கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 6,119 
 
 

நாட்பட்ட உந்துதல் தாளமுடியாமலேதான் வரைபலகையையும் தூரிகையையும் எடுத்தான். உந்துதல் என்றால்,ஒருநாள் இருநாள் உந்துதல் அல்ல. கிட்டத்தட்ட ஏழு வருட உந்துதல். இன்றைக்கு உச்சியிலும் மறுநாள் கிடப்பிலும் என்று காண்புகட்கேற்ப, நினைவில் நுரைத்து வடியும் உந்துதல். வீடுகூட்டும் தும்புக்கட்டைகூட, அந்தச் சீனத்து எழுத்தோவியனின் தூரிகையோட்டத்தை எழுப்புவதுண்டு. சொல்லப்போனால், ஒழுக்கிலே இலயித்து நகரும் நதியும்கூட.

செஞ்சீனத்துச் சைத்திரீகனின் கைவிரல்களின் துடிப்பையும் தூரிகையின் துரிதத்தையும் மட்டுமாவது, ஒரு தளக் கடதாசியிலே ஏற்றிவிடவேண்டிவிட விரும்பித்தான், இத்தனை நாட்பயிற்சியும் நீர்வண்ணமும் வரைபலகையும்.

அன்றைக்கு மாலை அவன் புகைப்படக்கருவியைக் கொண்டுபோயிருக்கவில்லை; ஆரம்பத்திலே, அதற்காக கவலைப்பட்டான்;

நான்ஜிங் நகர புழுதிவீதிகளிலும் யான்ஸி ஆற்றுக்கும்மேலாக புகைப்படக்கருவியை எடுத்துக் கொண்டு எப்போதும் போகின்றவன், அன்றைக்கு மழையை எண்ணிக் கொண்டு கொண்டுபோகவில்லை. பிரமாண்டமான பாலத்தின் மேலிருந்து அகண்ட மஞ்சளாற்றிலே, ஆற்றுமணல் அள்ளிக்கொண்டு போகும் சுமைக்கப்பல்களிலே மழைத்துளிகள் விழுகின்றதைப் பார்க்கும்போது, தனக்குள் ஏற்படும் ‘நான்மட்டுமே இதைக் கண்டேன்’ திருப்தியை நோக்கிப் போனவனுக்கு, ‘பங்பூ’ நகரத்து நாடோடிச் சீனத்து எழுத்தோவியனும் நனைந்துகொண்டு வந்து அருகிலே நிற்பான் என்று என்று தெரிவதற்கு நியாயம் இல்லைத்தான்.

ஆமையோட்டத்தில் மூங்கிற்குழல்களிலே நெளிபாம்பாய் ஊர்ந்த விரல்களின் நர்த்தனத்தைப் புகைப்படம் எடுத்திருந்தாலும்கூட, அந்த வரைதலின் நேர்த்தியினை கருவி அழகுப்புலனற்று சடமாகவே உள்வாங்கியிருக்கும் என்று பின்னர் தோன்றியது; கிட்டத்தட்ட கருவி ஒரு கட்டிடவரைஞனின் தொழிலையே செய்திருக்குமேயொழிய, கலைஞனினதினை அல்ல….. மூங்கிலிலே இவன் பெயரைப் பொறித்த ஓவியத்தை இவனால் கடைசி நேரத்திலே ஓவியனிடமிருந்து வாங்கிக் கொள்ளமுடியவில்லை. எல்லா ஓவியர்களையும் இவன் தான் கலைஞன் என்று எண்ணிக்கொண்ட வரையறைக்குள்ளே இட்டுக் கொள்ளமுடியாது என்று கற்றுக்கொண்டதும் அந்த யாங்ஸி ஆற்றுமழைக்குட்தான். ஓவியன், இத்தனை ‘யுவான்’ வைத்தாற்றான் ஓவியத்தைத் தரமுடியும் என்று சொல்லிவிட்டான். ஒரு மூன்றாம் உலகப் புலமைப்பரிசல் மாணவனுக்கு நிச்சயம் ஓவியத்தை மீறிய உடற்தேவைகள் உண்டு, ஒரு சீனத்துக் கிராம ஓவியனுக்குள்ளதுபோலவே….

ஓவியத்தை வாங்கமுடியவில்லை; அதே நேரத்திலே ஓவியனின் கட்டுப்படா விரலசைவும் தூரிகையும்கூட அவன் மனதிலே மழைக்கால இலையிலே தலையும் வாலும் குத்தி ஒட்டி குத்துக்கரணம் அடிக்கும் மயிர்க்கொட்டியின் அசைவுகளிலும்கூட கண்ணிற்பட்டு அழுத்திக்கொண்டிருந்தது. நதியிலே புதைந்த பெருந்தேர்போல, சில கணங்கள் மின்னிமுடிந்தும் வருடங்களுக்கும் நினைவிலிருந்து அசைவதில்லை; இ·து ஒரு பொழுது-அ·தொரு பொழுது என்று நெஞ்சுக்குள்ளே, “இந்தா பார்; இன்னும் இருக்கின்றேன் உன்னுள் நான்” என்று அங்குசத்தால் நிமிண்டிக்கொண்டே இருக்கின்றன.

நிமிண்டல், சுகத்தை மீறி சொறியாகிப் போகும் நிலை வந்தபோதுதான், தானே அதை ஒரு தாளில் தூரிகையால் இறக்கினால் என்ன என்று தோன்றியது. அவன் முறைப்படி ஓவியம் கற்றுக்கொண்டதில்லை; ஓவியம்தான் என்றில்லை, சிற்பமோ, அல்லது சங்கீதம்கூடவோதான்.. ஆனால், முறைப்படி கற்றுக்கொண்டுதான்பாட்டிலே பேர் பெறவேண்டும் என்றில்லையே; முறைப்படி கற்றுக்கொள்வது பாடுவதைச் சுலமாக்குகின்றது. பழைய பாட்டைகளின் முகவரிகளை வரிசையாகச் சொல்லிக் கொடுக்கின்றது; ஆனால், புதியவழியையும் போய்ச்சேர்தலையும் பாட்டுக்காரன் தன் திறமையிலும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்திலுமே கண்டுகொள்ளலாமேயொழிய, குருவின் சங்கீதஞானத்தை நம்பி அல்ல என்ற எண்ணமே அவனை ஓர் ஓவியனாக -குறைந்த பட்சம்- ஓர் ஓவியனின் கையின் தாளம் தப்பாத சங்கீதத்தை பொறிவைத்துச் சிக்குப்படுத்தும் ஓர் ஓவியனாக முயலச்சொன்னது; செய்தது.

ஐந்து ஆறு வயதுகளிலே நிரையவே கிறுக்கியிருக்கின்றான்; அதன் பின்னர், பொறியியற்கல்வியின் ஆரம்பத்திலே அவன் பொறிமுறைவரைதலிலே, இயந்திர உதிரிப்பாகங்களின் பன்முகத்தோற்றத்தைக் கோடுகளாக உள்வாங்கியிருக்கின்றான்; ஆனால், அவை வெறும் இயந்திர உதிரிப்பாகங்கள்; திருகாணி, சுரை, புரி,பொருத்தி, மூட்டுக்கள், கப்பி…. சடங்கள் கோடுகளில் வட்டங்களாகவும் நீள்வளையங்களாலும் நீள அகல உயர்வு அளவுகளை தோற்றுவிக்கப்படக்கூடியவை; ஆனால், உயிர்களின் இயல்புகள் அப்படியல்ல; ஓர் இறந்த சிறுசிலந்தியை எறும்புகள் காவிக்கொண்டு செல்லும் காட்சிகூட, கோடுகளின் மூன்று நீட்டலலகுப் பரிமாணத்துள் அடங்காதது…கோடுகளினாலே அளந்தளந்து வரைந்து முடித்தபின்னும், காட்சி தோன்றாமல், கோடுகள் மட்டும் நீட்டித்துருத்திக்கொண்டு… ஒழுங்கான பல்வரிசையிலோடுலாவும் ஒரு தெற்றுப் பல்லுப்போல…எத்தனை எத்தனிப்புகள்… ஓவியனின் விரல்களையல்ல, அதன் நகங்களைக் கூட அவனுக்குக் கோடுகளால் நகர்த்தமுடியவில்லை…. ‘கும்பிட்டுக்கொண்டிருக்கும் காய்ந்த நட்புக்கை’யை வரைந்த ஓவியனைப் பற்றி வியந்துகொண்டான்; அந்த வியத்தல்கூட முதற்தடவையல்ல. வரையத்தொடங்கும்போதுதான், வரைந்தவர்களின் விரல்களைப் போற்றத்தோன்றுகின்றது. கண்ணுக்குள்ளே அப்படியே நிற்கின்றன சீனத்தோவியனின் விரல்களும் முற்றிய மூங்கிஏகுழல்களும் தூரிகையும் மழையும் வர்ணங்களும் இவையனைத்தும் ஒட்டி ஒன்றாயாடு அசைவுத்தொகுதியும்….அவன் விரல்கள் மட்டும் எதையும் எடுத்து ஒன்றாயிழுந்து விழுத்த மறுத்தன. நினைவில் ஒவ்வொன்றாய்ப் பாகம் பிரித்து முன்னைப்பதிவை சிற்றமையங்களின் தொகுதியாக்கி, ஒவ்வொரு அமையத்தையும் விரற்கட்டைகளிலேவரைகோலை வைத்து, அளவைக்குட்படு கோடுகளாய் மாற்றமுயன்றான்; கோடுகளை குறுக்கும் நெடுக்கும் வரைகோலைச் சாய்த்துச்சாய்த்து காகிதத்தைத் தொட்டும் தொடாமலும் உருவெழுப்ப முயற்சித்தான். அங்குமிங்கும் நினைவிலே துருத்தித் தள்ளியவற்றுக்கு முதன்மை செய்து காகிதத்திலே இடம்பெயர்த்தான். காற்றிலோடும் செறிவற்ற மேகக்கூட்டம்போல திட்டுத்திட்டாக பரவிப் பெருகின காகிதத்திலே கோடுகள்….. ஆனாலும், அதிருப்தி மட்டும் அழிப்பானைப் போட்டுத் தேய்த்துத் தேய்த்து அழுக்குருளைத் தூளாய்த் தள்ளியது. இவன் தன் விரல்களினை நொந்துகொண்டான். கோணல்மாணக் கோடுகள் உருக்களைப் பெற்றுத்தள்ளின; முறிந்தகோட்டு மழை, வளைகோட்டுப்பாலம், சுருள்கோட்டு ஓவியன்சிகை, நெளிகோட்டு மண்ணிற ஆற்றுநுரை….கோட்டுப்பொறிமுறைவரைதல்… குளிர்மழையைக் காணவில்லை. புகையிரதம்போக அதிரும் பாலம் செத்துக் கிடந்தது; ஓவியனின் விழிகளிலே தெரிந்த அவனின் விரல்களின் தாளமோ, பனிக்கு விறைத்துச் செத்த தெருநாயின் கண்களுக்கு ஒப்பான நிலைகுத்திய நிர்ச்சீவனத்தன்மையிலே இரட்டை முற்றுத்தரிப்புப் புள்ளிகளுக்குப் பின்னால் தென்படாது தொலைந்துகிடந்தது.

ஆனாலும், தன் விரல்களை அந்த சீனத்தோவிய விரல்களை வடிக்க அவன் போராடிக்கொண்டிருந்தான். போராடுதல் என்பதும் போய்ச்சேர்தல் என்பதின் ஒரு படிதான்; விழிகளுக்கும் மூளைக்கலங்களுக்குமிடையிலே போய் வருகின்றதை, விரல்களுக்கிழுத்து படியவைத்தலும் ஒரு போராட்டம்தான். ஆயாசத்திலே கதிரையிலே சாய்ந்தான்; விழிகள் குத்திட்டு வரைபலகையிலே நின்றன. கோட்டோவியனின் முன்னால், இவன்போய் உருச்சுருங்கி நின்று, ‘வா’ என்று கேட்டான்; மழையிடமும் மல்லுக்கட்டி, பாலத்தை விழிகளினாலே எறியத்துள்ளே எடுத்துக்கொள்ள முயன்றான்…. அங்கிருந்தே, யாங்ஸி ஆற்றுக்கு முன்னால், வெளியிலே மழையையும் படகையும் பாலத்தையும் விரல்களையும் சட்டத்துள் அடக்கி, ஊஞ்சலாட்டிப் பார்த்துக்கொண்டான்….மனைவி வந்து குரலை விட்டு வெளியே இழுத்துப்போட்டாள்; நினைவோடு உடலைச் சுற்றி உறுஞ்சிய அவள் நாவுடன் சட்டத்துக்குள்ளிருந்து அதன் முன்னால் வந்து மூன்றாம் மனிதனான் அவன்.

“உங்கள் நண்பர் கலாநிதிப் பட்ட ஆய்வு நேற்று முடித்து விட்டாரம்; வரும்வாரம் ஊருக்குப் போகிறாராம்;அதற்குமுன்னால், தொலைபேசியிலே பேசும்படி கூறினார்” – சொன்னாள்.

சிறுவயதுமுதலே ஒன்றாக பொறியியல் இளமாணிப்பட்டம் வரை படித்தவன்; இவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது; இப்போதே தொலைபேசியிலே அழைத்துப் பாராட்டவேண்டும் என்று போனான். பாராட்டி முடிந்து வந்தபோது, மனைவி இவனது ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்திலே துயரும் தொனிப்புக்காட்டியது. அவள் வருத்தம் இவனுக்குப் புரியும்; ஏழு வருடங்கள் இங்கும் அங்கும் இதே கலாநிதிப்பட்டத்துக்காகத் தாவிக் கொண்டிருக்கின்றான்; அதைப் பொறுப்பாக கவனம் வைத்துக் கற்றிருந்தால், ஒரு மூன்று வருடங்களின் முன்னரே இதே கலாநிதிப்பட்டம் ஒட்டிக்கொண்டிருக்கும். இவனுக்கும் அந்தக்கவலை இல்லாமல் இல்லை; ஆனால், அவனைத் தவிர எவனை நோவது? அவள் சத்தத்தைக் குறைத்து தனக்குத்தானே கேட்பாள்போலக் கேட்டாள்; “பயனற்ற விரல்களைக் கிறுக்கிக் கொண்டிருப்பதிலும் விட, பொருளாதார அழுத்தத்தை நினைவிலே கொண்டு, கற்கையினை முடிப்பது மேலல்லவா? விரல்களை உங்கள் விரல்கள் இயங்கிக்கொண்டிருக்கும் காலம் வரைக்கும் கிறுக்கமுயற்சிக்கலாம் என்பது கூடவே இத்துணை பெரியமனிதனுக்குத் தெரியாது போய்விடும்? வெறும்கோடுகள் மட்டும் எமது எதிர்காலத்திற்குப் பாதை காட்டும் என்றா எண்ணுகின்றீர்கள்?”

ஆனாலும், இவனிடம்தான் கேட்டாள்.இவன் கத்தினான்; ” விரல்களைக் கோடுகளாகக் காட்ட எத்தனையோ உடற்கூற்றாளிகள் பிறக்கலாம்; ஆனால், நான் முயற்சிப்பது விரல்களின் நடையைப் பதிவு செய்துகொள்ள… காகிதத்திலே விரல்களின் நாட்டியத்தை……”

விரற்சந்துகளிற்கு இடைப்பட்டுத் தூங்கிய வரைகோலை வெளியிலே தூக்கி காற்றை குறுக்கும் நெடுக்கும் வெட்டி வெட்டிக் கதைகூறினான். தன் இயலாமையிலும் குற்றத்திலும் பேசுகின்றவன் இப்படித்தான் பேசமுடியும். அவள் வருத்தப்பட்டுக்கொண்டாள்;

“விரல்கள், விரல்கள்,விரல்கள்!! இப்படியா ஒருவன் விரல்களிலே நாட்பொழுது, நிலை எல்லாம் மறந்து நினைவழுந்திக் கிடக்கமுடியும்?”

இப்போது அவள் கண்களிலே இவன் எதிர்காலத்தைப் பற்றிய பயம் வந்து விழுந்துகிடந்தது.தன்னால் எப்போதாவது இயலக்கூடியதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்கின்றார்கள் இல்லையே என்று எண்ணுகின்றவனும்கூட இதே தன் செய்கையை நியாயப்படுத்தும் இயல்பினைக் காட்டக்கூடும் என்று பதிலுக்கு இவன் அவளை அமைதிகொள்ளச் செய்ய பேசினான்; ஆனாலும், குழந்தை வளர்ப்பைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதிய ரூஸோவின் குழந்தைகள் வளர்ந்தநிலைதான் இவனுள்ளே நினைவிலே படர்ந்தது.

அவள் மேலும் ஏதோ பேச முயன்றாள். இவன் அது தன் காதிலே விழக்கூடாது என்பதாகவோ தன்னை நியாயப்படுத்தவோ, நேரத்தைச் செலவுபண்ணி ஓவியவிரல்களைப் பதிவு செய்ய முயன்ற காகிதத்தை தன்விரல்களுக்கு அகப்பட்ட துரித இலயத்திலே கிழித்து வரவேற்பறை முழுக்கத் தூவி விட்டு, படுக்கையறைக்குள்ளே அவளின் பொறுமையின்மையினையும் கலையுணர்வின்மையையும் வைது கொண்டு நுழைந்து கதவை அடித்துச் சாத்தினான். அவள் அழுவது அவன் நிதானத்துக்கு வந்து தூங்கிப் போகும்வரைக்கும் கேட்டது.

எவ்வளவு நேரம் தூங்கினோம் என்றறியாது, எழுந்து அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தபோது, அவள் இந்தப்புறத்துக்கு முதுகைக்காட்டியபடி, சீனத்தோவியனின் கிறுக்கல்விரல்களைக் கிறுக்க முயன்றது கிழித்துப் போட்டதைச் சேர்த்தெடுத்து ஒவ்வொரு துண்டாக இருக்கவேண்டிய இடத்திலே பொருத்தி ஒட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. சத்தம்போடாமல் பூனை அடியடி வைத்துப் பின்னால், போய் நின்று பார்க்கும்போது, மழைத்துளிகள் ஈரம்கொண்டு காகிதத்தை நனைத்திருந்து தெரிந்தது; படகுகளின் அழுக்குப்படுதாக்களிலும்கூட ஆற்றுநீர்த்தெறிப்பு . சீனத்து ஓவியனின் விழிகளிலே நீர்ச்சலனம் தெரியத் தெரிய, விரல்களினால் மூங்கிலிலே நீர்த்தூரிகையால் விடாது ஓவியனின் உளப்பாரம் இறக்கத் துழாவிக் கொண்டிருந்தான்.

*****

இனி ஒருகாலத்திலே எத்துணை பாராட்டும் புகழ்த்துணுக்கும் ஓர் விரலின் சலனத்தைப் பதிவுசெய்த ஓவியன் என்று கிடைக்கக்கூடும் என்றானாலும்கூட, அதை விட தன் இயலாமையோடும் சுய அங்கீகரிப்பின்மையோடும் போராடி, இன்றைக்குத் தெளிவற்றுக் கிறுக்கும் அவனிலே உள்ளூரத் திடநம்பிக்கை கொண்ட ஒருத்தியின், அந்த ஒரே ஒருத்தியின் நீர்க்கறை பொருந்திய விழிகளின் துடிப்பையும் பயத்தையும் பாதுகாப்பையும் என்றைக்காவது நான், எனது தனித்தன்மையான நீட்டலளவுக்கப்பாற்பட்ட கோடுகளிலே வடித்தெடுப்பேனாயின், அதுவே -அவளுக்குப்பின்னர்- என் ஓவியத்திற்குக் கிடைக்கும் ஒப்பற்ற பரிசென்று கருதுவேன். அதுவரை எந்நிலையும் என் கோடுகளுள் எனக்கும் புரியாமலே தொலைந்தவனாக மட்டுமே நானிருப்பேன்.

– ‘சித்தார்த்த “சே” குவேரா’ (ஆடி 2000)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *