(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எல்லா நேரத்திலும் புத்திசாலியாய் இருப்பதும், புத்திசாலியாய் நடந்து கொள்வதும் மிகவும் அயர்ச்சி தரும் விடயங்கள். அதனால் இடையிடை எனது அகக் குழந்தையை நான் மேலே தூக்கிவிட்டு விடுவதுண்டு. அப்படியொரு மாலை வேளையில்தான் அந்த மறையன் பூனை எங்கள் வீட்டுக் கோடியால் பயந்து பயந்து போன போது, நான் “மியா மியா” என்று அதைக் கூப்பிட்டேன். வால் பக்கத்திலும் பின்னங் காலிலும் அதிகம் தடித்த சாம்பல் நிறத்துடனும், முன்னங்காலிலும் வயிற்றுப் புறத்திலும் மெல்லிய வெள்ளை கலந்த சாம்பலுடனும் போன அது எனது குரலைக் கேட்டு, நின்று மருண்டு பார்த்துவிட்டுத் தானும் ஒருமுறை “மியா” என்று விட்டுப் போய்விட்டது.
அந்தச் சம்பவம் எனக்கு மறந்து போய்விட்டதாய் நான் நினைத் திருந்த ஒரு முன்னிரவில், சாப்பாடு எடுப்பதற்காக நான் குசினிக்குப் போனபோது அது வடக்குப் புற ஹொரிடோரில் இருந்த கட்டிலில் இருந்து பாய்ந்து, நெற்றடித்த வெளிப்புறச் சுவரில் இருந்த தூண் இடை வெளி ஊடாக வெளியே கோடிக்கு ஓடியதை நான் எதேச்சையாகக் கண்டேன்.
வெளியே இருள், நரைத்த தலை மாதிரி உலகைக் கவிந்திருந்தது.
நான் இரவுணவை எடுத்துக் கொண்டு ஹோலுக்கு வந்தபோது மீண்டும் அது ஹோலுக்குள்ளே குறுக்கே ஓடியது.
“இந்தப் பூனை ஒண்டு நெடுகவும் வீட்டுக்குள்ளை திரியுது. விடிய வெளிக்கிடுற நேரங்களிலை முழிசுவளத்திற்குக் குறுக்காலை போப் போது…” என்று கணவர் சொன்னார்.
நான் அதற்குப் பதில் சொல்ல வாய் எடுக்க முன்னரே, புதியதோர் அழுகைச் சத்தம் வடக்குப்புறக் கட்டில் பக்கம் கேட்டது.
“இதென்ன புதுச்சத்தம்? பூனை குட்டி போட்டிட்டுதோ?”
என் உடலில் வியர்வை புள்ளி புள்ளியாய்ச் சேர்ந்தது. எழுந்து கட்டில் பக்கம் சென்றேன். ஹோலுக்கு வெளிப்புறமாய் இருந்த அந்தக் கட்டிலில் பல கடதாசிப் பெட்டிகள் – வெறும் பெட்டிகள் – அடுக்கப் பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் ஒன்றுக்குள் இருந்துதான் சத்தம் வருகிறது.
“இந்த வெறும் பெட்டியளை இதிலை அடுக்க வேண்டாம் என்று சொன்னனான்”
“சொல்றது சுகம். பிறகு அடுத்த முறை வீடு மாறேக்கை புத்தகங்கள் கட்டிறதுக்கு, பெட்டிக்கு எங்கை போறது”
தொண்ணூறில் எமது சொந்த வீட்டில் இருந்து இடம்பெயர்ந்த பின் இதுவரை ஒன்பது வீடு மாறியாகி விட்டது. இன்னும் எத்தனை வீடு பார்க்க வேண்டிய தலைவிதி இருக்கிறதோ? அதுவும் நியாயம்தான். பெட்டிகள் தேவை.
மேலிருந்த ஒரு பெட்டியின் மூடியை மெதுவாய்த் திறந்து பார்த் தேன். ஒன்றும் இல்லை. சத்தம் அடுத்த பெட்டியில் இருந்து திடீரென்று கேட்டபோது மனதில் தோன்றிய உணர்வு பயமா? பதற்றமா? மகிழ்வா? அருவருப்பா? பரிதாபமா?
மற்றப் பெட்டியைத் திறக்காமலே இடைவெளியொன்றில் கண்ணை ஓட்டி உள்ளே பார்த்தேன். மார்பு பளபளெவென்று மின்ன… இள இளவென்று இருக்கும் புதிய குட்டிகள் நல்..ல்..ல வெள்ளை.
“ஓமப்பா குட்டிதான் போட்டிட்டுது… ரண்டு குட்டி…”
”சீ… சீ… எடுத்து எறியுங்கோ வெளியாலே… அசிங்கம்…” நான் எதுவும் செய்யாதிருப்பதைப் பார்த்து விட்டுக் கணவரும் வந்து எட்டிப் பார்த்தார். பெட்டியோடு தூக்கி எறிவார் என்று நினைத்தேன். அவரும் சிறிது நேரம் பார்த்து விட்டுப் பேசாமல் போய்விட்டார்.
உயிர்களை நேசிக்கும் மானிடத்தைத் தேடுவதில் ஒரு பயணம் மௌனமாய் நடக்கிறதா?
அடுத்த நாள் காலையில் எழுந்தவுடனேயே குறுக்கே போகும் தாய்ப்பூனை தான் “முழுசுவளம்!”, நான் “மியா, மியா”
மியா’ என்று கூப்பிட்டதை ஒரு நட்பார்ந்த அழைப்பாக எடுத்துக் கொண்டுதான் எங்கள் வீட்டைப் “பிரசவவார்ட்” ஆக்கியிருக்கிறதா? யார் வீட்டுப் பூனை இது?
குட்டிகளுக்குப் பாலூட்டுவதற்காகத் தாய்ப்பூனை பெட்டிக்குள் பாய்ந்து ஏறியவுடன் குட்டிகள் “காச்சு மாச்சென்று கத்தும். சிறிது நேரத்தில் எல்லாம் அமைதியாகி விடும். “இப்போது அவை தாய் மடியில் மகிழ்வுடன் பால் அருந்தும்!”. எனக்குள் அந்த நினைவு மகிழ்வாய்!
என் மகளுக்கு நான் பாலூட்டிக் கொண்டிருந்த ஒரு அந்திப் பொழுதில்தான் எங்கள் வீட்டின் பின்புறத்தில் ஷெல் வீழ்ந்து நாம் ஓட வேண்டி வந்தது என்பதற்காய்… பூனைக்குட்டி அமைதியாய்ப் பால் குடிக்கக் கூடாதா என்ன?
பக்கத்து வீட்டில் நாம் விலை கொடுத்து வாங்கும் பசுப்பாலில் கோப்பி போட்டுக் குசினியில் இருந்து எடுத்துவரும் போது சாம்பல் நிறப் பூனை என் காலைச் சுற்றி வந்து அழுதது.
பாவம்! பாலூட்டும் தாய், புண்ணான வயிறு என்று யாரும் அதற்குச் சரக்குக் கறி வைத்துச் சோறு கொடுக்கப் போகிறார்களா என்ன? எனக்கும் பூனைக்கும் எந்தவித குடுக்கல் வாங்கலுமில்லைத் தான். சொந்தமும் இல்லை. பந்தமும் இல்லை. ஒரே இனமா? ஒரே சமயமா? தாய்மொழியாவது ஒன்றா? எதுவும் இல்லை. என்றாலும் ஒன்பதாவது வீட்டில் அகதி வாழ்வு வாழும் என்னிடம் அது உணவு கேட்கிறது!. நான் ஆரம்பத்தில் ஒருநாள் “மியா” சொல்லத்தானும் “மியா” சொன்ன அந்தத் தொடர்பு மட்டும் தான். என்ன மாதிரி அது என்னிடம் உரிமை எடுத்துக் கொள்கிறது? எந்த விதமான கேட்டுக் கேள்வியுமின்றி எங்கள் வீட்டில் பிரசவம் வைத்துக் கொண்டது மட்டு மன்றி இப்போது உணவும் கேட்கிறது! உணவு என்றால், எல்லாரிடமும் போய்க் கேட்க முடியுமா? ஒத்துணர்வு மனங்களை அது தேடுகிறது. மனசுள் பேச்சு ஓடிற்று.
குசினியில் இருந்த சிரட்டையொன்றை எடுத்து வந்து சிறிதளவு பால் கோப்பி ஊற்றி நிலத்தில் வைத்தேன்.
பூனை பால் குடிக்கும்!
சந்தோஷமாய்க் குடித்தது. பின்னர் எலி பிடிப்பதற்காகப் போலும் பாய்ந்து ஓட்டில் ஏறியது.
நான் மெதுவாக நடந்து சென்று, குட்டிகளுக்கு இடைஞ்சல் தரக் கூடாது என்ற கவனத்துடன் மீண்டும் பெட்டியை எட்டிப் பார்த்தேன். அந்த வெள்ளைக் குஞ்சுகள் சோக்கான நித்திரை. பாவம் துயில் கொள்ளட்டும். திடும் திடும் என்று பயங்கரக் கனவுகளோடு வரும் தூக்கமாய் இல்லாதிருக்கட்டும். “என்னப்பா, பூனைக்குட்டி வளக்கிறீங் களா?” “அது இன்னுமொரு ஐந்தாறு நாளைக்குள்ளை தாய்ப்பூனை தூக்கிக்கொண்டு போயிடும். அதுவரைக்கும் தானே இருக்கட்டும்.”
“தூக்கிக்கொண்டு போனாப் பிறகு பெட்டியைத் தூக்கி குப்பையிலை எறிவம்”
தாய்ப்பூனையா, நானா அதிகளவு நேரம் குட்டிகளை எட்டிப் பார்க்கிறோம் என்பது கேள்விக் குறியாக இருந்தது.
பாலைப் பெற்றுக்கொண்ட தாய்ப்பூனை நாங்கள் சாப்பிடும் வேளைகளில் சாப்பாடும் கேட்டது. அது தான் பரவாயில்லை என்றால் மாலைத் தேநீருடன் அருந்தும் “கறுக்கு மொறுக்கு” பலகாரங்கள் கட்டாயம் தருமாறு வற்புறுத்தியது. இல்லையென்றால் உரிமையுடன் மடியிலேறிப் பறித்துக் கொண்டது.
“எப்ப இது குட்டியைத் தூக்கிக் கொண்டு போகும்?”
“அது ஏழு வீடு காவும் எண்டு சொல்லிறவை” மிக விரைவில் தாய்ப்பூனை மெத்தென்ற குட்டிகளைத் தூக்கிக்கொண்டு போய்விடும் என்பதே இப்போது ஒரு கவலையாய்ப் போயிற்று. கணம் தோறும் பார்க்க வேண்டும் போல ஒரு நினைவு. அதற்காக நித்திரை கொள்ளாதிருக்க முடியுமா என்ன?
நாலு நாள் “பெத்த வீட்டுப் பராமரிப்புச்” சிறப்பாக முடிந்திருந்தது.
அன்றிரவும் நான் படுக்கைக்குப் போகுமுன் அவதானித்தேன். தாய்ப்பூனை கட்டிலின் அருகில் குந்தியிருந்து காலை நக்கிக் கொண்டு காவல் இருந்தது.
அன்று இரவு பூராவும் நல்ல மழை. தலை முதல் பாதம் ஈறாகக் கம்பளியால் போர்த்துக் கொண்டு நானும் தான் நல்ல நித்திரை. இடம் பெயர்ந்த வாழ்வு, அகதி வாழ்வு என்கிற சங்கதிகள் எல்லாம் நித்திரைக் குத் தெரியாது. அது எந்த நிலையிலும் என்னை இறுக்கமாய் அணைத்துக் கொள்ளும். கடும் மழையில் இடி இடித்தது. மின்னல் சீறியது. கனவில் பாம்பு வந்தது. விழித்துப் பார்த்துவிட்டு கனவுதானே என்று மீண்டும் நித்திரை.
கட்டிலில் இருந்த பெட்டிகள் தட்டுப்பட்டு விழுந்தது போன்ற சத்தம் கேட்டபோது அதிகாலை நான்கு மணி இருக்கலாம்.
“என்னப்பா பெட்டியள் விழும் சத்தம் கேட்குது?”
“தாய்ப்பூனை பாயேக்கை தட்டுப்பட்டுப் போச்சாக்கும்” இன்னொரு கண் நித்திரை செய்து எழும்ப விடிந்து விடும்.
விடிந்ததும் முதலில் எழுந்தது நான்தான். கடந்த சில நாள் வழக்கம் போல, குசினிக்குச் செல்லும் வழியில் கட்டிலுக்கு அருகில் சென்றேன். பெட்டிகள் கீழே விழுந்திருந்தன.
மிக அவசரமாய் வெள்ளைப் பூனை பெரிய பூனை ஒன்று பாய்ந்து தூண் இடைவெளி ஊடே வெளியேறியது.
பெட்டி கிழக்குப்புறம் பார்த்து விழுந்து கிடந்தது. பெட்டியை மெல்லத் திறந்தேன்.
கால் ஒன்று கடித்துக் குதறப்பட்ட நிலையில் இரத்தம் சிந்தக் கிடந்தது வெள்ளைக் குட்டியொன்று. பெட்டியின் மூடியெல்லாம் இரத்தம் சிந்திக் கிடந்தது.
இடி இடித்தது. மின்னல் சீறியது. என் தலையில் மின்னல் இறங்கியது போல இருந்தது. நான் இரண்டு கூறானேன். கூறானது உடம்பல்ல மனம்! “இஞ்சை வந்து பாருங்கோவன்… வெள்ளைப்பூனை ஒன்று குட்டியைக் கடிச்சுப் போட்டுது…. குட்டி செத்துப் போச்சு…!
“அது கடுவன் பூனையாய் இருக்கும்…”
“மற்றக் குட்டியையும் காணேல்லை அப்பா…”
“அதைத் தாய்கொண்டு போயிருக்கும்…” வெள்ளைப் பூனையும் சாம்பல் பூனையும் ஒரே இனம். அவை பேசும் மொழியும் ஒன்று தானே!
அன்று மாலை, சாம்பல் பூனை வந்தது. என்னைப் பார்த்து “மியா” என்றது. நானும் “மியா, மியா” என்றேன். என் காலுக்கருகில் குந்தி யிருந்தது. நானும் உடனிருந்தேன். அதன் முகத்தை உற்றுப் பார்த்தேன். அது என்னை ஒருமுறை பார்த்துவிட்டுத் தலை குனிந்து கொண்டது. அழுகிறதா?
“பிள்ளையை விட்டுப் பிரியிறது எவ்வளவு உணர்வுச் சுமை களைத் தரக்கூடியது என்று எனக்கு விளங்குது!’
நான் எனது மொழியில் சாம்பல் பூனைக்கு ஒத்துணர்வு கொடுத்து, அதன் முதுகை மெதுவாகத் தடவிக் கொடுத்தேன்.
அது மீண்டும் என் முகத்தைப் பார்த்து “மியா” “மியா, மியா, மியா, மியா”, “மியா, மியா” “மியா, மியா, மியா, மியா, மியா”…..”மீ…… யா….” என்றது.
இழப்புத் துயர் தொடர்பான சீர்மியம் செய்வதாயின் பூனையை எந்தெந்தப் படி நிலைகளூடாக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை என் மனதில் பூத்தது.
– வலம்புரி 02-05-2003
– வரிக்குயில்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: நவம்பர் 2016, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை