சாபம் நீங்கியது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 6, 2022
பார்வையிட்டோர்: 4,303 
 
 

‘வள்ளிக்கண்ணுவை காணோம்’ எனும் செய்தியோடுதான் அந்த மலைக்கிராமத்தின அன்றைய பொழுது புலர்ந்தது.

மேற்குமலைத் தொடர்ச்சியின் இடையே, மிக அடர்த்தியான காடுகளால் பிணைந்திருக்கும் உயரமான மலைகள் அடங்கிய பகுதி அது. கண்ணுக்கெட்டியவரை தெரியும் அத்தனை மலைகளையும் விட உயரமாய் நின்ற ஒரு மலையில், எப்போதும் மேகங்களால் சூழப்பட்டு, பகல் நேரங்கள் கூட பலசமயம் அரையிருளாகவும் ஈரமாகவும் காட்சியளிக்கும் சிறுகுடி கிராமம்.

அக்கிராமத்தின் உயரமான பகுதியில்தான் அந்த தொழிற்சாலை கட்டிடம் அமைந்திருந்தது. தொழிற்சாலையை ஒட்டிய விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அபர்ணாவுக்கு வள்ளிக்கண்ணுவை காணவில்லை எனும் செய்தி, தொழிற்சாலையின் வாட்ச்மேன் செல்லையா மூலமாக தாமதமாகத்தான் கிடைத்தது.

ஏழெட்டு வருடங்களாக அரசாங்கத்தால் சீல் வைக்கப்பட்டு, மூடிக்கிடக்கும் அந்த தொழிற்சாலையை ஆய்வு செய்து, மீண்டும் திறப்பது குறித்த ஓர் அறிக்கையை தயார் செய்ய வேண்டிய வேலை இருந்த காரணத்தால் அபர்ணா உறங்கவே விடியற்காலை ஆகிவிட்டது. சற்று தாமதமாக எழுந்திருக்கலாம் என்று அசந்து உறங்கியவள் மதியத்திற்குப் பிறகுதான் எழுந்து வெளியே வந்தாள். வீட்டினுள் இருந்தவரை தெரியாத குளிர், வெளியே வந்ததும் அவள் போட்டிருந்த ஸ்வெட்டரையும் மீறி நடுங்க வைத்தது.

சற்று தூரத்தில், தொழிற்சாலை வாசலின் வளர்ந்த புற்களை செதுக்கிக் கொண்டிருந்த செல்லையா, இவளைக் கண்டதும் ஓடி வந்து நின்று பவ்யமாய் கேட்டான், “அம்மாவுக்கு சாப்பாடு எதாவது வாங்கிட்டு வரட்டுங்களா?”

“இல்ல, வேணாம்.. நானே குக் பண்ணிக்கிட்டேன் செல்லையா..”

“சரிங்கம்மா” என நகர முற்பட்டவன் தயக்கமாய் திரும்பி பார்த்தான், ”ம்மா, மறுபடியும் இந்த கம்பேனிய தொறந்துடுவாங்களா.. இதை நம்பித்தான்மா இந்த ஊரே உருவாச்சு.. இங்க வேலை பாத்தவங்களுக்காகத்தான் இங்க இருக்குற அந்த மூணு காலனியையும் கட்டுனாங்க.. இப்ப அங்க மனுசங்களே இல்லாம போச்சு, எதுவும் இல்லாம போச்சு.. எல்லாம் அந்த சீயானோட சாபந்தான்.. அது தீரணும்னா, ஊரு முன்ன மாதிரியே ஆகணும்னா அது உங்க கைலதாம்மா இருக்கு..நீங்க மனசு வச்சாதான் பாக்டரி மறுபடி தொறக்கும்னு போன்ல நம்ம மேனேஜரய்யா கூட சொன்னாரும்மா”

சீயான் என்று அவன் குறிப்பிட்டது அவ்வூர் முருகனைத்தான். அநேகமாக சேயோன் என முன்பு அழைக்கப்பட்டு அது நாளடைவில் சீயானாக மருவியிருக்க வேண்டும். மக்கள் இல்லாத பகுதியாக இவ்வூர் மாறியதற்கு காரணமாக அங்கிருந்தவர்கள் அந்த கோயில் கடவுளையே குறிப்பிட்டனர். இவளுக்கு அதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அதைப்பற்றி அவள் பேசுவதை எப்போதும் தவிர்த்தாள்.

“கடவுளும் கவர்மெண்ட்டும் மனசு வைக்கணும் செல்லையா.. நான் சின்ன துரும்புதான்” என பேச்சை தவிர்க்க எண்ணியவள், நினைவு வந்தவளாய் வினவினாள்,

“எனக்கு எதாவது பார்சல் வந்ததா? ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிருந்தேன்”

“ஆமாம்மா, டவுன்லேர்ந்து ஒரு பையன் வந்து குடுத்துட்டு போனான்.. அம்மா தூங்கிட்டிருந்தீங்க, அதான் நானே கையெழுத்து போட்டு வாங்கிட்டேன்” எனக் கூறியவாறு சென்று அவனது கேபினில் இருந்த ஒரு பார்சலை எடுத்து வந்து கொடுத்தான்,

”என்னம்மா இது?”

“ட்ரஸ்.. நம்ம வள்ளிக்கண்ணுவுக்கு நாளைக்கு பர்த்டே.. இத அவகிட்ட சொல்லிடாதீங்க”

“அந்த புள்ளயத்தாம்மா காலைலேர்ந்து காணோம்னு அவங்கம்மா தேடிட்டு இருக்குது.. எங்க போனுச்சோ தெரியல..” என்றவாறு மீண்டும் வேலை செய்ய திரும்பிச் செல்ல – இவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

“என்ன செல்லையா, இவ்ளோ அலட்சியமா சொல்றீங்க..?”

அவன் திரும்பி பார்த்து புரியாமல் பார்க்க –

“அவ சின்ன புள்ள.. இன்னும் மூணாங்கிளாஸ் கூட முடிக்கல, இங்க மத்த ஊரு மாதிரி நிறைய ஆளுங்க கூட இல்ல.. இருக்கறது மொத்தமே பத்து பேர்தான்.. அவ எங்க போனா, எப்படி காணாம போனா, எப்ப காணாம போனான்னு விசாரிச்சீங்களா இல்லியா.. நாமதான ஹெல்ப் பண்ணனும்..” என படபடவென்று பொரிய – அவளது பதட்டத்துக்கு இவன் பதறிப் போனான்.

“அது..அடிக்கடி அந்த பொண்ணு.. வீட்ல அவங்கம்மா அடிச்சுதுன்னு வச்சுக்குங்க, கோச்சுகிட்டு அதுபாட்டுக்கு எங்கியாவது போயிரும்மா..எங்கியாச்சும் மரப்பொந்து, குகைன்னு போயி கோச்சுக்கிட்டு உக்காந்துருக்கும், இவங்க கண்டுபிடிச்சு கொண்டு வருவாங்க, இல்லன்னாலும் பொழுது சாயறதுக்குள்ள அது தானாவே வீட்டுக்கு வந்துரும்.. இந்த ஏரியா அத்தனையும் அந்த குட்டிப்பொண்ணுக்கு அத்துப்படிம்மா..”

“அதுக்காக.. நாம..” என ஏதோ பேச வந்தவள், “ஜீப் டிரைவர் எங்க?” என ஜீப் நிற்கும் பகுதியை பார்த்தாள்.

“சாப்பிடறதுக்கு போயிருக்கான்மா..”

“சரி, உங்க சைக்கிளை கொடுங்க”

சற்று தயக்கத்துடன் செல்லையா எடுத்துவந்த அவனது மிதிவண்டியை வாங்கிக் கொண்டு காலனி வீடுகளை நோக்கி விரைந்தாள். மழைத் தூறல் துவங்க – காற்றில் குளிரும் அதிகமாயிருந்தது. வழுக்கும் மண்சாலையில் மிக கவனமாக செல்ல வேண்டியிருந்தது. ஏரியை சுற்றிக்கொண்டு காலனிக்கு செல்லவேண்டும்.

நீர் நிரம்பிய பெரிய ஏரி – ஏரிக்கு ஒருபக்கத்தில் இடைவெளிவிட்டு, ஒரு காலனிக்கு ஐந்து வீடுகள் என மூன்று காலனிகள் – ஏரிக்கு மறுபக்கம் ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலை – ஏரியை ஒட்டி சற்றே சிதிலமடைந்திருந்த முருகன் கோயில். இவைதான் அந்த சிறுகுடி கிராமம். மூன்று காலனிகளின் பதினைந்து வீடுகளில் இப்போது, ஒரு காலனிக்கு ஒரு வீடு எனும் கணக்கில் மூன்று வீடுகளில் மட்டுமே மனிதர்கள் இருக்கிறார்கள். அம்மூன்றின் முதல் காலனியில், பாலர் பள்ளி எனும் பெயரில் இருக்கும் வீட்டில், அதன் ஆசிரியராக ஒருவர், தொழிற்சாலை நிர்வாகம் இன்றும் அனுப்பிவரும் சம்பளத்தின் காரணமாக காலி செய்யாமல் இருக்கிறார். பெரும்பாலும் மலைக்கு கீழ் இருக்கும் டவுனுக்கு சென்றுவிடுவார். இங்கு வருவது அரிது. இரண்டாவது காலனியில், ஒரு வீட்டில் முருகன் கோயிலின் வயதான அர்ச்சகர், எப்போது இங்கு இருப்பார் என்றே சொல்ல முடியாது. மூன்றாவது காலனி வீட்டில்தான் வள்ளிக்கண்ணு குடும்பம் இருக்கிறது.

அபர்ணா சென்றபோது வள்ளிக்கண்ணுவின் தாய் வீட்டுக்கு வெளியே அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள். அவள் மடியில் கிடந்த கைக்குழந்தை அவளுக்கு போட்டியாக வீறிட்டு அழுதுக் கொண்டிருக்க – அவர்கள் அருகே நின்று என்ன செய்வது எனத் தெரியாமல் வள்ளிக்கண்ணுவின் தம்பி, தனது தாயையே பார்த்துக் கொண்டிருந்தான். அபர்ணா வருவது கண்டு அவலை நோக்கி ஆர்வமாய் ஓடிவந்தான். இவள் அடிக்கடி தின்பண்டங்கள் தரும் காரணத்தால் இப்போதும் அதை எதிர்பார்த்து, அவள் வெறும் கையுடன் இறங்குவதைக் கண்டு ஏமாற்றமாகி அதை மறைத்துக் கொள்ள வீட்டுக்குள் வெட்கப்பட்டு ஓடினான்.

“வள்ளிக்கண்ணு கிடைச்சாளா செல்வி?” பதட்டம் மாறாமல் அருகே வந்தவாறே அபர்ணா கேட்டாள், “கண்டுபுடிச்சீங்களா இல்லியா?”

அழுகை அடக்கி தேம்பலுக்கு இடையே புலம்பினாள் வள்ளிக்கண்ணுவின் தாய்,” இல்லியேம்மா..எப்பவும் கோச்சுக்கிட்டு போனா ரெண்டு மூணு எடத்துலதான் உக்காந்துருப்பா, அழைச்சுட்டு வந்துருவேன், அப்படி இல்லன்னாலும் கொஞ்ச நேரத்துல திரும்பி வந்துருவா..காலைலேர்ந்து காணம்மா..தேடாத இடமில்ல.. எல்லாம் என்னாலதான்..” தலையில் அடித்துக் கொண்டாள், “நாளைக்கு பொறந்த நாளைக்கு ட்ரசு வேணும்னு ரெண்டு நாளா அடம் புடிச்சா.. இன்னிக்கு ரொம்ப அதிகமா அடம்புடிச்சாளேன்னு நல்லா அடிச்சுபுட்டேன் பாவி.. புருசனும் இல்லாம, மூணு புள்ளகள வச்சுக்கிட்டு, சரியான வேலையும் இல்லாம, வருமானமும் இல்லாம..நான் என்னம்மா பண்றது..உங்க கம்பேனி இருந்தவரைக்கும் கைல காசு பொழங்கிச்சி, வேண்டியத வாங்கினோம், தின்னோம்.. இப்ப..” பேசமுடியாமல் திணறி அழ – அபர்ணாவுக்கு பரிதாபமாய் இருந்தது.

வீட்டுக்குள் சென்றிருந்த வள்ளிக்கண்ணுவின் தம்பி கத்தியவாறே ஓடிவந்தான் ,”அக்கா உள்ளதாம்மா இருக்கு..”

அனைவரும் வீட்டுக்குள் சென்று பார்க்க – கட்டிலுக்கடியில் இருந்த இருட்டில் துணிமூட்டை போன்று வள்ளிக்கண்ணு அசைவற்று கிடந்தாள்.

“அய்யோ..ஊரு முழுக்க தேடினேனே, வூட்டுக்குள்ள பாக்கலியேடி ராசாத்தி..கண்ணு முழிச்சு பாருடி..இப்படி மூச்சு பேச்சில்லாம கெடக்காளேம்மா..” செல்வி அரற்ற – அபர்ணா அவசரமாய் தனது கைப்பேசியை எடுத்து – சிக்னல் வரும் இடத்தை தேடி பிடித்து டயல் செய்தாள்,”செல்லய்யா, ஜீப் டிரைவர வண்டிய எடுத்துக்கிட்டு உடனே காலனிக்கு வரச்சொல்லுங்க..அர்ஜண்ட்.. வள்ளிக்கண்ணுவ டவுன் ஆஸ்பிடலுக்கு கொண்டு போகணும்..”

நள்ளிரவில்தான் வள்ளிக்கண்ணுவை டவுன் மருத்துவமனையில் சேர்க்க முடிந்தது.

“அன்கான்சியஸ்லதான் இருக்கா.. ரொம்ப வீக்கா வேற இருக்கா..ஸ்கேன் எடுத்துருக்கோம்” அபர்ணாவிடம் டாக்டர் ஆச்சரியம் காட்டினார், “நீங்க இருந்த காரணத்தாலதான் இந்தப் பொண்ண இங்க வந்துருக்கா.. இல்லனா வழக்கம் போல அவங்களுக்குள்ளயே விஷயத்த முடிச்சுப்பாங்க.. இவதான் இங்க வந்த முதல் பேஷண்ட்”

“புரியல டாக்டர்”

“சாமி சாபத்தாலதான் அங்க இருக்குறவங்களுக்கு உடம்பு சரியில்லாம போகுது, எதாவது கெட்டது நடக்குதுன்னு சொல்லி இங்க ஆஸ்பிடலுக்கே பேஷண்ட்ஸை கொண்டு வரமாட்டாங்க, யாராவது செத்துப்போனா அவங்க டெட்பாடி கூட இங்க வராது.. நாங்க அங்க எதாவது மெடிக்கல் கேம்ப்புக்கு போனாலும் சரியான ஒத்துழைப்பு கெடைக்காது..நாம என்ன சொன்னாலும் கேக்கமாட்டாங்க, அவங்களுக்கு அங்க எடுத்து சொல்றதுக்கும் ஆள் இல்ல.. இதெல்லாம் முன்னாடி இருந்த கதை.. பாதி பேரு வெளியூருக்கு போயாச்சு, மீதி பேரு செத்து போயாச்சு..”

தொடர்ந்து டாக்டர கூறிய சமாதானத்தில் சற்றே பதட்டம் தணிந்த அபர்ணா, அமைதியாய் வெறித்த சிந்தனையுடன் அமர்ந்திருந்த செல்வியிடம் வந்தாள்,

”செல்வி.. வள்ளிக்கண்ணுவுக்கு எதுவும் ஆகாது, குணமாயிடுவா.. உங்க பசங்களப் பத்தி இனிமே கவலைப்படாதீங்க, அவங்கள படிக்க வைக்க நான் ஏற்பாடு பண்றேன்..என்ன?”

அவள் கையெடுத்துக் கும்பிட்டாள்.

“நான் கிளம்பறேன்.. இங்க வள்ளிக்கண்ணுவுக்கு பக்கத்துலயே நர்ஸ், டாக்டர்லாம் இருக்காங்க.. டெஸ்ட்லாம் எடுத்துருக்காங்க.. காலைல கண்ணு முழிச்சுருவா..கவலைப்படாதீங்க..” அபர்ணா விடைபெற்று வெளியே வந்து ஜீப்பில் ஏறினாள்.

ஜீப், பனிப்புகை கசிந்த இருளினூடே மலைப்பாதையில் செல்லும்போது அவளது தலைமை அலுவலகத்தின் மேலதிகாரி போனில் அழைத்தார், “என்னாச்சு அபர்ணா.. எம்.டி.க்கு அறிக்கைய கொடுத்தாச்சா.. உங்களுக்காகத்தான் எல்லாரும் வெயிட் பண்ணிட்டிருக்கோம்..என்ன, மறுபடியும் அந்த பாக்டரிய தொறந்துடாம்ல?”

“சீக்கிரமா தொறக்கறதுதான் நல்லது சார்.. இங்க இருக்குறவங்களுக்கு வாழ்வாதாரமே அதுதான்.. அத நம்பி இங்க நிறைய பேர் இருந்துருக்காங்க..மறுபடியும் வருவாங்க..”

“நீங்க அங்க இன்ஸ்பெக்‌ஷனுக்கு போனது அங்க இருக்குறவங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்காகவோ, சர்வீஸ் பண்றதுக்காவோ இல்ல அபர்ணா.. நமக்காக.. நல்ல லாபத்தோட நல்லா போயிட்டிருந்த பாக்டரி அது.. ஏழுட்டு வருஷத்துக்கு முன்னாடி ஏதேதோ காரணம் சொல்லி எவனோ போட்ட கேஸ்னால, சரியா விசாரிக்காம கவர்மெண்ட் இழுத்து மூடிருச்சு.. இப்ப மறுபடியும் தொறக்கலாமா வேணாமா, அங்க சிச்சுவேஷன் எப்படியிருக்குன்னு பாத்து ஒரு அறிக்கைய எழுதறதுக்குத்தான் போயிருக்கீங்க.. எம்.டி. உங்கள நம்பறார், நீங்க சொல்றதைதான் கேப்பார். அதை நம்பித்தான் முடிவெடுப்பார். நமக்கு ஃபேவரா பண்ணுங்க.. நாளைக்குத்தான் லாஸ்ட் நாள்..”

“தெரியும் சார்.. முடிவெடுக்குற பொறுப்பை எங்கிட்ட நம்பி கொடுத்துருக்கார்.. அதை நான் சரியா செய்வேன் சார், இன்னிக்கு காலைலேயே நான்.. ” என அவள் மேற்கொண்டு பேசுவதற்குள் ஜீப் பாதையிலிருந்து வழுக்கியது போல் தடுமாறி குலுங்கி நிற்க – போன் கட் ஆனது.

இவள் ஜீப் முன்பகுதியில் சற்றே முட்டிக்கொண்டு, சுதாரித்து டிரைவரை பார்க்க – அவன் பதட்டமாகி, “ஸாரி மேடம்..அடிபடலியே”

“பரவால்ல, என்னாச்சு?”

“இரும்பு பைப்புங்க மேடம், நம்ம பேகடரிலேர்ந்து வர்ற பைப்தான், நான் பலதடவை சொல்லிட்டேன், இன்னும் ஆழமா புதைக்க சொல்லி.. இப்ப பாருங்க, மழைல மண்ணுலாம் கரைஞ்சு அது வெளில வந்துடுச்சு..” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் வெளியே எட்டிப் பார்த்தாள். பாக்டரியிலிருந்து வெளியே வந்த பெரிய இரும்புக் குழாய்கள், பாதைக்கு குறுக்கே சென்று ஏரியில் முடிந்திருந்தன.

ஜீப்பை மீண்டும் கிளம்ப, இவளுக்குள் குழப்பம் வந்தமர்ந்துக் கொள்ள – யோசிக்க ஆரம்பித்தாள்.

ஜீப் தொழிற்சாலைக்கு வந்திருக்க – இறங்கிக் கொண்டாள்..

“நீங்க ஆஸ்பிடலுக்கு போயிருங்க.. அங்க எதாவது ஹெல்ப் தேவைப்படும்” என்று ஜீப் டிரைவரை அனுப்பிவிட்டு திரும்பி தொழிற்சாலை கட்டிடத்தை பார்த்தாள். பிறகு யோசனை மாறாமல், அபர்ணா யோசனையாய் தனது அறைக்கு வந்தாள். மேலதிகாரியிடம் இருந்து மீண்டும் போன் வந்தது, ”கட் ஆயிருச்சும்மா.. ஸ்டேட்மெண்ட்டை எப்ப அனுப்ப போறே? எம்டி வெயிட் பண்றாரு..”

மேசையில் இருந்த் அறிக்கைகளை கைகளில் எடுத்து பார்த்தவாறு, ’இன்னிக்கு அனுப்பிடுவேன் சார்.. பிரிண்ட் அவுட் எடுத்து வச்சிருக்கேன், எம்டிக்கு ஃபேக்ஸ் பண்ணனும்..பர்சனல் வேலையா வெளில போயிருந்தேன், இப்ப அனுப்பிடுவேன்”

“தேங்க்ஸ்” அவர் துண்டிக்க – மருத்துவமனையில் இருந்து போன் வந்தது.

“சொல்லுங்க டாக்டர், இப்ப எப்படியிருக்கா வள்ளிக்கண்ணு?”

“அபர்ணா.. ம்.. வள்ளிக்கண்ணுவோட ரிசல்ட்டெல்லாம் வந்துருச்சு.. குழப்பமா இருக்கு.. குடல், நுரையீரல்ன்னு அவ உடல் உள்ளுறுப்புகள் அத்தனையும் அரிச்சிருக்கு, எப்படி என்னன்னு புரியல..அவ ப்ளட்லயும் ஏதோ கெமிக்கல் மிக்ஸான மாறி இருக்கு.. இன்னும் அபாய கட்டத்துலதான் இருக்கா.. நான் அப்பறம் கால் பண்றேம்மா”

அபர்ணாவுக்குள் அந்த இரும்பு குழாய்கள நினைவுக்குள் வந்துபோயன. இந்த மலைக்கிராமத்தின் உயிர்நாடியை ஒடுக்கிய உண்மையான சாபம் எதுவென்பது உள்ளுக்குள் புரிதலாய் படர – வெளியே வந்து நின்றாள். குளிர் தெரியாத அளவுக்கு உடல் வெம்மையாய் கொதித்தது. இருளில் தெரிந்த ஏரியையும், ஏரியை ஒட்டியிருந்த குடியிருப்பு பகுதியையும் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கையிலிருந்த போன் ஒலிக்க – அதில் எம்டியின் பெயர் ஒளிர்ந்தது. அதை எடுக்காமல் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே வந்து மேசை முன்பாக அமர்ந்து வெகுநேரம் குழப்பமாய் யோசித்து கண்ணயர்ந்தாள்.

டாக்டரிடம் இருந்து போன் வர, திடுக்கிட்டு கண்விழித்து எடுத்தாள்.

“ஸாரி அபர்ணா.. நிறைய ட்ரை பண்ணோம்..பட்..வள்ளிக்கண்ணு.. “

அபர்ணாவுக்கு காது அடைத்து கண்கள் இருண்டது.

எம்டியின் போன் மீண்டும் ஒலிக்க – சுதாரித்துக் கொண்ட அபர்ணா, தீர்மானித்தவளாய் மேசை மீது தான் தயார் செய்து வைத்திருந்த அறிக்கையை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டாள்.

எம்டியின் போனை எடுத்து, “ஸாரி சார், நாம் இங்க மறுபடியும் பேக்டரிய தொறக்கமுடியாது”

“ஏன்?”

அபர்ணா சிறிது நிதானித்து, பிறகு தான் யோசித்து வைத்த காரணங்களை வரிசையாக கூற ஆரம்பித்தாள்.

– ஜனவரி 2021, தினமணிக்கதிர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *