டாக்டருக்கு மருந்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 7,265 
 
 

டாக்டர் வரதனின் க்ளினிக் தி.நகர் தண்டபாணித் தெருவிலிருந்த அந்த ஹைதர் கால வீட்டின் ஒரு போர்ஷனில் இருந்தது. வரதன் மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, பிராக்டிசுக்காக குடக்கூலிக்கு இந்த இடத்திற்கு வந்தவர். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஒடி விட்டன. இது வரை அவருக்கு அந்த வீட்டை விட்டுக் காலி செய்யும் எண்ணம் அவர் மனத்தில் ஏற்பட்டதேயில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அந்த வீட்டிற்கு வந்த முகூர்த்தம் தான் அவர் பிராக்டிஸ் ‘ஓகோ’ என்று களை கட்டியிருக்கிறது என்பது அவருடைய அசைக்கமுடியாத நம்பிக்கை. சுற்று வட்டாரத்தில் வேறு டாக்டர்களே இல்லாதது மற்றோரு பிளஸ் பாயிண்ட். அதனால் இந்தப் பகுதியில் அவருக்கு மவுசு அதிகரித்திருக்கிறது. அந்த ஏரியாவுக்கும் சுற்றி இருந்த குடிசைப்பகுதிக்கும் குடும்ப வைத்தியராக அவர் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு விட்டதால் இடம் பெயர்வது அவர் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் என்று அவருக்குப் பட்டது.

அவரைத்தேடி ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினரே அதிகமாக வந்ததற்கும் போதிய காரணங்கள் இருந்தன. அவர் மற்ற டாக்டர்களைப்போல் சிடுமூஞ்சி இல்லை. சிரித்த முகத்துடன் பொறுமையகவும் நிதனமாகவும் நாம் சொல்வதைக் கேட்டுக்கொள்வார். வேடிக்கையாகவும் கிண்டலாகவும் பேசி நோயாளிகளை வசியம் செய்து விடுவார். கன்சல்டிங் பீஸ் என்று எக்கச்சக்கமாக பணம்பிடுங்கும் ரகம் இல்லை. எக்ஸ்ரே, ஸ்கேன், டெஸ்டுகள் என்று நோயாளிகளை பயமுறுத்தி அனாவசியச்செலவு வைத்து கமிஷன் கறக்க மாட்டார். அதே போல் அவர் எழுதித்தரும் மருந்துகளும் சொற்ப விலையாகவே இருக்கும். அந்தக் கிளினிக்கில் அவர்தான் ஆல் இன் ஆல் கம்பெளண்டர், நர்ஸ் எல்லாமே,

அன்று கூட்டம் சாதாரண நாட்களை விட அதிகமாகவே இருந்தது. திரைச் சீலையை விலக்கிப் பார்த்த போது மனசின் மூலையில் ரகசிய சந்தோஷம்தான். சில நாட்கள் நோயாளிகளே வராமல் சுடொகுவோ, க்ராஸ்வார்டோ போட்டுக்கொண்டோ, பத்திரிகைகளைப் படித்துக்கொண்டோ அல்லது குட்டித் தூக்கம் போட்டோ பொழுது போக்கிக்கொண்டிருப்பார். நல்ல வேளை. இன்று அவர் முழு கன்சல்டிங் நேரமும் பிஸியாக இருக்க வேண்டியிருக்கும்.

முதல் நோயாளி விடாமல் இருமிக்கொண்டே உள்ளே வந்தார். அறுபது வயசு மதிக்கலாம்.பார்த்தாலே குடிசைப்பகுதியில் வசிப்பவர் என்று தெரிந்தது.

“ரெண்டு நாளா விடாம இருமலாயிருக்குங்க.. இருமறப்போ நெஞ்சு வலிக்குது,தாங்க முடியவில்லை”

“எப்போ இருந்து”

“கிட்டத்தட்ட பத்து நாளா”

“அப்போ ஏன் முன்னாடியே வரலை..வியாதி முத்தறவரையிலேயும் விட்டுட்டு அப்புறம் தான் டாக்டர் கிட்டேயே போகணும்ங்கற ஞானோதயமே உங்களுக்கு உண்டாகுது இல்லை?

“அப்படியெல்லாம் இல்லங்க டாக்டர். பக்கத்து மெடிகல் ஸ்டோர்லே கேட்டு மாத்திரை வாங்கிப்போட்டேன். அது கேக்கலை”

“என்ன மாத்திரை? பேரு தெரியுமா?”

“அதெல்லாம் எதுவும் தெரியாதுங்க. குடுத்தாங்க. சாப்பிட்டு வச்சேன். குணமாகல்லை. இப்படியே விடக்கூடாதூனுதான் உங்க கிட்டே வந்துட்டேன்.”

“ரொம்ப லட்சணமாத்தான் இருக்கு. எத்தனை தடவை படிச்சுபடிச்சுச் சொன்னாலும் நீங்கள்ளாம் கேக்கவே மாட்டீங்க. எல்லாம் செவிடன் காதிலே ஊதின சங்குதான்… மெடிகல் ஷாப்லெ கண்டகண்ட மாத்திரையெல்லாம் வாங்கிப் போடறது ஆபத்துங்கறதை தயவு செய்து நல்லாப் புரிஞ்சுக்குங்க. மருத்துவம் தெரிஞ்ச ஒருத்தர் ஆளை நேர்ல பார்த்து நல்லா உடம்பை சோதிச்சுத்தான் மருந்தைக் கரெக்டாச் சொல்ல முடியும். மெடிகல் ஷாப்காரன் என்ன எங்களை மாதிரி அஞ்சு வருஷம் மருத்துவப் படிப்புப் படிச்சிருக்கானா என்ன, வியாதிக்கு மருந்து சொல்றதுக்கு? அனுபவத்திலே குருட்டாம்போக்கிலே மாத்திரை தர்றான். காக்கா உக்காரப் பனம்பழம் விழுந்த கதைதான். சில சமயங்களிலே எதிர்பாராம நல்ல பலன் குடுத்துடுது. அதை நம்பிக்கிட்டு அடிக்கடி அவன் சொல்றபடி மருந்து சாப்பிடறது நல்லதே இல்லை. உடம்பு கெட்டுத்தான் போகும். அவ்வளவுதான் சொல்ல முடியும்”

அந்த ஆளைப் பரிசோதித்து மருந்து கொடுத்தனுப்பினார் வரதன்.

அடுத்த பேஷண்ட் செல்வமணி. நடுவயதுக்காரர். பாங்கில் அக்கவுண்டண்ட்வேலை.

“குட் மார்னிங் டாக்டர். நாலு நாளா டெம்பரேச்சர். 100லேஇருந்து 101க்குள்ளே இருந்துண்டே இருக்கு. லேசா ஜுரம் இருந்தப்பவே மருந்துக்கடைக்காரன் க்ரோஸின் ரெகமண்ட் பண்ணினான். வாங்கிப் போட்டேன். கொஞ்சமும் எபெக்ட் இல்லை. அதனாலே உங்களை கன்ஸல்ட் பண்ணலாமேன்னு வந்தேன்”

டாக்டர் சிரித்துக்கொண்டார். இவர் படித்தவர். கெளரவமான வேலை பார்ப்பவர். முன் நோயாளியிடம் பேசியது போல இவரிடம் கடும் வார்த்தைகளைப் பேசிவிட முடியாது. இது போல படித்த மனிதர்களெல்லாம் தங்களுக்கு எல்லாமே தெரியும் என்ற நினைப்பில் ஊறிப்போனவர்கள். அவர்கள் ஈகோவினால் அவர்க¨ளைக் குறை கூறுவதை கொஞ்சமும் விரும்பமாட்டார்கள். அவர்கள் மனசை சிறிதளவு கூட புண்படுத்தாமல் நாசுக்காகப் பேசி அவர்களுக்குப் புத்தியில் உறைக்கும்படிசெய்வதே சரியான வழி.

“இப்போ கொஞ்ச நாளா ஊர் பூரா வைரல் பீவர் அதிகமா இருக்கு. ரொம்ப ஜாக்கிரதையாத்தான் இருந்தாகணும். கண்டபடி மருந்துகளை நாமே சாப்பிட்டு காம்பிளிகேட் பண்ணிக்கக் கூடாது. அரைகுறை ஞானம் உள்ளவங்க சொல்ற மருந்துகளைச் சாப்பிடறது டேஞ்சரஸ். தலைவலி போய்த் திருகுவலிங்கறாப்பிலே ஒண்ணிலேயிருந்து இன்னோண்ணுலே கொண்டு விட்டுடும்.’

மணியின் முகம் இறுகியது. “யெஸ், ஐ நோ தட் டாக்டர்” என்றான் சுருக்கமாக.

அதன் அர்த்தம் டாக்டருக்குப் புரிந்து விட்டது…”நீ எனக்கு அட்வைஸ் பண்ணத்தேவை இல்லை. உன் வேலையைப் பேசாம கவனி. உடம்பை டெஸ்ட் பண்ணி மருந்தை எழுதிக் குடு. வீணா லெக்சர் அடிச்சு டயத்தை வேஸ்ட் பண்ணாதே.”;

அப்படியே செய்து அவரை அனுப்பி வைத்தார்.

அடுத்து ஒரு முதியவர் வந்தார். அவருக்கு வயிற்று வலி, வாந்தி. பேதி. மகன் மெடிகல் ஷாப்பிலே வேலையாம். அவன், “டாக்டர் கிட்டே போக வேணாம் நானே மருந்து கடையிலெருந்து தரேன்னு”. கொடுத்தானாம் மத்திரையின் பெயர்கள் சொல்ல தெரியவில்லை அவருக்கு. ஒரு சிகப்பு குண்டு மாத்திரை, மஞ்சளா ஒரு குட்டி மாத்திரை, வெள்ளை ரவுண்டு மாத்திரை என்று விவரித்த போது டாக்டருக்கு சிரிப்பாக வந்தது, . அந்த மனிதருக்கும் ஒரு வழியாக உடம்பைப் பார்த்து மருந்து எழுதிக் கொடுத்தாகி விட்டது.

அதற்கப்புறம் சுறுசுறுப்பாகக் கிட்டத்தட்ட இருபது பேரை பார்த்து சீட்டு எழுதிக் கொடுத்தார்.

எல்லா நோயாளிகளுமே ஏற்கனவே மருந்துக்கடையில் மருந்து வாங்கிச் சாப்பிட்டவர்களாயிருந்தது அவருக்கு வேடிக்கையாயிருந்தது. அன்று மட்டுமில்லை. தினமும் இதே கதைதான்.

“என்னதான் கிளிப்பிள்ளைக்கு சொல்றாப்பிலே சொன்னாலும் இவங்க புத்திக்கு எட்டாது. எது செய்யக்கூடாதூன்னு சொல்றோமோ அதைத் தான் ரொம்பக் கவனமாக செய்வாங்க. நோ பார்க்கிங்லே தான் வண்டியை நிறுத்துவார்கள். புல் தரையிலே நடக்காதேன்னா வீம்புக்காகவாவது அதன் மீதுதான் நடந்து போவாங்க. ரயில்வே தண்டவாளத்தைக் கிராஸ் பண்ணாதேன்னா, அதைத்தான் செய்வாங்க சிறுநீர் கழிக்காதேங்க்ற் போர்டைப் பார்த்தாலே அதன் அடியிலேயே சிறுநீர் கழிக்கத் தோன்றும். இப்படி எத்தனையோ அத்துமீறல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதனாலே இவங்களை திருத்தக் கஷ்டப்படறது நாய் வாலை நிமிர்த்த்றாப்பிலே முட்டாள்தனம்தான்” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டார்.

ஆறு மாதம் கழித்து ஒரு நாள்.

உஸ்மான் ரோட் அருகில் டாக்டர் வரதனைப் பார்த்தான் பாங்க் அக்கவுண்டண்ட் செல்வமணி.

டாக்டர் இளைத்துப் போய், வாடிய முகத்துடனும் தாடி மீசையுடனும் காட்சியளித்தார்.

“என்ன டாக்டர் செளக்கியம் தானே” என்று கேட்டுவிட்டுப் பல்லைக் கடித்துக்கொண்டான். கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவையா? பார்த்தாலே தெரிகிறது டாக்டருக்கே உடம்பு சரியில்லை என்று. அவரைப் போய் இப்படி ஏடாகூடமாகக் கேட்டுவிட்டோமே என்ற தவிப்பு.

“உடம்பு நாலஞ்சு நாளா ரொம்ப டிரபிள் தருதுப்பா. பீவர், இருமல், ஜலதோஷம், வயித்து வலி எல்லாம் ஒண்ணா வந்திருக்கு.பசி, தூக்கம் கிடையாது. அவஸ்தை தாள முடியவில்லை..நாளு நாலா டிஸ்பென்ஸரியை மூடிட்டேன். சரி, என்னாலே நின்னு பேசக்கூட முடியலை. அப்புறம் பார்க்கலாம் ” என்று ஈனஸ்வரத்தில் சொல்லி விட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.
மணி அவர் போன திசையிலேயே கவனித்துக்கொண்டு இருந்தான்.

டாக்டர் ஜெயா மெடிகல்ஸ் கடையில் நுழைந்தார். அங்கே சுமாரான கூட்டம்.

மணியின் மனதில் ஒரு குறுகுறுப்பு. ஆவலுடன் கடைவாசலில் டாக்டர் கண்ணில் படாமல் நின்றுகொண்டு அவர் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்தான்.

வரதன் கடைக்காரரிடம் தன் நோயைப் பற்றிய முழு விவரங்களையும் அறிகுறிக¨ளையும் சொன்னார்.

“இதுக்கு எந்த மருந்து தேவலைன்னு நீயே பார்த்து கொடுத்துடு” என்றார். மணிக்கு சொல்ல முடியாத திகைப்பு!

டாக்டர் மருந்துகளை வாங்கிக்கொண்டு வரும் போது அவரை வழிமறித்துப் பேச்சுக்கொடுத்தான்.

நேரடியாகவே தன் மனதை உறுத்திக்கொண்டிருந்ததை கேட்டுவிட்டான்.

“என்ன டாக்டர், நீங்களே கடைக்காரன்கிட்டே மருந்து கேட்டு வாங்கிக்கறீங்க ? கையும் களவுமாய்ப் பிடிபட்ட திருடன் போல் டாக்டர் திருதிரு வென்று விழித்தார்!
பிறகு அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தவாறே சொன்னார்:

“உண்மையைச் சொல்லிடறேனே. சின்ன வயசிலே இருந்து எனக்கு டாக்டர்னாலே மனசுலே ஏனோ ஒரு பயம். உடம்புக்கு வந்தப்போ எல்லாம் டாக்டர் கிட்டே போகாமே அப்பா அம்மாவை ஏமாத்திடுவேன். மருந்துக் கடையிலே கேட்டு மருந்து வாங்கி சாப்பிடுவேன். என்விஷயத்திலே அது ரொம்ப நல்ல பலனை கொடுத்திருக்கு. எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்லே இருந்து வருஷக்கணக்கா அப்படியே பழகிட்டேன். அதனேலே திடீர்னு அதை இப்போ விடறது கண்டிப்பா என்னாலே முடியாதுங்கறதும் எனக்கு நல்லாத் தெரியும். வேற வழியில்லாமே இப்படிச் செய்யறேன். பட் ஒன் திங். இதை உங்களோடயே வச்சுக்கிங்க. வேற யாருக்கும் தெரிய வேண்டாம்” என்று அந்த ரகசியத்தை உடைத்தார்.

“அப்போ எங்களை மட்டும் அப்படிச் செய்தா கோவிச்சுக்கறீங்க?”

டாக்டர புண்முறுவலுடன்..

“நாங்க பிழைக்க வேண்டாமா ?” என்று பதில் சொல்லிக்கொண்டே நடையைக் கட்டினார் !

– மார்ச் 30 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *