அந்த புற நகர் பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் முளைத்துக் கொண்டிருந்தன.
நவநீதம் அங்கு புது வீடு கட்டி, தன் மனைவியாடு குடி வந்து ஆறு மாசம் தானிருக்கும். நவநீதத்திற்கு அறுபத்தி ஐந்து வயசாகி விட்டது.
இந்த வருஷம் வெயில் கொடுமை அதிகமாக இருப்பதால் கணவன் மனைவி இருவருமே இரவு ஒன்பது மணிக்கெல்லாம், கதவு, கேட் எல்லாம் பூட்டி விட்டுப் படுக்கப் போய் விடுவார்கள்
அன்று இரவு பதினொரு மணியிருக்கும்.
“ சார்!…சார்!….உங்களைத்தான்!….”
வாசலில் பல விதமான குரல்கள் சத்தமாக கேட்டது
தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்து வெளி லைட்டைப் போட்டார் நவநீதம்.
வாசலில் பத்துப் பேர் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள். சிலர் மாநிலத்தில் செல்வாக்குள்ள அரசியல் கட்சியின் கொடிகளைப் பிடித்திருந்தார்கள். மற்றவர்கள் சட்டையில் அந்தக் கட்சியின் சின்னத்தைப் ‘பேட்சா’க அணிந்திருந்தார்கள்.
“ சார்!….நாங்க வேட்பாளர் ‘சிந்தனைச் சிற்பி’க்கு நம்ம கட்சி சார்பா ஓட்டு கேட்க வீடு வீடா வந்து கொண்டிருக்கிறோம்!…உள்ளே வந்து பேசலாமா?….” என்று ஒருவர் கேட்டார்.
அந்தக் கட்சி அடிக்கடி மாநில ஆட்சியைப் பிடிக்கும் பலம் பொருந்தியது. அவர்களை வாசலிலேயே நிறுத்தி வைத்து அனுப்பினால், அவர்கள் நிச்சயம் பின்னர் ஏதாவது வகையில் தொல்லை கொடுப்பார்கள் என்பது நவநீதத்திற்குத் தெரியாதல்ல!.
வேறு வழியில்லாமல் நவநீதம் அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே, “ அப்படி எல்லாம் இல்லை சார்!….நீங்கள் தாராளமா வரலாம்!,,,” என்று கேட், கதவை யெல்லாம் திறந்து “‘வாங்க!..வாங்க!…உட்காருங்க…” என்று உபசரித்தார்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் ‘மள மள’வென்று அவர்கள் நவநீதம்,, அவர் மனைவி இருவர்களின் வாயை அடைத்து, கைகளைக் கட்டினார்கள்!
பீரோ, மற்றும் நகை நட்டுகள் இருக்கும் இடம் பற்றி உரிமையோடு விபரம் கேட்டு அத்தனையும் எடுத்துக் கொண்டு சாவகாசமாகப் புறப்பட்டுப் போனார்கள்!
– குமுதம் 23-3-2015 இதழ்