செம்மங்குடி – தன் ஊர் தேடல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 2, 2012
பார்வையிட்டோர்: 8,137 
 

என் ஊர் செம்மங்குடி என நான் நினைக்கும்போது, அதற்கான ஒரு முக்கிய நியாயத்தையும் சொல்ல வேண்டி வருகிறது. என் தந்தை வழி மூதாதையர் அநேக தலைமுறைகள், சமீபகாலம் வரை, இந்த ஊரில் வீடு, சொத்து, சுதந்திரத்துடன் வசித்து வந்திருக்கிறார்கள்.

கர்நாடக சங்கீத உலகில் மிகவும் புகழ்பெற்று, இப்போது இருக்கும் செம்மங்குடி ஸ்ரீனிவாஸ அய்யரையும், காலஞ்சென்ற பிடில் வித்துவான் நாராயணசாமி அய்யரையும், அகால மரணம் எய்திய அவர் குமாரன் கலியாணசுந்தரத்தையும் தெரியாதவர்கள் மிகச் சிலரே, அவர்களும் இவ்வூர்காரர்களே.

ஒரு காரணச் சிறப்புப் பெயரென, ஓர் ஊரைக் குறிக்கும் இப்பெயர். (செம்–அம்-குடி; செம்–மன்–குடி; குடியிருக்கச் செம்மையான ஊர்.) மேலும் தஞ்சை ஜில்லாவில் அநேக கிராமங்களுக்கும் இப்பெயர் இருப்பதன் காரணமாக, எங்கள் ஊரை ‘தீபங்குடி செம்மங்குடி’ என்று பக்கத்து ஊரையும் சேர்த்துச் சொல்லுவது வழக்கம். பெயர்க் குழப்பத்தில் கடிதங்கள் தவறிச் சென்று விடாதிருக்க தபால் இலாகாவினர் செம்பங்குடி என்ற முத்திரையைக் கொடுத்திருக்கிறார்கள்.

கும்பகோணம் திருவாரூர் பஸ் பாதையில், குடவாசலைக் கடந்து, மேலும் ஐந்து மைல் செல்ல, காப்பணாமங்கலம் கிராமம் வரும். காப்பணாமங்கலத்திலிருந்து நேர் வடக்கே இருக்கும் பெரும்பண்ணையூர் செல்ல, ஆற்றிற்கு அங்கு ஒரு பாலம் இருக்கிறது. அதைக் கடந்தவுடன் கிளை பாதை என ஆற்றின் வட கரையிலும் தோப்பினுள்ளும், கோணல் மாணலாக செல்லும் ஒரு குறுகிய வண்டிப்பாதையில் அரை மைல் கிழக்கே சென்றால் செம்மங்குடியை அடையலாம். அடையுமுன் மேலக் குடியானத் தெருவையும், சமீபத்தில் ஊர்ச் செலவிலும் முயற்சியினாலும் ஏற்பட்ட செம்மங்குடி உயர்நிலைப் பள்ளியையும் தாண்டிச் செல்ல வேண்டும்.

இது ஒரு சிறிய கிராமம். வரிசைக்கு சுமார் இருபது வீடுகளைக் கொண்ட ஒரு கிழக்கு மேற்கு வீதிதான் அக்கிரஹாரம். மேலக் கோடியில் தெருவைப் பார்த்து நிற்கிறது ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோவில். கீழ்க் கோடியில் நேராக இன்றிச் சிறிது வடக்கே தள்ளி கிழக்கே எட்டிய தூரம் வரையில் காணக் கிடக்கும் வயல் வெளியைப் பார்த்து நிற்கும் கோவில் ஆனந்தவல்லி சமேத அகஸ்தீச்வரர் கோவில். கோவில்கள் எல்லாம் நல்ல நிலைமையிலே ஊர்க்காரர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அக்கிரஹாரத்தின் கீழ்க் கோடியிலிருந்து, தெற்கே செல்லும் சிறிது இரட்டை வரிசைத் தெருதான் கீழ்க்குடியானவர் தெரு. இது தெற்கே குடமுருட்டியாறு வரையிலும் சென்று முடிகிறது. ஊராருக்குக் குல தெய்வமாக விளங்கும் ‘கரும்பாயிரம் கொண்டவர்‘ ஆற்றங்கரையிலே தேடிக் கண்டு பிடிக்கும் வகையில் ஒரு சிறு கூரைக்கு அடியில் இருக்கிறார்.

செம்மங்குடி ஒரு பாடல் பெற்ற ஸ்தலமல்ல. ஆயினும் இதைச் சுற்றி இரண்டு மூன்று மைல்களில் இருக்கும் பாடல் ஸ்தலமாகிய எண்கண், தலையாலங்காடு, ஸ்ரீவாஞ்சியம், அய்யம்பேட்டை முதலியவற்றிற்கு நடுநாயகம் போன்றே மத்தியில் இருக்கிறது. இது ஒரு புராதன ஜைன ஷேத்திரம். இங்கு ஒரு பழைய ஜைன கோயில் உண்டு. மேலும் இது, முதலாம் குலோத்துங்கன் சபையில் கவிச் சக்கரவர்த்தியாக விளங்கிய வரும், ‘கலிங்கத்துப்பரணி’ ஆசிரியருமான ஜயங்கொண்டாருடைய ஊராகும்.

தஞ்சை ஜில்லா பிராமண சமூகத்தில் ‘வாத்திமர்’ என்றொரு பிரிவுண்டு. இதிலும் அநேக உட் பிரிவுகள் உண்டெனினும் ‘பதினெட்டுக் கிராமத்து வாத்திமர்’ என்ற சுமார் ஆயிரம் குடும்பத்தினர் மாயூரம், கும்பகோணம், நன்னிலம் தாலுகாக்களில் உள்ள பதினெட்டுக் கிராமங்களில் இன்றுவரையில் வழிவழியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த வாத்திமர்களில், ஒரு கோத்திரத்தினரைத் தவிர வேறொருவரும் இன்றி வசிக்கும் கிராமம்தான் செம்மங்குடி என்பது. ஆகவே கிராமத்தினர் எல்லோரும் நெருங்கிய பங்காளிகள். மூல புருஷனிடமிருந்து பதினான்கு தலை முறைகள் தாண்டாதவர்கள். அந்த முதல் மனிதன் என்று சொல்லக் கூடியவர். (ஸ்வர்ண சாஸ்திரி என்பார்கள்) சுமார் 450 வருஷங்களுக்கு முன் (சோழராஜ்யம் சீர்குலைந்து அரசியல் குழப்பமான நாளில் ) இந்த ஊரில் குடியேற ஆந்திர சோழ பிரதேசத்திலிருந்து வந்தார் எனச் சொல்லப்படுகிறது. இவர் குடி வந்த காலத்திற்கு முன்பே சுற்று வட்டாரத்தில் அநேக கிராமங்களில் இருந்தும், சகவாசத்திற்கு தூரத்தையும், வாசத்திற்கு தனிமையையும் விரும்பியவர் போன்று இந்த குடமுருட்டியாற்றின் கடைசி படுகையென சொல்லக்கூடிய செழிப்பிலும் விஸ்தீரணத்திலும் குறைவுகொண்ட இந்த இடத்தைப் பிடித்தார் போல்லும். அவர் வழி வந்தவர்களாகத்தான் இக்கிராமத்தினர், கிராமச் சண்டை பூசலின்றியும், அக்கம் பக்கம் கிராமத்தாருடன் நெருங்கிய சிநேகித தொடர்பு கொண்டும் இதுவரையிலும் வாழ்ந்து வருகிறார்கள். இக் கிராமத்தினர் பொது அறிவும் பகுத்தறிவும் கொண்ட புத்திசாலிகள். ஒரு நியாயப் போக்கு நடைமுறைகளும் இதற்கு மேலாக ஒரு critical sense சும் இவர்களிடம் இருப்பதை பழகி அறிய முடியும். தன்மானமுடையவர்கள். பிழைப்பிற்காக எதையும் செய்யலாம் என்ற நியதியை உடையவர்கள் அல்ல.

ஊரில் உள்ள மூன்று குளங்களில் இரண்டு, எப்போதும் எதற்காகவும் என எல்லோருக்கும் பயன்பட முடியாதென்பதில் ஒன்று ஒருவருக்கும் பயன்படாது, கவனிக்கப்படாது, பாழடைந்து கொண்டிருக்கின்றன.

சிவன் கோவில் குளம் மட்டும் ஒரு காவலில் உபயோகிக்க இருக்கிறது. ஆற்றங்கரையிலுள்ள ஸ்நானத்துறையும், பக்கத்து நந்தவனம், மடம் தோப்பு எல்லாமே இந்தக் கதிக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன. பழைய குதூகலம் மாறிவிட்டது. பேச்சில் சுவாரஸ்யம் குன்றி விட்டது. மனிதர்களிடம் மனச்சோர்வும் காண இருக்கிறது. ஊரும் தன் தனித்தன்மை இழந்து வருகிறது.

எப்பவோ ஆற்று வெள்ளத்தில் போய்விட்ட அக்காவை நினைத்து, புது வெள்ளம் வருமுன்னே அக்காவை திரும்பிப் பார்க்கும் ஆவலில் எங்கிருந்து எல்லாமோ அக்குக் குருவி சோகமுற கத்துவது கேட்கிறது. ஆங்காங்கே தோப்போடு அழிவுறாமல் தனித்து நிற்கும் மா மரங்களினின்றும் கேட்கும், குயில் கூவுதலிலும் இனிமை இல்லை. நந்தவனம் இப்படி தோன்ற இருப்பதிலேயே ஏன் பாழ்தோற்றம் கொள்ளுகிறது? அநேக எதிரிகள் தங்கிப் போவதற்கும், ஊருக்கு பொது மடமாக இருந்தது இடம் தெரியாது பூமியில் புதைவு கொண்டு விட்டது. அரச மரங்கள் இரண்டு, சுற்றுவார் இல்லாது நின்று கொண்டிருக்கின்றன.

எங்கிருந்தோ மகிழம்பூ மணம் மூக்கில் இனிக்க உணர, அந்த இரண்டு மரங்கள் இருந்த இடத்தைப் பார்க்கிறேன். காலடியில் சிதறிய தன் பூக்களின் வாசனையை தாமே குனிந்து மகிழ்ந்து நிற்பது போன்றவை, இருந்த இடத்தில் இல்லை. ஆயிரம் காலத்திற்குப் பின்னும் வாட வாட மணம் கமழ விட்டு எங்கேயோ சென்றனவே போலும்…வெகு அப்பாலிருந்து செம்மங்குடியின் சங்கீதமும், பிடிலும் லேசாக மிதந்துவருகிறது….ஆம். எப்போதோ சிவன் கோயிலில் நடந்த கச்சேரிதான்.

இப்படி இவ்வளவு காலம் தாவி தூரத்தில் தான் இனிமையெனப் படுகிறதா? குடமுருட்டி ஆறும் இரு கூறாக பிரிக்கப்பட்டு வாய்க்காலாக தேய்ந்துவிட்டது.

இருட்டு காணும் முன்பு மாலை வந்து கொண்டிருக்கிறது. மயக்கமும் கூட வருகிறது. இன்று நடுப்பகல் வெயில் வெகு கடுமை…. வசீகர எண்ணங்கள் மறைய, வருங்கால நினைவுகள் தோன்ற இருக்கிறது.

இருள் சூழுமுன் , உள்ளூர் ஆற்றை கடக்குமுன் பயமேதும் தோன்றவில்லை. அப்பால் எல்லையில் உள்ளூர் மயானம் குறுக்கிடும்போது…. எரியும் சவ ஒளியில் முன் நீண்டு ஓடும் நிழலை பிடிக்க ஓடும் விளையாட்டா இந்த நடையின் ஓட்டம். இரவின் இருளில் கரையும்போது. தான் என்ன, தன் நிழல் என்ன? நிசியில் தவறிய காகத்தின் கரைதலும் ஒளி கொள்ளுவதை அறிவிப்பதாகுமா? வருங்கால நல்லுலகின் வானில் ஒளியை காண என் பவிஷ்ய புராண படிப்பு உதவாததை உணருகிறேன்.

எங்கிருந்தோ குலை நடுங்க ஓர் ஊளையிடும் சப்தம் கேட்க ஓடுவதைப் பார்க்கிறேன். எட்டிய வெளியில் தமுக்கொலி ஓர் அவல்யத்தில் ஊரை பிடிக்க வரும் துர்த்தேவதைகளை விரட்ட இருக்கிறது.

எங்கேயோ எட்டிய சகவாசத்திற்கும், தனிமை வாசத்திற்கும் என என் ஊரைத்தான் நான் தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன்.

– 1968

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *