கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 15, 2023
பார்வையிட்டோர்: 1,784 
 
 

தன் புல்வெட்டியில் ஏதோ தவறு இருந்தமாதிரிப் பட்டது பீட்டருக்கு. ஐந்தடிக்கு ஒருமுறை திக்கித் திணறிக் கொண்டிருந்தது. இயந்திரத்தை நிறுத்தி விட்டு, தலைகீழாகத் திருப்பிப் பார்த்தார். வெட்டுப்பட்டிருந்த புற்கள் ஒட்டியிருந்தது தவிர வேறெதுவும் பழுதாகத் தெரியவில்லை. அப்புற்களின்றும் வெளிவரும் பச்சை மணத்துக்காகவே பீட்டர் புல்வெட்டுவதென்றால் உற்சாகமாகத் தயாராகி விடுவார். எந்திரத்தில் கேசோலினும் அளவுக்கதிகமாகவே இருந்தது. மூன்று முறை நிறுத்தி, நிறுத்திப் பரிசோதித்து விட்டார். அவரால் எதையும் கண்டுபிடிக்க இயலவில்லை. சலித்துப் போய், இயந்திரத்தைக் கொண்டு போய் கராஜில் நிறுத்தினார். உடனே வீட்டுக்குள் போகவிரும்பவில்லை. வீட்டின் முன்னாள் உரிமையாளர்கள் வந்திருக்கிறார்கள். இவர் உள்ளே போனால் அவர்களோடு ஆங்கிலத்தில் உரையாட வேண்டியிருக்கும். பீட்டருக்கு தனது ஆங்கிலப் புலமை மீது பெருமிதம் இருந்தாலும், அமெரிக்கர்களுடன் பேச முற்படுகையில் மட்டும் அத்திறமை அவரைப் பரிதாபமாகக் கைவிட்டு விடுகிறது. சிறிது நேரம் தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தால் நேரம் கழியும். அவர்கள் வெளியே வருகையில் கையசைத்துப் புன்னகைத்து விட்டால் போதும்.

பீங்கான் குவளைகளில் காஃபியை ஏந்தியபடி, பளபளப்பான பழுப்பு நிற தோல் சோஃபாவின் விளிம்பில் அமர்ந்தபடி இருந்தனர் ராபர்ட்சன் தம்பதியர்.

“இந்தியன் காஃபி பிடித்திருக்கிறதா? நாங்கள் எப்பொழுதும் கொஞ்சம் அடர்த்தியாகத்தான் காஃபி குடிப்போம். அமெரிக்கன் காஃபியில் எவ்வளவு பால் சேர்த்தாலும் சுவை கூடுவதில்லை,” என்றாள் சாரா.

திருமதி ராபர்ட்சன் கண்கள் விரிய, மெல்லிய உதடுகளில் கொண்டிருந்த புன்னகை உறைய, சாராவை ஏறிட்டுப் பார்த்தாள். “ஓ! காஃபி அற்புதம்! குறிப்பாக அதன் அடர்த்தி. அது வாயில் கொடுக்கும் உணர்வு, அற்புதம்!” என்றாள்.

“அப்புறம் அதன் கசப்புச் சுவை! என் அப்பா தினமும் தனக்குப் பிடித்த காஃபி ஷாப்பில் காபி சாப்பிடுவதற்காக ரயிலில் ஒரு மணி நேரம் பயணம் செய்வார் தெரியுமா? எங்கள் குடும்ப ரத்தத்தில் காபி மோகம் ஓடுகிறது,” என்றபடி சிரித்தாள் சாரா.

திரு. ராபர்ட்சன் காஃபி குவளையில் ஏதேனும் பூச்சி விழுந்திருக்கிறதா என்று பார்ப்பவரைப் போலவே அதற்குள் உற்று நோக்கிக் கொண்டிருந்தார். தன் வழுக்கைத் தலையை சாராவின் பக்கம் திருப்பி, “ காஃபி நன்றாக இருக்கிறது,” என்றார் உதட்டில் புன்னகையின்றி. அவரது மஞ்சள் நிற துடைப்பக்கட்டை மீசையில் காபி சொட்டிக் கொண்டிருந்தது.

சாராவின் செல்பேசி ஒலித்தது. அவள் அதை எடுத்து அணைத்தாள். “இந்தியாவில் இருந்து,” என்றாள். “என் மருமகள் அழைக்கிறாள். அவளுக்கும் என் மகனுக்கும் சென்ற ஆண்டுதான் திருமணம் நடந்தது. என் மகனின் திருமணத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அது ஒரு திருவிழாவேதான்! பத்து நாட்கள் நடந்தது. திருமணத்தில் நான்காயிரம் பேர் கலந்துகொண்டதாக பீட்டர் சொன்னார். இதோ…” அவள் சென்று திருமதி. ராபர்ட்சனின் அருகில் அமர்ந்தாள். செல்பேசியில், தனது மகன், மருமகள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் தனது உறவினர்களின் படங்களைக் காட்டினாள்.

“மிக அழகாக இருக்கிறாள்!” படத்தில் உள்ள சாராவின் மருமகளைப் பார்த்து திருமதி ராபர்ட்சன் கூறினார். ஊதா நிற சுரிதார் அணிந்து, வயிற்றின் பெரிய மேட்டைத் தாங்கியபடி, அந்த பெண் கேமராவை பார்த்து சிரித்துக்கொண்டே நின்றாள்.

“ஓ, கர்ப்பமாக இருக்கிறாளா?” திருமதி ராபர்ட்சன் தயக்கத்துடன் கேட்டாள். இதுபோன்ற தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது எல்லை மீறும் செயலா என்று அவளுக்குத் தெரியவில்லை. ஒரு வேளை இந்த கேள்வியின் மூலம், வரப்போகிற குழந்தையின் மீது கண் பட்டு விடும் என்று அவர்கள் கருதினால் என்ன செய்வது? அவர்கள் கலாசாரத்தின் எல்லை எது என்று அவளுக்கு உறுதியாகத் தெரியவில்லை.

சாரா பெருமையில் ஒளிர்ந்தாள். “ஒன்பது மாதங்கள். எனக்கு என் பேரக்குழந்தையை இப்போதே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அவள் பிரசவிக்கும் போது, நான் சில வாரங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு அவர்களைப் பார்க்கப் போகிறேன். திருமதி. ராபர்ட்சன், இது எனது சிறு உலகம், என் உயிர்நாடி. அவளுடைய பிரசவம் நன்றாக நடக்க வேண்டும் என்று நான் ஒவ்வொரு கணமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். கிறிஸ்டி இப்போது கொஞ்சம் உயர் இரத்த அழுத்ததால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாள், ”என்றாள்.

“கவலைப்படாதீர்கள். தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்றார் திரு. ராபர்ட்சன். சாரா சில நொடிகள் அவரையே பார்த்தாள். அவர் முகத்தில் உண்மையான அக்கறை ஏதேனும் தென்படுகிறதா என்று பார்க்க முயன்றாள். ஆனால் அவர் முகம் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருந்தது.

பீட்டர் தனது புல்வெட்டியின் செயலிழப்புக்கான காரணத்தை விரைவாகவே கண்டு பிடித்துவிட்டார். கேரேஜ் அருகே இயந்திரத்தை வைத்த பிறகு, கறிவேப்பிலை, கோங்குரா செடிகள், கலாபாஷ் செடிகள், ஒற்றைப் பப்பாளிமரம் என அனைத்துக்கும் நீரூற்றிவிட்டு, வேலிக்கருகில் இருந்த தனக்குப் பிடித்த பழமரங்களைப் பராமரிக்கச் சென்றார். அங்கு இருந்த க்ரேன்பெர்ரி மரத்தில் புதிதாக பழங்கள் ஏதும் இருக்கிறதா என்று சோதித்தபோது, பின்னால் அதன் சில கிளைகள் உடைந்து சிதறிக் கிடப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். திரும்பிச் சென்று தனது புல்வெட்டியை மீண்டும் சரிபார்த்தார். முன் சக்கரத்தின் கீழ் க்ரேன்பெர்ரி கிளை ஒன்று சுற்றிக் கிடப்பதைக் கண்டார்.

“எங்கள் அண்டை வீட்டாரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், திரு. ராபர்ட்சன்?” என்றாள் சாரா.

“உங்கள் அண்டை வீட்டாரா? ஏன், அவர்களைப் பற்றி என்ன? உங்களுக்கு ஏதேனும் சிரமம் தருகிறார்களா?”

“சென்ற வாரம் சார்ல்ஸ்டனிலிருந்து ஒரு டஜன் கோழிக்குஞ்சுகளை வாங்கினோம். என்ன அற்புதமான உயிரினங்கள்! தினம் பள்ளியிலிருந்து நான் திரும்பும் போதெல்லாம், வாயிலுக்கு வந்து என்னை அவை வரவேற்கும். உண்மையிலேயே அவை என் மன அழுத்தத்துக்கு நல்ல மருந்து. ஆனால் திருமதி. ப்ராடிக்கு அது பிடிக்கவில்லை போலும். மூன்று நாட்களுக்கு முன்பு, வேலியினூடாக எட்டிப் பார்த்து, கோழிகளின் சத்தம் பற்றி எங்களிடம் மிகப்பெரிய புகார் செய்தாள்.”

“அவர் அப்படிப்பட்ட பெண்மணிதான்,” என்றார் திரு.ராபர்ட்சன்.

“தவறாக நினைத்துக் கொள்ளவில்லையென்றால் ஒன்று கேட்கலாமா? நீங்கள் இங்கு வாழ்ந்தபோது உங்களுக்கும் இதே போன்ற பிரச்சனைகள் இருந்தனவா?”

“நிறைய,” என்று துவங்கினார் திரு. ராபர்ட்சன். அவருடைய மனைவி, முன்னாள் அண்டை வீட்டாருடன் அவர்களுக்கு இருந்த தனிப்பட்ட பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்வது நல்ல யோசனை அல்ல என்று கூறுவது போல் ஒரு வெற்றுப் புன்னகையைத் தன் கணவரை நோக்கி வீசினார். மேலும், அவர்கள் மீது தற்போது நீதிமன்றத்தில் வழக்கு வேறு போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் திரு. ராபர்ட்சன் மனைவியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தார். “நாங்கள் இந்த வீட்டை விற்றுவிட்டு வெளியூர் சென்றதற்கு அந்த ஜோடி மட்டுமே காரணம். திருமதி செல்வநாயகம், எங்கள் நாயை அந்த ஆள் சுட்டுவிட்டான் தெரியுமா? இந்தப் பகுதியிலேயே கொஞ்சம் கூட நட்புணர்வே இல்லாத மக்கள் அவர்கள்தான் என்று கூறுவேன். பல ஆண்டுகளாக எப்படியோ அவர்களை சமாளித்தோம். எங்கள் வேலையை மட்டுமே கவனித்தோம். அந்த ஆள் மனைவியின் சொல்லுக்கு ஆடுபவன். எங்கள் முற்றத்தில் என்ன நடந்தாலும் அந்தப் பெண் அதை வெறுத்தாள். தோட்டத்தில் நாங்கள் தோண்டுவதோ, எங்கள் வெள்ளிக்கிழமை மாலை விருந்துகளோ எதுவும் பிடிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, எங்கள் சார்லியைக் கண்டாலே அவளுக்கு வெறுப்பு. எப்போதாவது அவர்களைப் பார்த்து குறைப்பதைத் தவிர சார்லி என்ன தவறு செய்தான்? ஏறக்குறைய ஏழு வருடங்கள் நாங்கள் அவர்களுக்கு அண்டை வீட்டில் வாழ்ந்தாலும், சார்லியும் அவர்களை ஒருபோதும் விரும்பவில்லை. அந்தப் பெண் தன் வீட்டை விட்டு வெளியே வரும்போதெல்லாம், சார்லி அவளைப் பார்த்து இடைவிடாமல் குரைப்பான். ஒருவேளை அவளுடைய வெறுப்பூட்டும் குணங்களை அவன் உள்ளூர அறிந்திருக்கலாம்.”

சாராவுக்கு ஏதோ தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. “உண்மையிலேயே அவர் உங்கள் நாயை சுட்டு விட்டாரா? உங்கள் நாய் இப்போது நலமாக இருக்கிறதா?”

“உயிருக்குப் பாதிப்பில்லை. ஆனால் அவனது வலது முன் காலில் நிரந்தரமான வடு ஏற்பட்டு விட்டது. நான் அந்த ஆளை நீதிமன்றத்துக்கு இழுத்து விட்டேன். வழக்கு இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தக் குற்றத்துக்காக அந்த ஆள் சிறையில் அடைக்கப்படுவார் என்று நம்புகிறேன். இது ஒரு திட்டமிட்ட கொலைமுயற்சி! நாலாவது டிகிரி குற்றம். நீதிமன்றம் கைவிட்டால்கூட, என்னிடமிருந்து அந்த ஆளுக்குத் தகுதியான பதில் கிடைக்கும். இது உறுதி. திருமதி. செல்வ நாயகம், இந்த நபர்களிடம் நீங்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.”

தனது பம்ப்-ஷாட் துப்பாக்கியுடன் திரு. ப்ராடி வேலியின் மறுபுறம் எழும் சித்திரம் மனதில் எழுந்து சாராவுக்கு வயிற்றில் ஒரு மெல்லிய நடுக்கம் உண்டாக்கிற்று. அவர் எப்போதுமே அவர்களுடன் நட்போடுதான் நடந்து வந்திருக்கிறார். சாரா வேலை முடிந்து திரும்பும் போது அவர் தன் வீட்டு முற்றத்தில் இருந்து அவளை நோக்கிக் கைகாட்டுவது வழக்கம். திரு. ப்ராடி கைவினைஞராக சுயதொழில் செய்து, உள்ளூர் மக்களிடமிருந்து ஆர்டர்களைப் பெற்று வேலை செய்து கொண்டிருந்தார். அவரது வேலைநேரம் கணிக்க முடியாததாக இருந்தது. அதனால், வழக்கத்திற்கு மாறான நேரங்களில் வீட்டில் தங்கியிருந்தார். ஆனால் திருமதி. ப்ராடியின் பொறுமை என்னும் குணத்தையோ ஒரு டீஸ்பூனில் அளவிட்டு விடலாம். சாரா சிறப்புக் கல்வி ஆசிரியராகப் பணிபுரியும் அதே பள்ளியில்தான் அவளும் பணிபுரிந்தாள். தன்னைப் பார்த்துப் புன்னகைக்க முனையும் எவருக்கும், திருமதி ஸ்டெஃபனி ப்ராடி தன் ஓவல் வடிவ பாறை முகத்தைத்தான் பரிசாக வழங்குவது வழக்கம். சாரா வீட்டுக்கு இனிப்புகளோடு சென்று சந்திப்பது இருக்கட்டும், அவர்கள் புது வீடு வாங்கி குடி பெயர்ந்ததற்கு குறைந்த பட்சம் வாழ்த்துக்களைக் கூடத் தெரிவிக்கவில்லை அவள்.

“ அவர்களுடன் தொடர்பு கொள்வதை முடிந்தவரை தவிருங்கள். அவர்கள் எல்லைக் கோட்டைத் தாண்டி விடாதீர்கள்,” என்றார் திரு. ராபர்ட்சன், சாராவின் குழம்பிய முகத்துக்கு பதிலளிக்கும் விதமாக.

சாராவுடன் விருந்தினர்கள் அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது, பீட்டர் க்ரேன்பெர்ரி மரத்தடியில் முறிந்து கிடந்த மரக்கிளைகளை சேகரித்து கையில் வைத்தபடி, அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார். விருந்தினர்களைக் கண்டதும் புன்னகைத்துக் கையசைத்தார். அவர்களும் கைகளை அசைத்து விடைபெற்றனர். கணவனின் முகத்தில் இருந்த குழப்பக் குறிகளைக் கண்டு சாரா அவரிடம் சென்றார். பீட்டர் கையை உயர்த்தி, ஒரு பூங்கொத்தைக் கொடுப்பது போல, முறிந்த கிளைகளை அவளிடம் காட்டினார்.

“என்னதிது?”

“நம்ம க்ரேன்பெர்ரி மரத்துடையவை. மரத்துக்கு கீழே கிடந்தது.”

“என்ன? எப்படி?” இதற்கு யார் காரணம் என்று சாராவுக்கு உடனடியாக தெரிந்து விட்டது. “பீட்டர், இது நம்ம பக்கத்து வீட்டுக்காரங்களோட வேலை.”

“ஏன், எதுக்கு?”

தங்களது அண்டைவீட்டாரின் கொடூர குணங்களைப் பற்றிக் கணவரிடம் விரிவாகச் சொல்ல சாரா எத்தனித்தபோது, அவள் பெயர் சொல்லி யாரோ கூப்பிடுவது கேட்டது. திருமதி. ப்ராடியின் தவிர்க்க முடியாத அடிக்குரல். சாரா தடுமாறி, பதற்றத்துடன் நிமிர்ந்து, “யெஸ், சார்!” என்றாள்.

“யெஸ் சார் இல்லை, யெஸ் மேம்!” செம்பட்டை முடியிலான திருமதியின் ப்ராடியின் கொண்டை வேலிக்கு மறுபுறம் இருந்து வெளிப்பட்டது. கேரேஜின் நுழைவாயிலில் இருந்து, அவர்களது முற்றத்தை அண்டை வீட்டாரிடமிருந்து பிரிக்கும் வேலிகள் (ஒரு வேலி அல்ல, ஒவ்வொரு வீட்டிற்கும் ஒன்று.) குறைந்தபட்சம் பத்து அடி தூரத்தில் இருந்தபோதிலும், எரிக்கும் கண்களுடனும், துடிக்கும் மூக்குடனும் கூடிய திருமதி.ப்ராடியின் முகத்தை சாராவால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. வேலிக்கு அப்பால் அவள் ஒரு ஸ்டூலில் ஏறி நின்று கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் ஐந்தடி இரண்டு அங்குல உயரமேயுள்ள அவள் உடலில் அமர்ந்திருந்த தலை வேலிக்கு மேலே வந்திருக்க முடியாது.

“ஹலோ, திருமதி. ப்ராடி, எப்படி இருக்கிறீர்கள்?”

“திருமதி. செல்வநாயகம், எங்களது இடத்தில் உங்கள் செடிகள் ஊடுருவாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். என் முற்றத்தில் வேறொருவரின் மரம் எட்டிப் பார்ப்பது எனக்குப் பிடிக்கவில்லை. முதலில் கோழி சத்தம், இப்போது இது…”

க்ரேன்பெர்ரி மரத்தின் மற்றுமொரு முறிந்த கிளையைப் பிடித்துக் கொண்டு அவளது வலது கை காற்றில் மேலெழுந்தது. பீட்டர் தம்பதியினரை அதிர வைக்கும் வெறியோடு அதை அவர்களின் முற்றத்தில் எறிந்தாள்.

“ கடவுளே! அது நீங்கள்தானா திருமதி. ப்ராடி? நீங்கள்தான் எங்கள் மரத்தின் கிளைகளை உடைத்தீர்களா?”

“ஆம் நான்தான். மரத்தையே அழிக்கவில்லை என்பதற்காக நன்றியுடன் இருங்கள்.”

“நீங்கள் அப்படி செய்திருக்க வேண்டாம், திருமதி பிராடி. உங்கள் முற்றத்திற்குள் வரும் கிளைகள் தொல்லையாக இருக்கின்றது என்று நீங்கள் எங்களிடம் கூறியிருக்கலாம். நாங்களே அதைச் சரி செய்திருப்போம்.”

“என்ன செய்திருப்பீர்கள்? மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட்டிருப்பீர்களோ? முதலில் அதை இங்கே நட்டபோதே அதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். அம்மணி, இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. ஏற்கனவே மோசமான அண்டை வீட்டார் ஒருவருடன் நாங்கள் நீண்ட காலம் துன்பப்பட்டுள்ளோம். நீங்கள் இங்கு வந்து மூன்று மாதங்கள் கூட வரவில்லை, நான் ஏற்கனவே மன அமைதியை இழந்துவிட்டேன். முதலில் கோழிகள் பின்னர் இது.”

“இப்படி மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம், திருமதி. ப்ராடி. நடந்ததற்கு வருந்துகிறேன். இனி எங்கள் கிளைகள் உங்கள் முற்றத்தில் எட்டிப்பார்க்காமல் பார்த்துக் கொள்வோம்,” பற்களைக் கடித்துக் கொண்டு சாரா பதிலளித்தாள்.

பதில் ஏதும் சொல்லாமல், திருமதி ப்ராடி கோபமாகத் திரும்பித் தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

“பிரச்னை எதுக்கு? பேசாம மரத்த தூக்கிடலாமே!” என்றார் பீட்டர்.

“நாம் எந்த தவறும் செய்யவில்லை! மரத்தை அகற்றும் கேள்விக்கே இடமில்லை. இது நம் வீடு. அதில் என்ன செய்யவும் நமக்கு உரிமை உண்டு.”

அவர்கள் அண்டை வீட்டாரின் விரோதம் வளர்ந்து கொண்டே சென்றது. பள்ளியில் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது திருமதி. ப்ராடி தன் வலுத்த குரலில் சாரா மீது அதிகாரத் தொனியுடன் குற்றச்சாட்டுகளை வைக்க ஆரம்பித்தார். குறைந்த பட்சம் ஆறு அடி இடைவெளியில் அவர்கள் இருவர் மட்டுமே நின்று கொண்டிருந்தாலும், கட்டணம் செலுத்தும் இடத்தில் சமூக விலகலை சாரா கடைப்பிடிக்காதது குறித்து புகார் கூறினார்; சாராவின் மதிய உணவு நேரத்திலயே பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களை அவள் ஏற்பாடு செய்ததால், தொடர்ந்து மூன்று நாட்கள் சாரா மதிய உணவைத் தவறவிட வேண்டியிருந்தது. திருமதி.ப்ராடியின் உயிரியல் மாணவர்கள் ஐந்து பேருக்கு சாரா துணை ஆசிரியயையாக இருந்தாள். இதனால் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. இந்தக் கூட்டங்களின்போது திருமதி. ப்ராடி தன்னைத் திறமையற்றவள், அதனால்தான் அவள் மாணவர் ஐவரும் தேர்வுகளில் தோல்வியுறுகின்றனர் என்று மறைமுகமுகமாகக் குத்திக் காட்டுகிறாளோ என்று சாராவுக்குத் தோன்றியது. கடந்த சில வாரங்களாகவே சாராவுக்கு மன அழுத்தம் மிகுந்து வந்தது. அவளது ஐஈபி (தனிப்பட்ட கல்வி திட்டம்) களை முடிப்பதற்கான காலக்கெடு நெருங்கி அவளை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அவளது மருமகளின் உடல்நிலை மோசமடைந்து கொண்டே வருவதாக இந்தியாவிலிருந்து தகவல் வந்த வண்ணம் இருந்தது. பிரசவத்தின்போது அவளது நஞ்சுக்கொடியில் கிழிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்று மருத்துவர் தெரிவித்திருந்தார். திருமதி. ப்ராடியின் நடத்தை சாராவின் அமைதியின்மையை மேலும் கூட்டியது. அவளுக்குத் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று, வீட்டில் கணவனிடம் சாரா சொல்லிக் கொண்டிருந்தாள்.

“நீ இப்ப என்ன சொல்ல வர்றே? நான் போய் அந்த ஆளை அடிக்கணுங்கறியா? என்ன, என்னை ஜெயிலுக்கு அனுப்ப திட்டம் போடுறியா?”

“சும்மா உளறாதீங்க. அவ மேல இருக்கிற கோவத்துக்கு அவளை எதாவது பண்ணனும். பேசாம அவர் கார் காஸ் டேங்கில சர்க்கரையைப் போட்டு உட்டுடறன். அவ என்ன காடிலாக்தானே வச்சிருக்கிறா?”

“இப்ப யாரு உளர்றது? அமைதியா இரு. நமக்கு எந்த பிரச்னையும் வேண்டாம்,” என்றார் பீட்டர்.

“தெனம் அவ எனக்கு ஏதாவது பிரச்னைய குடுத்துகிட்டே இருக்கா. என்னால வேலையில கவனம் செலுத்தவே முடியறதில்ல.ஏற்கனவே இந்தியாவில இருந்து ஃபோன் வந்தாலே பீதியா இருக்கு. இந்தப் பொம்பள வேற எரியிற தீயில எண்ணெயக் கொட்டிட்டு இருக்கா. அடுத்த தடவ ஏதாவது பண்ணினான்னா, ஒண்ணு நானே சண்ட போடப் போறேன், இல்ல ஸ்கூல் போலீஸ்கிட்ட கம்ப்ளெய்ன் பண்ணப் போறேன்.”

“சாரா, பேசாம விடு. நம்ம வேலைய நம்ம பார்ப்போம். அவளும் அவ வேலயப் பாப்பான்னு நம்புவோம்,” என்றார் பீட்டர். அவர் எரிபொருள் விற்பனை நிலையமொன்றில் பகுதி நேர வேலை பார்த்து வந்தார். புலம் பெயர்ந்தோருக்கான பணிபுரியும் விசா இல்லாமலேயே சட்டவிரோதமாக வேலை செய்ய அனுமதித்தது அந்த நிறுவனம். தனது விஷயங்களில் அவசியமின்றி அண்டை வீட்டார் மூக்கை நுழைப்பதை பீட்டர் விரும்பவில்லை. “இந்தியாவிலருந்து நல்ல செய்தி வர்றதுக்காகக் காத்திருக்கிறோம். இந்த நேரத்துல எதுக்கு தேவையற்ற விஷயங்கள்ல நம்ம நேரத்தை செலவழிக்கணும்?” தனது ஒஸிட்டோ ஃபிலீஸ் ஜாக்கெட்டை அணிந்து கொண்டே கேட்டார் பீட்டர்.

“எங்க கெளம்பீட்டிங்க? இப்பதானே வேலையிலருந்து வந்தீங்க!”

“எங்க ஓனர் வால்மார்ட்டிலருந்து சில பொருட்களை வாங்கிட்டு வரச் சொல்லிருக்கார். சீக்கிரம் வந்துடறேன்.”

அன்று இரவு, சாரா படுக்கையில் உருண்டபடி, பல நிலைகளை முயற்சித்தாள். நூறுவரை எண்ணினாள். ஆனாலும் உறக்கம் வரவில்லை. பதினோருமணி போல, கணவனின் குறட்டையிலிருந்து தப்பிக்க, படுக்கையை விட்டு வெளியேறி, விருந்தினர் படுக்கையறையில் படுத்தாள். ஒருமணி நேரமாகத் தூங்குவதற்கு முயற்சி செய்தும் அடங்காத மனம் தன் சேமிப்பிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக படங்களை எடுத்து வந்து காட்டிக் கொண்டிருந்தது. அவளும் செய்வதறியாது அவற்றைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தாள். அவர்களது படுக்கையறையில் குறட்டை நின்றிருந்தது. ஒருவேளை பீட்டர் கழிப்பறைக்குச் சென்றிருக்கலாம். கழிப்பறையின் ஃப்ளஷ் செய்யும் ஒலியைக் கேட்பதற்காகக் காத்திருந்தாள். எந்த ஒலியும் வந்த மாதிரி இல்லை. சாரா எழுந்து படுக்கையறைக்குச் சென்றாள். பீட்டர் அங்கு இல்லை. கழிப்பறை திறந்திருந்தது. திரும்பி வீடு முழுவதும் அலசினாள். அவரை எங்கும் காணவில்லை.

அவளது செல்பேசி ஒலித்தது. திரையில் அவளது மகனின் பெயர். மார்புக்கூட்டுக்குள் இருதயம் துடிக்க, செல்பேசியை எடுத்துக் காதில் வைத்தாள்.

“அம்மா, சாரி. உன்னை எழுப்பிட்டேன்.”

“என்ன விஷயம்? இப்ப ஏன் கூப்பிடுற?”

“இப்ப ஆஸ்பத்திரியிலதான் இருக்கோம். இன்னிக்கே கிறிஸ்டியை அட்மிட் பண்ண சொல்லி டாக்டர் சொல்லிட்டாரு. இன்னும் வலி எடுக்கல. ஆக்ஸிடாக்ஸின் இன்ஜெக்ஷன் ஒண்ணு போட்டுருக்காங்க. சிசேரியன் பண்ற முடிவு எடுக்கறதுக்கு பணிரெண்டு மணி நேரமாவது காத்திருக்கணும்னு டாக்டர் சொல்றாரு. எனக்கு பயமா இருக்கும்மா.”

“செல்வின், கவலைப்படாதே. எல்லாம் நல்லபடியா நடக்கும். நாங்க இங்க ப்ரே பண்ணிட்டுதான் இருக்கோம். சீக்கிரமே நல்ல செய்தி வரும்.”

“சரி, நீ போய்த்தூங்கு. தகவல் சொல்லணும்னுதான் கூப்பிட்டேன். காலையில கூப்பிடறேன். அப்பாட்ட சொல்லிடு.”

“என்னால இனி தூங்க முடியுமான்னு தெரியலை. குழந்தை பிறந்தவுடனே என்ன நேரம்னாலும் கூப்பிடு,” என்றாள் சாரா.

மகன் தொலைபேசியைத் துண்டித்த பிறகு, சாரா பீட்டரை செல்பேசியில் அழைத்தாள். அது அவர்களின் படுக்கையறையிலிருந்து பாடியது. ஜன்னலுக்கு அருகில் சென்று அவருடைய கார் இருக்கிறதா என்று பார்த்தாள். இருவரின் கார்களும் நிலவொளியில் நனைந்து கொண்டிருந்தன. அவர் தனது காரையும் எடுக்கவில்லை. எங்கே சென்றிருப்பார்? சோபாவில் அமர்ந்திருந்த சாராவின் இதயம் புதிய தீவிரத்துடன் துடிக்கத் தொடங்கியது.

சில நிமிடங்களுக்குப் பிறகு, பீட்டர் பின் கதவு வழியாக, பெரிய பாலிப்ரோப்பிலீன் பாட்டில் ஒன்றைக் கையில் சுமந்து கொண்டு திரும்பினார். அவர் முகத்தில் ஒரு குறும்புச் சிரிப்பு.

சாரா குழம்பிய கண்களுடன் அவரைப் பார்த்தாள். “இந்த நேரத்தில, இந்த வெதர்ல வெளியே என்ன செஞ்சுகிட்டிருந்தீங்க?” என்றாள்.

“இனி நீ நிம்மதியா இருக்கலாம். இன்னும் ரெண்டு நாளைக்கு உன் ஃபிரண்டு ப்ராடி தொல்லை உனக்கு இருக்காது,” என்று பீட்டர் இளித்தார்.

“முதல்ல உட்காருங்க. என்ன செஞ்சீங்கன்னு சொல்லுங்க. சிரிக்கறத நிறுத்துங்க.”

“சரி, சரி. இதுதான் விஷயம். வேலிக்குப் பக்கத்துல நம்ம சைடு ஒரு பெரிய ஓட்டை ஒண்ணு இருக்குது. அது அங்கிருந்து அவங்க செப்டிக் டேங்குக்கு போகுதுன்னு நினைக்கிறேன். அதுல ஒரு அரை லிட்டர் ஹை மோலாரிட்டி எச்ஸிஎல்லை ஊத்திருக்கேன். அது மெதுவா அவங்க தொட்டியை அரிக்கும். ஒண்ணு ரெண்டு நாள்ல அவங்க யார்டு முழுக்க சாக்கடை தண்ணி லீக் ஆயிடும். அதுவரைக்கும் கேவலமான ஒரு நாத்தம் எங்கிருந்து வருதுன்னு அவங்களால கண்டுபிடிக்கவே முடியாது. அவங்களுக்கு இதுதான் சரியான பதிலடி.”

“பீட்டர்! ஏன் இவ்வளவு கொடூரமா இருக்கீங்க? அவங்க சிசிடிவில நீங்க பண்ணது தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க?”

“நம்ம வீட்லயும்தான் நெறைய கேமரா வச்சிருக்கிறோம். எதையாவது யூஸ் பண்றமா என்ன? அதுவுமில்லாம, நான் நம்ம யார்ட்லதானே வேல செஞ்சேன்? என் யார்ட்ல நான் என்ன வேணாலும் செய்வேன்.”

“அந்த நாத்தம் நம்ம வீட்டுக்கும் வரும்னு நெனச்சுப் பார்த்தீங்களா?”

பீட்டர் அவளைத் திகைப்புடன் பார்த்தார். “நீதானே அவளை எதாவது செய்யணும்னு சொன்னே. அதான் செஞ்சேன்,” என்றார்.

“அத விடுங்க. செல்வின் இப்பதான் கூப்பிட்டான். கிறிஸ்டிய ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டாங்களாம். எப்ப வேணா அங்கருந்து கால் வரலாம்.”

ஆனால் மறுநாள் முன்மதியம் வரை இந்தியாவில் இருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. பின் வரவேற்பறையில் உள்ள சோபாவில் அமர்ந்து, கவலையுடனும், பதற்றத்துடனும், செல்பேசியை நோண்டிக்கொண்டிருந்தாள் சாரா. அப்படி செய்வதலாயே இந்தியாவிலிருந்து ஏதாவது செய்தியை விரைவாகப் பெற்று விடலாம் என்பதைப் போல. பீட்டர் சமையலறையில் மசாலா ஆம்லெட் ஒன்று போட முயன்று தோற்றுக்கொண்டிருந்தார். தன் செல்பேசி ஒரு குறுஞ்செய்தி வந்ததை அறிவிக்கும் வகையில் ஒலியெழுப்பியபோது, சாரா அதிர்ந்து எழுந்தாள். செய்தி இந்தியாவிலிருந்து அல்ல. திரு. ராபர்ட்சனிடமிருந்து. ‘வீட்டில்தானே இருக்கிறீர்கள்? நான் பக்கத்தில்தான் இருக்கிறேன். சும்மா வந்து ஒரு ஹாய் சொல்லலாம் என்று நினைத்தேன்.’

“இன்று நடந்ததைச் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்,” என்றபடி திரு.ராபர்ட்சன் சோபாவில் அமர்ந்தார். சோர்வாகவும் உணர்ச்சி வசப்பட்டவராகவும் காணப்பட்டார். அவரது பேண்ட்டில் சேறு படிந்திருந்தது. வெள்ளைச் சட்டையின் வலது ஸ்லீவில் சிவப்பு நிறத்தில் ஒரு கோடு இருந்தது. அது இரத்தமா அல்லது உதட்டுச்சாயமா?

“உங்கள் வழக்கில் வெற்றி பெற்று விட்டீர்களா? என் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு பிரச்சனை ஆர்ம்பித்து விட்டதா?” என்ற பிறகு உதட்டைக் கடித்துக் கொண்டாள் சாரா. அவள் விருப்பமில்லாமலேயே வார்த்தைகள் வாயிலிருந்து வெளிவந்திருந்தன. இரு ஆண்களும் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தார்கள்.

“இல்லை, அது இல்லை. இன்று என்ன நடந்தது என்பதை இப்போது நினைக்கும் போது, வழக்கின் முடிவு இனி எனக்கு ஒன்றும் முக்கியம் இல்லை என்று நினைக்கிறேன். எல்லாமே நம்மை மீறிய ஒன்றால் கவனித்துக் கொள்ளப்படுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் வாழ்வின் ஓட்டத்துடன் செல்ல வேண்டியதுதான்.”

“என்ன நடந்தது?”

“இன்று அதிகாலையில் ஸ்ட்ராபெரி வயல்களுக்குப் பக்கத்தில் நீலைச் சந்தித்தேன். காலில் ரத்தம் கொட்டிய நிலையில் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார். ஏதோ தெருநாய் அவரை கடித்ததாக தெரிகிறது. மிகுந்த வலியில் இருந்தார். கடிபட்டு முப்பது நிமிடங்களுக்கு யாருமே வரவில்லை. செல்பேசிக்கான சேவை கிடைக்காததால் அவரால் யாரையும் அழைக்க முடியவில்லை. என்னைக் கண்டவுடன் அவர் கண்ணீர் விட்டார். நான் அவரை என் டிரக்கில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். இப்போதுதான் அவரது வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்பா! என்னபயங்கரமான காட்சி! ரத்தமும், கண்ணீருமாக அவரைப் பார்த்தது!”

“கடவுளே!” என்றாள் சாரா. அப்போது அவளின் செல்பேசி ஒலித்தது. திரு. ராபர்ட்சனிடம் அனுமதி கோரிவிட்டு அழைப்பை எடுக்க படுக்கையறைக்குள் சென்றாள். ஐந்து நிமிடங்கள் அலைபேசியில் பேசிவிட்டு, இருண்ட முகத்துடன் திரும்பி வந்தாள். தன் கணவனிடம் அவள் தாய் மொழியில் ஏதோ சொல்வதை திரு.ராபர்ட்சன் கவனித்தார். பீட்டரின் முகமும் இருண்டது. எது தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று அவரிடம் தெரிவிக்க அவர்களுக்கு ஆர்வம் இல்லாமலிருந்தது போலிருந்தது. அவர்கள் பிரச்னையை அவர்களே கவனித்துக் கொள்ளட்டும் என்று முடிவு செய்தவராக எழுந்தார். அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார்.

“டிரக்கில் மருத்துவமனைக்குச் செல்லும்போது திரு. ப்ராடி என்னிடம் சொன்னார். “டிம், உன் நாயைத் துன்புறுத்தியதற்கு வருந்துகிறேன், நண்பா. இப்போது பார் எனக்கு என்ன ஆயிற்று என்று. இதெல்லாமே கர்மா என்றுதான் நினைக்கிறேன்.’…மருத்துவமனையை அடையும் வரை அவர் கர்மா என்ற வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். பாவம் அவர், அவருக்காக நான் மிக வருத்தப்படுகிறேன்,” என்றார் திரு.ராபர்ட்சன், வெளியேறுவதற்கு சற்றுமுன்.

ராபர்ட்சன் சென்றபிறகு கணவனும், மனைவியும் உறைந்து போய் அமர்ந்தனர். சாராவின் கண்களில் கண்ணீர் தளும்பிக் கொண்டிருந்தது. இந்தியாவில் இருந்து வந்த செய்தி முற்றிலும் மகிழ்ச்சியானதாக இல்லை. அவர்களின் பேத்தி பிறந்திருந்தாள். ஆனால் அவள் வருகையை அவர்களால் இன்னும் கொண்டாட முடியவில்லை. ஏறக்குறைய பதின்மூன்று மணி நேரம் காத்திருந்த பிறகும் கூட, ஊசி மூலம் மருத்துவர் விரும்பிய வலியை உருவாக்க முடியவில்லை, சிசேரியன் செய்துதான் குழந்தையை எடுக்க வேண்டியிருந்தது. அறுவை சிகிச்சையின் விவரங்களை அறிய சாரா மீண்டும் தனது மகனை அழைத்தார். துரதிர்ஷ்டவசமாக மருத்துவரின் கணிப்பு உண்மையாகி, கிறிஸ்டிக்கு நஞ்சுக்கொடியில் லேசான கிழிசல் ஏற்பட்டு, அறுவை சிகிச்சையின் போது இரத்த இழப்பு ஏற்பட்டிருந்தது. இது மேலும் சிக்கல்களை உருவாக்கியிருந்தது. குழந்தை சரியாக சுவாசிப்பதில் சிரமமேற்பட்டு, சுவாச இயந்திரத்தின் உதவியுடன் சுவாசித்துக் கொண்டிருந்தது. குழந்தை குணமடைய குறைந்தது இரண்டு நாட்கள் ஆகலாம் என்று மருத்துவர் கூறியிருந்தார். இதனால் குழந்தைக்கு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வந்துவிடுமோ என்று செல்வின் பயந்தான். மேலும் திகிலூட்டும் வகையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு கிறிஸ்டிக்கு குழந்தை ப்ளூஸ் என்ற பாதிப்பு ஏற்பட்டது. அவளின் இடைவிடாத அழுகை வார்டு முழுவதையும் நிரப்பிக்கொண்டிருந்தது. நான் செத்து விடுவேன், செத்து விடுவேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.

“எதாவது நாத்தம் அடிக்குதா?” என்றாள் சாரா.

“என்னது?”

“உங்களுக்கு செப்டிக் டேங்க் நாத்தம் எதாவது அடிக்குதா?”

அழுகிய நாற்றம் ஏதாவது அடிக்கிறதா என்று பீட்டர் முகர்ந்து பார்த்தார். அவரால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. “எனக்கு எதுவும் தெரியலயே,” என்றார்.

“எனக்கும் இல்லை. அவங்க செப்டிக் டேங்க்குக்கு எதுவும் ஆயிடக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன். கிறிஸ்டியும், குழந்தையும் சீக்கிரம் வெளிய வந்துறணும்.”

தங்கள் குடும்பத்துக்குள் வந்த புதுமுகத்தின் வருகையைக் கொண்டாட முடியாமல் போனது பீட்டருக்கு ஏமாற்றம். குழந்தைக்கும், தங்கள் மருமகளுக்கும் எந்தத் தீங்கும் நடக்கக்கூடாது என்று அவரும் வேண்டிக்கொண்டார்.

அண்டை வீட்டாருடன் முறிந்த உறவை சீர்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதினாள் சாரா. கடந்த வாரம் செய்த சில குலாப் ஜாமூன்களுடன் அவர்களைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்றாள். அவர்களைச் சந்திப்பதன் மூலம், முறிந்த நட்பைப் புதுப்பித்துக் கொள்ள முடிவது மட்டுமல்லாமல், இந்தச் செயல் அவர்களுக்குச் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக அமையும் என்றும் அவள் நம்பினாள்.

திரு. ப்ராடி தலையை ஆட்டி ஆமோதித்தபடி அமர்ந்திருக்க, முகத்தில் அசடு வழியும் புன்னகையுடன் அமர்ந்திருந்த சாராவையும் பீட்டரையும் நோக்கி, சமாதானத்துக்கான அடையாளமாக ஒரு மெல்லிய புன்னகையைத் தன் கல் முகத்தில் வரவழைக்க முயன்று கொண்டிருந்தாள் திருமதி. ப்ராடி. திரு. ப்ராடி விரைவில் குணமடைய வேண்டும் என்ற அவர்களின் வேண்டுதல்களையும், சிரப்பில் ஊறவைத்த குலாப் ஜாமூன்களையும் இருவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். சரியாகப் பதினைந்து நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு முழுவதும் பீட்டர் தனது இருக்கையில் அசௌகரியமாக நெளிந்தபடியே இருந்தார்.

அவர்கள் திரும்பி வரும் வழியில், ப்ராடி தம்பதியினரின் முன் முற்றத்தின் விளிம்பில் சாரா திடீரென நின்றாள்.

“என்ன?” என்றார் பீட்டர்.

“உள்ள இருந்தப்ப எதாவது நாத்தம் அடிச்சுதா?”

“என்ன? இல்லையே!.”

“இப்ப எதாவது நாத்தம் அடிக்குதா?” என்றாள் சாரா.

– சொல்வனம் இதழில் September 2022, இதழ்-277

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *