கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 12,453 
 
 

“ராமாயி நான் வேலைக்கு கிளம்பறேன்” என்றவாறே வெளியே கிளம்ப தயாரானான் பரமசிவன்

“நான் சொன்ன நீ எங்க கேட்க போறே அந்த கேடு கேட்ட வேலைக்கு போகதைன்னு நான் எத்தன முறை சொல்லிட்டேன்”

“ஏய் சும்மா இருடி!இந்த ஊர்காரங்க மாதிரி நீயும் புத்தி இல்லாம பேசாத அவங்கதான் உருப்படாத பசங்க அவங்களோட சேர்ந்து என்னையும் கஷ்டப்பட சொல்லறியா”

அங்கே மாடசாமி பிள்ளை வரவும் இருவரும் பேச்சை நிறுத்தினர்

ராமாயி ” வாங்கன்னே உட்காருங்க”

என்னம்மா காலையிலேயே ரெண்டு பேருக்கும் பிரச்சனையா”

“வேறே என்ன பிரச்சனை அண்ணே, அந்த பாழா போன வேலைக்கு போகதையானு சொன்னா கேட்கவே மாட்டேங்குறாரு அதான்”

“விடுமா அவனுக்கு எல்லாம் தெரியும்”

பரமசிவன் இதை எல்லாம் கவனிக்காத மாதிரி எங்கோ பார்த்து கொண்டு, “நான் ஒன்னும் திருடல யாரையும் ஏமாத்தல நேர்மையா சம்பாதிக்கிறேன் அதில என்ன தப்பு”

“நேர்மையா சம்பாதிக்கறே, ஆனா உன் மனுசுபடிதான் சம்பாறிக்கிரியா”

“ஆமாண்டி என் மனசுப்படிதான் சம்பாரிக்கிறேன் உன்னையும் நம்ம புள்ளைங்களையும் நல்லா பாத்துக்கிறேன், இதுக்கு மேலே ஒரு மனுஷன் வேற என்ன பண்ணனும்” என சொல்லிவிட்டு மேலும் இந்த விஷையத்தை வளர்க்க விரும்பாமல் விறு விறுவென வீட்டை விட்டு வெளியேறினான்

ராமாயி அவன் சென்ற திசையையே பார்த்து கொண்டிருந்தாள்.

மாடசாமி ” அவன் உங்களுக்காகாதானே உழைக்கிறான்”

“எனக்கு இப்படி பட்ட உழைப்பே தேவைல்லன்னே, பொட்டச்சி எனக்கு இருக்குற ரோஷம் கூட இந்த மனுஷனுக்கு இல்லையே அதான் உறுத்துரதுன்னே இந்த பிள்ளைங்களுக்காக பாக்கறேன் இல்லைனா எப்பவோ நானும் வீதியில இறங்கி இருப்பேன்”

“இந்த மனசு இருந்தாலே போதும்மா”

“அப்பறம், இன்னைக்கு ஏதும் கூட்டம் இருக்கா?”

“ஆமம்மா நெல்லையப்பர் கோவில் கிட்ட இன்னைக்கு சாயங்காலம், என்னதான் அடக்குனாலும் மக்களோட எழுச்சிய பாக்கும் பொழுது சீக்கரமே நல்லது நடக்கும்னு நெனைக்கிறேன்”

“கண்டிப்பா நடக்கும்ணே”

அந்த பெரிய மாளிகை பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்தது உள்ளே நுழையும் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்க பட்டனர்.பரமசிவனும் அந்த சோதனை எல்லாம் முடிந்த பிறகு உள்ளே நுழைந்தான்.

அன்றைக்கு வர வேண்டியவர்கள் எல்லாம் வந்து சரியாக வேலை பார்கின்றனரா என்று ஒரு, ஒரு அறையாக சென்று பார்த்தான்.

எல்லாம் சரியாக இருக்கின்றது என்று உறுதி படுத்திகொண்டு அந்த மாளிகையிலேயே நல்ல அலங்கார வேலைபாடு கொண்ட அறையின் முன்னால் சென்று நின்றான் அவனுக்கு முன்னாலே மருதாசலம் அங்கே நின்றிருந்தான்

“மருதாசலம் ஐயா கிளம்பிட்டாரா”

“இல்ல இன்னும் அஞ்சு நிமிஷத்ல கிளம்பிருவாரு”

திடீரென்று உள்ளே இருந்து பூட்ஸ் சத்தம் கேட்கவும் அந்த மாளிகையே அமைதி ஆனது அனைவருடைய கைகளும் அனிச்சையாக கட்டிக்கொண்டு முதுகு கேள்விக்குறியாக வளைந்தது.

ராபர்ட் வில்லியம் டி எஸ்கொர்ட் ஆஷ், டிஸ்டிக் கலெக்டர் , திருநெல்வேலி என்று கொட்டை எழுத்துக்களால் அடையாளபடுத்தபட்டிருந்த அந்த அறையில் இருந்த வெளியே வந்தார் ஆஷ்.

வெளியே வந்த ஆஷ் மருதசலத்தை பார்த்து வேர் இஸ் ஆன்ட்ரு என்று கேட்டு முடிபதற்குள் ஆன்ட்ரு, ஆஷினுடைய PA அங்கு வந்து சேர்ந்தான்

“குட் மார்னிங் சார்”

“மார்னிங் ஆன்ட்ரு, இஸ் எனிதிங் இம்பார்டன்ட் டுடே?”

“எஸ் சார்,மிஸ்டர் விஞ்ச்,கலெக்டர் ஆப் டூடுகொரின் இஸ் கமிங் டு மீட் யு திஸ் ஈவ்னிங்”

“ஒ ஐ ஸீ, தென் பிளான் பார் எ பார்ட்டி டூனைட்” என பேசிக்கொண்டு செல்லும்போது அங்கே இருந்த சேற்றை கவனிக்காமல் அதில் கால் வைத்து விட்டான் ஆஷ்.

“ஓ ஷிட் வாட் இஸ் திஸ் ” என்றவாறு அங்கிருந்த மருதசலத்தை கோபமாக பார்த்தான்.

அப்பொழுது பரமசிவன் வேகமாக ஆஷிடம் சென்று தன் இடுப்பில் கட்டியிருந்த துண்டால் அவன் பூட்சை துடைத்து விட்டான்.

ஆஷ் குட் என்று சொல்லிவிட்டு தன் வண்டியில் சென்று ஏ றிக்கொண்டான்

அவன் வண்டிக்கு முன்பும் பின்பும் ஏராளமான போலீஸ் வாகனங்கள் புடை சூள தன் அலுவலகத்துக்கு கிளம்பினான்.

அன்று மாலை கலெக்டர் மாளிகை களைகட்டி இருந்தது, மேற்கத்திய இசை மெலிதாக ஒலித்து கொண்டிருந்தது, சீமான்களும் சீமாட்டிகளும் அந்த இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடிகொண்டிருந்தனர், மிட ரு மிடருவாக மது உள்ளே சென்று கொண்டிருந்தது.

ஆஷும் விஞ்சும் தனிமையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர், பரமசிவன் தான் அவர்களுடைய கோப்பையில் மது தீர தீர ஊற்றி கொண்டிருந்தான் தூரத்தில் மருதாசலம் இதை பொறாமை கண்களுடன் பார்த்து கொண்டிருந்தான்.

“ஆஷ் நான் இங்கிலாந்துக்கு கிளம்ப போறேன் ”

“நானும் கேள்வி பட்டேன் ஆனா ஏன் திரும்ப போறேன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“என்னுடைய மீதி காலத்தை இங்கிலாந்தில் கழிக்கலாம் என்றுதான்”

” சரி, ஆனா நீ இல்லாம எனக்கு ஒரு கையே உடைந்தது போல் இருக்கும்”

“உனக்கு என்ன ஆஷ் தனியாகவே திருநெல்வேலி கலகத்தை அடக்கியவன்”

“எல்லாம் உன் ஆலோசனைப்படிதானே விஞ்ச்”என்று சிரித்தான் ஆஷ்

“இந்த மக்களுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக தண்ட காவல் வரி போட்டிருக்கணும்” என்று சொல்லி விஞ்சும் ஆஷோடு சேர்ந்து சிரித்தான்

“ஆனால் ஆஷ் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்,’அபிநப பாரத சமிதி’ என்று ஒரு அமைப்பு உருவாகி இருக்கிறதாம் நம்மை தீர்த்து கட்ட என்று கவர்னரிடம் இருந்து ரகசிய தகவல் வந்துள்ளது”

“எனக்கு தெரியும் விஞ்ச், தூத்துக்குடியில் உதவி கலெக்டராக இருந்த பொழுது வ.உ.சி ஐயும் சிவாவையும் கைது செய்ததில் இருந்தே என்னை கொல்ல சதி நடைபெறுகிறது, அதனால் தான் நான் மிக நம்பிக்கையான ஆட்களை மட்டுமே அருகில் வைத்து கொள்கிறேன் என்னுடைய பயணங்கள் அனைத்தும் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது”

“எது எப்படியோ மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம் இது” என்றான் விஞ்ச்.

இரவு மிக தாமதமகாத்தான் பார்ட்டி முடிந்தது,பரமசிவன் இறுதி வரை பார்டியில் இருந்து அனைவரையும் கவனித்து விட்டு பார்ட்டி முடிந்து அனைத்தையும் சுத்தம் செய்து விட்டுதான் வீட்டிற்கு வந்தான்.

வீட்டு திண்ணையில் அமர்ந்து மாடசாமி பிள்ளை அன்று நெல்லையப்பர் கோவில் அருகில் நடந்த கூட்டத்தை பற்றி ராமாயிடம் சொல்லி கொண்டிருந்தார்.

பரமசிவனை பார்த்த ராமாயி”என்னையா இன்னைக்கு இவ்ளோ நேரம்”

பரமசிவன் அன்று நடந்ததை அவளிடம் கூறினான்’ அவன் ஆஷின் பூட்சை துடைத்ததை சொன்னவுடன் எங்கிருந்துதான் அவளுக்கு அவ்வளவு ஆவேசம் வந்ததோ தெரியவில்லை

“அட பாவி மனுஷா, எத்தனயோ பேரு நாம மானத்தோட வாழ போராடிக்கிட்டு இருக்காங்க நீ நம்ம மானத்தையே வாங்கிட்டு வந்திருக்கியே”

பரமசிவன் அவளை பொருட்படுத்தாமல் வீட்டிற்குள் செல்ல பார்த்தான்.

ஆனால் ராமாயியோ”இனி உன்னோட என்னால வாழ முடியாது என் பிள்ளைங்களை கூட்டிட்டு என் அப்பன் வீட்டுக்கே போறேன் என்று சொல்லி தன் பிள்ளைகளை இடுப்பில் இரண்டும் கையில் இரண்டுமாய் இழுத்து கொண்டு வெளியே சென்றாள்.

மாடசாமி “பரமு அவள கூப்பிடுப்பா” என்றார்

பரமசிவன் அசைவின்றி அவள் செல்வதையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான்

1911, ஒரு வருடம் சென்று விட்டது ராமாயி அன்று சென்றவள் தான் திரும்பவே இல்லை, மாடசாமி பிள்ளையை காவல் துறை ஒரு வழக்கில் தேட அவர் தலை மறைவாகி விட்டார், ஆஷ் முன்பை விட மிக ஜாக்கிரதையாகி விட்டான்.பரமசிவன் அந்த மாளிகையின் முக்கிய அங்கமாகி விட்டான்.

அன்று வழக்கம் போல் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும்போது ஆஷ் அவனை தன் அறைக்கு அழைத்தான், ஆஷ் உள்ளே மது அருந்தி கொண்டிருந்தான், பரமசிவன் அங்கே நுழையும் போது அவன் கோப்பையில் மது தீர்ந்து இருந்தது, பரமசிவன் உடனே அருகில் இருந்த புட்டியில் இருந்த மதுவால் அவன் கோப்பையை நிறைத்தான்.

ஆஷ் அவனை சிரித்தவாறு பார்த்து “நான் அங்கு சென்றால் உன்னை போல் ஒரு ஆள் கிடைப்பானா என தெரியவில்லை” என்றான்.

“எங்கங்க துரை” என்றான் பரமசிவன் தயக்கத்துடன்.

“வரும் பதினேழாம் தேதி நான் மதுரை போய் அங்கிருந்து கொடைக்கானலுக்கு என் பிள்ளைகளை பார்க்க போறேன், ஒரு மாதம் அங்கே தான்”

பேசிக்கொண்டு இருக்கும்போதே துரைஅம்மா அங்கு வர பரமசிவன் அறையில் இருந்து வெளியேறினான்,

வெளியே வந்தவன் நேராக வீட்டிற்கு செல்லாமல் தாமிர பரணி கரை நோக்கி நடந்தான், அதன் கரை ஓரமாக நடந்து ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாழடைந்த மண்டபத்தை அடைந்தான்.

அதன் வெளியே நின்று தர்மராஜு என்று அழைத்தான், உள்ளிருந்து ஒரு நெடிய உருவம் வெளியே வந்தது.

அந்த உருவத்தை பார்த்தவுடன், பரமசிவன்” வேளை வந்து விட்டது, மற்றது எல்லாம் தயாரா என்றான்”

” ம் எல்லாம் தயார் இரண்டு நாட்களுக்கு முன்புதான் மேடம் காமவிடம் இருந்து வந்தது” என்று தன் வேட்டியில் மடித்து வைத்து இருந்த அந்த துப்பாக்கியை வெளியே எடுத்தான்.

அந்த பெல்ஜியத்தில் செய்யப்பட பிரௌனியன் துப்பாக்கியை ஆசையோடு பார்த்தான் பரமசிவன்

பின்னால் தீடிரென ஒரு அரவம் கேட்க இருவரும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர்,மாடசாமி பிள்ளை தான் அங்கே நின்றிருந்தார்.

“நீதானா நான் பயந்தே போய்விட்டேன்” என்றான் பரமசிவன்

“பயமா உனக்கா, ஓரி என்றுமே பயப்படதுடா”

“ஓரியா அப்படி என்றால்”

“அப்படி என்றால், சிங்கத்துக்க உளவு பார்க்கும் நரி”

“அந்த வெள்ளைக்கார நரிகள ஒழிக்க,நாமமும் சில சமயம் நரியாக மாற வேண்டி உள்ளது” என்றான் பரமசிவன்

“இன்றைக்கு என்ன சேதி”

“அந்த வெள்ளை நரி கூண்டை விட்டு வெளிய வருது வரும் பதினேழாம் தேதி கொடைக்கானல் செல்ல ரயிலில் போறான், திருநெல்வேலியில் இருந்து மணியாச்சி சென்று அங்கிருந்து போட் மெயிலில் மதுரை வரை செல்வதுதான் திட்டம்,திருநெல்வேலி வண்டி காலை 10:35 க்கு மணியாச்சி போய் சேரும் அங்கே போட் மெயில் 11:00 மணிக்குதான் வரும் அந்த இருபத்தி ஐந்து நிமிடம் தான் நமக்கானது, சிங்கத்திடம் சொல்லிடுங்க” என்று சிரித்தான்

“ம் நல்ல சேதி, பரமு, வரும் பதினேழாம் தேதி ஆஷ் கதை முடிந்து விடும் அப்ப நீ அது வரை ..”

“நான் அது வரை அவன்கிட்ட வே லைக்கு போயிட்டு இருக்கேன்,அப்பதான் சந்தேகம் வராது”

“அதுவும் சரிதான் அப்ப நீ கிளம்பு”

“மாடசாமி இனி நாம் பார்ப்போமா மாட்டோமா தெரியவில்லை,எதுவாகினும் நம் லட்சியம் நிறைவேர வேண்டும், வாஞ்சியை கேட்டதாக சொல்லு…” என்று இழுத்தான்

“என்ன பரமா ஏதோ சொல்ல வந்து பாதிலே நிறுத்திட்டே”

“என்னைக்காவது அவள பாத்தா உன் புருஷனும் மானமுள்ள மனுஷந்தான்னு சொல்லுங்க” என கூறிவிட்டு அவர்களை பார்க்காமல் தான் வந்த வழியிலேயே திரும்பி நடந்தான்.

ஜூன் 17,1911 வாஞ்சியின் கையிலிருந்த அந்த பிரௌனிங் துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட குண்டு ஆஷின் மார்பை துளைத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *