கொல்லி வாய் பிசாசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 6,000 
 
 

வன்னியில் மணியம் குளம்., அக்கராயன் குளத்துக்கு மேற்கே, அடர்ந்த ஈச்சம் காட்டைத் தழுவிய ஒதுக்குப் புறக் கிராமம். அக்கிராமத்தின் மேற்கு திசையில் உள்ள; அடர்ந்த காட்டில் சடைத்து வளர்ந்த முதிரை, கருங்காலி, பாலை, காட்டு வேம்பு மரங்களுக்கும் ஈச்சம் பற்றைகளுக்கும் குறைவில்லை.. அந்த மரங்களின் அடர்த்தியான மரச் சோலையில் ஒரு வைரவர் கோவில். அக்கோவிலுக்கு இரு நூறு யார் தள்ளி ஒரு சுடலை. அதில் தகனத்துக்கு முன், பிரேதத்தைவைத்து கிரிகைகள் செய்வதற்கு சரிந்த நிலையில் ஓரு கொட்டில். அந்தச் சுடலை, மணியம் குளம் வாசிகளினதும். அருகில் உள்ள கிராம வாசிகளினதும் இடுகாடாக இருந்தது அந்த சுடலைக்கு வைரவர் காவல் தெய்வம் என்பதால் அவருக்கு “சுடலை வைரவர்” என்று நாமம் சூட்டி, அடிக்கடி பொங்கி படைப்பார்கள் ஊர் வாசிகள்.

வைரவர் கோவிலுக்கு அருகே உள்ள ஆலமரம் கிராமவாசிகளின் பேச்சில் அடிக்கடி அடிபடுவதற்கு ஒரு காரணம் இருந்தது. ஓன்று அந்த கிராமத்தில் உள்ள ஒரே ஒரு ஆலமரம். என்றபடியால் அதன ஆலம் விழுதுகளை கிராமவாசிகள் பல் துலக்க பாவித்ததாலோ என்னவோ அந்த கிராமத்தில் உள்ள எண்பது வயது கிழவர்களின் பற்கள் விழாமல் உறுதியாக இருந்தது. ஆலமரத்ததுக்கு அருகே சுடலையை நோக்கி சடைத்து வளர்ந்த ஈச்சம் பற்றைகள் ஊடாகச் செல்லும் ஆறடி அகலம் உள்ள கிரவல் பாதை. அதன் ஒரமாக யாரோ ஒரு புண்ணியவான் உருவாக்கிய சுமைதாங்கியில். புகையிலை, வெங்காயம், ஆடு மாடு வியாபாரம் செய்து வருவோர் சற்று தம் போதிகைகளை வைத்து இளப்பாறி, அருகில் இருந்த குளத்தில் நீர் அருந்திச் செல்வது’ வழக்கம்,. குளத்துக்கு அருகே சதுப்பு நிலம். அங்கு தமது கிராமத்து. கழிவுகளை கொண்டு போய் கொட்டுவார்கள் மணியம்குளம் கிராம வாசிகள். அந்த. சதுப்பு நிலம் சில உயிர்களைப் பலி வாங்கியதால் “ இது சதுப்பு நிலம். இங்கு கால் வைத்தால் உயிருக்கு ஆபத்து” என்ற எச்சரிக்கை பலகையை மணியம்குளம் கிராமசபை வைத்திருந்தது.

அந்த கிராமத்துக்கு மின்சாசரவசதி கிடையாது. தினம்’ காலை ஒன்றும் பின்னேரம் ஒன்றுமாக அக்கரையான் குளத்தில் இருந்து பஸ் கிராமத்துக்கு வந்து போகும். . இரவில் வெளியே போவதென்றால் அரிக்கன் விளக்கு அல்லது தீப்பந்தத்தை நம்பி வாழ்ந்தார்கள். ஊர் மக்கள் சுமார் 500 குடும்பங்கள் வாழும் அக் கிராமத்தில் ஒரு டிச்பென்சரியைத் தவிர வேறு கடுமையான வருத்தங்களுக்கு கிளிநொச்சி அல்லது துணுக்காய் வைத்தியசாலைகள் தான் கதி

சிவராசா அபோதிக்கரியாக துணுக்காயில் இருந்து அந்தக் கிராமத்துக்கு மாற்றலாகி போய் மூன்று வருடங்கள் உருண்டோடியது. 10 வருடங்களுக்கு மேல் வேலை செய்த அபோதிக்கரிகளை டாக்டர் பட்டம் சூட்டி அழைப்பது இலங்கையில் வழக்கம். டாக்டர் சிவராசாவுக்கு மூன்று வருட மணியம்குளம் வாழ்க்கை எதோ கனவு போல் இருந்தது. அந்த காலத்துக்குள் கிராமத் தலைவர் பொன்னையா, விதானையார் விசுவலிங்கம், அக் கிராமத்து பள்ளிக்கூட தலமை ஆசிiரியர் அருள், தேனீர் கடை வைத்திருக்கும் சிங்கராசா ஆகியோரின் அறிமுகம் கிடைத்து, டாக்டர் சிவராசாவின் நண்பர்களானார்கள்.,

சிவராசா மூட நம்பிக்கைகளை முற்றாக வெறுப்பவர். முற்போக்கான சிந்தனையுள்ளவர் அறவியலில் ஆர்வம் உள்ளவர். தான் படித்து டாக்டராக வேண்டும் என்று கனவு கண்டவர். முடியாததால் அப்போதிக்கரி என்ற உதவி டாக்டரானார். வன்னியில் பல கிராமங்களில் வேலை செய்தவர். அவரின் அவரது பூர்வீகம் வடக்கில் உள்ள பருத்தித்துறை. அவர் படித்தது ஹார்ட்லி கல்லூரி. அவரின் பொழுது போக்கு, அறிவியல் நூல்களை வாசிப்பது. அவரும் நண்பர்கள். அடிக்கடி தேனீர் கடையில் கூடி அரசியல். நாட்டு நிலவரம். கிராமத்தில் நடப்பவை, வியாதிகள், அறிவியல் போன்ற பல தரப்பட்ட விஷயங்களை பற்றிப் பேசுவது அவர்களின் பொழுது போக்கு.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தேனீர் கடைக்கு முன் இருந்த பெஞ்ச்சில் இருந்து தங்கள் அரட்டையை நண்பர்கள் ஆரம்பித்தார்கள்.

“என்ன பொன்னையர் உங்கடை கிராமசபை எச்சரிக்கை பலகை போட்டும் ஒரு சிறுவனை சதுப்பு நிலம் பலி எடுத்து விட்டுதாம். நீர் கேள்வி பட்டனீரே” டாக்டர் சிவராசா கேட்டார்.

“இறந்த சிறுவன் மாடு மேய்க்கும் சிறுவன். ஏழை. பாவம் படிப்பு அறிவு இல்லாதவன்.. அவனுக்குப் படிப்பு அறிவு இல்லாததால், பலகையில் என்ன எழுதி இருக்கிறது என்று வாசித்து அறியத் தெரியாது” பொன்னையர் சொன்னார்.

“அது இல்லை பொடியனின் மரணத்துக்கு காரணம். சுடலை வைரவருக்கு இந்த வருஷம் பொங்கி படைக்க சற்று தாமதமாகி விட்டது. அதுதான் வைரவர் பலி வாங்கி விட்டார். உதுபோல தான் அந்த ஆலமரத்திலை தூக்குப் போட்டு ஒருத்தி போன வருஷம் செத்துப் போனாள்,” தேனீரை கொண்டு வந்து சிவராசவிடம் கொடுத்தபடி செய்தி சொன்னார் சிங்கராசா,

“ஊர் சனங்கள் கதைக்குதுகள் சுடலை பக்கத்தில் உள்ள ஈச்சம் காட்டில், கொல்லி வாய் பிசாசு இருக்குது எண்டு” விதனையார் விசுவலிங்கம் ஊர் செய்தி சொன்னார்.

“கொல்லி வாய் பிசாசா? அது என்ன புதுப் பெயராக இருக்குது. . எனக்கு பிசாசு கதைகளில் நம்பிக்கை இல்லை. எனக்கு தெரிந்தது பணப் பிசாசுகள் மட்டுமே ” டாக்டர் சிவராசா சிரித்தபடியே நக்கலாக சொன்னார்.

“ டாக்டர் நீர் சயன்ஸ் படித்தவர். அதுதான் உப்படி சொல்லுறீர். உமக்கு இந்த ஊர் சனங்ககளின் பேச்சில் நம்பிக்கை இல்லை. நான் கூட ஒரு கிழமைக்கு முந்தி அக்கரையன்குளம், கிராமத்துக்குப் போய் திரும்போது, பஸ்சை’ தவறவிட்டு சுடலை வழியாக இரவு நேரம் நடந்து வந்தேன் பாரும். அப்போ யாரோ தீப்பந்தத்தோடு என் முன்னே போவதைப் பார்த்தனான். யாரடா அங்கே போகிறது என்று சத்தம் போட்டு கேட்ட போது, பதில் இல்லை. நான் நடக்க, அந்த தீப்பந்தம் என்னை விட்டு விலகி விலகைச் சென்றது” என்றார் ஆசிரியர் அருள்.

“என்ன மாஸ்டர் சயன்ஸ் படித்த நீங்கள் கூட இந்த கொல்லி வாய் பிசாசு கதையை நம்புறீர்களா?. அது சரி உந்த பிசாசு கதையை ஊரிலை யார் ஆரம்பித்து வைத்தது?” டாக்டர் சிவராசா கேட்டார்.

“வேறு யாரும் இல்லை, வேலை இல்லாமல் இருக்கும் ஒரு கூட்டம் தான். அவர்களுக்கு பொழுது போக வேண்டுமே. கதையைக் கட்டி விட்டிருக்குறார்கள். அதில் அவர்களுக்கு எதோ உள் நோக்கம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் நான் கெதியிலை அது உண்மையா போய்யா என்று கண்டு பிடிக்கிறேன் ” விதனையார் தன் அதிகாரத் தொனியோடு சொன்னார்.

“விதனையார் நீங்கள் சொல்வது ஓரளவுக்கு உண்மை. மூன்று நாளைக்கு முன், வேலை இல்லாமல் இருக்கும் சண்முகமும் அவனின் இரு நண்பர்களும் எண்டை கடைக்கு தேனீர் குடிக்க வந்த போது இந்த கொல்லி வாய் பிசாசை பற்றியே அவர்கள் பேச்சு இருந்தது. தாங்கள் பல தடவை கண்டதாக சொன்னார்கள். கொல்லி வாய் பிசாசு இரவில் உலாவுமாம். மனித ரத்தத்தை தேடுதாம். எனக்கு அந்த வேலை இல்லாமல் இருக்கும் அந்த மூவரின் பேச்சில் நம்பிக்கை இல்லை”

“ ஏன் அப்படி சொல்லுகிறீர் சிங்கராசா” விதானையார் கேட்டார்.

“விதானையார். அவன் சண்முகம் தேனீர் குடித்து, வடை சாபிட்டுவிட்டு போகும் போது ஒரு நூறு ரூபாய் நோட்டை என்னிடம் நீட்டினான், மிகுதி காசை கொடுத்தபோது என்னை அதை வைத்திருக்கும் படி சொல்லி போய்விட்டான். வேலை இல்லாத அவனுக்கு எப்படி அவ்வளவு காசு? அதோடு மட்டமில்லை கொல்லி வாய் பிசாசா தங்கள் கண்டதாகவும், அது ரத்தம் குடிக்க ஈச்சம் பற்றை பக்கம் அலைந்து திரிவதாக அவர்கள் சொன்னார்கள்” ஒரு குண்டைத் தூக்கி போட்டார் சிங்கராசா.

“அப்படியா. இது கவனிக்க வேண்டிய விஷயம் தான்” விதானையார் சொன்னார்.

“ அது சரி மாஸ்டர் நீர் இந்த கொல்லி வாய் பிசாசை எங்கை பார்த்தனீர்.

“ நான் கண்டது அந்த குப்பைகள் கொட்டும் சதுப்பு நிலத்துக்கு அருகாமையில்”

“ அப்படி சொல்லுமென். எனக்கு இப்ப கொல்லி வாய் பிசாசை நீர் கண்டதன் காரணம் புரியுது”

“ என்ன உமது அறிவியல் விளக்கத்தை சொல்லும் கேட்பம்” ஆசிரியர் அருள் கேட்டார்

“மீதென் வாயுவை (Methane gas) பற்றி கேள்விபட்டிருப்பீரே. அந்த வாயு பிராணவாயுவோடு கலந்தால், வெகு விரைவில் தீ பற்றிக் கொள்ளக் கூடியது. அனேகமாக சதுப்பு நிலப் பகுதிகளில் குப்பைகளின் சிதைவால் அதிகமாக மீதென் வாயு வெளியேற வாய்ப்புண்டு. அது சரி நீர் சதுப்பு நிலத்தின் அருகே நடந்து வரும் போது சிகரெட் ஏதும் பற்ற வைத்தீரா”.

“ ம்.. அது எப்படி உமக்குத் தெரியும் டாக்டர். ?”

“ நீர் சிகரெட் பற்ற வைத்த நெருப்பில் உமக்கு முன் இருந்த மீதென் வாயு தீ பற்றிக் கொண்டது. நீர் நடக்கும் போது அந்த வாயுவானது உம்மிடம் இருந்து விலகிச் சென்றது. அது வாயு என்றபடியால் நீர் கூபிடும்போது அது பேசவில்லை. அதுக்கு வாயும் இல்லை கால்களும் இல்லை” என்றார் சிரித்தபடி சிவராசா.

“ நல்ல அறிவியல் விளக்கம் டாக்டர். அனால் இதைப் பாவித்து வதந்தியை கிளப்பிய காரணத்தை நான் கண்டு பிடிக்காமல் விடப் போவதில்லை” என்றார்’ விதானையர் விசுவலிங்கம்

இரு வாரங்களுக்குப் பின் ஒரு நாள் போலீஸ் ஜீப் மணியம்குளம் கிராமத்துக்கு வந்தது. எல்லோருக்கும் அது’ ஒரு’புதுமை. ஒரு போதும் போலீஸ் கிராமத்துக்கு வந்ததில்லை சதுப்பு நிலத்துக்கு அருகே உள்ள ஈச்சம் காட்டுப் பக்கமாக விதானையாரும் இரண்டு போலீஸ்காரர்களும், ஒரு சப் இன்ஸ்பெக்டரும் போய் வந்ததை அவதானித் சிங்கராசா.“ என்ன விதானையார் என்றுமில்லாதவாறு கிராமத்துக்கு போலீஸ் வந்திருக்கு.”? என்று கேட்டார்..

“ சிங்கராசா, நீர் சொன்னதை; வைத்து போலிசும் நானும் சண்முகத்தின் வீட்டையும் அவனின் கூட்டாளி இருவரின் வீட்டையும் சோதனை செய்த போது கட்டு கட்டாகப் பணம் இருந்தது. கள்ளச்சாராயம் காச்சியதுக்கான தடயங்கள் கிடைத்தது. என்னால் நம்ப முடியவில்லை. போலீஸ் அவர்களுக்கு நாலு அடி போட்டதும் உண்மையை கக்கி விட்டார்கள். அவர்கள் உழைத்த பணம், கள்ளச்சாராயம் காச்சி விற்று சேர்த்த காசு ”
.
” நாலு போலீஸ் அடிக்குப் பின் என்னவாம் அவர்கள்’?

“ வேலை இல்லாததால் ஈச்சங் காட்டுப் பக்கத்தில் இரவில் கள்ளச்சாராயம் காச்சினார்களாம். ஊர் வாசிகள் அந்தப் பக்கம் வராமல் இருக்க கொல்லி வாய் பிசாசு வதந்தியை ஊரில் பரப்பி விட்டார்களாம். போலீஸ் அவர்களைக் கைது செய்து கூட்டிப்போய் விட்டது. குறைந்தது மூன்று வருஷம் ஜெயிலும் அபராதமும் அவர்களுக்கு கிடைக்கும். இனியாவது ஊர் மக்கள் வதந்திகளை நம்பாமல் இருக்கட்டும்” என்றார் விதானையார்.

******
கிராமப்புரத்தில் உள்ள மூட நம்பக்கை எவ்வாறு குற்ற செயல்களுக்கு பயன் படுகிறது என்பதை அறிவியல் ரீதியாக உருவாக்கப் பட்ட கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *