கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 12, 2022
பார்வையிட்டோர்: 5,628 
 
 

ஆமாம், கரடிக்குத்தான். எட்டுமாதம் ஒவ்வொருநாளும் பதினெட்டுவயதான ஆண்கரடியை ஒரு மரமுக்காலியில் அமரச்செய்து சர்வாங்க சவரம் செய்தேன். தலைதவிர அனைத்து இடங்களிலும் ஒரு வேர்கூட மயிரில்லாமல் நன்றாக மழித்து மஞ்சளும் விளக்கெண்ணையும் கலந்த பிசினை அதன் மேல் பூசி வழித்துவிட்டு அரைமணிநேரம் அமர வைத்தபின் துணியால் கீழ்நோக்கித் துடைப்பேன். அதன்பின்னர்தான் முட்டையும் பன்றியிறைச்சியும் கலந்த கோதுமைத்தவிடு உணவாக அளிக்கப்படும் என்று அதற்குத்தெரியும். நான் என் கைகளைத் துடைத்துக் கொண்டிருக்கும்போதே எழுந்து உணவுக்குச்செல்லத் தயாராகிவிடும்.இது 1962ல் நடந்தது. அப்போது நான் சதர்ன் பாம்பே சர்க்கஸில் இருந்தேன்.

மிகவும் சாதுவான கரடி. ஜாம்பன் என்றுபெயர். ராமாயணத்தில் வரும் ஜாம்பவானைச் சுருக்கிப் போடப்பட்டது. அதற்கும் காட்டுக்கும் சம்பந்தமில்லை. அகமதாபாத்தில் ஒரு சர்க்கஸ்கூண்டில் பிறந்து எஞ்சிய சோற்றையும் சப்பாத்தியையும் கறிகளையும் தின்று வளர்ந்தது. பிறந்து ஆறுமாதத்திலேயே ஆரம்பித்த கடுமையான பயிற்சிகளினால் மனிதப் பழக்கவழக்கங்கள் படிந்து முதல்பார்வையில் கரடியா என்று ஆச்சரியப்படும்படியாக இருக்கும். மோதி சர்க்கஸ் நொடித்தபோது அதை எங்கள் முதலாளி இரண்டுவயதில் வாங்கினார். அறிமுகம் செய்யப்பட்டபோது அது கைதூக்கி சலாம் போட்டிருக்கிறது. அத்தனை பணிவான கரடியை முதலாளி அதற்கு முன் பார்த்ததில்லை. “பாத்துப் படிங்கலே, தேவ்டியாமாயிரானுங்களே… என்னமாதிரி ஒரு தந்தைக்குப்பிறந்த குணம் அதுக்குன்னுட்டு… வாறானுக” என்று திட்டிவிட்டு உடனே பணத்தை எண்ணிக்கொடுத்து வாங்கிவிட்டார். மூவாயிரம் ரூபாய்,

வரும்போதே தொப்பிகளைப் போட்டால் பிடிப்பது தாளத்திற்கு ஏற்ப குட்டிக்கரணம் போடுவது போன்ற விளையாட்டுக்களைச் செய்யக் கற்றியிருந்தது. எங்கள் பயிற்சியாளர் தாமஸ் செறியான் அதை ஊஞ்சல்களில் ஆடவும் தாவி நிலத்தில் நிற்கவும் கற்பித்தார். கம்பி ஜானகி, பறசினி நாராயணி, அம்புஜம், மாதவி, சுருட்டை ரோஸ்லின் ஆகியோர் அதனுடன் சேர்ந்து பறக்கும் ஊஞ்சலில் பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள். ஜாம்பன் அவர்களை அவ்வளவாக விரும்புவதில்லை. அது எப்போதும் முதலாளியை வழிபட்டது. முதலாளிக்குப் பிடித்தமானதாகவும் பணிவாகவும் நடந்துகொண்டது. முதலாளி அதற்கு தினமும் தன் கைப்பட ஒரு கோழிக்கால் கொடுப்பார். இருகைகளையும் நீட்டி தலைவணங்கி மகாராஜாவிடம் பட்டும் வளையும் வாங்கும் நாயர்வீரனைப்போலப் பெற்றுக்கொள்ளும்.

அது இமையமலைப்பகுதிகளில் வாழும் கருங்கரடி. தெற்கத்திக் கரடிகளுக்கு முன்னங்கால்கள் பெரியவையாகவும் பின்னங்கால்கள் சிறியவையாக வளைந்தும் இருப்பதனால் அவற்றால் ஓரிரு கணங்களுக்குமேல் இருகால்களில் எழுந்து நிற்கமுடியாது. வலுவான பின்னங்கால்களும் சிறிய முன்கால்களும் கொண்ட ஜாம்பன் சிறுவயதிலேயே எழுந்து நிற்கப் பழக்கப்படுத்தப்பட்டது. பெரும்பாலான நேரங்களில் அதன் கூண்டுக்குள்ளேயே இரண்டுகால்களில் எழுந்து கம்பிகளைப்பிடித்தபடி வெளியே பார்த்து நின்றிருக்கும். அவ்வப்போது கரியமுகத்தில் சிவந்த நாக்கு வந்து மூக்கை நக்கிவிட்டுப்போகும். அதன் சிறிய கரிய கண்கள் சோகமானவை. ஓசை அதைவிடச்சோகமானது.

நான் முதலாளிக்குச் சவரம் செய்துகொண்டிருந்தபோதுதான் எல்லாம் ஆரம்பித்தது. சாம்பன் அருகே கூண்டுக்குள் கைகட்டி நின்றிருந்தது. முதலாளி அதைத் திரும்பிப்பார்க்கும்போது ‘அடியன், கும்பிடுறேன் தம்பிரானே’ என்றபாவனையில் தோள்களைக் குறுக்கி தலையை சற்றுத் தாழ்த்தும். எங்கள் முதலாளிக்கு நாகர்கோயில் பக்கம் ஒசரவிளை. எனக்கு சுசீந்திரம் காக்குமூர். அவரது அப்பா அணைஞ்சபெருமாள் பிள்ளை ஊரில் பெரிய மிராசுதார். இவர் பிஏ பாஸானதும் சினிமா எடுக்கும் நோக்குடன் பம்பாய்க்கு சென்றார். சினிமாவுக்குள் நுழையமுடியவில்லை. சர்க்கஸில் சினிமாப்பாட்டுகளுக்கு ரெக்கார்ட் டான்ஸ் ஆடினார். அவரை தேவ் ஆனந்த் சாயலுடன் இருப்பதாகச் சொன்னார்கள் என்று அடிக்கடிச் சொல்வார். பண்ணையார் இறந்தபோது ஊருக்குப்போய் பங்கு பிரித்து வந்து சர்க்கஸை வாங்கிவிட்டார்.

நாங்கள் அப்போது தாவண்கெரேயில் முகாமடித்திருந்தோம். பன்னிரண்டுநாட்களாக மோசம் என்று சொல்லமுடியாமல் சர்க்க்ஸ் போய்க்கொண்டிருந்தது. எங்கள் சர்க்கஸுக்கு எப்போதுமே நடுத்தர நகரங்கள்தான் சரியாக வரும். பெரியநகரங்களில் எங்களை சீந்த மாட்டார்கள். சிறிய ஊர்களில் இரண்டுநாளுக்குப்பின் பார்க்க ஆளிருக்காது. வசூல் உள்ள நாட்களில் முதலாளி பழைய இந்திப்பாட்டுகளை முனகிக்கொண்டிருப்பார். வழக்கமாக விஸ்கி குடித்துவிட்டுத்தான் சவரம்செய்ய வந்து அமர்வார். அந்த மணம் எனக்குப்பிடிக்கும். அவர் குடித்துமுடித்த கோப்பையில் எஞ்சிய துளிகளை நான் நாவில் விட்டுக்கொள்வதுண்டு. அன்று தூங்கி எழுந்து அப்படியே வந்துவிட்டிருந்தார். எச்சில் நாற்றம் அடித்தது

முதலாளி திரும்பித்திரும்பி ஜாம்பனை பார்த்துக் கொண்டிருந்ததனால் நான் எச்சரிக்கையாக கத்தியை விலக்கி விலக்கி சவரம் செய்தேன். அக்குள் மழிக்கும்போது அவர் கூடாரத்திற்குள் பார்த்து “டேய் ராஜப்பா, டேய்” என்றார். வெள்ளாடுகளுக்கு பயிற்சியளிக்கும் ராஜப்பன் மாஸ்டர் கான்வாஸ் ஷூவும் காக்கிக் கால்சட்டையும் வெள்ளைச் சட்டையுமாக வந்து ராணுவபாணியில் நின்று “எஸ் சர்” என்றார். களியக்காவிளைக்காரர்தான். போட்டிருப்பது ராணுவ காண்டீனில் வாங்கிய பழைய ஷூ என்பதற்குமேல் அவருக்கும் ராணுவத்திற்கும் சம்பந்தமில்லை. “டேய், இது எதுக்குடா இப்டிப்போட்டுச் சொறியுது?” என்று முதலாளி கேட்டார். ராஜப்பன் மாஸ்டர் திரும்பிப்பார்த்துவிட்டு “ஆமா, மொதலாளி ரொம்பச் சொறியுது” என்றார். “செருப்பாலே அடிப்பேன். சீக்குபுடிச்ச நாயே. சொறியுதுன்னு நாந்தான் சொல்லுதேனே… எதுக்குடா சொறியுது?”

ராஜப்பன் அதை மீண்டும் பார்த்துவிட்டு “அரிக்குதுன்னு நெனைக்கேன் முதலாளி” என்றார். நான் கத்தியுடன் பின்னகர்ந்துவிட்டேன். முதலாளி முஷ்டிகளை இறுக்கி பல்லைக்கடித்து தன்னை அடக்கி “சாப்பிட்டியா மக்கா?” என்றார். “எஸ் முதலாளி… “ என்றார் ராஜப்பன். “என்னய்யா சாப்பிட்டீக?” ‘சப்பாத்தி கோளிக்குருமா முதலாளி” முதலாளி வாயை நீளமாக்கி சிரித்து “மறுபடியும் ஒருவாட்டி போய் சாப்பிடு கண்ணு”. “எஸ் சர்”. “டேய் வக்காளவோளி…போடா” “எஸ் சர்” . அவர் போன பின்னரும் முதலாளி நடுங்கிக்கொண்டிருந்தார். நான் மெல்ல அவர் கன்னத்தில் கத்தியை வைத்து “நான் ஒரு பத்துநாளாட்டு பாக்குதேன் மோலாளி. பயங்கரமாட்டு சொறியுது… பகலிலே ஒருமாதிரி பரவாயில்ல. ராத்திரி வரட்டு வரட்டுன்னு சொறியுத சத்தம் இம்மி கண்ணடைக்க முடியாது. பாவம் வாயில்லாச்சீவன்” என்றேன்.

“என்ன செய்யுது அதுக்கு?” என்றார். “நான் அத நல்லா பாத்தேன். சின்னதா பேனுமாதிரி நெறைய புளுத்து கெடக்கு. முடிய ஒதுக்கிப்பாத்தாக்க செதலு மாதிரி பிலுபிலுன்னு ஓடுது. பாவம், இங்க அதுக்க நகத்தையும் வெட்டி வச்சிருக்கோம்…” முதலாளி எழுந்துசென்று அதைப்பார்த்துக்கொண்டு கொஞ்சநேரம் நின்றார். ”மொத்தமா கிட்டுதுன்னு நாநூறு கோளி வாங்கினோம்ல மோலாளி. அந்தக்கோளிய கம்பிக்கூண்டிலே போட்டு இதுக்க பக்கத்திலயாக்கும் வச்சிருந்தது. அதிலயிருந்து வந்த கோளிப்பேனாக்கும்” என்று நான் பின்னால் நின்று கொண்டு சொன்னேன். முதலாளி கூண்டைத்திறக்கச் சொல்லி ஜாம்பனை தொடப்போனார். அது மிகுந்த மகிழ்ச்சியுடன் நாய்போல குழைந்து இடுப்பை ஆட்டி மூக்கைத் தாழ்த்தியது. முதலாளி அதன் பிடரியில் கைவைத்து தடவிப்பார்ப்பதற்குள் முழங்கை வரை கோழிப்பேன்கள் ஊர்ந்துவிட்டன.

“கோளிப்பேன் சுளுவில போகாது… நல்ல மருந்துபோடணும்” என்றேன்.”நான் சொன்னா கேக்கமாட்டேங்கானுவ. ஏளை சொல் அம்பலம் ஏறுமா? நமக்கென்ன? இருந்தாலும் லே பாருங்கலே, மோலாளி பாத்தாருண்ணா பாடு பரலோகமாக்கும்னுட்டு பத்துநாப்பது வட்டம் சொன்னேன். ஆருகேக்கானுக? திமிருல்லா…” என்றேன். ”ஊஞ்சலிலே ஆடுறப்ப சொறிஞ்சுதுன்னா கீளவிளுந்து செத்துப்போயிரும்.. தொப்பியப்பிடிக்கணுமானாகூட இப்பிடி சொறிஞ்சா நடக்காதுல்லா?” என்று மேலே போனேன். முதலாளி என்னிடம் ஒன்றும் சொல்லாமல் உள்ளே போனார். நான் முதலாளிக்கு நெருக்கமானவனாக ஆன உணர்வை அடைந்து உல்லாசமாக சீட்டியடித்து ஒரு மங்களூர் கணேஷ்பீடியைப் பற்றவைத்துக்கொண்டேன்.

மறுநாளே செறியான் தாமஸ் சென்று உள்ளூர் மாட்டுடாக்டரைக் கூட்டிவந்தான். ஜாம்பனுக்கு மருந்து பூசப்பட்டது. அழுகிய முட்டைபோல கடும் நாற்றமடிக்கும் இளம் மஞ்சள்நிறமான திரவத்தை அள்ளி அதன் உடலில் ஊற்றி முள்ளாணி சீப்பால் நன்றாகச் சீவி விட்டோம். ஜாம்பன் பொதுவாக பராமரிக்கப்படுவதை விரும்பும். நான்குபேர் நான்கு சுற்றும் நின்று நீரூற்றிச் சீவ முதலாளியே நேர்முன்னால் காக்கிக் கால்சட்டையுடன் நின்றதை பெரிய கௌரவமாகவே எடுத்துக்கொண்டது. வாயில் அந்தத் திரவம் பட்டபோது மட்டும் புர்ர்ர்ர்ர் என ஒலியெழுப்பியது.கூண்டையும் அந்த நீரால் கழுவினோம். எங்கள் கைகள் அந்தத் திரவத்தால் முறுமுறுவென்று ஆகி அரிப்பெடுத்தன. சொறிவது நின்றது. இரண்டுநாள் அது உல்லாசமாக கூண்டுக்குள் ஆடி ஆடி நின்றது. மூன்றாம்நாள் மீண்டும் சொறியத்தொடங்கியது. மறுநாள் மயிரை விலக்கிப்பார்த்தால் பேன்கள் கலைந்தோடின

மீண்டும் மாட்டுடாக்டர் வந்தார். இம்முறை வெண்ணிறமான பொடியைப்போட்டு அண்டாவில் கலக்கி மஞ்சள்திரவத்தை உண்டுபண்ணியபோது சர்க்கஸில் அனைவரும் தும்மினார்கள். பொறுத்துப்பார்த்த ஜாம்பனும் அதன் அடக்கத்தை மீறி இரண்டு தும்மல் போட்டுவிட்டு ‘மன்னிக்கணும் முதலாளி’ என்று முதலாளியைப் பார்த்தது. நான்காம் நாள் மீண்டும் பேன் வந்தபோது முதலாளி யோசித்தார். இன்னொரு மாட்டு டாக்டர் வந்து இளநீல நிறமான தைலம் ஒன்றை நீரில் கலக்கி பால்போல ஆக்கி அதை பெரிய துருத்தியில் அடைத்து ஜாம்பனின் மேல் அடித்தார். அந்த துளிப்புகைக்கு கண்களை மூடி மூக்கைத்தாழ்த்தி கம்பிளிக்குவியல் போல அமந்ந்திருந்த ஜாம்பன் கடைசியில் முதலாளியை ஏறிட்டு நோக்கி ‘முடியலை முதலாளி’ என்று பாவனை காட்டியபின் தொடர்ந்து எட்டு தும்மல்களைப் போட்டது

நான்குநாட்களுக்குப்பின் மீண்டும் ஜாம்பன் சொறிந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு முதலாளி அமந்திருக்க நான் சவரம் செய்துகொண்டே “இதொண்ணும் கேக்காது முதலாளி… எங்க சாதியில நாங்க அறியாத உண்ணியும் பேனுமா? பல மருந்துக எங்களுக்கும் உண்டு. அப்பன் பாட்டன் அறிஞ்ச வித்தைகள். எருக்கில புகை போடுதது. இந்துப்பு கலந்த பீநாறிப்பச்சிலைக்க சாறு… அப்டி பலதும். ஆனா வித்தைகளிலே வித்தைன்னாக்க மண்ணெண்ணையாக்கும். நம்ம கரடி பாலனுக்கு இதே மாதிரி சீலைப்பேன் கேறிப்போட்டுது. ஓரோ முடிக்கு கீளயும் ஒருபேனு. என்னண்ணு எடுக்க? இருடேண்ணு சொல்லி பிடிச்சிருத்தி ஒரு சர்வாங்க ஷவரம். மொளுங்கென வளிச்ச பிறவு குளூக்க மண்ணெண்ணை பூசி ஒரு நாலுமணிக்கூர் இருந்தபிறவு ஒரு குளி. எங்க போச்சுண்ணே தெரியாதுல்லா? ஏது?”

அதுதான் நான் செய்த வினை. முதலாளி திரும்பி ஜாம்பனைப் பார்த்துவிட்டு “அதேமாதிரி இவனுக்கும் செய்தா என்னடே?” என்றார். நான் திடுக்கிட்டு “மோலாளீ!” என்றேன். “ஆமடே. இதுக்கும் பிரச்சினை இந்த முடியாக்கும். பரட்டைபிடிச்சு இறுகிச் செம்மில்லா கெடக்கு? என்ன மருந்தடிச்சாலும் பேனுக்க மேலே படுறதில்ல…” நான் அழுகையளவுக்குச் சென்று “கரடிக்க முடின்னாக்க…. அந்த வித்தை எங்கிளுக்கு தெரியாதே மோலாளி” என்றேன். “ஆமா, பெரிய வீணை வித்தைல்லா? டேய், நல்ல மாஞ்செஸ்டர் கத்தி ரெண்டு இருக்கு. செல்ஃப் ஷேவிங்குக்கு உள்ளது. அதைக் குடுக்கேன். செய்யி. எல்லாம் முடிதானே?” என்றார். “மோலாளி, அது கரடிக்குப் பிடிக்குமோ என்னமோ”. முதலாளி அதைப்பார்த்தபின் “இதுக்கா? டேய், நீ இதுக்க புடுக்க வெட்டி எடுத்தாலும் ஒண்ணும் சொல்லாது” என்றார். ”கரடிக்குச் செரைச்சவன்னு சொல்லுவானுக மோலாளி”. “ஹிட்லருக்குச் செரைச்சவன பேப்பரில படமில்லாடே போடுதான். நீ இனிமே விஐபியாக்கும். நானே உனகக்பேரில போஸ்டர் அடிக்கேன்”

அதற்குள் செய்தி சர்க்கஸ் முழுக்கப் பரவி பரபரப்பாகி விட்டது. ”கரடிக்கா? உள்ளதா?” என்று என்னிடம் ஜானகி கேட்க “போடி தேவ்டியா” என்றேன். விதவிதமான கூடாரத்துணிகளின் இடுக்கு வழியாக முகங்கள் என்னைப் பார்த்து நான் திரும்பிக்கொண்டதும் ப்ர்ர்ர் என்று சிரித்தன. அன்றிரவெல்லாம் ஊரைவிட்டே ஓடினாலென்ன என்று கற்பனைசெய்தும் வாங்கிய முன்பணத்தை கொடுக்காமல் போனால் முதலாளி ஆள்வைத்து பிடித்துவந்து கட்டிவைத்து அடிப்பாரே என மறுகற்பனை செய்தும் ஏங்கிக் கண்ணீர்விட்டுகொண்டிருந்தேன். மாரிமுத்து “விடுங்கண்ணாச்சி. எவ்ளவோ கண்டாச்சு. கரடின்னா கரடி. நாளைக்கே ஒரு ஆனைண்ணா ஆனை” என்றான். “பேதீலபோற நாயே, ஆனைக்கு உள்ளது ஆகமொத்தம் அஞ்சுமுடிலே. இது உள்ள எடம் பூரா முடில்லா?” என்றேன். “முடிக்குள்ள பாம்போ பூரானோ கேறி இருந்தாலும் தெரியாதே. எனக்க அரவணப்போத்தியே, நான் என்னசெய்வேன்”

மறுநாள் காலை சர்க்கஸ்காரர்கள் முழுக்க கூடிவிட்டனர். எதையும் பொருட்படுத்தாத அந்தரவிளையாட்டுப் பெண்கள் கூட வந்து வாய்பொத்திச் சிரித்துக்கொண்டு வேடிக்கைபார்த்தனர். முதலாளி நாடாநாற்காலியைப் போட்டு அமர்ந்துகொண்டார். நானும் மாரிமுத்துவும் ஜாம்பனை அழைத்துவந்து முக்காலியில் அமரச்செய்தோம். முதலாளிமுன் அமர்வதில் அதற்கு மகிழ்ச்சிதான். பெண்கள் பார்ப்பதில்தான் சிறிய எரிச்சல். திரும்பிப்பார்த்து வாயைத்திறந்து சிவந்த நாக்கைக் காட்டியது. அதன் பற்களை அப்போதுதான் அந்த அளவுக்குக் கூர்மையாகப்பார்த்தேன். குட்டி யானைத்தந்தங்கள் போலிருந்தன. “பாத்து வெட்டணும் கேட்டியா?” என்றார் முதலாளி. நான் ”எனக்க சுடலைமாடா, அரவணைப்போத்தியே, முத்தாலம்மோ நீயே துணை பாத்துக்க” என்று சொல்லி மிஷினை எடுத்தேன். ஜாம்பன் ஆவலாக அதைப் பார்த்தது.

மிஷினுடன் சேர்த்து கைகூப்பி ”மோலாளி கைநடுங்குது….“ என்றேன். அவர் ஜாம்பனைப்பார்த்து “நல்லாத்தானே இருக்குது?” என்றார். “எனக்க கை மோலாளி” என்றேன். “நான் தனியாட்டு செய்யுதேன்”. முதலாளி புரிந்துகொண்டு எழுந்து “ஏய் எல்லாரும் போங்க…ஆரும் பாக்கப்பிடாது. போங்க…ஏ தேவ்டியா போடி அந்தால” எங்கள் முதலாளிக்கு பெண்களுக்கும் சர்க்கஸ் மிருகங்களுக்கும் நடுவே பேதமே கிடையாது. எல்லாருக்கும் ஒரே சவுக்குதான்.அனைவரும் விலகிச்செல்ல அவரும் உள்ளே சென்றார். ஆனால் அப்பால் எங்கோ சிரிப்பொலிகள் எழுவதைக் கேட்டேன். நானும் ஜாம்பனும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அசையாமல் நின்றோம். அதன் கைகளைக் கட்டியிருக்கவேண்டுமோ என்று எண்ணிக்கொண்டேன். கையில் நகங்கள் இல்லை. ஆனால் பற்கள்… அது என்னைவிட ஒருமடங்கு பெரியது. ‘பயராதீய அண்னாசி சோலி முடிஞ்சு பாத்தா பாதியாட்டு ஆயிரும்…”. நான் சீற்றத்துடன் ‘சோலி முடிஞ்சு சின்னதா ஆக இது உனக்க சுண்ணியாலே?” ஜாம்பன் நான் என்னசெய்யப்போகிறேன் என்று அக்கறையுடன் பார்த்தது. நடுவே வெறிபிடித்துச் சொறிந்துகொண்டது.

நான் மிஷினை தூக்கி அதன் முன் கிளிக் கிளிக் என இயக்கிக் காட்டினேன். அது கெட்ட ஆவி விட்டு வாய்திறந்து மூச்சுவிட்டது. அதன் கையில் வைத்து மெல்ல கொஞ்சம் முடியை வெட்டினேன். ஆச்சரியமாக ஜாம்பன் நான் செய்யப்போவதைப்புரிந்துகொண்டு கையை நீட்டியது. மாரிமுத்து “நாம முடிவெட்டுகத எட்டு வருசமாட்டு பாக்குதுல்லா அண்ணாச்சீ?” என்றான். ”அப்டி அது பலதையும் பாக்குது. வாயமூடுல தாயளி” என்றேன். உடலே குளிர்கண்டது போல ஆடிக்கொண்டிருக்க மெல்ல வெட்டத்தொடங்கினேன். கரடியின் முடி மனிதமுடியைவிட இரண்டுமடங்கு தடிமனாகவும் செறிவாகவும் இருந்தது. ஆனால் முதலில் அதற்கு பழகாமல் திகைத்த என் கைகள் சற்றுநேரத்திலேயே உரிய அழுத்தத்தை அளிக்கத் தொடங்கின. முடி கம்பளம் போலச் சுருண்டு எழுந்து கத்தைகளாக உதிர்ந்தது. “பொத்தையில புல்லு செதுக்குத மாதிரில்லா இருக்கு?” என்றான் மாரிமுத்து “செவுள திருப்பிருவேன், வக்காளவோளி” என்றேன். ஜாம்பன் என்னைக் கூர்ந்து பார்க்க “அதைன்னு நினைச்சுகிடப்போவுது அண்ணாச்சி… மனுசன மாதிரி இல்ல, மானமுள்ளதாக்கும் பாத்துக்கிடுங்க”

கொஞ்சம் கொஞ்சமாக நான் அந்த வேலையில் ரசித்து மூழ்கிவிட்டேன்.வெட்டி வெட்டி என் கைகள் கடுத்தன. சொடக்குவிட்டு இலகுவாக்கியபின் மீண்டும் தொடர்ந்தேன். மனிதத் தலையிலுள்ள முடியின் சுழிஅமைப்பு எனக்குத் தெரியும். மனித உடலில் ஆளுக்கொரு வகையில் முடியின் சரிவு இருக்கும். கையால் வருடி திசையோட்டத்தைத் தெரிந்துகொண்டால் ஒழுக்காக மழிக்கமுடியும். அது ஒரு இனிய வேலை. நான் பெண்களுக்கும் சர்வாங்க சவரம் செய்வேன். சர்க்கஸ் ரசிகர்களில் பாதிப்பேர் மழிக்கப்பட்ட கைகால்களில் அரிதாரம்பூசி வந்து நிற்கும் ஜட்டியும் முலைக்கச்சையும் போட்ட பெண்களைப்பார்க்க வருபவர்கள். கரடியின் முடியை கையை வைத்து கணிக்கமுடியவில்லை. விரலால் ஓட்டி ஓட்டி ஓட்டம் பார்த்தேன். ஆச்சரியமான சுழிகளெல்லாம் இருந்தன. ஒவ்வொரு சுழியையும் பரவசத்துடன் கண்டுபிடித்தேன். “நல்ல சுளியுள்ளதாக்கும்லே” என்றேன். “கரடிக்கு சுளி பாக்குத சாத்திரம் உண்டா அண்ணாச்சி?”. “ஏல, பக்கல்லேண்ணாக்க சுளி இல்லேண்ணு ஆயிருமா? இருக்கப்பட்ட சுளிக்கு தக்கன அதுக்கு விதி” என்றேன். “இப்டி முடியவெட்டி சீரளியணும்னு சுளி இருந்திருக்கு” என்றான் மாரிமுத்து

ஒருமணிநேரத்தில் முழுமையாகவே வெட்டி முடித்தேன் .என் கையில் கோழிப்பேன் ஏறாமலிருக்க மண்ணெணை பூசியிருந்தேன். கீழே கிடந்த மயிர்க்குவியல் முழுக்க பேன்கள் அடர்ந்திருந்தன “பாவம் அண்ணாச்சி… அதுகளுக்க கம்பெனி பூட்டியாச்சுன்னு இன்னும் அதுகளுக்குத் தெரியல்ல. அள்ளிப்பிடிச்சு இருப்பாக்கும்” என்றான் மாரிமுத்து “வாரிக்கொண்டுபோய் தீயில போடுலே” என்றேன். அவன் முடியை அள்ளிக்கொண்டு குவித்து வேப்பிலைச்சருகை கலந்து தீவைத்தான். பொசுங்கும் மணம் சூழ்ந்தது. “நாயிங்க ஒருவாய் சோறு திங்க விடாமாட்டானுக” என்று கோமதி ஆச்சியின் வசை அப்பால் கேட்டது. ஜாம்பன் ஆவலுடன் திரும்பி அந்தத் தீயைப்பார்த்தபின் கொட்டாவி விட்டது.

அறுவடை முடிந்த வயலுக்குத் தீவைத்தபின் கருகிய கச்சிமுனை எஞ்சியிருப்பதுபோலிருந்தது ஜாம்பனின் உடல். சோப்புக்குழம்பை ஜாம்பனின் மேல் ஊற்றி தேங்காய்நார் பிரஷ்ஷால் நன்றாகச் சுழற்றிச் சுழற்றி பூசி நுரையெழுப்பினேன். அதற்கு அந்த கிச்சுகிச்சு பிடித்த்திருந்தது. முதுகையெல்லாம் திருப்பிக் காட்டியது. நுரைத்து முடித்ததும் வெண்ணிறமான துண்டுபோர்த்தி அமர்ந்திருப்பதுபோலிருந்தது ஜாம்பன். முதலாளி தந்த புதிய கத்தியை விரித்தேன். மாஞ்செஸ்டர் கத்தி ஒன்றின் உரிமையாளனாக ஆவது என்னுடைய பெரிய கனவாக இருந்த காலம். பனையோலைபோல எடையற்று மெலிதாக இருந்தது. கண்ணாடிக்கல்லில் ஒருமுறை நீவிவிட்டு மெல்ல அதன் தோளில் வைத்து கீழ்நோக்கி இழுத்தேன். கண்ணாடியில் வெண்ணையை வழித்தெடுப்பதுபோல இருந்தது. அற்புதமான கத்தி. வெள்ளைக்காரர்களுக்கு மேல்தோலே இல்லை. ஆகவே இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதைக்கொண்டு ஒரு கரடியை மழிப்பதை அதைக் கண்டுபிடித்த துரை கேள்விப்பட்டால் என்ன செய்வார்? மழிக்கமழிக்க எனக்கு ஆசையாக இருந்தது. பெரிய உடம்புதான் என்றாலும் சீக்கிரம் முடிந்துவிடுமே என்று தோன்றியது.

ஜாம்பன் தன் அக்குள்களையும் அடிக்கால்களையும் அதுவே தூக்கி விரித்துக்காட்டியது. முழுமையாக மழித்து முடித்து வாளியில் இருந்த சீனாக்காரம் கலந்த நீரை அள்ளி அதன்மேல் வீசி அடித்து மெல்லிய துணியால் ஒற்றி முடித்தேன். மஞ்சளையும் ஆமணக்கெண்ணையையும் கலந்து அதன்மேல் பூசி வழித்துக்கொண்டிருந்தபோது மாரிமுத்து பின்னால் வந்து நின்று பர்ர் என்று சிரித்து “அண்ணாச்சி இதாரு நம்ம சம்முவம்பிள்ள பாட்டாவுக்க மச்சானா?” என்றான். நான் அப்போதுதான் ஆச்சரியத்துடன் ஜாம்பனைப் பார்த்தேன். விலகி நின்று அதைப்பார்த்தபோது எனக்கு படபடவென்று வந்தது. சர்க்கஸில் வார்கள் பின்னும் நிபுணராக இருந்து சென்றவருடம் செத்துப்போன சண்முகம்பிள்ளைப் பாட்டாவின் சாயல் உண்மையிலேயே இருந்தது ஜாம்பனுக்கு. பெரிய வயிறு மூன்று மடிப்புகளாக அமைந்திருக்க கீழே கனத்த தொடைகள். தோள்களும் கைகளும் கொஞ்சம் சூம்பியவை. மாரிமுத்து சிரித்துக்கொண்டே இருந்தான் “அண்ணாச்சி எனக்கு முடியல்ல… என்னால கண்ணெடுத்துப் பாக்க முடியல்ல அண்ணாச்சி… அய்யோ நான் என்னண்ணு சொல்ல”

அவனுடைய சிரிப்பைக்கேட்டு அப்பாலிருந்து பெண்கள் எட்டிப்பார்த்தார்கள். ஜானகி யீ என்று வீரிட்டு பின்னடைந்து “அய்யோ என்டே அக்கச்சியே… என்டே தெய்வமே!” என்று கூவி வாயில் கைவைத்துச் சிரிக்க மற்றபெண்கள் ஓடிவந்து பார்த்து ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு சிரிக்கத் தொடங்கினர். சற்றுநேரத்தில் மொத்த சர்க்கஸும் ஜாம்பனைச்சுற்றிக் கூடி நின்று வயிற்றைப்பிடித்துக்கொண்டு சிரித்தது. மாரிமுத்து தரையில் விழுந்து கண்ணீர் விட்டுச் சிரித்துக்கொண்டிருந்தான். எனக்கும் விபரீதமாகத்தான் தோன்றியது. ஆனால் பயம்தான் ஏற்பட்டது. கரடி பாலன் கூடாரத்திலிருந்து எட்டிப்பார்த்து “என்னட்டி அங்க சிரிப்பு? தேவ்டியாநாயிங்களே..” என்றபின் ஜாம்பனைப்பார்த்தான். மின்சாரத்தில் கைவைத்ததுபோல திகைத்து “சீ, உள்ள போங்கட்டீ மிண்டைங்களே…” என்று கையை ஓங்கி அடிக்கப்போனான். அவர்கள் சிரித்தபடி பின்னால் சென்றனர். அவன் என்னை நோக்கித் திரும்பி “டேய், வெண்டைக்கா, என்னலே இது? வக்காளவோளி….என்னலே இது” என்றான்

“மோலாளி சொன்னதாக்கும்” என்றேன். அவன் அழுகைபோல முகம் நெளிய “எதுக்குடே அந்தப் பாவம் சீவனைப்போட்டு இந்தப் பாடுபடுத்துதீய? மிருகமா இருந்தாலும் அதுக்குண்ணு ஒரு மானம் மரியாத உண்டில்லாடே?” என்று கேட்டான். நான் ஜாம்பனைப்பார்த்தேன். என்ன நடந்திருக்கிறது என்று அதற்குத்தெரியவில்லை. மாறி மாறி முகங்களைப்பார்த்து ‘என்ன இப்ப?’ என்ற பாவனையில் மூக்கைச் சுளித்தது. குளிர்வதுபோல அதன் உடல் சிலிர்த்துக்கொண்டே இருந்தது. “நான் உனக்கு பேனு வந்தப்பம் முடிவளிச்சேன்லா, அதை சொன்னப்ப மோலாளியாக்கும்..” என்றேன். முதலாளி உள்ளே இருந்து வருவதைக் கண்டதும் பெண்கள் ஓடிப்போனார்கள்

முதலாளி இயல்பாக வந்தார். அவர் ஜாம்பனைப் பார்க்கவில்லை என்று தோன்றியது. அவரைக்கண்டதும் ஜாம்பன் பவ்யமாக எழுந்து நின்றது. கரடிபாலனிடம் “என்னடே?” என்றபின் அவர் ஜாம்பனைப்பார்த்தார். திகைத்து ஒரு அடி பின்னால் சென்றபின் பீரிட்டுச் சிரிக்கத் தொடங்கினார். அதைப்போல அவர் சிரித்து நான் பார்த்ததேயில்லை. அவரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. கட்டுப்படுத்திக்கொண்டு ஏதோ சொல்லவந்தவர் உடனே மீண்டும் சிரிக்கத் தொடங்கினார். கண்களில் வழிந்த நீரை கைக்குட்டையால் துடைத்தபின் மீண்டும் சிரித்தார். ஜாம்பன் அவரை மகிழ்ச்சியுடன் பார்த்தபடி கைகளை நீட்டியது. பாலன் அழுகை நிறைந்தமுகத்துடன் எங்களை மாறிமாறிப்பார்த்தான்.

“மண்ணெண்ணை பூசட்டுமா மோலாளி?’ என்றேன். “டேய், இது நம்ம சம்முகம் மாதிரில்லாடே இருக்கு… நான் அங்கிண வாறப்ப ஆரோ கிளவன் நிக்கிறான்னுதான் நினைச்சேன். சத்தியமா” என்றார் முதலாளி. “டேய், போயி ஒரு கோளி கொண்டாடே….நம்ம பாட்டனுக்கு குடுப்போம்” மாரிமுத்து ஓடிச்சென்று வேகவைக்கப்பட்ட கோழியுடன் வந்தான். ஜாம்பன் மகிழ்ச்சியுடன் அதை வாங்கியபின் முதலாளியை நோக்கி நாடகப்பாங்காகத் தலைவணங்கியது. முதலாளி அருகே நின்றுகொண்டார். நான் ஜாம்பன் மீது மண்ணெண்ணை பூசினேன்.

ஜாம்பனுக்கு அதன்பின் கோழிப்பேன் பிரச்சினை வரவில்லை. சர்க்கஸில் உள்ள அத்தனைபேருமே நாளெல்லாம் ஜாம்பனைத்தான் மாறிமாறி வந்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒருமணிநேரத்திற்கு ஒருமுறை முதலாளி வந்து பார்த்தார். அவர் வந்தபோது பிறர் சிரித்தபடி விலகி ஓடினர். எதையோ கூர்ந்து பார்க்க வருவதுபோலவோ எதுவோ நினைவுக்கு வந்ததுபோலவோ வரும் முதலாளி ஜாம்பனைப் பார்த்ததுமே சிரிக்கத் தொடங்கினார். ஜாம்பன் அவர் வரும்போது மட்டும் எழுந்து தோள்களைக் குறுக்கி பணிவாக நின்றது. பெண்கள் வரும்போது கூண்டுக்குள் உடலை ஒடுக்கிக்கொண்டு குவிந்து அமர்ந்திருந்தது.

இரண்டாம்நாள் முதலாளி என்னிடம் “அதுக்கு எவ்ளவு நாளிலே முடி முளைக்கும்?” என்றார். “தெரியேல்ல மோலாளி”. அவர் ஜாம்பனைப்பார்த்தபடி “நல்லா தடவிப்பாரு… முடி முளைக்கத் தொடங்கினா வளிச்சிரு” என்றார். ‘மோலாளி?” என்றேன். “டேய், இது இனிமே இப்டியே இருக்கட்டும், கேட்டியா?” என்றார். நான் தலையசைத்தேன். ஜாம்பன் என்னைப்பார்த்து முதலாளி சொன்னால் கேட்கவேண்டியதுதானே என்பதுபோல முகம் சுளித்தது. செறியான் தன் வெண்ணைக்கட்டி முகத்தில் சிரிப்புடன் “உனக்கு ஒரு ஷேவிங்குக்கு ஒருரூபா சம்பளம் போட்டுக்கோ” என்றார்.நான் முகம் மலர்ந்து “புண்ணியமுண்டு சின்னமோலாளி” என்றேன். அவர்களின் திட்டம் மறுநாளே எனக்குப் புரிந்தது.டெய்லர் கேசவன் வந்து ஜாம்பனை அளந்து குறித்துக்கொண்டான். செருப்புதைப்பவர் ஒருவரை வரவழைத்து அதன் கால்களை அளந்து ஷூக்கள் தைத்தார்கள். டிரெயினர் ராஜப்பன் மாஸ்டர் அதற்கு லெஃப்ட் ரைட் போட முன்னரே சொல்லிக்கொடுத்திருந்தார். அதை மீண்டும் தீவிரமாக பயிற்சி செய்தனர். ஒருவாரம் கழித்து ஜாம்பன் ‘கரடிமனிதன்!’ என்ற அறிவிப்புடன் வட்டத்திற்குள் சென்றது

முதலாளி அவரே மேடைக்கு வந்து ஜாம்பனின் கதையைச் சொன்னார். முன்பு இமையமலையில் தவமிருந்த ஒரு முனிவர் தவம் கலைந்து எழுந்தபோது நேர்முன்னால் பார்த்தது ஒரு பெண்கரடியை. அவர் அதை மனைவியாக ஏற்றுக்கொண்டார். அதில் பிறந்தவர்கள் கரடிமனிதர்கள். அவர்கள் இமையமலையின் உச்சியில் ஒரு சிறிய சமூகமாக வாழ்கிறார்கள்.அவர்களில் ஒருவரான ஜாம்பவ சர்மா நகரங்களைக் காணும் ஆசையால் சதர்ன் பாம்பே சர்க்கஸில் சேர்ந்திருக்கிறார். ஜாம்பவர்களில் அவர் வயது முதிர்ந்த அறிஞர்.“அவரை நீங்களும் உங்களை அவரும் பார்க்கும் அரிய தருணம் இது. இந்தியாவில் பொதுமக்களின் பார்வைக்கு வரும் முதல் கரடிமனிதர் இவரே” மக்கள் திகைத்து அமர்ந்திருக்க சட்டைபோடாத கரிய வெற்றுடலில் தோள்வார் போட்ட அரைக்கால் சட்டையும் கால்களுக்கு கான்வாஸ் ஷூக்களும் அணிந்து, கைகளுக்கு வெண்ணிறக் கையுறைகள் போட்டு தலையில் வெண்ணிறமான துணித்தொப்பி வைத்த ஜாம்பன் கைகளைத் தூக்கி அனைவரையும் ஆசீர்வதித்தபடி அரங்குக்குள் நுழைந்தது. ஒரு சிலநிமிடங்கள் அரங்கே பிரமைபிடித்து அமர்ந்திருந்தது. பின்னர் பெரும் கைதட்டலும் கூச்சலும் வெடித்தெழுந்தது. சிறுவர்கள் துள்ளிக்குதித்து கைவீசினர்..

ஜாம்பன் வழக்கமாகச் செய்யும் வேடிக்கைகள்தான். ஆனால் அவையனைத்தும் அப்போது மேலும் ஆச்சரியத்துக்குரியவையாக மாறின. அது குழந்தைகளை விளையாட்டுக்காட்டும் பெருந்தன்மை மிக்க பெரியவராகத் தோற்றம் அளித்தது. தொப்பிகளை மாற்றி மாற்றி அணிந்தது. பந்துகளை வீசிப்பிடித்தது. சம்புடத்தில் நீருடன் கால்மடித்து அமர்ந்து சந்தியாவந்தனம் செய்தது . சிவபூசைக்குப்பின் அடுப்புமூட்டி காப்பி போட்டு குவளையில் ஊற்றி எடுத்துக்கொண்டு மரநாற்காலியில் கால்மேல் கால்போட்டு அமர்ந்துகொண்டு செய்தித்தாள் வாசித்தது. தட்டில் இருந்து உணவை ஸ்பூனால் எடுத்துச் சாப்பிட்டது. போர்வைகளை மடித்து வைத்தது. சிறிய மரச்சுத்தியலால் ஒரு ஸ்டூலில் ஆணி அடித்தது. படுக்கையை விரித்து படுத்துக்கொண்டு ரேடியோவை போட்டு பாட்டுக்கேட்டபடி கண்ணயர்ந்தது.

ஒரேநாளில் தாவண்கெரேயில் ஜாம்பன் பேசுபொருளாகியது. நாங்கள் நகர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டினோம். சர்க்கஸ் வாசலில் துணித்தட்டி வைத்தோம். முன்னரே சர்க்கஸுக்கு வந்தவர்கள் மீண்டும் வந்தனர். எவருக்குமே பழைய கரடியை நினைவிருக்கவில்லை. ஏனென்றால் ஜாம்பனுக்கு கரடிச் சாயலே இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் புதிய செயல்களை அது கற்றுக்கொண்டது. பெட்டியைத் திறந்து ரூபாய் நோட்டுகளை எண்ணியபின் மீண்டும் வைத்து மூடியபோது ஒரு பெரியவரை அப்படி சர்க்கஸ் மிருகமாக மாற்றலாமா என்றே பலர் மனம் வருந்தினர். உள்ளூர் நாளிதழில் ஜாம்பனின் சுருக்கமான பேட்டி ஒன்று சோபாவில் அமர்ந்துகொண்டு கைசுட்டி கருத்துச் சொல்லும் படத்துடன் பிரசுரமாகியது. தாவண்கெரே ஓர் அழகிய நகரம் என்றும் மக்கள் அன்பானவர்கள் என்றும் அது சொல்லியிருந்தது. இமையமலையில் உள்ள அதன் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளைப்பார்க்க வரும் ஆவணியில் செல்லவிருப்பதாகவும் அப்போது பேத்திகளுக்காக தாவண்கெரேயின் புகழ்பெற்ற கைத்தறிப்புடவைகளை வாங்கிச்செல்ல எண்ணம் உண்டு என்றும் குறிப்பிட்டது. ஆனால் பெண்கள் தொப்புள்தெரிய புடவைகட்டும் நவநாகரீகத்தில் அதற்கு உடன்பாடில்லை.

நான் தினமும் விடிகாலையில் ஜாம்பனுக்கு சவரம்செய்து அதன் உடலை மென்மையாக வைத்திருந்தேன். கரிய சருமத்தில் சுருக்கங்களும் மடிப்புகளும் அடர்ந்து அதற்கு நூற்றுக்கிழவனின் முதுமைக்கோலத்தை அளித்தது. வளைந்த கால்களை சற்று இழுத்து இழுத்து வைத்து, உடலை அசக்கி, தொங்கிய தோள்களுடன், கைகளை ஆட்டியாட்டி நடப்பதும் அப்போது தசைகள் தளர்ச்சியாக இழுபடுவதும் அம்முதுமையைக் மேலும் கனியச்செய்தது. ஆரம்பகாலச் சிரிப்பு அடங்கியபின் சர்க்கஸில் எல்லாரும் அதை பாட்டா என்றே அழைக்கத் தொடங்கினர். அதற்கு பழங்கள், மிஞ்சிய எலும்புகள், மீன்முள் என எப்போதும் ஏதாவது சாப்பிடக்கிடைத்துக்கொண்டே இருந்தது. குளித்துவிட்டுச் செல்லும் ஜானகி “பாட்டா, சொவமா இருக்கேளா?” என்று கேட்டபடி செல்வதைக் கண்டேன். சீட்டுப்பணம் பற்றிய பேச்சு வந்தபோது “பாட்டாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாம். நம்மளுக்குள்ள ஒரு தலைக்கட்டுல்லா?” என்று அச்சுதன் சிரிக்க “ஆமாலே, ஒரு சாயலிலே இவன மாதிரியாக்கும் இருக்காரு கெளடு” என்று குள்ள ஸ்டீபன் சொன்னான். “இருக்கட்டும்லே, நம்ம அப்பனோ என்னமோ. நம்ம அம்மைய நம்பப்பிடாது கேட்டுக்க…” என்றான் அவன்.

ஓரிரு நாட்களுக்குப்பின் ஜாம்பனைக் கூண்டில்போடவேண்டாம் என்றார் முதலாளி. யாராவது பார்த்துவிட்டால் தவறாக ஆகிவிடும். நகரில் ஜாம்பனுக்கு ஒரு மரியாதை இருந்தது. அம்பாதேவி கோயிலில் இருந்து அதற்கு தினமும் பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள். அந்தத்தகவல் வெளியே தெரிந்ததும் உள்ளூர் சர்ச்சில் இருந்து ஜாம்பன் உண்மையில் இந்துவா என்று பாதிரியாரின் உதவியாளர் வந்து விசாரித்துப்போனார். அவர் ஜாம்பவ ரிஷியின் மகன், ஆகவே பிறப்பால் பிராமணர் என்று முதலாளி சொன்னார். வெளியே இருந்து பார்த்தால் ஜாம்பன் கூடாரத்திற்குள் இருப்பதுபோலத் தெரியும்படி சங்கிலியால் கட்டும்படி சொன்னார். ஆனால் நாலைந்து நாட்களிலேயே ஜாம்பனைக் கட்டவேண்டியதில்லை என்று கண்டுகொண்டோம். நாடாக்கட்டிலில் மல்லாந்து படுத்து கால்மேல் கால்போட்டுக்கொண்டு கண்கள்மேல் கையை வைத்துமூடியபடி அது தூங்கும்போது குரட்டைகூட தாத்தா மாதிரியேதான் இருந்தது. கரடிபாலனும் நானும் மாரிமுத்துவும் அதனுடன் கூடாரத்தில் தங்கினோம். நான் சிறுநீர் கழிக்க வெளியே செல்லும்படி அதைப்பழக்கினேன். ஆனால் இரவில் தனியாக வெளியே செல்ல அது அஞ்சியதனால் அதன் குரல் கேட்டு நான் எழுந்தாகவேண்டியிருந்தது. நான் டார்ச் லைட் அடித்து பின்னால் செல்ல ஜாம்பன் கைகளை ஆட்டியபடி நேராக கிளுவை மரத்தடிக்குச் சென்று சிறுநீர் கழித்தபின் திரும்பிப்பார்க்காமல் கூடாரத்திற்குள் ஓடிவிடும். அதன் சிறுநீரின் வீச்சம்கூட குறைந்துவந்தது.

தாவண்கெரேயிலிருந்து ஹரிஹருக்குப் போனோம். அங்கிருந்து சித்ரதுர்க்கம். எங்கும் ஜாம்பன் பரபரப்பைக் கிளப்பியது. தொடர்ந்து அரங்கம் எப்போதும் நிறைந்து கொந்தளித்தது. முதலாளி எந்நேரமும் இந்திப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். சித்ரதுர்க்கத்திலிருந்து பஜ்பே. அங்கே முதல் ஏழுநாள் கொண்டாட்டம். எட்டாம்நாள் உள்ளூர் நாளிதழில் ஒரு செய்தி வந்தது. ஜாம்பன் ஒரு சாதாரண கரடிதான் என்றும் அதன் முடியை மழித்து மனிதனைப்போல ஆக்கி ஏமாற்றுகிறார்கள் என்றும். முதலாளிக்கு நானேதான் சொல்லியிருப்பேன் என்று சந்தேகம். ‘கரடிமனிதனா சிரைத்த கரடியா?” என்று தலைப்பு. ஜாம்பன் ஒரு வாழைப்பழத்துடன் அமர்ந்திருக்க அருகே முதலாளி நின்றிருந்தார். காலையிலேயே நாளிதழ் வந்துவிட்டது மாறிமாறி வாசித்து தாள் நைந்த இதழைத்தான் நான் கையால் தடவிப்பார்த்தேன்.எனக்கு எந்த மொழியும் வாசிக்கத்தெரியாது. ஏழுமொழிகள் பேசுவேன்.

சர்க்கஸிலேயே யாரோ போட்டுக்கொடுத்திருக்கவேண்டும். என்னுடையபெயரையும் சரியாகவே எழுதியிருந்தனர். என்னைக்கூப்பிட்டு குறுக்கும் நெடுக்கும் விசாரித்தார்கள். முதலாளி சவுக்கை எடுத்து காற்றில் சொடுக்கியதுமே நான் கதறி அழுதபடி முதலாளியின் முன் குந்தி அமர்ந்துவிட்டேன். முதலாளியும் செறியான் தாமஸ் மாஸ்டரும் பேசிக்கொண்டதை வைத்து உள்ளூர் நாளிதழ்களுக்கு விளம்பரம் கொடுத்தபோது அந்தக் குறிப்பிட்ட நாளிதழை விட்டுவிட்டதாகவும் அவன் தனியாக வந்து பணம் கேட்டபோது வசூலின் மனநிறைவுடன் மிதமான போதையில் இருந்த முதலாளி நாஞ்சில்நாட்டு வசை ஒன்றைச் சொன்னதாகவும் அந்த வசையை கன்னடத்தில் யாரோ அவனுக்கு மொழியாக்கம் செய்து கூறியதாகவும் புரிந்துகொண்டேன்.

“என்னடே செய்யுதது, வக்காளி கொட்டையில சவிட்டிப்பிட்டானே?” என்றார் முதலாளி. “மிஸ்டர் பிள்ளை, ஜனங்களுக்கு ஒருமாதிரி உண்மை தெரியும். சும்மா ஒரு சந்தோஷத்திற்காகத்தான் வந்து பார்க்கிறார்கள். நாம் அதைப்பொருட்படுத்தவேண்டியதில்லை” என்று செறியான் தாமஸ் மலையாளத்தில் சொன்னான். “நீ சொல்லு… டேய், நான் இந்த காலரிகள காணத்தொடங்கி வருசம் இருபத்தெட்டாவுது பாத்துக்க. எல்லாருக்கும் சத்தியம் என்னான்னு உள்ளுக்குள்ள தெரிஞ்சாலும் எவனும் வெளிய சொல்லாம இருக்குத வரைக்கும்தான் அப்டியே போவும். ஒருத்தன் வாயவிட்டுச் சொல்லிட்டான்னாக்க அத்தனைபேரும் என்னமோ அவனே கண்டத மாதிரி சொல்ல ஆரம்பிச்சிருவானுக. டேய், காலரியில ஒருத்தன் இது செரைச்ச கரடிலேன்னு விளிச்சு கூவினான்னு வையி, அம்பிடுபேரும் மண்ண அள்ளி வீசிப்பிடுவானுக” என்றார் முதலாளி.

அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது நான் மெல்ல நுழைந்து “மோலாளி ஒரு வேல செய்யலாம்” என்றேன். “சொல்லுலே, அதுக்கும் உனக்க கொட்டைய நான் தாங்கணுமாக்கும்?” என்றார். “நம்ம கரடி பாலன் கள்ளத்தொண்டை வித்தைக்காரனாக்குமே…. அவனை கரடிக்க கூட அனுப்பினா கரடி மாதிரி பேசிருவான்” என்றேன். செறியான் தாமஸ் எழுந்துவிட்டான் “ஆமாம், அதுதான் சரியான யோசனை” முதலாளி என்னை நோக்கிவிட்டு “முளிச்சுக்கிட்டு நிக்காம அவன வரச்சொல்லுலே” என்றான். நான் ஓடிப்போய் கரடி பாலனை கூட்டிவந்தேன். அவனுக்கு எங்கள் ஊர்பக்கம்தான், வெள்ளமடம். அவன் அப்பா சுடலையாண்டிநாடார் வில்லுப்பாட்டுப்புலவர். சின்னவயசிலே முத்தாலம்மன் கதைபபட்டு, சுடலைமாடன் அம்மானை, கர்ணமோட்சம் எல்லாம் சொல்லிக்கொடுத்திருந்தார். அவனும் என்னைப்போலவே சினிமா ஆசையால் கிளம்பிவந்து சர்க்கஸில் சேர்ந்து சீரழிபவன். பலகுரலில் பேசுவான். வாயை அசைக்காமல் பக்கத்தில் நிற்பவர் போலவே பேசுவதுதான் அவனுடைய உச்சகட்டத் திறமை. குட்டன் என்ற குரங்கிடம் கேள்விகேட்பான். அது விரிவாகப் பதில் சொல்லும். சமயங்களில் வில்லுப்பாட்டுக் கதையிலிருந்து மேற்கோள்கூட காட்டும்.

நான் போனபோது பாலன் ரேடியோவில் பாட்டுக் கேட்டபடி நாடாக்கட்டிலில் காக்கிநிற கால்சட்டையுடன் படுத்திருந்தான். ”வாபிலே, ஓடி வாபிலே” என்று நான் அவனை கைபிடித்து இழுத்துவந்தேன். அவன் நல்ல உயரம். அதற்கேற்ப பருமன். கன்னங்கரிய நிறம். கைகால்கள் எல்லாம் அடர்ந்த கரியமயிர். குச்சித்தலைமுடி. தாடி மீசையுடன் கூடிய தலை ஒரு பெரிய கறுப்பு ல்க்ஹார்ன் பெட்டைக்கோழி போல இருக்கும். ‘எளவு அதில ஷூவ பாளீஷ் போடலாமேடே” என்று முதலாளியே போதையில் இலகுவாக இருக்கும்போது சொல்லியிருக்கிறார். மூக்கிலும் நெற்றியிலும் மட்டும்தான் மயிர் இல்லாமலிருக்கும். அவன் சற்று நடுக்கத்துடன் முதலாளியின் கூடாரத்திற்குள் சென்று கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான் செறியான் தாமஸ் “பாலன், நீ ஜாம்பனை கூட்டிக்கொண்டு ரிங்குக்குப் போ. மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு கரடி பதில் சொல்லவேண்டும்” என்றான். ஆனால் முதலாளி பாலனையே பார்த்துக்கொண்டிருந்தார். பாலன் “செய்றேன் மாஸ்டர்” என்றதும் முதலாளி “இவனே ஆளு கரடி மாதிரித்தானே இருக்கான்?” என்றார். உடனே எழுந்து அமர்ந்தார்

அங்கேயே திட்டம் தயாரானது. ஜாம்பவ சர்மாவின் தம்பி காண்டவ சர்மா இமையமலையில் இருந்து வந்திருப்பதாக அன்று முதலாளி அரங்கில் அறிவித்தார். ஜாம்பன் அசைந்தாடி வட்டத்திற்குள் வர கூடவே கரடிபாலனும் வந்தான். எங்கள் கோமாளி ஷண்முகதாஸ் கரிய தோலால் செந்நிறமான வாய் பிளந்து செய்த நீண்ட மூக்குநீட்சியை அணிந்து, உடம்பெங்கும் கரிய வண்ணம் பூசி, ஜாம்பனைப்போலவே காக்கிக் கால்சட்டை மட்டும் அணிந்து, தொப்பி வைத்து ,கைகளை வீசி, உடலை அசக்கி, கால்களை நீட்டி நீட்டி வைத்து நடந்து அவன் வந்தபோது சற்று முடிகுறைவான கரடியைப்போலத்தான் இருந்தான். அரங்கம் பலநிமிடநேரம் திகைத்து அமர்ந்திருந்தது. யாரோ கன்னடத்தில் ஏதோ சொன்னார்கள். பிறகு எவரோ கைதட்டினார்கள். அரங்கு கொப்பளித்து எழுந்தது.

முதலாளி மேடையெறி கரடிமனிதரான ஜாம்பவ சர்மாவுக்கு ஜாம்பவ மொழி மட்டும்தான் தெரியும் என்றும் அதனால்தான் அவர் பேசுவதில்லை என்றும் ஆனால் காண்டவசர்மா ஓரளவுக்கு இந்தி பேசுவார் என்றும் அறிவித்தார். இருவரிடமும் பார்வையாளர்கள் கேள்விகேட்கலாம். காண்டவ சர்மா கேள்விகளை ஜாம்பவசர்மாவிடம் கேட்டு மொழியாக்கம் செய்து சொல்வார். அவர் சொல்லிமுடித்ததும் இரு கரடிகளும் தலைதாழ்த்தி வணக்கம் சொல்லின. பாலன் ”அனைவருக்கும் வணக்கம். சித்ரதுர்க்கா அழகான ஊர். மக்கள் நல்லவர்கள்” என்றான். இருக்கையடுக்குகள் முழக்கமிட்டன. ”நாங்கள் இந்த ஊரை வணங்குகிறோம்” என்றான் பாலன். “கேள்விகள் கேட்கலாம்” அரங்கு அமைதியடைந்து அனைவரும் ஒருவரை ஒருவர் நோக்க ஒரு குடுமிவைத்த பிராமணப்பெரியவர் எழுந்து “நமஸ்காரா” என்று சொல்லி உடைந்த இந்தியில் “பெரியவர் எந்தெந்த சாஸ்திரங்களைக் கற்றிருக்கிறார் என்று அறியலாமா?” என்றார். காண்டவன் அதை ஜாம்பனிடம் கேட்க ஜாம்பனின் தலையும் வாயும் ஆட அதற்கு மிகச்சரியாக காண்டவனின் குரல் ஒலித்தது. அவன் வாயோ தொண்டையோ அசையவில்லை. ஜாம்பன் “அஷ்க பஷ்குலா புர்ர மர்ருலா மாஜமாஜ மாஜ பர்ர பர்ர பர்ரலா பாரலா பர்ர பர்ர கோரீகா கோரிய கோரீ” என்றது. காண்டவன் அதைக்கேட்டு இந்தியில் “ஜாம்பவவ சம்ஹிதையும் ஜாம்பவநீதியும் ஜாம்பமாகாத்மியமும் மட்டும் வாசித்தாலே போதும் என்று மூத்தவர் சொல்கிறார்” என்றான்.

பெரியவர் “அவை சம்ஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளனவா?” என்றார். ஜாம்பன் “மொழியாக்கம் செய்யப்போகிறேன். சம்ஸ்கிருதத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்” என்றது. பெரியவர் “சில வேதாந்த வினாக்களைக் கேட்காலாமா? ஜாம்பவ சம்ஹிதையிலிருந்து விடை சொன்னால் நல்லது” என்றார். “என் சிற்றறிவுக்கு எட்டியவரைக்கும் சொல்கிறேன்” என்று ஜாம்பன் தன்னடக்கத்துடன் சொன்னது. ”முக்திக்கான வழி பக்தியா ஞானமா?’ என்றார் கிழவர். ஜாம்பன் “கரையானும் தேனும்” என்று பதில் சொன்னது. பெரியவர் திகைக்க ஜாம்பன் “கரையான்புற்று என்பது சுறுசுறுப்பான கர்ம மண்டலத்தைக் குறிக்கிறது தேன் என்பது ஆன்மாவின் ஆனந்தம்” பெரியவர் கொஞ்சம் திகைத்துப்போய் அருகே இருந்தவரை பார்த்துவிட்டு “உண்மைதான்” என்றார். அருகே இருந்தவர் “பண்டிட்ஜீக்குப்பிறகு யார்?” என்று கேட்டார். ஜாம்பன் “நான் அரசியல் பேசுவதில்லை. இந்தியா எங்கள் நட்புநாடு” என்றது. அனைவரும் படபடவென்று கைதட்டினர். பிறகு பல உதிரிக்கேள்விகள். ஒருவர் “முதியவரான நீங்கள் ஏன் சர்க்கஸில் இருக்கவேண்டும்?” என்றார். “நாம் அனைவருமே சர்க்கஸில்தானே நண்பா இருக்கிறோம்?” என்று ஜாம்பன் கேட்டபோது ஏற்பட்ட அமைதி எனக்கு அச்சமூட்டியது. அதன்பின் பயங்கரக் கைதட்டல்.

அதன்பின்னர் எங்கள் பிறநிகழ்ச்சிகள் ஏதும் சோபிக்கவில்லை. ஆனால் சித்ரதுர்க்கத்திலுள்ள அத்தனை உள்ளூர்பத்திரிகைகளும் ஜாம்பவ- காண்டவ சகோதரர்களின் பேட்டிகளைப் பிரசுரித்தன. ஆங்கில நாளிதழில்கூட “Bearman Brothers have deep faith in democracy’ என்று செய்திவந்தது. எல்லா நிகழ்ச்சிகளுக்கும் நீண்டவரிசையில் கூட்டம் நின்றது. ஆனால் தனிமையில் ஜாம்பனையும் பாலனையும் பார்க்கவிரும்பியவர்களை தவிர்த்துவிட்டோம். ஜாம்பவ சர்மாவின் முதுமை காரணமாக அவர் அதை விரும்பவில்லை என்றும் ஓய்வுநேரத்தை அவர் சம்ஸ்கிருதக்கல்வியில் செலவிடுவதாகவும் கறாராகவே சொன்னோம்.

அவர்களைச் சந்திக்கவிரும்பியவர்களில் தனிப்பட்ட குடும்பப்பிரச்சினைகளுக்கு ஆலோசனை கேட்க வந்தவர்களே அதிகம். இமையமலையில் கிடைக்கும் அரியவகை மூலிகைகளை தங்கள் நோய்க்கு மருந்தாகக் கொண்டு வரமுடியுமா என்று கேட்க சிலர் விரும்பினார்கள். இமையமலைச் சித்தர்களைச் சந்திக்க விரும்பியவர்களும் சிலர் இருந்தனர். ஒரு தீவிரக்கிறிஸ்தவரும் அவர்களுக்குத் தேவசெய்தியை எப்படியாவது அளித்துவிட ஒரு சந்தர்ப்பம் அளிக்கும்படி மன்றாடியிருந்தார். அவர்களுக்கு அம்மைகுத்தியிருக்கிறதா என்று ஒரு முனிசிப்பல் சிப்பந்தி வந்தார். ”நீயே குத்திவிடு” என்று முதலாளி அவனிடம் சொல்ல நான் கூட்டிச்சென்றேன். அப்போது ஜாம்பன் காலால் உத்தரத்தைக் கவ்விக்கொண்டு தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்க அருகே பாலன் அமர்ந்து கூடாரத்துணியைத் தைத்துக்கொண்டிருந்தான். “யார் இவன்?” என்று ஜாம்பன் கேட்க “ஊசி போடவந்திருக்கிறான்” என்று காண்டவன் சொன்னான். “தாராளமாகப் போடட்டுமே. அவர்களின் கடமை அல்லவா?” என்று ஜாம்பவன் சொல்லி கீழே இறங்க சிப்பந்தி “இப்போது வேண்டாம். ஏனென்றால் கரடி மருந்து இப்போது கையில் இல்லை. அதாவது” என்று ஆங்கிலத்தில் குழறி ‘நானு பர்த்தேனே” என்று வெளியே நகர்ந்துவிட்டான்.

எல்லாம் சீராகத்தான் சென்றுகொண்டிருந்தது. பண்ட்வாலுக்கும் அங்கிருந்து பெல்த்தங்காடிக்கும் சென்றோம். பாலன் எப்போதுமே ஜாம்பன் அருகிலேயே இருக்கவேண்டும் என்று முதலாளி சொல்லிவிட்டார். அவன் வேறு வேலையேதும் செய்யவேண்டியதில்லை. வித்தைகள் செய்வதோ பயிற்சி எடுப்பதோ தேவையில்லை.அவனில்லாமல் ஜாம்பனைமட்டும் எவரும் சந்தித்துவிடக்கூடாது. எத்தனை காவலிருந்தாலும் யாரோ ஒருவர் ஜாம்பனைப்பார்க்க கூடாரத்திற்குள் நுழைந்துகொண்டுதான் இருந்தார்கள். பெரியமனிதர்களைச் சமாளிப்பதுதான் சர்க்கஸ்காரரக்ள் போன்ற நாடோடிகளுக்கு பெரிய தொல்லை. ஆகவே பாலன் எப்போதுமே கரடி ஒப்பனையில் இருக்கவேண்டும் என்று முதலாளி சொன்னார். மூக்கைமட்டும் அவன் கையில் வைத்திருக்கலாம். ஓசைகேட்டால் அணிந்துகொள்ளவேண்டும். எங்கள் சர்க்கஸிலேயே மிகப்பெரிய சம்பளம் அவனுக்கு அளிக்கப்பட்டது. அவன் அதை ஜானகியிடம் கொடுத்து ஊருக்கு அனுப்பச்சொன்னான். அவன் ஊரில் வீடுகட்டத் தொடங்கிவிட்டதாக அப்பு நாயர் என்னிடம் சொன்னார். “நல்ல பைசால்லாவே? மாசச்சம்பளம் வேற. தினப்படி பத்து ரூபா. நாங்க இங்க அடுப்புச்சூட்டில கெடந்து எரிஞ்சா மாசம் பதினஞ்சு தேறுமா? தலையில மத்தவன் அளுத்தி எளுதியிருக்கணும்வே. நம்ம தலை ஆனை சுண்ணியத்தேச்ச பாறை மாதிரி மளுங்கியில்லா இருக்கு…”

மெல்லமெல்ல பாலனுக்கும் ஜாம்பனுக்கும் பிடிக்காமலாகியது. முன்னரே பாலன் ஜாம்பன்மேல் ஓர் எரிச்சலுடன்தான் இருப்பான். தொழில்முறைத்தேவைக்குமேல் அவர்கள் பேசிக்கொள்வதில்லை. அவர்கள் இருவரும் கட்டிப்புரண்டு சண்டைபோட்டபிறகுதான் அந்தப்பூசல் அனைவருக்கும் தெரியவந்தது. “அதுபின்ன, இப்பிடி கிட்டக்கக்கிட்டக்க இருந்தா பொஞ்சாதியானாலும் தாங்கிக்கிட முடியுமா?” என்றார் அப்பு நாயர். முதலாளி கடும்கோபத்தில் நடுங்கியபடி பாலனை சரமாரியாக வசைபாடி சாட்டையுடன் அடிக்கப்பாய்ந்தார் “பைசா வந்த பவிசு என்னலே? வக்காளி சவிட்டி கொடல பிதுக்கிப்போடுவேன்… லே மயிராண்டி லே !” செறியான் அவரை பிடித்து விலக்கினான். “மரியாதையா இருந்துக்க. உன் சவம் எனக்க கையிலயாக்கும். ஆருகிட்ட வெளையாடுதே? ஏல ஆருகிட்டலே வெளையாடுதே? தாயளி வெட்டி பொலிபோட்டிருவேன்…” பாலன் தலைகுனிந்து அசையாமல் அமர்ந்திருக்க ஜாம்பன் முதலாளியை சமாதானப்படுத்தும்பொருட்டு மெல்ல கையை நீட்டியது “சீ, கைய எடு சவமே” என்று அவர் சீறினார். ஜாம்பன் கையைக் கட்டிக்கொண்டது.முதலாளி திரும்பி ராஜப்பனிடம் “டேய் ரெண்டு தாயளிகளையும் கையச் சேத்து வெலங்குபோடுலே” என்றார். சிறுத்தையைத் தளைக்கும் இரும்பு விலங்கால் இருவர் கைகளையும் சேர்த்து பூட்டினார் ராஜப்பா. “ஒரு வாரம் ஷோ இல்லாதப்ப பூட்டில கெடக்கட்டும்… புத்தி வருதா பாப்பம்” என்றார் முதலாளி.

ஒருவாரம் அவர்கள் பூட்டிக்கொண்ட கைகளுடன் ஒருவரை ஒருவர் பார்க்காமல் ஒன்றாக இருந்தனர். சேர்ந்து சாப்பிட்டு சேர்ந்து மலஜலம் கழித்து சேர்ந்து தூங்கினர். அதன்பின் அவர்கள் சண்டையே போட்டுக்கொள்ளவில்லை. ஆனால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதில்லை. ஒருவர் அருகே இருப்பதையே இன்னொருவர் உணராதது போல் இருப்பார்கள். பாலன் முகத்தில் இருப்பதை விட அதிக வெறுப்பு ஜாம்பன் முகத்தில் தெரிவதைக் கண்டு அது என் மனப்பிரமையா என்று நான் அஞ்சினேன். தினம் காலையில் ஜாம்பனை நான் சவரம் செய்யும்போது விலங்கு பூட்டிய கையுடன் பாலன் அருகே நின்றிருப்பான். ‘ஏம்வே, உமக்கும் சர்வாங்கம் செய்துவிடவா வே?” என்று கேட்டேன். “செஞ்சா அவரு மனுசனா ஆயிருவாருல்லா?” என்றான் மாரிமுத்து. நான் ”வாயமூடுல எரப்பாளி. செத்தி எடுத்துப்போடுவேன்” என்றேன்

அவர்கள் அப்படி இறுக்கமாக இருந்தாலும் நிகழ்ச்சிகள் மேலும் மேலும் மெருகேறிவந்தன. எப்போதுமே சேர்ந்து இருந்தமையால் இருவரும் ஒருவரை ஒருவர் மிகச்சரியாகப் புரிந்துகொண்டார்கள். ஜாம்பன் பாலனின் குரலுக்கு ஏற்ப சரியாக வாயசைத்தது. அரங்கில் இருந்து பார்த்தபோது எனக்கே அது பேசுவதாகத்தான் தோன்றியது. ஜாம்பனின் நடையும் அசைவுகளும் மட்டுமல்ல முகபாவனைகளும் கூட மனிதர்களைப்போலவே மாறின. மூக்குக்கண்ணாடியை கையில் எடுத்ததும் ஒருமுறை ஊதிவிட்டு துடைத்து மாட்டியதைக் கண்டு அதை எப்போது கற்றுக்கொண்டது என வியந்தேன். பிறகு அது கணக்கு மகராஜபிள்ளை செய்வது என்பது நினைவுக்கு வந்தது. நாற்காலியில் அமர்வதற்கு முன்பு அதை அப்புநாயர் போலவே துண்டால் ஒருமுறை துடைத்துக்கொண்டது. பாலனும் கரடியைப்போலவே ஆனான். ஆட்டம் இல்லாதபோதுகூட அவன் கரடிபோலத்தான் கைகளை அசைத்து இடையை உருட்டி நடந்தான். கைகளை மடியில் வைத்துக்கொண்டான். ஒருமுறை அவன் தனியாக இருந்தபோது மெல்ல உடலை ஊசலாட்டிக்கொண்டிருப்பதை தூரத்தில் நின்று பார்த்து மாரிமுத்துவுக்குச் சுட்டிக்காட்டினேன்

நாங்கள் மங்களூருக்குச் சென்றபோது முதலாளிக்கே ஓர் அச்சம் இருந்தது. பெரிய நகரம். படித்த உயர்குடி மக்கள் சர்க்கஸ் பார்க்கவருவார்கள். ஆகவே அங்கே செய்தித்தாள் விளம்பரம் ஏதும் கொடுக்கவில்லை. துறைமுகம் அருகே உள்ள சேரியை ஒட்டித்தான் தம்படித்தோம். ஆனால் முதல்நாளிலேயே கூட்டம் நெரித்தது. ஸ்லாக் சட்டையும் பாண்டும் அணிந்து சர்க்கஸுக்கு வந்த உயர்குடியினர்கூட பாலனையும் ஜாம்பனையும் கரடிசகோதரர்கள் என்று நம்பிவிட்டனர். அவர்கள் முதலில் ரிங்குக்கு வரும்போது ஒரு மெல்லிய கேலி இருக்கும். ஆனால் அவர்கள் புழங்கி ,பேசி, பழகியதும் அதெல்லாம் போய்விடும். முதலாளி “லே, நேரா பாம்பேய்க்குக் கொண்டுபோயி எறக்கீரலாம்னு தோணுதே” என்றார். அன்றிரவு அத்தனைபேருக்கும் கோழியும் முந்திரிப்பழச்சாராயமும் முட்டமுட்ட அளிக்கப்பட்டது. பாலன் ஜாம்பனுடன் கூடாரத்தில்தான் இருந்தான். நான் தான் அவருக்கு ஃபெனியும் கோழியும் கொண்டுபோய் கொடுத்தேன். அவன் ஆர்வத்துடன் வாங்கிக்கொண்டு “இன்னொரு குப்பி கொண்டுவாடே” என்றான். ஜாம்பன் ஒன்றும் சொல்லாமல் கோழிக்காலை எடுத்துக்கொண்டு தன் மூலைக்குச் சென்றது

மறுநாள் காலை வழக்கம்போல நான்தான் முதலில் அவர்களின் கூடாரத்தில் நுழைந்தேன். ஜாம்பனுக்கு விடிவதற்குள்ளேயே சவரம் செய்துவிடுவேன். நாடாக்கட்டிலில் கால்களை மடித்து நடுங்கிக்கொண்டு ஜாம்பன் அமர்ந்திருப்பதைக் கண்டேன். எனக்கு ஒன்றும்புரியாவிட்டாலும் ஏதோ நடந்திருக்கிறது என்று தெரிந்தது. உடல்நடுங்க சுற்றுமுற்றும் பார்த்தேன். அருகே தரையில் பாலன் குப்புறவிழுந்துகிடந்தான். தரையாக விரிக்கப்பட்டிருந்த பழைய தார்ப்பாயில் ரத்தம் வழிந்து உறைந்து கரியமெழுகுபோல படர்ந்திருந்தது. நான் அலறியபடி வெளியே ஓடி முதலாளியின் கூடாரத்திற்குள் புகுந்து செறியானை தழுவியபடி நிர்வாணமாகத் தூங்கிக்கொண்டிருந்த அவரை உசுப்பி எழுப்பி சொல்லமுடியாமல் வாய் மட்டும் அசைய மூச்சுத்திணறினேன். என் பதற்றத்தினாலேயே புரிந்துகொண்டு அவர் எழுந்து பைஜாமாவை அணிந்தபடி வெளியே ஓடினார்

உள்ளூர் போலீஸ் அதிகாரியின் உதவியுடன் மதியத்திற்குள்ளாகவே எல்லாவற்றையும் முடித்துவிட்டார்கள் முதலாளியும் செறியானும். பாலன் சர்க்கஸில் ஊஞ்சலில் இருந்து விழுந்து இறந்துவிட்டதாக அவன் மனைவிக்குத் தந்தி அடிக்கப்பட்டது. அவனுடைய தகரப்பெட்டியை திறந்து கத்தைகத்தையான கடிதங்களை எடுத்து விலாசத்தை கண்டுபிடித்தார்கள். அவன் மனைவி சற்று குண்டாக அழகாகத்தான் இருண்தாள். ‘என் கட்டழகுக் கண்ணாளா’ என்று அவள் எல்லா கடிதங்களையும் தொடங்கியிருப்பதை அப்புநாயர் வாசித்துக்காட்டினார். குழந்தைகளும் காமிராவை நோக்கி அழகாகச் சிரித்தன. அவன் ஊருக்குக் கொண்டுபோவதற்காக தாவண்கெரே கைத்தறிப்புடவைகளும் ஹரிஹரில் மரப்பொம்மைகளும் வாங்கி வைத்திருந்தான். அவன் சட்டைகள் எங்கள் சர்க்கஸில் எவருக்குமே சேராதவை. பொருத்தமான அளவு என்றால் ஜாம்பன்தான் போடவேண்டும். அன்று மாலைக்குள் பாலனின் எல்லா பொருட்களையும் பிரித்து எடுத்துக் கொண்டோம். நான் அவனுடைய தோல் பெல்டையும் பர்ஸையும் எடுத்துக்கொண்டேன். அப்புநாயர் அவன் வைத்திருந்த பாதி தீர்ந்த பவுடர் டப்பாவை எடுத்துக்கொண்டார். அவன் பவுடர் போட்டுநான் பார்த்ததேயில்லை.

அந்தியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருப்பதாகச் சொன்னபோது நான் கூடாரத்திற்குள் சென்றேன். அவர் பாலனின் அருகே கிடந்த , அவனைக்கொன்ற, பழைய சவரக்கத்தியைக் காட்டி அது என்னுடையதா என்றார். அதை நான் முன்பு பயன்படுத்தி வந்தேன். மாஞ்செஸ்டர் கத்திகள் கிடைத்தபின் அதை பெட்டியில் போட்டுவைத்திருந்தேன். நான் கரடிக்கு மழிக்கத் தொடங்கியபின் மனிதர்கள் நான் அவர்களுக்குச் சவரம் செய்வதை விரும்பவில்லை. “அதை நீ ஜாம்பன் அருகே வைத்தாயா?” என்றார் இன்ஸ்பெக்டர். “இல்லை சார். பெட்டியில்தான் போட்டிருந்தேன். நேற்றுக்கூட பார்த்தேன்” என்றேன். “அப்படியென்றால் ஜாம்பன் எப்படி அதை எடுத்துக்கொண்டுவந்தது?” என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். “சவரக்கத்தியை வைத்து வயிற்றைக் கிழித்திருக்கிறது”. நான் முதலாளியைப்பார்த்தபின் “பாலன்தான் எடுத்திருப்பான்” என்றேன்.

“எதுவானால் என்ன? இனி அதை விட்டுவைக்கக் கூடாது” என்று இன்ஸ்பெக்டர் சொன்னார். முதலாளி செறியானைப்பார்த்தபின் தலையசைத்தார். என்னிடம் மெல்லிய குரலில் ‘ராஜப்பனை விளிடே” என்றார். நான் வெளியே சென்றபோது ராஜப்பன் மாஸ்டர் ராணுவபாணியில் நின்றிருந்தார். பெண்கள் கூடாரத்துணிகளின் இடுக்கு வழியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.நாங்கள் மௌனமாக சீரான காலடிகளுடன் நடந்தோம்.. பின்பக்கம் ஜாம்பன் இரும்புக்கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது. ஆடையேதும் இல்லாமல் கால்களை மடித்து முகத்தை முழங்காலில் புதைத்து அமர்ந்திருந்த அது ஓசை கேட்டு நிமிர்ந்து நோக்கியது. நாங்கள் அருகே சென்றதும் கைகளை ஊன்றி எழுந்து கம்பிகளை பிடித்தபடி நின்றது. ராஜப்பன் மாஸ்டர் கம்பிவழியாக அதன் கைகளிலும் கால்களிலும் விலங்கின் கொக்கிகளை மாட்டினார். கூண்டுக்கதவை திறந்ததும் சங்கிலி ஒலிக்க ஜாம்பன் அமைதியாக வெளியே வந்தது. கூடாரங்களுக்குள் இருந்து பெண்களெல்லாம் வெளியே வந்து பார்த்து நின்றார்கள்.

ஜாம்பன் சுருக்கம் விழுந்த தோலால் மூடப்பட்டு தொங்கிய தசைகள் மெல்ல அதிர நூற்றுக்கிழவரைப்போல நடுக்கத்துடன் வந்து நின்றது. முதலாளியை நோக்கி மெல்ல தலைதாழ்த்தி வணங்கியபின் சிறிய மின்னும் கருங்கண்களால் எங்களை மாறி மாறிப்பார்த்தது. எதையோ நினைவுகொண்டதைப்போல வலக்கையால் தலையை லேசாகத் தட்டிக்கொண்டது. இன்ஸ்பெக்டர் முதலாளியிடமிருந்து ஃரைபிளை வாங்கி அதற்குள் கார்ட்ரிஜ்ஜைப் போட்டு மூடி குழாய்முனையை ஜாம்பனின் காதில் வைத்தார். நான் படபடப்புடன் ஜாம்பனைப்பார்த்தேன். அது உடல் சிலிர்த்து அசையாமல் நின்றது. அப்படியென்றால் அதற்குத்தெரியும். குண்டு வெடித்த ஒலி நாலைந்து இடங்களில் கேட்டது. கந்தக வாசனையுடன் நீலப்புகை பரவியது. ஜாம்பன் பக்கவாட்டில் சரிந்து மண்ணில் கிடந்தது. துடிக்கவோ இழுத்துக்கொள்ளவோ இல்லை. அதன் காதுகள் மட்டும் ஒலிக்காகத் திரும்புவதுபோல சிலமுறை அசைந்தன. வெண்ணிறமான மூளை செம்மண்ணில் கஞ்சிபோலச் சிதறிக்கிடக்க ரத்தம் ஊறி புழுதியில் சேறாகப்பரவியது. இன்ஸ்பெக்டர் குழாயை மூடி “டிஸ்போஸ் செய்துவிடுங்கள்” என்று செறியானிடம் சொன்னார். துப்பாக்கியை முதலாளியிடம் கொடுத்துவிட்டு “A beast is a beast” என்றார்.

அவர்கள் போனதை நான் திரும்பிப்பார்த்து நின்றேன். அத்தனைபேரும் மெல்ல உடல் தளர்ந்தோம். பெண்கள் கலைந்து சென்றார்கள்.ராஜப்பன் மாஸ்டர் குனிந்து ஜாம்பனை புரட்டிப்பார்த்துவிட்டு “ஒத்தக்குண்டு” என்றார். இன்ஸ்பெக்டர் ஜீப்பில் ஏறிக்கொள்ள ஜானகியும் ரோஸ்லினும் அவருடன் இரவுதங்குவதற்காக பவுடர்போட்டு நைலக்ஸ் கவுன் அணிந்து கிளம்பிச்சென்றார்கள். ஜீப் போவதைப்பார்த்தபின் ராஜப்பன் மாஸ்டர் “ஏலே, ஒத்தக்குண்டு போரும்லே” என்று என்னிடம் சொன்னார்.

– May 11, 2015 (நன்றி: https://www.jeyamohan.in)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *