காலையில் ஒருநாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 29, 2018
பார்வையிட்டோர்: 6,111 
 
 

எனக்கு வயது ஐம்பது.

எனக்கு என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள்; பொழுது போக்குகள்; நான் சாப்பிடும் உணவுகள்; என் தூக்கம் என்று ஒவ்வொரு நிகழ்வும், சம்பவங்களின் கோர்வையும் எல்லா ஷணமும் மிகவும் பிடித்திருக்கிறது. நான் செய்யும் எதையுமே மிகவும் பொறுமையாக அனுபவித்து ரசனையுடன் செய்வேன்.

அதனாலேயே இன்னமும் ஒரு ஐம்பது ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ ஆசை. அதற்காக என் உடம்பை எப்போதும் நான் மிக கவனமாகப் பார்த்துக் கொள்வேன். அதை மிகுந்த ஈடுபாட்டுடன் சரியான எடையில் அழகாகப் பராமரிப்பேன். என் ஆத்மாவும், அழகிய உடம்பும் நெருங்கிய தோழர்கள். தினமும் விடிகாலையில் எழுந்து கடற்கரையில் நடக்கும் பழக்கம் கடந்த இருபது ஆண்டுகளாக எனக்கு உண்டு.

அன்றும வீட்டின் கதவைத் திறந்து தெருவில் இறங்கியபோது அதிகாலை நேரத்தின் இளம் குளிர் உடம்பை இதமாகத் தொட்டது.

உடம்பு சிறிது நேரம் நின்றது. பிற வேளைகளில் ஜன நெரிசலும்; வாகனப் போக்குவரத்துக்களின் அதிர்வும் நிறைந்திருக்கும் சாலை, ஆங்காங்கு குப்பைகள் குவிந்து கிடந்தாலும் கூட, பொழுது விடியாத இருளில், பகற் பொழுதில் இல்லாத அழகுடன் நீண்டு கிடந்தது.

உடல் மெதுவாக நடக்கத் துவங்கியது.

தேநீர் விற்பனை செய்கிற சிற்சில கடைகள் மட்டும் திறந்திருந்தன. கடற்கரையை நோக்கி நீண்டிருந்த அகன்ற சாலையில் நடப்பதற்குத் தடையாக எந்த இடையூறுகளும் இல்லை.

உயர்ந்த சுவரின் பின்னிருக்கும் மருத்துவமனை வளாகத்து மரங்களில் இருந்து குயில்கள் கூவுகின்ற ஓசைகள் விட்டு விட்டு ஒலித்தன.

கிழக்கு நோக்கி நடக்க நடக்க சாலையில் குப்பைகளும் அசுத்தங்களும் குறைந்து கொண்டே வந்தன.

சாலைக் கீழ்க்கோடியில் வடக்கு தெற்காக நீண்டு செல்கிற பெரிய சாலையில் முடிந்தபோது குளிர் காற்றின் வேகம் கொஞ்சம் அதிகமாகியது. சாலையைக் கடப்பதும் மிக சுயேச்சையாக இருந்தது. சாலைக்கு இணையான அகன்ற நடைபாதை மிக சுத்தமாகப் பேணப்பட்டிருந்தது.

சற்று நேர நடைக்குப் பின், கடலின் ஈர வாசனையை காற்றில் நுகர முடிந்தது. கடல் மட்டத்திற்கு சிறிது மேலே மட்டும் ஒன்றிரண்டு ஒளிக்கீற்றுகள் தோன்றியிருந்தன. உச்சி வானமெல்லாம் இருளைத்தான் பூசிக் கொண்டிருந்ததது.

வலதுபுறம் நடைபாதையில் கொஞ்சம்கூட விரைவு காட்டாமல் உடல் நடந்து கொண்டிருந்தது.

நடைபாதையில் ஒற்றையாக, ஜோடியாக, மூன்றுபேர், நான்குபேராகவும் சிலர் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சிலர் ஒருவருடன் ஒருவர் அன்றைய அரசியல் விவகாரங்களைப் பற்றி கருத்துக்கள் தெரிவித்துக் கொண்டே நடந்தனர்.

அதிகாலையில் கடற்கரையில் நடக்க வருபவர்கள் அனைவருமே செல்வந்தர்கள் போலத்தான் தோன்றினர். அதில் பலர் நடந்து வருவதற்கென்றே விசேஷ காலணிகள் அணிந்திருந்தார்கள். அவர்களின் முகங்களில் பெருமிதம் நிறைந்திருந்தது.

கிழக்கே நிறைய ஒளிக்கோடுகள் தோன்றியிருந்தன.

சற்று தூரத்தில் அந்த வயதான வீணை வித்வான் மிக மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார். அதிகாலையில் எழுந்து கடற்கரையில் நடந்து வந்து கொண்டிருக்கிறோம் என்ற தீவிரத்தன்மை ஏதும் இல்லாமல் நிதானமாக இருந்தார். அவருக்குச் சிறிது பின்னால் அவரது மனைவி தன் பெரிய உடம்பை ஆட்டியபடி மிகவும் மெதுவாக வந்து கொண்டிருந்தார்.

வானத்தில் மெலிதாக வெண்மை வந்திருந்தது.

இரண்டு அழகிய பெண்கள் ஓடுவதற்கென்றே தைத்துக் கொண்ட உடைகளில், உயர்ந்த வகை ஷூக்களின் சப்தத்துடன் மூச்சு வாங்க ஓடிவந்து கொண்டிருந்தார்கள்.

சற்று தூரத்தில் மிகவும் வாளிப்பான தோற்றத்தில் ஒரு பெண் தலை குனிந்தபடி வந்து கொண்டிருந்தாள். அவள் பிரபலமான நடிகை. இதற்கு முன்னால் ஒருநாள் கூட அவள் நடக்க வந்ததில்லை. எல்லோருமே ஒருவித புதுமையோடும் கிளர்ச்சியோடும் அவளைப் பார்த்தார்கள். அவளுடைய கெட்டியான கரிய கூந்தல் அனாயசமாக கலைந்திருந்தது. தான் ஒரு பிரபல நடிகை என்ற பிரக்ஞை அவளது உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் பிரகாசித்தது. அவளைத் தாண்டி நடந்தபோது அவளிடமிருந்து விலை உயர்ந்த வாசனைத் திரவியத்தின் நறுமணம் குப்பென்று தாக்கியது. நடிகைக்கு பாதுகாப்பாக ஒருபெண் கொஞ்சம் பின்னால் மிகுந்த கவனத்துடன் ஒரு வெள்ளை நிற பொமரேனியன் நாயுடன் வந்து கொண்டிருந்தாள்.

சூரிய உதயத்தில் அடிவானத்து வர்ணக் கலவை ரம்மியமாக இருந்தது. வெள்ளைக் கொக்குகள் அழகாக அணிவகுத்துச் சென்றன. கடற்கரை மணலில் கோடுபோட்ட நண்டுகளின் கால் தடங்கள் பிரமிக்க வைத்தன.

வானம் நன்கு வெளுத்துவிட்டது. வியர்வையில் ஆடைகள் ஈரமாகின.

நடைபாதையின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் பிச்சை எடுக்கும் ஏழைகள் சிலர் உட்கார்ந்திருந்தார்கள். வழக்கமாக அவர்களுக்கு பிச்சை போடும் வடநாட்டுத் தம்பதிகள் கனத்த உடம்புடன் கைகளில் ரொட்டிகளுடன் வேகமாக வந்து கொண்டிருந்தார்கள்.

காந்தி சிலையருகே புல்வெளியில் சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டது உடம்பு. இளைஞர்கள் ஆங்காங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

அடிவானம் வரை துளி மேகம் இல்லாமல் சிவப்பு வண்ணம் பரவிக் கிடந்தது.

நடந்து வந்த நீண்ட பாதையில் திரும்பி நடந்தது உடம்பு.

கடலில் தூரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நிறைய கப்பல்கள் நின்றிருந்தன. சிறிது தூரம் நடந்ததும் மீண்டும் அந்த நடிகையைப் பார்க்க முடிந்தது. நடைபாதையை ஒட்டியிருந்த புல்வெளியில் வளர்ந்திருந்த சிறிய மரத்தைப் பிடித்தபடி கடலை நோக்கி திரும்பியபடி அமைதியாக நின்றிருந்தாள். நடந்து கொண்டிருந்தவர்கள் நடிகையின் பெயரை உச்சரித்தபடி சென்று கொண்டிருந்தார்கள்.

எந்தக் காட்சியிலும் தயக்கம் காட்டாமல் உடல் நடந்து கொண்டே இருந்தது.

அனைத்தையும் கவனித்தபடி, புல்வெளியின் தூரத்தில் ஒரு சிறிய வலிமையான மரம் ஒன்றின் தாழ்ந்த கிளையில் ஒரு இளைஞன் அமர்ந்து என்னவோ செய்து கொண்டிருந்தான். அவனை யாருமே கவனிக்கவில்லை.

கடலின் அடுத்த ஓரத்தில் சூரியனின் விளிம்பைக் கண்டுவிட்டுக் கண்களை திருப்பிய போது தூரத்து மரக்கிளையில் அமர்ந்திருந்த அந்த இளைஞன் கீழே குதித்தாற்போல் இருந்தது. ஆனால் அவனுடைய உடல் புல்வெளியில் விழவில்லை. சட்டென தடுக்கப்பட்டாற் போல உடல் நின்று விட்டது. எதிலும் படாமல் அந்தரத்தில் நின்றாற் போலிருந்தது. சில கணங்கள் சென்ற பின்தான் புலப்பட்டது. அந்த இளைஞன் தூக்குப் போட்டுக் கொண்டிருந்தான்.

சரலென சுழற்சியுடன் காற்று சுழன்று வீசிக் கடந்தது. பளீரென உச்சி வானில் தங்க வண்ணத்தில் நட்சத்திரம் ஜொலித்தது.

நடந்து கொண்டிருந்த சிலர் தூக்குப்போட்டுத் தொங்கும் இளைஞனைப் பார்த்து அவனை நோக்கி வேகமாக ஓடினார்கள். நடிகையும் அங்கு விரைந்து வந்தாள். ஒருவர் தொங்குகிற இளைஞனின் முழங்கால்களை தனது மார்போடு இறுக்கிக்கொண்டு, கழுத்தில் கயிறு இறுக்காமல் இருக்கும்படி உயர்த்தி நின்றார். இன்னொருவர் வேகமாக மரத்தில் ஏறி சில நிமிடங்களில் கயிற்றை அறுத்து விட்டார். .

இளைஞனின் உடல் புல் தரையில் கிடத்தப்பட்டு உயிர் இருக்கிறதா இல்லையா என்று பரிசீலிக்கப்பட்டது. நல்ல வேளையாக உயிர் இருந்தது.

சூரியன் முழுமையாகக் கடல் மட்டத்தைவிட்டு எழும்பி தக தகத்தது.

“யாருக்காவது கார் இருந்தா கொண்டுவாங்க… இவரை ஹாஸ்பிடலில் சேர்த்திடலாம்…” இளைஞனை பரிசீலித்தவர் அவசரமாக சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்த நடிகை தன்னுடைய டிரைவரை உடனே செல்போனில் அழைத்தாள். கார் விரைந்து வந்தது. இரண்டு வாலிபர்கள் இளைஞனை காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தார்கள்.

கார் சென்றவுடன் நடிகை நிதானமாக நடக்கத் துவங்கினாள். கூட்டம் அவளை நன்றியுடன் பார்த்தது.

உடம்பு எந்தப் பற்றுதலும் இல்லாமல் வேகமாக நடக்கத் துவங்கிற்று.

இனி நாளைக் காலையில்தான் இந்த உடம்பு கடற்கரைக்கு வரும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *