கரும்பலகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2021
பார்வையிட்டோர்: 3,646 
 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வகுப்பறையிலிருந்து எழுந்து கொண்டிருந்த சமுத்திர ஆரவாரம் தீடீரென்று கரைந்து, மடிந்து, மறைகிறது. இடுகாட்டின் சலனமற்ற அமைதி – வகுப்பெங்கும் ஆழ்ந்த மௌனம் நிலவுகின்றது.

கந்தவனம் வாத்தியார் குமுறும் எரிமலையாய்த் தோன்றுகிறார், அவர் கண்கள் அக்கினிக் கெந்தகக் குழம்பைக் கக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதயத்தினுள்ளே கொதிப்படைந்த உணர்ச்சிக் குமுறல்கள்…கொந்தளிப்புகள், எண்ணப் போராட்டங்கள்.

“யாரடா இந்தப் படத்தைக் கீறினவன் ? எழுந்து நில்லடா?”-மயானத்தின் மௌனத்தைக் கிழித்தெறிந்த கோடையிடி கேட்கிறது; கேள்விக்கணை ஒலிக்கிறது.

ஊசி விழவில்லை : சருகு அசையவில்லை. அசைவற்ற, ஒலியற்ற பிராந்தியத்தின் அமைதி-பேரமைதி!

கடைக் கண்ணால் கரும்பலகையைக் காகப் பார்வை பார்க்கிறார்.

கரும்பலகையில் கேலிச் சித்திரம் ஒன்று வரையப்பட்டிருக்கிறது. அதன் அடியில் ‘ஆனந்த நடனம் ஆடினார்’ என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. பார்க்கப் பார்க்க அவரது உள்ளத் தீ கொழுந்து விட்டுப் பற்றி எரிகின்றது. அந்தச் சதுரமுகம், மூக்கு என்று பெயரிடாக் குறையாகக் கீறப்பட்டிருக்கும் மூக்கு, வாய், கண்கள், பிஞ்சு முருங்கைக் காய்களையொத்த கைகள், கால்கள்…கண்கள் நிலை குத்தி நிற்கின்றன.

அவர் நெஞ்சத் தீய்க்கு நெய்வார்க்கும் அந்தக் காட்சி…

மீண்டும் தொடர்ந்து கேட்கிறார். வார்த்தைகளில் என்று மில்லாத சூடு.

“யார் இந்தப் படத்தைப் போட்டது? மரியாதையாகக் கேக்கிறேன், என்னை உங்களுக்குத் தெரியும். சொல்லி விடுங்கள். யார் போட்டது?”

மாணவர்கள் மூச்சு விடும் ஒலியைத் தவிர, எங்கும் அலாதியான மௌனம்.

ஆத்திரம் கந்தவனம் வாத்தியாரை அலைக்கழிக்கிறது. கட்டுமீறிய சினம் அவர் தேகத்தைப் படபடக்க வைக்கிறது. வகுப்பறையில் மேற்குச் சுவரிலிருந்து கிழக்குச் சுவர் நோக்கி நடக்கிறார் – நடக்கிறாரா? இல்லை; தெத்துகிறார். தெத்தித் தெத்தி நடைபோடுகிறார். இடதுகால் பாதம் நடையை இடறி விடுகிறது. அவருடைய அந்தப் பாதம் முற்றாக நிலத்தில் படியவில்லை. பாதத்தில் கெவர் விட்டிருந்த விரல்கள் மட்டும் தரையில் ஊன்றி, முட்டுக் கொடுத்து, வலது பாதத்தின் அசைவுகளுக்குத் தக்கபடி ஈடு கொடுத்து, செயல்படுகின்றது.

கந்தவனம் வாத்தியாரின் இடது கால் ஊனம்; பிறவிக் குறைபாடு.

தாங்கித் தாங்கி நடந்து கொண்டே ஒரு கணம் கரும் பலகையைப் பார்க்கிறார் வாத்தியார். பார்க்க விருப்பமில்லாமலிருந்தும்கூட அவர் கண்கள் கரும்பலகையை நோக்குகின்றன.

இது எந்த மனிதனுடைய உருவம் என்று யாராலுமே இனங்கண்டு கொள்ளப்படாவிட்டாலும், இடது காலில் கெவர் விட்டிருக்கும் விரல்களுக்குச் சற்று அழுத்தம் கொடுத்து, வலது காலுக்கும் இடது காலுக்கு முள்ள ஏற்ற இறக்கத்தைக் குறிப்பிட்டுக் காட்டி வரையப்பட்டிருந்தது அந்த நையாண்டிப் படம்.

மனதில் தன்னைப் பற்றியே சிறுமை உணர்ச்சி; தாழ்வு எண்ணம். படத்தின் ‘கேலிக்குரியவன் தான் தான் என்கிற கசப்பான உண்மை கந்தவனத்தின் மனதை உறுத்திக் கொண்டிருக்கிறது.

தமிழ் வாத்தியார் தான் அவர்.. அத்துடன் தனது பிறவிக் குறைபாட்டை எண்ணியெண்ணித் துடி துடிக்கும் ஆத்மாவும்கூட. தாழ்வு மனப்பான்மை என்னும் பயங்கரமான மனநோய் அவரை வாட்டுகிறது.

அவர் இந்த வியாதியால் துன்புறுகிறார்.

இந்த நோய்க்குப் புட்டிகளில் அடைத்த மருந்தை இது வரை எந்த விஞ்ஞானியும்கூட…

துப்பாக்கிக் குண்டு மனிதனை ஒரேயடியாகச் சாகடித்து விடும் வல்லமை . வாய்ந்தது… ஆனால், கேலிக் கருத்துகளினால் புகுத்தப்படும் தாழ்வு எண்ணம்; ஊனக் குறைபாட்டுக்குரியவன் மனதை அணு அணுவாகச் சாகடித்துக் கொண்டிருக்கும். பாவம், கந்தவனம் வாத்தியார் கேலிச் சித்திரத்தைப் பார்த்தது தொடக்கம் சிறிது சிறிதாக, கொஞ்சம் கொஞ்சமாக, அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருக்கிறார்…

அவருடைய அங்கஹீனத்தைக் குறியாக வைத்துக் கொண்டு மறைவில் சில மாணவர்கள் ஹாஸ்யம் பண்ணி வம்பளப்பார்கள். அந்த நையாண்டியை இரசித்தும், இரசித்துச் சிலர் சிரிப்பாய்ச் சிரிப்பார்கள். இது அவருக்குத் தெரியும். ‘நொண்டியர்’ என்ற பட்டப் பெயரைப் பற்றி இதுவரை அவர் கவலைப்பட்டவருமல்ல. மாணவர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள தனது பட்டப் பெயரின் மகிமையைப் பற்றிச் சிந்தித்தவருமல்ல.

பருப்பில்லாமல் நடத்தப்பட்ட கலியாணங்களின் எண்ணிக்கையைக் கண்டு பிடித்துவிடலாம். ஆனால் பட்டப் பெயர் இல்லாத ஆசிரியர்களைப் பள்ளிக்கூடங்களில் கண்டு பிடிக்கவே முடியாது. இதுவும் அவருக்குத் தெரியும்.

ஏனென்றால், அவர் கூட ஒரு காலத்தில் பள்ளிக்கூடத்தில் படித்த மாணவன் தானே – தன் காலத்தைத் தானே எண்ணிப் பார்த்தால், மட்டச் சொண்டர், சாக்கர், கண்ணாடிப்புடையன், தும்பு முட்டாஸ் இத்தியாதி பெயர்கள் நிச்சயம் அவர் ஞாபகத்துக்கு வரத்தான் செய்யும்.

மறைவில் நடந்த நையாண்டி இன்று அம்பலத்தில் ஏறி, அரங்கத்தில் நடமாடத் தொடங்கி விட்டதே என்ற மனக் குறுகுறுப்பு, மனச் சஞ்சலம் அவர் நெஞ்சத்தைக் குடைகிறது.

பதை பதைக்கும் வெயிலில் நடந்து கால்களுக்கு இதம் தரும் தண்ணீரை நாடும்பொழுது, கால்கள் நெருப்புக் குவியலின் மேல் இடறிக்கொண்டால்?

கந்தவனம் வாத்தியார் அப்படித்தான் அவஸ்தைப் பட்டார்.

நடந்து கொண்டிருந்தவர் ‘சட்’டென்று நிற்கிறார்; திரும்பிப் பார்க்கிறார்.

“டேய், பாலசிங்கம் ! எழுந்திரு. இதைக் கீறினதார்?”

செவ்வரி ஓடிய கண்களால் அவனை ஊடுருவிப் பார்க்கிறார்.

பதிலில்லை.

கந்தவனம் கர்ஜிக்கிறார். “யாரடா இதைக் கீறினதென்று கேட்கிறேன். பேசாமல் நிக்கிறாயே? சொல்லடா யார் கீறினது?”

“எனக்குத் தெரியாது, வாத்தியார்”

“உம்!”-வாத்தியாரின் ஹும்காரம்.

“முத்தையா, நீ சொல்லடா. உனக்குத் தெரியும் சொல்லு, யார் இதைச் செய்தது?”

“நான் காணவில்லை, வாத்தியார். நேரஞ் செண்டுதான் இண்டைக்குப் பள்ளிக்கு வந்தனான். எனக்குத் தெரியாது.”

பெயர்களை உச்சரித்துக் கேள்விகளைக் கேட்கிறார் வாத்தியார் கந்தவனம். பதில் ஒரே பல்லவிதான். தெரியாது தெரியாது தெரியாது!

‘தெரியாது’ என்கிற பதில் பிஜப்பூர் வட்டக் கோபுரத்தில் ஒலிப்பதுபோல் ஒலிக்கிறது. ஒலியலைகள் அணுக்கதிராக அவரைத் தாக்குகின்றன.

இப்பொழுது மனோகரனின் முறை.

“டேய், மனோகரன்! நீ தான் செய்திருப்பாய், சொல்லடா உண்மையை?”-இவ்வளவு நேரமும் இந்த வாண்டுப் பயலின் பெயர் தனது மனதில் எழவில்லையே என்ற மனக்குறை. தனது ஞாபக சக்தியின் குறைபாட்டுக்காக அவர் வருத்தப்படுகிறார்.

மனோகரன் என்ற அந்த மாணவ மன்னன், மகா குறும்புக்காரன். குறுகுறுத்த கண்கள். துருதுருத்த கைகள்; பொல்லாத துடுக்குத்தனம்; ஒரு நிமிஷமும் சும்மா ஒய்ந்திருக்க மாட்டான்.

அவன் மீது ஏகப்பட்ட புகார். அவனால் அந்தப் பிரதேசத்து மாமரங்கள் பழுப்பதில்லை; பிஞ்சில் உதிர்ந்து விடும். விளாமரங்கள் நாவல்மரங்களின் பாடு சொல்லவே வேண்டியதில்லை. இளநீர்க் குலைகள் இருந்த இடத்தில் இருக்காது. வாழைக் குலைகளின் திடீர் மறைவுகளுக்கும் அவன் காரணமாக இருந்திருக்கிறான். எத்தனையோ வீடுகளின் தெருப் படலைகள் மதகு மறைவுகளுக்குள்ளும் ஒழுங்கை முடுக்குகளுக்குள்ளும் குப்பை மேடுகளுக்கும் இரவு இரவாக உலாச் சென்றதற்கும் அவன் தான் காரணம் என்று குற்றஞ் சுமத்தப்பட்டிருக்கிறான்.

இதற்காக ஆயிரம் தடவை கந்தவனம் வாத்தியாரிடம் மனோகரன் அடியும் வாங்கியிருக்கிறான்.

இருந்தும் மாணவர்கள் செய்யும் குறும்புச் செயல்களுக்குத் தலைமை தாங்கி முதல்வனாகச் சென்று ஒத்துழைப்பான். யாராவது ஒரு மாணவன் குறும்புத்தனம் செய்யும்போது அகப்பட்டுக்கொண்டால் என்ன சாதுரியம் செய்தாவது தனது தோழனைக் காப்பாற்றப் பாடுபடுவான். அதனால் தனக்கு எப்படிப்பட்ட தண்டனை கிடைத்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டான். இந்தத் தனிப்பெருங் குணங்களினால் மனோகரன் மாணவர்கள் மத்தியில் குறிப்பிடக் கூடியவனாகவே விளங்கினான். அவன் வயதில் ஒருவன் எப்படி இருக்க முடியுமோ அதைவிடத் துடியாகத் துணிச்சல் மிக்கவனாக இருந்தான். நித்தக் குடியனுக்குப் புளித்த கள் வெறிப்பதைப்போல, மனோகரனுக்குக் குறும்பென்றால் ஒரே குஷி. அது அவனுக்குக் கைவந்த கலை.

மனோகரன் எழுந்து நிற்கிறான்.

வாத்தியார் வார்த்தைச் சவுக்கைச் சுழற்றுகிறார்: “சொல்லடா உண்மையை, சொல்லு. நீ செய்யாட்டாலும், செய்தது யாரெண்டு சொல்லு; உம்! சொல்லடா மனோகரன்; கீறினதார்?”

“எனக்குத் தெரியும், வாத்தியார்!”

கந்தவனம் வாத்தியாரின் முகத்தில் ஒளிவாள் பளிச்சிட்டு மறைகிறது. மனதில் ஒருவகைத் திருப்தி, ஒருவித நம்பிக்கை .

மனோகரன் ஒரு கணம் கரும்பலகையைப் பார்க்கிறான் அது அவன் உள்ளத்தையும் இலேசாகச் சுடுவதைக் கந்தவனம் வாத்தியாரால் அறிய முடியாது. இந்தக் கீழான செயலைச் செய்யத் தூண்டும் மாணவப் பலஹீனத்திற்குத் தான் அதிகமாகப் பலியாகி விடுவதில்லை, என்ற உண்மையை அவர் புரிந்துகொள்ளவில்லையே என்ற நெஞ்சத்தவிப்பு.

அலைமோதும் கண்கள், மாணிக்கவாசகன் இருக்க பக்கம் திரும்புகின்றன. மனோகரனின் எத்தனையோ திருட்டுத் தனங்களையும் திருகுதாளங்களையும் வாத்தியாரின் காதோடு காதாகச் சொல்லி வகுப்பு மாணவர்களின் சகோதரக் கட்டுப்பாட்டைக் காற்றில் பறக்க விட்டவன் தான் அந்த மாணிக்கவாசகன். அவனைப்பற்றி இவனுக்கு எப்பொழுதும் ‘கோள்மூட்டி’ என்ற இழக்கார நினைவு. ஒரு தடவை யேனும் பழிக்குப்பழி வாங்கிவிட்டால்…

குழந்தை நெஞ்சத்தின் சிறு சுழிப்பு.

இருள் மேகத்தில் முழக்கமின்றிக், கிளைவிடும் சிறு மின்னல். தானே அவன் செய்தது போன்ற குற்றத்தைச் செய்து அதை அவன் காட்டிக் கொடுத்தால்?…இதை நினைத்துப் பார்க்கவும் அவன் உள்ளம் கூசுகிறது. ‘மாணவர்கள் தனது முஸ்பாத்தியைக் காட்டிக் கொடுக்கமாட்டார்கள்’ என்ற நம்பிக்கையில் அந்தக் கேலிச் சித்திரத்தை வரைந்த அந்தக் கோழை தன் கோபக்காரனாக இருந்தாலும் காட்டிக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணம். சுயநல வெப்பத்தினால் உருகிய நெஞ்சம் திரும்பவும் இறுக்கம் பெறுகிறது.

“யாரடா அது? உண்மையைச் சொல்”- வாத்தியார் அந்தப் பெயரைப் பிடுங்கிக்கொள்ள அவதிப்படுகிறார்.

இயற்கையான பருவகால உணர்வுகளும்; துணிகரமிக்க, ‘அடக்கமில்லாத, முரட்டுத்தனமான மனப்போக்குமுள்ள மனோகரனிடம் திடீரென மாறுதல் தோன்றுகிறது.

“எனக்குத் தெரியும். ஆனால், சொல்லமாட்டேன்!” – எவ்வளவு துணிவு; எவ்வளவு தைரியம்! வகுப்பில் எவரையுமே நடுநடுங்கச் செய்யும் முரடனான் அவனுடைய பதில் அவருடைய காதில் ரீங்காரமிடுகிறது.

ஆத்திரத்தை அடக்க முடியாமல் அவர் தன் உதடுகளைக் கடித்துக் கொள்கிறார், ஆங்கார சுயமறதி என்னும் விசித்திரமான நோயால் பீடிக்கப்பட்ட அவர் நெஞ்சம் பதட்டமடைகிறது. உண்மையைப் பிரம்பின் மூலம் கறந்தெடுக்கலாம் என்ற நினைவு கொண்டு வாழும் தமிழ்ச் சட்டம்பிமார் பரம்பரையில் – அசல் வழித் தோன்றல்களின் நேர் வாரிசு தான் கந்தவனம் வாத்தியார். பிரம்பு தாறுமாறாக, மனோகரனின் தேகமெங்கும் விழுகிறது. கை முஷ்டிகளில் பலத்தை ஏற்றி,அவர் அவனது தலையில் மிருதங்கம்வாசிக்கப் பழகுகிறார். அதற்குமேல் கைவலி எடுக்கிறது; மனம் சோர்வடைகிறது; அலுப்பினால் உள்ளம் சலிப்படைகிறது.

கந்தவனம் மற்றைய மாணவர்களை விசாரிக்கிறார்.

அவர் குரல் சூடேறி ஒலிக்கிறது. மாணவர்கள் எல்லோரையும் பழிவாங்கி விடவேண்டுமென்ற குறிக்கோளுடன் வாத்தியார் ஒவ்வொரு மாணவனாகக் கேள்வி கேட்டுக்கொண்டே போகிறார்.

இரண்டாவது வரிசையில் கடைசிக் கோடி வாங்கில உட்கார்ந்திருந்த மாணிக்கவாசகனை அணுகுகிறார்.

“மாணிக்கவாசகா, நீ சொல்லடா, கரும்பலகையில் யார் படம் கீறினது?” அவனிடம் வார்த்தைகளை எப்படி உபயோகிக்க வேண்டும் என்கிற இராஜதந்திரம் தெரிந்தவர் கந்தவனம். அதற்குத் தகுந்த மாதிரி வார்த்தைகளைத் தூண்டிலாக உபயோகிக்கிறார்.

அங்குமிங்கும் கண்களைச் சுழலவிட்ட மாணிக்கவாசகன் வார்த்தைகளை ஒழுங்காகச் சொல்லத் தெரியாமல் உழறுகிறான்; பேந்தப் பேந்தப் விழிக்கிறான்.

வாத்தியாரின் கைப்பிரம்பு உயர்கிறது.

பயந்த சுபாவமுள்ள அவன், முயலைப் போலப் பதுங்கி, நெளிந்து, வளைந்தபடி நிராசையோடு கூடிய தன் கண்களால் வாத்தியாரைப் பார்த்த வண்ணம், அடிக்குத் தப்பிவிட வேண்டுமே என்கிற அவசரத்தில் அச்சம் நிழலாடும் குரலில், “மனோகரன் கீறினது, வாத்தியார்” என்று அவசர அவசரமாகச் சொல்லி முடித்தான். சொல்லிவிட்டுப் பரமசாதுவைப்போல் உட்காருகிறான்.

உண்மை தெரிந்த மாணவர்களில் சிலர். இந்தப் படு பொய்யான குற்றச்சாட்டைக் கேட்டு மனதுள் திடுக்கிட்டனர். சிலர் அவன் நின்ற பக்கமே திரும்பிப் பார்க்காமல், வெறுப்பினால் முகத்தைச் சுழித்தனர். மனோகரனுக்காக மனதார அநுதாபப்பட்டனர்.

கந்தவனம் நம்புகிறார்.

தான் ஒரு குற்றத்தைச் செய்து, அதைத் தனது கோபக்காரன் மனோகரன் மீதே சுமத்தி, தான் அடிவாங்குவதிலிருந்து தப்பிவிட்ட பரமதிருப்தி மாணிக்கவாசகன் மனதில்.

ஒரு தடவையாவது அவன் முகத்தில் காறித் துப்பினால் நல்லது என்ற நினைவு மனோகரன் நெஞ்சில். மனதிற்குள் மாணிக்கவாசகனின் முகத்தில் காறி உமிழ்ந்தான்- தூ!

திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் கோபவெறி வாத்தியாரின் கண்களில் நர்த்தனமிடுகிறது. பிரம்பு மூன்றாவது கண்ணாக அவருக்கு உபயோகப்படுகிறது.

வெறி அடங்குகிறது. மனோகரன் ஆடிக்காற்று ஆலிலை போல் துவண்டு போனான். அவன் வாயே திறக்கவில்லை. இரகசியமாகப் பலம் தரும் அநுதாபம் அவனுக்கு ஆறுதலளிக்கிறது.

இடைவேளை வரையும் பாடங்களை நடத்த இயலவில்லை, தேனீர் அருந்தி, பழைய நிகழ்ச்சிகளிலிருந்து விடுபட்டு, மறுபடியும், வகுப்பறைக்குள் நுழைகிறார் கந்தவனம் வாத்தி யார்.

மேஜையடியில் கோள்மூட்டி மாணிக்கவாசகன் சிணுங்கியபடி நிற்கிறான்.

“என்னடா?” சலித்துக் கொள்ளுகிறார். ‘இந்தச் சனியன்களுடன் மாரடிக்கிறது போதுமெண்ணப் போதும்” என்று தன் தலை எழுத்தை எண்ணி மனம் நொந்து கொள்ளுகிறார். விரக்தி கிளை விடுகிறது.

“யாரோ என் பவுண்டன் பேனையைக் களவெடுத்து விட்டான்கள், வாத்தியார்”

விசாரணை ஆரம்பமாகிறது.

அன்று கந்தவனம் வாத்தியார் எந்தக் குரங்கு முகத்தில் விழித்தாரோ ? அடிக்கடி மன எரிச்சல் பட்டார்.

மாணிக்கவாசகனின் சந்தேகம் பூரணமாக. மனோகரனின் மீது படிகிறது. மனோகரன், தான் மேற்படி பேனாவைக் கண்ணாலே கூடக் காணவில்லையென்று சாதிக்கிறான்.

“உண்மையைச் சொல்லடா. நீதான் கோவத்திலே அவன்ரை பேனையை எடுத்திருப்பாய், சொல்லு; உண்மையைச் சொல்லு” இரக்க உணர்வு அவரை ஆட்கொண்டாலும், பழைய கோபம் முற்றாக அவரிடமிருந்து மறையவில்லை .

மன அடிவாரத்திலே பம்மிக் கிடந்த உணர்ச்சி அலைகளை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் “நான் பேனையை எடுக்க வில்லை வாத்தியார்: நான் எடுக்கவேயில்லை!” இறுமாப்புக் கலந்த கர்வத்துடன், மனோகரன் திரும்பத் திரும்ப இதையே சொல்லுகிறான்.

“சும்மா அடிபட்டுச் சோகாதேடா. உண்மையைச் சொல்லு, உண்மையைச் சொன்னால் விட்டுவிடுகிறேன்” ஆசிரியர் மாணவனிடம் பேரம் பேசிப் பார்க்கிறார்; ஆசை காட்டுகிறார்.

மீண்டும் மறுப்பு-மறுப்புக்குமேல் மறுப்பு!

வாத்தியாரின் கைப் பிரம்பு பேசுகிறது.

இந்த அடிகளுக்கு அவன் பயப்படுவதாகத் தெரியவில்லை. இதைப் போன்ற முரட்டுத்தனமான கண்டிப்பு அவனுடைய மனதைக் கெட்டிப்படுத்தி அடிபடுவதற்கே பயப்படாமல் செய்து விட்டது. சாந்தமயமான, விசித்திரமான திருப் தியை அனுபவிப்பவனைப் போன்று ஒரு நிலை. இதைப் போன்ற தண்டனைகளால் மனம் மரத்துப் போய்விட்ட் மனோகரன் தாயற்றவனி. ‘வீட்டில் சிறிய தாயாரின் அன்பில் லாத பராமரிப்பு, திரும்பித் திரும்பப் பட்டினி போட்டுத் தண்டனை கொடுத்தல், எதெற்கெடுத்தாலும் குற்றங் கண்டு பிடித்து மண்ணள்ளித் திட்டும் சூழ்நிலையில் வளர்ந்த, வளர்க்கப்பட்ட அவன், பரிவு பாசம் என்பதற்கே அர்த்தம் தெரியாமல் வளர்ந்தவன்; வளர்ந்து வருகிறவன்.

கந்தவனம் வாத்தியார் மறுபடியும் சோர்வடைகிறார். மனோகரனிடம் உண்மையைக் கறக்கும் சக்தி தன் கைப்பிரம்புக்குக் கிடையாது என்கிற மெய்ஞ்ஞான அறிவைப் பெறுகிறார்.

“வாடா கழுதை இங்கே! இரடா முழங்காலிலை!”

மனோகரன், முன்னால் செல்கிறான். கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை நேரத்தின் போது, மாதா கோயிலில் முழங்காலில் இருந்து வணங்குவது போல, கால் இரண்டையும் மடித்து மடக்கி வாத்தியார் காட்டிய இடத்தில், கரும் பலகைக்குப் பக்கத்தில் முழங்காலில் நிற்கிறான்.

பாடம் ஆரம்பமாகிறது. ‘பயிலுந் தமிழ் புத்தகத்தின் பக்கங்களை அவசர அவசரமாக மாணவர் புரட்டுகின்றனர். காகிதங்கள் உரசும் ஒலி. பாடம் நடைபெறுகிறது.

மனோகரன் பல்லைக் கடித்துக் கொண்டு முழங்காலில் நிற்கிறான். பொங்கி எழும் வேதனை, அவன் இதயத்தின் மிக நுண்ணிய உணர்ச்சிகளைத் தாக்குகின்றது. கண்களிலிருந்து வடிந்த கண்ணீர், மின்னுகின்ற இளம் கன்னன்களிலே படர்ந்து உலர்ந்திருக்கும் நீர்த்திவலைகளைப் புறங்கையாற் துடைக்கிறான்…

தன் கண்கள் கலங்குவதை வாத்தியார் பார்த்து விடக்கூடாது என்கிற மன வைராக்கியம்!

முழங்கால் கடுக்கிறது. தரையில் ஒட்டி யிருக்கும் வெண் குறுணி மணல் முழங்காலை உறுத்துகிறது. கீழு தட்டைப் பற்களுக் கிடையில் கடித்து வேதனையைச் சப்புகிறான். அவனை அறியாது நீர் பொலபொல’ வென்று வடிகிறது.

சற்று நேரத்தில் கண்களில் ஒரு வகைக் கிறக்கம் நிழலாடுகிறது. கால்கள் உணர்ச்சியற்று மரத்துப் போவது போன்ற உணர்வு; தோள்கள் துவழுகின்றன. முதுகெலும்பு ஏற்பு வலியினால் நிமிர்ந்ததைப் போல, மூளை நரம்புகள் விண்விண்ணென்று வலித்து மண்டையைக் குடைகின்றன. நாக்கு உலர்ந்து வறண்டு போகிறது.

மனோகரன் வளர்ப்பு நாய் எஜமானனைப் பசிப்பார்வை பார்ப்பது போல, வாத்தியார் கந்தவனத்தைப் பரிதாபமாகப் பார்க்கிறான். வாத்தியாரை வைத்த கண் வாங்காமற் கவனித்தவன் திரும்பக் கரும்பலகையைப் பார்க்கிறான். வகுப்பிலுள்ள மாணவர்கள் எல்லோரையுமே கூர்ந்து பார்க்கிறான். எல்லாமே வாத்தியாரின் மேஜையின் மீதுள்ள கைப்பிரம்பு உட்பட எல்லாமே சுழல்கின்றன…சுற்றுகின்றன…வாலறுந்த பட்டம் வானத்தில் வட்டமிட்டுக் கரணமடிப்பது போல, எல்லாமே…எல்லாமே…

“ஐயோ, அம்மா!”- வாய்விட்டு அலறாத அனுங்கல் சத்தம்.

‘தடால்’ பட்டுப்போன மரம் தானாக வீழ்ச்சி அடைவதுபோல மனோகரன்-

நாற்காலியைப் பின்னே தள்ளிவிட்டு, துள்ளியெழுத்து கொள்கிறார் வாத்தியார். மயங்கி விழுந்த மனோகரனை அவசர அவசரமாக அள்ளியெடுக்கிறார். மடிமேல், கிடத்துகிறார்.

சட்டம் என்கிற பிரம்பு ஆசிரியரைப் பயமுறுத்துகிறது. கந்தவனம் வாத்தியார் முகம் பயத்தால் பரபரப்படைகிறது; வேர்க்கிறது. மனப் பதைபதைப்புடன் காரியத்தில் கண்ணாகிறார்.

மாணவர் கூட்டம் மனோகரனையும் ஆசிரியரையும் சூழ்ந்து கொள்ளுகிறது.

“தண்ணி கொண்டு வாங்கடா; தண்ணி!

தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

வலது கையைக் குவளையாக்கி, அதில் தண்ணீரை ஏந்தி, மனோகரன் முகத்தில் விசிறி அடிக்கிறார் கந்தவனம். “ஒதுங்கி நில்லுங்கடா-ஒதுங்கி நில்லுங்கடா…காத்துப் படட்டும்!” என்று மாணவர்களுக்குக் கட்டளையிடுகிறார். தனது சால்வையை எடுத்து மனோகரன் முகத்திற் துடைத்து விடுகிறார். அதே சால்வையைக் கொண்டு அவனது முகத்திற்குக் காற்றுப் பிடிக்க விசிறி விட்டவாறு…

மனோகரனுக்குச் சிறிது சிறிதாக உணர்வு வருகிறது. கண் இமைகளை வெட்டி வெட்டி விழிக்கிறான். கந்தவனம் வாத்தியாரின் கண்கள் அவனுடைய முகத்தை அனுதாபத்துடன் கவனிக்கின்றன.

பூரணமாக உணர்வு வந்ததும் வாத்தியாரின் மடிமேலுள்ள தலையை நிமிர்த்தி, எழுந்து உட்காருகிறான் மனோகரன். கந்தவனம் கைத்தாங்கலாக அவனை நடத்திச் சென்று, அவன் வழக்கமாக அமரும் வாங்குமுனையில் உட்காரவைக்கிறார்.

“வாத்தியார் நான்…நான்…” கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணீர், வார்த்தைகளைத் தடுத்துவிட்டபடியினால் சொற்கள் முற்றாக வெளிவரவில்லை. மீண்டும் “வாத்தியார் நான்…நான்…” என்று உளறுகிறான் மனோகரன். ஆனால் இந்தத் தடவை அவனது பேச்சில் ஓர் அசாதாரணமான, வினோதமான தொனி இருந்தது.

“சொல்லு தம்பி மனோகரன்; உனக்கு என்ன செய்யிது? அடிக்கடி உனக்கு இப்படி வாறது என்ன?” என்று ஆதரவாக விசாரிக்கிறார் ஆசிரியர்.

‘இல்லை’ என்பதற்கு அடையாளமாகத் தலையை அசைக்கிறான் மனோகரன். “காலமை நான் ஒண்ணும் சாப்பிடவில்லை வாத்தியார். காலமை சாப்பிட ஒண்ணுமே தராமல் பள்ளிக்கு என்னைத் துரத்திப் போட்டா எங்கட சின்னம்மா, அதாலை தான் எனக்கு…….”

மனிதபாசம் இருவரையும் இணைத்துக் கட்டுகிறது.

இளமைக் காலப் பசுமை எண்ணங்கள் கந்தவனம். வாத்தியாரின் இதயத்தில் துளிர்விடுகின்றன. மாணவப் பருவ நினைவுகள் அவரது நெஞ்சக் குளத்தில் குமிழ்ந்தன.

நெஞ்சம் உணர்ச்சியின் உந்தலால் நெகிழ்ச்சியடைகிறது.

“மனோகரா! சொல்லு! நீ இப்படியெல்லாம் செய்யலாமா? அதாலைதானே வீணாய்ப் பட்டினி கிடக்கிறாய்?…… என்னிடம் மாடு மாதிரி அடியும் வாங்கினாய்…உன்னாலை எத்தனை பேருக்குக் கஷ்டம்! உம்… நல்லா யோசிச்சுப் பார். நாளைக்குப் பெரியவனாய் வாறவனல்லை – நீ! இப்படிக் கோணங்கித்தனம் செய்து படம் போடலாமா? சொல்லு மனோகரா-சொல்லு!” நெஞ்சத்து உணர்ச்சிகளே வார்த் தைகளாகக் கந்தவனம் வாத்தியாரின் வாயிலிருந்து உதிர்கின்றன. பரிவு, சொற்களாகப் பரிணமிக்கின்றன.

“வாத்தியாரையா!” மனோகரனின் கண்கள் குளமாகின்றன. “வாத்தியாரையா என்னை மன்னித்துவிடுங்க, மாணிக்கவாசகனின் பேனையை எடுத்தது நான் தான். களவெடுக்க வேண்டுமெண்டு நானதைச் செய்யவில்லை. கரும் பலகையிலை நான் தான் படம் போட்டதென்று அவன் சொன்ன அந்தச் சுத்தப் பொய்க்காக…”

கந்தவனம் வாத்தியார் சிலைபோல நிலையாய் நிற்கிறார். அவரது கால் ஊனம், அவர் உள்ளத்தை என்னமோ உறுத்தவேயில்லை.

– 1960 – தண்ணீரும் கண்ணீரும் – சரஸ்வதி வெளியீடு – முதற் பதிப்பு – ஜூலை 1960

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *