கவிஞனின் மனைவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 6,364 
 
 

சிறிதும் நினையாப்பிரகாரம், பிரபல கவிஞனான என் நண்பன் இருக்கும் அந்த நகரத்துக்கு போகநேரிட்டது.

அன்று மாலையில் போன எனது காரியம் ஆனதும் அவனுக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்துப் பார்க்கலாமெனச் சொல்லாமல் கொள்ளாமல்போய் அவன் வீட்டு அழைப்புமணியை அமுக்கினேன்.

அவன் மனைவி சாதனாதான் கதவைத்திறந்தாள்.

“ வாங்க……..…….வாங்க………… என்ன இது மின்னாம முழங்காம ”

“ சும்மாதான். ஒரு பணிரீதியிலான பயணம். நேற்றே இங்கே வரவேண்டியிருந்தது. இத்தனை தொலைவு வந்து நண்பனைப் பார்க்காமப்போனா எப்பிடி, அதுதான்…….. ”

“ நல்லது ஆனா…………. உங்க நண்பர்தான் இரண்டுநாளா வீட்லயே இல்லையே.”

அவனோ இன்னும் பெரிய அதிர்ச்சியை எனக்கு வைத்திருந்தான்.

“ ஓ…………தோழர் வெளியூர் கிளம்பிட்டாரோ ? ”

“……………………………………………….”

வெளியூரோ உள்ளூரோ அது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் எடுத்துவந்த பூங்கொத்தையும், பழங்களையும், சொக்கலேட்டுக்களையும் அவளிடம் கொடுத்தேன். நல்ல Dallmayr காப்பி தந்து உபசரித்தாள். சாவகாசமாக அமர்ந்துகொண்டு பலதையும் பத்தையும் பேச ஆரம்பித்தோம்.

பொதுவாக ஸ்கண்டிநேவிய நாடுகளில் அதன் புறநகரப்பகுதிகளில் அடுக்கடுக்கான தொடர்மனைகள் அதிகம் இருக்காது. சமபூமியில் தனியன் தனியனான வளமனைகள்தான் அதிகம். (Bangalows – தமிழ்ப்பதத்துக்கு நன்றி: தோழர் இரா. வெ.சலபதி) மிதமான சீதோஷ்ணமுள்ள இலையுதிர்காலத்தின் அம்மனோகரமான மாலைப்பொழுதில் அவர்கள் வீட்டு வதியுமறையில் இருந்து வெளியேபார்க்கவும் குறுக்கு வேலிகளால் பிரிக்கப்படாத அகன்றுவிரிந்த புற்தரையில் அமைந்த அழகழகான பல வளமனைகள் தெரிந்தன. எல்லா வீடுகளைச்சூழவும் சின்னச்சின்னதாகப் பூந்தோட்டங்கள். மகிழுந்து நிறுத்துவதற்கான சாய்ப்புகள், சிலமனைகளோடு சேர்ந்தாற்போல் பூப்பந்தாட்டத்திடல்கள். அந்திசாயவும் புற்தரைகளும் வளமனைகளும் தாமாக ஒளிபெற்றன.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் வெளியில் விளையாடவோ நண்பர்கள் வீட்டுக்கோ போய்விட்டு அவர்கள் அலர்அகவை மகள் மிதியுந்துடன் உள்ளே வந்தாள். எனக்கு சம்பிரதாய பூர்வ ’ஹலோ’ ஒன்றை வைத்துவிட்டு நேரே தன் அறைக்குள் புகுந்தாள். இக்காலத்துப் பிள்ளைகளை மணிக்கணக்கில் கட்டிப்போட இருக்கவே இருக்கின்றன கணனியும் இணைவலைகளும், அதன் பிறகு அவள் வெளியில் வரவே இல்லை.

என்னவெல்லாமோ பேசினோம். ஒன்பது மணியாகிவிட்டிருந்தது. இடையில் போன் ஒன்றும் வந்தது. என்னை மன்னிக்கச்சொல்லிவிட்டுப் போய் பேசிவிட்டு வந்தாள் சாதனா.

“ கவிஞனா……..”

“ அவர் போன் எல்லாம் எடுக்கமாட்டார். ”

மேலும் விட்ட இடத்தில் பேச்சைத்தொடர்ந்தோம்.

கவிஞன் சாதனாவை மணக்கமுதல் அவன் தன்னார்வத்தொண்டனாகப் பணிபுரிந்த இடத்தில் ஒரு தென்னாபிரிக்கப் பெண்ணையும், அடுத்து மண முறிவு செய்திருந்த ஒரு தமிழ்ப்பெண்ணையும் ‘உயிர் நீ – மயிர் நான்’ என்று காதலித்திருந்தான். அதையெல்லாம் சாதனாவும் அறிவாளோ இல்லையோ யாம் அறியோம்.

அனால் இவர்களதும் காதல் திருமணந்தான் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவளும் அப்படித்தான் சொன்னாள். மரபுச்சடங்குகளை விலக்கிய எளிமையான அவர்கள் திருமணம் தமிழகத்தில் நடைபெற்றதால் எனக்குக் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கிட்டவில்லை.

“உங்களுக்கு கவிஞனிடம் பிடித்த விஷயங்கள் என்ன. எதைக்கண்டு அவனுக்கு மனதில் இடம் கொடுத்தீர்கள்? ” என்று கேட்டேன்.

“அவரது பெண்ணியச் சிந்தனைகள், மானிடவிடுதலை மற்றும் மண் சார்ந்த கவிதைகள், அதன்மேலான ஈடுபாடு போன்றன மனதைத் ஆகர்ஷித்தன. இன்னும் மேடைப்பேச்சுகளின்போது உணர்சிப்பிழம்பாக்கி குரல் தளர்ந்து போயிடுவாரல்லவா……….. அப்போதெல்லாம் அடடா……….. இப்படியொரு மனிஷனுடன் வாழ நேர்ந்தால் வாழ்வில் எத்தனை ஐக்கியமும், விட்டுக்கொடுப்பும், பிரேமையும் பிரவகிக்குமென கனவுகள் காணத்தொடங்கிவிட்டேன். என் தவறுகளின் தொடக்கமும் அதுதான். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவையெல்லாம் அசாதாரண விஷயங்கள் என்பது இத்தனை லேட்டாகத்தான் புரிகிறது. “கலைஞர்கள் கவிஞர்கள் எல்லாம் கனவுலகசஞ்சாரிகள்டி……….. ஃப்றீக்ஸ், இயல்பு வாழ்கைக்கு ஒத்துவராத பிரகிருதிகள் தெரிஞ்சுக்கோவென்று அண்ணன் அடித்துச்சொன்னான்” என்றுவிட்டுத் தன் பார்வையை விலக்கி ஜன்னலுக்கு வெளியே தெரிந்த தொடுவானத்தை நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ என்ன போனால் போன இடமென்று இருப்பார். வீட்டு நினைப்பு வராது, தண்ணிகண்ட இடத்தில் கச்சேரிதான், ஒரு போன் எடுக்கவேணுமென்று தோன்றாது, எப்போ வருவேனென்றும் சொல்லமாட்டார். சரி வந்துதான் என்னத்தைக் கிழிக்கப்போகிறாரென்று விட்டுவிடுவேன். கொஞ்சக்காலம் மோபைல்போன் ஒன்று யாரோ அன்பளிப்பாகக் கொடுத்தது என்று கொண்டுதிரிந்தார். அதில எங்கே தொங்கிட்டிருக்கிறாரென்று விசாரிப்போம். பிறகு நாளடைவில் அதற்குரிய பில்களும் ஏறி அவை என்னுடைய எக்கவுண்டிலிருந்தே கழிந்ததால தாங்கமுடியாம அதைத்தூக்கிக்குப்பையுள் வீசிவிட்டேன். சத்தம்போடுவாரென நினைத்தேன், ஒன்றும் பறையாமலிருந்தார். சும்மாசொல்லப்படாது……… சிலவேலைகளில் மனுஷனுக்கு மனசாக்ஷிவேலை செய்வதுமுண்டு.

உடல் உழைப்பை துச்சமாக நினைப்பது, பங்ஸ்………ஜங்கீஸ் பரதேசிகள்போல விட்டேத்தியாக வாழ நினைப்பது, அட ஒரு நாடோடிக்குக்கூட ஒரு குருவியோ காடையையோ கொண்ணாந்து விட்டில ஆக்க கொடுக்கணுமேயென்று ஒரு பொறுப்பு இருக்குமில்ல அப்படி எதுவுமில்லாத பிறவி இது. தொடர்ந்து வீட்ல நாட்டில இருக்காததால அவருக்கான (அரசு தரும் உதவி) வெல் ஃபெயருமில்லை. ஐ ஹாவ் டு வின் அவர் பிறெட்………. ஹி இஸ் நொட் அஷேம்ட் ஒஃப் திஸ் அட் ஓல்!”

இதைச்சொல்கையில் துளிர்த்து நிறைந்த கண்களை டிஸ்ஸுவினால் நசூக்காகத் ஒத்தினாள். அவன் எங்கே போயிருக்கிறான் என்பது அவளுக்குத் தெரிந்திருக்காதென்றால் அதை நான் கேளாமலே விட்டிருப்பேன்.

“அவருக்கு அட்வைஸ்னு யாரும் சொல்லப்புறப்பட்டால் அவர்களைக் கன்னாபின்னாவென்று கண்டபடிக்குக் கெட்டவார்த்தைகளில் எல்லாம் அர்ச்சித்துவிடுவார். பின்னர் அடுத்த நாள் போன்பண்ணி ‘அட ஒரு அக்கறையிலதானே மச்சான் நீயும் அப்படிச்சொன்னே………… நானும் உன்னில உரிமை எடுத்துக்கொண்டுதானே அப்பிடிப்பேசிப்புட்டேன். ஒண்ணும் மனதுல வைச்சுக்கொள்ளாதடா கண்ணா………… நல்லபிள்ளை ’ என்று கெஞ்சுவார் ”.

சரித்திரத்தில் பெரிய கலைஞர்கள், இலக்கியர்கள், தத்துவவாதிகள் பலரும் இப்படி விட்டேத்தியாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். நான் அதை இப்போது சொன்னால் அவனுக்காக வாதாடுவதாக ஆகிவிடும். அவனைச் சபிக்கவும் வேண்டாம், ஒத்தூதவும் வேண்டாம். குடும்பவிவகாரங்களுள் நுழைவதைத்தவிர்த்துப் பேச்சின் திசையை மாற்றுவதாய் நினைத்து “உங்களுக்கு மிகவும் பிடித்த அவனதுகவிதை ஒன்றச்சொல்லுங்களேன்” என்று கேட்டேன்.

“ அதொண்ணும் எனக்கு தெரியாது. ”

“ சரி கன்னத்தில விளாசினமாதிரி………………. கண்ணுக்க மின்னல் பாய்ஞ்ச மாதிரிப்பண்ற அவனது பல நூறுவரிகள் இருக்கே, அதுல ஒன்றைச் சொல்றது.”

“ நிஜமாகவே எனக்குத்தெரியாதண்ணா, அப்படியொன்றையும் நான் மனதில பிடிச்சு வைச்சுக் கொள்ளவுமில்லை. ”

தொடர்ந்து மௌனம்………………………..

அம்மௌனத்தின் நிழலும் சாம்பலும் அறைமுழுவதும் வியாபித்தது. அதை அறுக்க மீண்டும் முயற்சித்தேன்.

“ பிறின்ஸ் ராம் வர்மா என்றொரு ஆர்டிஸ்ட் கேரளாவில் அட்டகாசம் பண்ணுறாரே அவதானித்தீர்களா…. அப்துல் கலாம் காலத்தில் ராஷ்டிரபதிபவன்ல அவரது கச்சேரி ஒன்றை நெட்ல பார்த்தேன், அங்கே எந்தரோ மஹானுபாவுலுவை எம்.டி.ராமாநாதன் பாணியில் விளம்பத்தில் பண்ணியிருந்தார், நல்ல சுகமான சாரீரம்…….. இதமான கற்பனைகள். அபாரமாயிருந்தது. ”

“அவர் திருவிதாங்கூர் அரசகுடும்பத்தைச்சேர்ந்த ஒரு கலைஞன். இன்னும் சொல்லப்போனால் சுவாதித்திருநாள் மகராஜாவின் கொள்ளுப்பேரன். வாய்ப்பாட்டு மட்டுமல்ல வீணையிலும் ஒரு வித்தகன். எம்.டி.ராமநாதனினதும், கிஷோர்குமாரினதும் பரம ரசிகன். அவர்களைப்போலவே லோ டெம்போவில் அசத்துவார். பாலமுரளிகிருஷ்ணாவிடமும் சிட்ஷை பெற்றுள்ளார். He is a Prince among Musicians and a Musician among Princes…………….. you know? மனுஷன் பார்த்திராத விருந்துகளும் விருதுகளுமா……..அதனால விளம்பரங்கள் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல் அமைதியாகவே அசத்துகிறார் , நல்ல திறமைசாலி, அபூர்வக்கலைஞர் ” என்றார்.

மேற்கத்தைய இசைக்கருவிகளுடனான (unconventional) மரபைமீறிப் பாடும் சுசீலா ராமனின் முறைபற்றிக் கேட்டபோது அதை அவர் அவ்வளவு வரவேற்கவில்லை. எண்பதுகளில ரமா ரமணி என்கிற ஒரு கலைஞரும் மைகேல் ஆஞ்செலோ என்கிற அமெரிக்க சக்ஸபோனிஸ்ட்டுடன் சேர்ந்து இவர் போலவே சில பரிசோதனைகள் செய்து பார்த்தார். பெரிதாக அம்முயற்சிகள் கவனிக்கப்படவில்லை.

சுசீலா ராமன் பக்கவாட்டில் ஒரு ஆபிரிக்கப்பெண்போலவே ஸ்பிறிங் கேசத்துடன் தோற்றமளிப்பதுவும், சாஹித்தியங்களை அவர் உச்சரிக்கும் விதம் தமிழோ தெலுங்கோ ஆங்கிலமோபோல் இல்லாமல் ஒரு கொஞ்சல் மொழியாக இருப்பதுவும், பாடும்போது நளினமாக ஆடுவதும் சுவைஞரை ஈர்க்கவல்ல அம்சங்கள். அவற்றோடு இளங்கலைஞரான அவருக்கு உலகநாடுகளிலுள்ள பிரசித்திவாய்ந்த அரங்குகளில் தன் அரங்காற்றுகைகளைச் செய்யும் வல்லமையும் செல்வாக்கும் இருப்பதால் எம்செவ்விசைமீதான உலகச் சுவைஞர்களின் கவனத்தை அவர் ஈர்த்திருப்பதையும் ஒத்துக்கொண்டார்.

“ உங்கள் நியூஜெர்ஸி கச்சேரிகூட சில ஒளிப்பதிவுகள் யூ டியூப்பில் பார்த்தேன். நீங்கள் செய்த அந்தப்புதுமை அருமை. ராகத்தின் சட்டகத்தை அழகாக ஆலாபனைசெய்துவிட்டு தானத்திலும் பல்லவி இடையே ஸ்வரங்களையும் பிறகுவந்த சங்கதிகளையும் விளம்பமாக ஹிந்துஸ்தானி பாணியில் அழகான கமகங்களோடு பண்ணியிருந்தீர்களே அற்புதம். எப்படி இந்த யோசனை உங்களுக்கு வந்தது? ”

“ எல்லாம் ஜூகல்பந்திகளை அதிகம் கேட்டதால வந்த ஒரு யோசனைதான் இரண்டு பாணிகளையும் ஒரே தொகையில் கொண்டுவந்தால் என்ன என்கிற ஒரு முயற்சி. இது ஒன்றும் என்கண்டுபிடிப்பல்ல.”

மிகவும் அடக்கித் தனது முயற்சியைச் சொன்னார்.

அது ரொம்ப அழகு சரி. உங்களை நான் சிரமப்படுத்தலைன்னா இப்போதும் சின்னதா ஒரு கீர்த்தனை பாடமுடிந்தால் சந்தோஷம்.

பிகு ஒன்றும் பண்ணாமல் உடனே ஆரம்பித்துவிட்டார்.

மோக்ஷமு கலதா புவிலோ ஜீவன்

முக்துலு கா னி வா ரலகு……….. (மோ)

ஸாக்ஷாத்கார நீ ஸத் பக்தி

ஸங்கீ த ஞ்ஞான விஹினுலகு………… (மோ)

ப்ராண நல ஸாம் யோகமு வல்ல

ப்ரணவ நாதமு ஸப்த ஸ்வரமுலை பரக

வீணா வாதன லோலுடௌ சிவ மனோ

வித மெறுகாரு த்யாக ராஜ நினுத…………(மோ)

கற்பனா ஸ்வரப்பிரதாபங்களில் ஒரு சமுத்திரத்தின் அலையைப்போல ஸ்ருதியை ஏற்றியும் இறங்கியும்; ஒரு புதையலில் இருந்து வாரிவருபவளைப்போல புதுப்புதுச்சங்கதிகளை எடுத்துவந்து நளின ஜாலங்கள் செய்து காட்டும்போதும் அவள் முன்னெப்பொழுதையும்விட அழகாகத்தோன்றினாள்.

இங்கே நம்ப தியாகப்பிரம்மத்துக்கு ரொம்பவுந்தான் பேராசை.

‘உலோகப்பற்றுக்களைத் துறக்காதவனுக்கு எப்பிடி மோக்ஷம் கிடைக்கும்?’ சரிதான்.

‘சங்கீதஞானம் இல்லாதவனுக்கு மோக்ஷம் கிடைக்குமா?’ அதுவும் பரவாயில்லை.

அந்தச்சின்ன க்ருதிக்குள் அடுத்து எப்பிடிக்குத்துகிறார் பாருங்கள்.

‘வீணையின் தந்திகள் அதிர்ந்து எழுப்பும் நாதத்தில் பிரமத்தின் சாயலை உணரமுடியாதவனுக்கு மோக்ஷம் எங்கிருந்துமா வரும்…………., ‘String Theory’யின் வாஸ்தவத்தை நாதப்பிரம்மம் அன்றே தன் அனுபூதியால் கண்டடைந்துவிட்டாரோ……………?’

“அன்றைக்கும் ஸாரமதி, இன்றைக்கும் ஸாரமதி………… ஏன் ஸாரமதி என்றால் உங்களுக்கு அத்தனை இஷ்டமோ” என்றேன்.

“வாவ்…………. உங்களுக்கு ராகங்களை எல்லாம் நுட்பமாகக்கண்டுபிடிக்க முடிகிறதே! ”

அவள் கண்கள் அகன்று சுழன்றன.

“சும்மா கொஞ்சம் கேள்விஞானந்தான்…………… அதிகப்படியா ஒண்ணுமில்ல.”

“ உங்க கவிஞனுக்கு கர்நாடகத்துக்கும் இந்துஸ்தானிக்குமே பேதம் புரியாது. எல்லாம் தரநா…… தரநா…….தரநாய் நாய்……நாய்தானென்பார்.”

“என்னம்மா உங்ககவிஞன் என்று சுருக்கிட்டீங்க………. இப்பிரபஞ்சக்கவி யல்லவா……………………அவன்.”

“ம்ம்ம்ம்………………………………..கிழிச்சார்…….. பிரபஞ்சத்துக்கும் கவி, வீட்டுக்கும் கவிதான்!”

அந்த இரண்டாவது கவி இங்கே இரண்டாவது அர்த்தத்தில்தான், முகத்தில் ஹனுமான் பாவம் செய்தாள்.

அவளது தீராத அவநம்பிக்கைக்கு அவளுக்கும் போதிய காரணங்கள் இருக்கும்போல் தோன்றியது.

“ நீங்கள் எப்போ ஊருக்கு கிளம்பணும்?”

“ எனக்கு காலையிலதான் தொடர்வண்டி.”

“ எப்போதும் செந்தமிழ்தானா? சரி நண்பன் இல்லையே என்றுவிட்டுக் குழம்பவேண்டாம். நீங்கள் தாராளமா இங்கே தங்கியிட்டு காலையில் உங்க தொடர்வண்டியைப் பிடிக்கலாம். எனக்கும் உங்க தனித்தமிழ் தொத்திடிச்சு. ” சிரித்தாள்.

தோழர் இருந்தால் பரவாயில்லை. நான் தயங்கினேன்.

“ எதுக்கும் நான் என் விடுதியிலேயே தங்கிவிடுறேனே, எனக்கு ஒன்றும் சிரமமில்லை.”

“ இப்போ விடுதியில் கணக்கெல்லாம் செற்றில் பண்ணிட்டு மன்னிக்கவும் நேர்பண்ணிட்டுத்தானே வந்திருப்பீங்க. குறுக்க பேசாமல் இப்போ என் பேச்சைக்கேளுங்க………. கவிஞர் தன் அறையில ஒரு மேலதிக கட்டில் போட்டு வைச்சிருக்கார்…….. அதில ஜம்னு தூங்குங்க. நான் காலையில எழுப்பிவிடுறேன், தொடருந்தைப்பிடிக்கலாம். உங்களை ராத்திரியில வெளியே அனுப்பிவச்சேனென்று அறிஞ்சால் அவரே என்னைக் கோபிப்பார். இதோ தோசை சுடுகிறேன், உங்களுக்கு இஷ்டமான மாங்காய்போட்ட மீன்குழம்பும் இருக்கு.”

என் பிடிவாதத்துக்கு மீன்குழம்பு மசகிட, மனதில் மோதிய தோசையின்வாசம் தடாலென வாரிக்கவிழ்த்தது. சாப்பிடும்போது மேசைக்கு வந்த அவர்கள் மடந்தை தான் தோசை சாப்பிடவே மாட்டனென்று அடம்பிடித்தாள். இங்கு பிறந்த பிள்ளைகளுக்கு ஏனோ புளிப்பான சமாச்சரங்கள் அத்தனை பிடிப்பதில்லை. சாதனா அவளுக்கு ஆயத்த நூடில்ஸை வெந்நீரில்போட்டுத் தயார்பண்ணிக்கொடுத்தாள்.

மின்னல் வேகத்தில் தோசைகளைச்சுட்டு என்கோப்பையில் இரண்டங்குல உயரத்துக்கு அடுக்கிவைத்துவிட்டு “இங்கே ஒன்றும் வெட்கம் வேண்டியதில்லை………. அத்தனையும் நீங்க சாப்பிட்டேயாகவேண்டும்”என்று அடம்பிடித்தாள். தோசை தூக்கத்துக்கு பிராண நண்பன், இருந்தும் எனக்கு இடவித்தியாசத்தால் உடனே தூக்கம்வர மறுத்தது. புரண்டு புரண்டு படுத்துப்பார்த்தேன் முடியவில்லை. எழுந்து கொஞ்சநேரம் கவிஞனின் நூல்சேகரங்களை ஆராய்ந்தேன். நடுச்சாமமும் கடந்தது. Maisonette வகையதானவீடு அவர்களது. கவிஞனது மாடி அறையிலிருந்து கீழே வதியுமறையுமாகிய அவர்கள் கூடத்தைப்பார்க்கலாம். நான் கீழே குளிப்பறை போவதற்காக எழுந்து போனபோது சாதனா செற்றியில் தலைக்குக்கையை வைத்துக்கொண்டு படுத்திருப்பது தெரிந்தது. எப்படிப்பேசியும் தீராது சுமைக்கும் ஏராளம் விஷயங்கள் அவள் மனதின் ஆழங்களில் மண்டிக்கிடக்கின்றன.

மறுநாள் காலை தொடருந்தில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருக்கையில் தீராத அவநம்பிக்கைக்கு அவளும், மாறாத குடிக்கு அவனும் ஏன் ஆளாகியிருக்கிறார்களென்பது எனக்கும் லேசாகத்தெளிவதைப் போலிருந்தது.

எவர்மீதாயினும் குற்றங்கள் சுமத்துவது – வழக்குத்தொடுப்பது – தீர்ப்புக்கள் வழங்குவது எதுவுமே இலேசான விஷயங்கள் அல்ல.

– காலம் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *