காலை 11 மணி. வழக்கம் போல ‘தமிழ்த்தேன் அருவி’ பத்திரிகை அலுவலகம் சுறு சுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. உதவி தலைமை ஆசிரியர் அறையில் ஒரே சத்தம். “என்னய்யா எழுதறீங்க! எப்படி எழுதறதுன்னு தெரியாம ஏன் வந்து என் கழுத்தறுக்கிறீங்க. சே ! பேசாம பத்திரிகையை மூடிட்டு போக வேண்டியதுதான்.”
கிட்டதட்ட ஒரு அரைமணி நேரமாக சத்தம் போட்டுக்கொண்டிருந்தவர் உதவி தலைமை ஆசிரியர் வாழப்பாடி ராம கிருஷ்ண சிவசங்கரன் (ராசி ) . முழுபெயரும் கூப்பிட்டு முடியற காரியமா அது?
அதனாலேயே அவருக்கு இன்னொரு பெயரும் உண்டு “குத்தூசி”. ஆகு பெயர். மனுஷன் குறை சொல்லியே கொன்னுடுவார். சத்தம் போட்டே சாகடிப்பார். சரியான கடி. எல்லாவற்றிற்கும் ஒரு விளக்கம் கொடுப்பார், அல்ப விஷயங்களுக்கு கூட. மற்றவர்களுக்கு தெரிந்திருக்குமா இல்லையா என்பதை பற்றி அவருக்கு அக்கறையே இல்லை. “ஆழ்வார்கள் என்றால் என்ன அர்த்தம் தெரியுமோ? உங்களுக்கு எங்கே தெரிந்திருக்க போறது?” இப்படி ஆரம்பித்து குதறி விடுவார். விட்டால் போதுமென்றிருக்கும்.
இதனால், அவர் தலையை கண்டாலே மற்ற நிருபர்கள், ஆசிரியர்கள் எழுந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். எதிர்பக்கம் வேக வேகமாக நடையை கட்டிவிடுவார்கள். அதுவும் ஒரு உடற்பயிற்சிதானே. இப்படியாக ,அவரை அறியாமல், குத்தூசி , அவரது நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் நன்மை செய்து கொண்டிருந்தார்.
அன்று நடந்தது இதுதான்.
தமிழ்த்தேன் அருவி சுமாராக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு மாத இதழ். அதில் கவிதை, கதை கட்டுரை, கிசு கிசு, அரசியல், நகைச்சுவை, போன்றவை பரவலாக இருக்கும். புதிதாக சேர்ந்த ஒரு எழுத்தாளர், அரை பக்க செய்தியை மூணு பக்கத்திற்கு இழுத்து விட்டார். வாசகர் ஒரே திட்டல் மயம். எடிட்டர் –இன்- சீப் காட்டு கத்தல். அதை குத்தூசி இங்கே காட்டிக் கொண்டிருந்தார்.
“சார், கொஞ்சம் கோபப் படாமே நான் சொல்றதை கொஞ்சம் கேக்கறீங்களா?” – பணிவாக கேட்டார் மூத்த நிருபர் கோவிந்தன்.
“என்ன! சொல்லித் தொலைங்க சீக்கிரம்!” –குத்தூசி
“பேசாமே நீங்களே ஒரு கிளாஸ் எடுங்களேன், எப்படி சுருக்கமா எழுதனும்னு. புதுசா சேந்தவங்க மட்டுமில்லாமே எங்க எல்லாருக்கும் உதவியாக இருக்கும்”
“என்ன கோவிந்தன், இதிலே உள்குத்தல் எதுவும் இல்லியே?”- சந்தேகத்துடன் குத்தூசி .
“சே! சே! அதெல்லாம் ஒண்ணுமில்லே சார்”
“சரி! எல்லா நிருபரையும் ஒண்ணா சேருங்க! இன்னிக்கு சாயந்தரம் ஒரு செஷன் எடுத்திடுவோம்”
“அப்படியே ஆகட்டும் சார்!” இப்போது விட்டால் போதுமென்று இருந்தது எல்லாருக்கும்.
மனசுக்குள் ஆபத்பாந்தவன் கோவிந்தனுக்கு ஒரு ஓ போட்டுவிட்டு, இருந்த ஐந்து நிருபர்கள் காக்கை கூட்டம் போல் கலைந்தனர்.
“கோவிந்தன்! சீப் எடிட்டர் காதிலே நான் கிளாஸ் எடுக்கறதை பத்தி ஒரு வார்த்தை போட்டு விடுங்கள்” –குத்தூசி
தன்னை பற்றி, தன் குறைகளை பற்றி குத்தூசி சாருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் தன் குறைகளை களைந்து, இன்று மிக அழகாக வகுப்பெடுக்க முடிவு செய்திருந்தார். அதனால் சொல்ல வேண்டிய கருத்துக்களை கோர்வையாக சொல்ல தனது அறையில் அமர்ந்து குறிப்பெடுத்து கொண்டார்.
***
மாலை ஐந்து மணி.
பலி ஆடுகள் மாதிரி தலையை தொங்க போட்டுக்கொண்டு ஒவ்வொரு நிருபராக டிஸ்கஷன் அறை நோக்கி . “உஸ், அப்பா, இப்பவே கண்ணை கட்டுதே! இந்தாள் இன்னிக்கி என்ன சொல்லி அறுக்கப் போறானோ தெரியலியே” முணுமுணுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தனர்.
கோவிந்தன் கில்லாடி. இந்த கூட்ட ஆர்கனைசர் என்ற பெயரில் கதவு அருகில் நின்று கொண்டார். சமயம் பார்த்து நழுவ.
“எல்லாரும் வந்துட்டீங்களா? இப்போ நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை, அதாவது சுருக்கமா எழுதறதை பத்தி விளக்கமா சொல்லப்போறேன். ஏதாவது சந்தேகம் இருந்தால் நிறுத்தி கேளுங்க”- குத்தூசி
“சார், எத்தனை மணிக்கு முடிப்பீங்க? ”- ரங்கமணி, புது நிருபர்.
“இதுதான் சந்தேகமா? நீ எழுதற லட்சனத்திற்கு நக்கல் வேறே கேடாக்கும். கவனமா நான் சொல்றதை கேள். உக்கார்”
முகத்தை முழ நீளத்திற்கு வைத்துக் கொண்டு அமர்ந்தார் ரங்கமணி.
“ சுருங்க சொல்வதென்றால் என்ன?. யாராவது சொல்ல முடியுமா?” – குத்தூசி
“அறுக்காம பேசறது அல்லது எழுதறது சார்!” – ரவி
“நீங்க பேசறமதிரி இல்லாம இருந்தா சார்”- பின்னாடியிலிருந்து ஒரு குரல். கொல்லென்று ஒரு சிரிப்பு நிருபர் இடையில்.
“சரி சரி. என் கேள்விக்கு பதில் சொல்லுங்க பாக்கலாம்?”
“ஒரு விஷயத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள ஆகும் காலத்தினைத் தவிர்க்க, ஒரு முன்னுரை போன்று தரப்படுவது.” – கோவிந்தன்
ரொம்ப சரி, சுருங்க சொல்லுதல் இதுக்கு ஆங்கிலத்தில் என்ன பேர்?
“இது தெரியாதா! ப்ரிசி(ஸ்) ரைட்டிங் சார் “ கோரசாக எல்லாரும் .
“பரவாயில்லையே! சரி சுருங்க சொல்லுதலுக்கு தமிழ்லே யார் சிறந்தவங்க? தெரியுமா?”
“அவ்வை பாட்டி சார்”
ரொம்ப சரி. இப்போ நான் சொல்ற விஷயத்தை கவனமாக கேளுங்க . கடைசிலே நான் கேள்வி கேப்பேன் “ என்ற பீடிகையோடு குத்தூசி ஆரம்பித்தார்.
வாசலில் நின்று கொண்டிருந்த ஆர்கனைசர் கோவிந்தன் இதுதான் நல்ல சமயம் என்று நழுவினார் .
“அந்த காலத்திலேயே சுருங்க சொல்வதின் மகிமையை நன்னூல் சொல்கிறது.
“சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல்
ஓசை உடைமை ஆழம் உடைத்தாதல்
முறையின் வைப்பே உலகம் மலையாமை
விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்தது
ஆகுதல் நூலிற்கழகு எனும் பத்தே”
திருவள்ளுவர் சொல்கிறார் :
சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து
ஒளவை பாட்டி ரொம்ப அழகாக சொல்கிறார்
அறஞ்செய விரும்பு. ஆறுவது சினம் என்று அடுக்கடுக்காக .
ஆறுவது சினம். என்கிறார் ஒளவை . அதையே வள்ளுவர் : தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் என்று தன் குரளில் வைக்கிறார். ஊக்கமது கைவிடேல். என்றார் ஒளவை. அதையே வள்ளுவர் ஒன்றரை அடிகளில்
“உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இல்லார் உடையது உடையரோ மற்று
ஓதுவ தொழியேல்” என
நன்றி மறவேல். இதை குறள் கொடுத்த கோமகன் “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று” என்று அழகாக எடுத்துக் கொடுக்கிறார் .
கம்பர் சொல்கிறார். அது சுருங்க சொல்லுதலின் முத்தாய்ப்பு. என்ன சொல்கிறார் அவர் ?
“கண்டெனன் கற்பினுக் கணியையைக் கண்களால்
தென்திரை அலைகடல் இலங்கைத் தென்னவ
அண்டர் நாயக இனிதுறத்தி ஐயமும்
கொண்டுள்ள துயரும் என்றனுமன் பண்ணுவான்.”
சீதையை இலங்கையில் பார்த்த அனுமன், ராமனிடம் சேதி சொல்லவேண்டும். சுருங்க சொல்வதென்பது இதுதான். இலங்கை, சீதை என்று ஆரம்பிக்காமல், ராமனுக்கு கண நேர பதட்டதிற்கும்,ஐயத்திற்கு இடம் கொடாமல், “கண்டேன் சீதையை” என்கிறான்.
அருணாசலக் கவியார், தன் இராம நாடக கீர்த்தனையில்,
“கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை
கண்டேன் இராகவா” என்றிசைத்திருப்பார்.
எதிரில் இராமன். அவன் எதிரில் பணிவுடன் அனுமன். இராமன் இட்டப் பணியைச் செவ்வனே நிறைவேற்றிய அனுமன் தான் சீதையைக் கண்டதை உரைக்கவேண்டும். இது காட்சி.
எப்படித் துவங்குவது? “சீதை” என்று தன் பேச்சைத் துவங்குவானாயின் இராமனுக்கு அவ்வொரு மணித்துளியில் “சீதையை இவன்பார்த்தானா?” என்னும் வினா எழுந்து விடும். “இலங்கை மாநகர்”என்று அனுமன் துவங்குவானாயின் “அங்குச் சென்றாயா? அங்குதான் என்மனைவி சிறையிருக்கிறாளா?” என்னும் வினா ஓர் மணித்துளிகள் நிலவும். “இராவணன்”எனத்துவங்குவானாயின் “இராவணன்தான் தன் மனையைக் கடத்திச் சென்றானா?” என்னும் ஐயம் ஓர் மணித்துளிகள் நின்றுமறையும்.
எப்படித் துவங்குவது?. அனுமன் சற்றே எண்ணிப்பார்க்கிறான்.இங்குதான் கம்பன் தன் பாத் திறத்தை , பாத்திரத்தை முழுமையாய்க் காட்டி மிளிர்கிறான் என்று கம்பநாட்டாரை அறிந்த ஆன்றோர்கள் உரைப்பர்.
இராமன் சீதையையல்லவா கண்டுவர அனுமனைப் பணிகிறான்? அவளைக் கண்டுவந்த அனுமன்”சீதையை” என்று மொழிவானாயின் இராமனுக்கு “சீதையை?” (கண்டாயா? இல்லையா?) என்கிற வினா எழுந்துவிடுமாம்.
இராமனுக்குச் சற்றும் தன்சொல்லில் ஐயம் எழக்கூடா தெனக்கருதியும். அவ்வொரு மணித்துளி மனவருத்தத்தையும் அவனுக்குத் தான் அளிக்கக்கூடா தெனக்கருதிய அனுமன் கண்டேன் சீதையை என்றானாம்.
இக்காட்சியைக் கம்பனின் பாத்திறத்திற்குக் காட்டாக ஆன்றோர்கள் கூறுவது வழக்கம்.
மேலும், “கற்பினுக் கணியையைக் கண்களால்” ( சீதை கற்புடன் தான் இருக்கிறாள் என்பதை அவள் கண்களால் பார்த்தேன்) என்று அனுமன் இராமனிடம் உரைத்ததற்குக் காரணம் சீதையைக் கடத்திய இராவணனின் சொல்லுக்குப் பணிந்து அவனோடிணங்கி விட்டிருப்பாளோ? என்கிற ஐயம் உள்ளுற இராமனுக்கு இருந்தது. அதனை அகற்றும் விதமாய் அனுமன் அவ்வாறுரைத்தான் என்பர்.
“கண்டெனன், கற்பினுக் கணியையைக் கண்களால்” என்னும் பாவடிக்கு ஆன்றோர்கள் கூறும் அக்கருத்தோடு அவ்வரியின் முழுபொருளும் முற்றுபெற்று விட்டதா? என்பதில் எனக்கு ஐயம் ஏற்பட்டது.
என் சிற்றறிவு அதனினும் நுன்னிய பொருட்செறிவை உள்ளொளித்தே கம்பன் அவ்வரிகளை இயற்றியிருக்க வேண்டும் எனச்சொல்லிற்று.
அவ்வுட்பொருள் யாதாயிருக்கும்? அதைப்பற்றி ஆராய்வோம்.
பொதுவாக இராமன் சீதை அனுமன் போன்ற பல பாத்திரங்களைக் கம்பன் வால்மிகியின் மூலக்கதையினின்றும் முரண்பட்டு கடவுள் நிலைக்கு உயர்த்திப் படைத்தமை மாநிலம் அறிந்த மர்மம்.
காட்டுக்கள் காட்டவெனில் ஆயிரம் காட்டலாம். நாம் இங்கு காணும் காட்சி அனுமனை முதன்மைப்படுத்தியே என்பதால் அனுமனைக் கம்பன் கடவுளாய் உருவகித்துப் பாடிய பாடலை மட்டும் காட்டாகப் பார்த்துவிட்டு காட்சிக்குச் சென்றுவிடலாம்.
அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றா றாக ஆரியற் காகஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனெம்மை அளித்துக்காப்பான்.
அனுமன் இராமனின் அடியவனாயினும் அவனிடம் பேராற்றல் நிறைந்துள்ளமையைக் கம்பர் பலவிடங்களிற் காட்டத்தயங்கவில்லை.
முக்காலும் உணர்ந்தவனாகவே அனுமன் இருக்கிறான்.
இப்பொழுது நாம் காணவிருக்கும் காட்சிக்கு வந்துவிடுவோம்.
அனுமன் தென்னவன். தென்னவர்களிடம் பல சிறப்புகள் உண்டு. அவற்றுள் ஒன்று இன்னாரிடம் இதைப்பேசலாம் இதைப்பேசக் கூடாதென்ற வரைமுறை அவற்றுள் ஒன்று.
இராமனோ (கம்பன் காவியப்படி) கடவுள். (அல்லது அந்நிலைக்கு உயர்த்தப் பட்டவன்.) அனுமன் இராமனுக்கு அடியவன்.
மனிதர்களுள் இன்னாரிடம் இதைஇதைப் பேசலாம் பேசக்கூடாது என்கிற வரைமுறையுள்ளது போல் கடவுளாக ஏற்றுக்கொண்ட இராமனிடம் அடியவனான அனுமன் இதையிதைப் பேசலாம் கூடாது என்கிற வரையரையுண்டல்லவா?
இராமன் அனுமனுக் கிட்ட பணி சீதையைக் கண்டுவா என்பதே. காணச் சென்றவனும் கண்டுவந்தவனுமான அனுமனுக்கு இராமன் சீதையை மீட்பான் என்பதும் அவள் கற்பில் ஐயுற்றுத் தீயில் தீய்ப்பான் என்பதும் முன்கூட்டியே அறிந்தவனாயுமிருக்கிறான்.
இராமன் சீதையின் கற்பில் ஐயுறவிருப்பதை முன்கூட்டியே சுட்டவும் குட்டவும் கருதிய அனுமன் அதை தான் ஆசானாய் எற்றவனிடம் நேர்முகமாய் உரைத்தல் மரபாகா எனக்கருதி இக்காட்சியைப் பயன் படுத்தி, “கண்டேன் சீதையை. மேலும் அவள் கற்புத்தன்மை குன்றாது விளங்குகிறாள் என்பதை அவள்கண்களால் பார்த்தேன்” என்கிறான்.
“அடே மடையா! நாளை உன் மனையை மீட்டுவந்தபின் அவள் கற்பில் ஊரார் ஐயுறினும் நீ ஐயுறாதிருப்பாய். ஊரோடு ஒப்புர ஒழுகி அவளைத் தீயில் இறக்கிவிடாதே!” என்பதை நேர்முகமாகச் சொல்லமுடியாத அனுமன் அதனை இக்குறிப்பால் உணர்த்தியதாகவே என் சிற்றறிவுக்குப் படுகிறது.
முடித்தார் குத்தூசி . “ என்ன நான் சொல்வது புரிந்ததா ? சுருங்க சொல்வதை பற்றி விரிவாக விளக்கினேனே ? ஏன் பதிலே இல்லை இன்னும் விளக்கம் தேவையா ? “ நிமிர்ந்தார் .
அறையே நிசப்தம் . ஒருவர் கூட இல்லை. அவர் தன் விளக்கத்தில் ஆழ்ந்திருந்த போது அனைவரும் சப்தமில்லாமல் நழுவி விட்டனர். என்ன தான் அருமையான பேருரையாக இருந்தாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே!
“யாருமில்லா தனி அரங்கில் ஒரு குரல் போலே “ யென்று வெளியில் ஒரு ரிங் டோன் ஒலித்துக்கொண்டிருந்தது.
***
நன்றி : கூகுளில் படித்த “கண்டேன் சீதை ” பொருள் பற்றிய அருமையான விளக்கம் : வேடிக்கையான கதை வடிவில் இங்கே: பொருள் மட்டும் கொள்ளவும்.