கைதேர்ந்தவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 1,535 
 
 

தோட்டத்துரை, தங்கமலைத் தோட்டக் கந்தோரில் தனக்கென அமைக்கப்பட்ட அறையில் உள்ள மேசையின் முன் கெம்பீரமாக அமர்ந்திருந்தார். அவர் நெற்றியில் விழும் வெள்ளைத் தோல் சுருக்கங்கள் அவரின் யோசனையைத் துலாம்பாரமாகக் காட்டின.

கொஞ்சத் தூரத்துக்கப்பால், இரு மலைகளுக்கு மத்தியில் அமைக்கப் பட்டிருக்கும் “பக்டரியின்” காற்றாடி வீச்சாக அசைந்து கொண்டிருப்பது அவரின் முழிக்கண்களுக்குள் தெரிகின்றது.

அச் சிவப்பு நிறக் காற்றாடி ஊமை இழுவையுடன் இரைந்து கொண்டிருந்தது.

பக்டரிக்கும்; துரையின் கந்தோருக்கும் இடையில் உள்ள பசுமை கொழிக்கும் தேயிலை மலைச்சரிவுகளில், பெண்கள் குளிரடித்துப் பெய்யும் மழையில் நனைந்து, கூனிக்குறுகிக் கொழுந்து பறித்துக் கொண்டிருக்கும் காட்சியும் ஒரு அழகு தான். மழைபெய்கின்ற இந்நேரத்தில் அவர்களின் கால்களில் அட்டைகள் இரத்தம் குடித்துக் கொண்டிருக்கும்.

கொழு கொழு எனப் பார்வைக்கு இதம் கொடுத்துக் கொண்டிருந்தது அந்தத் தங்கமலைத் தேயிலைத் தோட்டம். அதன் செழிப்பும், பசுமையும் பார்ப்பவரின் பசியை ஒரு முறை போக்கி விடும். அக்கொழு, கொழுப்பில் தொழிலாளரின் இரத்தமும் கலந்துள்ளது.

அத்தோட்டம் அந்நிலையில் இருப்பதற்கும்; கூடிய லாபம் தருவதற்கும் காரணம், அத்தோட்டத்தின் பெரிய துரை போமென் தான் என்று அத்தோட்டக் கம்பனி முதலாளிகள் கூறிக்கொள்வார்கள்.

தன் அறையில் இருந்து யோசிக்கும் போமென் துரையின் கண்களில் பக்டரியின் அருகில் உள்ள பெட்டிக் காம்பராவில் தொழிலாளிகள் பெட்டி அடிக்கும் அசைவுகள் தான் பூரணமாகத் தெரிந்தன. அவர்கள் சுத்தியலால் கை ஓங்கி அடிக்கும் சத்தம் அவருக்குக் கேட்கவில்லை.

தன் நிர்வாகத்தின் கீழ், குறைந்த செலவில் கூடிய லாபம் கிடைக்கிறதென்பதை பிரித்தானியாவில் உள்ள தோட்ட முதலாளிகளுக்கு வருடா வருடம் முன்னேற்ற மான அறிக்கை காட்ட வேண்டுமென்பது அவரது ஒருமனதான இலட்சியம்.

தேயிலைப் பெட்டி அடிக்கும் வேலையை நாட்கூலிக்கு விடுவதால் கூலி அதிகம் போகிறது. தொழிலாளர்களும் ஒழுங்காகப் பெட்டி அடிப்பதில்லை. கொந்தராப்புக்கு விட்டால் தான் லாபம் அதிகம். அதுவும் மற்றத் தோட்டங்களில் கொடுப்பதிலும் பார்க்க குறைந்த ரேட்டுக்குக் கொடுக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது?

துரையின் மூளை, அவர் கண்கள் பார்த்துக் கொண்டிக்கும் “பக்டரி”க் காற்றாடியிலும் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது.

வாயில் உள்ள சுங்கானில் இருந்து, சுருட்டுப் புகை சுதந்திரமாக விரும்பிய திசையெல்லாம் நெளிந்து கொண்டிருந்தது.

பெட்டிக் காம்பராவில் வேலை செய்பவர்களில் கறுப்பையா கெட்டவன். அதாவது தொழிற்சங்கத் தலைவன், நியாயப்படி கேட்பான். கொந்தராப்புக்குச் சம்மதிக்க மாட்டான். இராமையா – அவன் மற்றத் தோட்டங்களில் கொடுப்பதைப் போல் தனக்கும் தரும்படி கேட்பான். புத்தி கொஞ்சம் இருக்கிறது. கிறிஸ்தோப்பன் சுத்தமோடன், வஞ்சகமில்லாதவன். தொழிற்சங்கத்தில் சேரவில்லை. ஒரு கத்தோலிக்கன், விசுவாசமாக வேலை செய்வான். இப்படியாக அத்தொழிலாளரைப்பற்றி “டீமேக்கர்” கூறியவை சிந்தனையில் ஒழுங்காக வந்து, தனக்குச் சாதகமான முடிவு எடுக்கத் தூண்டின.

துரை கைவிரல்களைக் கோத்து, ஒன்றுடன் ஒன்றை உரசியவாறு, கண்கைள வெட்டினார்.

“போய்!”

“தொரே!”

கந்தோர் பையன் முத்துசாமி ஓடிச்சென்று துரை முன்னால் சலாம் போட்டு நின்றான.

“கிறிஸ்தோப்பனை அழைச்சுக்கிட்டு வா!”

முத்துச்சாமி, பக்டரியை நோக்கி, மலைப் படிகளால் இறங்கி ஓடினான். கொஞ்ச நேரத்தில் கிறிஸ்தோப்பன் முன்னே வர முத்துசாமி பின்னால் ஓடி, ஓடி வந்தான். கிறிஸ்தோப்பன் குலைந்திருந்த தலைமயிரைக் கைகளால் கோதி அணிந்த காக்கிக் காற்சட்டையை இழுத்தச் சரி செய்து விட்டு முப்பத்திரண்டு பற்களும் தெரிய கந்தோர் வாசலில் இழித்துக் கொண்டு நின்றான்.

“கிறிஸ்தோப்பன்!”

கன்னங்களில் சறுகி ஓடும் சிரிப்புடன் துரை அழைத்தார். கிறிஸ்தோப்பனுக்கு உச்சி குளிர்ந்தது. குளிர வைக்கப்பட்டது.

“தொரே! சலாமுங்க தொரே!”

பாய்ந்து விழுந்து சென்ற அவன், பெரிய சலாம் ஒன்றைப் போட்டு, துரைக்கு முன்னால் ககை கட்டி நின்றான். இரு கால்களும் ஒன்றோடொன்று ஒட்டி இருந்தன. கட்டிய கைகளை, ஒடுக்கியது காணாதென்ற பிரமையில் இன்னும் உள்ளே உள்ளே ஒடுக்கியவாறிருந்தான். முகத்தில் இழிப்புக் குறையவில்லை.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த துரை மெதுவாக எழுந்தார். சுங்கானை வாயில் வைத்துப் புகைவிட்டவாறு, அவனருகில் வந்து தோளில் தட்டினார். கிறிஸ்தோப்பன் வெட்கப்பட்டவனாய்க் கூசி, புளங்காகிதம் அடைந்து சிரித்தான்.

“கிறிஸ்தோப்பன் நீ என்ன சமயோம்?”

“நானுங்க தொரே, கத்தோலிக்க சமயமுங்க!”

“வெறிகுட்!” நானும் அதுதான்; நானும் கத்தோலிக்கன்தான்; தெரியுமா?”

“நல்லதுங்க தொரே!”

துரை சடுதியாக ஏதோ யோசனையில் மூழ்கி, முன்னால் சுவரில் தொங்கி கொண்டிருக்கும் எலிசபேத் மகாராணியின் படத்தைப் பார்த்தவாறு நின்றார். பின்பு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து, அதன் கிட்டச் சென்று கைலேஞ்சியை காற்சட்டைப் பையில் இருந்து எடுத்து அதிலே பட்டிருந்த தூசியைத் துடைத்து விட்டு, கிறிஸ்தோப்பனை நோக்கித் திரும்பினார்.

“இது யார் தெரியுமா?”

“இவங்க தொரே எலிசபெத் மகாராணியுங்க!”

“ஆர்வூட்டு ராணி இவங்க?”

“எங்க ராணிங்க தொரே எங்க ராணி”

“வெறிகுட்! கிறிஸ்தோப்பன்! எந்தத் தொழிற்சங்கத்திலே சேர்ந்திருக்கிறாய்?”

“ஒண்ணிலேயுமில்ல, தொரே! ஒண்ணிலேயுமில்ல”

கிறிஸ்தோப்பன், ஆனந்தத்தோடு முகத்தை இரு கைகளாலும் உரஞ்சித் துடைத்துவிட்டு நின்றான்.

துரை மேசைக்கு முன்னால் அமர்ந்து மேசையில் உள்ள பைல்களைப் பார்வையிட்டார். பத்து நிமிடங்களுக்கு மேல் சென்றுவிட்ட பின் நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகைத்தார். அவனும் சிரித்தான்.

“யு ஆர் எ குட் மான்!”

கிறிஸ்தோப்பன் கீழுதட்டைக் கடித்து எச்சிலால் நனைத்துக் கொண்டான்.

“கிறிஸ்தோப்பன்! நான் பெட்டிக் கொந்தராப்பை ஒனக்குத் தருகிறேன். நீ எடுத்துக் கோ!”

“சரியுங்க தொரே!”

பெரிய துரை சொல்லிவிட்டார், அது வேதவாக்கியம் அவன் மறுக்க மாட்டான் அவனுக்கு மறுக்கவும் தெரியாது.

கிறிஸ்தோப்பனுக்குப் படிப்பில்லை, கணக்குவழக்கு சூனியம். கொந்தராத்தைப் பற்றி எதுவித அறிவும் இல்லை.

“அப்போ, இங்கை வா”

அவன் துரைக்கு அருகில் சென்று நின்றான். எதற்கு அழைக்கிறார் என்று தெரியாமல் வளர்த்த நாய் முகத்தைப் பார்ப்பது போல் அவரைப் பார்த்தான்.

“சரி இதில் ஒரு கையெழுத்துப் போடு!”

கிளார்க் அழைக்கப்பட்டார். கிறீஸ்தோப்பன் தன் பெருவிரல் அடையாளத்தை கிளார்க் காட்டிய இடத்தில் இட்டான். துரையினால் அவனுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் பூர்த்தியானது. அவருக்கு வெற்றி.

“சரி, போய் வேலையைத் தொடங்கு!”

“சரியுங்க தொரே!”

“டமேஜ் ஆனா எல்லாம் ஒன்பொறுப்பு”

“சரியுங்க தொரே”

“ஒரு பெட்டிக்குப் பதிமூணு சதம் மட்டுந் தான்”

“நல்லதுங்க”

“சரி போ! ஆ! வேற கூலியை வேலைக்கு எடுத்தா அதுவும் உன்பொறுப்பு!”

“நல்லதுங்க தொரே!”

“எவன் சொல்லுங் கேட்காத, ஒன்னைக் கெடுத்துப் போடுவானுக!” –

“சரிங்க தொரை!”

“சரி போ!”

“சலாமுங்க, வர்றேங்க தொரே!” –

கிறிஸ்தோப்பனுக்கு என்றுமில்லாத ஒரு மனநிறைவு. பெரிய துரைதன் தோளில் தட்டியதையும், தன் பெயரை முழுவதாகச் சொல்லி அழைத்ததையும் எண்ணி எண்ணி கிழுகிழுப்பு அடைந்தவாறு பெட்டிக் காம்பராவை நோக்கி ஓடி வந்தான். அங்கு வாசலில், சுத்தியலைக் கையில் பிடித்தவாறு கிறிஸ்தோப்பனின் வரவை எதிர்பார்த்து இராமையாவும் கறுப்பையாவும் நின்று கொண்டிருந்தனர். கிறிஸ்தோப்பன் காற்சட்டையின் இரு பைகளுக்குள்ளும் கைகளை விட்டு, சின்னத்துரையைப் போல் நிமிர்ந்து நின்றான். எல்லாம் துரை கொடுத்த மதிப்பு.

“ஏன் ஒன்னை தொரை அழைச்சாரு?”

கறுப்பையா சாவாதானமாகக் கேட்டான்.

“தொரை என் பேரைச் சொல்லி அழைச்சாரே! நல்ல தொரே! ”

அவனுக்கு துரை அவன் பெயரைச் சொல்லி அழைத்த சந்தோஷம் முடியவில்லை .

“அதைவுடு! ஏன் அழைச்சாரென்று முதல்ல சொல்லு” –

“தோளிலெல்லாங் கை போட்டுக் கிறிஸ்தோப்பன் குட்மான் என்னாரு!” கறுப்பையாவுக்கு கோபம் ஏறிவிட்டது.

“ஏன் அழைச்சாரென்று சொல்லித் தொலையேன்?”

கிறிஸ்தோப்பன் பெட்டிக்காம்பரா நிலையில் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு கால்களை மாறிவைத்து நின்றான். 2

“பெட்டிக் கொந்தராப்பு கொடுக்கிறதுக்கு!”

“பெட்டிக் கொந்தராப்பா?”

இராமையா ஆச்சரியத்துடன் வினாவினான். அப்போது தான் அவனுக்கு யோசனை தொட்டது.

“எடுத்துக் கிட்டியா” கறுப்பையா ஆவலாகக் கேட்டான், உள்ளூர் ஆத்திரம், அது அவன் மீதில்லை .

“ஆமா!”

“எவ்வளவுக் கெடுத்தாய்?”

“ஒரு பெட்டிக்குப் பதிமூணுசதோம்!”

“மோட்டாசாமி! இழிக்கிறியே மற்றத் தோட்டங்களிலே எவ்வளவு கொடுக் கிறாங்க தெரியுமா?”

கிறிஸ்தோப்பனின் சிரிப்பு ஆவியாகி பழையபடி முகம் சோர்ந்து விட்டது.

“எவ்வளவு குடுங்கிறாங்க?”

“இருபது சதோம்!”

“ஐயோ!” கிறிஸ்தோப்பன் ஏங்கிப்போய் நின்றான்.

அவன் நின்ற நிலையில் அவன் மேல் கறுப்பையாவுக்கும், இராமையாவுக்கும் அனுதாபம் ஏற்பட்டுவிட்டது.

“தொரை ஏமாத்திப்புட்டான்! சுரண்டிற புத்தியல்லா றாஸ்கோல்!” இராமையா பெட்டிக்காம்பராவுக்கு உள்ளே நடந்தான்.

“ஓடு தொரையிக் கிட்டப் போயி கட்டாதுன்னு சொல்லு. குறைஞ்சது மூணுபேர் வேலை செய்யணும்; ஒரு நாளைக்கு குறிச்ச தொகை முடிச்சுக் கொடுத்தே ஆகணும், ஏன் பேர்க்கூலி கூட எடுக்கமாட்டாய் ஓடு!”

கறுப்பையா கத்திச் சொன்னான். கிறிஸ்தோப்பன் தயங்கி நின்றான்.

“ஏன் நட்டகட்டைமாதிரி நிக்கிறே? மூளை கெட்டவனே?”

அவன் குனிந்து நிலத்தைப் பார்த்துப் பிடரியைக் கைகளால் சொறிந்த வண்ணம் மெதுவாகச் சொன்னான்.

“நா, கையெழுத்துப் போட்டுக் கொடுத்துப்புட்டேனே?”

கறுப்பையா, அவனை ஆத்திரமும், அனுதாபமும் சேர்ந்த கோபத்துடன் நோக்கினான்.கிறிஸ்தோப்பன் தன் களங்கமற்ற தோற்றத்துடன் உணர்ச்சியின்றிச் சிரித்துக் கொண்டு நின்றான்.

“பெட்டியை அடிச்சடிச்சுச் செத்துப் போ, போயேன் ஏநிக்கிறே” இராமையா கோபமாய், கிறிஸ்தோப்பனைப் பிடித்துப் பெட்டிக் காம்பராவுக்குள்ளே தள்ளி விட்டான்.

அவன் நெஞ்சைப் பொத்திக் கொண்டு இருமியவாறு அந்த இடத்திலேயே நின்றான்.

– வசந்தம் 1967 – விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *