கோழிகுழம்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 5,426 
 

சே என்ன வாழ்க்கை,மனிதர்களிடையே வாழ்வது என்பது நமக்கு தொல்லைதான்,

நன்றியுள்ளவன் என்று சொல்லியே நம்மை வசப்படுத்தி வேலை வாங்கிக் கொள்கிறான், உடன் இருந்த நண்பனிடம் வாலை ஆட்டிக்கொண்டே புலம்பினேன்.

அப்பனே புலம்பாதே, நாமாவது கிராமத்தில் தெருவில் வசிக்கிறோம், நகரத்துக்குள்

நம் இனத்தார்கள் மிகவும் கேவலப்பட்டு கிடக்கிறார்கள். பணக்காரர்கள் வீட்டில் வசிக்கும் ஒரு சிலர் மட்டுமே நன்றாக இருப்பதாக கேள்வி. தெருவில் வாழ்வதால் நம்மை சாதாரணமாக நினைத்து விடாதே.

உண்மையில் மனிதனுக்கு நம்மை கண்டால் மிகவும் பயம். அதுவும் கிராமத்தில் மிக அதிகம். எப்படி சொல்கிறேன் என்கிறாயா? இரவு ஏதாவது ஒரு மூலையில் நின்று ஊளையிட்டு பார், அவ்வளவுதான், அந்த தெருவே அல்லோகலப்பட்டுவிடும், போச்சு இந்த தெருவுல யாரோ ஒருபெரிசு மண்டைய போடப்போகுது” இப்படி புலம்ப ஆரம்பித்து விடுவார்கள். அது மட்டுமல்ல பேய் பிசாசுகள் நம் கண்ணுக்கு மட்டும் தெரியும் என்ற ஒரு நம்பிக்கைகூட அவர்களுக்கு உண்டு.

இப்படி நம்மை கண்டு மிரளுபவர்கள், கல்லால் அடித்து துன்புறுத்துவது ஏன்?

நாம் மட்டும் என்ன ஒழுங்கா? சும்மா போகும் எத்தனை பேரை விரட்டுகிறோம், அதுவும் அப்பிராணியை போல் இருக்கும் மனிதர்களை கண்டால் நம்முடைய வீரத்தை எப்படி காட்டுகிறோம்.

சரியப்பா இப்பொழுது பசிக்கிறது, நாம் சாப்பாட்டுக்கு என்ன செய்யப்போகிறோம், மதியம் வந்தாலே நமக்கு சாப்பாடு கிடைப்பது மிகவும் கஷ்டமாகிவிடுகிறது.

அவசரப்படாதே இன்று நமக்கு கோழிகுழம்பே கிடைக்கும் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது.

பேசாதே, “ராஜாவுக்கே மஞ்ச சோறுதானாம்”, ராணிக்கு பால்சோறு கேக்குதாமா? என்ற பழமொழி மனிதர்களால் பேசிக் கொள்வது போல இருக்கிறது நீ பேசுவது, சோத்துக்கே வழி இல்லை, இதில் கோழிக்குழம்பு கிடைக்கும் என்கிறாய்?

“உழவில் கிடைக்கும் நெல் யாரோ ஒருவன் வயிற்றுக்கு போகிறதே, அது யாருக்கு என்று நம்மால் சொல்ல முடியுமா? அது மாதிரிதான் இதுவும், சற்று பொறு நான் சொன்னது நடக்குதா என்று பார்க்கலாம்!”, யோசனையில் அப்படியே சுருண்டு படுத்துக் கொண்ட நண்பனுடன் நானும் அருகில் சென்று படுத்துக்கொண்டேன்.

செல்லம்மா செல்லம்மா, என்னாடி கூப்பிட்டுகிட்டே இருக்கேன் நீபாட்டுக்கு அங்கிட்டும், இங்கிட்டும் என்னத்தையோ துழாவிக்கிட்டு இருக்கே?

ராசக்கா என்ற சேவ குஞ்ச காணோம், இங்கனதான் திரிஞ்சுகிட்டு இருந்துச்சு, பரப்பிபோட்ட கதிருகளை கொத்துதுன்னு முடுக்கி கொஞ்சதூரம் விட்டுட்டு வந்தேன், சரி நேரமாகுதே, தீனி போடலாமுன்னு தேடிகிட்டு இருக்கேன், அத காணலை, அதான் தேடிகிட்டு இருக்கேன். என்னக்கா விசயம்?

ஒண்ணுமில்லை ரேசன் கடையில மதியம் மேல அரிசிபோடறாங்கலாம், நீ வாங்கினயினா எனக்கு அஞ்சு கிலோ எடுத்துவையி.

அதுக்கென்னா நான் போனா வாங்கி வச்சிருக்கேன், சொல்லிக் கொண்டே அவள் சேவலை தேட ஆரம்பித்தாள். ஏ..ப்ப்ப்பா.. ப்ப்பா. .க்.. கொக். .க்..கொக்.. எங்க போச்சு இந்த சனியன் !

ராசக்கா செல்லம்மாவையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள், மறந்துடாதே, சொல்லிக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.

தெய்வாத்தா வீட்டை தாண்டியவளுக்கு அந்த வாசம் சட்டென நிற்கவைத்தது

ஏ தெய்வத்தா..

போச்சு இந்த கிழவி வாசல்ல வாசம் புடுச்சிட்டான்னு நினைக்கிறேன், இனி அவ்வளவுதான், கண்ணெல்லாம் கொள்ளிதான், புலம்பியவாறு வெளியே வந்த தெய்வத்தா

வெளியே ராசக்காவை பார்த்தவுடன் ராசக்கா ஏது இந்தநேரத்துல இந்த பக்கம்?

அதை நான் கேக்கோணுண்டி, மதியத்துல தோட்டத்துல இல்லாம வீட்டுல என்ன வேலை?, கறிக் குழம்பு வாசம் மூக்கை தூக்குது. என்ன கோழியா? காடையா?

நேத்து எங்க அம்மா வீட்டுக்கு போயிருந்த என் வீட்டுக்காரரு கிட்டே என் அம்மா கோழிகுஞ்சு ஒண்ணு கொடுத்து விட்டுச்சு, அதை அடிச்சு குழம்பு வச்சு என் வீட்டுக்காரருக்கு கொண்டு போலாமுன்னு வீட்டுக்கு வந்தேன்.

ஆமா நீ எதுக்கு இந்த வெயிலுல ஊருக்குள்ள உலாத்திகிட்டு இருக்கறே?

செல்லம்மா கிட்டே ரேசன் கடையில அரிசி வாங்கிதர சொல்லிட்டுவந்தேன். வாரேன்,

வீட்டை தாண்டி நடந்தவள் மனதுக்குள் ஒரு பட்டிமன்றம்நடக்கஆரம்பித்தது. செல்லம்மா

அங்க சேவகுஞ்ச தேடிகிட்டு இருக்கா? தெய்வத்தா என்னடா என்னைக்குமில்லாம இன்னைக்கு கோழிகுழம்பு வச்சிருக்கா? தெய்வத்தா பக்கத்து தோட்டம் வேற? ம்ம்ம்.. மனதுக்குள் முணங்கிக் கொண்டு நடந்தவள், நின்று யோசித்தாள். சட்டென திரும்பி செல்லம்மா வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

ஏய் தெய்வத்தா ஏய் தெய்வத்தா ….ஆங்காரமான குரலை கேட்டு தெய்வத்தா வேகமாக வெளியே வந்தாள்.

யாருடி இந்த கூப்பாடு போடறவ?

நாந்தாண்டி ஆமா உன் வீட்டுல இன்னைக்கு என்ன குழம்பு வச்சிருக்கே?

என்ன மரியாதை குறையுது, என் வீட்டுல என்ன குழம்புவச்சா உனக்கென்னடி? அதை என் வீட்டு வாசலிலே வந்து நாய் மாதிரி கேக்கறே?

ஆமாண்டி நான் நாய்தான், அடுத்தவன் வீட்டு சேவலை திருடிகிட்டு வந்து குழம்பு வச்சா நாய்தாண்டி வந்து கேக்கும்.

அடுத்தவன் வீட்டு சேவலை திருடி திங்கற அளவுக்கு நாங்க ஒண்ணும் வக்கத்து போயிடலை.

உனக்கு வேணா அந்த மாதிரி பழக்கம் இருக்கலாம், எங்க குடும்பத்துக்கு அந்த பழக்கம் எல்லாம் கிடையாது.

உன் குடும்பம் ரொமப யோக்கியம், என் வீட்டு சேவலை காணொமுன்னு தேடிகிட்டு இருக்கேன், இங்க வந்து பாத்தாதான தெரியுது, கண்டநாய் என்வீட்டு சேவலை திருடி குழம்பு வச்சு தின்னுதுங்கண்ணு.

இங்கபாரு செல்லம்மா, உன் வீட்டு சேவல் காணொமுன்னா அதை வேற எங்கியாவ்து போய் தேடி பாரு, அதை விட்டுட்டு என்வீட்டு வாசலிலே வந்து நாய் மாதிரி குலைச்சுட்டு இருக்காதே. இது என்ர வீட்டுல இருந்து எங்க வீட்டுக்காரங்கிட்ட கொடுத்து விட்ட கோழிகுஞ்சு..அதை நான் அடிச்சு குழம்பு வப்பேன், இல்லே சும்மாகூட வச்சுக்குவேன்.

ஏய் சும்மா சும்மா பொய்யை பேசாதடி, என் சேவலை அடிச்சுதின்ன உன் குடும்பம் நாசமாய் போயிடும், உன் குடும்பமும் விளங்காம போயிடும். மண்ணை வாரி தூற்றினாள்.

தெய்வத்தாளுக்கு அழுகையும் ஆங்காரமும் வந்தது.

காட்டு கத்தலாய் கத்திக் கொண்டு இருக்கும் செல்லம்மாவிடம் எது சொன்னாலும் எடுபட போவதில்லை. வேகமாக உள்ளே போனவள் ஆவி பறந்து கொண்டிருந்த சட்டியை துணியை சுற்றி எடுத்து வந்தவள், அதை அப்படியே தெருவில் போட்டு உடைக்கிறாள்.

சட்டி உடைந்து உள்ளிருந்த அத்தனை குழம்பும், கறியுடன் வெளியே வந்து விழுந்தது.

ஆங்காரத்துடன் சொன்னாள் தெய்வத்தாள். இது என் அம்மா கொடுத்து விட்ட கோழி அடிச்சுவச்சு செஞ்சகுழம்பு, ஆனா உன்னைய மாதிரி நாய்க பேச்சை கேட்டு இதை சாபிட்டா என் குடும்பம் நாசமாயிடும். அழுகையுடம் வீட்டுக்குள் ஓடிவிட்டாள்.

செல்லம்மா அப்படியே ஆடிப் போய்விட்டாள்,

தெய்வத்தாள் இப்படி குழம்பு சட்டியை கொண்டு வந்து வீதியில் போட்டு உடைத்து விடுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. அடுத்து என்ன பேசுவது என்று அவளுக்கு புரியவில்லை, மெல்ல தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

அவள் வீடு அருகில் சென்ற போது பின்புறம் போட்டிருந்த ஒரு ஓலை தடுப்புக்கு பின்னால் இருந்த சேவல் க்க்ப்க்,,க்..கொக்….சத்தமிட்டுக் கொண்டே கம்பீரமாய் அவளை பார்த்து வந்து கொண்டிருந்தது.

குழம்பின் ருசி எனக்கும், என் நண்பனுக்கும் ஓஹோவென இருந்தது.

ருசித்து சாப்பிட்டோம். அதே நேரத்தில் வாசம் கண்டு இன்னும் நான்கைந்து தெரு நண்பர்கள் வருவதற்குள் காலி செய்ய வேண்டி வேகுவேகு என்று விழுங்க ஆரம்பித்தோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *