கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 13,145 
 

” ஏ பொன்னி.. மட மடன்னு கலவை போடு… இப்படி மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி? மணலை இன்னும் கொஞ்சம் கலக்கணும்…..”

அவள் கையிலிருந்து சம்மட்டியை வேண்டுமென்றே உரசியபடி பிடுங்கி சலித்த மணலை அள்ளி கொட்டிவிட்டு பின்னால் நின்று அவள் இடுப்பை வெறித்து பார்த்து கொண்டிருந்த மேஸ்திரி நல்லக்கண்ணுவின் மீது ஆத்திரமாய் வந்தது பொன்னிக்கு.

” பேருதான் நல்லக்கண்ணு… பார்வை எல்லாம் நொள்ளை’ என மனதுக்குள் முனகிக்கொண்டாள்.

ச்சே.. கட்டினவன் ஒழுங்கா இல்லாம குடிச்சிட்டு திரியறதால வேலைக்குன்னு வந்து கண்டவன் கண்ணடி பட வேண்டியிருக்கு…”

இருக்கிற சித்தாள் பெண்களில் பொன்னி கொஞ்சம் போஷாக்காய் அழகாய் இருக்கவே, மேஸ்திரி அவள் இருக்கும் இடத்திலேயே வந்து சீண்டிக்கொண்டிருந்தான்.

“தாயே… மகமாயி. இந்த கேடு கெட்டவனுக்கு நீதான் நல்ல புத்தியை தரணும்… என் புள்ள குட்டிங்க பசி தீர்க்க , இந்த வேலையை விட்டா வேற வழி தெரியலை…” கண்களில் நீர் கொப்பளித்தது.

“ஏம்ப்பா மூர்த்தி.. அங்க பூச்சு சரியா இல்லப் பாரு…”

சாரத்தின் மேல் ஏறிய நல்லக்கண்ணு, மட்ட கோலால் தேய்த்துக்கொண்டே நகர.. கண்ணிமைக்கும் நேரத்தில் கால் இடறி கட்டடத்திலிருந்து விழுந்துவிட்டான்.

பதற்றத்தோடு ஆஸ்பத்திரியில் சேர்க்க, பலத்த காயத்தில் நிறைய ரத்தம் வீணாகியிருந்தது. கட்டட ஆட்கள் நான், நீ என்று ரத்தம் தர முன் வர. பொன்னியின் ரத்தம் பொருந்தியிருந்து ஏற்றப்பட்டது.

கண் விழித்த நல்ல கண்ணு பொன்னியைப் பார்த்து,
” பொன்னி என்னை மன்னிச்சிடும்மா… நான் உங்கிட்ட தவறா நடந்ததை பொருட்படுத்தாம எனக்கு ரத்தம் தந்து காப்பாத்தியிருக்கே ரொம்ப நன்றிமா…” என்றான்.

“பரவாயில்லைண்ணே… நீ உயிருக்கு போராடிகிட்டு இருக்கிறப்ப உன்னை நம்பி இருக்கிற உன் புள்ள குட்டிங்கதான் கண்ணுல தெரிஞ்சுச்சு… குடும்பத்தை காப்பாத்ததானே இம்புட்டு
கஷ்டபடுறேன்…” என்றாள்.

“தங்கச்சி, கொஞ்சம் மணலை வேகமா சலிச்சி போடு.. சாப்பிடலைன்னா.. ஏதாச்சும் வயித்துக்கு போட்டுட்டு வா.. இன்னும் இருபது நாள்ல இதை முடிச்சாதான் வாத்தியார் வீட்டு வேலையை ஆரம்பிக்க முடியும்….” உடம்பு தேறி வந்த நல்லக்கண்ணுவின் பேச்சில் கண்ணியம் கூடியிருந்தது.

– பிப்ரவரி 11, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *