‘காலம்’ எனும் மலைப்பாம்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 12, 2012
பார்வையிட்டோர்: 10,734 
 
 

அவனுக்கு மேலாளர் மீதான கோபம் பீறிட்டு எழுந்தது.

நேற்று அவர் பேசியது இவன் உடலில் அனல்கொட்டிவிட்டது போல் தகித்துக்கொண்டிருந்தது. அவரைத் தாக்கி தாடை சிதறும் அளவுக்கு நையப்-புடைத்துவிடலாம் என்றெல்லாம் எண்ணிப்பார்த்தான். சற்று பயமும்,அடக்கமும் சேர்ந்துகொண்டதால் மனதினுள் கெட்ட கெட்ட வார்த்தைகளில் அவரை கிழித்து திருப்தி அடைந்துகொண்டான்.

அன்றைய தின சாயங்காலப்-பொழுது.காற்றின் உரசல்களில் இலைகள் உதிர்ந்து தன்னை விடுவித்துக்கொண்டிருக்கும் நேரம். குளிர்ந்த இரவுக்குப் பழகிவிட்ட அனைத்து பொருட்களும் தங்களை அந்த சூழலுக்குத் தயார்படுத்திக்-கொண்டிருக்கும். நரம்புக்-கிளைகளினூடே பரவிய ஒளி சிறிது மங்கி அதன் செறிவுகளுக்குள் நிலவின் ஈரக்கற்றைகளைப் படர விட இடம் கொடுத்திருக்கும் இத்தகைய அதி உன்னதமான வேளையில் மனம் இன்னும் அந்த சிறிய சஞ்சலத்திலிருந்து விலகவில்லை.

ஏதோ யாருக்குமே நடக்காத ஒன்று எனக்கு நடந்து விட்டிருந்ததைப் போல.

“நீயல்லவா அதை கவனித்திருக்க வேண்டும்,உன்னுடைய கவனக்
குறைவு னு தான் நான் சொல்லுவேன்.”

“நீ பிரசன்ஸ் மைன்ட் ல இல்ல”,

“அது எப்படி உனக்கு மறக்கும்?”

சற்றும் எதிர்பாராமல் எனது மேலாளர் என்னை வைதுவிட்டது எனக்கு கோபமாக வந்தது. நான் என்ன அப்படி தவறிழைத்து விட்டேன்.அப்படியே இருந்தாலும் அவர் எதற்காக என்னை இப்படி பேசவேண்டும். யார் மேலோ உள்ள கோபத்தை என்னிடம் காட்டுகிறாரா?

அதுவும் எனக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு மத்தியில்.எனக்கு அவர் மேல் கடுங்கோவமாக வந்தது.மேலும் அவர் நான் இல்லாத பொழுது மற்றவர்களிடம், இக்குறிப்பிட்ட சம்பவத்திற்காக idiot,nonsense என்றெல்லாம் திட்டியதாகவும் என் நண்பர்கள் வழி கேள்விப்பட்டேன். இல்லை அவர் நேரத்தை எதிர்ப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சில தினங்கள் நான் அலுவலகத்திற்கு தாமதமாக வந்தபோது கூட அவர் என்னை ஒன்றும் கேட்டது கிடையாது. ஏனென்றால் அவ்வளவு மதிப்பும், நம்பிக்கையும் என் மேல் அவருக்கு இருந்தது.

நான் வேலை செய்யும் விதம் மற்றவர்களிடமிருந்து விலக்கானது.கொடுத்ததை நிறைவேற்றும் வரை
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் வேலை ஒன்றே என எடுத்துக்கொண்டு அவ்வளவு டெடிகேடிவாக செய்து முடிப்பேன்.என்னை யாரும் அனாவசிய கேள்விகள் கேட்கும் வகையில் நான் இருந்ததும் கிடையாது,நடந்து கொண்டதும் கிடையாது. முக்கியமான சீனா மற்றும் தாய்லாந்த் வங்கி கிளைகளின் டெலிவரிக்களின் பொழுது இரவு பகல் உழைத்தமைக்காக எனது நிர்வாகத்தினர் என்னை பாராட்டி சிறந்த பொறியாளருக்கான அப்ரிசியேசன் அவார்டை இரு முறை எனக்கு அளித்துள்ளனர்.

எனக்கு முன்னால் சேர்ந்த சீனியர் என்ஜினியர்களுக்கு கூட அது கிடைத்தது கிடையாது. பெரும்பாலும் என்னுடைய நண்பர்கள் என்று இருக்கும் அருண்,பிரேம் ஆகிய இருவரிடம் மட்டுமே நான் அதிகம் பழகுவேன்.யாரிடமும் அன்னியோன்யம் காட்டிப் பழகியது கிடையாது.அதிகப் பேச்சும் வைத்துக்கொள்ள மாட்டேன். அலுவலகத்தில் அடிக்கடி டீம் அவுட்டிங் என்று ஏதாவது சுற்றுலாத்தலங்களுக்குப் போவது,சினிமா பார்க்கச் செல்வது ,வித விதமான மதுப் புட்டிகளை அடுக்கிய நட்சத்திர ஹோட்டல் களிப்பு பார்ட்டிக்களில் பங்கேற்பது போன்ற அனைத்தையும் முடிந்த வரை தவிர்ததுவிட நினைப்பதுண்டு.ஆனால் என் மனத்திலுள்ள அமண எலி கோவணம் கட்டிக் கொள்ளச் சென்றுவிடும்.

நான் என்ன என் வேலை என்ன மாதமானால் வரும் சம்பளம் என்ன என்பதே என் உலகம். என்னைப் பொறுத்த வரை அள்ள அள்ள சம்பாத்தியம் செய்ய வேண்டும்,கூடிய வகையில் சுருக்கமாக வாழ்கையை வாழ்ந்து பிறருக்கு முன்னால் நிறைவாக இருக்க வேண்டும்.தான் தனக்கு என்ற தன்மையுடைய சுயநல நோக்குள்ள வாழ்க்கை என்னுடையது. சிறு வயது முதலே என் பெற்றோர்களும் என்னை இதற்குத் தயார்படுத்தினது போல் தான் வளர்த்தனர். படி படி ,எதையாவது படி,சம்பாதி,மக்கள் பேரு பெற்று பிறருக்கு முன்னால் கவுரவமாக இரு. இந்த போதனைகள் எனக்கென்று எந்த ஒரு தனிப்பட்ட திறமை கொண்ட உலகத்தையும் காட்டித் தரவில்லை. நான் எப்போதும் அது ஒரு குறை என்றும் நினைத்ததில்லை. இப்போது வயது 30 யைத் தொட்டு விட்டது. முடி விழ ஆரம்பித்த இந்த மூன்றாவது வருடத்தில் முன் பக்கம் அரை வட்ட வடிவில் சிறியதாக பளிச்சிடும் வகையில் சொட்டை வேறு விழுந்துவிட்டது. இரண்டு வருடங்களுக்கு முன் எனக்கு திருமணமானது.மனைவியும் வேலைக்குச் செல்கிறாள்.

குழந்தைக்கான ஆயத்தங்களை இன்றும் சற்று தள்ளி வைத்துக் கொண்டு வருகிறோம்.அதுவும் பணத்தின் பொருட்டு ஒரு பாதை எனக்கு இருந்ததுண்டு. அதில் தவறாமல் பயணம் செய்து இலக்குகளை அடைந்து வருகிறேன். நான் என்னை சுயநலவாதி என்று சொல்லிக்கொள்வதில் ஒரு போதும் வருத்தப்பட்டது கிடையாது. என்னை குறை கூறுபவர்களிடம் நான் சொல்வது,வேலை என்று வந்துவிட்டால் சுயநலம் காண்பதே சிறந்தது என்பேன். சாதாரண மெடீரியல் வாழ்க்கை மேற்கொள்ளும் என்னைப் போன்றவர்களுக்கு சிறிய அவமானமும் கவரிமானின் உதிர்ந்த கேசம்தான்.

அலுவலகம் முடிந்து பேருந்துநிறுத்தம் வரை இவ்வாறு என் மனதை நிரடிய ஞாபகங்களுடன் தோமலூரிலிருந்து பொம்மனஹள்ளி வரை செல்லும் காப் ஒன்றினுள் ஏறிக்கொண்டேன்.

நான் அப்படியிருப்பதன் காரணமாகவே கம்பெனியில் பல பேருக்கு என்னைப்பிடிப்பதில்லை அவன் ஒரு நட்டு என்பார்கள், பழம் என்றும் ரொம்பவே தெளிவானவன் என்றும் சொல்வதுண்டு.சிலர் அவன் பொழைக்கத் தெரிஞ்சவன், நீ சும்மா இரு என்று பலருக்கு ஆணை கட்டுவதும் உண்டு. இவை அனைத்தும் என் செவிக்கு கார்ப்பரேசன் அடித்த கொசுமருந்து போல வந்து புகுந்துவிடும். இதை பொருட்படுத்தியதே கிடையாது, எதையும் சிறிய செவ்வகவடிவ தாளில் எடுத்து புட்டத்தில் துடைத்துவிடுவேன். இவ்வளவுதான் என்று. ஆனால் என்னுடைய நேர்மையிலும், வேலை சார்ந்த விசயங்களிலும் குறை கூறினால் என் காதோரங்கள் சிவந்துவிடும் .

நள்ளிரவின் ஆழ்ந்த உறக்கத்தில் ஒரு குழந்தையின் திடீர் பீறிடல் போல இரு முனைகளிலும் சைரன் ஒலி என் மூளைக்குள் ஒலித்தது சற்று நிதானித்து சுற்றுப் பக்கம் கவனித்தேன். வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றோடு எப்போதுவேண்டுமானாலும் உரசிக்கொண்டு விபத்துக்குள்ளகிவிடும் என்பது போல சென்றது. தோமலூரிலிருந்து ஈஜிபூரா சிக்னல் வரை மாலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் அனைத்தும் ஊர்வலம் செல்லும் காட்சிதான் தென்படும் அன்றும் அப்படித்தான் இருந்தது. ஜன்னல் வழியே வலப்பக்கம் நோக்கினேன், மந்தி மரத்தைக்கட்டிப்பிடித்த தொனியில் தொடை இறுக்க உடை அணிந்த பெண்ணொருத்தி தன்கணவனோ, பாய் பிரண்டையோ அணைத்துக்கொண்டிருந்தாள். அதற்கு பின் இருந்த கார் ஒன்றில் அந்த நெரிசலிலும் அவசரமாக பரஸ்பரம் முத்தப்பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

வானம் சற்றே குடையைத் தாழ்த்திப்பிடித்திருந்தது. அந்த ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் அதாவது தோமலூர் முதல் ஈஜிபூரா வரை இரு பக்கமும் காட்டுச்செடிகள முளைத்திருக்கும். அதன் வழியே ஊசி குத்தும் குளிர்வான காற்றை உடல் எப்போதும் உணரும். மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஈஜிபூரா சிக்னல் தாண்டி எனது காப் சோனி வேர்ல்ட் நிறுத்தத்தை வந்தடைந்தது சிலர் அவசர அவசரமாக இறங்கி எங்கோ கால் இடறி கிணற்றில் விழுந்தவனைக் காப்பாற்ற ஓடுவது போல் ஓடினார்கள் .சிக்னல் நிறுத்தத்தில் மக்கள் இங்கும் அங்குமாக அலைக்கழித்தனர்.

இறங்குபவர்களை விடாமல் வண்டிக்குள் ஏறுபவர்கள் முட்டிக்கொண்டும் தள்ளிக்கொண்டும் தங்களது கால்கடுக்கை ஒழிக்க வந்துகொண்டிருந்தனர் .

காப் நிர்வகிப்பாளர் அவர்களைத் தாண்டிக்கொண்டு மடிவாலா மசூதி, பொம்மனஹள்ளி ,எலக்ட்ரானிக் சிட்டி என்று தன் கட்டைக் குரலில் தொடர்ச்சியாக அழைத்துக்கொண்டிருந்தார். இவை அனைத்தையும் கவனித்துவிட்டு மீண்டும் என் மனது மேலாளரிடம் சென்றது. எனது காப் இப்போது கனரா பேங்க் நிறுத்தத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. அவர் யார்? எனக்குப் பிறகு வேலையில் அமர்ந்தவர் ,வங்கி ஊழியராக இருந்தவர். அவருக்கு இப்போது வேலை பார்க்கும் அலுவகத்தைப் பற்றி என்ன ஞானம் இருக்கிறது? அதன் அமைப்பு, நாசூக்குத்தன்மை, வடிவம் ,சூழல் இவை எல்லாம் அவருக்கு ஏதாவது தெரியுமா? நான் சொல்வதை எல்லா நேரங்களிலும் தலையாட்டும் அவருக்கு இரண்டு நாட்கள் தொடர்ந்து விடுப்பு எடுத்தமைக்கும், மின்னஞ்சலை அவருக்கு ஒட்டு போட்டு அனுப்பாமல் இருந்தமைக்கும் என்னை ஏய்க்க எப்படி மனம் வந்தது .நான் விடுப்பு எடுத்து வந்ததும் அவர் என்னை ஒன்றும் கவனிக்கவில்லை. இத்தனைக்கும் அது முன்னரே அவரிடம் அனுமதி பெற்று நான் எடுத்துக்கொண்ட விடுப்பு. அன்று மனிதர் மௌனமாக இருந்தார். அந்த மௌனம் அவர் என்னைத்திட்டப்போகும் கணமாக மாறியிருக்கிறது .

இப்போது திடீரென்று நினைவுகளிலிருந்து விடுபட்டு, மேல் மேலாக நகர்ந்த சிறு கட்டிடங்களை வெறித்துக்கொண்டே இருந்தபொழுது கனரா பேங்க் நிறுத்தத்தையும் எனது காப் தாண்டியிருந்தது.

கோரமங்களா வாட்டர் டாங்க் சிக்னலை நோக்கி வாகனம் விரைந்துகொண்டிருந்தது சிறுசிறு மின் மினிப் பூச்சிகளாக டூ வீலர் களும்,இருளில் தெரியும் வெளிச்சத்தில் தன்னை மூழ்கடித்துக்கொண்ட கார்களும், பஸ் கனவான்களும் தனக்குரிய சுதந்துரத்துடன் சென்றனர். முன்பு நத்தையாக இருந்த எனது காப் தற்போது சிறுத்தையாக மாறியிருந்தது .வாங்கடா பார்ப்போம் என்று ஆக்ஸ்சிலேட்டரை அழுத்தினார் ஓட்டுனர். அனைவருடைய வேகமும்,அகங்காரமும், தன்னிலைமறத்தலும்,
உட்பட கதாநாயக பாத்திரமும் தற்போது கூண்டில் அடைத்த கிளிப்பிள்ளை கணக்காக அந்த கோரமங்களா சிவப்பு விளக்கைப் பார்த்தவுடன் அடங்கியது. பல வாகனங்கள் அணைக்கப்பட்டது.
பெரியவன் சிறியவனை முறைப்பதுபோல் பேருந்துகள் கார்களையும்,ஆட்டோக்களையும் முறைத்து ஒரு விபத்தில் விழுங்க நின்றது. அமைதியாக, நிதானமாக ஓட்டுனர்கள் அனைவரும் தியானப்பயிற்சி ஒன்றுக்கு தங்களைத் தள்ளிக்கொள்ள முனைந்தவாறு அமர்ந்திருந்தனர். இரவை நோக்கிச் செல்லும் ஆரம்ப நேரம், வன்முறைகள்,குரோதங்கள்,சிலிர்ப்பு,சாகசம்,போதை அனைத்தும் துளிர் விடும் நேரம் அல்லது அணையும் நேரம் எனலாம். அந்த இரவொளியில் சாலையை நோக்கி புறமான சாயல்களை தூரங்கட்டிவிட்டு கண்ணில் தென்படும் இயற்கையுடன் அகத்தில் நுழைந்து மெய் விலக ரசிக்கத்தோன்றும். சிலர் கார் கதவின் கண்ணாடி ஏற்ற சட்டத்துக்கு மேல் கைகளை வைத்து தலைப்பக்கம் வருடிக்கொண்டே அடுத்த வாகனத்தை கவனித்தனர் சிலர் அண்ணன் எப்போது எந்திரிப்பான் திண்ணை எப்போது காலியாகும் என்று அந்த பச்சை விளக்கானை எதிர்கொண்டிருந்தனர்.அனைவருக்கும் அந்த இரு நிமிட காத்திருப்பு ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி தியரிக்கு
மேற்கோளாக அமைந்துவிடுகிறது.அவர்களுக்கு அது ஒரு சிறுசிறை,தங்களது வேகத்தையும், ஆண்மையையும் கட்டுப்படுத்தும் சர்வாதிகாரி. அதிலிருந்து விடுப்படும் நேரம் அவர்கள் உலகில் கிடைக்கும் சுதந்திரம்.ஆனால் பயணிகளைப் பொறுத்தவரை அது எந்த கணக்கிலும் அடங்காத வீச்சமடித்தாலும் கொசு புழங்கினாலும் பொறுத்துக்கொண்டு உச்சுகொட்ட வைக்கும் தானாக உருவாகும் பிரக்ஞை.அதை கணவன் உதைப்பது போல் மனைவிகளாகத் தாங்கிக்கொள்ளவே
செய்ய வேண்டும்.st.ஜான்ஸ் ஹாஸ்பிடல் வழியே வரும் வாகனங்கள் தங்களது நேரம் முடிந்தவுடன் ஒருவருக்கு ஒருவர் ஓட்டப்பந்தயத்தில் மூன்று என்ற எண் உச்சச்சரிப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொன்டதும் வீரர்களின் கால்கள் புரவியின் கால்களுடன் ஒப்பிட்டு ஓடத்துவங்குவது போல் மதகு திறந்த வெள்ளமாக விரைந்து வெளி ஏறத்துவங்கினர்.ஏன் இவ்வளவு வேகம்?எதற்கு இவ்வளவு அவசரம்?எந்த நாடு,எந்த கோடி. இதை எல்லாவற்றிலும் காட்டிக்கொள்ளாதது ஏன்? அது
எல்லோருக்கும் பதில் தெரிந்த ஒரு புதிர்.ஒரு நீண்ட பேரு மூச்சுடன் நான் என் தலையை ஆடு போல் ஆட்டிக்கொண்டேன்.

10 அல்லது 20 மின்சுற்றுகளுக்கு ஒரு முறை மூளை தன்னை மற்றொரு ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ளும் என்று எனது கல்லூரி நண்பன் ஜனார்த்தனன் எனக்கு தெரிவித்ததுண்டு.அதை ஒரு வாறு அனுபவிக்கவும் முடியும்.

தற்போது நேற்றைய மேலாளரின் வசவு இப்போது சற்று மறந்திருந்தது.ஏன்? இப்போது நான் பார்க்கும் வேடிக்கையிலா? அல்லது வெளிப்புற சூழல் காரணமாகவா ? நேற்றெல்லாம்
எனக்கு உறக்கம் சரியாக வரவில்லை.தோற்றுப்போன காதலன் கணக்கில் காதலியாக அவர் திட்டிய வார்த்தைகளையும் ,பிறர் என்னைப்பற்றி நினைத்துக் கொள்ளும் விதத்தையும் எண்ணி வெறுப்படைந்து கொண்டேன் .நேற்று இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. பகல் பொழுதின் ஒரு பிரிவில் காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போழுது அது மீண்டும் மனதில் காளானைப்போல் முளைத்து உள்ளங்கையை கவ்வியது.

எழுந்து சென்று எனது மேலாளரின் சட்டையை இழுத்து அவரை கன்னம் பழுத்துவிட நினைத்தேன்.
ஆனால் தணலின் மேல் நற்பெயர் என்கிற நீர் சொரிந்து அணைத்துவிட்டேன்.நேற்றைக்கு நிகழ்ந்த சம்பவத்தின் வீரியம் இன்று குறைந்துள்ளது.

இது காலம் நிகழ்வினை மலைப்பாம்பொன்று கோழியை,பெருச்சாளியை மெல்ல விழுங்கும் காட்சி மாதிரி இருந்தது.

தற்போது எனது காப் மடிவாலாவைத் தாண்டிக்கொண்டிருந்தது. முந்தைய வேகம்தற்போது இல்லை.இனிமேல் எதிர் வரப்போகும் சாலையின் அலங்காரமும்,வாகனத்தின் தொகையும் ஓட்டுனர்
நன்கறிந்து இருந்தது போல் வண்டியை முடுக்கினார்.நேராக தமிழக எல்லைக்கு செல்லும் வழி அதாவது ஓசூர் சாலையில் நுழைந்தது வாகனம்.இந்த இடத்தில் கிட்டத்தட்ட 5 முதல் 6
கிலோமீட்டர் வரை நீள்கிறது அந்த ராட்சத பாலம்.அதை வெறும் பாலம் என்று சொல்லிவிட முடியாது.அதுதான் மலைப்பாம்பு, அதாவது செயல் செயலை மற்றொன்றின் மூலம் விழுங்கும்
மலைப்பாம்பு.

பெரும்பாலும் நான் மேல் விவரித்துள்ள அனைத்து அனுபவத்தையும் தாண்டி,ஒரு நீண்ட தொடர்ச்சியான, சிறைகளற்ற இடம்பெயர்தலுக்கு முதுகெலும்பாக தரையிலிருந்து சுமார் 100 அடி இருக்கும் பெரிய பாலம் என்று சொல்லலாம்.அதன் இரு பக்கமும் தாடை துருத்தி நீட்டியது போன்ற பெரும் திண்ணையில் சோடியம் விளக்குகள் ஊன்றப்பட்டு பாலம் முழுவதும் அதன் ஒளி அலைகள் இறைந்து கிடக்கும். சற்று கவனித்தால் கங்காரு குட்டி போல வால் நீண்டு அதில் ஒரு லைட் கீழே உள்ளங்காலில் ஒரு லைட் பிறகு முன் பக்கமாகப் பார்த்து குனிந்த தலையில் ஒரு லைட் என்று கட்டிவிட்ட மூன்று சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்ட ஒரே கம்பி உருளைத் தூண் அது. அந்த பாலத்தில் ஏறிக்கொண்டால் நேராக நம்மை அரவணைத்து கூம்பு போல் நீட்டிக்கொண்டிருக்கும்
பல்வடிவ மென்பொருள்நிறுவனம் ஒன்றின் வாசலருகில் இறக்கிவிடும். ஆனால் பெரும்பாலும் நமது காப் பெரியவர்கள் அதில் ஏறுவதில்லை.ஏறினால் கடைசியாக கண்ணாடிக்கூண்டில் அமர்ந்திருக்கும் துரைக்கு கப்பம் செலுத்த வேண்டியிருக்கும்.எனவே பெரும்பாலும் அவர்கள் கீழ் ரோட்டையே தேர்ந்தெடுப்பது வழக்கம்.

நான் இன்னொன்றையும் கவனித்தேன்.எனது காப் கோரமங்களா சிக்னலில் நின்றுகொண்டிருந்தபொழுது, ஓட்டுனருக்கு இரண்டு முறை அலைபேசியில் அழைப்பு வந்தது.முதல் அழைப்பை எடுத்து காதில் வைத்த மனிதர், ஹல்லோ என்று சத்தமாக ஆரம்பித்தார்.”பர்தாயிதினி ,நாளே ரஜ இல்வா”.. என்று ஏதோ கன்னடத்தில்சொல்லிக்கொண்டிருந்தார்.அப்போது சிறிய புன்சிரிப்பு,அது சகோதர சகோதரிகள், காதில் அதிர்ஷ்டப்பட்டுவிட்ட ஹெட் செட்- ஐ முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அது அவர்களது அலைபேசி உரையாடல்.அதை இவருடைய பதிலுடன் ஒப்பிட்டதால் வந்த சிரிப்பு.இரண்டாவது அழைப்பில் அவருக்கு தமிழ் நன்றாகவே தெரிந்தது என்பது போல் பேசிக்கொண்டிருந்தார்.அவருக்கு இடப்புறம் அமர்ந்திருந்ததால் எனக்கு அவரது குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. அவரது தகப்பனார் இறந்ததும்,அவருடைய 11 ம் நாள் காரியத்துக்கு ஊருக்கு செல்லப்போவதாகவும் அவர்
பேசுவதிலிருந்து தெரிந்தது.

பக்கத்தில் அமர்ந்திருந்த சக நண்பரிடம் அலைபேசியைத் துண்டித்த பிறகு,ஏதோ சொன்னார்.அது அவரது அப்பாவைப் பிரிந்த துக்கம் என்பது நன்றாகத் தெரிந்தது.தற்போது அதிலிருந்து மீள்வதே பெரிதாக இருக்கிறது என்றும் சொன்னார். காலம் இறப்பைக்கூட பல வருடங்களுக்குத் தக்க
வைக்கும்.அது ஒரு விதிவிலக்கில்லாதநிகழ்வு.மலைப்பாம்பு அதை ஜீரணிக்க முடியாமல் விழுங்க நினைக்கும் போதெல்லாம் வயிற்றிலும், தொண்டையிலும் வலி வெளிப்படுவது போன்று உள்ளத்தில் ஒரு உணர்வு தட்டுப்படும்.அதைப் போக்கிக்கொள்வதே அதற்கு அடுத்த படியாக வரும் சக நிகழ்வுகள்.

இத்தகைய பல சம்பவங்கள் நமக்கு ஏற்படும், அப்போதெல்லாம் இரைக்காக எங்கும் நமது காலநிகழ்வான மலைப்பாம்பு தீர்க்கமுடியாத, இறக்கி கீழே தள்ளமுடியாத அளவுக்கு குறுகி தன்னை சுருட்டிக்கொண்டு ஒரு ஓரத்தில் பதுங்க ஆரம்பிக்கும்.அதன் பின் ஒன்று மற்றொன்றை புறக்கணித்து புதிய இரையை சுவைக்க ஆரம்பிக்கிறது.அதை கழித்து ,மற்றொன்று அதை மென்று முழுங்குகிறது.
ஒரு நிகழ்வு மற்றொரு நிகழ்வால் உயிரிழந்து சுவீகரிக்கப்படும் இடம் காலநகர்வாக மாறுகிறது.தன் தகப்பனை இழந்தவர் முதல் நாள் மிகவும் உடைந்து வருத்தப்பட்டிருப்பார்.தற்போது அந்த நிலையில் மனைவி அல்லது குழந்தைகள் போன்ற உருவங்களின் நிமித்தமான பற்றுதலால் சற்று போர்வை சாற்றப்பட்டிருக்கும்.அதை விலக்கிப்பார்ப்பதும் நன்கு இழுத்து மூடிக்கொள்ளுதலும் மன
முதிர்வால் மட்டுமே முடியும்.

மீண்டும் நான் எனது பழைய 20 மின் சுற்றுகளை இழந்து மறு சுழற்சிக்கு ஆளாகி தன் இருப்பிடத்துக்கு வந்துவிட்டேன்.

என்னுடைய காப் அந்த பிரம்மாண்டமான பாலத்தின் கீழ் சென்றுகொண்டிருக்கிறது. ஏறக்குறைய எலக்ட்ரானிக் சிட்டியை நெருங்கியிருந்தது. நான் மெல்ல எழுந்து கனமான என் நினைவுகளுடன் நடக்கஇயலாமல்,பாலம் முடிவடையும் இடத்தில் இறங்கிக்கொண்டேன்.

மெல்ல சாலையைக் கடந்து அடுத்த பக்கம் சென்று என் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.என்னை
என் மேலாளர் சாடியது இப்போது முற்றிலுமாக மனதிலிருந்து மறைந்துபோயிருந்தது.

இப்படித்தான் ஒவ்வொரு நிகழ்வுகளும்,அது பிறந்து , மறைந்து,அழிந்து காலம் எனும் நான் கடந்தஅந்த கங்காரு விளக்குகளைத் தாங்கிய எலக்ட்ரானிக் சிட்டி பாலத்தைப் போன்ற பெரியதொரு மலைப் பாம்பின் வாயில் சிக்கி மடிகிறது என்பதை உணர்ந்தவுடன், நான் என்னை தேற்றிக்கொண்டேன்.

ஒரு வன்மம் ,துரோகம் ,பழி ,காமம் ,ஏமாற்றம் ,காதல் ,பிறப்பு அனைத்திலும் ஒரு தாக்கம் நிச்சயமாக இருக்கும். அதன் நீட்டல் ஒரு வாரமோ,ஒரு மாதமோ அல்லது சில வருடங்களோ தாக்குபிடிக்கும்.
பிற்பாடு அது தண்ணியில் நனைத்த காகிதம் மாதிரி உலர்ந்து கிழிய ஆரம்பித்துவிடுகிறது.
நான் ஒன்றும் அவ்வளவு பெரிய மனிதன் கிடையாது.என்னை இனிமேல் மேலாளர் கோபித்துக்கொண்டாலும் அதைப் பற்றி நினைப்பதை குறைத்துக்கொள்வதே நல்லது என்று படுகிறது. மீண்டும் மூளையில் மின்சுற்றுகள் புதுப்பித்துக்கொண்டன.இப்போது எனக்கு வேறு ஒரு நினைப்பு வந்துவிட்டது. நினைக்கும்பொழுதே பழுத்த கம்பியின் மேல் விழுந்த உடல் வெட்டுப்பகுதியில்
பனிக்கட்டியை தட்டிவிட்டது போல இருந்தது.அது காமம்.நான் வைத்துக்கொண்ட எந்தவொரு தடையையும் இப்போது ஞாபகப்படுத்திக்கொள்ள என் ஆண்மையும், ஏற்பட்ட கிளர்ச்சியும் முயற்சிக்கப்போவது இல்லை எனவே இத்தனை நாட்கள் தள்ளிபோட்டதை ஏன் இப்போது செய்யக்கூடாது.இதோ வீட்டையும் நெருங்கிவிட்டேன். அவள் எனக்கு முன்பே வருபவள்.இதோ இருக்கிறாள். நேராக சென்றேன்,டிவி யில் மூழ்கியிருந்த அவளை தட்டி எழுப்பி குளித்து அதுவும் நன்றாக அகில் கலந்த நீரில் குளித்து வர சொன்னேன்.மிகவும் வெட்கப்பட்டு உள்ளே சென்றால்.நான் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு கை,கால் , முகம் கழுவிவிட்டு கை வைத்த பனியனுடன் லுங்கிக்கு மாறியிருந்தேன். அவள் வருவதற்கு எப்படியும் இருபது முதல் இருபத்தைந்து நிமிடங்கள் ஆகும் என்பதால், தின காரியமாக இன்றைய நினைவுகளாக எனக்கு தோன்றிய அனைத்தையும் டைரியில் ஏற்றினேன்.

எழுதி பேனாவை கீழே வைத்தபொழுது அவள் குளியலறையை விட்டு வெளியே வந்தாள்.அவளை அப்படியே ஒரே மடக்காக குடித்துவிடலாம் என்கிற நேர்த்தியில் இருந்தாள்.அவள் மெல்ல அருகே வந்து நான் மேஜைக்கு மேல் வைத்திருந்த டைரியை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தாள்.

அவளுக்கு நான் தினமும் டைரியில் எழுதுவதைப் படிப்பது பழக்கம்.அனைத்தையும் நெற்றியை சுருக்க அதில் விரவிய கோடுகளுடன், மந்திரம் சொல்வது போல் உதடுகளை மட்டும் இணைத்து இணைத்து ஒரே மூச்சாக படித்து முடித்தாள்.

“என்னங்க இன்னைக்கு இவ்வளோ எழுதிருக்கீங்க ? ஏதாவது எழுத்தாளர் ஆகணும்னு விருப்பமோ ?” என்று பரிகாசம் செய்தாள்.

“இது இந்த நேரத்துல முக்கியமில்ல, ஆனா அதுக்கெல்லாம் ரொம்ப பிரயத்தனப்படனும், என்னோட பாரேன்ட்ஸ் விரும்பியிருந்தா போகியிருக்க வாய்ப்புண்டு. ஆனா தோப்பனார் என்ன படிச்சு
வேலையில உட்கார்ந்து சம்பாதிக்க சொல்லிருக்கார்”.அந்த விவரணமெல்லாம் அப்புறம் சொல்றேன். இப்ப வா, நான் விரும்பி படிச்ச புஸ்தகத்த பத்தி சொல்றேன்” என்று அவளை படுக்கையறைக்கு
அழைத்து சென்றேன்.

தோமலூரிலிருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை நிகழ்ந்த புற நிகழ்வுகளால் காலம் கொண்டு அக நிகழ்வுகளை விழுங்கியது போல், அடுத்துவரப்போகும் ஒரு முடிவில்லாத இரவும் பழையதைக் கழிக்கும் என்பதை மட்டும் டைரியில் குறிப்பிட மறந்துவிட்டேன் , அவள் கைகளைப்பிடித்த உஷ்ணத்தின் அவசரத்தில் ,டைரியிலுள்ள ஒரு பக்கக் காதை மடித்து மூடிவைத்தபடி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *