(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த பங்களாவைச் சுற்றிலும் பெரிய தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் எத்தனையோ விதவிதமான மரங்கள், செடிகள், கொடிகள்! இலைகளில்தான் எத்தனை யெத்தனை வகைகள்; மலர்களில்தான் எத்தனை யெத்தனை நிறங்கள்; மணங்களில் தான் எத்தனை யெத்தனை விதங்கள்; கனிகளில்தான் எத்தனை யெத்தனை சுவைகள்! அம்மம்மா! அவற்றின் அழகை மனதினால்தான் உணர முடியுமே தவிர, வாயினால் விவரிக்கவே முடியாது.
எல்லோருக்கும் பொதுவாக இயற்கை அளிக்கும் அந்தச் செல்வத்தை பங்களாவில் குடியிருந்த ஒரு சிலர் மட்டும் ஏகபோகமாக அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தங்களைப் போன்ற மனிதர்களைத்தான் அவற்றை அனுபவிக்க முடியாதபடி அவர்களால் தடுக்க முடிந்ததே தவிர, எங்களைப் போன்ற புள்ளினங்களை அவ்வாறு தடுக்க முடியவில்லை.
அந்தத் தோட்டம் அவர்களுக்குச் சொந்தமாயிருக்கலாம்; அதன் மூலம் இயற்கை அளிக்கும் செல்வம் அனைத்தையும் அவர்களே அனுபவிப்பதற்கு உரிமையிருக்கலாம்; அந்த உரிமையும் சொந்தமும் எங்களுக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால் எங்களுடைய தயவு அவர்களுக்கு இல்லை யென்றால், அந்த இயற்கைச் செல்வத்தில் கொஞ்சமாவது அவர்கள் அனுபவிக்க முடியுமா?
யாருடைய அனுமதியுமின்றி என் தாயும் நானும் அந்தத் தோட்டத்திலிருந்த ஒரு மாமரப் பொந்தில் வசித்து வந்தோம். எங்களுக்கு அரசன் கிடையாது; சட்டம் கிடையாது; தண்டனையும் கிடையாது.
நாங்கள் அடிமைகளாயிருக்கவுமில்லை; விடுதலை கோரவும் இல்லை.
நாடு எங்களுடையது; காடு எங்களுடையது; கடல் எங்களுடையது; வானம் எங்களுடையது; மலைகள் நதிகளெல்லாம் எங்களுடையவை; மரம், செடி, கொடி எல்லாமே எங்களுடையவைதான்.
‘என்னுடையது’ என்று நாங்கள் எதையுமே சொல்லிக் கொள்வதில்லை; எல்லைக்கோடு வகுத்துக் கொள்வதில்லை; பத்திரமோ கித்திரமோ எழுதிக் கொள்வதில்லை, ரிஜிஸ்தரோ கிஜிஸ்தரோ பண்ணிக் கொள்வதில்லை; எல்லைச் சண்டை போட்டுக் கொண்டு தொல்லைப்படுவதுமில்லை; கோர்ட்டுக்குப் போய்க் கூப்பாடு போடுவதுமில்லை.
இன்னும் இறந்த காலத்தைக் குறித்து நாங்கள் வருந்துவதில்லை; எதிர்காலத்தைக் குறித்து ஏங்குவதுமில்லை; நிகழ்காலத்தோடு எங்கள் நினைவு நின்றுவிடும். ஆடுவதும் பாடுவதும் ஆனந்தக் கூத்தாடுவது மாகவே எங்கள் பொழுதெல்லாம் கழியும்.
ஆஹா! என்ன அற்புதமான வாழ்வு! எவ்வளவு ஆனந்தமான வாழ்வு!
***
இத்தகைய ஆனந்த வாழ்வுக்கு ஒரு சமயம் பங்கம் நேர்ந்து விட்டது. என்னுடைய அம்மா தேடிக் கொண்டு வந்து கொடுத்த இரையைத் தின்று நான் வளர்ந்து கொண்டிருந்த காலம். அப்போது தான் எனக்கு இறகுகள் முளைத்துக் கொண்டிருந்தன. புதிய இறகு முளைப்பதோடு என் உள்ளத்தில் புதிய உற்சாகமும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. பொந்தில் இருந்தபடி வானத்தை எட்டி எட்டிப் பார்ப்பேன். அந்த நீல வானிலே எத்தனை எத்தனையோ பறவைகள் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்கும். அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் பறந்து சென்று அவைகளுடன் கலந்து கொள்ளவேண்டும் போல் தோன்றும். அந்தப் பறவைகள் என்னை ‘வா, வா’ என்று அழைத்தனவோஎன்னவோ—எனக்குத் தெரியாது; எனக்கு மட்டும் அவை ‘வா, வா’ என்று என்னை அழைப்பது போலிருக்கும்.
ஒரு நாள் என்னுடைய ஆவலை அம்மாவிடம் தெரிவித்தேன். “அவசரப்படவேண்டாம்; காலம் வரும்போது உன்னுடைய ஆசை நிறைவேறும்” என்று அவள் சொல்லி விட்டாள்.
“காலம் எப்போது வருவது, ஆசை எப்போது நிறைவேறுவது?” என்று எனக்கு ஆத்திரமாயிருந்தது.
அதற்கேற்றாற்போல் அன்று ஒரு சிட்டுக் குருவி, நான் இருந்த மாமரத்துக்கும் பூமிக்குமாக ‘ஜிவ், ஜிவ்’ என்று பறந்து, ‘கீச், கீச்’ என்று விளையாடி என்னுடைய ஆத்திரத்தை மேலும் மேலும் கிளப்பி விட்டுக் கொண்டே, இருந்தது.
நான் துணிந்து விட்டேன். “வான வீதிக்கு வேண்டுமானால் போக வேண்டாம்; இந்தச் சிட்டுக் குருவி போல் இங்கேயே மாமரத்துக்கும் பூமிக்குமாகப் பறந்து கொண்டிருந்தால் என்ன?” என்று எண்ணிக் கீழே இறங்குவதற்காகச் சிறகடித்தேன். ஆனால், என்ன ஏமாற்றம்! என்னால் ஓர் அடிகூடப் பறந்து செல்ல முடியவில்லை; ‘பொத்’தென்று கீழே விழுந்து விட்டேன்.
உடம்பில் பலமான அடி; வேதனையைத் தாங்க முடியவில்லை என்னால். ‘கீ, கீ’ என்று கத்த ஆரம்பித்துவிட்டேன்.
அப்போது யாரோ ஒரு சிறுமி அங்கே வந்தாள்—அவன் அந்த பங்களாவில் குடியிருப்பவர்களைச் சேர்ந்தவள் போலிருக்கிறது—என்னுடைய கதறலைக் கேட்டதும் அவள் நான் இருக்கும் இடத்திற்கு ஓடோடியும் வந்தாள். என்னைக் கண்டதும் அவளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு ஆனந்தம் உண்டாகி விட்டதோ, தெரியவில்லை. “அக்கா! கிளி, கிளி, கிளி! அக்கா! கிளி, கிளி, கிளி!” என்று அவள் கத்தினாள்.
உடனே அந்த பங்களாவிற்குள்ளிருந்து இன்னொரு பெண், “எங்கேடி, எங்கேடி?” என்று கேட்டுக்கொண்டே ஓட்டமாய் ஓடி வந்தாள்.
அவ்வளவுதான்; அடுத்த கணம் நான் அவர்களால் கைது செய்யப்பட்டேன்.
என்னுடைய அறியாமையால், ஆத்திரத்தால், அவசரத்தால், எனக்கு இயற்கையாகவே கிடைத்திருந்த சுதந்திரம் அன்று அநியாயமாகப் பறிக்கப்பட்டு விட்டது!
“விடுதலை, விடுதலை, விடுதலை!” என்று நான் கதறும் படியாகிவிட்டது!
அவர்கள் என்னமோ, என்னிடம் எவ்வளவோ அன்பு காட்டத்தான் செய்தார்கள். பழமும் பாலும் பரிந்து பரிந்து ஊட்டினார்கள். அடிக்கொரு தரம் என்னைத் தடவித் தடவிக் கொடுத்தார்கள். ஆத்திரத்தால் நான் ‘வெடுக், வெடுக்’ கென்று கடிப்பதைக்கூட அன்பினால் முத்தமிடுவதாக அந்த அப்பாவிகள் நினைத்துக் கொண்டார்கள்!
ஆனால் எனக்கோ பழமும் வேண்டியிருக்கவில்லை; பாலும் வேண்டியிருக்கவில்லை. யாருக்குவேண்டும், இந்தப் பழமும் பாலும்?
ஐயோ! நம்மைக் காணாமல் அம்மா எப்படித் தவிக்கிறாளோ!
ஆம், ஆம். அவள் பேச்சைக் கேட்காத நமக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டியதுதான்!
இப்படியெல்லாம் என்ன வெல்லாமோ எண்ணி யெண்ணி என் மனம் அலை பாய்ந்தது.
அந்தச் சிறுமிகளோ என்னுடைய சுதந்திர வேட்கையைக் கொஞ்சமாவது பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மேலும் மேலும் ராஜோபசாரம் செய்துகொண்டே இருந்தார்கள்.
என்னுடைய சிறைச்சாலைக்குத்தான் எத்தனை விதமான சிங்காரம்! எத்தனை விதமான வர்ணப் பூச்சு; எத்தனை விதமான பட்டுக் குஞ்சங்கள்!
“ஆஹா! அதன் அழகுதான் அவர்களுக்கு எவ்வளவு ஆனந்தத்தைக் கொடுத்தது!
என்னை அடிமை கொண்ட அவர்களுக்கு வேண்டுமானால் அந்தப் பாழும் சிறைச் சாலை ஆனந்தத்தை அளிக்கலாம்; அடிமைப்பட்ட எனக்கோ? அதைப்பார்க்கும் போதெல்லாம் ஆத்திரம்தானே பற்றிக் கொண்டு வருகிறது!
எனக்கு மட்டும் போதிய பலம் இருந்திருக்குமானால், அதை அன்றே உடைத்தெறிந்து விட்டல்லவா வெளியே வந்திருப்பேன்?
***
வேடிக்கையைக் கேளுங்கள் : அதே பங்களாவில் என்னைப் போல் ஒரு நாயும் வளர்ந்து வந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரே எரிச்சலாயிருக்கும். அதன் அடிமை வாழ்வில்தான் அதற்கு எவ்வளவு திருப்தி:
“நன்றியுள்ள பிராணி” என்று பெயரெடுக்க வேண்டுமாம், பெயர்! அதற்காக அது தன்னை யார் என்ன சொன்னலும் பொருட்படுத்துவதில்லை. “சீ, நாயே!” என்று எத்தனை முறைதான் விரட்டியடிக்கட்டுமே—இல்லை, செருப்பால்தான் அடித்துத் துரத்தட்டுமே—ஊஹூம், அப்போதும் அது வாலை ஆட்டு ஆட்டு என்று ஆட்டிக் கொண்டு, அவர்களுக்குப் பின்னால் சுற்று சுற்று என்று சுற்றிக் கொண்டு தானிருக்கும். அதற்குச் சுதந்திரமும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம்; எச்சில் சோறும், எலும்பும், ‘நன்றியுள்ள பிராணி’ என்ற பட்டமும் கிடைத்தால் போதும்!
சீசீ; அதுவும் ஒரு ஜன்மமா!
அதை அவிழ்த்து வெளியே விடுகிற மாதிரி என்னையும் வெளியே விட்டால்……?
அந்த நாயைப் போல் நான் திரும்பியா வருவேன், அடிமையாயிருக்க? “ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்!” என்று ஆகாய வீதியை நோக்கிக் கம்பி நீட்டிவிட மாட்டேனா!
***
அன்றொரு நாள் அந்தச் சிறுமிகள் இருவரும் என்னிடம் வந்து, “ரங்க ரங்க ரங்க ரங்க ரங்கா! அக் கக் கக் கக் கா!” என்று கூச்சலிட்டனர்.
நானும் அப்படியே சொன்னேனோ இல்லையோ, அவர்களுக்கு ஒரே குஷி!
ஏன் தெரியுமா? அவர்கள் எனக்குப் பேசக் கற்றுக் கொடுத்தார்களாம்; நான் உடனே பேசக் கற்றுக்கொண்டு விட்டேனாம்!
என்ன அசட்டுத்தனம்! எனக்கிருந்த வெறுப்பில் நான் அவர்களுக்கு அழகு அல்லவா காட்டினேன்? அதற்குக் கோபித்துக் கொள்வதற்குப் பதிலாக இப்படி ஆனந்தப்படுகிறார்களே!
இப்படி எண்ணி நான் வியந்து கொண்டிருந்த போது “அக்கா! இந்தக் கிளிக்கு இப்போது இறக்கைகள் வளர்ந்து விட்டன; கத்திரிக்கோல் கொண்டு வருகிறேன், வெட்டி விடுகிறாயா?” என்றாள் தங்கை.
எனக்குப் பகீரென்றது. “அடி பாவிகளா!” என்று சபித்தேன்.
நல்ல வேளையாக அக்கா அதற்கு ஒப்பவில்லை. “இறக்கைகள் வளர்ந்த பிறகுதான் கிளி பார்ப்பதற்கு அழகாயிருக்கிறது! அதை வெட்டிவிட்டால் அவலட்சணமாய்ப் போய்விடாதோ?” என்றாள்.
அப்பாடி! ‘பிழைத்தேன்!’ என்று நான் பெருமூச்சு விட்டேன்.
அந்தப் போக்கிரிப் பெண் அத்துடன் நிற்கவில்லை. “எனக்கென்ன, ஏமாந்தால் என்றைக்காவது ஒரு நாள் அது ஓடிவிடப் போகிறது!” என்று அவள் தன் அக்காவை எச்சரித்தாள்.
“ஏண்டி, இவ்வளவு நாள் நம்மிடம் வளர்ந்த பிறகு அது எங்கேயாவது நன்றி கெட்டதனமாக ஓடி விடுமா?” என்றாள் அக்கா.
ஐயோ, பாவம்! என்னையும் அவள் அந்தக் கேடுகெட்ட நாயுடன் சேர்த்துக் கொண்டாள் போலும்! இவளை நானா என்னிடம் நன்றி காட்டச் சொல்லி அழைத்தேன்? ரொம்ப அழகுதான்!
“கூண்டின் கதவைத் திறந்துதான் பாரேன்; அது நன்றி கெட்டதனமாக நடந்துகொள்கிறதா, இல்லையா என்று!” என்றாள் தங்கை.
அக்காவுக்கு ரோசம், பொத்துக் கொண்டு வந்து விட்டது. “திறந்தால் என்னடி? ஓடிப்போய்விடுமா?” என்று தங்கையிடம் வீம்பு பேசிக் கொண்டே, நான் அத்தனை நாளும் அடைபட்டிருந்த சிறையின் கதவை அவள் அன்று திறந்தே விட்டாள்!
அவ்வளவுதான்; அதற்குப் பிறகு ஒரு நிமிஷமாவது அங்கே தாமதிக்க எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது? “விடுதலை, விடுதலை, விடுதலை!” என்று கூவிக்கொண்டே எடுத்தேன் ஓட்டம்!
ஆஹா! எத்தனையோ நாட்களுக்குப் பிறகு—எவ்வளவோ கஷ்டங்களுக்குப் பிறகு—நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாகக் கிடைத்த விடுதலையில்தான் என்ன இன்பம்! என்ன இன்பம்!
– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.
– ஒரே உரிமை, 1950, வெளியீடு எண்:6 – அக்டோபர் 1985, புத்தகப் பூங்கா, சென்னை.