கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 12,549 
 
 

மேலாடை இல்லாத பெண்கள்.

ரத்தீஷ் உற்சாகத்தில் துள்ளினான். அவனைக் கூட்டி வந்தது இமாலயத் தவறு என்பதை தாமு தாமதமாய் உணர்ந்தான்.

நரிக்கொம்பு ஃபாரஸ்ட்டின் மையத்தில் காட்டிலாகா ஜீப் குலுங்கி்க் குலுங்கிப் போய்க் கொண்டிருந்தது. சூரிய வெப்பம் விழாத அடர்த்தியான காட்டுப் பிரதேசம்.

ரத்தீஷ் படபடத்தான்.

” தாமு, நீ காட்டுக்குள்ளே இல்லேடா. சொர்க்கத்தில் இருக்கே. “

” என்ன உளர்றே ? “

” இவங்கல்லாம் பெண்களா ? தேவதைகள். றெக்கை இல்லாத தேவதைகள். இத்தனை நாளா எனக்குத் தெரியாம போச்சே. “

” டோன்ட் பி எக்சைட்டட். பொம்பளைங்களை நீ பார்த்ததே இல்லையா ? “

” பார்த்திருக்கேன். இப்படி திறந்த வெளியா பார்த்ததில்லையே. முட்டி மோதி டிக்கட் வாங்கிட்டு தியேட்டர் புழுக்கத்தில் உக்காந்து பவுண்ட்டி பார்த்தமே ? அந்த இங்கிலீஷ் படம் தோத்தது. இன்னிக்குத்தாண்டா எனக்கு ஜன்ம சாபல்யம். “

” ச்சீ. இதெல்லாம் ஒண்ணும் உலக அதிசயமில்லை. வந்த புதுசில் எனக்கும் ஒரு மாதிரி இந்தப் பொண்ணுங்களை ஏறெடுத்துப் பார்க்கவே ஷையா இருந்துச்சு. இப்ப பழக்கமாயிடுச்சு. விரசமா தோணறதில்லை. “

” எவ்வளவு நாளா இங்கிருக்கே ? “

” டிரான்ஸ்ஃபர் ஆகி வந்து ஆறு மாசம் ஆச்சு. “

தாமு அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டே வந்தபோது சில காட்டுவாசிகள் வழிமறித்தார்கள்.

” சாமீய் ! பூஜை சாமீய் ! வூட்டுக்குள்ளே வந்துட்டுப் போங்க சாமீய் ! “

ரத்தீஷின் பார்வை அந்தச் சிவப்பான இளம்பெண்ணின் மேலே ஆணியடித்து நின்றது. அவளும் ரத்தீஷை ஒரு விநாடி வெட்கப் பார்வையில் நனைத்தது போல பிரமை.

தாமு வாட்சைப் பார்த்தான். ” நேரமாச்சு. இன்னொரு நாள் வர்றோம். “

ரத்தீஷ் தொடையைக் கிள்ளினான். கிசுகிசுத்தான். ” பாவி. கவுத்தாதடா. எனக்காக ஜீப்பை விட்டு இறங்குடா. “

தாமு பதில் சொல்லும் முன்பே ரத்தீஷ் கீழே குதித்தான்.

” சிவப்பி, சாமீய்ங்களை உள்ளாற கூட்டிட்டுப் போ. “

சிவப்பழகியே, உன் பேரே சிவப்பிதானா ?

அந்தச் சின்னக் குடிலுக்குள் அவர்களோடு நுழைந்து விட்டான் ரத்தீஷ். அடர்த்தியான மரத்தின் அடிப்பாகத்தில் எழுப்பப்பட்ட குடிசை. மரத்தில், செதுக்கின மாதிரி அடர்கறுப்பில் ஒரு நாட்டுப்புற தெய்வம். எண்ணெயும் குங்குமமும் அதன் மேல் தீற்றப்பட்டிருந்தன. வாசனையோடு கறிவகைகள் முன்னால் படைக்கப்பட்டிருந்தன. தொன்னைகளில் தேன். தம்பட்டம் ஒலிக்க ஆரம்பித்து, இடையிடையே குலவை சப்தங்களும் மிக்சிங் ஆயின.

ரத்தீஷ் சிவப்பியை விழுங்குவது போல் பார்த்தான். பக்தியில் குலுங்கி ஆடும் சிவப்பி சொருகின கிறக்கப் பார்வையை இடையிடையே ரத்தீஷ் மேலும் தெளித்தாள்.

தாமு அவனைத் தட்டினான்.

” ரத்தீஷ், எனக்கு நிறைய வேலை இருக்கு. போலாம். “

தாமு அவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஜீப்புக்குப் போனான்.

மண் புழுதி உயரமாய் எழும்ப ஜீப் பறந்தது. பத்து நிமிஷங்களில் மரங்களுக்கு மத்தியில் புதைந்திருந்த குவார்ட்டர்சைத் தொட்டார்கள்.

ரத்தீஷ் புலம்பிக் கொண்டே லுங்கிக்கு மாறினான்.

” சே, அந்த சிவப்பழகி என்னைப் பார்த்த பார்வையில் செமத்தியா காதல் வழிஞ்சதுடா. இன்னும் கொஞ்ச நேரம் அங்கே இருந்திருந்தா அவளை செட்டப் பண்ணி ஓரம் கட்டியிருப்பேன். “

” ரத்தீஷ், நீ இங்கிருந்து எப்ப கிளம்பறே ? அதை முதல்ல சொல்லு. “

” பொறாமையைப் பாரு. சிவப்பியை வழிக்குக் கொண்டு வராம நான் இந்த ஃபாரஸ்ட்டை விட்டுக் கிளம்ப மாட்டேன். அசப்புல அவ மந்த்ரா மாதிரி இல்லே ? “

” ரத்தீஷ், நீ அவளை வழிக்குக் கொண்டு வர வேண்டியதெல்லாம் இல்லை. தானாவே வந்து விழுவா. ஆனா… “

” ஆனா என்ன ? “

தாமு பேச வந்த போது, தப் தப்பென்று குவார்ட்டர்ஸ் கதவு தட்டப்பட்டது. கதவை விலக்கி எட்டிப் பார்த்தான் தாமு.

ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் யுனிபார்ம் அணிந்த கறுத்த ஆசாமி சல்யூட் அடித்தான்.

” அய்யா, கொக்குப்பாறை கிட்டே ரெண்டு சிறுத்தைப் புலிங்க உலாவுது. ரேஞ்சர் அய்யா உங்களுக்குத் தகவல் தரச் சொன்னாரு. “

” இதோ வந்துட்டேன். “

தாமு பரபரப்பானான். பைனாகுலர், துப்பாக்கி சகிதமாய் அவசரமாய்க் கிளம்பினான்.

” ரத்தீஷ், நான் இப்போ வந்துடறேன். நீ படுத்து ரெஸ்ட் எடு. நாம வந்து பேசிக்கலாம். “

ஜீப் பெரிய உறுமலுடன் புறப்பட்டது. நிமிஷங்களில் சப்தம் தேய்ந்தது.

தட்…

தட்…

சலிப்போடு எழுந்து போய்க் கதவைத் திறந்தான் ரத்தீஷ். திகைத்தான்.

வெட்கத்தை அள்ளிப் பூசிக் கொண்டு சிவப்பி நின்றிருந்தாள்.

00OO00

சில மணி நேரங்கள் கரைந்தன. தாமு திரும்பி வந்தான்.

ரத்தீஷின் முகத்தில் அசாத்திய உற்சாகம். தாமு உள்ளே நுழையும் முன்னே கத்தினான்.

” தாமு, ஐ காட் இட். சொர்க்கம்டா. “

” என்ன உளர்றே ? “

” சிவப்பி இங்கே வந்திருந்தா. “

” இங்கே வந்தாளா ? எதுக்கு ? ” தாமுவின் முகத்தில் மெல்லிய ரேகைகளாய்க் கலவரம்.

” நாம பாதி பூஜையிலே வந்துட்டோமாம். சாமிக்குப் படைச்ச கறியும், தேனும் கொண்டு வந்தா. உள்ளே கொண்டு வான்னேன். வாங்குறப்போ அவ கையைத் தொட்டேன். நாலாயிரம் வோல்ட் எலக்ட்ரிக் ஷாக். எனக்குத் தெரியாத வித்தையா ? மெல்ல மெல்ல அவளை வீழ்த்திட்டேன். “

தாமு அதிர்ந்து போய் நிற்க, ரத்தீஷ் புன்னகையோடு கேட்டான்.

” ஏண்டா பேயறைஞ்ச மாதிரி நிக்கறே ? பயமா ? எனக்கு பொண்ணுங்களை முதல் பார்வையிலேயே படிக்கத் தெரியும். இவ ஆச்சா போச்சான்னு கூப்பாடு போடற ரகம் கிடையாது. எல்லாம் முடிஞ்சதும் ஒப்பாரி கூட வெக்கலை. என்னோட காலைத் தொட்டுக் கும்பிட்டுப் போனா. அதெல்லாம் விஷயத்தைக் கமுக்கமா வெச்சிப்பா. நாளைக்குக் காலைல நான் ஜூட் விட்டுருவேன். “

தாமு பதறினான். ” அய்யோ, இப்படிப் பண்ணிட்டியேடா பாவி. அவங்களைப் பத்தி உனக்கு எச்சரிக்கை பண்றதுக்குள்ள காரியத்தைக் கெடுத்துட்டியே. வந்து விலாவாரியா சொல்லலாம்ன்னு இருந்தேன். “

” சரி இப்ப சொல்லு. “

” அந்த காட்டுவாசி இனத்துக்கு ஒரு ஜெனட்டிக் ட்ரபுள் இருக்கு. அந்தப் பெண்கள் வயத்தில் பிறக்கும் எந்த ஆம்பளைக்கும் ஒரு வாரிசை உருவாக்கற சக்தி கிடையாது. அதனால வெளியாட்கள் வந்தா வலை வீசிப் பார்ப்பாங்க. தப்பித் தவறி அவங்க வலையில் யாராவது விழுந்துட்டா அந்த ஆண்கள் மூலமா கர்ப்பமாக முயற்சிப்பாங்க. அதுக்கப்புறம் அந்த ஆம்பிளையை தெய்வமா மதிப்பாங்க. “

” சந்தோஷமான விஷயம்தானே ? “

” முழுசும் கேளுடா ஃபூல். தெய்வமா மதிப்பாங்கன்னு பேச்சுக்கு சொல்லலை. நாம போனப்ப அந்தக் குடிசை வீட்டு மரத்தில் ஒரு சாமி இருந்ததே… அது சிலை இல்லை. மனுஷ உடல். பச்சிலை போட்டு பாடம் பண்ணப்பட்ட மனுஷ உடல். சிவப்பி வீட்டுக்கு இன்னிலர்ந்து நீதான் குலதெய்வம். உன்னை மரத்தில் அறைஞ்சு பாடம் பண்ணி வழிபடப் போறாங்க. அப்படி வழிபட்டா தங்கள் இனப் பெண்களுக்கு மலட்டு ஆண்கள் பிறக்கக்கூடிய சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்கும்கறது அவங்களோட தீவிர மூட நம்பிக்கை. “

முதுகுத் தண்டு பூராவும் ஐஸ் கட்டியாய் சில்லிட்டுப் போயிருக்க, ரத்தீஷ் உறைந்து நின்றான்.

வெளியே ஆயுதங்களோடு காட்டுவாசிகள். கசகசப்பாய்ப் பேச்சொலிகள். காலடிச் சப்தம். சிவப்பி ஜன்னல் வழியே ரத்தீஷைக் கை காட்டினாள்.

வயசான காட்டுவாசியின் கரகரத்த குரல் கூப்பிட்டது.

” சாமீஈய்!”

– குமுதம் – 08.01.1998

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *