கடவுளின் மரணம்

0
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 4,672 
 

“கடவுள் இறந்து விட்டார்..அன்னாரது ஈமக்கிரியைகள் வரும் 16ம் தேதி நடைபெறும்”

இடி இறங்குவது போல் அந்த செய்தி மக்களிடையே இறங்கியது. ஆரம்பத்தில் யாரும் அதை நம்பவில்லை.ஆனால் கடவுளின் உடலை மக்களின் பார்வைக்கு வைத்ததும் தான் அதை அனைவரும் நம்பினர். “ஓ”வென அனைவரும் அழுது புலம்பினர். அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல பெரும் கூட்டம் கூடியது.அவரது உடலை தகனம் செய்து முடித்ததும் பெருத்த விவாதம் மூண்டது.

“உலகம் இதோடு அழிந்தது” என அலறினார்கள் பலர். “நியாயம்,தர்மம்,நேர்மை,நீதி எல்லாம் கடவுளோடு புதைபட்டு விட்டது” என ஆருடம் சொன்னார்கள் பலர். ஆள்வோர் கூட இதை நினைத்து கவலை கொண்டனர்.கடவுளுக்கு 16ம் நாள் காரியம் முடிந்த பிறகு பெரிய கலவரம் வரலாம் என அரசு எதிர்பார்த்தது.அதற்குள் புதிய கடவுளை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஆள்வோர் முடிவு செய்தனர். புதிய கடவுளையும் புதிய மதத்தையும் தீர்மானிக்க ஒரு சர்வதேச கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.

கடவுளை தேர்ந்தெடுக்கும் முன் புனித நூல் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா?கமிட்டியின் முன்பு இது தான் பெரிய பிரச்சனையாக இருந்தது.இறுதியில் கமிட்டி மெம்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜனநாயக அரசியல் சட்டமே உலகின் புதிய வேதநூலாக இருக்கும் என முடிவு செய்தனர். பெண்ணுரிமை, பேச்சுரிமை, சமத்துவம், சுதந்திரம் ஆகியவை இந்த புதிய மதத்தின் கோட்பாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

“அவனவன் வேலையை அவனவன் பார்ப்பது” என்பது இந்த புதிய மதத்தின் முக்கிய கோட்பாடாக எற்கப்பட்டது.அடுத்தவனின் தனிமனித சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பது மிகப்பெரும் பாவமாக இந்த புதிய மதத்தில் கருதப்பட்டது.

கடவுளாக யாரை நியமிக்கலாம் என மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டது.இறுதியில் தனிமனித சுதந்திரத்தை கடவுளாக ஏற்கலாம் என ஒருமித்த கருத்து உருவானது. ஒரே கடவுள் வழிபாடு இருந்தால் பிரச்சனை உருவாகலாம் என்பதால் சுதந்திரத்தோடு சமத்துவமும் சகோதரத்துவமும் கடவுளாக சேர்க்கப்பட்டு 3 கடவுள்கள் – ஒருவருக்கொருவர் சமமானவர்களாக உருவாக்கப்பட்டனர்.

கடவுளின் வழிபாட்டு ஸ்தலங்களாக பள்ளிகளும் கல்லூரிகளும் இருக்கும் என கமிட்டியினர் முடிவு செய்தனர்.புதிய மதத்தை அனைவருக்கும் இந்த பள்ளியில் கற்றுத்தரலாம் என முடிவு செய்யப்பட்டது.புதிய மதத்தை கட்டாயமாக்கலாமா என பெருத்த விவாதம் நடந்து இறுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அதை கட்டாயமாக்குவதில்லை என முடிவு செய்தனர்.தன்னை கட்டாயாமாக அனைவரும் வணங்குவதை தான் விரும்பவில்லை என புதிய கடவுளான தனிமனித சுதந்திரம் கூறிவிட்டார்.மற்ற கடவுள்களான சமத்துவமும்,சகோதரத்துவமும் இதையே சொன்னார்கள்.

16ம் நாள் காரியம் முடிந்ததும் மக்கள் பெரும்திரளாக கூடினார்கள். வன்முறையில் அவர்கள் ஈடுபடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் அப்படி வன்முறையில் ஈடுபடவில்லை.கட்டித் தழுவிக் கொண்டனர். மதம், ஜாதி, இனம் முதலிய அத்தனை வேறுபாடுகளயும் மறந்து அனைவரும் ஒருவரை ஒருவர் தழுவி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்கள். இனிமேல் ஜாதி மத சண்டைகளே பிடிப்பதில்லை என அனைவரும் சத்தியம் செய்து கொண்டார்கள்.

திடிரென்று பார்த்தால் உலகின் அனைத்து பிரச்சனைகளும் மிக சுலபமாக தீர்ந்து விட்டன. ஜாதி சண்டை,மத சண்டை முதலிய அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விட்டன. நாடுகளுக்கிடையே இருந்த பல பிரச்சனைகள் விநாடி நேரத்தில் ஒழிந்து விட்டன. வலதுசாரி இடதுசாரி அரசியல் கட்சிகள் அனைத்தும் காணாமல் போய் விட்டன.

ஆள்வோர் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். கலவரம் வருவதற்கு பதில் உலகம் அமைதியான பூங்காவாக மாறிவிட்டது.காதல் திருமணங்கள் செழித்து வளர்ந்தன. ஆண்கள் பெண்களுக்கு சம உரிமை தந்தனர்.ஜாதி கொடுமைகள் ஒழிந்து மேல் ஜாதியினரும் கீழ் ஜாதியினரும் பெண்கொடுத்து பெண் எடுத்து சம்மந்திகளானார்கள். மத வேறுபாடுகள் மறைந்து மனிதர்கள் அனைவரும் ஒன்றே குலம் என வாழத்துவங்கினர். பெண்கள் சுதந்திரம் பெற்று சம உரிமை பெற்ற மனைவிகளானார்கள். பிற்போக்கு சட்டங்கள் அனைத்தும் ஒழிந்து அவர்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலையும் கிடைத்தது.

புதிய கடவுள்களை அறிமுகப்படுத்த இதுவே சரியான சந்தர்ப்பம் என ஆள்வோர் முடிவு செய்தனர். பெரும் கூட்டம் ஒன்றை கூட்டினர். “இதோ புதிய மதம்,இதோ புதிய கடவுளர்” என சமத்துவம்,சுதந்திரம்,சகோதரத்துவம் மூவரையும் அறிமுகப்படுத்தினர். “இது தான் இவர்களை வணங்கும் முறை” என சமதர்ம ஜனநாயக சட்டபுத்தகத்தை அறிமுகப்படுத்தினர்.

மக்கள் அனைவரும் புதிய கடவுளரை வணங்க முற்பட்டனர். “வேண்டாம்” என சமத்துவ கடவுள் அலறினார்.”நான் உங்களை விட உயர்ந்தவனல்ல. உங்களில் ஒருவன். ” என கூறினார். மேடையிலிருந்து இறங்கி மக்களிடையே குதித்து அவர்களை கட்டித்தழுவினார். “நான் உங்கள் சகோதரன்.உங்களில் ஒருவன். என் பெயர் சமத்துவம்” என கூறினார்.மக்கள் ஆர்பரித்து அவரை தழுவினர். ஆரவாரம் செய்து அவரை ஏற்றுக்கொண்டனர்.

அடுத்ததாக சகோதரத்துவத்தை வணங்க முற்பட்ட போது அவரும் அதை ஏற்காமல் மக்களிடையே குதித்தார்.”நான் உங்கள் சகோதரன். என்னை ஏன் வணங்குகிறீர்கள்?” என செல்லமாக கோபித்தார். “நான் உங்களில் ஒருவன்.என் பெயர் சகோதரத்துவம்” என கூறினார்.மக்கள் ஆர்ப்பரித்து அவரை தழுவினர். ஆரவாரம் செய்து அவரை ஏற்றுக்கொண்டனர்.

சுதந்திரமும் மக்களிடையே கலந்தார். “நான் சுதந்திரம்.என்னை ஏற்றுக்கொண்டால் நீங்களும் சுதந்திரம் பெற்றவர்களாவிர்கள்” என கூறினார். மக்களிடையே மக்களாக இந்த மூன்று கடவுளர்களும் ஒன்று கலந்தனர்.தம் வேதநூலை மக்களுக்கு படிக்க கொடுத்தனர். கோடிக்கணக்கில் மக்கள் இப்புதிய மதங்களால் ஈர்க்கப்பட்டனர்.இதை தழுவினர்.

இந்த கூத்தை எல்லாம் விண்ணில் இருந்தபடி கடவுள் ரசித்து சிரித்துக்கொண்டிருந்தார். இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று தானே அவர் தற்கொலை செய்தது போல் நாடகமாடினார். மனிதன் தன் பிரச்சனைகளை தானே தீர்த்துக்கொள்ள வேண்டும்,உலகின் புதிய கடவுளாக அவன் உருவெடுக்க வேண்டும்,சாதி,மத சண்டையை அவன் நிறுத்த வேண்டும், எதற்கெடுத்தாலும் கடவுளிடம் ஓடி அவருக்கு ஜால்ரா தட்டுவதை அவன் நிறுத்த வேண்டும் என அவர் நினைத்தார்.

அதை செய்ய சிறந்த வழி இதுதான் என அவருக்கு பட்டது.அதனால் தான் இந்த தற்கொலை டிராமாவை அவர் ஆடினார்.

மக்கள் சிரித்து சந்தோஷமாக இருப்பதை கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கும் இனி உலகின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய தொல்லை விட்டுப்போனது. ரிமோட்டை எடுத்து செய்திகளை பார்க்கத்துவங்கினார்.மதக்கலவரம், போர், சண்டை என எதுவும் இல்லாத மானிட இனத்தின் முன்னேற்றத்தை, பெண்ணின் முன்னேற்றத்தை,சமத்துவத்தை,சுதந்திரத்தை மட்டுமே செய்திகளில் பார்த்த கடவுள் ஆனந்த கண்ணீர் விட்டார்.

சிட்டுக்குருவிகள் போல் தன் குழந்தைகள் சிறகடித்து பறப்பதை கண்ட கடவுள் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயின் மனநிலையை அடைந்து சாந்தி பெற்றார்.

– செல்வன் (மார்ச் 2006)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *