கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 31, 2021
பார்வையிட்டோர்: 5,541 
 
 

முதன் முதலாக அன்று பார்வதி தன் தலைமை உபாத்தியா யருடன் தன் வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தாள். அந்த பள்ளிக் கூடம்தான் அந்த கிராமத்திலே பெரிய பள்ளிக்கூடம். ஆனால் மற்ற பள்ளிக்கூடங்களைப்போல், இதுவும் ஒரு குடிசையிலோ, திண்ணையிலோ அமைத்திருக்கவில்லை. கிராமத்திற்கு வெளியே ஒரு பெரிய தோட்டத்தின் நடுவே, அது அமைக்கப்பட்டிருந்தது. குழந்தை விளையாட வெற்றிடம், நகரத்தின் சப்தமும், கட்டமும் அங்கு எட்டிகூட பார்க்க முடியாது. நாகரீக வாழ்வின் சின்னமாகிய, பஸ், டிராம், இரண்டும் கிடையாது. பணக்காரர்களாக இருந்த ஒரு சிலர் கார் வைத்துக் கொண்டிருந்தனர். அந்த கிராமம் எல்லாவற்றிலும் அலாதியாக இருந்தது. கண்ணுக்கு எட்டியவரை, பச்சை பசேலென்று வயல்கள், நிழல் தரக்கூடிய பெரிய மரங்கள். சில இடங்களில் மரங்கள் அடர்த்தியாகவும், நேர்மையாகவும் இருந்தன. அந்த கிராமவாசிகள், தங்கள் நிலங்களை பாழடைய விடாமல் கண்களைப்போல காப்பாற்றி வந்தனர். எல்லாவற்றிலும் கண்களை கவரக் கூடியதாய் இருந்தது அந்த பள்ளிக்கூடம். படித்து பட்டம் பெற்று பரந்த நோக்கங்களை உடைய சிலர், மரியா மாண்டிஸோரி அம்மையாரின் உபதேசங்களைக் கேட்டும், மேனாட்டார். சிறு குழந்தைகளின் படிப்பையும், மூளை வளர்ச்சியை பற்றி கூறிய உள்ளவகைகளை அடிப்படையாக கொண்டே, இந்த பள்ளிக்கட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நாளடைவில் பள்ளிக் கூடம் விருத்தியடைய ஆரம்பித்தது. வெளி இடங்களிலிருந்து குழந்தைகளும், உபாத்தியாயினிகளும், பள்ளிக்கு வரத்தலைப்பட்டனர். அவ்வாறு வந்தவர்களில் பார்வதியும் ஒருவள். பார்வதி நான்காம் வகுப்பு உபாத்தி யாயினி. அவள் அன்று காலை வகுப்பை அடைந்ததும் மாணவர்கள் யாவரும் எழுந்து நின்று கை குவித்து “நமஸ்காரம்” என்று காலை வணக்கம் கூறினர். தலைமை ஆசிரியர், பார்வதியை அவர்களுக்கு அறிமுகம் செய்து வீட்டு சென்றார்.

பார்வதியும் வகுப்பை ஒரு முறை சுற்றிப் பார்த்தாள். ஒரே ஒரு இடம் தவிர மற்ற இடங்களெல்லாம் நிரம்பியிருந்தது. பெயர்களை வரிசையாக கூப்பிட ஆரம்பித்தாள். ஒரு பெயரை தவிர மற்ற பெயர்களுக்கெல்லாம் பதில் கிடைத்து விட்டது. “யாருக்காவது ஏன் சாந்தா வரவில்லை என்று தெரியுமா?” என்று குழந்தைகளைப் பார்த்து கேட்டாள்.

“அவள் தினம் லேட்டாகத் தான், டீச்சர், வருவாள்” என்று விமலா பதிலுரைத்தாள்.

“அவள் அவளுடைய அண்ணா ஆபிசுக்கு போகும்போது தான் வருவாள்” என்று தொடர்ந்து கூறினாள் விமலா.

பார்வதியும் அதற்கு மேல் பேச்சை ஒட்டாமல் குழந்தைகளை வரிசையாக காலை வணக்கத்திற்கு அனுப்பினாள். மறுபடியும் வகுப்பில் நுழைந்ததும் அவன் கண்களில் பட்டது ஒரு சிறு கூடை நிறைய புஷ்பங்கள். கூடை அவளுடைய மேஜை பின் மீது வைக்கப்பட்டிருந்தது. முன்பு காலியாக இருந்த இடத்திலும் ஒரு சிறு பெண் உட்கார்ந்து இருந்தாள். வசீகரமான முகம், சிவந்த மேனி, அலை அலையாக தொங்கும் கூந்தல். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவளுடைய கூறிய கண்கள் பார்வதியின் மனதில் பதிந்து விட்டது. வாயால் பேசாததை அவன் கண்கள் பேசின. பார்வதியை கண்டதும், சட்டென்று எழுந்து நிற்க முயன்றாள். பிறகு தன் சிறிய கைகளைக் கூப்பி அஞ்சலி செய்தாள்.

“நீ தானம்மா சாந்தா?” என்று பார்வதி கேட்டாள்.

ஆனால் சாந்தா பதிலுரைக்கு முன், “ஆமாம் உச்சர், அவள் தான் நொண்டி சாந்தா” என்று வகுப்பிற்குள் நுழைந்த சங்கரன் கூறினான்.

பார்வதியின் மனது ஒரு வினாடி துணுக்குற்றது. மறு நிமிடம் அவ்வார்த்தைகள் காதில் விழாதவளைப் போல், தன் இருப்பிடத்தை அடைந்தாள். அவள் சங்கரனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. சாந்தாவின் நீர்மல்கிய கண்கள், அவள் முன் தோன்றித் தோன்றி மறைந்தது. முதல் இரண்டு பாடங்கள் முடிவடைந்ததும் மணி அடித்தது.

குழந்தைகள் எல்லோரும் தண்ணீர் குடிக்கச் சென்றனர். சாந்தா மட்டும் இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. இருந்த இடத்திலிருந்தே தன் கையில் உள்ள தண்ணீரைக் குடித்தாள். பின்புறத்திலிருந்து சங்கர் அந்த புட்டியை பிடுங்கி கொண்டு ஓட ஆரம்பித்தான். பாவம், சாந்தா, ஒரு வினாடி மருண்டு போய் விட்டாள். பிறத நொண்டிக் கொண்டே அவனை துரத்த ஆரம்பித்தாள். பக்கத்திலிருந்த சிலர் கை தட்டி சிரித்தனர். இதற்குன் மணி அடிக்கவே பார்வதி வகுப்புக்குள் நுழைந்தான். சாந்தா, சங்கரை பிடிக்க யத்தனிப்பதை பார்க்க அவள் மனம் துடிக்க ஆரம்பித்தது.

“சங்கர் விளையாட்டை நிறுத்து, மணி அடித்தது காதில் விழ வில்லையா?” என்று கோபத்துடன் கத்தினாள்.

சங்கர் அவள் சொல்வதை கேளாமல், “டீச்சர், அவள் ஓடுவதைப் பாருங்களேன், வேடிக்கையாகயிருக்கிறது” என்று சொன்னவுடன், அவள் கோபம் எல்லை கடந்தது. ஆனால் அதை அடக்கிக்கொண்டு, அவனை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, புட்டியை பிடுங்கி சாந்தாவிடம் கொடுத்தாள். ஆனால் அன்று அவளால் பாடம் எடுக்க முடியவில்லை. துள்ளி ஓடும் சங்கரனின் பின்னால் நொண்டி, நொண்டி ஓடின சாத்தாவின் முகம் அவள் முன் நின்று கொண்டிருந்தது. அவள் தேம்பி, தேம்பி அழுதது அவள் காதிலே ஒலித்து கொண்டிருந்தது. சங்கரனை, தண்டனையாக அன்று விளையாட அனுப்பவில்லை.

மாலை வீட்டிற்கு போக மணி அடித்தவுடன், எல்லோரும் வீட்டிற்கு போக கிளம்பினர். சாந்தா மாத்திரம் தனியாக பள்ளிக்கூடத்தின் படிகளில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். பார்வதி அவளை நெருங்கி, “நீ எப்பம்மா வீட்டிற்கு போவாய்?” என்று அன்புடன் கேட்டாள்.” என் அண்ணா வந்ததும் அழைச்சு கொண்டு போவான் டீச்சர்” என்று ஈன ஸ்வரத்தில் பதிலளித்தாள். “எனக்கு இன்று நிறைய பூ கொண்டு வந்தாயே எல்லாம் வீட்டிலே இருக்கிறதா?” என்று கேட்கவே, ” இன்னும்கூட நிறைய இருக்கு டீச்சர்” என்று தன் கால்களை பிடித்து விட்டுக் கொண்டாள்.

“ஏம்மா, காலை வலிக்கிறதா?” என்னுள் பார்வதி அன்புடன்.

“எனக்கு ஓடினால் கால் வாலிக்கும், டீச்சர். இந்த சங்கரன்தான் இப்படியெல்லாம் சொல்லுவான், விளையாட்டில் கூட சேர்த்துக் கொள்ளமாட்டான்” என்று ஏக்கத் தோய்ந்த குரலில் கூறினாள் சாந்தா.

பார்வதிக்கு மனதில், தன் கால்களை கொடுத்து விட்டு, அவள் கால்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தோன்றியது.

“டீச்சர், நான் மட்டும் ஏன் நொண்டியாக பிறந்தேன்?” என்று சாந்தா கேட்டது, பார்வதியை மறுபடியும் இவ்வுலகிற்கு கொண்டு வந்தது.

“அப்படீன்னா பெருமாள் ரொம்ப கெட்டவரா, டீச்சர்?” என்று தொடர்ந்து கேட்டாள் சாந்தா.

“இல்லை, சாந்தா, பெருமாளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். எங்கேயாவது விழுந்து கால ஒடித்துக்கொண்டிருப்பாய். அது இருக்கட்டும், நான் ஒரு கதை சொல்கிறேன், சார் வரும் வரை கேட்டுக் கொண்டிரு” என்று பேச்சை மாற்றினாள் பார்வதி.

***

அன்று இரவெல்லாம், பார்வதி சாந்தாவை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள்.

“தேம்பி அழும் குழந்தை நொண்டி, அதன்மீது இரக்கம் கொள்ளு பாப்பா” என்ற பாரதியாரின் பாட்டு காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது, சங்கரை எப்படி அடக்குவது? அவன் மனதிலே எப்படி அன்பு, தயை, இரக்கம் இவைகளைப் புகுத்துவது என்ற எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் எழுந்தன. கதைகள் ஏதாவது சொல்ல முடியுமா என்று யோசித்தாள். பிறகு சாந்தாவின் மனப்புண்ணை ஆற்றுவதற்கு வழி தேட ஆரம்பித்தாள்.

மறு நாள் சங்கர் வகுப்பிற்கு வரவில்லை. வகுப்பில் சாந்தம் நிலவி யிருந்தது. மற்ற பெண்கள் சாந்தாவுடன் சேர்ந்து விளையாடினார்கள். அவளை மெதுவாக தங்களுடன் சேர்த்துக் கொண்டு பார்வதியின் நல்ல அபிப்பிராயத்தை அடைய முயற்சித்தார்கள். கண்ணன் ஒரு நொண்டிக் கன்றை கையில் தூக்கி சென்ற கதையை சொன்னவுடன் சாந்தா மெய்மறந்து போனான். ஆனால் சங்கரன் மறுபடியும் வகுப்பிற்கு வந்தால் கிளர்ச்சி ஆரம்பிக்கு மென்பதை பார்வதி நன்கு உணர்ந்திருந்தாள். ஒருவாரம் அவன் பள்ளிக்கூடமே வரவில்லை.

மறு வாரம் சங்கர் பள்ளிக்கு வந்த தினம், சாந்தாவின் பிறந்த தினம். அதற்காக வீட்டிலிருந்து தன் வகுப்பில் உள்ள பிள்ளைகளுக்கு, பழங்களும், மிட்டாயும் கொண்டு வந்தாள். சாந்தா சங்கரன் வருவானென்று சிறிதும் எதிர் பார்க்கவில்லை. வகுப்பில் அவனைப் பார்த்ததும் என்ன செய்வது என்றறியாமல் விழித்தாள். சங்கர் ஒவ்வொருவரிடமும் “எனக்கு மிட்டாய் தரமாட்டியா?” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.

திடீரென்று சாந்தா தன் கையிலிருந்ததை அவனிடம் நீட்டினாள்.

“உனக்கு வேண்டாமா சாத்தா” என்று அவன் கேட்டான்.

“எனக்கு ஆத்திலே நிறைய இருக்கு, நீ எடுத்துக்கோ, நீ வருவே யென்று தெரிந்திருந்தால் உனக்கும் கொண்டு வந்திருப்பேன்” என்று சொல்லிவிட்டுப் போனான்.

பார்வதி ஒரு கணம் ஸ்தம்பித்துப் போய் விட்டாள். அவள், சாந்தா, சங்கரனுக்கு ஒன்றும் கொடுக்க மாட்டாள் என்று எண்ணினாள்.

இது நடந்து சில தினங்கள் ஆன பின்பு, ஒரு நாள் பார்வதி வகுப்பிற்கு வந்த பொழுது, அங்கு சங்கர் மாத்திரம் தான் இருந்தான். அவன் சாந்தா இடத்திற்கு பக்கத்தில் இருந்தான். அவன், சாந்தாவின் கணிதப் புத்தகத்திலிருந்து, தன் நோட்டில் சில கணக்குகளை எழுதிக் கொண்டிருந்தான். அவன் பார்வதி வந்ததை பார்க்கவேயில்லை. மும்முரமாக தான் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தான். பார்வதி மெல்ல அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

கணித பாடம் நடத்த வேண்டிய நேரம் மாலையில் வந்தது. எல்லோருடைய புத்தகங்களையும் வாங்கி மேஜையின் மீது வைத்தாள் பார்வதி. பிறகு ஒவ்வொன்றாக திருத்த ஆரம்பித்தாள். சங்கர் மனம், பட, பட வென்று அடித்துக்கொண்டது. டீச்சர் ஒரு வேளை கண்டு பிடித்து விட்டால் என்ன செய்வது என்று திகிலடைந்தது அவன் மனம். எழுந்து சொல்லிவிடாலாமாவென்று எண்ணினான். ஆனால் மறு கணம் பின் வாங்கினான். பிறகு மனதை ஒருவாறு தைரியப்படுத்திக்கொண்டான். டீச்சர் கேட்டால், சாந்தா தான் தன்னைப் பார்த்து காப்பி அடித்தாள் என்று சொன்னால் போச்சு என்று எண்ணிக் கொண்டான். அவனுடைய குழந்தை மனம் பொய் சொல்லாதே, திருட்டு காரியம் செய்ததே பெரிய தப்பு என்று பறை சாற்ற ஆரம்பித்தது. சங்கரன் புஸ்தகத்தை பார்வதி கையில் எடுத்தாள். அவள் கண்கள் ஆச்சரியத்தினால் அகல விரிந்தன. சாந்தாவின் கணக்கு வேறு விதமாக செய்யப்பட்டிருந்தது. இரண்டு புத்தகங்களையும் எடுத்து தனியாக வைத்து விட்டு, மற்றவைகளை திருத்தினாள். மணி அடித்து வகுப்பு கலைந்ததும், பார்வதி, சாந்தாவையும், சங்கரையும் பின் தங்குமாறு ஜாடை செய்தாள். சங்கர் பயந்து போய் விட்டான். கண்களில் நீர் தளும்ப ஆரம்பித்தது. சாந்தா சொல்லி விட்டாளோ என்று பயந்து போனான். சாந்தா அவன் கையைப் பிடித்து அமுக்கி “பயப் படாதேடா, நான் என் கணக்கை யெல்லாம் மாற்றி விட்டேன்” என்று அவன் காதில் சொன்னாள்.

“நிஜமாவா சாந்தி?” என்று அவனை அறியாமல் உரக்க கூவினான் சங்கர். பார்வதி இருவரையும் கூப்பிட்டு காலையில் தான் பார்த்ததை கூறி, உண்மையை வினவினாள்.

சங்கர் மௌனம் சாதிக்க ஆரம்பித்தான். ஆனால் சாந்தாவோ துளிக்கூட பயப்படாமல் “இல்ல டீச்சர், நான் முதலில் ஒரு மாதிரியாய் கணக்கு போட்டிருந்தேன். அப்புறம் அதை மாற்றி வேறு விதமாக்கினேன்” என்றாள். சங்கரின் மனம் குழைந்தது.

தன்னை காட்டி கொடுக்காமல் ஒரு பொய் சொல்லி மறைப்பதை அவன் மனம் ஒப்புக்கொள்ள வில்லை. உடனே தன் கைகளைக் கூப்பி, “டீச்சர், நான் தப்பு பண்ணிவிட்டேன், இந்த தடவை மன்னித்து விடுங்கள், இனிமேல் நான் செய்ய மாட்டேன். சாந்தா இவ்வளவு நல்லவள் என்று எனக்கு தெரியாது” என்று அழாக்குறையாகச் சொன்னான்.

பார்வதி இரண்டு பேருக்கும் நல்ல புத்தி சொல்லி வீட்டிற்கு அனுப்பிவிட்டு, அவர்களைப் பின் தொடர்ந்து நடக்கலானாள். பள்ளிக் கூட வாயிலில், சங்கர் சாந்தாவின் பையை கையில் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். சாந்தா தன் பின்னலை சரிப்பண்ணிக் கொண்டிருந்தாள்.

சங்கர், “சாந்தி இனிமேல் என்னோடுகூட விளையாடுகிறாயா, நான் உன்னை பரிகாசம் செய்ய மாட்டேன், என்ன, சாத்தி?” என்று சொல்லிக்கொண்டு போனது, பார்வதி காதில் விழுந்தது.

உல்லாசமாக, தன் அழகிய தலையை ஆட்டிக்கொண்டே, “நீ சேர்த்துக்கொண்டால் தினம் வருவேன் ” என்று சாந்தா மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.

இவர்களின் குழந்தை உள்ளத்தின் போக்கை கண்டு மெய்மறந்து நின்றாள் பார்வதி.

– பாரிஜாதம் 1950

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *