கள்ள மௌனங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 26, 2023
பார்வையிட்டோர்: 1,426 
 

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. யாரோ என் வீட்டு முன் கேற்றைத் தட்டிய ஒலி கேட்டு வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்து எட்டிப் பார்த்தேன். மூடியிருந்த உயரமான கேற்றின் அடிப்புற இடைவெளியினூடாக தோல் செருப்பணிந்த ஒரு சோடிக்கால்கள் தெரிந்தன.

‘யார் அது?’ என்று அதட்டினேன்.

என் பார்வைக்கு அவை ஒரு சிறுவனின் கால்கள் போலத்தான் முதலில் தெரிந்தன. பக்கத்து வீட்டுப் பையன்கள் முன்னாலிருக்கும் வழியிலே கிரிக்கட் ஆடுவதும் அவ்வப்போது என் வளவுக்குள் வந்து விழும் பந்தை எடுப்பதற்காக கேற்றைத் தட்டுவதும் வழமை என்பதால்தான் அந்த அதட்டல்.

என் அதட்டலுக்கு பதில் வராத காரணத்தால் சந்தேகத்தில் முன்வராந்தாவை விட்டிறங்கிச் சென்று கேற்றைத் திறந்தேன். அறுபது வயது மதிக்கத்தக்க சற்று உயரம் குறைவான ஒரு மனிதர் கையிலே ஒரு ஹெல்மெட்டைக் கொழுவியபடி நின்றிருந்தார். நெற்றியில் லேசான திருநீறும் சந்தனமுமிருக்க மெல்லிய நீலவண்ணத்தில் சட்டையும் நீளக்காற்சட்டையும் அணிந்திருந்தார். அவரை இதற்கு முன்பு அவரை எங்கோ பலமுறை பார்த்தது போலிருந்தாலும் எங்கு பார்த்தேன் என்பது சட்டென நினைவுக்குள் வந்து சேரவில்லை. ஆயினும் கதவைத் திறந்து ‘உள்ளே வாங்க ஐயா’ என்றேன்.
ஆனால் அவர் உள்ளே வராமல் வாசலிலேயே நின்று கொண்டு என் பெயரை முழுமையாக ஒரு தடவை உச்சரித்தார்.

‘ஓமோம்.. அது நான்தான்! முதல்ல உள்ள வாங்க’ என்றேன் மீண்டும்.

‘உங்களைச் சந்திக்க வேணுமென்டு மிச்ச நாளாக நினைச்சிட்டிருந்தன் தம்பீ.. யேசுராசா மாஸ்டர் சொல்லல்லயா..?’ என்றபடி என் பெயரை மீண்டும் சில தடவைகள் கூறிப் பார்த்தபடி உள்ளே வந்தார். யேசுராசா நான் வசிக்கும் பிரதேசத்திலுள்ள ஒரு பாடசாலை அதிபர். அவர் ஒரு எழுத்தாளரும் கூட.

வீட்டின் முன்புற வராந்தாவினுள்ளே கலைந்து கிடந்த பிளாஸ்டிக் கதிரைகளை அவசரகதியில் ஒழுங்குபடுத்தினேன். அவற்றில் ஒன்றிலே அவரை அமர்த்திவிட்டு நானும் உட்கார்ந்து கொண்டேன். உள்ளே சமையலறையில் வேலையாக இருந்த என் மனைவி யார் வந்திருப்பது என்று யன்னல் திரைச்சீலையை நீக்கிப் பார்த்துவிட்டுப் போனாள்.

‘என்னை உங்களுக்கு நல்லாத் தெரியும். அப்படித்தானே..?’ என்று கேட்டார் .

‘இல்லை’ என்று நான் கூறினால் நிச்சயம் கவலைப்படுவார் போலிருந்தார். யேசுராசா மாஸ்டரைப் பற்றிக் குறிப்பிட்டதால் நிச்சயம் எழுத்தாளர்களிலே ஒருவராகவோ அல்லது பாடசாலையுடன் சம்பந்தப்பட்ட ஒருவராகவோதான் அவர் இருக்கவேண்டும் என யூகித்துக் கொண்டேன்.

‘ம்.. ஆனால் உங்க பெயர்தான் ஞாபகத்துக்கு வர…’ என்று இழுத்தேன்.

அவர் தன் பெயரைக் கூறினார். அது ஒரு புனைபெயர் மட்டுமல்ல சிறிது பரிச்சயமான பெயராகவும் இருந்தது. அதனால் வந்திருப்பவரும் ஓர் எழுத்தாளர்தான் என்பது உறுதியானது எனக்கு.

‘தம்பீ, நான் வந்த விசயத்தைச் சொல்லிடுறன். கொஞ்ச காலத்துக்கு முதல் உங்கட கதையொண்டு படிச்சனான். அதைப் படிச்சதுமே எனக்கு அது கொஞ்சம் வித்தியாசமானது மட்டுமில்ல அதேநேரம் அது வழமையான உங்கட ஆக்கள்ற பாணிக் கதைகளில ஒண்டு இல்லண்டதும் விளங்கிட்டுது. அப்பவே நினைச்சன் வந்து சந்திக்க வேணும் என்டு..’ என்று சொல்லிக் கொண்டே போனார்.

‘ நீங்க எந்தக் கதையைச் சொல்றீங்க ஸேர்?’

‘அதுட தலைப்பு ஞாபகமில்ல.. ஒரு பஸ்சுல பயணம் போறவங்கள்ற கதை ஒண்டு.. ‘மோகனம்’ சஞ்சிகையில வாசிச்சனான்’

‘மோகனத்திலயா..? அந்த சஞ்சிகையில இதுவரைக்கும் என்ட கதை எதுவுமே வரல்லயே..’

‘அப்பிடியா..? அப்ப வேற எதில வாசிச்சேன்’ என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தபோது எனக்குப் பிடிபட்டு விட்டது.

‘அந்தக் கதை மோகனத்தில இல்ல ஸேர்.. ‘அல்லிகை’யிலதான் வந்தது! ஒரு ஒன்றரை.. ரெண்டு வருசத்துக்கு முதல்தானே? ‘நடிப்பு மனிதர்கள்’ என்றதுதான் தலைப்பு’

‘சரி.. சரி அதேதான்..’

‘அதுல என்ன பிடிச்சிருந்தது என்று கொஞ்சம் விளக்கமாச் சொன்னா.. எனக்கு பிரயோசனமாக இருக்கும்..’

‘அது எனக்கு இப்ப அவ்வளவா ஞாபகமில்ல.. ஆனா உங்கட எழுதிற ஆக்கள் தொடுவதற்கு யோசிக்கிற சில விசயங்களை துணிவா எழுதியிருந்தீங்க. அதை அப்பவே பாராட்டணுமென்டு நினைச்சனான். உங்களைத் தெரியாது.. அதனால உங்கட ஊர் ஆக்களுக்கிட்ட விசாரிச்சிருக்கிறன். நேற்றுத்தான் யேசுராசாவோட தற்செயலாக பேசிக்கிட்டிருக்கிற நேரம் உங்கட விவரத்தை தந்தார்.’

‘நல்லது ஸேர்.. என்ட கதையை வாசிச்சு பாராட்ட வேணும் என்றதுக்காக தேடி வந்திருப்பது உண்மையில சந்தோசமாயிருக்கு..’

‘அதுல என்னன்டா தம்பீ.. பொதுவா உங்கட ஆக்கள் தங்கட கதைகளில சிக்கலான விசயங்களை தொடுறது குறைவு. தங்களுக்கு வசதியான சப்ஜக்டுகளை மட்டும் மேவி எழுதிக்கொண்டு பிரச்சினையான விசயங்களை தாண்டிக்கொண்டு போயிருவாங்க..’

‘இல்ல ஸேர். இதை நான் முழுசா ஏத்துக்கொள்ள மாட்டன். இந்தக் குணம் தனியே ஒரு இனத்துக்கு மட்டுமுள்ளது கிடையாது. இது எல்லாருக்கிட்டயும் இருக்குதே’

‘சரி.. ஆனா இது உங்கட ஆக்களிட்ட கொஞ்சம் கூடுதலாக இருக்குது. நான் சொல்றதுல ஏதும் பிழையா தம்பீ?’ என்று என் கண்களை நேரே பார்த்துக் கேட்டார் அவர்.

நான் ஒன்றும் பேசாமல் சிறிது யோசித்தேன்.

அதற்கு பதில் கூறுவதற்கு முன்பு என் மனைவி உள்ளேயிருந்து இரண்டு கப் டீயை தந்துவிட்டு அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள். பின்பு, ‘டீயை எடுத்துக் குடுங்க!’ என்று விட்டு என்னருகிலே நின்றாள்.

அவர் வீட்டையும் வளவையும் அங்கிருந்த செடி கொடிகளையும் சுற்றிலும் பார்த்துவிட்டு, ‘வீட்டையும் வீட்டுச் சூழலையும் ஒரு பொட்டானிக்கல் கார்டன் மாதிரி வச்சிருக்கிறீங்க மகள். நல்லாருக்குது’ என்றார் அவளைப் பார்த்து.

‘எல்லாம் இவருடைய வேலைதான்..’ என்றபடி என் மனைவி சிறிது வெட்கத்துடன் நழுவ நாங்கள் இருவரும் டீயை அருந்த ஆரம்பித்தோம்.

‘சரி தம்பீ நம்ம எதில விட்டனாங்க? ஆங்.. சர்ச்சைக்குரிய விசயங்களை மறந்துட்டு எழுதிறது கூடுதலா நீங்கதான் என்று சொல்லிட்டு இருந்தன்.. இல்லையா?’

‘ஓமோம்.. ஏன் ஸேர் அப்படிச் சொல்றீங்க?’

‘நிறைய விசயத்தை சொல்லுவேன் தம்பீ.. ஆனா நீங்க அதையெல்லாம் சென்சிட்டிவ்வா எடுத்திடாம நடுநிலையா இருந்து கேட்டால் மட்டும் நம்பிச் சொல்லுவேன்’

‘பரவால்ல சொல்லுங்க.. சொன்னாத்தானே உண்மையான நிலைமையை அறியலாம்’

‘நீங்கல்லாம் பொதுவா உங்கட ஆன்மீக விசயங்களில படு சென்சிட்டிவா இருக்கிறீங்க.. அதுகளுக்குள்ளால மட்டுந்தான் இந்த உலகத்தைப் பார்க்கிறீங்க.. அதைவிட்டு வெளியே வந்து இன்றைய யதார்த்தமான நடைமுறைகளுக்கூடாக உலகத்தையும் அதன் போக்கையும் பார்க்கிறதில்ல…’

‘……….’

‘உதாரணத்துக்கு ஒரு ஜோக் சொல்றன். ஒரு பிரிட்டிஷ்காரனோ அல்லது ஆபிரிக்கனோ கார் ஓட்டிக்கொண்டு போகும்போது அந்தக் கார் திடீரென நின்று போயிட்டால் உடனே இறங்கி வந்து காரின் எஞ்சினைப் பரிசோதிப்பானாம். ஆனால் அதுவே ஒரு பாகிஸ்தான்காரனாகவோ அரபியாகவோ இருந்தால் உடனே காரை விட்டிறங்கி, ‘இது அமெரிக்காவின் சதி!’ என்று கோஷம் போடுவானாம். அதுக்குப் பிறகுதான் பெற்றோல் தாங்கியைத் திறந்து பார்ப்பானாம்..’

நான் உடனே சத்தமாக சிரித்து விட்டேன். அவரும் என்னுடைய சிரிப்பிலே கலந்து கொண்டார்.

‘ஸேர், நீங்க சொல்ல வாறது விளங்குது. தன்பக்கமுள்ள குறைபாடுகளை தீர ஆராயாமல் அடுத்தவர்கள் மேல முத்திரை குத்தி தப்பிப்பதை அழகாச் சொல்றீங்க.. நல்லாருக்கு’

‘அதுமட்டுமில்ல மதம் என்றது ஒவ்வொரு நாடுகளிலயும் மக்கள் பின்பற்றுகிற போக்குவரத்து விதிகள் மாதிரி. இலங்கையிலயும் இந்தியாவிலயும் கார்கள் இடது பக்கம். ஆட்கள் வலது பக்கம் போகணும். ஆனா அமெரிக்காவில கார்கள் வலது பக்கம் ஆட்கள் இடது பக்கம் போகணும்’

‘அப்படியா?’

‘ஆனா இரண்டு நாடுகள்லயும் உள்ள போக்குவரத்து விதிகளின்ட நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அதுபோலத்தான் உங்களுக்கொரு மதம் எனக்கொரு மதம். ஆனா நோக்கம் ஒன்றுதான்.’

‘நீங்க சொல்றது ஒருவகையில உண்மைதான் ஸேர்’

‘தம்பி நான் உங்கட மதநம்பிக்கைகளை குறை சொல்ல வரல்ல. அதுக்கான அவசியமும் எனக்கில்ல. நான் பிறப்பால ஒரு சைவன். நான் கலியாணம் முடித்திருக்கிறது ஒரு கிறிஸ்தவப் பொம்பிளைய.. எல்லாவற்றுக்கும் அடிப்படை ஒண்டுதான் என்று நம்புறவன். சகல மதங்களும் மனிதனை நன்மையை கடைப்பிடிச்சு தீமையை விலக்கவும்தானே சொல்லுது..’

‘நீங்க சொல்றது சரிதான்’

‘ஆனா நாங்க ஏனைய மதத்தை சேர்ந்தவங்க எங்கட வாழ்க்கையில எல்லா அம்சத்தையும் தனியே மத விடயங்களுக்குள்ளால மட்டுமே பார்க்கிறதில்ல.. ஆனா நீங்க அப்படியில்ல.. ஒவ்வொரு விசயத்துக்கும் உங்கட மதத்தை மட்டுமே முன்னிறுத்தி செயற்படுறதுக்குத் துடியாய்த் துடிக்கிறீங்க..’

‘ஆனா அது ஒண்ணும் தப்பில்லையே? எல்லாத்திலயும் மதத்தை முன்னிறுத்தினா அடுத்தவருக்கு தீங்கும் தவறும் செய்யும் சந்தர்ப்பம் குறையும்தானே?’

‘நான் மறுக்கல்ல.. ஆனா அப்படித் தீவிரமாக நினைக்கிற ஆட்கள் நீங்க வாழ்கையில எல்லா அம்சங்களிலயும் அதே பண்புகளை வலுவாகக் கடைப்பிடிக்க வேணும். ஆனா நடைமுறையில உங்களில பெரும்பாலானவங்கள் எப்பிடி நடந்து கொள்றீங்க..?’

‘நீங்க எதைச் சொல்ல வாறீங்க ஸேர்?’

‘அடுத்தவனின் சொத்தைக் களவெடுத்தா கைகளையே வெட்டுற அளவுக்கு அரபு நாடுகள்ல இருக்கும் உங்கட மதச்சட்டத்தைப் பற்றி சிலாகிச்சு பேசுறீங்க.. ஆனா அப்பிடிச் சொல்லிக்கிட்டே இங்க அரசாங்கப் பணத்திலயும் பொருட்களிலயும் மோசடி செய்யிறீங்க. நேர்மையீனமா உழைக்காதே இருக்காதேன்னு உங்க மதம் சொன்னதா சொல்றீங்க.. பிறகு நீங்களே திருட்டு கறண்ட் எடுக்கிறீங்க, பரீட்சை நிலையத்துல குதிரை ஓடுறீங்க.. போட்டோவை மாத்தி வேற பேர்ல கள்ள பாஸ்போட் எடுத்து வெளிநாடு போறீங்க..’

‘………..’

‘வட்டியை ஹறாம் என்றீங்க பிறகு வட்டியிலயே தொழில் நடக்கும் பேங்குகள் அத்தனையிலும் ஊழியம் செய்யுறீங்க. கொள்விலையையும் இலாபத்தையும் கஸ்டமருக்குத் தெரியப்படுத்தி வியாபாரம் செய்யுமாறு மதம் சொல்லியிருக்கும்போது பொருட்களுக்கு புள்ளி சிஸ்டத்தில விலைபோட்டு கொள்ளை வியாபாரம் செய்யுறீங்க.. சாப்பாடுகளை வீணடிப்பது பாவம் என்று சொல்லிக்கிட்டே நோன்பு நேரத்தில நோன்பு நோற்காதவர்களுக்கும் வேறு ஆட்களுக்கும் இப்தாரை ஆடம்பரமாக நடாத்தி அதை வீணடிக்கிறீங்க.. இப்படி எத்தனையோ சொல்லலாம்’

‘இதெல்லாம் பிழைதான். ஆனா இதே தவறையெல்லாம் உங்கட மதத்தைப் பின்பற்றுகிறவர்களும் செய்றாங்கதானே ஸேர்..?’

‘நான் இல்லையென்று சொல்லயில்லியே.. யார் செய்தாலும் பிழை பிழைதான். ஆனா மற்ற மதத்து ஆக்கள் உங்கள மாதிரி எல்லாத்துக்குமே ‘சைவம் இப்பிடிச் சொல்லியிருக்கு.. கிறிஸ்தவம் அப்படிச் சொல்லியிருக்கு’ என்றெல்லாம் நுணுக்கம் பேசுறதில்லையே தம்பீ. ஆனா நீங்க எல்லாருமே காலையில் எழுந்ததிலிருந்து தூங்கும் வரை மதம் மார்க்கம் என்றுதானே பேசுறீங்க. படிப்பு, தொழில், உணவு, கலைகள், விளையாட்டு, பொழுதுபோக்கு என்று எல்லாத்திலயும் மத நுணுக்கம் ஒன்றைத்தான் வாய்கிழியப் பெருமையாக பேசுறீங்க வலியுறுத்திறீங்க. ஆனால் அதை அதிகம் மீறுகிற ஆட்களும் நீங்கதான்.. இதை உங்களால மறுக்க ஏலுமா தம்பீ?’

என்னால் பதில் எதுவும் பேசமுடியவில்லை. வெளியே வானம் இருண்டு மழைவரும் அறிகுறி தெரிந்தது.

‘இதுதான் தம்பீ என்னுடைய ஆதங்கம். இதைச் சுட்டிக்காட்டி எழுதுவதற்கு பொதுவாக உங்க படைப்பாளிகளில யாருமே முன்வாறதில்ல.. அப்படியிருக்க நீங்க உங்க ‘நடிப்பு மனிதர்கள்’ கதையில அதையெல்லாம் தைரியமா பல இடங்கள்ல சொல்லியிருக்கிறீங்க தம்பீ. என்ட பார்வையில இது ஒரு ஆரோக்கியமான ஆரம்பம். அதற்காகத்தான் உங்களைப் பாராட்டுவதற்காக வந்தேன். பாராட்டிட்டேன் அப்ப நான் போய்ட்டு வாறேன். பிறகு ஒரு நாள் சந்திப்போம்’

‘ஒரு நிமிசம் இருங்க ஸேர்!’ என்று அவரை அமர்த்தினேன்.

‘என்னை விட வயதிலயும் அனுபவத்திலயும் கூடியவர் நீங்க.. ஒரு அறியப்பட்ட எழுத்தாளர்.. இவ்வளவு தூரம் வந்து என்னைப் பாராட்டினதுக்கு மிச்சம் நன்றி ஸேர். அதோட எங்க சமூகம் சம்பந்தமான முக்கியமான குறைபாடுகளையும் எடுத்துச் சொல்லியிருக்கிறீங்க.. நீங்க எனக்கிட்ட சொல்ல நினைத்ததைப்போல எனக்கும் உங்களிட்ட ஒரு விசயம் இருக்கு ஸேர்’

‘அப்படியா? சொல்லுங்க’ என்றார் வெகுஆவலாக. புறப்படுவதற்காக கையில் எடுத்த ஹெல்மெட்டை திரும்பவும் வைத்துவிட்டு நான் சொல்வதைக் கேட்பதற்குச் சுவாரஸ்யமாகி விட்டார்.

‘இதை நான் உங்கட கருத்துக்கு பதிலடியாக கேட்பதா நினைக்க மாட்டீங்கதானே..’ என்று தயக்கத்துடன் பீடிகை போட்டேன்.

‘இல்லை நிச்சயமா நினைக்க மாட்டேன் தம்பீ, நீங்க கேளுங்கோ’

‘நம்ம நாட்டுல முப்பது வருசமா நடந்த விடுதலைப் போராட்டத்தில இதுவரைக்கும் எதிர்த்தரப்புகள் செய்த அநியாயங்களை உங்கட படைப்பாளிகள் எவ்வளவோ எழுதியிருக்கிறாங்க.. இப்போதும் எழுதி வர்றாங்க.. அது உண்மையில தேவையான ஒன்றுதான். அவை ஒருகால கட்டத்தின் பதிவாகவும் இருக்கும். ஆனா..’

‘ஆனா..? சொல்லுங்க’

‘அதேயளவுக்கு நேர்மையாக உங்கட விடுதலைப் போராட்டத் தரப்புகள் மக்கள் மீது புரிந்த ஜனநாயக மீறல்களையும் இனச்சுத்திகரிப்புகளையும் பற்றி நாடறிந்த உங்க தமிழ் எழுத்தாளர்களில யாராவது நடுநிலையாக நின்று விமர்சித்து ஏதாவது படைப்புகளை ஆக்கியிருக்கிறீங்களா..?’

அவரது முகத்திலே அதுவரை இருந்த உற்சாகம் சட்டென வடிந்து போய் விட்டது. சிறிது நேரம் அவர் பேசாமலிருந்தார்.

‘தம்பீ விடுதலைப் போராட்டமென்டது வேற.. ஆன்மீக மத ரீதியான ஒடுக்குமுறைகளென்றது வேற. நீங்கள் ரெண்டையும் ஒண்டுக்குள்ள போட்டுக் குழப்பக் கூடாது..’

‘சரி, அவை வேற வேறயாகவே இருக்கட்டுமே. ஆனா இரண்டிலயும் பாதிக்கப்படுகிறது யார்? சக மனிதர்கள்தானே..? அவர்களைப் பற்றி எழுதக்கூடிய நிலையில இருந்தும் கூட ‘கண்டு கொள்ளாமல்’ இருந்த உங்கள் படைப்பாளிகள் பற்றியும் சொல்லுங்களேன் ஸேர்..!’

‘நீங்க குறிப்பாக யாரைச் சொல்ல வாறீங்க என்டு விளங்குதில்ல.. சரி, ‘விடுதலை விலங்குகள்’ இருந்த காலத்துல எங்களில பலரால வாயைக்கூட திறக்க முடியாத நிலைமை இருந்த யதார்த்தம் உங்களுக்குத் தெரிந்ததுதானே..?’

‘தெரியும். ஆனா அவங்களைப் பத்தி எழுதக்கூடியளவுக்கு பாதுகாப்பான இடத்தில இருந்தவங்கள் கூட உண்மையை எழுதல்லையே..’

‘ஏன் அவங்களை ரேடியோவிலயும் டீவியிலயும் கிழி கிழியெண்டு கிழிச்ச ஒரு கூட்டமும் இருந்தது உங்களுக்குத் தெரியாதா என்ன?’

‘தெரியும். ஆளுந்தரப்புச் சலுகைகளுக்காக ஒட்டிக்கொண்டு இருந்தவங்களைத்தானே சொல்றீங்க. ஒன்றில் ஒரேயடியா துதிபாடுறது அல்லது ஒரேயடியாக நார் கிழிப்பதும் ரெண்டுமே கூடாதது. அந்த இரண்டு எல்லைப் புள்ளிகளிலும் இருந்து எழுதினால் உண்மையான நிலைமை மக்களுக்குத் தெரிய வராதே..’

‘தம்பீ, நீங்க சொல்றது உண்மைதான். எல்லாத்துலயும் அரசியல் இருக்கிற மாதிரி எங்கட படைப்பாளிகளின் படைப்பு முயற்சிகளிலயும் ஒரு அரசியல் இருக்கத்தான் செய்யுது. மனச்சாட்சிக்கு மாற்றமாக தமக்கு வசதியான தரப்புகளுக்கு துதிபாடுவதற்குத்தான் பேனாவைப் பயன்படுத்திறாங்களே தவிர உண்மையான அறவுணர்வோட எழுதிறவங்களை பார்க்கிறது அரிதாகிட்டுது. என்னதான் செய்யலாம் சொல்லுங்கள் தம்பீ?’

‘நமது படைப்பாளிகளையெல்லாம் அறவுணர்வோட எழுதவைக்க நிச்சயமா முடியும். அதுக்கு அவ்வப்போது சில தொடக்கப் புள்ளிகள் தேவையாயிருக்குது. மனசுவச்சால் அதை நீங்க கூடச் செய்யலாம் ஸேர். ஆனா அதுக்கு ஒரு நாள் வரவேணும்..’

‘நாளா.. அது என்ன நாள்?’ என்று கேட்டார் அந்த மனிதர்.

‘என்னைப் பாராட்டுறதுக்கு நீங்க வந்து நின்ற மாதிரி உங்க வீட்டுக் கதவை நானும் தட்டும் அந்த ஒருநாள் வந்தால் அதுவே ஒரு ஆரம்பப் புள்ளிதானே?’ என்றேன் நான்.

– 2014.01.29

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *