராக தண்ணீர் சப்ளை செய்யும் மாரியப்பன் சென்னையின் வெளியே இருக்கும் ஒரு அழுக்கான எரியிலிருந்து தண்ணீர் எடுத்து வருவான். அந்த ஏரியில் இவன் தண்ணீர் எடுக்கும்போது ஏற்கனவே எருமை மாடுகளும், பன்றிகளும் சுகமாகப் புரண்டு கொண்டிருக்கும். இதுமாதிரி சென்னையின் நாலாபுறங்களிலும் ஏரிகளைப் பார்த்து வைத்துள்ளான். தேவைக்கேற்ற அல்லது வசதிக்கேற்றவாறு ஏரிகளை மாற்றி தண்ணீர் எடுத்துக்கொள்வான்.

அந்த ஏரிகளில் மழைக்காலங்களில் சற்று தண்ணீர் அதிகமாகவும், மற்ற தினங்களில் குறைந்தும் கலங்கலாகவும் இருக்கும். அதற்கேற்ற மாதிரி டேங்கர் தண்ணீரில் குளோரின் கலந்து கொள்வான்.

அவன் நந்தனம் அபார்ட்மென்ட்ஸுக்கு அடிக்கும் பதினைந்து ட்ரிப்களின் மூலம் – நரசிம்மன் காண்பிப்பது இருபது – ஒருநாளைக்கு ஏழாயிரத்து ஐந்நூறு கிடைத்துவிடும். டீசல், குளோரின் செலவுபோக அவனுக்கும் ஏகப்பட்ட பணம்.

அறிவுஜீவிகள் அதிகம் குடியிருக்கும் நந்தனம் அபார்ட்மென்ட் வாசிகள் ஒருத்தனுக்கும் தாம் குளிக்கும் தண்ணீர் எங்கிருந்து எடுத்து வரப்படுகிறது? எவ்வளவு எடுத்து வரப்படுகிறது? எத்தனை டேங்கர்கள் வருகிறது? என்கிற அக்கறை கிஞ்சித்தும் கிடையாது. நரசிம்மன் என்ன சொன்னாரோ அதுதான் அவர்களுக்கு வேதவாக்கு. படித்த முட்டாள்கள்.

அழுக்குத் தண்ணீரினால் வீட்டில் டிவி பார்க்கும்போது அக்குளையும், முதுகையும் வறட்டு வறட்டென்று சொறிந்துகொண்டுதான் டிவி பார்ப்பார்கள். எருமைகளும், பன்றிகளும் குளித்த தண்ணீர் வேறு எப்படி இருக்கும்?

அதுவாவது போகட்டும்… தாங்கள் குடிக்கும் தண்ணீர் எங்கு பிடிக்கப் படுகிறது? அதைக் குடிப்பதற்கு தரச் (potable) சான்றிதழ் உண்டா? இருந்தால் அது எங்கு, எப்போது பெறப்பட்டது? போன்ற விவரங்கள் எதுவும் அவர்களுக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளும் அக்கறையும் கிடையாது. குடிக்கும் தண்ணீரிலும் ஏமாற்றுதல்கள் நிறைய.

அன்று ஞாயிற்றுக்கிழமை. மாலை மூன்று மணி.

டேங்கர் தண்ணீருடன் நந்தனம் அபார்ட்மென்ட் நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்த மாரியப்பன் எதிரே வேகமாக வந்த பெட்ரோல் டாங்கரை கவனிக்கத் தவறியதால் பெரிய விபத்துக்குள்ளாகி நெருப்பில் அடையாளம் தெரியாமல் கருகி இறந்துபோனான்.

இரவு பத்துமணி.

நைட் டியூட்டியில் இருந்த மாணிக்கம் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டான். நரசிம்மனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்குச் சென்று மாத்திரை எடுத்துவர எண்ணி, அவரது ரூமுக்குச் சென்று பார்த்தான். ரூம் பூட்டப்பட்டு இருட்டாக இருந்தது

ஈ ப்ளாக் சென்று லிப்டில் ஏறி டெரஸ் சென்று வீட்டின் கதவைத் தட்ட எத்தனித்தவன், உள்ளே பேச்சுக்குரல் கேட்க தயங்கி நின்றான். உள்ளே நரசிம்மனும், மல்லிகாவும் கொஞ்சிக் குலாவும் குரல்கள் கேட்டன. மாணிக்கம் அதிர்ச்சியில் உறைந்து போனான். வந்தசுவடு தெரியாமல் டெரசின் மறுபக்கம் சென்று இருட்டில் நின்றுகொண்டு தன் வீட்டையே அமைதியாக நோட்டமிட்டான்.

கிருஷ்ண பட்சத்து நிலவு காய்ந்து கொண்டிருந்தது. ஊதக்காத்து வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.

மாணிக்கம் பயங்கர கோபத்தில் நரசிம்மனுக்காக காத்திருந்தான்.

அரைமணிநேரம் கழித்து மல்லிகா கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்து வீட்டின் இரண்டுபுறமும் நோட்டமிட்டாள். பிறகு தன் தலைமுடியை அவிழ்த்து ஒருமுறை உதறி முடியிட்டுக் கொண்டாள்.

வீட்டினுள் எட்டிப்பார்த்து நரசிம்மனை ரகசியமாக வெளியே அனுப்பிவைத்தாள்.

நரசிம்மன் மப்பில் தள்ளாடியபடியே வெளியே வந்து டெரசில் சிறிது தூரம் நடந்துசென்று லிப்டுக்காக காத்திருந்தார். மாணிக்கம் அவர் முன்னே வந்து நின்று, “சார் நம்ம ஓவர் ஹெட் டாங்க்ல தண்ணியே இல்ல. ஐந்தாவது மாடி மஹாதேவன் இப்பதான் கம்ளெயின் பண்ணாரு… அதான் ஓடியாரேன்…: என்றான்.

“இருக்காதே… மாரி வந்து மதியமே தண்ணீ போட்டானே…”

நரசிம்மன் விறுவிறென திரும்பி நடந்து இரும்பு ஏணிப்படிகளில் ஏறி, ஓவர் ஹெட் டாங்கின் மூடியைத் திறந்து எட்டிப்பார்த்தார். அவர் பின்னாலேயே ஏறிவந்த உயரமான மாணிக்கம் அவர் புடதியை பலம்கொண்ட மட்டும் உள்ளே தண்ணீரில் அழுத்தியபடியே அமைதியாக நின்றான்.

தலையை இரண்டுமுறைகள் தமிறிப் பார்த்த நரசிம்மன் மூச்சு விடமுடியாமல் தலை துவண்டு உடல் அடங்கிப் போனார்.

மாணிக்கம் நிதானமாக பிணத்தின் கால்களைத் தூக்கி டாங்கினுள் முழுவதுமாகத் தள்ளிவிட்டான். பிறகு மெதுவாக இறங்கிவந்து தன்னுடைய நைட் டூட்டியைத் தொடர்ந்தான்.

பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பில் மாரியப்பன் பொசுங்கியும்; மற்றொன்றான தண்ணீரில் நரசிம்மன் மூழ்கியும் தங்களின் துர்மரணத்தை சம்பவித்துக் கொண்டனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *