(1962ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வண்ணத்தின் அழகால் பொங்கிப் பூரண மாகிய ஓவியம் என்று கருதினான், சுந்தரன்.
“வண்ண அழகில்மட்டும் மயங்கினால் போதாது. வண்ணக் கலவை வாழ்வினை எதிரொளி செய்கிறதா என்று பார்க்க வேண்டும். ஓவிய மாகட்டும் அல்லது வேறு எந்தக் கலைதா னாகட்டும். வாழ்க்கையின் மறு பதிப்பாகத்தான் இருக்கவேண்டும்.” இது சுந்தரனுடைய நண்பன் திருநாதனின் வாதம்.
சுந்தரன் அன்று ஒரு படம் வாங்கி வந்து தன் அறையில் மாட்டினான். சுடுகாட்டின் நடுவே என்பறாக் கோலத்து எரியாடும் பெருமானின் திருக்கூத்தினை அந்தப் படம் விளக்கியது. அந்தப் படத்தினைத் தீட்டிய ஓவியன் தக்க வண்ணங்களை இயைந்த முறையில் தீட்டியிருந் தது கண்டு சுந்தரன் வியப்பெய்தினான். அந்த வியப்புத்தான் படத்தை விலை கொடுத்து வாங்கச் செய்தது.
“நான் வாங்கியுள்ள படம் எப்படியிருக் கிறது? நீ பெரிய கலைஞனாயிற்றே! உன் கருத் தைத் தெரிந்துகொள்ளலாம்” என்றான் சுந்தரன்.
திருநாதன் உற்றுநோக்கினான். நெடுநேரம் நோக்கியும் அவன் முகத்தில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. சுந்தரனுக்கு ஒரே வியப்பாயிற்று.
“என்ன’ப்பா ! ஒன்றுமே சொல்லமாட்டே னென்கிறாயே? பத்து ரூபாய் கொடுத்து வாங்கிய படம் உனக்குப் பிடிக்கவில்லையா?”
“அ…! பத்து ரூபாயா கொடுத்தாய்! இதற்கா? பாழாய்ப்போன இந்த இழவுக்கா பத்து முழு ரூபாயைக் கொட்டினாய் ?”
“ஓவியன் கலந்துள்ள வண்ணங்களின் சிறப்பு ஒன்றுக்கே ரூபாய் நூறு கொடுத்தாலும் தகுமே!”
திருநாதன் தன் கொள்கையை மாற்றத் தயாராயில்லை. “அட, போ’ப்பா. நீ ஒரு பயித் தியம். வெறும் வர்ணமா கலை? அப்படியென்றால் நிறங்களையே சுவரெல்லாம் தீட்டிவைப்பது தானே? வாழ்வு வேண்டாமா ? வாழ்க்கையின் திட்ப நுட்பமான சூத்திரமல்லவா கலை ? – அது இந்தப் படத்திலே மருந்துக்குக்கூட இல்லையே!”
“வாழ்க்கையின் மறுபதிப்புத்தான் கலையா? சரி, அப்படியே வைத்துக் கொள்ளலாம். ஆனால், வாழ்க்கை என்பது என்ன? அதன் எல்லாக் கூறுகளையும் கோணங்களையும் நீ அறிந்து விட்டாயா ?” -என்று சும்மாவாவது சொல்லி வைத்தான் சுந்தரன். வெறும் வாதத்துக்காக ‘ஏதோ வார்த்தைக் குவியல்கள்’ என்றுதான் அப்போது அவன் கருதினான்.
“உனக்கு மிகத் தெரியுமோ” – “நீ மகா அறிவாளியோ ?” “எல்லாம் கண்டவனோ நீ”
இந்தக் கேள்விகள் பிறந்துவிட்டால் வாதத்துக்கு வளர்ச்சியில்லை. அதோடு நிறுத்தி விட வேண்டியதுதான். இதை அறிந்தவன் திருநாதன். அடே, போ’ப்பா! பயித்தியம் என்று சொல்லிச் சுந்தரனின் பேச்சுக்கு. முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்.
2
கொலைக் குற்றத்தைமட்டும் ஏன் பெரிய குற்றமென்று சொல்லுகிறார்கள் “-இந்த அதிசயமான கேள்வியை ஒரு நாள் திருநாதன் சுந்தரனிடம் கேட்டான்.
சுந்தரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “என்ன? கொலையா? என்ன கொலை? ஏன்? .?? ம்ம் ? கொலைக்குற்றம் என்ன, திருநாதன்,என்ன கேட்டாய்?”
“கொலை என்று சொன்னாலே இப்படி ஏன் பயப்படுகிறாய்? பயப்படாதே! உன்னை யாரும் கொன்றுவிட மாட்டார்கள். கொஞ்சம் நிதானமாய் நான் சொல்வதைக் கேள். ”
“கேட்கிறேன்.சொல்லு. ஆனால், முதலிலே நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அதற்கு விடை சொல்லிவிட்டு மேலே என்ன வேண்டுமானாலும் பேசு. சரியா?”
“என்ன’ப்பா, உன் கேள்வி ?”
“நீ ஏன் ஒரு மாதமாய் வெறி பிடித்தவன் போல இருக்கிறாய்? நானும் என்னவெல் லாமோ பேசியும் விளையாடியும் உன் போக்கை மாற்ற முடியவில்லையே. வேறே நண்பர்களிடம் சொல்லிப் பார்க்கவும் விருப்பமில்லை. சரி, உன்னையே கேட்டுவிடலா மென்றுதான், இன்று கேட்கிறேன். என்ன, ஏன் என்று என்னிடம் கூடவா சொல்லக்கூடாது?”
திருநாதனுடைய இதழ்களில் மெல்லிய புன்னகை தவழ்ந்து மறைந்தது. அவனது வலக் கரம் முன்குடுமியைப் பிடித்து உலைத்து விட்டது. பொத்தான் மாட்டாமல் கிடந்த சட்டையின் கழுத்துப் பட்டையை இடக்கரம் இழுத்துவிட்டது. திடீரென்று எழுந்தான்.
கைகளைக் கால்சட்டையின் பைகளுக்குள் இட்டுக் கொண்டு அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். கடைசியில் தெருவை ஒட்டியிருந்த சன்னலின் அருகில் சென்று நின்றான். மிகத் தாழ்ந்திருந்த அந்தப் பெரிய சன்னல் தளத்தின் மீது இடக்காலைத் தூக்கி வைத்து, அந்தக் கால்மீது சாய்ந்த தன் தலையைக் கரத்தால் தாங்கிச் சிறிது நேரம் அசையாமல் இருந்தான்.
இவ்வளவையும் பார்த்துக்கொண்டு சுந்தரன் சும்மா இருந்துபார்த்தான். திருநாதன் பேசுவதாகக் காணோம். திருநாதனின் நினைவே இந்த உலகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. வெறிச்சென்ற அந்தப் பார்வையில் வெறி- எல்லாவற்றையும் விழுங்கப் பார்க்கும் ஒரு வெறி-பரந்து கிடப்பதைக் கண்டான். ‘பைத்தியம் இப்படித்தான் பிடிக்கும்போல் இருக்கிறது’ என்று எண்ணிற்று அந்த நண்பனின் உள்ளம்.
சுந்தரனுக்கு இந்தக் கொடிய மௌனத் தைத் தாங்கும் பொறுமை இல்லை. கொஞ்சம் கோபமாகவே பேசினான்: இந்தா பார்,திரு நாதன்! இதெல்லாம் நன்றாயில்லை. ஏதாவது மனக்கவலை இருந்தால் நீயாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது நண்பர்களிடம் சொல்லித் தீர்க்க வேண்டும். சொல்ல மனமில் விட்டால் நான் ஏன் கட்டாயப்படுத்தப் போகிறேன் ?…. சரி, சரி. எங்காவது வெளியே போகலாம், வருகிறாயா?”
“சுந்தரா! நீ போய் வா. நான் வரவில்லை. எனக்கு என்னவோ போலிருக்கிறது.நாளைக்குப் பேசலாம்; வருகிறாயா?”
சுந்தரன் போய்விட்டான். போகிற வழியி லெல்லாம் அவன் மனக்கண்முன் திருநாதனின் கேள்விதான் நின்றது—” கொலைக் குற்றத்தை மட்டும் பெரிய குற்றமென்று ஏன் சொல்லு கிறார்கள்?”
3
“சுந்தரா! எவ்வளவோ நாளாயிற்றே, உன்னைப் பார்த்து! உன்னை ஒன்று கேட்க வேண்டுமே!”
“ஆமாம், என்னைப் பார்க்கவேண்டியது தான்; உடனே ஒரு கேள்வியைக் கேட்டு விட்டு, அந்தச் சன்னலிலே போய்க் கல்லாய் நின்றுவிட வேண்டியது. சரிதான், போ. உனக்கு வேறு வேலை கிடையாது…. “
“அட, நான் என்ன கேட்கப் போகிறேன் என்றுகூடத் தெரியாமல் நீயே அளந்தால்….?”
“சரி, சரி. இன்றைக்குப் படம் பார்க்கப் போகிறது என்ற தீர்மானத்தோடு வந்திருக் கிறேன். உன்னை இன்று விடப்போவ தில்லை. புறப்படு…. நேரமாயிற்று. உன் கேள்வியெல் லாம் அப்புறம்தான்.”
இருவரும் போனார்கள். ஒருவன் படத்தைப் பார்த்தான். மற்றொருவன் படத்தைச் சிறிது பார்த்து ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண் டிருந்தான். திருநாத னுடைய உள்ளத்தை அரித்துக்கொண் டிருந்தது ஒரு கேள்வி. அந்தப் படத்தில் அவன் கருத்தை ஈர்த்த சில கட்டங்கள் அந்தக் கேள்வியை வெளியே இழுத்துக்கொண்டே இருந்தன. ஆக, சுந்தரனும் படத்தைச் சரிவர அனுபவிக்கவில்லை.
அன்றைக்கும் வீட்டுக்குப் போகும்போது திருநாதனின் கேள்விதான் அடிக்கடி அவன் செவிகளில் ஒலித்துக்கொண்டிருந்தது:
“சமூக அமைப்பு எதற்காக ஏற்பட்டது ? உள்ளங்களை வளரவிடாமல் செய்வதற்காகவா?”
4
திருநாதனின் போக்கு வரவரச் சுந்தரனு டைய மனத்தை மிகமிக வருத்திற்று. இது சரியல்லவே. இனி, கீழ்ப்பாக்கம்தானா இவன் இருப்பிடம்?” என்ற அளவுக்கு அவன் எண்ண மிடத் துவங்கிவிட்டான். ஏதோ ஒன்றை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திருநாதன் திண்டாடுகிறான் என்று சுந்தரன் தெரிந்துகொண்டான். அவன் உழல்கின்ற அந்தத் துன்பத்தி லிருந்து விடுவிப்பது எப்படி என்பது சுந்தரனுக்கு விளங்கவில்லை. – வெள் ளத்தின் சுழலில் சிக்கிக்கொண்டவனை நீச்சுத் தெரிந்தவன் பிழைக்கச் செய்யலாம். ஆனால், வானத்தில் இருள் கப்பியிருக்கும் நேரத்தில்- பரந்த கடலில் எங்கு மிதக்கிறான் என்று தெரி யாத சமயத்தில் ஒருவனை எப்படித் தப்புவிக்க முடியும்? – இந்த நிலைமைதான் அங்கே நிலவிற்று.
ஒரு நாள் திருநாதனும் சுந்தரனும் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண் டிருந்தார்கள். திருநாதன் பேசினான்: “கேட்டாயா, சுந்தரம்! ஓர் அருமையான கதை! பூனை எலியோடு விளையாடுவதைப் பார்த்திருக்கிறாயா?”
“பூனை எலியோடு விளையாடுவதா ?! எலிக்கு அழிவுகாலமல்லவா அது?”
“ஆமாம். ஆனால், நான் சொல்லப்போகும் கதை இன்னும் வேடிக்கையானது. கேள். ஒரு காட்டில் ஒரு புலி இருந்தது. அது எப்படியோ ஒரு மானோடு விளையாடத் தொடங்கிற்று. கொஞ்ச நாளில் புலியும் மானும் நெருங்கிப் பழகிவிட்டன. அப்புறம்…”
“இந்தா, திருநாதன்! என்னை என்ன பாப்பா என்று எண்ணினாயா ? அல்லது ஒரு வேளை குழந்தைக் கதை ஏதாவது எழுதப் போகிறாயா?”
“அடே, போ’ப்பா. சமூகமே நம்மையெல் லாம் சின்ன சின்ன விளையாட்டுப் பிள்ளைகளாகத் தானே வைத்திருக்கிறது !…. சரி. என் கதையைக் கேளப்பா. புலியும் மானும் நெருங்கிப் பழகினவா? அப்புறம்….”
“அப்புறம் விழுப்புரம்! புலியும் மானும் நண்பர்களாம்! இவர் பார்த்தாராம்! புலி எங்காவது மானை விட்டுவைக்குமா? ”
“அங்கேதானே வேடிக்கை இருக்கிறது. எப்படியோ இரண்டும் பழகிவிட்டன. மேலே கேள். முழுதும் கேட்டபிறகு நீ பேசு.”
“முழுவதையும் கேட்பதாவது? புலியும். மானும் உங்கள் பாட்டனார் காலத்தில் பழகும்! போ’ப்பா. இந்தப் பச்சைப் புளுகை யாராவது நம்புவார்களா?”
“அங்கேதானே எனக்கும் புரியவில்லை. பழக முடியாதுதான். உண்மைதான். ஆனால், நான் சொல்வதும் உண்மைதானே! உண்மை யாகவே புலியும் மானும் பழகிவிட்டன….கேட்டாயா….ம்ம்…. ?”
இப்போதுதான் சுந்தரனுக்கு ஓர் எண்ணம் பிறந்தது. ‘சரி, இவன் வெறும் கதை சொல்ல வில்லை. என்னவோ மனத்தில் வைத்துக் கொண்டு இப்படியாகச் சுற்றி வளைத்துப் பேசு கிறான். சரி, கேட்டுப் பார்ப்போம்’ என்று நினைத்தான். இவன் யோசிப்பதைக் கவனித்த திருநாதன், “ என்ன’ப்பா ! பெரிய கோட்டையா பிடிக்கிறாய்? நான் கோட்டை பிடித்தது. போதாதா? சொல்’றதைக் கேளப்பா!”
“உன் கதையைத்தா னப்பா நானும் எண்ணிக்கொண் டிருந்தேன். ஒருவேளை நீ சொல்லுகிற புலியும் மானும் சிறு குட்டிகளாக இருக்கும்போதே பழக்கமோ?”
“அதெல்லாம் ஒன்றுமில்லை. எப்படியோ புலியின் குகையும் மான் மறைந்திருந்த புதரும் எதிரெதிராக அமைந்தன. மானுக்கு முதலிலே கொஞ்சம் பயந்தான். புதருக்குள்ளிருந்து எட்டி எட்டிப் பார்க்கும். புலியும் பார்க்கும். மான் கண்ணும் புலிக் கண்ணும் ஒன்றாக முடியுமா? முடியாதுதான். இருந்தாலும், என் கதையில் வருகிற புலிக்கு அந்த மானிடத்திலே விருப்பம் பிறந்தது. மானுக்கும் அந்தப் புலி என்றால், அது ஏனோ, பயமே தோன்றவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகக் கூச்சமும் நீங்கி விட்டது. பிறகு புலி தன் குகையின் வாசலில் தான் இருக்கும். மான் எப்போது பார்த்தாலும் புலியைத்தான் பார்க்கும்….”
“ஏதப்பா, உன் கதை நன்றாயிருக்கிறதே!”
“அவசரப்படாதே. இனிமேல்தான் இருக்கிறது கதை. பிறகு, இரண்டு நண்பர்களும் நெருங்கிப் பழகியேவிட்டார்கள். பொழுது விடிந்தால் அவன் சன்னலில் வந்து…. இல்லை யில்லை….அதுதான் அந்தப் புலி….என்ன நான் சொல்றது…. சுந்தரா, கேட்டாயா? அந்த மான்…”
இருந்தாற்போ லிருந்து நிலைதடுமாறிவிட்ட மாடுகளை நம்பிய வண்டி எப்படிக் குடைசாய்ந்து கவிழுமோ, அப்படியாயிற்று திருநாதனுடைய நிலை. திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டான்.
இந்த நிலைமையைச் சமாளிக்கும் ஆற்றல் சுந்தரனுக்குக் கிடையாது. அப்புறம் என் ன’ப்பா, சொல்லு” என்று தூண்டிவிட்டான். விளக்கிலே எண்ணெயும் சுடரும் இல்லாமல் திரியைமட்டும் தூண்டினால் விளக்கு எரியுமா ? வெளிச்சந்தான் உண்டா? திருநாதன் வாயையே திறக்கவில்லை.
ஆனால், சுந்தரன் ஒருவாறு நிலைமையைப் புரிந்துகொண்டான். எதிர்வீட்டுச் சன்னலை நோக்கினான். இவன் அந்தப் பக்கம் திரும்புகிற சமயத்தில்தான் சன்னல் திரையை ஓர் அழகிய கரம் இழுத்து மறைவதைக் கண்டான்.
கடைசியில், சுந்தரன் வீட்டுக்குப் புறப் பட்டான். முன்னே திருநாதன் கேட்ட கேள்வி கள் முன்னிலும் மிகுதியாக இடம் பெற்றன.
“கொலைக்குற்றத்தைமட்டும் பெரிய குற்றமென்று ஏன் சொல்லுகிறார்கள் ?” ”சமூக அமைப்பு எதற்காக ஏற்பட்டது, உள்ளங்களை வளரவிடாமல் செய்வதற்காகவா?”
இந்த இரண்டு கேள்விகளோடு இன்று தெரிந்துகொண்ட புலி-மான் கதையைச் சேர்த்து எண்ணிப் பார்த்தான். இரண்டாவது கேள்வி கொஞ்சம் புரிந்தது. முதல் கேள்வி புரிய வில்லை. எண்ணி எண்ணிப்பார்த்தும் ஒரே குழப்பந்தான்.
மறுநாள் திருநாதனைக் காணலாமென்று போனான். அவன் இல்லை. எங்கே போனான், எப்போது வருவான்-ஒன்றும் தெரியவில்லை. மனம் இன்னும் மிகுதியாகக் கலங்கிற்று. பழைய இரண்டு கேள்விகளையே அறிந்த அவன் மனம், புதிதாக ஒரு கேள்வியை எழுப்பிற்று. சமூக அமைப்பால் குழம்பிக் கலங்கிய அவன் தற்கொலை செய்துகொள்வானோ ?”
இந்தக் கேள்விதான் அவன் சிந்தனையின் மையமாயிற்று. “கொலைக் குற்றமே பெரிய குற்றம். அதனால் பிறரைத்தான் துன்பப்படுத்து கிறோம். தற்கொலை என்பது அதைவிடப் பெரிய குற்றமல்லவா? தன்னை மறந்து பிறரைக் கொலை செய்ய முடியும். ஆனால், தான் என்பதை மனத்தில் கொண்டேயல்லவா தற்கொலை செய்ய வேண்டும்?……..”
இப்படியாக எண்ணினான் எண்ணினான் எண்பது கோடி. எண்ணங்களின் முடிவு குழப்பமும் கலக்கமும்தான். குழம்பினான் ; கலங்கினான். நண்பனின் துன்பியல் முடிவை எண்ணி மனம் கசிந்தான்.
5
சில நாள் கழித்துச் சுந்தரனுக்கு ஒரு கடிதம் வந்தது. திருநாதனின் கையெழுத்தைக் கண்டு ஆவலோடு படித்தான். சொற்களிடையே கண்ணைச் செலுத்திக் கருத்தை விழுங்கினான். திருநாதனின் கடிதம்:-
அன்புள்ள சுந்தரா,
வணக்கம். என்னைத் தேடியிருப்பாய்; தெரியும். நான் ஏன் அங்கில்லை என்பது உனக் கும் தெரியும். என்னைப் பற்றி என்னென்ன எண்ணியிருப்பாயோ, தெரியாது. ஆனால், நீ ஒருவனே என் குழப்பநிலை முழுவதையும் கவ னித்து வந்தாய். ஆதலால், முடிவும் உனக்குத் தெரியவேண்டியதே.
நான் ஒரு கொலைகாரன். யாரைக் கொலை செய்தேன் என்று கேட்காதே. வெறும் உடலைக் கொலை செய்யும் கோழையல்ல நான். உடலைக் கொலை செய்தவனையே பெரிய குற்றவாளி என்று தூக்கிலிடுகிறது சமூகத்தின் சட்டம். உள்ளங்களைக் கொலை செய்துவிட்டு நிமிர்ந்த நெஞ்சுடன் திரிகின்ற திருவாளர்கள் எத்தனையோ பேர்களுண்டு இந்தச் சமூகத்திலே. அந்தப் பெருமக்களின் கூட்டத்திலே நானும் சேர்ந்துவிட்டேன்.
ஒரு கன்னிப் பெண்ணின் உள்ளத்தைக் கொன்றுவிட்டேன். அழகான வாழ்க்கைக் கோட்டையை விண்ணகத்திலே சமைத்துத் தரும் ஆற்றல் பெற்ற ஓர் உள்ளத்தைக் கொன்றுவிட்டேன். அந்த உள்ளம் செத்து விட்டது. நான் கொலைகாரன். அழகிய ஓர் உள்ளம் என் வெறிக்கு இரையாகிவிட்டது.
புலிக்குத் திடீரென்று விலங்குணர்ச்சி பெருகிவிட்டது. ‘மானைக் கடித்தால் என்ன’ என்ற எண்ணம். எழுந்தது. கொன்றுவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தது. மான் அஞ்சவில்லை. காரணம், புலி கடிக்கும் என்று அது நம்பவேயில்லை. பின்னும், அது துள்ளிற்று. புலியின் மனம் கசிந்தது. ஆனால் மீண்டும் விலங்காயிற்று. திரும்பவும் கவ்விக் கடித்தது. மானுக்கு வலி பொறுக்கமுடிய வில்லை. புலியைத் திரும்பிப் பார்த்தது. பரி தாபம் அதன் கண்களில் அலைபாய்ந்தது ; பரிவு பரந்து பரந்து வந்து புலியின் நெஞ்சையும் தாக்கிற்று. புலியின் கண்ணிலும் நீர் வந்தது. ‘ஐயோ! என்ன காரியம் செய்தோம்! நம் அன்புக்குரிய மானைக் கடிக்கலாமா ? இனி, அதைப் பிழைக்கவைக்க வழியில்லையா?’ என் றெல்லாம் ஏங்கிற்று; இருந்து எண்ணிற்று. திடீரென்று எங்கிருந்தோ அந்தப் பழைய விலங்குணர்ச்சி எழுந்தது. ஒரே பாய்ச்சல், தொலைந்தது மானின் வாழ்க்கை. விலங்குச் சமூகத்திலே தோன்றி வளர்ந்த புலி மானாகி விடுமா? புலியும் மானும் ஒன்று சேர்வதை விலங்குச் சமூகம் பார்த்திருக்குமா? சேரவிடுமா?
இன்று, உள்ளத்தைக் கொன்ற நான் இங்கே இருக்கிறேன். அங்கு வருவேன். சாகமாட்டேன். உடலை மாய்த்துக்கொள்ளலாம். துன்பச் சூழலிலிருந்து தப்பிக்கொள்ள அது கோழைகள் பின்பற்றும் வழி, அந்த வழியில் நான் போக முடியாது.
என் உள்ளம் ஒரு சுடலை போன்றது. அங்கே ஒரு பெருங் கொலைகாரனாக ‘நான் நின்று ஊழிக் காலத்துச் சிவன் போலக் கூத்தாடுகிறேன். என் முகத்தில் அமைதி இருக்கும். ஆனால், அது எல்லாம் அழிந்து விட்ட ஊழியின் அமைதி.
நான் முதலியார் சமூகத்தவன்; அவள் மறக்குல மங்கை-இந்தச் சமூகம் எங்களைச் சேர விடவில்லை. சேரவிடாது என்று உணர்ந்தது காரணமாக உள்ளக் கொலை நடந்தது. போல் இன்னும் எத்தனையோ கொலைகள் நடந் திருக்கும். இனியும் நடக்கலாம். இந்தக் கொலை -படுகொலை தொலைய வழி பிறக்குமா?
இது என் கடைசிக் கேள்வி. முன் கேட்ட கேள்விகளுக்கு நீ விடை தரவில்லை. இதற்கும் உன்னால் இப்போது விடை தர முடியாது. நான் எதிர்பார்க்கவுமில்லை. எதிர்மறையான விடையை என் மனம் ஏற்காது. உடன்பாடான விடையை உண்டாக்க வேண்டும். இந்தச் சமூகத்தையே அழித்தால்தான் நான் விரும்பும் விடை கிடைக்கும். ஏற்கெனவே கொலை செய்து பழகிய நான், இனி இந்தப் பெரிய கொலைத் தொழிலை மேற்கொள்ளப்போ கிறேன். உலக ஊழியில் இறைவன் ஆடுவான் ; சமூகத்தின் ஊழியில் நான் ஆடுவேன்.
அன்பன்
திருநாதன்
இந்த நீண்ட கடிதத்தைச் சுந்தரன் திரும்பத் திரும்பப் படித்தான். ஒவ்வொரு முறையும் புதுப்புது உணர்ச்சியால் ஊக்கம் பெற்றான்.
6
திடீரென்று ஒருநாள் திருநாதன் சுந்த ரனின் அறைக்கு வந்தான். பழைய படம் அங்கே இருந்தது. அதையே உற்று நோக்கினான்.
கடைசியில் அந்தப் படம் தனக்கு வேண்டுமென்று வலியக் கேட்டான். “முன்னே நீ பழித்த படமாயிற்றே ” என்றான் சுந்தரன்.
“இல்லை. இது உயர்ந்த படம். வாழ்க்கை யின் எல்லாக் கோணங்களையும் நாம் கண்ட தில்லை. இதை எழுதிய ஓவியன் கண்ட கூறு இப்போதுதான் எனக்குப் புரிகிறது. உனக்கு இது வெறும் வண்ணக் கலப்பு. எனக்கு இது வாழ்வின் விளக்கம்.” -இது திருநாதன் உணர்வுரை.
அந்தப் படத்தைத் திருநா தன் அறையில் கொணர்ந்து மாட்டினான். ‘இதய ஒலி’ என்று அதன் கீழ் எழுதினான்.
“சுடலையாண்டியின் படத்தின் கீழ் இதய ஒலி என்று ஏனப்பா எழுதினாய்?” இது நண்பனின் கேள்வி.
வெறும் வறண்ட புன்னகைதான் திருநா தனின் விடை.
அரவங்களாட அவன் ஆடிக்கொண்டிருந் தான். கரத்தில் அனலாட அவன் ஆடிக் கொண்டிருந்தான். அவிர்சடை நெருப் பொளியில் பளபளக்க அவன் ஆடிக்கொண் டிருந்தான். நச்சுக் கழுத்தில் நச்சரவம் நெளிந்து விளையாடியது; நாகப்பாம்பு இறுகிக் கிடக்க இடையிலே கொடும் புலியின் தோலாடை சுற்றிக் கிடந்தது. அவன் ஆடிக் கொண்டிருந்தான். சுடலையின் கொடுஞ் சூழலில்அவனன்றி வேறொன்றும் இல்லாத அந்தக் கொடிய பாழ்ஞ் சுடலையில் அவன் ஆடிக்கொண் டிருந்தான். அன்னையின் பசிய உடலம் செயலற்று அவன் தோள்மேல் துவண்டு கிடந்தது. அந்தப் பிணத்தைத் தூக்கிச் சுமந்து-தொம் தொம்மென்று ஆடிக் கொண் டிருந்தான் அந்தச் சுடலையாண்டி.
– இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.