காய சண்டிகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 8,714 
 

அவளை நான் முதன்முதலில் பார்த்தது ஒரு மார்கழி மாதத்தில் தான். உடல் பெருத்து உப்பி , வயிறு எது , இடுப்பு எது மார்பு எது என்றே இனம் பிரித்துச் சொல்ல முடியாத ஒரு பெண்ணை மார்கழிப் பனியில் பார்த்தால் என்ன ? இல்லை சித்திரை கடுங்கோடையில் பார்த்தால் தான் என்ன? ஆனால் இந்த கவித்துவமான எண்ணமெல்லாம் அவளை எங்கள் ஊருக்கு வரவழைத்த இயற்கை அல்லது கடவுளுக்குத் தெரிந்திருக்க வில்லை.அவளுக்கு வயது முப்பத்தைந்தும் சொல்லலாம் , ஐம்பத்தைந்தும் சொல்லலாம் அப்படி ஒரு பெருத்த உடல் வாகு. என்ன உடை அணிந்திருக்கிறாள் என்றே கணிக்க முடியாதவாறு ஒரு உடை. அவளுக்குத் துணையாக வேறு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை.

அவள் உடையை வைத்து அவள் இந்தியாவின் எந்த பாகத்தைச் சேர்ந்தவள் என்றே கணிக்க முடியவில்லை. நல்ல சிவப்பு நிறம் அவள் உடல் அழுக்கையும் மீறித் தெரிந்தது. , கை நிறைய வளையல்கள் அணிந்திருந்தாள், நெற்றியில் பத்து பைசா சைசில் குங்குமம். மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை வளயல்களால் நிரப்பியிருந்தாள். மிகவும் பெருமனாக இருந்தாள் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். . குறிப்பாக அவள் வயிறு . அது பெருத்து உப்பியிருந்தது.கையிலிலிருந்த வளையல்களையும் , வயிற்றின் அளவையும் வைத்து அவள் கர்ப்பமாக இருக்கலாம் என ஊர் மக்கள் மிகவும் அச்சமுற்றனர்.

அவளுடைய சிவப்பு நிறம் மிகவும் பேசப்பட்டது. அவள் வடநாட்டிலிருந்து வந்திருக்கலாம் என்றனர் ஒரு சிலர்.அவளது சிவப்பு நிறத்தை ஒரு காரணமாக முன் வைத்தனர். அவள் யார்? எங்கிருந்து வந்தாள்? உறவினர் யாரேனும் உண்டா?என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க அவளுக்கும் தெரியவில்லை , அவளைப் பற்றித் தெரிந்தவர்களும் யாருமில்லை.அப்படியெல்லாம் இருந்தால் அனாதை தானே? அனாதைகளுக்கு சமுதாயம் தானே பெயர் வைக்கும் , அந்த உலக வழக்கத்தை ஒட்டி அவளுக்குப் பைத்தியம் என்று பெயர் சூட்டினர்.

அவளுக்கு அந்தப் பெயர் கொஞ்சமும் பொருத்தமில்லை என்பது என் அபிப்பிராயம் ஏனென்றால் பைத்தியங்களுக்கு உரிய இலக்கண விதிகள் எல்லாவற்றையும் அவள் மீறினாள். கத்தமாட்டாள் , வன்முறையில் ஈடுபட மாட்டாள் , தனக்குத் தானே பேசிக் கொள்ளும் பழக்கமும் இல்லை.மனோததுவ நிபுணர்கள் பைத்தியங்களில் குறைந்தது எண்பது வகை இருப்பதாக சொன்னதாக நினைவு. அந்த எண்பதில் இதுவும் ஒரு வகையாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். ஒரே ஒரு விஷயம் அவளை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்திக் காட்டியது.

அது தான் அவளது பசி. எந்நேரமும் யார் வீட்டிலாவது போய் உணவு கேட்ட வண்ணம் இருப்பாள். அவளுக்கு அன்று யார் வீட்டுத் திண்ணை பிடித்திருக்கிறதோ அதில் உட்கார்ந்து கொண்டு நன்றாகச் சாப்பிடுவாள். எந்த நேரத்தில் யார் என்ன சாப்பிடக் கொடுத்தாலும் வேண்டாம் என்ற சொல்லே வராது அவளிடமிருந்து. முந்தைய நாள் மீந்து போன இட்டிலிகள்,பள்ளிப் பிள்ளைகள் மிச்சம் வைத்த மதிய சாப்பாடு,லேசாக அழுகத் தொடங்கிய பழங்கள் இப்படி எப்பொருள் யார் யார் கை கொடுப்பினும் சாப்பிடுவாள்.பின்னே எங்களால் விருந்தா படைக்க முடியும் இந்த விலைவாசியில்? ஏதோ எங்களால் ஆனது தனி ஒருத்திக்கு உணவு குறையாமல் பார்த்துக் கொண்டோம். தமிழகத்தின் தென்கோடியில் வாழும் எங்களுக்கு அதுவே பெரிய விஷயமாகத் தெரிந்தது. நாங்கள் அளித்த உணவுகள் எல்லாம் அவள் யானைப் பசிக்குச் சோளப் பொரியாகவே தோன்றியது. குளிக்கும் வழக்கமே கிடையாதோ என்று நினைக்குமளவு அழுக்காக இருப்பாள் ஆனால் எந்நேரமும் குங்குமம் மட்டும் அழியாமல் பார்த்துக் கொள்வாள்.

அவளுடைய வயிறு எந்நேரமுமும் எத்தகைய உணவையும் செரிக்க வல்லதாக இருந்தது.அவள் வாய் திறந்து அதிகம் பேசாததால் அவள் பெயரே எங்களுக்குத் தெரியவில்லை.பொதுவாக “அந்தப் பைத்தியம் இருக்கா பாரு?” , “அந்தப் பைத்தியத்தக் கூப்பிடு” என்றே வழங்கி வந்தோம்.அவளும் ஒன்றும் சொன்னதேயில்லை. என்னதான் இருந்தாலும் நாங்கள் அவளுக்குப் படியளப்பவர்கள் அல்லவா? எங்கள் பேச்சை மறுக்கக்கூடாது என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. இதை என் மனைவியம் சொன்னபோது “அந்தக் கோட்டி அவ்வளவு வெவெரமாவா யோசிக்கி? அப்படி யோசிச்சா நல்லது தான், நீங்க ஒங்க சோலியப் போய்ப் பாருங்க அந்தக் கோட்டி எப்படி யோசிச்சா ஒங்களுக்கென்ன?” என்று சொல்லிவிட்டு பாத்திரம் துலக்கச் சென்று விட்டாள். அவரவர் வேலை அவரவர்க்கு

.அவள் சாப்பிடும் அளவையும் , எந்நேரமுமும் சாப்பிடக் கூடிய தன்மையையும் பார்த்து எங்கள் ஊர்த் தமிழாசிரியர் அவளுக்கு காய சண்டிகை என்று பெயரிட்டார். அது மணிமேகலை என்ற காப்பியத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் என்றும் , எவ்வளவு சாப்பிட்டாலும் பசியடங்காது அவளுக்கு என்றும் , கடைசியில் மணிமேகலை தன் அட்சயப்பாத்திரத்திலிருந்து உணவிட்ட பின்னரே அவள் பசியடங்கியது என்றும் எங்களுக்கு விளக்கமளித்தார். அந்தப் பெயர் எங்களுக்குப் பொருத்தமாகத் தோன்றவே காய சண்டிகை என்ற அந்த பேயரைக்கொண்டே அவளை நாங்கள் குறிப்பிட ஆரம்பித்தோம். எந்த மணிமேகலை இவள் பசியடக்க வரப் போகிறாள் என்று கொஞ்ச நாள் கேலி பேசிச் சிரித்தோம்.

மாதங்கள் செல்லச் செல்ல அவள் வயிற்றின் அமைப்பே அதுதான் என்பதும் அவள் கர்ப்பம் அல்ல என்பதும் எங்களுக்குப் புரிந்தது. அது ஒரு வகையில் எங்கள் ஊர் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பெருத்த நிம்மதியளித்தது. எங்கள் ஊரின் எல்லாத் தெருக்களிலும் அவள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தாள். எப்போது பார்த்தாலும் வாய் எதையாவது மென்று கொண்டிருக்கும் . அவளுடைய ஒரே சொத்தான ஒரு கிழிசல் பையில் மாற்றுடைகள் வைத்திருந்தாள் என்று நாங்கள் நினைத்தோம் . இல்லை. அதிலும் வளையல்களும் , கடைகளில் கொடுக்கும் தின் பண்ட பாக்கெட்டுகளும் வைத்திருந்தாள் என்பதை ஒரு நாள் அவள் பையைத் தலைகீழாகக் கவிழ்த்து குங்கும டப்பாவைத் தேடிய போது நாங்கள் தெரிந்து கொண்டோம்.

அவளது உணவுக் கவலையை ஓரளவு நாங்கள் தீர்த்து விடுகிறோம். ஆனால் பெண்ணென்பதால் மற்ற பிரச்சனைகளை எப்படி அவள் சமாளிக்கிறாள் என்று அறிய எனக்கு ஆவலாக இருந்தது. எனக்கு பெண்களின் உடற்கூறு பற்றி கொஞ்சம் தெரியும். நான் சொல்ல வந்தது அவளது மாத விடாய் பிரச்சனை பற்றி. அதை அவள் எப்படி எதிர்கொள்ளுவாள்? இல்லை இது போன்ற பெண்களுக்கு அது வராதோ? மனதை மிகவும் திடப் படுத்திக் கொண்டு என் மனைவியிடம் இது பற்றிக் கேட்க முடிவு செய்தேன்.

ஒரு நாள் அவள் என்னுடன் உல்லாசமாக பேசிக் கொண்டிருந்த நேரம் பார்த்து “ஏம்மா? காய சண்டிகை அதான் அந்தப் பைத்தியத்துக்கு வீட்டுக்குத் தூரம் வந்தா அது என்ன செய்யும்? “என்றேன்.அவளுக்கு அன்று வந்தது பாருங்கள் கோபம். அது போன்ற கோபம் எங்கள் 15 வருட இல்வாழ்க்கையில் வந்து நான் பார்த்ததில்லை. “ஒங்களுக்கு என்ன புத்தி இப்பிடிப் போகுது? ச்சீ! பொண்டாட்டி கிட்ட பேசுத பேச்சைப் பாரு. வரவர உங்களுக்கு அறிவு கொளுந்துவிட்டு எரியி. அந்த கருமத்தயெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு நீங்க என்னத்த கிளிக்கப் போறீங்க?”என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்னை எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுத்து விட்டு வீட்டுத் திண்ணையில் கொசுக் கடியில் படுக்க விட்டு விட்டாள். அதனால் என்னால் நான் நினைத்ததை தெரிந்து கொள்ளவே முடியவில்லை.

அவளைப் பற்றிய கற்பனைகளும் கதைகளும் ஏராளம் உலாவின. நம் நாட்டில் எதற்கு வேண்டுமானாலும் பஞ்சம் வரலாம் ஆனால் கதைப் பஞ்சம் மட்டும் மக்கள் மத்தியில் வரவே வராது. மக்கள் மத்தியில் என்று ஏன் குறிப்பிட்டேன் என்றால் ” சினிமாக்காரர்கள் கதைப் பஞ்சத்தால் அரைத்த மாவையே தப்புத் தப்பு ஏந்திய ஆயுதத்தையே ஏந்துகிறார்களே “என்று நீங்கள் என்னைக் கேட்டு விடக் கூடாது பாருங்கள்.அதற்காகத்தான்.சரி. அவளைப் பற்றிய கதைகளுக்கு வருகிறேன். அவள் பக்கத்து ஊரில் ஒரு பெரிய பணக்காரரரின் மனைவி என்றும் , அவர் இறந்து போய் விடவே அவர் விட்டுச் சென்ற திரண்ட சொத்துக்களை அபகரிக்க வேண்டி சில உறவினர்கள் இவளுக்கு சூனியம் வைத்து இவளை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டார்கள் என்றும் ஒரு சாரார் கதை சொல்லினர்.

அவள் ஒரு சூனியக்காரி என்றும் எவர் வீட்டிலிருந்தாவது தலைச்சன் குழந்தையை திருடிச் செல்லவே இப்படி வேஷம் போடுகிறாள் என்றும் வேறு சிலர் பயமுறுத்தினர்.தலைச்சன் குழந்தையின் மண்டை ஓட்டில் மை தயாரிப்பார்கள் , அந்த மையினால் பல பயங்கர விஷயங்களை சாதிக்கலாம் என்ற அடிப்படை உண்மை கூட உங்களுக்குத் தெரியவில்லை என்றால் நீங்கள் இந்திரா சௌந்தரராஜன் கதைகளைப் படித்ததில்லை தமிழ் சினிமாவின் பக்திப் படங்கள் பார்த்ததில்லை,அதுவுமில்லாமல் அக்கம்பக்கத்தவரோடு அதிகம் பேசியதில்லை என்று அர்த்தம்.அப்படி யாரும் இருக்க முடியாது என்பதால் கதையை மேலே தொடர்கிறேன்.

எங்கள் ஊரின் ஒரே நாத்திகவாதியான அறிவொளி என்பவர் “இவ வாங்கிச் சாப்பிடற அன்னிக்கு அந்த வீட்டுல ஏதாவது நல்லது நடந்துடிச்சினா அவளை சாமியாக்கிடுவீங்களேடா” என்று சொல்லி எங்களைக் கேலி செய்தார், நாங்கள் பலமாக மறுக்கவே அது போல நடந்த பல உதாரணங்களை எங்களை நோக்கி வீசினார்..அவர் சொன்னபடி நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.எல்லாவற்றையும் சாதகமாகப் பார்க்கும் டீக்கடை கோவிந்தன் அப்படி நடந்தால் அது அவளுக்குப் பாதுகாப்புத்தானே . என்னதான் பைத்தியம் என்றாலும் “அவளும் பெண் தானே! ராத்திரியில வெட்டவெளியில படுக்கறது கொஞ்சம் பாதுபாப்புக் குறைச்சல் தான் , நம்ம ஊர் களவாணிப் பயலுவோளை நம்ப முடியாது” என்று அபிப்பிராயப்பட்டான்.

அவன் யாரைச் சுட்டிச் சொல்கிறான் என்று எனக்குப் புரியவில்லை , ஆனால் அங்கிருந்த சிலருக்குப் புரிந்திருக்க வேண்டும் என்பது மெள்ள எழுந்த நமுட்டுச் சிரிப்பால் தெரிந்தது.வயிறு பெருத்து , நாற்றமடிக்கும் அவளிடம் யாருக்கு எப்படி காமம் வரும்? என்று நான் நினைத்திருந்ததை மாற்றியது டீக்கடை கொவிந்தனின் பேச்சு. அந்தப் பேச்சு நடந்த அன்றிலிருந்து எனக்கு காயசண்டிகையின் பாதுகாப்புக் குறித்து பெரும் கவலை பிடித்துக் கொண்டது. அவளை அப்படி வெட்டவெளியில் உறங்க அனுமதிப்பது நல்லதல்ல என்று எனக்குத் தோன்றியது. என் மனைவியிடமும் இது பற்றிக் கூறினேன் . “அதுக்குன்னு அவள வீட்டுக்குக் கூட்டி வந்துடாதீங்க, இங்க இருக்கறவங்களுக்கே மாசக் கடசியில காய் வாங்கி சமைக்க முடியல , இந்த லட்சணத்துல அவ வேற வந்துட்டா அவ்ளதான் ! வாங்கற அரிசி ஒரு வாரத்துல காலியாகி நாமளும் தெருவுல தான் நிக்கணும்” என்றாள்.

ஏற்கனவே நான் அனுபவப்பட்டவனாதலால் உடனே சரணாகதி அடைந்து விட்டேன்.நான் வெறுமே இரக்கப்பட்டதாகவும் அவளை அழைத்து வரும் எண்ணமே கிடையாதென்றும் அடித்துச் சொன்ன பிறகு தான் சமாதானமானாள் என் தட்டில் கொஞ்சம் நெய் விழுந்தது. “இதல்லாம் பெரிய பொறுப்புங்க ! பெரிய பெரிய பணக்காரங்களே செய்ய மாட்டாங்க ! நாம வெறும் நடுத்தரக் குடும்பம் இந்த மாதிரி புரட்சியெல்லாம் செய்ய முடியுமா?”என்றாள் என்னை சமாதானப் படுத்தும் குரலில். எனக்கு மோர் சாதம் சாப்பிட வேண்டும் போல் இருந்ததால் ” ஒரு ஆதரவற்ற அனாதையை வீட்டுல வெச்சிருக்கறதுக்குப் பேரு புரட்சியா?”என்று வாய் வரை வந்ததை அடக்கிக்கொண்டு சாதம் போட்டு மோர் ஊறறும்படி சொன்னேன்.ஊறுகாயை ஒரு நக்கு நக்கினேன். மனதுள் ஞானோதயம் பிறந்தது. “நாம் யார் இதைப் பற்றியெல்லம் கவலைப் பட? எல்லாம் இறைவன் செயல் அல்லவா? அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான்(ள்?) எனும்போது நான் ஏன் இது குறித்து சிந்தித்து மனதைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டும். விதி வழி மதி செல்லும் என்று எல்லாரும் கூறுகிறார்கள். அப்படியென்றால் காயசண்டிகைக்கும் அது பொருந்தும் தானே?” என்ற எண்ணம் ஓடி என் தார்மீகக் கவலையைக் குறைத்தது.

என்னடா இவன் இப்படிக் கையாலாகாதவனாக இருக்கிறனே என்று கண்டிப்பாக நீங்கள் யோசிக்க மாட்டீர்கள்.ஏனென்றால் நாமெல்லாம் நடுத்தட்டைச் சேர்ந்தவர்கள். சுஜாதாவின் பாஷையில் சொல்லப்போனால் மத்தியமர்..இதற்கு மேல் என்ன ஐயா ஒரு மத்தியமரிடம் நீங்கள் எதிர்பார்க்க முடியும்? மற்றவர்களைப்போலில்லாமல் ஏதோ தெருவோடு போகிறவளைப் பற்றி கவலைப்பட்டேனே அப்போதே தெரியவில்லையா நான் சராசரிக்கு மேலானவன் என்று. அது போதாதா ஐயா உங்களுக்கு?

கதையின் இந்தக் கட்டத்தில் ஒரு குடும்பத்தை நான் உங்களுக்குக் கண்டிப்பாக அறிமுகப்படுத்தியாக வேண்டும். அதுதான் ஓட்டை வீட்டு காசிம்பாய். ஓட்டை வீடு என்று அவர் வீட்டைச் சொல்வது அந்த வீட்டிற்குக் கொடுக்கும் மரியாதை. நான்கு சுவர்களும் , பெயரளவில் ஒரு கூரையும் இருந்தாலே வீடுதான் என்ற நம்பிக்கையில் தான் ஆறு வருடங்களுக்கு முன் பாய் அதில் தன் குடும்பத்தோடு குடி வந்தார் . அந்த வீட்டின் ஒரே ஒரு அறையில் தான் மேற்கூரை இருக்கும் . மற்ற அறைகளில் எல்லாம் வானம் தான் கூரை. பாய் வீட்டார் குடி வருவதற்கு முன் கவனிப்பாரற்றுக் கிடந்த அந்த இடிந்த வீட்டின் சாவி பால்காரி பார்வதியிடமிருந்தது.அந்தச்சாவி அவளிடம் எப்படி வந்தது என்று கேட்டால் அவளுக்கே பதில் தெரியாது என்றுதான் நினைக்கிறேன். நேரடி வாரிசு யாரும் இல்லாத சொத்து என்பதால் அந்த வீட்டின் மேல் யாரும் அக்கறை காட்டவில்லை.அது இடிபாடாய்க் கிடந்தது.

ஒரு வயதான தென்னை மரம் விழுந்ததினால் ஒரு பக்கச் சுவரில் விரிசல் விழுந்திருந்தது.எங்கள் ஊர் ஒரு குக்கிராமம் என்பதால் தான் அது இன்னமும் சிதிலமாகவே கிடந்தது. பெருநகரங்களில் அப்படி ஒரு அனாமத்து இடம் கிடைத்தால் அது இந்நேரம் ஒரு பெரிய வணிக வளாகமாக உருமாறியிருக்கும். அதன் உரிமையாளர் யார் என்று விசாரித்துப் பார்த்தால் ஏதாவது ஆளுங்கட்சி மந்திரி குறைதபட்சம் ஒரு எம்.எல்.ஏயின் மறை பெயரில் இருக்கும்.இதெல்லாம் நமக்கெதற்கு? நாம்தான் மத்தியமர் ஆயிற்றே காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுவதோடு நம் கடமை முடிந்து விட்டதே. சரி ! மீண்டும் கதைக்கு வருவோம். தொழிலில் நஷ்டமாகி பெரும் பணக் கஷ்டத்துடன் கையில் காசு இல்லாமல் மனைவியையும் , மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்த காசிம்பாய்க்கு அந்த ஓட்டை வீடு அரண்மனையாகத் தெரிந்ததில் ஆச்சரியமில்லை.

பார்வதியும் இவர்களின் நிலை கண்டு இரங்கி சாவி தேவையே இல்லாத பூட்டைத் திறந்து வீட்டை வாடகைக்கு விட்டாள். அவள் யார் வாடகை வாங்க? இருந்தாலும் , மாதம் அவரால் கொடுக்க முடிந்ததைக் கொடுப்பார் பாய். பார்வதியும் கொஞ்சம் நியாய உணர்வுடன் பால் மிஞ்சிப் போகும் போதெல்லாம் பாய் வீட்டுக்கு குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்புவாள். அதை அவர்கள் வாங்கிக் கொண்டார்களா இல்லை பார்வதி வெறுமே அப்படிக் கொடுப்பதாகச் சொன்னாளா என்பதை கண்டுபிடிக்க முடியாமலிருந்தது.ஏனென்றால் பாயம்மாவிடம் இது பற்றிக் கேட்டால் நம்மிடம் பேசுவதையே நிறுத்தி விடும் அளவுக்கு ரோசம் உள்ளவர்கள்.ரம்ஜான் பண்டிகையின் போது காசிம்பாய் வீடு பார்வதிக்கு பிரியாணி தர வேண்டும் என்ற ஒரு உடன்படிக்கை செயல் படுத்தப்படாமல் இருந்தது. ஏனெனில் இந்த ஆறு வருடங்களில் எந்த ரம்ஜானுக்கும் பிரியாணி செய்யும் நிலையை அவர்கள் அடையவில்லை. பொட்டல்புதுர் மசூதியிலிருந்தோ , அல்லது வேறு யார் வீட்டிலிருந்தோ வரும் பிரியாணியை குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு “அல்லாஹ் அடுத்த வருஷமாச்சும் நம்ம நெலய மாத்துவாருன்னு நம்புவோம்” என்பார் காசிம்பாய் நம்பிக்கை இழக்காமல்.

அவர் சைக்கிளில் ஊர் ஊராகச் சென்று புடவை விற்கும் வேலையைச் செய்து வந்தார். ஒருவரிடமிருந்து சரக்கு எடுப்பார் விற்ற வரை கமிஷன். இப்போதெல்லாம் யார் சைக்கிள்காரர்கள் கொண்டு வரும் புடவையை வாங்குகிறார்கள்? பஸ் ஏறி திருநெல்வேலி போனால் ஏசி கடையில் குளுகுளுவென புடவை எடுக்கலாம். அதை விடுத்து சைக்கிள் காரனிடம் போய் … !கஷ்ட காலம்.இருந்தும் எப்படியோ காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். “பள்ளிக்கூடம் ஏந்தான் லீவு விடுதாங்களோன்னு இருக்கு”என்று அலுத்துக்கொண்ட பாயம்மாவிடம் காரணம் கேட்டதற்கு கண்களில் நீருடன் “பள்ளிக்கூடம் இருந்தா பிள்ளைங்க ஒருவேளையாவது பசியாறிடும் இல்லே?”என்பார்கள். ஆனால் யார் வீட்டிலிருந்தாவது சோறு , குழம்பு கொடுத்தால் வாங்க மாட்டார்கள். “இன்னக்கி ஒரு நாள் நீங்க குடுத்துவீய மனசு நாளைக்கும் இதையே எதிர்பாக்கத் தொடங்கிட்டா சங்கடமில்ல ” என்று விளக்கமளிப்பார்கள்.

தீபாவளி பொங்கல் போன்ற சமயங்களில் யார் வீட்டிலிருந்தாவது , பலகாரங்கள் கொடுத்தனுப்பினால் அந்த பாத்திரங்களில் சர்க்கரையாவது போட்டுத் தான் திரும்பக் கொடுப்பார்கள். அந்த சர்க்கரை வாங்க அவர்கள் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும் என்பதால் நாங்கள் அப்படி பலகாரங்கள் கொடுப்பதையே நிறுத்திக் கொண்டோம்.அப்படி அவர்கள் கஷ்டப் பட்டுக்கொண்டிருக்கும் போதுதான் காசிம் பாய்க்கு கடையம் ஜவுளிக் கடை ஒன்றில் வேலை கிடைத்தது. “அல்லாஹ்வின் கருணை” என்று சந்தொஷப் பட்டது அவர் குடும்பம்.

இந்த நிலையில் ஒரு நாள் திடீரென காய சண்டிகையைக் காணவில்லை.ஒரு வீட்டில் கெட்டுப் போன பழைய சோற்றை வைத்துக் கொண்டு அவளைத் தேடிய போதுதான் அவள் தெருவில் இல்லை என்பது எங்களுக்கு உறைத்தது.எங்கள் ஊர் மக்களின் கற்பனைக்கு சரியான வடிகால் கிடைத்து விட்டது.பலர் பலவறாகப் பேசினர். அவள் வேறு ஊருக்குப் போயிருக்ககூடும் என்று நான் நினைத்தேன். ஒரு சிலர் அவள் எங்கள் ஊர்க் குளத்தில் விழுந்து செத்திருக்கலாம் என்றும் ஒரு சிலர் குழந்தைத் திருடிக் கொண்டு ஓடிவிட்டாள் என்றும் பேசினர். டீக்கடை கோவிந்தன் புதிரை விடுவித்தான். “ஏ என்ன நீங்க கண்ட மேனிக்குப் பேசுதீங்க? அவள காசிம் பாய் வீட்டுல இல்ல கொண்டு போய் வெச்சிருக்காரு”என்றான் . கூடியிருந்தவர்கள் அனைவரும் வெச்சிருக்காரு என்ற அந்த வார்த்தையை ஒட்டி தங்கள் எச்சிலையும், காமவெறியையும் கலந்து பேசினார்கள். அவர்கள் பேச்சில் பொதுவான விஷயம் பாயின் அதிருஷ்டம் , மற்றும் பாயம்மாவின் பெருந்தன்மை.

“நம்ம வீட்டுல எல்லாம் இப்புடி நடந்தா நம்ம கதி என்ன ஆகும்?” இது வேலுச்சாமியின் கேள்வி. அவன் தன் மனைவியின் தங்கையை கட்ட ஆசைபட்டு மனைவியிடம் தொடப்பக் கட்டையால் அடிவாங்கினான் என்று ஒரு கதை நிலவியது.அந்தக் கேள்வியின் மூலமாக அவன் தன் மன வக்கிரத்தை வெளிப்படுத்தியதாகத் தான் எனக்குத் தோன்றியது. என்னைப் போன்ற ஒரு சிலர் பாய் அப்படிப் பட்டவர் அல்ல என்று எதிர்வாதம் செய்தோம் ஆனால் பெரும்பான்மையின் முன் நாங்கள் தோற்றுப் போனோம். எங்களுக்கே கூட அப்படியும் இருக்குமோவென சந்தேகம் நிழலாடியது.ஒரு நாள் பாய் காசா கடையில் குங்குமம் வாங்கிக் கொண்டிருந்தார் , “என்ன பாய் குங்குமமெல்லாம் வாங்கறப்புல இருக்கு ? அவளுக்குத் தானே? அந்தப் பைத்தியத்த நல்லா வெச்சுருக்கீறா?”என்றான் மணி அதில் வெச்சுருக்கீறாவில் ஒரு அழுத்தம் கொடுத்து விஷமமாக.

பதிலொன்றும் சொல்லாமல் சிரித்து மழுப்பி விட்டு போய் விட்டார் பாய். “என்ன திமிரா போறாரு பாத்தீரா? பாக்கத்தானே போறோம் இந்தப் பவுசெல்லாம் எத்தன நாளக்கி? அது பலவீட்டுச் சோறு தின்னது இவங்க வீட்டுக் கஞ்சிக்கா அடங்கப் போவுது” என்று இரு அர்த்தம் தொனிக்க ஒரு குரல் எழுந்தது.எனக்குத்தான் பாவமாக இருந்தது. பாய் வீட்டில் ஏற்கனவே வறுமை, இதில் காயசண்டிகையின் வயிற்றுக்கு எப்படி அவர்களால் உணவளிக்க முடியும்? ஒரு வேளை பட்டினி போட்டுவிடுவார்களோ? அப்படியெல்லாம் செய்தால் அவள் அந்த வீட்டில் இருக்கவே மாட்டாளே. பொறுத்து தான் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பாய் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்ற காரணத்தை மட்டும் கேட்டு விட வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டேன்.

அதன் படியே ஒரு நாள் பாயைத் தனியாகப் பிடித்து “என்ன பாய் ? நீங்க செஞ்ச நல்ல காரியத்தை ஊரே கேலி பேசுதே “என்றேன்.”ஊருக்கு என்ன தம்பி வாழ்ந்தாலும் பேசும் ! தாழ்ந்தாலும் பேசும், அதையெல்லாம் பாத்தா கடைசியா அல்லாவோட நீதி மன்றத்துல நான் முகத்தக் காமிக்க முடியுமா?” என்றார்.என்னவோ விஷயம் இருக்கிறது என்று ஊகித்து அவரிடம் மெதுவாகப் பேசி ஏன் அவர் காயசண்டிகையை வீட்டுக்கு அழைத்து போனார் என்ற விவரம் அறிய அவர் வாயை கிண்டினேன். சுமார் ஒரு வாரத்திற்கு முன்னால் , காசிம் பாய் ஜவுளிக் கடையிலிருந்து இரவு சற்றுத் தாமதமாகத் திரும்பியிருக்கிறார். அந்த இரவு நேரத்தில் இரண்டு , மூன்று பேர் அவர்களின் பெயரை அவர் சொல்லவில்லை ,தண்ணி போட்டு விட்டு அவளிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றிருக்கிறார்கள் .

அவள் உடையெல்லாம் கிழிந்து அலங்கோலமாக நின்று பயத்தில் கத்திக் கொண்டிருந்திருக்கிறாள். நல்லவேளை அந்த நேரம் காசிம் பாய் அங்கே போய் அவர்களை விரட்டியிருக்கிறார். அந்த நேரத்திற்கு ஆனால் அவர்கள் மீண்டும் அவர்கள் திரும்பி வரலாம் என்று பயந்திருக்கிறார் பாய்.அந்த மனித ஓநாய்களிடமிருந்து அவளைக் காப்பாற்ற வேறு வழி தெரியாததால் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். “அவளுக்கு கறிச் சோறும் , மீனும் ஆக்கிப் போட முடியாட்டியும் நாங்க குடிக்கிற கால் வயத்துக் கஞ்சிய அவளுக்கும் ஊத்தறதுல நாங்க ஒண்ணும் கொறஞ்சு போயிட மாட்டோம் . சலீம் அம்மாவும் அது தான் சொன்னா,” அவர் செய்ததை நல்ல விஷயம் என்று பாராட்டினேன். ஆனால் அவர் “அட போங்க தம்பி! என் எடத்துல யார் இருந்திருந்தாலும் இப்படி தான் செஞ்சிருப்பாஹ, அப்படி நான் இண்ணும் பெருசாச் செஞ்சிடலை” என்றார். அவர் செய்தது என்னவோ காரியம் தான் ஆனால் காயசண்டிகையின் பசிக்கு இவர்கள் ஊற்றும் கால் வயத்துக் கஞ்சி போதுமா? கூடிய சீக்கிரமே அவள் பாய் வீட்டை விட்டு மறுபடி தெருக்களில் தான் திரியப் போகிறாள் என்று நினைத்துக் கொண்டேன்.

அப்போது கூட பாயின் இரக்க குணத்தையும் பெருந்தன்மையையும் நினைப்பதற்கு பதில் என் மனம் ஏனோ காயசண்டிகை அங்கே நிலைக்க மாட்டாள் என்று நினைத்தது குறித்து எனக்கே வெட்கமாக இருந்தது. எப்படியோ காயசண்டிகை தெருக்களில் படுக்க வேண்டாம். அவளுக்கு ஒரு பாதுகாப்புக் கிடைத்தது என்று நினைத்து அதை என் மனைவியிடமும் சொன்னேன். பதிலுக்கு வெறுமே தலையாட்டிவிட்டு சீரியலில் மூழ்கி விட்டாள்.

ஊர் நினைத்தபடி காயசண்டிகை பாய் வீட்டை விட்டுப் போகவில்லை. காயசண்டிகை இல்லையில்லை லெட்சுமி அப்படித்தான் இப்போது பாய் வீட்டில் அவளை அழைக்கிறார்கள் , அவர்களோடு அவள் ஒன்றி விட்டாள்.குழந்தைகளோடு விளையாடினாள். பாயம்மாவுக்குக் குழாயில் தண்ணீர் அடித்துக் கொடுத்தாள், பாயின் சைக்கிளை நன்கு துடைத்தாள் , பாயம்மா பேன் பார்த்து நன்றாக சீவி ஜடை போடும் போது பேசாமல் உட்கார்ந்திருந்தாள். எல்லாவற்றிற்கும் மேலாக தினமும் குளித்து சுத்தமாக அதே அளவு பெரிய குங்குமப் பொட்டோடு இருக்கிறாள்.இப்போதெல்லாம் யாராவது வழியில் பார்த்து தின் பண்டம் எதுவும் வாங்கிக் கொடுத்தால் வாங்க மறுத்து விடுகிறாள்.பாய் வீட்டில் சொல்லிக் கொடுத்திருப்பர்கள் போலும். பாயம்மா கொடுக்கும் சோறு அவள் வயிற்றுக்குப் போதுமானதாக ஆகிவிட்டது.

அது எப்படி? என்று யோசித்தபோது , காயசண்டிகையின் யானைப் பசி, வயிறு சார்ந்ததாக மட்டும் இருந்திருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.அது மனசு சார்ந்ததாகத் தான் இருந்திருக்க வேண்டும். ஒருவேளை அவளது பசி அன்பைத் தேடிய பசியோ? யாராலும் தீர்க்க முடியாத யானைப்பசியைத் பாயம்மா எப்படித்த தீர்த்தார்கள்? ஒரு வேளை அந்த நாளைய மணிமேகலையும் காயசண்டிகையின் பசியை அதே முறையில் தான் தீர்த்திருப்பாளோ?ஒரு வேளை குறையாத அட்சய பாத்திரம் என்பது அன்பைக் குறிக்கும் ஒரு குறியீடோ? என்றெல்லாம் எண்ணமிட்டேன். எப்படியோ காயசண்டிகை இல்லையில்லை லெட்சுமிக்கு ஒரு வீடு கிடைத்து விட்டது.ஒரு நாள் பொழுது சாயும் நேரம் கோவிந்தன் டீக்கடையில் உட்கார்ந்திருந்த போது லெட்சுமி பொட்டல்புதூர் கந்தூரித் திருவிழாவுக்கு ஓட்டை வீட்டு காசிம்பாய் குழந்தைகளோடும் பாயம்மாவோடும் பஸ் ஏறிக்கொண்டிருந்தாள் . பிரகாசமான முகத்தோடும் , சற்றே இளைத்த உடலோடும்.

– October 2012 (செம்மலர்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *