கதைகதையாம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 6,601 
 

ஏகாம்பரம் வாசல் நடையில் ஈஸிச்சேரில் சாய்ந்துகொண்டு பழைய தமிழ் பத்திரிகைகளை புரட்டிக்கொண்டிருந்தார்.அவர் அரசாங்க உத்தியோகம் பார்த்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர். சொந்த வீடு. வீட்டின் மாடிப்படிக்குக் கீழிருந்த சிறிய ரூமை காயலான் கடைக் கந்தசாமிக்கு சொற்ப வாடகைக்கு விட்டிருந்தார்.

அப்போது கடைக்கு ஒரு ஆள் வந்திருந்தான். பார்த்தாலே யார் வீட்டிலேயோ வேலையாள் என்பது தெரிந்தது. தலையில் ஒரு சாக்கு மூட்டை, கையில் ஒரு பழைய துருப்பிடித்த இரும்புப் பெட்டி. இரண்டிலும் முழுக்க முழுக்கக் காகிதக் கட்டுகள்.

“அடுத்த தெரு ராஜம்மா அனுப்பிச்சாங்க. அவங்க வீட்டைக் காலி பண்ணிட்டு மவனோடே வடெக்கா போய்த் தங்கப் போறாங்களாம் .இதிலே இருக்கிற பேப்பரெல்லாம் போட்டுக் காசை என்னையே வச்சுக்கச் சொன்னாங்க”-என்று சொல்லிக்கொண்டே மூட்டைகளைக் கடை முன் வைத்தான். வியர்வையை மேல் துண்டால் துடைத்துக்கொண்டு, கடைப் பெஞ்சியில் உட்கார்ந்தான்.

கங்தசாமி பேப்பரையெல்லாம் எடை போட்டு அதற்கான பணத்தை கொடுத்து அந்த ஆளை அனுப்பிவைத்தான்.

தற்செயலாக வாசலில் வந்து நின்ற ஏகாம்பரம் அந்த பேப்பர் குவியலிலிருந்த பேப்பரை
எடுத்துப்பார்த்தார். எல்லாம் கதைகளின் கையெழுத்துப் பிரதிகள்! கண்ணில் ஒற்றிக்ககொள்ளும்படியான மணிமணியான எழுத்து.. அத்தனையும் பத்திரிகை ஆபீசிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கதைகள் என்பது அவற்றின் மீது பதிக்கப்பட்ட ரப்பர் ஸ்டாம்பிலிருந்து தெரிந்தது. எகாம்பரம் அந்தக் கட்டுக்கள் அனைத்தையும் மேலோட்டமாகச் சோதித்தார். அனுப்பியவரின் விலாசம் கதைகளில் இருந்தது. எழுதியவர் குமாரசாமி என்று இருந்தது.

“யாருப்பா இந்தக் குமாரசாமி? உனக்குத் தெரியுமா?”– கந்தசாமியிடம் கேட்டார்.

“என்னா சாமி, இப்படிக் கேக்கறீங்க? அந்த ராஜம்மா புருஷன் தான். எல்.ஐ.சி.லே வேலை பார்த்து
கிட்டிருந்தாரு. நீங்க பார்த்திருக்கீங்க. குண்டா கருப்பா வழுக்கைத்தலையோட தினம் காத்தாலே இந்த வழியாக் கையிலே கொடை எடுத்துகிட்டு போவாரே, ஞாபகமில்லையா”

அவருக்கு ஞாபகம் வந்தது.

“அடேடே ஆந்த மனுஷனா! அவர் ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடிசெத்துப் போயிட்டாரில்லையோ?”

“கரேக்ட். அவரேதான். மனுஷனுக்கு எழுதறதுங்கறதுலே ஒரு பைத்தியம். ஆனா ரொம்ப துரதிருஷ்டசாலி.கதை எதுவும் பத்திரிகைலே வந்தாப்பிலேயே தெரியலை. அவரு நம்ம கடைக்கு ரொம்ப நாளைய வாடிக்கைக்காரரு.”

ஏகாம்பரத்திற்கு ஏனோ பத்திரிகை ஆசிரியர்கள் மேல் ஆத்திரமும் கோபமும் பொத்துக்கொண்டு வந்தன.

குமாரசாமி அத்தனைக் கதைகளையும் எழுத எவ்வளவு சிரமப்பட்டு உழைத்திருக்க வேண்டும்? எத்தனை நாட்கள் கதைக் கருக்களுக்காக இரவு பகலாக சிந்தனை வசப்பட்டிருக்க வேண்டும்.?எவ்வளவு ஆவலுடனும் தளராத நம்பிக்கையோடவும் இத்தனை பக்கங்களை எழுதித்தள்ளியிருக்கவேண்டும்? ஏன் இத்தனை கதைகள் பிரசுரத்திற்கு உகந்ததாக்க் தேறாமல் நிராகரிக்கப்பட்டன?. ஒவ்வொரு கதையும் திரும்பி வந்தபோது மனிதர் எவ்வளவு வேதனையுடன் தவித்திருப்பார்? பத்திரிகை ஆசிரியர்கள் ஏன் இவ்வளவு ஈவிரக்கமற்றவர்களாக இருக்கிறார்கள்? ஏன் பிரபலமானவர்களின் கதையை மட்டும் பிரசுரிப்பதில் கண்ணும் கருத்துமாயிருக்கிறார்கள்? ஆரம்ப எழுத்தாளர்களின் கதைகளுக்கு ஏன் ஊக்கமளித்து ஆதரிப்பதில்லை? அவர்களின் கதைகள் சரியாகக்கூடப் பரிசீலிக்கப்படாமல் தூக்கி எறிந்து விடப்படுவது எந்த விதத்தில் நியாயம்?”– இப்படியாகப் அடுக்கடுக்காகப் பல கேள்விகள் அவர் மனதில் எழுந்தன.

ஒரு எழுத்தாளனாக முன்அனுபவங்கள் அவருக்கும் நிறைய உண்டு. ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாகவோ பெருமையடித்துக் கொள்ளும்படியோ அல்ல. அனைத்துமே கசப்பானவைதான்.

சின்ன வயதிலிருந்தே எழுதவேண்டும் என்ற வெறி எப்படியோ அவரைத் தொத்திக்கொண்டது. பள்ளியில் படிக்கும்போதே அணில்,முயல்.கல்கண்டு என்ற சிறுவர் பத்திரிகைகளுக்கு மனதில் தோன்றியதை கிறுக்கி அனுப்புவார் அது ஏகாம்பரத்திற்கு ஒரு சிறு மனத்திருப்தியைத் தந்ததோடு சரி. ஒரு தடவை கூட அவர் எழுதியது அச்சு மெஷினை எட்டிப் பார்க்கும் பாக்கியம் பெறவில்லை. கொஞ்சம் வயதானவுடன்
சிறுகதை எழுதவேண்டும் என்ற துடிப்பு உண்டாயிற்று. அதற்கான முயற்சியில் கண்ணும் கருத்துமாக இறங்கினார். கை ஓயும் வரையில் எழுதி எழுதி அனுப்பினாரே ஒழிய, எல்லாக் கதைகளுமே அவர் மீதுள்ள பாசத்தால் அவரிடமே ஓடிவந்து தஞ்சம் புகுந்தன.

துவண்டுவிடவில்லை அவர். மீண்டும் மீண்டும் முயன்றார். தோற்றுக்கொண்டே இருந்தார். தொடர் தோல்விகள் அவர் கண்ணைத் திறந்தன. எழுத்திற்கும் அவருக்கும் எட்ட முடியாத தூரம் என்பது அவருக்கு மிக நன்றாகவே புரிந்தது. அத்துடன் எழுதுவதற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டு நிகழ்காலத்துக்கு வந்தா ஏகாம்பரம்

ஏனோ தெரியவில்லை. அந்தக் கதைகளைப் பார்த்ததும் அவருக்குள் அந்த கதை எழுதும் ஆசை மீண்டும் விசுவரூபமெடுத்தது. எதிரிலிருந்த கதைமூட்டை அவரைப் ஊக்குவித்தத்தோ ? அதே சமயம் அவருக்குள் ஒரு சின்ன ஐடியாவும் பளிச்சிட்டது. இந்தக் கட்டுகளில் உள்ள கதைகளையே கொஞ்சம் ‘டச்அப்’ செய்து மெருகேற்றி அனுப்பிப் பார்த்தால்?

“கந்தா, இந்த பேப்பர் எல்லாமே எனக்கு தேவைப்படுது. நீ எவ்வளவு பணம் கேட்டாலும் தந்துடறேன்.” என்றார்

“என்ன சாமி நீ, உங்க்¢ட்டே போயிப் பணம் வாங்குவேனா ? இவ்வளவு குறைஞ்ச வாடகையிலே எவன் எனககு இந்த ஏரியாலே எடம் தருவான் ? எல்லாத்தையும் நீயே எடுத்துக்கோ. காசு எதுவும் தேவையில்லை” என்றான் தாராள மனதுடன்.

அடுத்த நாள்—

“இதோ பாரு, கமலம். இனிமே என்னை சும்மா ‘டிஸ்டர்ப்’ பன்னாக்கூடாது. நான் சிறுகதை எழுதப்போறேன். கற்பனை செய்யறதுக்குத் தனிமையும் அமைதியும் தேவை, தெரியுமில்லையா?” என்று அமர்த்தலாக மனைவிக்கு எச்சரிக்கை விட்டார். முழு மூச்சாகத் தன் வேலையில் இறங்கினார்.

குமாரசாமியின் கையெழுத்துப் பிரதிகளில் முதல் கதையை ஆழ்ந்து படித்தார். கதா பாத்திரங்களின் பெயர்களை மாற்றினார். அங்கங்கே சில மாற்றங்கள் செய்தார். புதுப்பிரதி எடுத்தார். அல்லி வார இதழுக்கு அனுப்பி வைத்தார்.

அடுத்த வாரம் தபால்காரர் அல்லி இதழ் ஒன்றைக் கொடுத்துவிட்டுப் போனார். பிரித்துப்பார்த்தார். பிரமித்துப் போனார்! அவர் கதை அழகிய படங்களுடன் அமர்க்களமாகப் பிரசுரமாயிருந்தது. அவருக்குப் பெரிய இன்ப அதிர்ச்சி!

வயதை மறந்து ஆனந்தத்தில் கூத்தாடினார். மனைவியிடம் பெருமையுடன் காட்டினார். நெருங்கிய சொந்தக்காரர்கள், நண்பர்கள் வீட்டுக்கு வலியத் தேடிச் சென்றூ கதையைக் காட்டி மகிழ்ந்தார். பிரசவித்த பெண் கஷ்டப்படாமல் ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றது போல் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடியது.

அதே சமயம் அவர் மனதின் மூலையில் தவறு செய்ததின் குறுகுறுப்பும் அரித்துக்கொண்டிருந்தது. “இது என்னால் படைக்கப்பட்ட சிசு அல்ல – யாரிடமிருந்தோ உருவாக்கப்பட்டு, என்னால் வெளிக் கொண்டுவரப்பட்ட ‘டெஸ்ட் ட்யூப்’ குழந்தைதான்” என்று அவர் தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டார்.

அடுத்த சில நாட்களிலேயே இன்னொரு கதையை எடுத்து சில கூட்டல் கழித்தல்கள் செய்து வேறொரு வாரப் பத்திரிகைக்கு அனுப்பினார். அவர் முயற்சிக்கு மீண்டும் முழு வெற்றி! அதுவும் பிரசுரமாகி அவரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

திருடிய கதைகளுக்கு மெருகேற்றிப் புது உருக்கொடுத்து ஒப்பனை செய்து பிரசுரத்திற்கு ஏற்றதாகச் செய்யும் கலையில் படு கில்லாடியாகி விட்டார் ஏகாம்பரம்.

அடுத்த சில வாரங்களுக்கு. குமாரசாமியின் அல்பாயுசுக் கதைகள் மறு பிறவி எடுத்து மாறு வேஷத்தில் தமிழ் இதழ்களில் உலா வந்தன. தொடர்ந்து கதைகளுக்கான சன்மானமும் வந்தது.

என்ன ஆச்சரியம்! கதைகள் பிரசுரமானதுமே எகாம்பரத்தின் அந்தஸ்தும் கெளரவமும் தாறுமாறாக ஏறிப் போயின. அவரை அலட்சியம் செய்து ஒதுக்கியவர்கள் இப்போது சிரித்துக்கொண்டு கும்பிடு போட்டார்கள். “பெரிய ரைட்டர் ஆயிட்டீங்க” என்று தபால்காரர் அவருக்கு ஐஸ் வைத்து அவ்வப்போது நல்ல ‘டிப்ஸ்” வாங்கிக்கொண்டு போனார். மனைவி கமலம் அவரிடம் எப்போதையும் விட மிகவும் அன்பாக நடந்து கொண்டாள். வாசகர்கள் அவர் கதைகளைப் புகழ்ந்து எழுதினார்கள். பத்திரிகைகள் அவர் கதைகளுக்காகப் போட்டி போட்டன. பத்திரிகாசிரியர்கள் அவரை நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு கதைகளுக்காக அவர் வீட்டி வாசலில் தவம் கிடந்தார்கள். “எழுத்தாளர் ஏகாம்பரம் நமக்குக் கிடைத்துள்ள அரிய பொக்கிஷம். அவர் இலக்கியச் சேவையைத் தகுந்த முறையில் உபயோகித்துக்கொள்ள வேண்டியது தமிழர்களாகிய நம் கடமை.” என்று ஒரு பத்திரிகை எழுதியிருந்தது, அவர் உடலைப் புல்லரிக்கச் செய்தது.

கந்தசாமிக்கு ஏகாம்பரத்தின் வெற்றியின் ரகசியம் நன்றாகவே தெரியும். எங்கே அவன் இதைப்பற்று யாரிடமாவது உளறிக்கொட்டித் தன் குட்டை அம்பலப்படுத்திவிடுவானோ என்ற பயம் அடிக்கடி ஏகாம்பரத்துக்குத் தோன்றுவதுண்டு. அதனால் அவனுக்கு ராஜோபசாரம் செய்து அவன் இது பற்றி வாயைத் திறக்காமல் சர்வ ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவருடைய முக்கிய வேலைகளில் ஒன்றாகியது.

இதுதவிர அடிக்கடி குமாரசாமி கனவில் தோன்றி அவர் குரல்வளையை நெரிப்பது போலவும் கைகளை முறிப்பது போலவும் துர்சொப்பனங்கள் அவரைப் பயமுறுத்திக்கொண்டிருந்தன.

ஒரு வருடம் உருண்டோடியது.

அவருக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. அதில் ஏகாம்பரம் பின்வருமாறு பேசி லேட் குமாரசாமிக்கு மறைமுகமாகத் தன் நன்றிக்கடனைச் செலுத்தினார்.

“ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். ஆனால் என் விஷயத்தில் நிலைமையே வேறு. என் வெற்றிக்குக் காரணம் இன்னொரு ஆண்தான் என்பது உங்களுக்கு வியப்பளிக்கலாம். அந்தத் தியாக சிந்தனையுள்ள அற்புத மனிதர் இப்போது உயிரோடில்லை. அவரை நான் அதிகம் பார்த்ததுமில்லை பழகியதுமில்லை என்பதும் உங்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கலாம். ஆனால் திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு மெளனமாக என்னை இயக்கி எழுதத் தூண்டிய பெருமை முழுக்க முழுக்க அவரையே சாரும்’ என்று சூசகமாகப் பேசி தன் மனச் சுமையைத் தற்காலிகமாக இறக்கி வைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

மூட்டையிலிருந்த கதைகளின் ‘ஸ்டாக்’ வேகமாகத் தீர்ந்துகொண்டு வந்தது. நாட்கள் நெருங்க நெருங்க அவர் தவிப்பு அதிகமாயிற்று.

அந்த நாளும் வந்தது. கடைசிக்கதையும் திருத்தி உருமாற்றி ‘எடிட்’ செய்து புதிய தலைப்புடன் அனுப்பி வைத்தாகி விட்டது.

பிறகு தான் உண்மையான அந்தப் பிரச்னையை அவர் சந்திக்க வேண்டியிருந்தது.

“இனிமேல் எப்படி நிலைமையை சமாளிப்பது? பத்திரிகை ஆசிரியர்களிடமிருந்து ‘ப்ரஷர்’ வர ஆரம்பித்து விடும். அவருக்கோ சுயமாக எழுதும் திறமை பூஜ்யம். ஆனால் கதைகளைக் காப்பி அடிப்பதும் குறை குற்றங்களைச் செப்பனிட்டு அலங்கரித்துச் சீராக்குவதும் கைவந்த கலையாகிவிட்டது. எப்படியோ இத்தனை நாட்களும் எல்லாரையும் ஏமாற்றிக் காலத்தை ஓட்டியாகி விட்டது. அவர் எழுத்துகளை இத்தனை நாட்களாக ரசித்துப்படித்த வாசகர்களுக்கு இப்போதுஎன்ன பதில் சொல்வது? ஒரு கணம் புத்தி தடுமாறி குமாரசாமியின் கை எழுத்துப்பிரதிகளைப் படித்ததால் தானே இந்த அவஸ்தை? அதைத் தொடாமல் விட்டிருந்தால், இன்று இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்க வேண்டாமே. இப்போது புலி வால் பிடித்த கதை ஆகிவிட்டதே” என்ற கேள்விகள் சரமாரியாக எழுந்து அவரை இம்சிக்க ஆரம்பித்தன.’

எப்படியாவது இந்த பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாவிட்டால் மண்டை சுக்கு நூறாகிவிடும்போலிருந்தது. அவர் இசகு பிசகாக நடந்து அவருடைய திருட்டு நாடகம் தெரிந்து விட்டால், இவ்வளவு கஷ்டப்பட்டுச் சம்பாதித்த நல்ல பெயர் புகழ் இவைகளுக்கெல்லாம் களங்கம் ஏற்பட்டு விடும். அவரை கோபுரத்தில் வைத்திருந்த வாசகர்கள் குப்பைமேட்டில் வீசி எறிந்து கைகொட்டி நகைக்கலாம். அதனால் அவர் அவமானத்தால் கூனிக்குறுகி தலை குனிய நேரிடலாம். இரவு பகலாகத் தூக்கமின்றி இதே யோசனையில் ஆழ்ந்தார். அவர் முழுமனதையும் இந்த ஒரே எண்ணம் தான் ஆக்ரமித்திருந்தது.

இரண்டு மூன்று நாட்கள் தீவிரமாக ஆலோசித்த பிறகுதான் அவருக்கு அந்த அற்புதமான ஐடியா உதயமாயிற்று. உடனடியாகவே அதைச் செயலாற்றினார்.

அடுத்த சில நாட்களிலேயே எல்லாப் பத்திரிகைகளிலும் அவருடைய கடிதம் வெளியாயிற்று.

“என் எண்ணற்ற ரசிகப் பெருமக்களுக்கு வணக்கம். என் கதைகளை விரும்பிப் படித்துப் பாராட்டிய அனைவருக்கும், மற்றும் என் கதைகளைப் பிரசுரித்து எனக்கு ஆதரவளித்து, கெளரவப்படுத்திப் புகழ் ஏணியில் ஏற்றி விட்ட பத்திரிகை ஆசிரியர்களுக்கும், என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உடல் நலக்குறைவு காரணமாக நான் என் எழுத்துப் பணியை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டம் வந்துவிட்டது. ஆகவே இனி என் கதைகள் பத்திரிகைகளில் வராது என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை மன்னித்து அருள வேண்டுகிறேன். அரைமனதுடன் உங்களிடம் இருந்து பிரியா விடை பெறும்…..ஏகாம்பரம்”

அடுத்த வாரம். வழக்கம் போல் மீண்டும் வாசல் நடையில் ஈஸிச் சேரில் சாய்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்தார் ஏகாம்பரம். இனி கந்தசாமி கடைக்கு எந்தப் பேப்பர் வந்தாலும் தொட்டு விஷப் பரிசைக்கு தன்னை ஆளாக்கிக்கொள்ள மாட்டார். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து வீண் வம்பை விலைக்கு வாங்கிவிட்டுத் தவியாய்த் தவிக்கவும் மாட்டார்.

– பிப்ரவரி 23 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *