கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 28, 2023
பார்வையிட்டோர்: 4,139 
 
 

“வர்றேன் ஜானகி” என்று காரில் ஏறிக் கொண்டேன்.

கல்விநிலையங்களில் ஆண்டு விழாக்கள் களைகட்டும் நேரம் இது. என்னைப் போன்ற பேச்சாளர்களுக்கு இது அறுவடை சீஸன்.

இன்றைய மேடையில் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்ற முன்தயாரிப்பை மறுபடி ஒருமுறை என் மனக்கண்ணில் ஓடவிட்டுப் பார்த்தேன். திருப்தியாகத்தான் இருந்தது. இருக்க வேண்டும்.

மதுராந்தகம் நோக்கி கார் தன் பயணத்தைத் தொடர, மெல்ல மெல்ல சிக்கலார் சாரின் நினைவுகள் என் மனசை ஆக்கிரமிக்கத் தொடங்கின.

நான் படித்த பள்ளியின் ஆண்டு விழாவிற்கே சிறப்பு அழைப்பாளனாகப் போகும் அளவுக்கு வளர்ந்ததற்கு காரணகர்த்தாவே சிக்கலார் சார்தான். மாணவப் பருவத்தினர்க்கேயுரிய திமிரில் நானும் என் நண்பர்களும் அவரைச் “சிக்கலார்’ என்ற புனைபெயரில் அழைத்ததும் , “சிக்கலாரே சொகமாயிருக்கியளா?” என்று அவர் காதுபட விளித்ததும்… அதைத்தொடர்ந்து நடந்தது அனைத்தும் இன்றும் கூட பிரமிப்பாயிருக்கிறது.

நாடறிந்த பேச்சாளனாகவும், கவிஞனாகவும் உலாவரும் என்னைச் செதுக்கிய அந்தச் சிற்பி, பெருமாள் சிலைக்குக் கண் திறந்ததைப் போல நாற்பது வருடம் முன்பு நான் பயின்ற மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் ஓய்வறையில் என்னிடம் பேசியதெல்லாம் இன்று நடப்பது போல என் நினைவில் மெல்ல விரிகிறது.

“பார்த்திபன், மதுராந்தகம் நெருங்கும்போது என்னை எழுப்புப்பா. எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆகும் அதுக்குள்ள ஒரு தூக்கம் போட்டுடறேன்”என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு உறக்கமல்லாத விழிப்புமல்லாத ஒரு நிலையில் சிக்கலார் சாரின் நினைவுகளில் மூழ்கினேன்.


நாற்பது வருஷத்துக்கு முந்தைய வாத்தியார் – மாணவர்களின் கதை இது. இதை இன்றைய நவீன காலத்தோடு ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

அன்றைக்கு வாத்தியார் பையனை அடிப்பதெல்லாம் வன்கொடுமைச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழும் வந்ததில்லை. வாத்தியார் அடித்தார் என்று எந்தத் தகப்பனும் பள்ளிக்கூடத்தின்மேல் படையெடுத்துக் கொண்டு போனதுமில்லை.

மாணவர்கள் வாத்தியார் அடித்தார் என்று அப்பாவிடம் புகார் வாசிப்பதிலும் ஓர் ஆபத்து இருந்தது.

“இன்னும் நாலு போடுங்க ஐயா. அப்பதான் மரமண்டையில ஏறும்” என்ற சிபாரிசுதான் பெரும்பான்மை அப்பாக்களிடமிருந்து வரும்.

“வாத்தியார் ஒரு மாணவனை அடித்தால் நல்லதுக்குத்தான் அடிப்பார். அதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யும்’ என்ற நம்பிக்கை சமுதாயத்தில் பரவலாக இருந்த காலம் அது.

சரி, சிக்கலார் கதைக்கு வருவோம்.

மதுராந்தகத்தில் பாரம்பரியம் மிக்க உயர் நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் எல்லோருமே அவரவர் துறைகளில் மேதைகள் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் அந்தத் தமிழாசிரியர்கள் சண்முகசுந்தரம் ஐயா, பட்டாபிராமன் ஐயா, சந்தானகோபாலன் ஐயா, இளந்திரையன் ஐயா அத்தனைபேரும் பெரும்புலவர்கள். பள்ளிக்கூட வாத்தியார்கள் என்றாலும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கே பாடம் எடுக்கக் கூடிய திறமைசாலிகள். சண்முகசுந்தரம் ஐயாவிடம் பெரும் புலவர்களெல்லாம் வந்து சந்தேகம் கேட்டுச் செல்கிறார்கள் என்றும், சுவடி ஆராய்ச்சியாளர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கிறார் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது.

எல்லா வாத்தியார்களிடமும் சற்று விறைப்பாக இருக்கும் ஹெட்மாஸ்டர் சுப்ரமணிய சார் கூட இந்த நான்கு தமிழ்ப் புலவர்களிடம், குறிப்பாக சண்முகசுந்தரம் ஐயாவிடம் மரியாதையாகவே நடந்துகொள்வார்.

மற்ற மூன்று பேரும் வகுப்பில் கொஞ்சம் சிரித்துப் பேசுவார்கள். சண்முகசுந்தரம் ஐயாவிடம் சிரிப்பைப் பார்க்க முடியாது. அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி உயிரைக் கொடுத்துப் பாடம் சொல்லிக் கொடுப்பார்.

எட்டாம் வகுப்பு வரையிலும் தட்டுத் தடுமாறி தமிழ் படித்தவர்கள் எல்லாம் ஒன்பது முதல் பழைய எஸ்எஸ்எல்சி யான பதினொன்றாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் இந்தப் பெரும் புலவர்களில் ஒரு புலவரிடம் மாட்டிக் கொண்டேயாக வேண்டும்.

ஒவ்வொரு வகுப்பிலும் நான்கு செக்ஷன்கள். அதிலும் சண்முகசுந்தரம் ஐயாவின் செக்ஷனாக இருந்தால் அவரிடம் ஏழெட்டு முறையாவது பிரம்படி வாங்காமல் ஒருவன் அடுத்த வகுப்புக்குப் போக முடியாது. பொம்பளைப் பிள்ளைகளுக்கும் உள்ளங்கையில் அடிவிழத்தான் செய்யும். அதுகள் அதிகமாக ஊளையிட்டு ஊரைக் கூட்டும் என்பதால் ஒரே அடியோடு விட்டுவிடுவார். அதற்கும் சேர்த்துப் பையன்களுக்கு அதிகமாக விழும்.

செய்யுள், உரைநடை வகுப்புகளில் கொஞ்சம் நிதானம் காட்டும் சண்முகசுந்தரம் ஐயா, இலக்கண வகுப்புகளில் ஒரு வேங்கையாகவே மாறி விடுவார். யாப்பிலக்கணம் என்றால் கேட்கவே வேண்டாம். அதென்னவோ, அவர் கேள்வி கேட்கும் போது, சரியாகத் தெரிந்த விடை கூட மறந்து போய் நம்மைத் தப்புத் தப்பாகச் சொல்ல வைத்துவிடும்.

இலக்கணக் கேள்விகளுக்கு விடை தெரியாமல் சொதப்புபவர்களின் உள்ளங்கைகள் சண்முக சுந்தரம் ஐயாவின் பிரம்புவீச்சால் சிவப்பது நிச்சயம்.

என்ன, சண்முகசுந்தரம் ஐயா என்ற பெயர் நீளமாக இருக்கிறது… ஒவ்வொரு முறை உச்சரிக்கவும் மூச்சு வாங்குகிறது… அதுதானே…

எனக்குப் பத்து வருஷம் முன்பு படித்த சீனியர் மாணவர்களுக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கிறது. அந்த நேரம் பார்த்து “தில்லானா மோகனாம்பாள்’ படம் ரிலீஸ் ஆனது.

அதில் அந்த நாதஸ்வர வித்வான் சண்முக சுந்தரம் என்ற பெயரில் வரும் நம் சிவாஜிகணேசனுக்கு சட்டுச் சட்டென்று கோபம் வருமல்லவா?

ஒரு காட்சியில் அவரை மனோரமா (ஜில் ஜில் ரமாமணி) “சிக்கலாரே, சொஹமாயிருக்கியளா?” என்று கேட்பாரல்லவா?

காயத்திரி தியேட்டரில் அந்தப் படத்தினைப் பார்த்த எங்கள் சீனியர் மாணவன் ஒருவன் சண்முகசுந்தரம் ஐயாவுக்குச் “சிக்கலார்’ என்று பெயர் வைத்து விட்டான்.

என்றோ தன் கையைப் பதம்பார்த்த ஐயாவின் பிரம்படிக்குச் சரியாகப் பழி தீர்த்துக் கொண்டான்.

மெல்ல மெல்ல மாணவர்களிடயே “சிக்கலார்’ பரவி, ஒரு கட்டத்தில் அவரது காதுக்கே எட்டிவிட்டது. பெயர் வைத்த பையனை ஒரே வாரத்தில் துப்பறிந்து விளாசி விட்டார் சிக்கலார்.

பள்ளி விட்டதும் அவர் பின்னால் சென்று அவருக்கு முகம் காட்டாமல், “சிக்கலாரே சொஹமாயிருக்கியளா?” என்று குரல் கொடுப்பது ஜல்லிக்கட்டுக்கு நிகரான ஒரு வீரவிளையாட்டானது.

எப்படியும் குரலுக்குச் சொந்தக்காரனைக் கண்டுபிடித்து மறுநாள் வெளுத்துவிடுவார்.

வெளுத்தலுக்கெல்லாம் பயந்து அந்தப் பெயர் எங்கும் ஓடி ஒளியவில்லை.

வருடங்கள் கடந்தும், மாணவர்களின் ரகசியத் தகவல் பரிமாற்றங்களில் சிக்கலார் சிக்கலாராகவே நீடித்தார்.

ஒன்பதாம் வகுப்பு “பி’ செக்ஷனுக்குப் போன வருடம் பாடம் எடுத்ததால் இந்த வருடம் வேறு செக்ஷனுக்குப் போவார் என்ற நம்பிக்கையில் இருந்த எங்களை இடி தாக்கியது. இந்த வருஷமும் சிக்கலார்தான் என்று ஆனது.

பளபளவென்ற நிறம், ஆஜானுபாகு தோற்றம், சிங்கமாகச் சிக்கலார் பள்ளிக்குள் நுழையும்போதே ஒன்பது, பத்து, பதினொன்று வகுப்பு மாணவர்களுக்கு வயிற்றைக் கலக்கும்.

முகச்சவரம் செய்துகொண்டு பளபளவென்ற கன்னங்களுடன் சிக்கலார் பள்ளிக்கு வரும் தினங்களில் கூடுதலாக அடி விழும். நாவிதரின் மொண்ணைக்கத்திக்கு மாணவர்களைப் பழிதீர்த்து மாலையில் பள்ளிக்கூடக் கடைசி பெல் அடிக்கும் போதுதான் மலையேறுவார்.

மற்ற பையன்களை விடக் கொஞ்சம் அதிகமாக மனப்பாடம் செய்யும் பழக்கத்தால் சிக்கலார் முதல் நாள் நடத்தும் பாடங்களை (அவரது அடிக்கு பயந்து) ஒழுங்காக வீட்டில் படித்துப் பார்த்துவிட்டு மறுநாள் “டாண் டாண்’ என்று சொல்ல ஆரம்பித்தேன். சிக்கலாருக்குப் அது பிடித்துப் போனதில் என் நிலைமை மேலும் சிக்கலாயிற்று.

“நீங்களும் இருக்கிறீர்களே, பாருங்கள் இந்தப் பையனை” என்று வகுப்பில் என் மேன்மையை நிலைநிறுத்துவதாக எண்ணிக் கொண்டு என்னிடமே அதிகக் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார் சிக்கலார். மனதுக்குள் என் விதியை நொந்தபடி இன்னும் கொஞ்சம் தீவிரமாகத் தமிழ்ப் பாடங்களைக் கரைத்துக் குடித்துக் காது, மூக்கு, கண், வாய் எதன் வழியாகவும் வெளியிடத் தயாராகவே வகுப்புக்கு எப்போதும் வர ஆரம்பித்தேன். ஒருமுறை வெண்பா இலக்கணத்தைத் தலைகீழாக நான் ஒப்பித்துச் சிக்கலாரை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துவிட்டேன்.

அன்று முதல் அவருடைய அபிமானச் சீடனுமானேன்.

விதி விளையாடத் தொடங்கியது.

கவிதை என்று ஒன்றைக் கிறுக்கி ஆர்வமிகுதியால் அவரிடம் காண்பித்தேன்.

“இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் பெரிய கவிஞனாகிவிடுவாய்” என்று கூறித் தட்டிக்கொடுத்து, தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற நீதிக்கேற்ப என்னை வானளாவப் பாராட்டி, அந்தக் கிறுக்கல் வரிகளைத் தட்டிக் கொட்டி நகாசு வேலை பார்த்து ” நமது மாணாக்கனின் நன்முயற்சி’ என்று பள்ளிக்கூட அறிவிப்புப் பலகையில் எழுதி ஒட்டிவிட்டார்.

“நல்லா பேசக் கத்துக்கோடா” என்று சொல்லிப் பிரத்யேகக் கவனம் எடுத்துப் பயிற்சி கொடுத்து, அந்த வட்டாரத்தில் பள்ளி மாணவர்களுக்கென்று நடத்தப்படும் எந்த ஒரு பேச்சுப் போட்டிக்கும் என்னையே இந்து உயர்நிலைப்பள்ளியின் பிரதிநிதியாக அனுப்ப ஆரம்பித்தார்.

இப்படியே ஒன்பதாம், பத்தாம் வகுப்புகளைத் தாண்டினேன்.

பதினொன்றாம் வகுப்பில் நுழையும்போது சிக்கலார் குறித்த பயமே அற்றுப் போயிருந்தது. எங்கள் பி செக்ஷனுக்கே சிக்கலார் தமிழ்ப்பாடம் எடுக்கணும் என்று பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் கூடப் போட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

செய்யுள் வகுப்புகளில் அவர் பொருள் கூறுவதற்கு முன்பு செய்யுள் வரிகளை நீட்டி முழக்கிக் கூறும் கெளரவம் எனக்குச் சிக்கலாரால் தரப்பட்டது.

உரைநடைப் பாடங்களைச் சினிமாவசனம் போலவும் வானொலிச் செய்தி போலவும் வகுப்பில் படிக்கத் தொடங்கிய எனது அதிகப்பிரங்கித்தனம் கூடச் சிக்கலாரால் மன்னிக்கப்பட்டது.

இன்னும் எப்படி எல்லாம் சிக்கலாரை அசத்தலாம் என்று யோசித்து, ஒரு நாள் அவர் அபிராமி அந்தாதிப் பாடம் எடுத்த போது “இது கட்டளைக்கலித்துறைதானே ஐயா?” என்று கேட்டுச் சிக்கலாரை மயக்கமே போட வைத்தேன்.

அப்படியே அகமகிழ்ந்து , “சபாஷ்டா என் பையா. நீதான்டா என் தமிழ் வாரிசு” என்று புல்லரித்துத் தன் ஜிப்பாவில் சொருகியிருந்த ஃபவுண்டன் பேனாவை எல்லோர் முன்னிலையிலும் எனக்குப் பரிசாக அளித்தார் சிக்கலார்.

பேனாவை வாங்கிக் கொண்டு இலேசான கர்வத்துடன் வகுப்பைச் சுற்றிலும் என் பார்வையை ஒருமுறை சுழலவிட்டேன்.

“இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி’ என்று சகமாணவர்கள் மனசுக்குள் புகைந்ததிலும், “உண்மையிலேயே இவன் ஒரு ஜீனியúஸா?” என்று மாணவிகள் சிலரின் புருவம் உயர்ந்ததிலும் மனசுக்குள் பூரித்து ஒரு சந்தோஷக் குட்டிக்கரணம் போட்டேன்.

அதிர்ஷ்டம் எத்தனை நாளைக்குத்தான் கூட வரும். அதுவும் ஒரு நாள் நம் காலை வாரத் தானே செய்யும்.

அந்த நாளும் வந்தது.

ஏழெட்டு வருஷம் முன்பு புதுப்படமாக ரிலீஸ் ஆன “தில்லானா மோகனாம்பாள்’ இன்னொரு ரவுண்டு வந்தது. இப்போது ஏரிக்கரையை ஒட்டியுள்ள நடேசா தியேட்டரில்.

ஒண்ணேகால் ரூபாய் பெஞ்சு டிக்கட்டுக்குத்தான் அப்பா படியளந்தார். வகுப்பு நண்பர்கள் சிலரும் கம்பெனி கொடுத்தனர். இடைவேளையின் போது ஐந்து பைசாவுக்கு விற்ற பன்னீர்சோடாவை எல்லோருக்கும் வாங்கிக் கொடுத்து வள்ளலானான் ஹெல்த் ஆபீஸர் மகன் சரவணகுமார்.

“சிக்கலாரே… சொஹமாயிருக்கியளா?’ என்ற வசனத்துக்காகவே இன்னும் பத்து தரம் படத்தைப் பார்க்கலாம் போல் இருந்தது.

படம் முடிந்து வெளியே வரும் போது, எனக்குத் தெரிந்த அளவில் மனோரமாவின் குரலை மிமிக்ரியாக முயற்சித்தேன்.

“நல்லாப் பண்றேடா. ஒன்ஸ் மோர்டா” என்று நண்பர்கள் உசுப்ப –

“சிக்கலாரே… சொஹமாயிருக்கியளா” என்றேன்.

தியேட்டருக்கு வந்திருந்தவர்களில் சிலர் திரும்பிப் பார்த்ததில் ஒரு சிறிய கர்வம் என் தலைமீது வந்து அமர்ந்துகொண்டது.

“டேய்… டேய்… இன்னொரு தரம்டா”

“நாளைக்கு ஸ்கூல் போகும்போது சொல்றேன் போங்கடா”

“ரொம்பத்தான்டா நீ பிகு பண்ணிக்கிறே” என மனக்குறையுடன் கிளம்பிய நண்பர்கள் –

“உன்னாலத்தான்டா சிக்கலார் எங்களை இன்னும் நாலு அடி விளாசுறார், படுபாதகா” என்று சொல்லி என் விலாவில் குத்தினர்.

மறுநாள் காலை – தினமும் பள்ளி தொடங்குவதற்கு அரைமணி முன்னதாகவே கிளம்பி, சிக்கலார் வீடு இருக்கும் குருக்கள் தெரு வழியே நாங்கள் நாலைந்து நண்பர்கள் பேசிக் கொண்டு செல்வது வழக்கம். சிக்கலார் வீட்டைக் கடக்கும் போது அனைவரும் “கப் சிப்’ தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அது அப்படித்தான்.

அந்தக்காலத்தில் எல்லாம் அப்படித்தான்.

என்னோடு வந்த ரமேஷ் யதார்த்தமாகக் கேட்டானா, இல்லை என்னை மாட்டிவிடுவதற்காகக் கேட்டானா என்பது இத்தனை வருடம் கழிந்த பிறகும் எனக்கு விளங்கவில்லை.

“டேய்… டேய்… அந்த மனோரமா டயலாக்குடா. நேத்து தியேட்டர்ல எத்தனை பேரு உன்னைத் திரும்பிப் பார்த்தாங்க தெரியுமா?”

புகழ் போதை தலைக்கேற, அது குருக்கள் தெரு என்பதையும் மறந்து – “சிக்கலாரே…சொஹமாயிருக்கியளா?” என்று சரியாகச் சிக்கலார் வீட்டு வாசலில் சொல்லி முடித்ததை உணர்ந்ததும் பயத்தில் உறைந்தேன். திண்ணையிலிருந்து பளபளவென்ற கன்னங்களோடு சிக்கலார் வீட்டினுள்ளே நுழைந்ததையும், நாவிதர் ஒருவர் தனது தகரப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியதையும் பார்த்ததும் என் இதயம் அங்கேயே தர்ணா செய்ய ஆரம்பித்தது.

“அவ்ளோதான்டா, நீ இன்னிக்குச் சட்னிதான் டி” என்றான் என்னை வசனம் பேசச் சொன்ன துரோகி ரமேஷ்.

“நான் வசனம் பேசினதை சிக்கலார் பார்த்துட்டாராடா” என்று தளர்ந்து போய்க் கேட்டேன். அதற்குள் உடம்பு முழுக்க வியர்த்துவிட்டது.

“பார்த்தாப்புலதான்டா இருக்குது” என்று அத்தனை பேரும் கோரஸாய்ச் சொல்ல, வாய்க்கால் கரையோரமாக ஒருமுறை சிறுநீர் வெளியேற்றிவிட்டு மேற்கொண்டு நடந்தேன். பள்ளிக்கூடத்துக்குள் நுழையத் தயக்கமாக இருந்தது. அதைவிட பயமாக இருந்தது.

அப்படியே வீட்டுக்குத் திரும்பினாலும், ஏன்? எதற்கு? என்று அம்மா குடைந்துவிடும். பலியாடு போல என்னை உணர்ந்தேன்.

வகுப்பறையில் நுழைந்தது முதல் என் பக்கமே திரும்பாத சிக்கலார், வகுப்பு முடிவில் என்னைப் பார்த்து உணர்ச்சியற்ற குரலில், “ஆசிரியர் ஓய்வறைக்கு இப்பொழுதே வா” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினார்.

குருக்கள் தெரு சமாச்சாரம் அதற்குள் பரவியிருக்க, வகுப்பு மொத்தமும் என்னைப் பரிதாபமாகப் பார்த்தது. இன்றைக்கு இவன் சின்னாபின்னம்தான் என்பதில் பலருக்கு மகிழ்ச்சி போலவும் இருந்தது.

தளர்நடையிட்டுத் தலைகவிழ்ந்தபடியே சென்றவன், ஆசிரியர் ஓய்வறையின் வாசலில் உயிரை நிறுத்திவிட்டு என் உடலை மட்டுமே உள்ளே நுழைத்தேன்.

“”வாடா” என்று சொன்ன சிக்கலார், எனக்கு முதுகைக் காட்டியபடி நின்றுகொண்டார். நல்லவேளை, அந்த வேளையில் வேறு வாத்தியார்கள் யாரும் அங்கு இல்லை.

“நீ என்ன, சினிமாக்காரனாடா?”

“இல்லே சார். இல்லை ஐயா… நான் உங்களை” என்று உளற ஆரம்பித்தேன்.

“ஏன்டா பயலே… ஏழெட்டு வருஷம் முன்னாடியே எனக்கு சிக்கலார்னு பேர் வெச்சது எனக்குத் தெரிஞ்ச விஷயம்தான்டா. என்னை அந்தப் பேர்ல கூப்பிடறவனுங்களை சில சமயம் அடிச்சிருக்கேன்.அது எனக்குப் பேர் வெச்சதுக்காக இல்லே. குரு, சிஷ்யன் மரியாதை விட்டுப் போகக் கூடாதுங்கிறதுக்காக… தெரியுமா?”
பதில் சொல்லாமல் மெளனம் காத்தேன்.

“ஏன்டா பயலே, கண்ட கழுதைகளும் எப்படி வேண்டுமானலும் என்னைக் கூப்பிடட்டும். நீயுமா அப்பிடிப் பண்றது? இந்தச் சின்ன வயசிலேயே இலக்கணத்தைக் கரைச்சுக் குடிக்கிறே. கவிதை எழுதறே. மேடையில பேசறே. நீ ஒரு மீனாட்சி சுந்தரம் பிள்ளையா, உ.வே.சா. வா வருவேன்னு ஆசைப்படறேன்டா. இத்தனை நாள் என் கிட்ட தமிழ் படிச்சவன்ங்களிலே நீ கொஞ்சம் உருப்படியான சிஷ்யன்னு நினைச்சுக்கிட்டிருக்கேன். அந்த நினைப்பில மண்ணள்ளிப் போடலாமா?சினிமாவுக்குப் போவதும், கண்ட காவாலிப் பசங்களோடு சினிமா வசனத்தை வீதியிலே சொல்லிக்கிட்டுப் போறதும் நல்லவா இருக்கு? என்னை ஏமத்திட்டியேடா பையா” என்று கூறியபடி மெல்ல என் புறம் திரும்பிய சண்முகசுந்தரம் ஐயாவின் கண்கள் கலங்கிச் சிவந்திருக்க…
“”ஐயா”என்று கதறியபடி அவர் காலைப் பிடித்துக் கொண்டேன்.

மெல்ல என்னைத் தூக்கி நிறுத்திய சண்முகசுந்தரம் ஐயா, “அழாதே, கண்ணைத் துடைச்சுக்கோ” என்று சொல்லித் தமது ஃப்ளாஸ்க்கைத் திறந்து தமது வீட்டுக் காப்பியை ஒரு சிறிய தம்ளரில் ஊற்றிக்கொடுத்து, “குடி” என்றார்.

தயங்கினேன்.

“சும்மா குடிடா. என் சிங்கக்குட்டி” என்று முதுகில் தட்டிக் கொடுத்தார்.

“போ, இனிமேல் நல்ல பையனா நடந்துக்கோ” என்று அனுப்பி வைத்தார். ஓய்வறையின் மூலையில் சார்த்தி வைக்கப்பட்டிருந்த ஐயாவின் பிரம்பு ஜீவனற்று இருந்தது.

ஐயா என்னை அடித்தே இருக்கலாம் என்று முதன் முதலாகத் தோன்றியது.


“மதுராந்தகம் சார்” என்ற பார்த்திபனின் குரல் கேட்டு நினைவுலகத்திற்கு மீண்டேன்.

கடைசியாக ஐந்து வருடம் முன்பு சண்முகசுந்தரம் ஐயாவுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தது நினைவில் வந்தது.

அனிச்சையாய் ஒருதுளி கண்ணீர் துளிர்த்தது.

“பார்த்திபன், நிகழ்ச்சி முடிஞ்சதும் ஒருதரம் குருக்கள் தெரு வரைக்கும் போயிட்டு வரணும்” என்றேன் டிரைவரிடம்.

– நவம்பர் 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *