தகர விளக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 2,107 
 

(1953 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அறையினுள்ளே புழுக்கமாக இருந்தது. நித்திரை வர வில்லை. ஓசைப்படாமல் எழுந்து மெதுவாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன்.

வெளியே நிலவு பால்போல் எடுத்துக் கொண்டிருந் தது. ஆயிரம் ஆயிரம் மின்விளக்குகள் தெருவிலே பிரகாசித்துக் கொண்டிருந்தாலும் பூரணமதி ஒளியின் அழகே தனிதான். இந்தத் தண்ணிலவை இரசிக்கத் திராணியில்லாமல், அறைக்குள்ளே அடைந்து கொண்டி ருக்கும் மனிதப் பிராணிகளின்மேல் எனக்கு இரக்கம் பிறந்தது. பட்டினத்து நாகரீகம் மனிதனின் ரசனை உணர்வை எத்தனை தூரம் கொன்றுவிட்டது என எண்ணிக் கொண்டேன். இப்படி எத்தனையோ எண்ணங்கள் பிறந்தன; தேய்ந்தன. நிலவிலே அவளைப் பற்றி யும் எண்ணினேன்.

அவள் என்றால் என் மனைவி அல்ல. கல்யாணமாகிக் குழந்தைகளுக்குத் தந்தையுமாகி விட்ட என் மனதிலே அவளைப் பற்றிய எண்ணம் உண்டாவதே மன்னிக்க முடியாத குற்றம் என்று நீங்கள் எல்லோரும் சொல்வீர் கள். அது நம் பண்பாட்டிற்கு விரோதமானதென்று தீர்ப் பளித்தும் விடுவீர்கள்….

ஆனாலும் நான் அவளைப் பற்றி எண்ணினேன். பெருமூச்சுக்கூட விட்டேன். கடைசியில் ஒரு கதை எழுது வது என்று தீர்மானித்துக் கொண்டு எழுந்தேன்.

“மறுபடியும் காதற் கதைதானா எழுதப் போகிறாய்?”

யாரோ என்னைக கேட்டார்கள். ‘எழுதினால் என்ன? காதல் உலகின் நித்யத்துவ மான மனித உணர்ச்சி. அதைப் பற்றி எத்தனை கதைகள் காவியங்கள் வேண்டுமானாலும் எழுதலாம்’ என்றேன் நான்.

‘எல்லோரும் அதைத்தானே எழுதுகிறார்கள். அதை விட்டால் எழுதுவதற்கு வேறே விஷயமே இல்லையா? செத்த பாம்பை அடிப்பதுபோல அந்தக் காதலை வைத்துக் கொண்டு தான் கதைகள் எழுத வேண்டுமா? இந்த அசட்டுத் தனத்தை விட்டு விட்டு வேறேவேலையைப் பார்!’

காதற் கதை எழுத வேண்டும் என்ற உள்ளுணர்வு என்னுள்ளே செத்துவிட்டது. ஆனாலும் உடலோடு ஓட்டிவிட்ட வியாதி போன்ற உள்ளுணர்வு-எழுத்துப் பைத்தியம் – எதையாவது எழுதித் தானாக வேண்டும் என்று என்னைத் தூண்டிற்று.

மறுபடியும் ஓசைப்படாமல் அறைக்குள்ளே வர் தேன். விடுதியறையிலே என்னோடு பாகஸ்தராக இருக்கும் என் நண்பர் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்.

அவர் நித்திரையைக் குழப்பாமல் இருப்பதற்காக நான் மேசையின் மேலிருந்த தகர விளக்கைக் கொளுத்தி னேன். அந்த மங்கிய வெளிச்சத்தில் இருந்து எழுதத் தொடங்கினேன்.

முழுமதி என்ற என் கவிதையின் முதலாம் பாட்டைநான்கு வரிகள் -எழுதிவிட்டு அடுத்த வரியை எழுதத் தொடங்கினேன்.

“கவிதையா எழுதுகிறாய்?”

நான் நிமிர்ந்து பார்த்தேன். கேட்டது யார் எனத் தெரியவில்லை. குனிந்து மீண்டும் எழுதத் தொடங் கினேன்.

“உன்னைத்தான் கேட்கிறேன். கவிதையா எழுது கிறாய்? நீ பெரிய கவிஞன் என்று எண்ண மா ?”

நான் மறுபடியும் நிமிர்ந்து பார்த்தேன். எதிரே தண்பர் குறட்டை விட்டுத் துயில்கிறார். வேறு எவருமே கிடையாது. நான் மறுபடியும் குனிந்து எழுதத் தொடங்கு கிறேன்.

“கவிதையா எழுதுகிறாய்? அதுவும் சந்திரனையா?’,

குரல் அதிகாரத் தொனியில் இருக்கவே நான் பேனையைக் கீழே வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அப்போதும் எதிரே குறட்டைவிட்டுத் தூங்கும் நண்ப ரைத் தவிர வேறு எவரையுமே காணவில்லை. நான் மிரண்டு விழித்தேன்.

டாரோ என் முன்னால் எக்காளமிட்டுச் சிரித்தார்கள். எனக்குப் பயமாகவும் இருந்தது.

“ஏன் பயப்படுகிறாய்? நான், உன் முன்னால் இருக்கும் தகர விளக்குத்தான் கேட்கிறேன். சந்திரனைப் பற்றியா கவிதை எழுதுகிறாய்?”

“ஆம்; எழுதினால் என்ன?” என்றேன் தைரியத்தோடு.

“நீ கலைஞன் தானே?”

“அதிலே உனக்கேன் சந்தேகம்?”

“இல்லை; சந்திரனைப் பற்றிக் கவதை எழுதுகிறாயே. அதனாற்தான் கேட்டேன்.”

“ஏன்; சந்திரனைப் பற்றி எழுதக் கூடாதா?”

“ஏன் எழுத வேண்டும்?”

“இது என்ன முட்டாள்த்தனமான கேள்வி. தன் உள்ளத்திற் சலனத்தையும் கிளுகிளுப்பையும் உண்டாக்கும் ஏதோ ஒன்றைப் பாடுபவன் தானே கவிஞன்?”

“கலைகளும் உன் மனதைக் குஷிப்படுத்துகின்றன. சிரிக்கவும் அழவும் வைக்கின்றன அல்லவா?”

“ஆம் அப்படிச் செய்யாவிட்டால் அவைகள் கலைகளே அல்ல”

“அப்படியா? அப்படியானாற் சந்திரனும் உன்னைக் குஷிப்படுத்துகின்றான். ஆகவே சந்திரன் ஒரு கலைப் பொருள், அதாவது நீ இயற்கையைத்தான் கலை என்கிறாய்.”

“நீயாகவே முடிவு கட்டிக் கொண்டாய், நான் அப்படிச் சொன்னேனா?”

“ஏன் நீ தானே இப்போது சொன்னாய். மனதைக் குஷிப்படுத்துவது கலை என்று.”

“கலை மனதைக் குஷிப்படுத்துமேயன்றி, மனதைக் குஷிப்படுத்துவதெல்லாம் கலையாகி விட முடியாது. பூரண நிலவு கலையென்று நான் சொல்ல மாட்டேன். ‘மாசகன்ற மணி விசும்பில் வயங்கு நிறைமதியம், மலர்க் கிரண ஒளிபரப்ப’ என்று எங்கள் சுவாமி விபுலாநந்தர் பாடியிருக்கிறாரே, அது கலை. அதைப் போன்ற ஒருகலா சிருஷ்டியிற்தான் நானும் ஈடுபட்டிருந்தேன். அதை நீ இடையிற் குழப்பி விட்டாய்”

என் படபடப்பைக் கண்ட தகர விளக்கு மறுபடியும் பேசத் தொடங்கியபோதே அதன் குரலிற் சிறிது சோகம் தொனித்தது. அது கேட்டது.

“என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

‘என்ன நினைப்பது? நீ ஒரு தகர விளக்கு. ஒரு தண் டிலே எண்ணெய் கொள்ளும்படியான வட்டக் கூம்பு. உள்ளே எண்ணெய் இருக்கும் வரை நீ வெளிச்சம் கொடுப்பாய்!”

“இவ்வளவுதானா? உன் மனதிலே நான் எந்தவித மான சலனத்தையும் உண்டாக்கவில்லையா?”

அக்கேள்விக்கு விடை. சொல்ல நான் தயங்கினேன். தகர விளக்கு மறுபடியும் பேசிற்று.

“ஏன் தயங்குகிறாய்? இல்லை என்பது தானே உன் பதில். இருக்கட்டும். என்னால் உனக்கு எவ்வித பயனுமே இல்லையா?”

“யார் அப்படிச் சொன்னார்கள்? உன்னுடைய ஒளியிற்தானே நான் கவிதை எழுதுகிறேன்.”

“சந்திரனின் ஒளியில் எழுத முடியாது. அப்படித் தானே. ஆனாலும் நீ சந்திரனைப் பற்றித்தான் கவிதை எழுதுவாய். என் உழைப்பைப் பயன்படுத்தி, என் உழைப்பிற் பிறரைப் புகழ்வது நீதியானதென்று உகக்குப்படுகிறதா?”

எனக்குக் கோபம் வந்தது. “ஏன் இப்படிச் சுற்றி வளைத்துப் பேசுகிறாய்? என்னைப் பற்றிக் கவிதை எழுது என்று வெளிப்படையாகக் கேட்பதுதானே?”

“வேண்டாம்; வேண்டாம். கேவலம் நான் ஓர் தகர விளக்கு. ஒரு தண்டிலே எண்ணெய் இருக்கும்படியான வட்டக் கூம்பு. அதன்மேல் சீலைத் திரியைத் திணிக்கும் படியான காய், உள்ளே எண்ணெய் இருக்கும் வரை நான் வெளிச்சம் கொடுப்பேன்; என்னைப் பற்றிக் கவிதை எழுதுவதாவது. சீ; கேவலம்” என்று எகத்தாளமாகப் பேசிற்று தகர விளக்கு.

என் பேச்சையே அது என்னிடம் திருப்பியடிக்கையில் எனக்கு அவமானமாக இருந்தது. ஆத்திரம் வந்தது. பிடி கொடாமற் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் என் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு யோசித்தேன். தகர விளக்கு மீண்டும் பேசிற்று.

“என்னைப்பற்றி எழுதும்படி கேட்க என்னை அத்தனை சுயநலமி என்று எண்ணினாயா? என்னைப் பார்த் தால் வேறு எதைப் பற்றியும் வேறு யாரைப் பற்றியும் — உனக்குத் தோன்றவில்லையா?”

“யாரைப் பற்றித் தோன்ற வேண்டும்?” நான் ஆத்திரத்தோடு கேட்டேன்.

“மலேயாவிற் தகரச் சுரங்கத்தில் வேலை செய்பவனைப் பற்றித் தோன்றாவிட்டாலும், வேறு எவரைப் பற்றியுமே உனக்குத் தோன்றவில்லையா? சரி நானே சொல்கிறேன்.”

கவிதை எழுதிய கடதாசிகளை நகர்த்தி ஒருபுறம் தள்ளி வைத்து, மேசையின் மேற் கைகளை ஊன்றிய படியே “சரி சொல்” என்றேன்.

தகர விளக்குச் சொல்லிற்று. “முகம்மது உசேனைப் பற்றி உனக்குத் தெரியுமா? எப்படித் தெரியப் போகிறது? இந்தப் பட்டினத்திலே கருங்காலி ஒழுங்கை என்ற இருண்ட சந்திலே அவன் இருக்கிறான். இப்போதெல்லாம் தன் ஓலைக் குடிசை யிலே அவன் பட்டினியால் முனகிக்கொண்டு இருப்பான்.

இரண்டாவது உலக மகாயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அவன் திருக்கோணமலைப் பட்டி னத்திற்குத் தன் சொந்த ஊரான ஓட்ட மாவடியிலிருந்து பிழைப்புக்காக இங்கே வந்தான். கடற்படைத்தளத்திலே அவனுக்கு வேலை கிடைத்தது.

“பாஸிசப் பேயை அழித்துவிட்டு மகாயுத்தம் நின்ற தும் அவனுக்கு வேலை போய் விட்டது. அதன் பின்னர் தான் என்னைப் போன்ற தகர விளக்குகளைச் சிருட்டிப் பதில் அவன் ஈடுபட்டான். ஒரு நாளைக்கு என்னைப் போல இருபது உருப்படி களைச் செய்து விடுவான். கடை களுக்குக் கொண்டு போய் கொடுத்தால் கடைக்காரன் விற்று முடிந்ததும் பணம் தருவான். உசேனைவிடக் கடைக்காரனுக்குத்தான் இதில் இலாபம். கடைக்கார னுக்கு முதலில்லாத வியாபாரம், உசைனுக்கு மன வேதனை… பட்டினி…

“இப்படியே உசைன் தன் மனைவியோடும் மூன்று குழந்தைகளோடும் வாழவேண்டி இருக்கிறது. என்ன கேட்கிறாயா?”

“ஆம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். மேலே சொல்.”

“இனி என்ன சொல்ல வேண்டியிருக்கிறது? நீதான் கலைஞன் என்றாயே. இந்தக் கதைக்கு மெருகு கொடுத்து எழுதேன்” என்ற விளக்கு அத்துடன் மௌனம் சாதித்து அணைந்தே விட்டது!

நானும் தகர விளக்குச் சொன்ன கதைக்கு நகாஸ் வேலை செய்து உங்களுக்குத் தரவில்லை. ஏனென்றால் – என்னிடம் தகர விளக்குப் பேசியதே ஒரு கதையளப்புத் தான்!

– கலைவாணி 1953

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *