கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 6,867 
 

யோவ் வாயா வெளிய!

மதியம் ஷிப்ட்டுக்கு பேருந்தை இயக்கும் வேலைக்கு செல்ல வீட்டினுள் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஓட்டுனர் கந்தசாமியும் அவர் மனைவியும் வெளியே யாரோ கூவி அழைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தனர். போலீஸ்காரர்கள் இருவர் நின்று கொண்டிருந்தனர்.

ஐயப்பன்ங்கறது யாருய்யா?

கேட்ட தோரணையிலேயே பயந்துவிட்டிருந்த கந்தசாமி அது என் பையந்தாங்க,

ஏய்யா உன் பையன் டிரைவரா இருக்கறானா?

ஆமாங்கய்யா, சொந்தமா டாக்சி வச்சு ஓட்டிட்டு இருக்கறான்.

அவன் வந்தா உடனே ஸ்டேசனுக்கு வரச்சொல்லுயா,

ஏங்கய்யா ஏதாவது தப்பு பண்ணிட்டானா?

ஆமாய்யா, ஒரு குழந்தை மேல இடிச்சுட்டு ராஸ்கல் வண்டிய நிறுத்தாமா போயிட்டான், அவங்க பெத்தவங்க நம்பரை நோட் பண்ணி கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்கறாங்க, உடனே அவன் வந்தான்னா ஸ்டேசனுக்கு வரச்சொல்.

ஐயா நான் வேணா இப்பவே வரய்யா, பையன் வந்தவுடனே அவங்கம்மா கிட்ட சொல்லி ஸ்டேசனுக்கு வரச்சொல்லிடறன்.

ம்.. சரி நட, சாப்பிட சாப்பிட வந்ததால் மனைவி அவசரமாக கொண்டு வந்த சொம்பில் இருந்து தண்ணீர் எடுத்து கையை கழுவிக்கொண்டு,போலீஸ்காரர்களுடன் நடக்க ஆரம்பித்தார்.பக்கத்து வீட்டில் உள்ளவர்களும், மற்றவர்களும் வேடிக்கை பார்த்தது அவர் மனசை சங்கடப்படுத்தியது.

பொதுவாகவே கந்தசாமி ரொமபவும் அமைதியானவர். யாருடனும் எந்த சச்சரவும் வைத்துக்கொள்ள மாட்டார். அது போல அவர் ஓட்டுனராக சேர்ந்து இந்த இருபது வருடங்களில் எந்த விதமான விபத்துக்கள் ஏற்படாமல் நிர்வாகத்திடம் நல்ல பெயர் பெற்றிருக்கிறார். அதற்கு இப்பொழுது அவர் மகன் பெயரால் களங்கம் வந்திருக்கிறது. மனம் அல்லாட போலீஸ்காரர்களுடன் நடந்து கொண்டிருக்கிறார்.

அதற்குள் செய்தி கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் உடனே போலீஸ்காரர்களுடன் சண்டைக்கு செல்ல, போலீஸ்காரர்களுக்கு சங்கடமாகி விட்டது, இங்க பாருங்க நாங்க அவர் பையனைத்தான் கூப்பிட்டோம் அவர்தான் நானே வர்றேன்னு இப்ப எங்களோட வர்றாரு, உடனே கந்தசாமியும் நண்பர்களைப்பார்த்து ஒண்ணுமில்ல நான் போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்தவங்களோட பேசிப்பார்க்கறதுக்குத்தான் போறேன்,என்று சொன்னார். நண்பர்களும் நாங்களும் அப்ப உன் கூட வர்றோம் என்று அவருடன் நடக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஸ்டேசன் வாசலில் ஒரு கூட்டம் நின்று கொண்டிருந்தது போலீஸ்காரர்களுடன் இவர் நடந்து வருவதை பார்த்தது, ஒரு பெண் தலைவிரிகோலமாக ஓடி வந்து இவர் சட்டையை பிடித்து நீ நல்லாவே இருக்கமாட்டே, நாசமாக போயிடுவ, என்று இவர் சட்டையை பிடித்து உலுக்க இவர் பிரமைபிடித்து நிற்க,போலீஸ்காரர்களும், சுற்றியுள்ளவர்களும் சுதாரித்து அந்தப்பெண்ணின் கையை வலுக்கட்டாயமாக பிடித்திழுத்து, ஏம்மா அறிவிருக்கா உனக்கு?இவர் ஒண்ணும் உன் பையன் மேல மோதல, அந்தப்பெண் சட்டென கையை இழுத்துக்கொண்டு மன்னிச்சுக்குங்கய்யா, மனசு கேக்கலயா, என் பையன் மேல மோதிட்டு போனவன்னு நினைச்சுட்டேன்.

அதற்குள் அவரின் நண்பர்கள் வெளியே நின்றுகொண்டிருந்த கூட்டத்தில் போய் பேசிவிட்டு வந்து பையன் உயிருக்கு ஆபத்து ஒன்றுமில்லை என்றும், கையிலும் காலிலும் எலும்பு முறிவு ஆனதால்,மருத்துவமனையில் ஒரு மாதம் இருக்க வேண்டுமாம். என்ற செய்தியை கொண்டு வந்தனர்.

உடன் வந்த நண்பர்கள் அந்தப்பெண்ணின் சுற்றத்தாரிடம் மெல்ல பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க, ஆரம்பத்தில் கந்தசாமி மகனின் மீது ஆத்திரத்தில் இருந்த அவர்கள் மெள்ள தன் நிலை உணர்ந்து தாங்கள் அவ்வளவு வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் ஆதலால் மருத்துவமனை செலவுகளை செய்ய முடியாது எனவும் தெரிவித்தனர்.

இறுதியாக ஒரு தொகையை கொடுத்து அந்த குழந்தையின் வைத்தியச்செலவுகளை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள சம்மதித்தபின் அவர்கள் கம்ப்ளெயிண்ட்டை வாபஸ் வாங்க சம்மத்தித்தனர். ஒரு வழியாக பிரச்சனகளை முடித்து அவர் வீடு வந்து சேர்ந்த பொழுது நடுப்பகல் ஆகிவிட்டது. மனம் மட்டும் ஆறாமல் ரணமாகிக்கிடந்தது.என்னதான் பணம் கொடுத்து இந்த பிரச்சனையை சமாளித்துவிட்டாலும் செய்த தவறு தவறுதானே, தன் மகன் என்றாலும் அவன் செய்த தவறை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. இவர் இப்படி மனதை போட்டு குழப்பிக்கொள்வதை பார்த்த இவர் மனைவி நீங்க பேசாம வேலைக்கு கிளம்புங்க, வீட்டில் உட்கார்ந்திருந்தீங்கன்னா, தேவையில்லாம குழப்பிக்குவீங்க என்று சொல்ல அவரும் மதியம் மேல் வேலைக்கு கிளம்புவது உசிதம் என நினைத்து கிளம்பினார்.

இவர் வராததால் இவர் எடுத்துச்செல்லும் பேருந்தை வேறொரு ஓட்டுனர் ஓட்டிச்செல்ல ஏற்பாடு செய்து விட்டதால், மதியம் மூன்று மணிக்கு கிளம்பும் ஒரு பேருந்தை அவர் ஓட்டிச்செல்ல சொன்னது நிர்வாகம். அவரும் சரி என பேருந்து நிற்குமிடம் நோக்கிச்சென்றார்.

பேருந்து ஓடிக்கொண்டிருந்து, பயணிகள் நிறைய இருந்தனர். வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த கந்தசாமியின் மனம் மட்டும் நடந்ததையே நினைத்துக்கொண்டிருந்தது.அப்புறம் அவரே தன் மனதை கடிந்து கொண்டார், ஓட்டிச்செல்லும் பாதை மலைப்பாதை, கொஞ்சம் ஏமாந்தாலும் வண்டி அதல பாதாளத்துக்குள் விழுந்துவிடும் அப்படி இருக்கையில் நடந்ததையே நினைத்து மனதை குழப்பிக்கொள்ளக்கூடாது என நினைத்து வாகனத்தை ஓட்டுவதில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். பேருந்து ஊர் போய் சேர்ந்த பொழுது மணி ஏழாகிவிட்டது. அதன் பின் அரை மணி நேரம் அங்கு ஓய்வில் இருந்து பின் நிறைய பயணிகளுடன் மீண்டும் கிளம்பினார்.

வண்டி மலையில் இருந்து கீழே வர அவர் மிக நிதானமாக வண்டியை செலுத்திக்கொண்டு வந்தார். மெல்ல அவர் இடது நெஞ்சில் சிறிய குத்தல் ஆரம்பித்தது, நெஞ்சை மெல்ல நீவி விட்டுக்கொண்டார்.அது இப்பொழுது கொஞ்சம் அதிகமாக ஆரம்பித்தது, காரணமில்லாமல் வேர்க்கவும் ஆரம்பித்த்து விட்டது. அவருக்கு மெல்ல பயம் பிடித்துக்கொண்டது, பத்திரமாக கொண்டு போய் பயணிகளை சேர்க்க முடியுமா?

இப்பொழுது உயிர் போகும் வேதனை, வண்டி அவர் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்துவிட்டது,

பயணிகள் வண்டி அங்கும் இங்கும் அலைவதைப்பார்த்து கூக்குரலிட ஆரம்பித்துவிட்டனர்.,பயணிகள் கூக்குரலிலும் கந்தசாமி தன் வலியையும் மீறி தன் கைகளுக்கும் கால்களுக்கும் வேலை கொடுத்து வண்டியை இடது புறம் ஒடித்து மலையை ஒட்டி ஓடும் வாய்க்காலில் இறக்கி தன் முழு பலத்தையும் பிரயோகித்து பிரேக்கை அழுத்திப்பிடிக்க வண்டி ஒரு குலுக்கலுடன் அந்த கால்வாயில் இறங்கி நின்றது. பயணிகள் அப்பாடி என ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஓட்டுனர் இருக்கையை பார்க்க ஒட்டுனர் அங்கேயே சுருண்டு விழுந்து கிடந்தார். அதன் பின்னரே சுதாரித்துக்கொண்டு ஒட்டுனரை மெல்ல இறக்கி பின்னால் வந்த ஒரு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பதினைந்து நாட்கள் ஓடி விட்டன, கந்தசாமி மருத்துவமனையில் கட்டிலில் படுத்துக்கிடந்தார். ஓரளவு தெளிவுடன் இருந்தார். அவர் வேலை செய்யும் நிர்வாக ஊழியர்கள், மற்றும் அன்று பயணம் செய்த ஒரு சிலர், உடன் அந்த மருத்துமனையின் மருத்துவருடன் அவரை பார்க்க வந்திருந்தனர்.

எப்படியிருக்கீங்க கந்தசாமி, டாக்டர் அவர்டம் மெல்ல விசாரித்துவிட்டு, இவங்க எல்லாம் உங்களை பாத்துட்டு போகணும்னு வந்திருக்கறாங்க, என்றவர், அவருடன் வந்தவர்களைப்பார்த்து இவருக்கு அன்னைக்கு வந்தது பெரிய ஹார்ட் அட்டாக், மனுசன் இன்னும் பத்து நிமிசம் இருந்திருந்தா அங்கேயே இறந்திருப்பாரு, அப்படி இருந்தும் வண்டியயையும், உங்களையும் காப்பத்துனும்னு அந்த வலியிலயும் முயற்சி பண்ணியிருக்கிறார்னா ‘இட் ஸ் எ கிரேட்”

அங்கு வந்திருந்த பயணிகள், மற்றும் நிர்வாக ஊழியர்களிம் பாராட்டு மழை மெல்ல அவர் மனதை தன் மகன் செய்த தவறுக்கு பிரயாசித்தம் செய்தது போல, மனதை மயிலிறகால் தடவுவது போல் இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *