சாலையோரத்து மரம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 18, 2012
பார்வையிட்டோர்: 6,936 
 

அது ஒரு நீண்ட மினி ஹால் மாதிரியான அறை.. உள்ளே நுழைந்தவுடன் ஜிவ்வென்று கவ்வும் ஏ.ஸி.யின் குளிர்…அதையுந்தாண்டி மூக்கில் உறைக்கும் சேவ்லான் நெடி.வரிசையாய் கட்டில்களில் பல நிலைகளில் அபாய கட்டங்களில் நோயாளிகள். சிலர் ஆக்ஸிஜன் மாஸ்க் வைத்த பின்பும் மூச்சுத் திணறலுடன் கிடந்தார்கள்.அதில் சிலருக்கு கோமா மயக்க நிலை. சொல்லி வைத்தாற்போல அல்லது யூனிஃபார்ம் போல எல்லாருக்கும் தலையில் பெரிய கட்டு. இதுதான் சென்னை பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை.யின் ஐ.ஸி..யூ. இண்டென்சிவ் கேர் யூனிட்.எந்த நேரமும் பரபரப்புடன் ஓடிக் கொண்டிருக்கும் டாக்டர்களும்,நர்ஸ்களும், தியேட்டர் அஸிஸ்டண்ட்களும் இந்த தளத்தில் தான்.,பீதிக் கூச்சல்களும்,அழுகைகளும், சிரிப்புகளும் கூட இந்தத் தளத்தில் தான். ஐ.சி.யூ.வை ஒட்டி விரிந்துச் செல்லும் அந்த நீண்ட ஹாலில் சேர்களில் மனிதர்கள்…மனிதர்கள்…வரமாட்டேன் என்று உள்ளே எமனுடன் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளின் உறவுகள், ஓயாமல் சொந்தக் கதைகளையும், புறணிக் கதைகளையும் பேசிக் கொண்டிருந்தனர். இன்னும் சற்று நேரத்தில் கையில் லிஸ்ட்டுடன் நர்ஸ் புஷ்பா வரப் போகிறாள்..வார்டுபாய் ஆறுமுகம் அதை நோட்டீஸ் போர்டில் ஒட்டப் போகிறான். ராத்திரி சிவலோக பதவி / வைகுண்ட பதவி / மோட்சம், அடைந்து விட்டவர்களின் பட்டியல் அது. உடனே ஒரு கும்பல் குய்யோ முறையோ என்று கதறிக் கொண்டு மார்ச்சுவரி பக்கம் ஓடும். அப்புறம் காலியாகிவிட்ட இருக்கைகளை நிரப்ப வேறொரு கும்பல் வந்து சேரும். பழையன கழிதலும், புதியன புகுதலும் . இயற்கையின் தத்துவம் ஜரூராக அரங்கேறும் களம் இது. .

வலது பக்க வரிசையில் மூன்றாவது கட்டிலில் அவன், அந்தப் பையன் கிடத்தப் பட்டிருந்தான். இந்தக் கதையின் நாயகன். கோமா நிலை என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. நல்ல சிகப்பு, ஒல்லி தேகம்,தெற்றுப்பல், நீளமாய் வளர்த்து வைத்திருக்கும் பரட்டைத் தலை.. தலையில் பெரியதாய் கட்டு போடப் பட்டிருந்தது. கையில் சொட்டுச் சொட்டாய் ரிங்கர்ஸ் லேக்டேட் திரவம் இறங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்க்ரீனில் மினுக்கியபடி இ ஸி ஜி. மானிட்டர் கோடு போட்டுக் கொண்டிருக்கிறது. பக்கத்தில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர். அது , நாடித் துடிப்பு குறைவாக இருப்பதாக எச்சரித்துக் கொண்டிருக்கிறது.

சென்னையில் ஒரு நகைக் கடை அதிபரின் ஒரே பையன். அளவற்ற கோடிகளுக்கு ஒரே வாரிசு. மாநிலக் கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு. மாநில அளவில் தெரிந்த கிரிக்கெட் ப்ளேயர். அடுத்ததாக டாப் டென் காலேஜ்களில் ஒன்றில் எம்.பி..ஏ படிக்க வைக்க கனவிருந்தது, அவன் அப்பாவிற்கு. .அதற்குள் காதல் தோல்வி.எதையும் யோசிக்கவில்லை, வயசுக் கோளாறு. நேராய் வீட்டிற்கு வந்திருக்கிறான். அப்பாவின் அறை, அலமாரியில் ரிவால்வர், லோடட். எடுத்தான் லாக்கை ரிலீஸ் பண்ணி, தலையின் பக்கவாட்டில் வைத்து, ட்ரிகரைத் தொட, .டுமீல்….வயசான பெற்றோர்களின் அன்பை, எதிர்பார்ப்பை, கனவுகளை, எல்லாவற்றையும் அலட்சியப் படுத்திவிட்ட இந்த பாழாய் போன காதல் சாகட்டும்..மருத்துவமனைக்கு வெளியே நகைக் கடை ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் ,உறவினர்களும்,பையனுடைய கல்லூரி மாணவர்களும், என்று பெருங் கூட்டம் கூடியிருந்தது. ஒரே கூச்சலும், அழுகையும்.இரண்டு கான்ஸ்டபிள்கள் கூட்டத்தை ஒழுங்கு பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

டாக்டர்.ஆதித்யன், அஸிஸ்டண்ட் ஒருத்தருடன் சி.டி. ஸ்கேன் ஒன்றை தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.. இவர்தான் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையின் தலைமை மருத்துவர். உடனிருக்கும் அஸிஸ்டண்ட்கள் டாக்டர். டேனியல்,டாக்டர். குமார். ஆதித்யன் அந்தப் பையனின் அருகில் வந்து கண்களைப் பிதுக்கிப் பார்த்தார். இ சி ஜி மானிட்டரையும், பல்ஸ் ஆக்ஸிமீட்டரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“டேனியல்! க்விக்! பேஷ்ண்ட்கண்டிஷன் ஈஸ் கிரிட்டிக்கிள். ஓ.டி.க்கு தூக்கு. க்விக்.அனஸ்தட்டிஸ்ட்டை அலர்ட் பண்ணு..”—-பேசியபடி திரும்பியவர், நகைக் கடை அதிபரும், அவர் மனைவியும் கண்கலங்கி நிற்பதைப் பார்த்தார்.

“டாக்டர் சார்! ஒரே பிள்ளை சார். இவனை விட்டால் எங்களுக்கு வேற…”—-அழ ஆரம்பித்தார்கள்.

“உள்ளே எதுக்கு வந்தீங்க?. பர்மிஷன் இல்லாம எப்படி வந்தீங்க? யார் அலவ் பண்ணது?.ப்ளீஸ் வெளியே போங்க.. குமார்! என்ன இதெல்லாம்?.செக்யூரிட்டி எங்கே?. யூஸ்லெஸ். பைசா வாங்கிட்டு உள்ள விட்டிருப்பான்..”

“டாக்டர்! ப்ளீஸ்!. எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்ல டாக்டர். உங்க திறமைக்காகத்தான் அப்போலோ போவாம இங்க கொண்டாந்தேன் டாக்டர். ஐயோ !கடவுளே!.”— பளார் பளாரென்று தன் முகத்தில் அறைந்துக் கொண்டு அழுதார். அந்த அம்மாவுக்கு உன்மத்த நிலை, சூன்யத்தில் வெறித்துக் கொண்டிருந்தார்.. டாக்டர் கடுகடுவென முறைத்தார்.

“” பாருங்க! பத்து நிமிஷத்துக்குள்ள இவன் தலையைத் திறந்து உள்ளே உறைந்திருக்கிற ரத்தத்தை வெளியேத்தணும். இல்லையோ நேரா மார்ச்சுவரிக்குத்தான் போவான்… அப்புறமா என் ரூமுக்கு வாங்க நிதானமா பேசலாம்.. இப்ப தொந்திரவு பண்ணாதீங்….ஓ! டேனியல்! ரெஸ்பிரேட்டரி ஃபெய்ல்யூர் வந்திட்டது பார். என்ன பண்ற?ஓடு. தியேட்டருக்குத் தூக்கு க்விக் வெண்ட்டிலேட்டர் போடு. ஓடு. க்விக்.”
வெண்ட்டிலேட்டர் என்ற உபகரணம் மனிதனுக்கு சுவாசம் செயலிழக்கும் போது செயற்கையாக சுவாசிப்பதை செய்யும் கருவியாகும்.

“சிஸ்டர்!…சிஸ்டர்!…”—டாக்டர்.ஆதித்யன் கத்திக் கொண்டே அவ்வளவு பெரிய உடம்பை தூ க்கி கொண்டு ஆபரேஷன் தியேட்டரை நோக்கி ஓட ஆரம்பித்தார் அந்தப் பையனுக்கு சுவாசம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டே வர, மார்புக் குழியிலிருந்து அடி வயிறு வரைக்கும் எழும்பியடிக்கும் அயோர்ட்டாவின் துடிப்பு, கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கிக் கொண்டே வருகிறது. ஒரு பெரிய கட்டடத்தில் ஒவ்வொரு விளக்காக அணைந்துக் கொண்டே வருவது போல. பார்த்துக் கொண்டிருக்கும் போதே நீண்ட கேவல் மாதிரி ஒரு பெரு மூச்சு எழுந்து, அடுத்து அதுவும் ரிதமில்லாமல் தடுமாற, கண்கள் ஒரு நிமிஷம் இடவலமாக அலைந்து,பின்பு மேலே செருகிக் கொண்டன. தலை தொங்கிவிட்டது. அந்த தம்பதிகள் ஓ! வென்று கூச்சல் போட, தியேட்டர் அஸிஸ்டண்ட்கள் அவர்களை வெளியே இழுத்துச் சென்றார்கள்.

பச்சை நிற சீருடை ஆட்கள் தமதமவென்று ஓடி வந்து, அவனைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் போட்டுக் கொண்டு ஓட,கூடவே கையில் இறங்கிக் கொண்டிருக்கும் திரவ பாட்டிலை தூக்கிப் பிடித்தபடி நர்ஸ் சுவாதி. ஆபரேஷன் தியேட்டரில் வைத்து வெண்ட்டிலேட்டர் போட்டு, சுவாசத்தை சீர்படுத்த அரைமணி நேரம் ஆயிற்று.. ஆக்சிஜன் அளவு கூட்டப் பட்டது. காத்திருந்தார்கள். நிலைமை சீராக ஆரம்பித்தது. அனஸ்தட்டிஸ்ட் ராமன் மயக்கமருந்து கொடுக்கும் முஸ்தீபுகளிலிருந்தார்.

இப்போது ஆபரேஷன் டேபிளைச் சுற்றி கருவிகள் குவிக்கப் பட்டிருந்தன. வெண்ட்டிலேட்டர்,பாயில்ஸ் அபரேட்டஸ்,இடப்புறம் பி.பி. மானிட்டர், இ.சி.ஜி. மானிட்டர், மைக்ராஸ்கோப், இத்தியாதிகள். அவன் உடைகள் உருவப்பட்டு, வேறு துணியால் மூடப் பட்டான்.அவசரடியாய் அங்கேயே வைத்து பரட்டைத் தலையை மழித்தெடுத்தார்கள். பிறகு கிருமி நாசினியால் தலையை சுத்தமாய் கழுவித் துடைத்து, அடுத்து ஸ்பிரிட்டால் சுத்தப் படுத்தினார்கள். ஆபரேஷன் டேபிள் மீது அவனை கிடத்தும் போது டாக்டர்கள் குழு கையுறைகளுடன் தயாராய் வந்து நின்றது. அனஸ்தட்டிஸ்ட் பதறினார்.

“டாக்டர்! பல்ஸ் டவுன் ஆயிட்டிருக்கு..”

“ஓ! காட்!”.—–ஆதித்யன் செக் பண்ண எஸ்! ஐம்பதுக்குக் கீழே போயாச்சு, பலவீனமான துடிப்பு.. இன்னும் கொஞ்ச நேரத்தில் பல்ஸ்பிராடியாக மாறும் நிலை.அதாவது இதயம் லப் டப் ரிதத்திலிருந்து இறங்கி படபட அதிர்வுகளாக மாறும் நிலை. இ.சி.ஜி. தடுமாறிக் கொண்டிருக்கிறது. விட்டால் பத்து நிமிடம் கூட தாங்காது.கடவுளே! என்ன செய்யப் போகிறேன்?.இந்தப் பையன் தன் கையை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறான் என்பது மட்டும் தெளிவாக அவருக்குத் தெரிகிறது.. வெளியே கத்திக் கொண்டிருக்கும் வயசான அந்தத் தம்பதிகள் மனசில் வந்துப் போனார்கள்.அவர்கள் ஓடிஓடி சேர்த்த பணத்துக்கு ஒரு அர்த்தமும் இல்லாமல் போகப் போகிறது. எல்லோரும் இவருடைய உத்திரவுக்குக் காத்திருக்கிறார்கள். வேண்டாம் டென்ஷன் கூடாது.அவர் நெற்றியில், கன்னங்களில் வழிந்த வியர்வையை நர்ஸ் அம்புஜா டவலால் ஒற்றியெடுத்தாள்.

“சார்!..சார்!.ஃபெப்ரலைஸேஷன் வந்திடுச்சி.”— இது டாக்டர் குமார் இதயம் படபடவென உதற ஆரம்பித்து விட்டது. ..போச்சு.. அவருக்கு வாய் வறட்சியாய் இருந்தது. ஒரு மிடறு தண்ணீர் குடித்தார்… ஒரு நிமிஷம் கண் மூடி கடவுளை தியானித்துக் கொண்டு கடைசி முயற்சியில் இறங்கினார்.
“சிஸ்டர்! இன்ஜெக்‌ஷன் அட்ரினலின் —2.ஆம்ப்யூல்ஸ்..,அட்ரோபின் –2.ஆம்ப்யூல்ஸ்.ஐ.வி. ப்ளஸ் டோபோமின் -1 ஆம்ப்யூல். க்விக்..க்விக்!..”

“எஸ் டாக்டர்!.”

“ராமன்! காபினோகிராஃபியை ஸ்டடி பண்ணுங்க.( சுவாசத்தில் வெளியாகும் கார்பண்டையாக்ஸைட் அளவைக் காட்டும் கருவி). CO2 விகிதம் கூடியிருக்கு பாருங்க.. கரெக்ட் பண்ணுங்க. க்விக்..க்விக்..”

ஐந்து நிமிடம்..,பத்து., பதினைந்து…,.இருபதாவது நிமிடத்திற்குப் போகும்போது ரத்த அழுத்தம் கூடியது,இ சி ஜி. யின் தடுமாற்றம் சீராகியது. அப்பாடா சேஃப்..
டாக்டர் ஆதித்யன் நிதானமாக முகத்தில் ,கழுத்தோரங்களில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்தார்.நரம்பியல், எம்சிஎச் இறுதியாண்டு மாணவி டாக்டர்.தாரணி அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா?.”

“நான் உங்களையேத்தான் பார்த்துக் கிட்டிருந்தேன் சார். உங்க சர்வீஸ்ல இதைப் போன்ற அல்லது இதைவிட சீரியஸான எத்தனையோ கேஸ்களை ஹாண்டில் பண்ணியிருப்பீங்க. இப்பத்தான் புதுசு மாதிரி எவ்வளவு டென்ஷன்?,என்ன பரபரப்பு?,உங்களுக்கு மாலை மாலையாய் வேர்த்துக் கொட்டியது, கொஞ்ச நேரம் பிரார்த்தனை கூட செஞ்சீங்களே..”

அவர் டேபிள் மீது கிடக்கும் பையனை ஒரு முறை பார்த்தார்..

“இவன் யார்? இவனுக்கும் நமக்கும் என்ன உறவு?. ஆனால் அரை மணி நேரம் நான் மட்டுமில்லை நாம எல்லோரும் ஆடிப்போயிட்டோமே.என்னா பதைபதைப்பு?, ஓடிஓடி செஞ்சோமே. அம்புஜா சிஸ்டர் அவ்வளவு பெரிய உடம்பை வெச்சிக்கிட்டு இன்ஜெக்‌ஷன் எடுத்திட்டு வர எப்படி ஓடினாங்க?.ஏ.சி.குளிரிலும் வியர்வையில் நனைஞ்சி நிக்கிற ராமனை பாரு.. ஏன்?. உயிரென்பது அத்தனை ப்ரீஷியஸ்.. ஒவ்வொரு டாக்டரும் இப்படித்தான் நினைப்பார்கள்,நினைக்கணும். அந்த உயிருக்காக கடைசிவரை போராடிப் பார்க்கணும்.கடமை மாதிரி செய்ற ஜாப் இல்ல நம்முடையது. ஒரு அர்ப்பணிப்பு, டெடிகேஷன் இருக்கணும் அவன்தான் டாக்டர் அதிலும் நம்மைப் போன்ற நியூரோ சர்ஜனுக்கு எவ்வளவு அனுபவங்கள் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் புது அனுபவங்கள்தான்..ஏன்?சராசரி ஒண்ணரை கிலோ எடைதான் இந்த மூளை. அதுக்குள்ள பத்தாயிரம் கோடிக்கு மேல நியூரான் ஸெல்கள். சாம்பல் நிற கார்ட்டெக்ஸ் பகுதியில் மட்டும் ஒரு கன இஞ்ச்சிற்குள் பதினாராயிரம் கிலோ மீட்டர் நுட்ப நரம்பு கயிறுகள்., இவற்றிற்குள் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஓயாமல் குறுக்கும் நெடுக்கும்,மேலும் கீழும், மில்லி வோல்ட் மின் சிக்னல்களாகவும், ரசாயணப் பொருட்களின் தூண்டல்களாகவும் ஓடித் திரியும் தகவல் மழைகள்.. இவைகள்தானே நாம்?.. இதில் இம்மியளவு இடம் மாறி கத்தி பட்டாலும் அவன் தலையெழுத்தே மாறிவிடும். எஸ்! நம்முடைய ஜாப் அவ்வளவு கடினமானது.”.

அவர் பேசியபடி ஆபரேஷன் டேபிள் அருகில் வந்து நின்றார். பக்கத்தில் டாக்டர் டேனியல்,எதிர் பக்கம் டாக்டர் குமார். இரண்டு பக்கங்களிலும் கருவிகளை எடுத்துக் கொடுக்க,ரத்தக் கசிவுகளை ஒற்றியெடுக்க, உதவிக்கு தியேட்டர் அஸிஸ்டண்ட்களும்,நர்ஸ்களும். டாக்டர் தாரணி நாடித்துடிப்பை கண்காணித்துக் கொண்டிருந்தாள்.

“டேனியல்! நீயும்,குமாரும் இந்த சர்ஜரியை செய்யப் போறீங்க. நான் கூட இருக்கேன். மண்டையில ஃப்ரண்டல்,பரீட்டல் லோப்களை துளைச்சிக்கிட்டுத்தான் புல்லட் பாஞ்சிருக்கு,ஸ்டடி பண்ணிட்டீங்களா?.”
“எஸ் சார்!.”

ஜீ.சி.எஸ். கண்டிஷன் சொல்லு.”

“இ1, வி1, எம்3, சார்.”—–இந்தக் குறியீடுகள் கோமாவில் கிடக்கும் நோயாளி மூளையின் செயல் திறனை அளவிட உதவும் ஒரு முறையாகும்..GLASCO COMA SCALE என்று பெயர்.

“ரத்தம் எந்த பகுதியில் தேங்கி அழுத்தம் கொடுக்குது?.”

‘இடது பரீட்டல் லோப் சார்.!.”

“லொகேஷன்?.”

அவர்கள் சற்று நிதானிக்க, தாரணி முந்திக் கொண்டாள்.

“ப்ராட் மேன் ஏரியா-41,42, அண்டு 22 சார்.”

“குட்! ப்ளான் சொல்லு.”

“சார்! புல்லட் துளைச்சிருக்கிற வழியே போயி புல்லட்டை எடுத்திடலாம்,ரத்தத்தையும் வெளியேற்றி விடலாம்.”

டாக்டர் ஆதித்யன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, அந்தப் பையனுடைய சி.டி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன்களை நுட்பமாய் ஆராய்ந்தார்.. அனஸ்தட்டிஸ்ட் மயக்க மருந்து ஸ்ப்ரேயை ஆரம்பிக்க, 1. .2. 3. 4. பத்து எண்ணி முடிப்பதற்குள் மருந்தின் ஆதிக்கத்திற்குள் வந்துவிட்டது.. டாக்டர்கள் இருவரும் பர்ஹோல் எனும் மண்டையில் துளை போடும் காரியத்திற்குத் தயாரானார்கள்.

“ராமன்! ஓகே வா?.”

“ஜஸ்ட் எ மினிட் டாக்டர்.”—அவர் அவசரமாக எல்லா மானிட்டர்களையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்.. நாடி?-நிதானமாகியிருந்தது.,உடல் ?-தளர்ந்திருந்தது.,கருவிழிகள் இரண்டும் புருவ மத்தியில் முட்டிக் கொண்டிருந்தன.,கண் பாப்பா விரிந்திருந்தது.முழு மயக்கத்திற்கு போயாகி விட்டது.

“ஓகே சார்!.”

“மேனிட்டால்—200.மி.லி. ஸ்டார்ட்.”—இது டாக்டர் ஆதித்யன்.

நடு மண்டைக்கு இடப்புறமாக குண்டு பாய்ந்திருந்த இடத்தை மையமாக வைத்து துளை போடும் கருவியினால் துளை போட்டு துளை வழியே கிரேனியாட்டமி கருவி மூலம் நான்கு சதுரஅங்குலம் அளவிற்கு மண்டையோட்டு சில்லை பெயர்த்தெடுத்தார்கள். புல்லட் நுழைந்த இடத்தில் மூளையின் மேலுறை கிழிந்து, ரத்தம் உறைந்து கருமையாகத் தெரிந்தது. மூளை வீங்கி துளை வழியே பிதுங்க ஆரம்பித்திருந்தது. ஆதித்யன் குறுக்கிட்டார்.

“வெய்ட்! வீக்கத்தில் மூளை பிதுங்கி வருது பார்..மேனிட்டால் ட்ரிப் முடியட்டும்..”

கொஞ்ச நேரம் இடைவெளி விட்டு ஆரம்பித்தார்கள். எண்டாஸ்கோப்பின் முனையை உள்ளே நுழைக்க,டியூராவைத்தாண்டி அரக்னாய்டு உறை, அதையும் கடக்க, அடுத்ததாய் பயோமேட்டர். டி.வி. திரையில் காட்சிகள் விரிகின்றன. நெளிநெளியாய் கொசகொசப்புடன் சாம்பல் நிற கார்ட்டெக்ஸ். எதையும் சேதப் படுத்தாமல் நகர, பரீட்டல் பகுதியில் புதைந்திருக்கும் புல்லட்டின் பின்புறம் தெரிகிறது. லைலா ரெட்ராக்டரின் உதவியுடன் வழியை சற்று அகலமாக்கி, மெதுமெதுவாக அசைத்து அசைத்து புல்லட்டை வெளியே எடுத்தார்கள்.. தமனியிலிருந்து ரத்தம் பீச்சியடிக்கிறது. வழியை அடைத்து உதிரப் போக்கை கண்ட்ரோல் பண்ணி,எண்டாஸ்கோப் முனையை கீழே இறக்க, தேங்கியிருக்கும் ரத்தம் தெரிகிறது. உப்புக் கரைசல் நீரை உள்ளே பீச்சியடித்து, மொத்தமாய் உறிஞ்சியெடுத்தார்கள்..

எல்லாம் முடிந்து பேஷண்ட்டை ஐ.சி.யூ.விற்கு அனுப்ப மாலை நாலு மணியாகிவிட்டது. காலை பத்து மணிக்கு ஆரம்பித்த ஆபரேஷன்.. மொத்தம் ஆறு மணி நேரம்.அந்த டீம் முழுக்க எல்லோரும் பட்டினி. யாரும் மதிய உணவு சாப்பிடவில்லை.இனிமேல்தான். டாக்டர் ஆதித்யன் ரொம்ப சோர்வாய் உணர்ந்தார். வெலவெலப்பாயிருந்தது.. அவர் சர்க்கரை நோயாளி வேறு. ஆபரேஷன் சக்ஸஸ் என்பதில் எல்லோருக்கும் திருப்தி..அவரவர்களும் டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு டைனிங் செக்‌ஷனுக்கு ஓட, டாக்டர் ஆதித்யன் அந்த வயசான பெற்றோர்களைக் கூப்பிட ஆளனுப்பினார்.

“சார்! ப்ளீஸ்! முதல்ல சப்பிடுங்க. நீங்க டயாபட்டிக். பேஷண்ட். வாங்க.”—டாக்டர் டேனியல்.

“இருங்க. பாவம் பிள்ளையை பெத்தவங்க. அவங்க தவிப்பு எனக்குத் தெரியும். பையன் பிழைச்சிட்டான், நினைவுகளில் அதிகம் பாதிப்பு வராதுன்னு சொல்லணும்…”

“இருக்கட்டும். சப்பிட்டுக் கொண்டே சொல்லுவோம்.”

அவர்கள் இருவரும் டிபன் பாக்ஸைத் திறந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். நாலு வாய் சாப்பிட்டிருப்பார்கள். பையனின் பெற்றோர்கள் இன்னும் வரவில்லை. டாக்டர் குமார் பரக்க பரக்க ஓடிவந்தார்.

“டாக்டர்! டாக்டர்! சீக்கிரம் ஓடியாங்க. அந்தப் பையன் கொலாப்ஸ் ஆயிடுவான் போலிருக்கு.ஃபிட்ஸ் வந்திடுச்சி.’

இவர்கள் ஓடி..ஓடி அவன் மணிக்கட்டைப் பற்றி நாடி பார்க்க, அவன் செத்துப் போயிருந்தான். எப்படி?…எப்படி? என்னய்யா நடந்துச்சி?.ச்சே!

”டாக்டர்! ப்ரெய்ன் ஸ்டெம் கிட்ட புதுசா திடீர்னு ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கு.”—டாக்டர் குமார்.
அமைதியாக உட்கார்ந்து விட்டார்.மனசு வெறுமையாக இருந்தது. சே! எதைச் செய்யவும் சான்ஸ் இல்லாம போயிடுச்சி. திரும்பத் திரும்ப அந்த வயசான தம்பதிகளே உள்ளே கதறிக் கொண்டிருந்தார்கள். அடப் பாவி! பைத்தியக்காரா! பெற்றவர்களை சாகடிச்சிட்டு அப்படியென்னடா காதல் உனக்கு? அதுவும் உன்னை புறக்கணித்தவள் மேல். அந்த தம்பதிகளின் வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போனது ஒரு பக்கம்., ஹும்! காலையிலிருந்து கொலை பட்டினி கிடந்த பதினைந்து பேர் கொண்ட இந்த டீம்மின் ஆறு மணி நேர உழைப்பு, பரபரப்பு, ஓட்டம், அர்ப்பணிப்பு, எல்லாம் விழலாய் போச்சு..அதற்குள் விஷயம் வெளியே லீக் ஆகி வெளியே ஒரே கூக்குரல்.

ஆதித்யன் தன் அஸிஸ்டண்ட்களுடன் கிளம்பி வெளியே வந்தார். பசியில் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன.

“ஐயா! தோ வரானுங்க பாரு. இங்க வாணாம் அப்போலோவுக்குப் போவலாம்னு சொன்னேனே கேட்டியா?. எல்லாம் சேர்ந்துக்கிணு சாவடிச்சிட்டானுங்களே.டாய்!…டாய்!. அவன்களை வுடக்கூடாதுடா. டாய்!.’—கும்பலில் சிலர் இவர்களை அடிக்கும், அல்லது சண்டையிழுக்கும் நோக்கத்துடன் ஓடிவர, போலீஸ் அவர்களை தடுத்து துரத்தியது.

”நம்ம தம்பிய இவனுங்கதான் என்னமோ பண்ணிட்டானுங்கப்பா.. அடப் பாவிகளா! இங்க முடியாதுன்னு சொல்லிட்டிருந்தா அமெரிக்கான்னாலும் தூக்கிம் போயி என் பிள்ளையை காப்பாத்தியிருப்பேனே. விடமாட்டேண்டா..”—பையனின் அப்பா ஹிஸ்டீரிக்கிளாய் கத்திக் கொண்டிருந்தார்..
கோபமாய் திரும்பிய டேனியலை ஆதித்யன் இழுத்துக் கொண்டு நடந்தார். திரும்பி ஒரு க்ளான்ஸ் பார்க்க, நகைக் கடை அதிபர் இவரைப் பார்த்து மண்ணை வாரித் தூற்றி சாபமிட்டுக் கொண்டிருந்தார். அடுத்து சாலை மறியல் வரும். தவறாக ஆபரேஷன் பண்ணியதால் நகைக்கடை அதிபர் மகன் சாவு. நீதி விசாரனை வேண்டும் என்று ஊடகங்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு சென்சேஷனல் நியூஸ் போடப் போகின்றன, அந்தப் பையன் என்னமோ இவருக்கு ஜென்ம விரோதி போல. …டாக்டர் டேனியலும், குமாரும் கொதித்துக் கொண்டிருந்தனர்.

”ஆறு மணி நேரமாய் எவ்வளவு போராடினோம்?.என்னா பேச்சு பேசறாங்க பார்த்தியா?. சே! நம்ம உழைப்புக்கே அர்த்தமில்லாம போச்சு.எப்பவும் ஜெயிக்க நாம என்ன கடவுளா?..”

“சும்மா வாங்கப்பா! பாவம் அவங்க இழந்தவங்க.. .இது நமக்கு புதுசா என்ன?.. என்ன பண்றது.?. சாலையோரத்து மரம் கல்லடி படும்தான்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “சாலையோரத்து மரம்

    1. தங்களின் மேலான கருத்துக்கு நன்றி திரு.முத்து அவர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *