லண்டன்-1974
வீட்டிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. பிள்ளையார் சுழியுடன் ஆரம்பித்து அனுப்பப்படும் ஒவ்வொரு கடிதமும் உயிருள்ள தவிப்புகளின் நிழல் வடிவம் என்பதை ஞாகப்படுத்துகிறது.இலங்கையிலிருந்து என் சினேகிதர்கள்.உறவினர்கள்,பெற்றோர் ஒவ்வொருவருமே ஒவ்வொரு கோண உறவின் அடிப்படையில் எழுதும் கடிதங்கள் என் உள்ளத்தின் உணர்ச்சிகளைத் தூண்டுவதுண்டு.சிலவேளைகளில்,நேரம் கிடைத்தால் உலகில் எவருமே இல்லாத இ.டத்திற்கு ஓடிப்போய்த் தனிமையில் இருக்க வேண்டும்போல் எனக்குத் தோன்றும்.
‘ஏய் பாலா’ என்ற குரலைக்கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்புகிறேன்.
தெரிந்த முகம்! தூரத்தில் நிற்கிறது.
உள்ள பொதுத்தெரு என்பதையும் மறந்து மிகவும் சந்தோசத்தில் கூவுகிறேன்.
என்னையழைத்தவள். சில காலத்தின் முன் என்னுடன் வேலைசெய்யும்போது எனது சினேகிதியாயிருந்தவள்,பெயர் ஜக்குலைன் பீட்டர்.
‘நீ இப்போதும் அங்குதான் வேலை செய்கிறாயா?’ அவள் அன்புடன் என்னைப் பார்த்தபடி கேட்கிறாள்.
‘ஏன் நான் உன்னைப்போல் உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறாயா,நான் குடும்பக்காரி’ நான் செல்லமாக அவளில் கையிற் தட்டுகிறேன்.
அவளுடைய அந்தச் சிரிக்கும் விழிகள்.ஒரு இனிய கவிதையை ஞாபகப்படுத்தும் ஒரு சோடி அழகிய விழிகள்.
அவள் என்னைப்பார்த்துச் சிரிக்கிறாள்.’ஓ பாலா நான் உன்னைத் துக்கப் படுத்தவேண்டும் என்று கேட்கவில்லை. சும்மா ஒரு வேடிக்கைக்குக் கேட்டேன்.’
ஜக்கியைப் பற்றி எனக்கு ஓரளவுக்குத் தெரியும் உலகத்தில் பெரும்பாலான விடயங்கள் எதுவுமே அவளைப் பொறுத்துவரையில் ‘சீரியஸ்’ இல்லை என்ற தத்துவத்தைக் கொண்டவள்.
ஜக்கி ஒரு வருடத்திற்கு முன்பு என்னுடன் வேலை செய்தவள்.பிற நாட்டினரும் மனிதர்கள்தான் என்ற மனப்பான்மையுள்ள ஒரு சில ஆங்கிலேயர்களில் அவளும் ஒருத்தி.பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் கண்களைக் கவரத் தக்க,கவிதை நிறைந்த அழகிய விழிகளையுடையவள்.
நான் வேலைக்குப் புதிதாகச் சேர்ந்த கால கட்டத்தில்,ஜக்கி ஒரு விசித்திரப்பெண்ணாகத்தான் எனக்குத் தோன்றினாள். பனி பெய்யும் காலத்தில்,இறுக்கமான ஜீன்சும் கழுத்தை மூடிய ஸ்வெட்டருமாக வருவாள்.கோடை காலத்தில்,அழகிய கறுப்புக் கண்ணாடியும் பத்தொன்பதாவது நூறு;றாண்டுக் கிழவிகள் போட்ட ஒரு தொப்பியுடன் அவளைக் காண்டபோது நான் விழுந்து விழுந்து சிரித்து விட்டேன்.
கோபமே கொள்ளாமல்,’;நான் வேடிக்கையாகத் தெரிகிறேனா?’ வியப்புடன் அவள் என்னைக் கேட்கிறாள்.
‘அப்படி ஒன்றுமில்லை ஜக்கிஇ உனது உடையலங்காரம் ஒரு கலவைக் கலாச்சாராத்தை ஞாபகப்படுத்துகிறது’ அவளை அன்புடன் பார்த்தபடி நான் சொல்கிறேன.
ஆரம்பத்தில் நாங்கள் மறைமுக எதிரிகளாக இருந்ததாகத்தான் எனக்கு ஞாபகமிருக்கிறது. நாளடைவில் எப்படி ஒரு இறுக்கமான சினேகிதிகளாக மாறினோம் என்பது ஞாபகமில்லை. ஆனால் ஒரு நாள் எனக்குச் சொன்னாள்.’நீP ஒரு ஸ்ரோங் கரக்டர்’
‘ஏன் அப்படி நினைக்கிறாய்’ அவளைக் கேட்டேன்.
‘சிலர் எங்களைப் பிடிக்காவிட்டாலும் பிடிக்காததாகக் காட்டிக் கொள்ளாமல் நடித்துக் கொள்வார்கள். ஆனால் நீ கோபம் வந்தால் உன்னையறியாமல் பிளடி இங்கிலிஸ் என்று சொல்லியிருக்கிறாய்’
‘நான் பிளடி இங்கிலிஸ் என்று சொன்னபடியால் என்னை ஒரு ஸ்ரோங் கரக்டராக முடிவு கட்டவேண்டாம். சிலருடன் கண்டிப்பாகவிருப்பேன் சிலருடன் மென்மையாகப் பழகுவேன்’
எங்களிடையே ஒருவித ஈடுபாடு மலர்ந்தது. ஓரு ஆறு மாதம்தான் ஒன்றாக வேலை செய்தோம். பின்னர் அவள் சட்டென்று அவளின் வேலையை விட்டு விலகிவிட்டாள்.ஏனென்று அவள் சொல்லவில்லை.நானும் கேட்கவில்லை.
ஆனால் அடிக்கடி என்னைப் பார்க்க வருவாள். நானும் அவளைத் தேடிப் போவதுண்டு. அவள் தேம்ஸ் நதியில் ஒரு படகு வீட்டில் வாழ்கிறாள்.ஒரு அழகிய இளம் ஆங்கிலேயப் பெண் தன்னந் தனியாக ஒரு படகு வீட்டில் வாழ்வது எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. அப்படி ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்தும் பார்க்க முடியாது.
எனது கணவர் வேலை முடிந்து சிலவேளைகளில் பிந்தி வந்தாலே தனிமையான பயத்தில் படபடப்புடனிருப்பேன். அதுவரைக்கும் எனது ஒன்றரை வயது மகன்தான் எனக்குத் துணை.அவன் நித்திரையானல்.டெலிவிசனில் படம்பார்க்கும்போது ஏதும் பயங்கர படம் வந்தால் பயந்து விடுவேன்.சிறுவயதில் எங்கள் பெற்றோர் பயங்காட்டி வளர்த்தபடியால் நாங்கள் ஒரு பின்னடைந்த சமுதாயமாக வாழ்கிறோம் போலும்.
ஜக்கி ஒரு தரம் சொன்னாள்,’இந்தியர்கள் உபதேசத்திற்குப் பெயர் போனவர்கள்’.அதை அவள் சொன்னபோது ஆத்திரம் வந்தது.’ஜக்கி நான் உன்னைப்போல்,இப்படி ஒரு தனிப் படகு வீட்டில் சுதந்திரமாக வாழவிரும்பவில்லை’ எனது பேச்சு கொஞ்சம் கடுமையாக இருந்திருக்கலாம்.
ஓரு நாள் அவளிடம் சென்றபோது,தனது சினேகிதன் என்று அறிமுகப் படுத்தியது ஒரு வாட்டசாட்டமான ஜேர்மன் இளைஞன். அதன்பின்,டெலிவிஷன் படத்தயாரிப்பாளர் வில்லியம். பின்னர் ஒரு அமெரிக்கன்-இனக்கவர்ச்சிப் பத்திரிகையாளன்.கடைசியாகக் கண்டது கனடியன் ஜேம்ஸ்.
‘ஓ,ஜக்கி,நீ ஒரு கேடுகெட்டவள்’ என்று அவளைத் திட்டினேன்.இத்தனைக்கும் அவளின் கவிதை நிறைந்த கண்கள் கலங்கவேயில்லை.
கடைசியாகப் போன் பண்ணும்போது,அவள் மெக்சிக்கோ போவதாகச் சொன்னாள். அதன்பின் இரண்டு மாதங்களுக்குப் பின் அவளிடமிருந்து ஒரு மெக்சிக்கன் கார்ட் வந்தது.அதற்குப் பிறகு அவளிடமிருந்து எந்தச் செய்தியுமில்லை.
டெலிவிஷனில் தென்னமெரிக்க நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது,மெக்சிக்கன நாட்டுப் பாட்டு;களைக் கேட்கும்போது ஜக்கியின் ஞாபகம் வருவதுண்டு.அவளின் கவிதைவடியும் அழகிய கண்களை ரசிக்க அங்கு எத்தனையோபேர் இருக்கலாம்.
என்னைப் பொறுத்தவரையில்,இலங்கையையும் லண்டனையும் தவிர எனது கணவரும் குழந்தையும்தான்தான் எனது காட்சிச்சாலை.மகனின் மலர்போன்ற விழிகள்,பனி பொழிவது போன்ற அவனுடைய சிரிப்பு,தெய்வத் திருமொழி போன்ற அவனது மழலை இலக்கியம்,அவைதான் எனது சொர்க்கம்.
ஜக்கியை நினைத்தால்,அவள் தனது அழுகிய வாழ்க்கையில் தனிமையில் வாழ நினைத்தால் வாழ்ந்து முடிக்கட்டும் என்று நினைப்பேன் ஜக்கியைப் பொறுத்தவரையில்,வாழ்க்கை என்பது நிலையற்றது என்பதாகும்.
இப்போது,நாங்கள்,சவுத் கென்சிங்ரன் ஸ்டேசனைத்தாண்டி வருகிறோம்.14ம் இலக்க பஸ் வருகிறது.
நான் இப்போது,வேலைக்குப் போகிறேன்.அன்றெல்லாம் ஜக்கியைப் பற்றியே நினைவு சுற்றியது. தற்போது அவள் மிகவும் மெலிந்திருக்கிறாள். ஆனால் அவளின் அழகு குறையவில்லை.
பாவம்.அவள் இனி எத்தனை வருட சீவியம் அவளுக்கு?இறப்பைப் பற்றியே அவளுக்;கு எந்தக் கவலையுமில்லையா?
தேம்ஸ் நதி பொங்கி வழிகிறது.கிங்ஸ்வீதி ஜனநெருக்கடியில் தடுமாறுகிறது.இரண்டிற்கும் ஏதோ ஒரு ஒற்றமை தெரிகிறது.பற்றஸி பாலமிருக்குமிடத்தைச் சுற்றி எத்தனையோ படகு வீடுகள்.அவற்றில் வாழ்பவர்கள் பெரும்பாலும் கலைஞர்கள். தமிழ்க் கவிஞர்கள் பாடுவதுபோல், மெல்லிய இளம்காற்று,மலையில் தவழ்ந்து,மலரில் அணைந்து,மயக்கமான மென்மையுடன் உடலைத் துளைத்துச் செல்கிறது.
பங்குனிமாதக் குளிரும்,வெயிலும் சேர்ந்த சூழ்நிலையில் ஒரு இத்தாலியப் பாட்டை முணுமுணுத்துக்கொண்டு ஒரு ஓவியர் தனது படகு வீட்டுத்தளத்தில் இருந்துகொண்டு,படம் வரைந்து கொண்டிருக்கிறார்.
அடுத்த பக்கம் ஆரவாரம். நான் திரும்புகிறேன்.லண்டனில் பிரசித்திபெற்ற ஒரு நடிகை,நதியில் பல படகுகள் விரைகின்றன.படப்பிடிப்பு நடக்கிறது.விரைவாக நான் அவர்களைத் தாண்டுகிறேன்.அரைகுறைநிர்வாண ஆங்கிலப் படத்தில் எனது முகம் தெரியத் தேவையில்லை.
அந்தப் பிரமாண்டமான படகுகளின் நடுவே ஜக்கியின் சிறிய ஒற்றைத் தனிப் படகுவீடு ஏதோ சோக சித்திரம்போற் தோன்றுகிறது.ஜக்கியின் படகுக் கதவைத் தட்டுகிறேன்.படகு,தேம்ஸ்நதியின் அலைகளிற் தாளம்போட்டு மெல்லமாக ஆடிக்கொண்டிருக்கிறது.
‘ஹாய் பாலா’ ஜக்கியின் அமெரிக்க ஸ்டைல் ‘ஹலோதான் அது. யார் இது?ஜக்கியா?மெக்ஸிக்கன் ஸ்டைல் காற்சட்டை,ஹான்ட்பாக்,ஒரு பெரிய மெக்ஸிக்கன் தொப்பி,கறுப்பக் கண்ணாடி. அத்துடன் அங்கு,தாடியும் மீசையுமான மெக்ஸிக்கன் சினேகிதன்,நான் ஒன்றும் பேசவில்லை. அவள் அவனை எனக்கு அறிமுகம் செய்கிறாள்.
நாங்கள் இருவரும் படகு வீடுகளைத்தாண்டி கிங்ஸ் ரோட்டில் நடந்து கொண்டிருக்கிறோம்.ஜக்கியின் விசித்திரமான உனையலங்காரத்தை ஒருசிலர் திரும்பிப் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்.அவளையும் என்னையும் ஒன்றாகப் பார்ப்பவர்களுக்க வித்தியாசமாகத்தான் தெரியும்.நேரம் போய்க் கொண்டிருந்தது. நான் வீட்டுக்குச் செல்லவேண்டும் சமைக்க வேண்டும்.இவள் என்னடாவென்றால்?
‘ஜக்கி நான் போகவேண்டும்’ நான் அவசரப் படுகிறேன். அவளுக்கென்ன அவசரம்? அந்த ஆறுதலான நடை.’சரி,ஏதும் குடிப்போமா?’ ஜக்கி என்னைக் கேட்கிறாள். எனக்குச் சரியான தண்ணீர்விடாய்.’சரி குடிப்போம்’ என்கிறேன்.இலங்கையில் மூலைக்கு மூலை தேனிர்க்கடைகள் இருப்பதுபோல் லண்டனில் மூலைக்கு மூலை பொது மக்கள் மது அருந்தும் இடமான ‘பப் இருக்கும்.அப்போது நேரம் பின்னேரம் ஆறுமணி.’பொப்’ இசை முழங்கிக் கொண்டிருக்கிறது.
முதற்தரம் இப்படியான இடத்திற்குக் காலடி எடுத்து வைக்கிறேன்.இந்த மனிதர்களின் முகத்தில் துக்கமேயில்லையா? எல்லோர் முகத்திலும் ஏதோ ஒரு களிப்பு. கம்பரின் கும்பகர்ணன் வதைப் படலத்தில்,இலங்கையில் அநுமான் கண்ட களிப்பான இலங்கை மக்களைப் பற்றிய ஞாபகம் வருகிறது. எனது இளவயதில்,எஸ்எஸ்சி பாடப்படிப்புக்காக,அந்தக் களிப்பான மக்களைப் பற்றிப் படிக்கும்போது,பசிக்காகக் கோயிலடி மாங்காய் வாயிலிருந்தது ஞாபகம் வருகிறது.இப்போது, இந்தக் களிப்பான மக்களைப் பார்க்கும்போது எனது கையில்’ கொக்கோகோலா’இருக்கிறது.பட்டிக் காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதுபோல் நான் எனது சுற்றாடலைப் பார்க்கிறேன்.வேறுவிதமான மனிதர்கள்.வேறுவிதமான வாழ்க்கைமுறை.
‘நான்,லண்டன்,கையில் கொக்கோகோலா! ஆனால் நான் இந்த ‘பப’பிலிருந்து வெளியில் வரும்போது யாரும் என்னைப் பார்த்துவிட்டால் என்னைத் தப்பாக நினைப்பார்கள்’ நான் பதறுகிறேன்.’i பீல் சொறி போர் யு’ ஜக்கி என்னைப் பார்த்துச் சிரித்தபடி சொல்கிறாள்.
‘உண்மைகளை மறைத்துக்கொண்டு பலர் வாழ்கிறோம்’ அவள் என்னைப் பார்த்துக் கொண்டு சொன்னாள். கொஞ்ச நேரம் மௌனமாக நடந்து வருகிறோம்.’ நான் போன வருடம் சட்டென்று வேலையை விட்டது ஏன் என்று தெரியுமா?’ அவள் என்னை உற்றப் பார்த்தபடி கேட்கிறாள். எனக்குத் தெரியாது என்று தலையை ஆட்டுகிறேன்.அவளின் கேள்வியைநான் ஒரு துளியும் எதிர்பார்க்கவில்லை.
இருவரும் நான் எனது வீட்டுக்குப் போகவிருக்கும் பஸ் ஸ்டாப்பில் நிற்கிறோம். அப்போது அவள் என்னிடம் நிதானமாகச் சொன்ன விடயங்கள் எனக்குத் தலையைச் சுற்றப் பண்ணுகிறது.
வீட்டுக்கு வருகிறேன்.மகன் ஆசையுடன் கட்டிப் பிடித்தச் சிரிக்கிறான்.ஏதோ சமைக்கிறேன் ‘சாப்பாடு நன்றாக இருக்கிறது’ என்று கணவர் சொல்கிறார். வெளியே குளிர் காற்றடிக்கிறது.ஜக்கியை நினைத்துக் கொள்கிறேன். குணமாக்க முடியாத புற்று நோயிருப்பதாக டாக்டர்கள் சொன்னதால் அவள் தான் வழும் வரைக்கும் சந்தோசமாக வாழ நினைப்பதாக ஜக்கி ஒருசில மணித்தியாலங்களுக்கு முன் சொன்னது எனது நெஞ்சைப் பிசைகிறது. கண்டபாட்டுக்கு அவள் வாழ்வதாக அவளை நான் திட்டியதை நினைத்துக் கதற வேண்டும் போலிருக்கிறது.
தேம்ஸ்நதியில் அவளின் தனிமையான ஒற்றைப்படகு.அழகிய ஜக்கி. கவலையற்ற வாழ்வு வாழ்வதான சங்கற்பம். சிலவேளை இரவில் யாருக்கும் தெரியாமல் நித்திரையில் அவளின் அந்த அழகிய கவிதை விழிகள் நிலை குத்திக்கொண்டு! ‘ஓ ஜக்கி’.