சிறு விளையாடல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 6,525 
 

பில்லூர் காசுக்கடைத் தெரு.

வழக்கமான பரபரப்பு இல்லாமல், இரவு கடைகள் மூடும் நேரம்..

அப்பாடா! இப்பத்தான் நிம்மதிய இருக்கு. நகைகள்,தாலி உட்பட நெக்லஸ் எல்லாம் எடுத்து முடிச்சாச்சு! அதுவும் அவளுக்கு பிடிச்சது போலவே என் பட்ஜெட்குள்ளேயே அமைஞ்சிடுச்சு! என தன் மகளின் திருமணத்திற்கான நகைகளைப் பற்றி பேசிக்கொண்டே வீதியில் நடந்தனர், சுசிலாவும் அவளின் சகோதரியும்.

திடிரென்று எங்கிருந்தோ ஓடி வந்தவன் அவளிடமிருந்த கைப்பையை பிடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.பிடிங்க! பிடிங்க! என சப்தம் மட்டுமே எழுப்ப முடிந்தது அவர்களால்.

ஓடக் கூட முடியாதவர்கள் தானே திருடர்களின் இலக்கே!

சமூகத்தைப் பொறுத்தவரை இது இன்னொரு திருட்டு.

ஆனால் இவர்களைப் பொறுத்தவரை, இயலாமை,வசதி இல்லாமை, அப சகுனம் இப்படி எவ்வளவோ காரணிகள்.

விரட்டிச் சென்றவர்கள் வெறுங்கையோடு திரும்பினர்.

ஓடியவனுக்கோ பதுங்கும் இடங்கள் பழக்கபட்ட இடமாக இருக்கும்.

விதியை நொந்தபடி, உள்ளம் வெந்தபடி, காவல் நிலையம் சென்றனர்.

அந்த இரவு வேளையிலும் பில்லூர் காவல் நிலையம் வெளிச்சம் உமிழ்ந்தபடி இருந்தது.

என்னம்மா? என்ன இந்த நேரம் வந்து இருக்கீங்க?
நகையை திருடிட்டு ஓடிப் போயிட்டான்.
எங்க?
இங்க காசுக்கடைத் தெருவிலே!

இம்புட்டு நகையை போட்டுகிட்டு போனா ,என அவள் கழுத்தைப் பார்த்தார்,காவல் துறை ஏட்டு.

இவளும் அப்போதுதான் பார்த்தாள், கெடுதலிலும் ஒரு நல்லதாய் நெக்லஸ் மட்டும் இவள் அணிந்து இருந்தாள்.

உட்காருங்க, ஐயா, வருவாரு!

மணி ஒன்பதைத் தாண்ட, ஒரு காவலர் வந்தார். பேப்பர் ஒரு குயர் வாங்கி வாங்க! என்றார். அவங்க வாங்கச் சொல்ற குயர் குயரா பேப்பர் எல்லாம் எங்கே போகுதுங்கறது தனிக் கதை.

இரு! என அமர்த்தி விட்டு சகோதரி வெளியே சென்று திரும்பினார்.

அதற்குள் ஆய்வாளரிடம் அமர்ந்து இருந்தாள்.சுசிலா.

எவ்வளவு நகை?, வேற பணம் எதுவும் இருந்துதா?

நகைகள் ஆறு பவுனும், பணம் ரொக்கமாக சுமார் ஐம்பதாயிரம் இருக்கும்.

சரி,சரி,நாளைக்கு வாங்க வாங்க அவனைத் தேடுகிறோம்! இப்போ சொன்னதையெல்லாம் எழுதிக் கொடுத்து விட்டுப் போங்க! என்றுக் கூறிவிட்டு கிளம்பி சென்றார் மூத்த ஆய்வாளர் .

இவர்கள் எழுதிக்கொடுத்து விட்டுச் செல்வதை, காவல் நிலையம் உள்ளே வந்த புதிதாக வந்துள்ள இளம் உதவி ஆய்வாளர் சங்கர், பார்த்தார். எழுத்தரிடம் விபரம் கேட்டறிந்தார்,
அவர்களின் வயதும்,தோற்றமும் இவரின் மனசை உலுக்கியிருக்க வேண்டும். திரும்பக் கிளம்பினார்.காசுக் கடைத் தெருவிற்கு.

அவர்கள் நகைகளை வாங்கிய அந்த கடைக்குச் சென்றார். அங்கு விசாரனையை மேற்கொண்டார். தங்களுக்கு எதுவும் தெரியாது, வெளியே நடந்ததுக்கு நாங்க என்ன பண்ணுவோம் எனக் கூறினர்.கடையில்.

அவரின் பார்வை வாசலில் காவலுக்கு நிற்பவர் மீது விழுந்தது.

நீங்க பார்த்திருப்பிங்கத்தானே? இங்கே ரோட்டிலே நடந்து இருக்கு!

திருடினது யாருனு பார்த்து இருக்கனுமே, நீங்கக் கூட அவனைப் பிடிக்க முயற்சிக்கலே ஏன்?

நான் கடையை விட்டு எப்படி போவேன்? என எதிர் கேள்வி இட்டான்.

நான் CCTV புட்டேஜ் பார்க்கனுமே!

பார்த்தார்கள்.

பாது காவலனின் கண் பார்வை பில் போடும் இடத்தில் இருந்த அந்த இருவர் மீதும் இருந்ததையும், பின்னர் அவன் மொபைலில் யாரிடமோ பேசியதையும் உதவி ஆய்வாளர் மட்டும் கவனிக்கத் தவறில்லை.

உங்க பேரு என்ன?
ஆறுமுகம். என்றான்.
உங்க செல் போனைக் கொடுங்க!
உங்களுக்கு எத்தனை முகம்னு நான் பார்க்கிறேன்.

ஒரே அறையிதான் அனைத்தும் ஒத்துக்கொண்டான்.

அடுத்த அறையில், பறித்துக்கொண்டு ஓடியவன், பதறிக்கொண்டு கடைக்கே வந்தான்.

பில்லோடு ஆறு பவுன் நகையும்,பணமும் மீட்டு, இருவரையும் கைது செய்து காவல் நிலையம் விரைந்து ஆய்வாளரிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றார் சங்கர்.

தங்கள் நிறுவனம் பெயர் கெட்டுவிடும். தயவு செய்து விட்டுவிடுங்கள், நாங்கள் இவனை வேலையை விட்டே தூக்கி விடுகிறோம். என சுயநலத்தோடு யோசித்து வென்றார்கள். முதலாளியும், ஆய்வாளரும்.

மறுநாள்….
முதல் அறிக்கை தாக்கல் செய்யபடவில்லை, நகை இழந்தவர்களுக்கும் தகவல் சொல்லவில்லை என்ற விபரமறிந்த உதவி ஆய்வாளர் வருத்தப்பட்டார்.

தன்னால் ஏதும் செய்யமுடியாத நிலையை நினைத்து வருந்தி, ரவுண்ட்ஸ்க்கு கிளம்பினார்.

காலை,10.30 மணி ..

சுசிலாவும்,சகோதரியும் காவல் நிலையம் வந்து இருந்தனர்.

முதல் அறிக்கை காப்பி கிடைக்குமா? எனக் கேட்டனர்.

இன்னும் போடலை, நாங்க போட்டவுடனே நகல் தருகிறோம், போய் வாருங்கள்.

திருடியவனைப் பிடிச்சிட்டிங்கன்னு கேள்விப்பட்டோம், அதான் பார்த்துவிட்டுப் போகலாம்னு வந்தோம்.

ஆங்.. நீங்க காவு கொடுப்பிங்க, நாங்க உடனே பிடிச்சு உங்கக்கிட்டே கொடுத்து விடுவோம். வேற வேலையே இல்ல பாரு எங்களுக்கு என எரிந்து விழுந்தார் தலைமைக் காவலர்.

முரட்டு உருவம், ஆளும் கட்சியின் கரை வேட்டி சகிதம், ஒன்றியம் என அழைக்கப்படும் ஊரே மதித்துப் போற்றும் பசுபதி ஐயா வேகமாக காவல் நிலையம் உள்ளே வருகிறார்.

ஐயா, வாங்க, வாங்க, ஏன் நீங்க வரனுமா, என்ன விஷயம் போன்லியே செல்லி இருக்கலாமே?

என்னய்யா நடக்குது,? நடக்கிறது நம்ம ஆட்சி.

நான் ஊரிலே இல்லாத சமயத்திலே என் வீடு புகுந்து நகையும் பணமும் திருடுகிற அளவிற்கு துணிச்சல் இருக்கா? எவன் பார்த்த வேலைன்னு தெரியனும். எங்க உங்க இன்சு?. வரச்சொல்லு என ஏகமாய் அதட்டியதில் காவல் நிலையமே அதிர்ந்து ஓய்ந்த்து.

இதைப் பார்த்து மிரண்ட சுசிலா சகோதரிகள் நகை கிடைக்காட்டாலும் பராவாயில்லை.

காவலர்களிடம் அவமானப் பட வேண்டாம் என வீட்டிற்கே புறப்பட்டனர்.

ஆய்வாளர் வந்ததும், மாவட்ட கண்காணிப்பாளரிடம் பேசறேன் என்றார் பசுபதி. எனக்கு இப்போ யாருன்னு தெரிஞ்சாகனும் என பிடிவாதம் கூட்டினார்.

ஐயா, என்னென்ன திருட்டுப் போச்சு?

ஆறு பவுன் நகையும், ரொக்கம் பணம் அறுபதாயிரமும் தான்.

சீக்கிரமா கண்டுப்பிடிச்சிடுவோம்! நீங்க அமைதியா இருங்க!

நீங்க மேலிடதிலெல்லாம் பேச வேண்டாம், வேணும்னா இந்த நகையையும் பணத்தையும் ஈடா வச்சுக்கங்க!

நானும் இரண்டு நாள்லே ரிடையர் ஆகிடுவேன் என கெஞ்சினார்.

இதுவே எவ்வளவு பெரியத் தப்பு, யாரோட நகை இது?

நேற்று ஒருத்தன்கிட்டே ரெகவர் பண்ணினது, புதுசா இருந்தது, அதான் கொடுக்கலை.

இதெல்லாம் உங்களுக்கு அசிங்கமா இல்ல?

என்ன சபலம்தான்!

இந்தாங்க! ஐம்பதாயிரம் பணமும், ஆறுபவுன் நகையும் இருக்கு. தயவு செய்து கிளம்புங்க!

நாங்க அவனை பிடிக்கிற வேலையைப் பார்க்கிறோம் என்று அனுப்பி வைத்து விட்டு உதவி ஆய்வாளரை தேடினார்.

என்னப்பா சங்கர்? எனக் கேட்படியே தனது வீட்டிற்குள் வந்தார் பசுபதி.

சந்தோஷமா? இந்தா,,நீ சொன்னபடியே ஆறு பவுனும் ஐம்பதாயிரம் பணமும் என்றார்.

ரொம்ப சந்தோஷம் ஐயா!

இதோ அவங்களே வந்துவிடுவாங்க! அவங்க கிட்டேயே கொடுங்க!

சொன்னபடியே அங்கு வந்த சுசிலாவிடம் , நல்லபடியா கல்யாணம் நடக்க வாழ்த்துக்கள் என கூறி ஒப்படைத்தனர்.

ஏன்யா? நல்லா ஆளாப் பார்த்து வேலைக்கு வைய்யா! ஒரு திருட்டைக் கூட சரியா பண்ணத் தெரியலை ,இப்படி கையும் களவுமா மாட்றான் அவனுக்கு பேரு திருடனா? உன் காவலாளியே காட்டிக் கொடுக்கிறான். போங்கடா நீங்களும் உங்க கடையும்.

ஆய்வாளர் – கடை முதலாளியிடம் பேசினார்.

காலையிலே ரவுண்ட்ஸ் கிளம்பிய பின் பசுபதி வீட்டிற்கு வந்த சங்கர்..

ஐயா, நீங்கதான் எனக்கு உதவி செய்யனும். திருட்டுப் போன நகையையும் ,பணத்தையும் திருப்பி கொடுக்கிற ஐடியாவே எங்கள் ஆய்வாளருக்கு இல்லே! நீங்கதான் அதை எப்படியாவது வாங்கி உரியவரிடம் ஒப்படைக்கனும், என் தலையீடும் உள்ளதும் தெரியாமல், என்று வேண்டுகோள் விடுத்தார்.தான் மதிக்கும் அரசியல்வாதியிடம் உதவி ஆய்வாளர் சங்கர்.

நல்ல விஷயம் நடக்க ஒரு திட்டம் போடறது தப்பில்லே! இல்லையா? என்றார் ஐயா!

திருடன்கிட்டே இருந்து மீட்கிறதை விட உங்க கிட்டே இருந்து வாங்கிறது பெரிய விஷயம் போல.

அதையும் உங்களைப் போல நல்ல அரசியல்வாதிகளால் தான் முடியும் என நக்கலடித்தான் சங்கர்.

நல்ல விஷயங்கள் நடந்தேற வேண்டிய தருணங்களை, காலம் என்றும் விளையாட்டாய் நடத்திக் கொண்டே இருக்கும்

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *