தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,295 
 
 

­””கூனவாத்தி வர்றாரு டோய்…”
மாடு மேய்த்துக் கொண்டிருந்த கோணவாயன், ஊரே கேட்கும்படி உளறி முடிப்பதற்குள், “”அப்படிச் சொன்னா, வாயி புழுத்துப் போய் சாவ…” என்று, சாபம் போட்டபடி, குவித்து வைத்திருந்த சாணிக் குவியலில் உமித்தூளையும், வைக்கோல் பிரித் துண்டுகளையும் கலந்து போட்டு, மெதுவாக மிதித்துக் கொண்டிருந்த கருப்பாயி பாட்டி, கோணவாயனைக் காலில் போட்டு மிதிப்பது போல, ஓங்கி, “சதக்… சதக்…’ என்று மிதித்தாள்.
கூனவாத்திஎழுபது வயதைத் தாண்டியும், கணவனை இழந்தும், கற்புக் குலையாமல் இருக்கும் கருப்பாயி அறிந்து வைத்திருக்கும், 50 வருஷத்துக்கு மேற்பட்ட ஊர்ப்பாடுகள், பள்ளிக்கூடம் பக்கமே போய் பார்க்காத தறுதலை, தாடி, மீசை கறுக்காத கோணவாயனுக்கு தெரியுமா?
கிராமம் என்றால், அது குக்கிராமம். பஸ் கிடையாது; கல் ரோடு கிடையாது. அக்கரையிலிருந்து காவேரி ஆறு, அந்த ஊரை தீவாகப் பிரித்துப் போட்டிருந்தது; பாலம் கிடையாது. இரண்டு பர்லாங் நடந்து மேற்கால போனால், உடைந்தும், நொறுங்கியும், விழுந்தும், தொங்கியும் கிடக்கும் ஒரு மூங்கில் பாலம்.
பஸ், ரயிலை பார்க்கணும்ன்னாலும், கிழக்கே, 15 கி.மீ., மேற்கே, 15 கி.மீ., நடந்தா தான் முடியும். தீபாவளி, பொங்கலுக்கு துணி மணி, சாமானை, 3 கி.மீ., தாண்டித்தான் போய் வாங்கணும்.
சுதந்திரம் பெற்றும், சுதந்திரத்தின் சுவடு கூடப் படியாத பூமி அது.
பள்ளிக்கூடத்துக்கு போகணும்னா, சோத்து மூட்டையோடும், புத்தக மூட்டையோடும், 6 கி.மீ., நடக்கணும். யாரு படிக்கப் போவா? ஆடும், மாடும் மேய்க்கிறதும், சின்ன வயசிலேயே சிகரெட், குடி பழகறதும், சினிமாவுக்குப் போறதும், அந்த ஊர் ஆம்பிளப் புள்ளைகளின் தலைவிதியாய் இருந்த காலத்தில்…
புண்ணியவான் ஒருத்தர், பஞ்சாயத்துப் போர்டு தலைவராய் வந்த போது, சிவன் கோவிலுக்கு பக்கத்தில் இருந்த புறம்போக்கு நிலத்துல இந்த பள்ளிக் கூடத்தை, கட்டினாரு… கட்டினாருன்னா, பெரிய கல் கட்டடம்ன்னு நெனைச்சுடாதீங்க… ஒரு கீத்துக் கொட்டகை. ஒண்ணாம் வகுப்பு ஆரம்பிச்சு, ஐந்தாம் வகுப்பு வரைக்கும் ஒரே ஹால்ல தான்.
யாரு வாத்தி?
எவனும் வரல…
எந்த வசதி வாய்ப்பும் இல்லாத அந்த ஊருக்கு, யாரு வருவா? ஒருத்தனும் வரல. ஊர் பஞ்சாயத்துக்கு ஒரே கவலையாப் போயி, கடைசியா, பெரிய மனசு வச்சு வந்தவர் தான், இந்த புண்ணியவான்.
எப்படியும், 40 வருஷம் ஓடி இருக்கும். அஞ்சு வகுப்புக்கும், இவர் ஒருவர் தான் வாத்தி. மொத மணி அடிச்சு, பியூன் பக்கிரிசாமி கடைசி மணியை நிறுத்தறதுக்கு முன்னேயே, இந்த தர்மவான், பள்ளிக் கூடத்துப் படியிலேயே கால் வச்சிடுவாரு. ஒரு நாள் கூட வராமல், லீவு விடல; தலைவலி, காய்ச்சல்ன்னு வீட்டுல இருந்ததில்ல; சத்தியவான்.
தருமரை நாடகத்துல பாக்கறது போல, சாந்தமான முகம். நெற்றி நிறைய திருநீறு, வெள்ளை வெளேரென்று முழுக்கைச் சட்டை. அதை தூக்கி அடிக்கும்படியான தார்ப்பாய்ச்சிக் கட்டிய, தும்பைப்பூ தோத்துப் போகும் வெள்ளை நிற வேட்டி, மேலே ஒரு துண்டு; இது தான் அவரு.
என்ன… முதுகு கொஞ்சம் கூனல்; அவ்வளவு தான்.
அவர் சம்சாரம் தர்ம பத்தினி. மூணு ஆம்பிளைப் பசங்க; பெண் குழந்தை இல்லையேன்னு அம்மாவுக்கு வருத்தம்.
ஊர் அக்கிரகாரத்திலேயே வாசம். மேற்கே பெருமாள் கோவில்; கிழக்கே சிவன் கோவில். கோவில் மணி ஓசை, வேளை தவறாமல் கேட்டுக்கிட்டே இருக்கும்.
“கூனவாத்தி வர்றாரு டோய்…’ என்ற வழக்கமான பல்லவி கேட்டுப் பழகியவர் போல, குரல் வந்த திசை நோக்கி, சற்றே திரும்பிப் பார்த்தார்.
அதே தடியன் தான்.
அங்கே சாணி மிதிக்கும் கருப்பாயி, அவனோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.
இதழ்களில் லேசாகப் புன்னகையைச் சுமந்து கொண்டு, பள்ளிக் கூடம் உள்ளே போய், மர நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்வதற்குள், பள்ளிக்கூட லீடர், கடவுள் வணக்கத்தை ஆரம்பிக்க, “வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்; வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்…’ என்ற பாரதியின் பாடலை, அங்கே குழுமியிருந்த, அஞ்சு வகுப்பு பிள்ளைகளும், கோரசாகப் பாடி உட்கார்ந்தவுடன், “”அட்டன்டண்ஸ்…”
“”உள்ளேன் அய்யா…”
தாய்ப் பறவை கூட்டுக்குள் வரும் போது, குஞ்சுகள், “கீச் கீச்…’ சிட்டது போல, கேட்க இனிமையாக இருந்தது.
முதல் வகுப்புக்கும், இரண்டாம் வகுப்புக்கும் அட்டன்டண்ஸ் எடுத்தாச்சு; மூணாம் கிளாஸ்.
“”தங்கம்மா…”
“”இனிமேல் அது வராது சார்…”
“”ஏன்ப்பா?”
“”அதனோட அம்மாவும், முந்தா நாளு செத்துப் போச்சு. அதை படிக்க வைக்க, இனிமே ஊர்ல யாருமில்ல…”
சாயங்காலம் —
பள்ளி முடிந்ததன் அடையாளமாக, பக்கிரிசாமி, கூரையில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த துண்டு, தண்டவாளத்தின் மேல், தன் கையில் இருந்த சின்ன இரும்புத்தடியால், “கிணு கிணு…’வென்று மணி அடித்து, ஒன்று, இரண்டு, மூன்று என்று கடைசி அடியையும் அடித்து நிறுத்தினான்; தொடர்ந்து ஒரு நிசப்தம்.
அது நீடிப்பதற்குள், பள்ளிக் குழந்தைகள், அடக்கி வைத்திருந்த பேசாமையை உடைத்தெறிந்துவிட்டு, கலகலப்புடன், மடை திறந்த வெள்ளம் போல வெளியே பாய்ந்தனர்.
பள்ளிக்கூடத்து லீடர் பையனையும், மூணாம் வகுப்பு பிள்ளைகளையும் தன்னுடன் கூட்டிக் கொண்டு அவர், “தங்கம்மா வீடு எங்கேடா?’ என்று விசாரித்து, மவுனமாக நடக்கத் துவங்கினார்.
திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவர்களும், படியில் அமர்ந்திருந்த பெண்களும், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பசங்களும், கண்களில் வியப்பு மல்க பார்த்தனர். சிலர், வாத்தியாருக்கு வணக்கம் தெரிவித்தனர்.
கல் வீடுகள், ஓட்டு வீடுகள் நிறைந்த, மூன்று தெருக்கள். அவற்றைத் தாண்டி, கொஞ்சம் வயல் வரப்புகளைக் கடந்து, 30 – 40 கஜம் சேற்றில் நடந்து போன பின், அந்த சேரி வந்தது. 10 – 12 கீத்துக் குடிசைகள்; அதில், தங்கம்மா குடிசை எது?
அதோ நாலைந்து பெண்கள், வாசலில், கன்னத்தில் கை வைத்து நின்றபடியே பேசிக் கொணடிருந்தனர். அந்த வீடாகத் தான் இருக்க வேண்டும்.
அதே தான் —
“”ஏ… நம்ம பள்ளிக் கூட வாத்தியார் வர்றாங்க… தங்கம்மா வாத்தியாரு…”
குடிசை வாசற் பகுதியை அடைந்தவர், சிறிதும் தயங்காமலும், தாமதியாமலும் குடிசைக்குள் நுழைந்தார். உள்ளே அடர்ந் திருந்த பெண்கள், வாயில் கை வைத்து, சேலை நுனியால் பொத்தியபடி ஒதுங்கி நின்றனர்.
நடு வயதுள்ள ஒரு பெண்மணி, தங்கம்மாவை இடுப்போடு அணைத்தபடி இருந்தாள். நாட்கணக்கில் எண்ணெயைக் கண்டிராத தங்கம்மாவின் தலைமுடியைத் தடவி கொடுத்து, ஆறுதல் படுத்தியபடி நின்றிருந்தாள்.
“”அவள், தங்கம்மாவின் சின்னம்மா; அம்மாவின் தங்கச்சி; வேற ஊரில் குடியிருக்கிறார். இனி, தங்கம்மாவைத் தன்னோடு அழைத்துக் கொண்டு போக போகிறவர் அவர் தான்!” – பக்கத்தில் உள்ளவர்கள் கூறினர்.
“”அப்போ பள்ளிக்கூடப் படிப்பு?”
“”அவ்வளவு தான்.”
“”பொம்பளப் பிள்ளைக்கு எதுக்குப் படிப்பு?”
“”தங்கம்மா இங்கே வா…” என்று அன்புடன் அழைத்தார் வாத்தியார்.
சின்னம்மாவின் அரவணைப்பில் இருந்த அவள், அழுது கொண்டே, தயங்கி, தயங்கி வாத்தியார் அருகில் வந்து நிற்கும் முன், வாத்தியார் அவளைத் தன் கைகளால் அணைத்துக் கொண்டார்.
“”தங்கம்மா… இனி, நீ என் பொண்ணு…” என்று சொல்லியபடி, அவள் தோள் மேல் கையிட்டு, தந்தை போல் அரவணைத்து, அழைத்தபடி வெளியே வந்தவர், தன் அக்கிரகார வீட்டை நோக்கி நடக்கலானார்.

– க.ப.அறவாணன் (மே 2011)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *