கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 10,954 
 
 

காவ் ஸின்ஜியான்
தமிழில்: ஜெயந்திசங்கர்
ஆங்கில மொழிபெயர்ப்பு: மேபல் லீ
ஓவியங்கள்: காச வினய்குமார்

வலி. அவன் வயிறு முறுக்கி வலிக்க ஆரம்பித்தது. நிச்சயம் தன்னால் மேலும் அதிகத் தொலைவு நீந்திவிட முடியுமென்றே நம்பினான். ஆனால் கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே அவன் வயிறு வலிக்கத் தொடங்கியிருந்தது. நகர்ந்துகொண்டே இருந்தால் வயிற்றுவலி மறைந்துவிடுமென்றுதான் முதலில் நினைத்தான். ஆனால் மீண்டும் மீண்டும் முறுக்கி வலித்தபோது நீந்துவதை நிறுத்திவிட்டுக் கையால் தொட்டுப் பார்த்தான். வலது புறத்தில் ஏதோ கெட்டியாக நெருடியது. குளிர்நீரால் ஏற்பட்ட சுளுக்கு என்று அவனுக்கு ஏற்கனவே தெரியும். நீருக்குள் இறங்கும் முன்னர் அவன் உடற்பயிற்சி எதுவும் செய்திருக்கவில்லை. உணவுண்ட பிறகு விடுதியிலிருந்து நேராகக் கிளம்பிக் கடற் கரைக்கு வந்திருந்தான்.

இலையுதிர்காலத் தொடக்கம். குளிர் காற்றடித்தது. அந்திவேளையில் எப்போதும் மிகச் சிலரே நீருக்குள் இறங்கினார்கள். பெரும்பாலும் கரையிலமர்ந்து அரட்டையடித்தார்கள் அல்லது போக்கர் விளையாடினார்கள். நண்பகல்களில் ஆண்களும் பெண்களும் கடற்கரையில் ஆங்காங்கே மல்லாந்துகிடந்தார்கள். இப்போது ஐந்தாறு பேர் மட்டும் கைப்பந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். அதில் இளம் பெண் ஒருத்தி செந்நிற நீச்சலுடை அணிந்திருந்தாள். மற்ற அனைவரும் ஆண்கள். எல்லோரும் நீருக்குள்ளிருந்து அப்போதுதான் வெளிப்பட்டிருந்ததால் நீச்சலுடைகளில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது. இலையுதிர்கால நாளில் அவர்களுக்கும் கடல் நீர் மிக அதிகத் தண்மையுடனிருந்தது போலும். கடற்கரை விளிம்பெங்கும் வேறு யாருமில்லை.

திரும்பியே பார்க்காமல் நீருக்குள் இறங்கியிருந்தான். அந்தப் பெண் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பாளோ என நினைத்துக்கொண்டான். இப்போது அவர்களைக் காண முடியவில்லை. சூரியன் இறங்கிய திசையில் திரும்பிப் பார்த்தான். கடற்கரையை ஒட்டிய புனர்வாழ்வுமையக் கூடாரத்திற்குப் பின்னால் வான்விளிம்பில் விழப்போகும் சூரியன். கடும் மஞ்சள் கிரணங்கள் கண்களைத் தாக்கின. மலை மேலிருந்த புனர்வாழ்வுமையக் கூடாரம், கடற்கரையில் விளிம்பிட்டு வரிசையாக நின்ற மரவுச்சிகள், படகு வடிவில் நின்ற மருத்துவமனையின் முதல் தளம் போன்றவற்றை அவனால் அங்கிருந்து காண முடிந்தது. மேலெழும்பித் தாழும் கடலலைகளாலும் சூரியக் கதிர்களாலும் அதற்கு மேலிருந்த எதையுமே பார்க்க முடியவில்லை. இன்னும் கைப்பந்து ஆடுகிறார்களா? மெதுவாக நீரில் மிதந்தான்.

மைப்பச்சைக் கடல்மீது வெள்ளை முகட்டலைகள். மேலெழும்பி விழும் கடலலைகள் அவனைச் சூழ்ந்தன. கண்ணுக்கு எட்டியவரை எந்த மீன்பிடிப் படகையுமே காணவில்லை. அலைகளுக்கேற்ப அவன் தன் உடலைத் திருப்பிக்கொண்டான். அலைகளுக்கிடையே விழுந்து, நீர்மட்டம் கண்ணிலிருந்து மறையக் கண்டான். ஆழ்கடல் வழுக்கும் கருமையுடன் ஒண்பட்டுத்துணியை விடப் பளபளத்தது. வயிற்றுவலி அதிகரித்தது. நீர்மட்டத்திற்கு வந்ததும் மல்லாந்துகிடந்து மிதந்தபடி, வலி குறையும்வரை வயிற்றை லேசாகப் பிசைந்து கொடுத்தான். தலைக்கு மேலே தூரத்தில் ஒரு மூலையில் மேகங்கள் கருத்திருக்கக் கண்டான். அங்கே காற்றின் வேகம் இன்னும் அதிகமிருக்கும்.

அலைகள் மேலெழுந்து அடங்கிய படியிருக்க அவனுடல் மேலெழுவதும் கீழே விழுவதுமாக இருந்தது. இப்படியே மிதப்பதில் ஒரு பயனுமில்லை. வேகமாக நீந்திக் கரையடைய வேண்டும். திரும்பியவாறே இரண்டு கால்களையும் சேர்த்து இறுக்கிக்கொண்டான். அதன்மூலம் காற்றின், அலையின் வேகத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டான். சற்றே மட்டுப்பட்டிருந்த வயிற்றுவலி கூடியது. இம்முறை முன்பைவிட அதிக வேகமும் தீவிரமும் கொண்டிருந்தது. தன் வலது கால் செயலிழந்துகொண்டிருந்ததை உணர்ந்தான் – கடல் நீர் தலைக்கு மேல் செல்வதையும்தான். மிகத் தெளிந்த அடர்பசிய நீரைக் கண்டான். அவன் தொடர்ந்து விட்ட காற்றுக் குமிழ்களைத் தவிர கடல் நீர் மிக அமைதியாக இருந்தது. நீருக்குள்ளிருந்து அவன் தலை வெளிப்பட்டது. கண்களைப் பலமுறை சிமிட்டி இமைகளில் படிந்த உப்பு நீரை துடைத்தெறிய முயன்றான். இன்னமும் அவனால் கரையைக் காண முடியவில்லை. சூரியன் அஸ்தமித்துவிட்டது. மலைகள்மீது தெரிந்த வானம் இளஞ்சிவப்பணிந்திருந்தது. இன்னமும் கைப்பந்து ஆடுகிறார்களா? அந்தப் பெண்?

எல்லாமே அவளணிந்திருந்த சிவப்பு நீச்சலுடையால் வந்தது. தன்னை வலிக்கு ஒப்புக்கொடுத்து மீண்டும் மூழ்கினான். காற்றை நீரையும் வாய் வழியாக உள்வாங்கிக்கொண்டபடி சடாரென்று கைகளை ஆட்டி மேலெழுந்தான். எதிர்பாராமல் வந்த இருமலால் வலி வயிற்றில் ஊசியாகக் குத்தியது . கைகால்களை அகட்டி மல்லாந்து மிதக்கவென்று மீண்டும் ஒருமுறை திரும்ப வேண்டியிருந்தது. வலி குறைந்து அடங்கக் கொஞ்சம் அவகாசம் கிட்டியது. உயரே வானம் இளஞ்சாம்பல் நிறம் தரித்திருந்தது. இன்னமும் கைப்பந்து ஆடுகிறார்களா? அவர்கள் மிக முக்கியம். தான் நீருக்குள் இறங்கியதைச் சிவப்பு நீச்சலாடையணிந்த பெண் கவனித்திருப்பாளா? தன்னைத் தேடுவார்களா? சாம்பல் கருமையில் ஏதோ ஒரு திட்டு தூரத்தில் தெரிகிறதே? சிறு படகாக இருக்குமோ? நங்கூரமிட்ட படகு அறுத்துக் கொண்டு எங்கெங்கோ சென்று தனியே மிதக்கிறதோ? அதை மீட்க யாராவது வருவார்களா?

இந்தக் கட்டத்தில் அவன் தன்னை மட்டுமே நம்ப வேண்டியிருந்தது. இரைந்து கூப்பிட்டாலும் எல்லா ஓசையும் கடலலைகளின் பேரோசையில் கரைந்து முடிவின்மையில் மறையும். கடலலைகளின் சத்தங்களைக் கேட்டபடியிருப்பது முன்னெப் போதுமே இத்தனை சோர்வளித்ததில்லை. தடுமாறினான். சட்டென்று சமாளித்தும் கொண்டான். அடுத்து, பனிக்கட்டியின் குளுமையுடன் வந்த அலை அவனைச் சுழற்றி அடித்தது. ஒன்றும் செய்ய முடியாமல் மீண்டும் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தான். பக்கவாட்டில் திரும்பினான். இடது கை வெளியே நீண்டிருந்தது. வலது கையோ வயிற்றைப் பிடித்தபடியிருந்தது. பாதங்களிரண்டும் உதைத்த படியிருந்தன. வயிற்றைத் தடவியும் தேய்த்தும் சமாளிக்க முயன்றாலும் வலி இன்னும் இருந்தது. ஆனால் பொறுக்கும் அளவில்தான் இருந்தது.

குளிர்நீரிலிருந்து தப்பிக்கத் தன் வலிமையிலும் திறமையிலும் மட்டுமே இனி நம்பிக்கைகொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்தான். பொறுக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும் தொடர்ந்து நீந்த வேண்டும். அதொன்றுதான் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கான ஒரே வழி. அதிகம் யோசிக்காதே. யோசித்தாலும் யோசிக்காவிட்டாலும் வயிற்றில் வலி என்னவோ தொடர்ந்து இருந்துகொண்டிருந்தது. அவனோ கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்கடலில் இருந்தான். ஒரு கிலோ மீட்டர்தானா என்றே அவனுக்குத் தெரியவில்லை. கடலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்ததை உணர்ந் தான். உதைகளெல்லாம் அலையின் வேகத்துக்கு ஒரு விளைவையும் ஏற்படுத்தக் காணோம். எப்படியாவது போராடி வெளியேற வேண்டும். இல்லையென்றால், தூரத்தே மிதந்த அந்தச் சிறு படகின் கதிதான். மிதந்து மிதந்து திக்குத் தெரியாமல் சாம்பல் கருமைக்குள் மூழ்க வேண்டியதுதான். வலியைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். வேகத்தைக் குறைக்காமல் தொடர்ந்து உதைக்க வேண்டும். எல்லாவற்றையும்விடப் பதற்றமடையவே கூடாது. முனைப்புடன் உதைக்க வேண்டும்.

துல்லியமாக மூச்சுவிட்டபடி உதைத்தான். வேறெந்தச் சிந்தனையும் கவனக் குவிப்பை கலைத்துவிடும். அச்சத்தால், வேறெந்த யோசனையும் அண்டவிடாமலிருந்தான். சீக்கிரமே அஸ்தமித்துவிட்டதே! உயரே அடர் சாம்பல் நிறம் கொண்டது வானம். கரையில் இன்னும் மின்விளக்குகள் ஒளிரவில்லை. கரையோ மலையோ அதிகத் தெளிவில்லை. எதன் மீதோ அவன் கால்கள் முட்டின. பதற்றமடைந்த வயிற்றுக்குள் பயம் பொங்கியது. கூடவே கூர்மையான வலியும். மெதுவாக முன்னகர்ந்தான். கணுக் காலில் கொட்டும் வலி. மெல்லிய உடலுடன் விரித்த குடையைப் போன்ற நுங்குமீனைக் கண்டான்.

நுங்குமீனை எப்படிப் பிடித்து எப்படிப் பாதுகாப்பது என்று கடலோரச் சிறுவர்களிடமிருந்து கடந்த சில நாட்களில் கற்றிருந்தான். விடுதியறைச் சன்னலோரம் வாயும் விழுதுகளும் அகற்றப்பட்ட ஏழு நுங்குமீன்களை வைத்திருந்தான். நீரைப் பிதுக்கி வெளியேற்றினால் மீதமிருப்பது சுருங்கிய வெறும் தோல். அவனும் அப்படியே ஆகிவிடுவானோ? நீந்திக் கரைசேர வலுவில்லாத வெறும் பிணமாக? பாவம், அது உயிரோடிருக்கட்டும். அவனுக்கும் இன்னும் நீண்ட காலம் வாழ ஆசை. இனி ஒருபோதும் நுங்குமீன் பிடிக்கமாட்டான். அதாவது கரையொதுங்க முடிந்தால். இனி எப்போதும் கடலாடப் போகமாட்டான்.

வேகவேகமாக உதைத்தான். வலது கை வயிற்றைப் பிடித்திருந்தது. நீரில் முன்னகர, தாள லயத்துடன் உதைப் பதில் கவனத்தைக் குவித்து வேறெதையும் யோசிப்பதைத் தவிர்த்தான். வானில் விண்மீன்கள் தென்பட்டன. எத்தனை வசீகரப் பிரகாசம் கொண்டிருந்தன! இப்போது தலை கரையை நோக்கி நகர்ந்தது. வயிற்றில் இருந்த வலியைக் காணோம். இருந்தும் மெதுவாகத் தேய்த்துக்கொண்டிருந்தான். வேகம் குறைவது தெரிந்தாலும் தேய்ப்பதை நிறுத்தவில்லை.

நீருக்குள்ளிருந்து எழுந்து மெல்ல நடந்து நிலத்துக்கு வந்தபோது கடற்கரை முழுமையாக வெறிச்சிட்டிருந்தது. மீண்டும் பின்புறம் அலை பாய்ந்து வந்தது. அதே அலைதான் தனக்கு உதவியதென்று எண்ணிக்கொண்டான். அடித்த காற்று வெற்றுடலை உறையவைத்தது. நீருக்குள் இருந்ததைவிடக் கடுங்குளிரடித்தது. வெடவெடவென்று நடுங்கினான். அப்படியே கடற்கரையில் விழுந் தான். இப்போது மணல் சூடாக இருக்கவில்லை. சடாரென்று எழுந்து நின்று உடனே ஓட ஆரம்பித்தான். தான் மரணத்தை வென்றதைக் கூவிச் சொல்ல விழைந்தான். விடுதி வாயிலில் அதே குழு போக்கர் விளையாடிக்கொண்டிருந்தது. எல்லோருமே அவரவர் கையிலிருந்த சீட்டுகளையோ எதிராளியின் முகங்களையோ சீட்டுகளின் பின்புறத்தையோ கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். யாருக்கும் நிமிர்ந்து அவனைப் பார்க்கத் தோன்றவில்லை. விடுவிடுவென்று நேராகத் தன் அறைக்குப் போனான். அறைத் தோழன் அடுத்த அறையில் இன்னும் அரட்டையடித்துக்கொண்டிருந்தான். துண்டைச் சன்னலருகிலிருந்து உருவி எடுத்துக்கொண்டான். அங்கே கல்லுக்கடியில் உப்பு பூத்தபடி இருந்த நுங்குமீன்களைக் கண்டான். இன்னமும் அவற்றிலிருந்த நீரை அவனால் உணர முடிந்தது. புதிய ஆடைகள், காலணிகளணிந்து மீண்டும் கடற் கரைக்குச் சென்றான்.

கடலலைகளின் பேரோசைதான் எத்தனை இதமாக இருக்கிறது! காற்றின் வேகம் கூடியிருந்தது. சாம்பல் பூசிய வெண்ணலைகள் கரையை நோக்கிப் பாய்ந்தன. கருங்கடல் நீர் திடீரென்று விரிந்தது. சடாரென்று அவன் குதித்திராவிட்டால் காலணிகள் ஈரமாகியிருக்கும். கொஞ்ச தூரம் நடந்தான். இருளோடிய கடற்கரையையொட்டியே நடந்தான். இப்போது நட்சத்திர ஒளியைக் காணோம்.

ஆண் பெண் குரல்கள் கேட்டன. மூவர் வருவது தெரிந்தது. நின்றான். இருவர் இரண்டு சைக்கிள்களை உருட்டிக்கொண்டு நடந்தார்கள். ஒருவன் சைக்கிளின் பின்னிருக்கையில் இருந்த பெண்ணுக்கு நீண்ட கூந்தல் இருந்தது. சக்கரங்கள் மணலுக்குள் புதைந்து நகர்ந்தன. உருட்டியவன் போராடுவதும் தெரிந்தது. இருந்தபோதிலும் பேசியும் சிரித்தும் களித்தார்கள். பெண்ணின் குரல் மிகுந்த மகிழ்ச்சியில் ஒலித்தது.

சைக்கிள்களைப் பிடித்தபடியே அவன் முன்னால் நின்றார்கள். மற்ற சைக்கிளிலிருந்த கூடையிலிருந்து ஒரு பெரிய பொதியை எடுத்து அப்பெண்ணிடம் நீட்டினான் ஒருவன். ஆண்கள் இருவரும் உடைகளை அவிழ்க்க ஆரம்பித்தார்கள். எலும்பு தெரியும் அளவுக்கு மெலிந்த இருவரும் கைகளை ஆட்டியவாறே முழுநிர்வாணமாகக் குதித்தோடினார்கள். ‘பயங் கரக் குளிர்! ரொம்பக் குளிர்!’

சைக்கிள்மீது சாய்ந்திருந்த பெண், ‘இப்பவே குடிக்கறீங்களா?’ என்று அவர்களை நோக்கிக் கூவினாள்.

அப்பெண்ணை நெருங்கி அவள் கையிலிருந்த மதுப் புட்டியை வாங்கி மாறி மாறிக் குடித்தார்கள். பிறகு, புட்டியை அவளிடமே கொடுத்து விட்டுக் கடலை நோக்கி ஓடினார்கள்.

‘ஹேய், ஹேய்!’

‘ஹேய் , . .’

அலைகள் மேலும் மேலும் உயரம் கூடியபடி பேரோசையுடன் முன்னேறி மிரட்டின.

‘போதும். போதும், திரும்பி வாங்க’, என்று அப்பெண் கத்தினாள். ஆனால் ராட்சத அலைகள் மட்டும் பெரும் ஓசையுடன் அவளுக்கு எதிர்வினையாற்றின.

மங்கலான விளக்கொளி ஆக்ரோஷமாய் எழுந்தடங்கியவாறிருந்த அலைகள்மீது விழுந்தது. சைக்கிள் மீது சாய்ந்திருந்த அப்பெண் இரு கைகளிலும் ஊன்றுகோல்களுடன் நின்றிருக்கக் கண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *