சோறு கண்ட இடமே சொர்க்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 10, 2013
பார்வையிட்டோர்: 10,008 
 
 

மணி நான் வேலை பார்க்கும் அரசாங்கத் தொழிலகத்தில் உள்ள உணவகத்தில் தற்காலிக உதவியாளராகச் சேர்ந்தது ஓராண்டுக்குள் தான் இருக்கும். மேஜைகளைச் சுத்தம் செய்வது, சாப்பிட்டத் தட்டுகளை கழுவுவது முதல், உணவுப்பதார்த்தங்கள், சிற்றுண்டி முதலியன தயாரித்து, பரிமாறுவது வரை அனைத்து வேலைகளையும், சுத்தமாகவும், சுறுசுறுப்பாகவும், மிகவும் பய பக்தியுடனும் செய்து முடிக்கும் திறமை உள்ளவன். ஏழ்மைக்கு எடுத்துக்காட்டாக அவன் திகழ்ந்தாலும், எல்லோரிடமும் அன்புடனும் நாகரீகத்துடனும் பழகி வந்தான். என்னிடம் ஒரு அலாதிப் பிரியம் வைத்திருந்தான். ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை, அவனை என் வீட்டுக்கு அழைத்து, என் உடம்புக்கு, தற்சமயம் பிடிப்பாக உள்ள, என்னுடைய பழைய பேண்ட், சட்டைகளில் நல்லதாக நாலு செட், துவைத்து இஸ்திரி போட்ட நிலையில் அவனுக்கு அளித்ததில் அவனுக்கு ஒரே மகிழ்ச்சி.

என் எதிரிலேயே போட்டுப்பார்த்து, எல்லாம் புத்தம் புதியதாகவே இருக்குது சார், எனக்கே எனக்கு அளவெடுத்து தைத்தது போலவே உள்ளது, சார் என்று சொல்லி நன்றி கூறினான். என் வீட்டில் ஆங்காங்கே ஒழுங்கில்லாமல் இருந்த பொருட்களை ஒழுங்கு செய்து, ஒட்டடை அடித்து, வீடு முழுவதும் கூட்டி, தண்ணீர் ஊற்றிக் கழுவி, சற்று நேரத்தில் வீட்டையே அழகு படுத்திக் கொடுத்துவிட்டான். உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் என் மனைவிக்கும், மணி வந்து, வீட்டை அழகுபடுத்திக் கொடுத்ததில், அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஓரிரு மாதங்களில், தொழிலகத்தில் ஆட்குறைப்பு என்ற பெயரில், தற்காலிக ஊழியரான மணிக்கு வேலை பறிபோனது. மணியை விட அவனுடைய சேவைகளைப் பயன் படுத்திக்கொண்ட ஊழியர்கள் பலருக்கும் மணிக்கு வேலை போனதில் மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. அன்று மாலை, மணி என்னுடைய வீட்டுக்கு வந்தான். “மேற்கொண்டு என்ன செய்வது என்றே புரியவில்லை, சார். சொந்த கிராமத்திற்கே போய் ஏதாவது விவசாய கூலி வேலை கிடைக்குமா என்று பார்க்கலாமா என்று தோன்றுகிறது, சார்”என்றான். நம் உணவகத்திலேயே சாப்பிட்டு, அங்கேயே தங்கி, ஏதோ என் வயிற்றை வளர்த்துக்கொண்டு, கிடைக்கும் சம்பளத்தை என்னைக் கஷ்டப்பட்டு வளர்த்து, படிக்கவைத்த என் தாயாருக்கு அனுப்பிக்கொண்டு இருந்தேன், சார். இனி இந்த ஊரில் இருந்தால், ஒவ்வொரு நாளும், எங்கு தங்குவது, எப்படிச்சாப்பிடுவது என்று எல்லாமே எனக்கு அடுத்தடுத்துப் பிரச்சனை தான், சார். உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு ஊருக்குப் புறப்படலாம்னு, வந்தேன், சார்” என்றான்.

மணிக்கு வேலை போனதில், எனக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது. திருமணம் ஆகி இருபது ஆண்டுகள் ஆகியும், குழந்தை பாக்கியம் இல்லாத, நடுத்தர வயது தம்பதிகளான, எனக்கும் என் மனைவிக்கும், மணிப்பயலாக விளங்கும் இந்த வேலை இழந்த மணியை ஊருக்கு அனுப்புவதில் துளியும் இஷ்டம் இல்லை. அன்று இரவு மட்டும் என் வீட்டிலேயே மணிக்கு சாப்பாடு போட்டு சாப்பிடச்சொல்லி, இரவும் என் வீட்டிலேயே படுத்துத் தூங்கச் சொன்னேன். காலை எழுந்ததும் ஊருக்குப்போவதைப்பற்றி பேசிக்கொள்ளலாம், என்றேன்.

மணி, காலேஜ் படித்தவன், பீ.காம் படித்து முடித்த பட்டதாரி என்பதும், உணவகத்திற்கு வேலைக்கு வருவதற்கு முன்பு, ஒரு பணக்காரர் வீட்டில் சமையல் வேலையும் செய்து கொண்டு, அவருடைய ஆதரவால் படித்து பட்டதாரியும் ஆனவன் என்பதையும் மறுநாள் காலையில், கேள்விப்பட்ட எனக்கு, ஒரு புறம் மகிழ்ச்சியாகவும், மறுபுறம் வேதனையாகவும் இருந்தது.

“ஏன், மணி, உன் படிப்புக்குத் தகுந்தாற்போல வேறு ஏதும் வேலைக்கு முயற்சி செய்திருக்கக்கூடாதோ?” என்றேன்.

சிறு வயதில் தந்தையை இழந்தது, இளமையில் வறுமையால் வாடியது, தன்னை வளர்த்து, ஓரளவு பள்ளி இறுதிப்படிப்பு வரை படிக்க வைக்க தன் தாய், பல வீடுகளில் உழைத்து ஓடாகிப்போனது, பசி, பட்டினி என்று தாயும் மகனும் பட்ட கஷ்டங்கள், தன்னைக் கல்லூரியில் படிக்க வைத்த அந்த பணக்காரர் திடீரென காலமானது, என அவனுடைய துரதிர்ஷ்ட சூழ்நிலைகளை எடுத்துச்சொல்லியதுடன், “வயிற்றுப்பசிக்கு முன்னால் கெளரவம் பார்த்தால் முடியுமா, சார்; இந்த உலகிலேயே, வயிற்றுப்பசிக்கு ஏற்ற இடம் என்றால், ஓட்டல், உணவகம், மெஸ், கல்யாண காண்ட்ராக்ட் முதலியன மட்டுமே, சார்” என்றான்.

மறுநாள் நானும், என் மனைவியும், மணியுமாகச் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். நானே ஒரு பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்து, மணிக்கு ஒரு மொபைல் ஓட்டல் நடத்தத் தேவையான, மூன்று சக்கர வண்டி ஒன்றும், சமையல் எரிவாயு அடுப்புகள், பாத்திரங்கள் முதலியனவும் வாங்கிக் கொடுத்தேன். எங்கள் வீட்டிலேயே ஒரு தனி அறையில், மணி தங்க இடமும் கொடுத்தேன். தினமும் என் தொழிற்சாலை அலுவலகத்திற்கு அருகிலேயே, ஒரு மிகப்பெரிய மரத்தடியில், மொபைல் ஓட்டல் மணியால் நடத்தப்பட்டது. ஏற்கனவே மணியுடன் பழகிய என் நண்பர்களும், தொழிலாளத் தோழர்களும், மணியின் புதிய தொழிலை விரும்பி வரவேற்றதுடன், பலத்த ஆதரவும் அளித்தனர். பசி வேளையில், வாய்க்கு மிகவும் ருசியான, புளிசாதம், தயிர் சாதம், இட்லி, வடை, பஜ்ஜி என நாளுக்கு நாள் மணியின் மெனுவும், வியாபாரமும் மிகவும் நன்றாகவே நடைபெற்றது.

மணியின் கை மணத்தில் ருசி கண்ட அனைவரும் அந்த தொழிலக உணவகத்திற்குச் செல்வதையே விட்டு விட்டனர். தொழிலகத்தின் உணவகத்தையே மூடிவிட்டு, ஏதாவது ஒரு ஏஜென்ஸியிடம், காண்ட்ராக்ட் ஆக விட்டு விட நிர்வாகம் முடிவு செய்து, தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் கலந்து லோசித்தது. தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக, தற்சமயம் மரத்தடியில் கடை போட்டு கஷ்டப்படும் மணியிடமே, உணவக நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும், அப்போது தான் உணவுப்பொருட்கள் சுவையாகவும், தரமாகவும் இருக்கும் என்று ஏகமனதாக தீர்மானித்து, பரிந்துரை செய்தனர்.

மணியின் வாழ்வில் இந்த சம்பவம் ஒரு மகத்தான திருப்புமுனையாக அமைந்தது. உணவகத்தை காண்ட்ராக்ட் எடுத்த மணிக்கு உதவிட பல ஊழியர்கள் தேவைப்பட்டனர். தொழில் ஆர்வம் உள்ள பல பேருக்கு மணியால் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. புதிய உணவகம், மணியின் மேற்பார்வையில், மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. மணியின் தாயார் கிராமத்திலிருந்து வரவழைக்கப்பட்டாள். என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலேயே மணி, தன் தாயாருடன் குடி வந்தான். உழைப்பில் சிறந்து விளங்கிய மணி, படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி உன்னத நிலையை இன்று அடைந்தும், என்னையும் என்னுடைய மனைவியையும், சொந்த தாய் தந்தை போலவே மதித்து, அன்புடன் பழகி வருவது, எங்களுக்கும் வயதான காலத்தில், ஒரு வித நிம்மதியையும், றுதலையும் தருகிறது.

நாளும் பொழுதும் எப்போதும் நம்முடனே இருக்கும் போது, எந்தத் தொழிலாகிலும் நம் உழைப்பை அதில் மூலதனமாக்கி, ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவி செய்து கொண்டு, அன்பாலும், அரவணைப்பாலும் ஒளி மயமான எதிர் காலத்தை உருவாக்க, நாமும் நம் மணி போல, முயலலாம் தானே!

– ஏப்ரல் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *