ஒரு பாய்மரத்துப் பறவை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 10, 2023
பார்வையிட்டோர்: 2,700 
 
 

1 | 2

சுதாஸ் கிழக்குமாகாணத்தின் பாடசாலையொன்றில்  உயர்தரவகுப்பில் பயின்றுகொண்டிருக்கையில் அவனது அண்ணன்  நிதன் தமிழீழ விடுதலைப்புலிகள்  இயக்கத்தின் இணைந்து போராடிக்கொண்டிருந்தான்.

இந்தமண்  எங்களின்  சொந்தமண்   
இதன்  எல்லைகள்  மீறி  யார்  வந்தவன்?
கடல் அலையே கொஞ்சம் நில்லு
தமிழன் வீரத்தை உலகெங்கும் சொல்லு
அலைவற்றிக் கடலது சாகுமா,
தமிழ்ப்புலிப்படை தோற்றிடக்கூடுமா?
புலியொன்று  புயலாய் வருதே………  
மறந்துபோகுமோ மண்ணின் வாசனை?

இவையன்ன பாடல்கள் அனைத்து  இளசுகளின் மண்டைகளுக்குள்ளும் ரீங்கரித்து அவர்களை  உசுப்பேற்றிக்கொண்டிருந்த  காலம். போதாததுக்கு வி.புலிகளின் வீரதீர சாகசப்போரட்டங்கள் பற்றிய செய்திகள் அனுதினமும், வந்துகொண்டிருக்கவும் அநேகமான மாணவப்பருவத்தினருக்கும் வந்ததைப்போலவே  அவனுக்கும் அவ்வியக்கத்தின்மீதொரு  காதலும் ஈர்ப்பும் அபிமானமும் வளரத்தொடங்கின.  ஒருநாள் தன் மிதியுந்தையும் புத்தகங்களையும் வீட்டிலேயே வைத்துவிட்டு ஓசைப்படாமல் போராளிகளைச்சேர்க்கும் முகாமுக்கு ஓடிப்போய்த் தானும் அதிலே இணைந்துகொண்டான். இயக்கத்தில் ஆரம்பகால அடிப்படைப் பயிற்சிக் காலத்திலேயே சுதாஸின் தீவிரத்தையும் ஈடுபாட்டையும்,  சாதுரியங்களையும் கண்டுகொண்ட பயிற்சி மேலாளன் அவனை உளவு புலனாய்வு மற்றும் ஊடுருவும் பிரிவின் பிரத்தியேக பயிற்சிகளுக்குப் பரிந்துரைக்கவும் அவன் அதற்குள் உள்வாங்கப்பட்டான்.  பயிற்சிகள் முடிந்தபின்  கிளிநொச்சிநகரை மீளக்கைப்பற்றுகை ஓயாத அலைகள் – 2 இல் களமிறங்கிய அவனது சாதனைகள் இயக்கத்துள்ளும் விதந்து  பேசப்பட்டன.

மாதரணியிலும் சீத்தாச் சிறுத்தையைப்போல ஒடிசலான உடல்வாகுடன்  நளின உடல்மொழியும், வேகமாக ஓடிக்கொண்டே குறிபார்த்துச்சுடுதலிலும், ஓசைப்படாது  தவழ்ந்தும் உருண்டும் எதிரணியின் முகாமுக்குள் ஊடுருவி முன்னேறுதல் ஆகிய பயிற்சிகளில் முன்னணியிலும், Takewando தற்காப்புக்கலையின் பயிற்சியாளராகவும், கவனிக்கப்படும் சாதனையாளராகவும்,  போர்முனையில் அபரிமிதமான அழகுடன் யாழ் வடமராட்சியைச்சேர்ந்த ராகினி   என்றொரு போராளிப்பெண் இருந்தாள். கிளிநொச்சியில் இயங்கிய காலத்தில் சுதாஸுக்கும் ராகினிக்கும்  கடமைரீதியிலான சந்திப்புகள் அடிக்கடி ஏற்பட்டன.  பொதுவாக பெண்போராளிகள் களத்தில் வாசனாதிகள் எதுவும் பயன்படுத்துவதில்லை. அவர்களுக்கு அதற்கெல்லாம் அவகாசமும் இருக்காது, இருந்தும் ராகினியை நினைத்தாலே அவளின் வாசம் சுதாஸின் நினைவுப்புலம் முழுவதும் வந்துவந்து மோதத்தொடங்கிற்று, வண்டாய் அவளையே சுற்றிவரத்தொடங்கினான். ராகினி வருகிறாள் என்றால் விடலைகள் விருத்தர்கள் அனைவர் கண்களும் அவளை நோக்கியே சுழலும். ஆனாலும் நாளடைவில் அவளை அணுகித் தொட்டவை சுதாஸின் கண்கள்தான். அவர்களது சந்திப்புக்கள்  வலிந்த சந்திப்புகளாக மாறுகையில் தமக்குள் உண்டாகியிருக்கும் ஈர்ப்பையும், இருவரின் எண்ணங்களின் அலைவரிசைகள் பரிந்திசைப்பதையும் உணர்ந்துகொள்கையில் சற்றுக்கூச்சமும் நாணமும்கலந்த காதல்விதையொன்று களத்திலும் அவர்களிடையே  துளிர்க்கத்தொடங்கியது.

சமாதானம் ஏற்படுவதற்கு சிறிது காலமுன்பாக இரவு ரோந்து செல்லவேண்டிய ஒரு போராளிக்கு காய்ச்சலும் ஆஸ்த்துமாவுமாகச் சுகவீனங்கண்டதால் மிதியுந்திற்போக முடியாமற்போனது. கடமைகளுக்கு எப்போதுமே பின்னடிக்காத ராகினி தன்னார்வத்தில் அப்பணியை ஏற்றுக்கொண்டு ரோந்துப்போராளிகளுடன் போயிருக்கிறாள். தினமும் அவர்கள் வரும்வழியை சமூகசேவகர் யாரும் காட்டிக்கொடுத்தார்களோ இல்லை இராணுவந்தான் தானாகக்கண்டுபிடித்ததோ தெரியவில்லை. இவர்களுக்காக வேலியோரமாகப் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் குண்டு சமயத்தில் வெடிக்கவும் அதில் அகப்பட்டு முதல்மருத்துவ உதவிகள் கிடைக்க முதலே அன்று எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டாள் ராகினி. அவள் பூவுடலின் விதைப்பு முடிந்தும் அவளை மறக்கமுடியாது சுதாஸ் தவித்துக்கொண்டிருக்கையில் இவன் மேலாளரே வலிந்து அவனிடம் ‘வேண்டுமானால் இரண்டுவாரம் ஓய்வுதரலாம்…… வீட்டுக்குப்போயிட்டு வாப்பா’ என்று சொன்னார். வீட்டுக்குப்போய் அங்கு தனிமையிலிருக்கும்போதுதான் அவள் நினைவுகள் மேலும் வந்து வருத்துமென்று முகாமிலேயே தொடர்ந்தும் வழமையைப்போல் இயங்கலானான் சுதாஸ்.

அடுத்து அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையேயான பேச்சுவார்த்தைகளும் சமாதான காலமும் வந்தன.  அடுத்த ஆண்டுகளில்  கிழக்குமாகாணத்தின் முதன்மைத் தளபதியாயிருந்த  கருணா அம்மான் இயக்கத்தைவிட்டுப் பிரிந்துபோகவும் அவருக்கு வலைவிரித்து வெருகலாற்றுப்பக்கமாக வி.பு. இயக்கம் நடத்திய பலவேட்டைகளில் நிதன் ஒரு காலை இழந்ததோடு அவ் இரணம் ஆறாமல் வருந்திய அவனும்   சிலநாட்களில் இறந்து போனான்.

 ‘இனி ஆயுதப்போராட்டங்கள் எமக்கு வெற்றியைத்தரப்போவதில்லை’ என்கிற கருத்து பொதுமக்களிடத்தில் மெல்ல வளர்ந்து வலுப்பெறத்தொடங்கியது. ஆனால் போராளிகளோ  இன்னும்  ‘கண்ணில் தெரியுது தமிழீழம் காண்’ என்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தனர் அல்லது சொல்லப்பணிக்கப்பட்டனர். கருணா அம்மானுக்கு வலைவிரித்துத்தொடரும் தேடலில் சுதாஸுக்குமுள்ள உயிராபத்தை முன்கூட்டியே புரிந்துகொண்ட அவனது குடும்பம்  எத்தரப்புப் போராளிகளதும் கண்ணிற்படாமல்  கடல்கடக்கவைத்தாவது  அவனது உயிரைக் காப்பாற்றுவதென முடிவுசெய்தது.

 சுதாஸின் மாமா ஒருவர் அதற்காக கொழும்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பெற்றுத்தரும் ஒரு தொழில்முகவரை நெருங்கவும் அவர்  ‘உங்களுக்கு 250,000 Rs செலுத்த வசதியிருந்தால் வேண்டும் இவனைக் கட்டாரில் கட்டிடத்தொழிலுக்கு உதவிச்சிப்பந்தியாக   ஒரு மாதத்துள் அனுப்பிவைக்கலாம்’ என்றார்.

கருணா அம்மான் சென்றமைக்கு இயக்கத்துள் பல உள்ளக மனைச்சல்கள் இருந்தாலும், அவர் இல்லாத இயக்கமும், வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை ஒரு மின்னலைப்போலப் பளீரிட்டுக்  காட்டிவிட்டுப்பின் எல்லாமும் மாயமென்றாகிப்போய்விட்ட  ராகினியற்ற வாழ்வும்  சூனியமாகப்படவே, கட்டாருக்குப்  போகச்சம்மதித்தான்  சுதாஸ்.

தாயார் அவர்கள் குடும்பத்துக்குச் சொந்தமானதும் சிறிய வருமானம் தந்துகொண்டிருந்த அவர்களின் 30 மரங்களுடனான  ஒரேயொரு சிறிய தென்னந்தோப்பை  ஈடுவைத்து   ‘நீயாவது எந்தநாட்டுக்காவது போய்ப்பிழைத்திரு‘ என்று கட்டாருக்கு  அவனை   அனுப்பிவைத்தார். 

சுதாஸ் கட்டாரில் வேலைக்கான அனுமதிப்பத்திரத்தோடு விரைந்து டோஹாவில் வந்திறங்கினான். அங்கே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள்  பாலைவனத்தரைகளில் கட்டிடங்கள், பூங்காக்கள் அமைக்கும் பணியில் 600 $ சம்பளத்துக்கு அவனைவைத்துச் சக்கைபிழிந்தார்கள்.  இவனுடன் வேலைசெய்த நூற்றுக்கணக்கான இந்திய, பாகிஸ்தானிய, பங்களாதேஷ் தொழிலாளர்கள் எல்லோருக்கும் டோகாவின் அக்குழுமத்தில் தொடர்ந்து பணிபுரிவதற்கான அனுமதிப்பத்திரங்கள் காலாவதியாகிவிட்டன. ஆனால் இவர்களைப் பணிக்கமர்த்திய குழுமமோ அவற்றைப் புதுப்பித்துத் தராமலிருந்தார்கள்.   இவனைப்போலவே வேலைதேடிவந்த வெளிநாட்டுத்தொழிலாளர்கள் பலரும் வேலையோ சம்பளமோவின்றி அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த அவ்வேளையில்  அமெரிக்க மத்தியகிழக்கு வளைகுடாநாட்டு யுத்தம்  மூளவும்,  அமெரிக்காவுக்கு வளைகுடாவில் பெருமளவில் மனிதசக்தி தேவைப்பட்டது.       Al Rayyan என்ற இடத்திலிருந்த அமெரிக்க இராணுவ முகாமில் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்களென்கிற ஒரு செய்தி இவர்களுக்கும்  வந்துசேர்ந்தது.  சுதாஸும்  அவனோடு சேர்ந்த இன்னும் மூவரும் தம் குழுமம் வாங்கிவைத்திருந்த அவர்களின் கடவுச்சீட்டுக்களைக்கூடப் பெற்றுக்கொள்ளாமல்  இரவோடிரவாகப் புறப்பட்டு  அந்த இராணுவமுகாமுக்கு வேலை தேடிப்போனபோது இராஜமரியாதையுடன் அவர்களை அங்கே வரவேற்றார்கள்.  “இராணுவத்துக்கான சமையலும், சமைத்த உணவுகளைத் தனித்தனியாகப் பொதிசெய்து அனுப்புவதுந்தான் உமக்கானவேலை, வாரம் 269 $ சம்பளம் எம் முகாமிலேயே தங்குமிடவசதி செய்துதரப்படும் சம்மதமா ” என்றார்கள்.  கடவுச்சீட்டுக்கள்பற்றிய கவலை அமெரிக்கர்களுக்கு இருக்கவில்லை. இவர்கள் சம்மதிக்கவும் அன்றிரவே மேலும் சில ஆட்களுடன் சேர்த்துப் இருட்டுக்குள் நிற்பதே தெரியாமல் (Camouflage) அடர்ப்பச்சைநிறத்தில் பயங்கர இராட்சதத்தோற்றத்திலிருந்த ஒரு இராணுவ விமானத்திலேற்றி (கட்டார் அரசுக்கும் தெரிவிக்காமல்) பாக்டாட்டில் கொண்டுவந்து இறக்கினார்கள். நால்வருக்கும் (25.10.2004)  சமையற்கூடத்தில் உதவியாளர்களாக   அடுத்தநாளே  பணிஆரம்பமாகியது.

ஓராண்டு கழிந்தது, போரும்  முடிவதாயுமில்லை. தினமும் இறைச்சிவெட்டுதல், கிழங்கு, காய்கறி  நறுக்குதலென்று சமையலறைப்பணிகள் அலுப்படிக்கத் தொடங்கவும் அங்கிருந்து   எப்படிக்   கழரலாமெனச்   சிந்திக்க ஆரம்பித்தனர்.

பாக்டாட் நகரம்  அழகு, கடைக்கண்ணால்வெட்டி மின்னிவிட்டுச் சிரித்துக்கடந்துவிடும்  பாக்டாட் அழகிகள் அதைவிட அழகு, எதையும் நிதானமாய் அமர்ந்து  இரசிக்கும் மனநிலையில் அவ் இளைஞர்கள் எவரும் இல்லை. அமெரிக்க இராணுவத்துக்கு வெளியே நடமாடப்பயம் இருந்ததால் சமையலுக்கான மளிகை, மரக்கறிசாமான்கள் வாங்க வாரத்தில் இருமுறை இவர்களைத்தான்  அங்காடிகளுக்கு அனுப்புவார்கள்.  அவ்வாறு வெளியே செல்ல வாய்க்கும் வேளைகளில் பாதிமூடியும் மூடாமலுமிருந்த  பயணமுகவர் அலுவலகங்களில் தெரிந்த ஆங்கிலத்தில் விசாரித்ததில் பாக்டாட்டிலிருந்து குர்திஷ்தானுக்கு நெடுந்தூரப்பேருந்துசேவை இருப்பதைத் தெரிந்துகொண்டார்கள். மரக்கறி வாங்கும் பாவனையில் நால்வரும் ஒருநாள் புறப்பட்டுப்போய்  குர்திஷ்தானுக்கு ஓடிவிடலாமாவெனத்திட்டம் போட்டார்கள். இவர்களில் புத்தளத்தைச்சேர்ந்த நிஷாந் என்கிற இளைஞன் (Risk)   இடர்கழியெடுக்கப்பயந்து இவர்களுடன் வரமறுத்துவிட்டான்.   திட்டமிட்டபடி  ஒருநாள் குர்திஸ்தானுக்கு மூவரும் பேருந்துஎடுத்து  Erbil எரிபில்  எனும் நகரத்தில்போய் இறங்கி அங்கிருந்து  டாக்ஸி எடுத்துக்கொண்டு   Duhok டோக் எனும் நகரத்துக்குப் போனார்கள். டோக்கில் இருந்த அவர்களுக்கு மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியவில்லை, அங்கே 2 வாரங்களை ஒரு பயணியர்விடுதியில் கழித்தன்பின்  டோக்கில் ஒரு  கார்கள் கழுவும் கொம்பனியில் மூவரும் பணியில் சேர்ந்தனர். அவர்களிடம் கடவுச்சீட்டுக்களோ விசாவோ உரிய அடையாளப்பத்திரங்கள் எதுவும் இல்லாதாதால் அக்குழுமமும் முதலில் இவர்களைப்பணியில் சேர்த்துக்கொள்ளப் பின்னடித்தது. பணியின்போது விபத்துக்கள் ஏதும் ஏற்பட்டால் அது பணிதரும் குழுமத்துக்கு பல சட்டச்சிக்கல்களைக் கொண்டுவந்துவிடும். இவர்களின் இக்கட்டான நிலையை அறிந்த குழுமத்தின் தலைவர் அவர்களை அரை மனதுடன்  அரைவாசிச் சம்பளத்துக்கே  கார்களைக்கழுவி அவற்றின் உடபக்கங்களைச் சுத்தம்செய்யும் பணியில் அமர்த்திக்கொண்டார்.  குழுமம் 6 நாட்களும் வேலை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு தங்குவதற்கு குழுமத்தின் மேல்த்தளத்தில் சில அறைகளையும் வாடகையின்றி தந்தது. அங்கிருந்துகொண்டே கட்டாரில் இவர்கள் பணிபுரிந்த குழுமத்துக்கு  தங்கள் கடவுச்சீட்டுக்களை அனுப்பிவைக்கச்சொல்லி மன்றாட்டமாக கடித்தத்துக்குமேல் கடிதமாக எழுதிக்கொண்டிருந்தனர். எல்லா முயற்சிகளும் அவமாகின. இன்றைக்கும் இவர்களுடன்வர  மறுத்த நிஷாந்  எங்கிருக்கிறான்  என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியாது.

கொழும்பில்   தம்மை டோகாவுக்கு அனுப்பிவைத்த முகவரைத் தொடர்புகொண்டு   தமது  நிலமையை விளக்கினார்கள்.

“தம்பிமாரே……   உங்களுடைய பாஸ்போர்ட்,  பேர்த் சேர்டிபிகேட், ஐடென்ரிரிகாட்      கொப்பியள் எல்லாம் என்னட்டை இருக்குத்தான், ஆனால் அதைமட்டும் வைத்துப் பாஸ்போர்ட் எடுத்து எக்ஸிட்சீலும் போடுவிக்கிறதென்றால் புத்தகத்துக்கு 3 இலக்ஷம் முடியும் ”  என்றார்.  ஆளுக்கு அரசாங்கத்தில் செல்வாக்கு இருந்தது. அவருடன் பேரம்பேச வெளிக்கிட்டால் காரியம் ஆகாது.  பாக்டாட்டில் அமெரிக்கனிடம் சம்பாதித்ததில் செம்பகுதியை அவருக்கே அனுப்பிப் புத்தகங்களை விக்கினங்கன்றிக் கூரியரில் எடுப்பித்தார்கள்.      அவற்றைக் குழுமத்தின் தலைவருக்கு கட்டாரிலிருந்து வந்ததாகக் காட்டவும் திருப்திப்பட்டு தலைக்கு 100 $ வீதம் சம்பள அதிகரிப்பைச் செய்தார்.

இதே குழுமத்தில் கார் மெக்கானிக் வேலைகளிலும் அவர்களுக்குப் பயிற்சிகள் தரப்பட்டன. வேலையில் பிரச்சனைகள் இல்லை, ஆனால் விடாமல் போரே மீண்டும்  அவர்களைத் துரத்த ஆரம்பித்தது. ஐ. எஸ். ஐ. எஸ் இனருடைய  பி.கே.கே போராளிகளின்மீதான தாக்குதல்கள்,  களேபரங்கள், அதகளங்கள் மெல்லமெல்ல குர்திஷ்தானில் ஆரம்பித்ததும் மேலும்  அங்கும் எங்கே என்ன வெடிக்குமோ என்ற பீதியுடனேயே நாட்கள் கழியலாயின. டோக்கிலும் வாழக்கூடியதாகச் சூழமைவுகள் இருக்கவில்லை.  

அவர்களுக்கு கார்கள் கழுவும் குழுமத்தில் ஒரு குர்திஸ்தான்  இராணுவ லெப்டினென்ட் ஒருவர் வாடிக்கையாளரானார். அவர் ஒரு மனிதநேயர், குறைவான ஆங்கிலத்தில் அவ்வப்போ இவர்களுடன் உரையாடி அவர்களின் பாடுகளை, நாட்டுப்பிரச்சனைகளை அனுதாபத்துடன் விசாரிப்பார். ஸ்ரீலங்காவின் தமிழர்களுக்கும் எங்களுக்கும் கிட்டமுட்ட ஒரேவிதமான பிரச்சனைகள். நீங்கள் எவ்வழியிலாவது ஐரோப்பிய நாடொன்றைச் சென்றடைந்து விட்டீர்களாயின் உங்களுக்குப் பிரகாசமான எதிர்காலமிருக்கும், அவர்கள்தான் மனிதாபிமானமுள்ளவர்கள், எப்படியும் உங்களுக்கு அடைக்கலம் தருவார்கள் என்று சொல்வார்.  அவரே ஏற்பாடு செய்து தந்தபடி அங்கிருந்து ஒரு முகவருடன் சேர்ந்து  3  நாட்கள் கால்நடையாக நடந்து துருக்கிக்குள் நுழைந்தனர். அவர்கள் முதலில் அடைந்த இடம் ஒரு குக்கிராமமாகும்.  அக்கிராமத்தின் பெயர் எவருக்கும் இப்போ ஞாபகத்திலில்லை அக்கிராமத்தில் அவர்கள் தங்குவதற்கு  முன்னரே ஒரு வீடு முகவரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வீட்டை ஒருவாறு ஒரு இரவில் அடைந்தனர்.  அந்த வீட்டிலிருந்தவர் பின்னர் அவர்களை சிற்றுந்து (Truck) ஒன்றில் ஏற்றி தகரபரல்களுக்கிடையே உட்காரவைத்து ஒரு பேருந்துத்தரிப்பு நிலையத்துக்கு கொண்டுவந்து பேருந்தொன்றில் அவர்களை ஏற்றிவிட்டார்.  அப்பேருந்தில்    16 மணிநேரம்  பயணித்து  ஸ்தான்புல்லை வந்தடைந்தனர். பேருந்து வழியில் பயணிகளின் சிரமபரிகாரங்கள், சிகரெட்டுப்புகைத்தலுக்காக நாலைந்து இடங்களில் நிறுத்தப்பட்டாலும் தொடர்ந்து ஆசனத்திலிருந்ததால் இவர்களின் கால்கள் பாதங்கள் வீங்கத்தொடங்கின.

ஸ்தான்புல்லில் இறங்கிநின்று   அலமலங்கவும்  சில பயணமுகவர்கள் அவர்களிடம்வந்து  ஐரோப்பாவுக்குள் செலுத்துவதற்கு ஆயிரக்கணக்கில் பணம் கேட்டனர். வேறொரு  பகுதியினர்வந்து  அவர்களை 200$ களுக்கு, வேறும் 35 பேர்வரையிலான ஆட்களுடன் இரண்டு  சிறியரக சிற்றுந்துகளில்  (Toyota – Dolphin)   சேர்த்து  துருக்கி – கிரேக்க எல்லைக்கு அழைத்துச்செல்கையில் ஒரு மணிநேர ஓட்டத்தில் அவர்களை காவற்படையினர் விரட்டிவந்து வாகனத்துக்கு முன்மறிப்புப்போட்டு நிறுத்திக்கைதுசெய்தனர். எம்மை அழைத்துவந்த முகவர்களோ  ‘நாங்கள் வாடகை வண்டிக்காரர்தான், இவர்கள் எங்களை கிரேக்க எல்லையில் விட்டுவிடும்படி வாடகைபேசி வந்தார்கள். இவர்கள் யார் / எங்கிருந்து வருகிறார்கள் / எங்கே போகின்றார்கள் என்பதெல்லாம் எமக்குத்தெரியாது’ என்று சொல்லிக் கையைவிரிக்கவும்  காவல்த்துறை அவர்களை விட்டுவிட்டு இவர்களைத் தம்பேருந்தில் அழைத்துப்போய் விசாரித்துவிட்டு சிறைக்குள் வைத்தார்கள். எங்களைத் துருக்கிக்குள் கூட்டிவந்தவர் சொல்லித்தந்தபடி நாங்கள் காவற்துறையினருக்கு எங்களை சோமாலியர் என்று சொன்னோம்.   நல்ல காலம் அவர்கள் எம்மைக்  ‘குர்-ஆன்’  ஓதும்படி  கேட்கவில்லை.

100 சொற்களுக்கும் குறைவான ஆங்கில வார்த்தைகளை வைத்துக்கொண்டு இவர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் இடையிடையே வந்து இவர்களிடம்  ‘சவா’  ‘சவா’ என்று (Are you Okay) விசாரித்தனர். அது ஃப்றெஞ்மொழி என்பதே இவர்களுக்குத்தெரியாது. ஏதோ அவர்கள் அரபில் கேட்பதாக நினைத்து இவர்களும் தமக்குத்தெரிந்த அரபில்  ‘இன்ஷா அல்லா’…….  ‘இன்ஷா அல்லா’ (இறைவனின் விருப்பப்படி) என்று பதிலளித்தனர்.  அவர்கள் இத்தனை பணம் செலவுசெய்து  வருவித்த கடவுச்சீட்டுகளையும் குர்திஸ்தான் குழுமத்திடமிருந்து வாங்காமல் வந்ததுவும் நல்லதுதான், அக்கடவுச்சீட்டுகள் மட்டும் அவர்கள் கையில் இருந்திருந்தால் நேரே ஸ்ரீலங்கன் தூதுவராலயத்தில் இவர்கள் ஒப்படைக்கப் பட்டிருப்பார்கள். . சோமாலியாவில் நிலையான குடியியல் அரசோ, அதற்கான தூதுவராலயங்களோ  துருக்கியில் எதுவுமில்லை. ஆனாலும் ஸ்தான்புலில் 2  மாதங்கள்   சிறைவைக்கப்பட்டனர்.

இவர்கள் சிறையிலிருந்த காலத்தில் துருக்கியிலிருந்து Bodrum எனுமிடத்திலிருந்து  கருங்கடல் மூலம் கிரேக்கத்தின் Kos எனும் தீவைநோக்கி 200 வரையிலான சிரிய அகதிகளைத் தாங்கிவந்த இரண்டு அடுக்கிலான அகதித்தோணி (Ferry) ஒன்று நடுவழியில்  மூழ்கி ஐம்பது அறுபதுபேர் மரணித்தும்  மூன்றேவயதான Alan Kurdi என்கிற சிசுவின் சடலம் கரையிலும் ஒதுங்கிய செய்தி  (04.Sep.2015) சமூகவூடகங்களில் படங்களுடன் வெளியிடப்பட்டு அது  சர்வதேசங்களையும் உலுக்கிவிட துருக்கியின் காவல்த்துறை  சுதாஸையும்  பரிசித்து  கமல்ராஜ்  எனும்  அம்மூன்று இளைஞர்களையும்   ‘நமக்கு ஏன் அகதிகளுடன்  வீண்சோலி’ என்று   விடுவித்தது. 

விடுபட்ட மூவரும் மீண்டும் தேடி ஒரு மலிவுரக பயணியர் விடுதியைக் கண்டுபிடித்துத் தூங்கினார்கள்.  பிரான்ஸிலிருந்து  பரிசித்தின் அண்ணன்மூலமும்  ஜெர்மனியிலிருந்த சுதாஸின் வருணன் என்கிற ஒன்றிவிட்ட சகோதரன் மூலமும் 500 $ பணம் அவர்கள் தங்கியிருந்த விடுதியினூடாக எடுப்பித்து அடுத்தடுத்த நாட்களைச் சமாளித்தனர்.  கமல்ராஜிடம் மட்டும்   இன்னும் டொலர்கள் இருந்தன. அவன் எவ்வளவு தொகை வைத்திருந்தான் என்பதில் கடைசிவரையில் எவரும் அறியாமல் இரகசியம் காத்தான்.  சிற்றுந்தின்மூலம் இவர்களை இட்டுவந்த முகவரை மீண்டும் போன்மூலம் தொடர்புகொள்ளவும் வார்த்தைக்கொரு  ‘அல்லா’ வைத்துக் கதைத்த அவர்  தலைக்கு 100 $ தருவதானால் கிரேக்கத்தில் சேர்த்துவிடுவதாக சத்தியம் செய்தார். 

‘பயணப்பொதிகள் (சூட்கேஸுகள்), முதுகுப்பைகள் எதுவுமில்லாமல் தயாராக இருங்கள்’ என்று சொல்லிச்சென்றவர் இரண்டாம் நாள் இரவுவந்தார். அவர் கொண்டுவந்த சிற்றுந்தில் மேலும் இருபது பேர்வரையில் வெவ்வேறுநாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் சிரியா, சோமாலியா, மங்கோலிய முகங்களுடன் இருந்தனர். சிற்றுந்தின் உள்ளக விளக்குகளை அணைத்துவிட்டு ஒரு மணிநேரம் ஓடியபின்  ஒரு கடற்கரையில் போய் நின்றது அச்சிற்றுந்து. கடலிலிருந்து வீசியகாற்றின் குளிர் இவர்களால் தாங்கமுடியவில்லை. கடற்கரையில் தயாராக இருந்த இரண்டொருவர் அவர்கள் அனைவரையும் அழைத்துப்போய் இடுப்பளவு நீர்மட்டத்தில் நின்ற இரண்டு  காற்றடித்து ஊதச்செய்யும் வகையான வள்ளங்களில் (Inflatable tube boats) ஏற்றினர். ஆகக்கூடியது ஆறுபேரே அமரக்கூடிய வள்ளங்களில் ஒன்றில் 12 பேரும் மற்றையதில் 13 பேரையும் அமரச்செய்தார்கள். ஒரு வள்ளத்துக்கு அதைச்செலுத்தத் தெரிந்த ஒரு ஓட்டுனன் இருந்தான். அவன் அதைக்கிளப்பிப்போன இலாவகத்தைவைத்தே இவர்கள் அதை ஊகித்துக்கொண்டார்கள். முகவர் சுதாஸும் நண்பர்களும் இருந்த வள்ளத்தை அதன் பயணிகளையே ஓட்டவும் முந்தையதைப் பின்தொடரவும் சொன்னார் முகவர். சிரியநாட்டவனாக இருக்கலாம் மீசையே கறுக்காத ஒரு விடலைப்பையன்  ‘தான் ஓட்டுகிறேன்’ என்று முன்வந்தான். அவன் மோட்டரை ஒருவாறு முடுக்கியதும் வள்ளம் வளைந்து வளைந்து சென்றது. ஆரம்பத்தில் வள்ளத்தை அவனுக்கு நேராகச் செலுத்தவே முடியவில்லை, வளைத்து வளைத்தே ஓட்டினான், பின்னர் ஒருவாறு சமாளித்துக்கொண்டு முன்னால்ப்போன வள்ளத்தைப்பின் தொடர்ந்தான். அதொரு நொவெம்பர் மாதம் பயங்கரக்குளிராக இருந்தது, கடற்காற்றும் பலமாக இருந்தது. கடல் அமைதியாக இல்லாமல் வள்ளத்தோடு சேர்த்துப் பயணிகளையும் தூக்கித்தூக்கிப்போடவும்  அவர்கள் கிலிகொள்ளத்தொடங்கினர். வள்ளம் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது. தூரத்திலிருந்து  இரண்டுமூன்று இடங்களிலிருந்து வெளிச்சங்கள் தெரியத்தொடங்கவும் போயிறங்கவேண்டிய இடம் அண்மித்துவிட்டதாக நினைத்தார்கள், ஆனால் முதற்போன வள்ளம் முடிவில்லாது போய்க்கொண்டே இருக்கவும் இவர்களது வள்ளமும் அவர்களைத்தொடர்ந்துகொண்டே இருந்தது. வெளிச்சங்களைச்  அண்மிக்க அண்மிக்க கடலில் பயங்கரமான அலைகள் எழும்பி அடிக்கத்தொடங்கின, வள்ளத்தில்  அடித்த அலைகள் வள்ளத்தினுள் நீரை வாரி இறைத்தன. இப்போது பயத்தோடு சேர்ந்து குளிரிலும் பயணிகளுக்கும் உதறல் எடுக்கத்தொடங்கியது. இவர்களுக்கு முன்னே சென்றுகொண்டிருந்த வள்ளத்தை இப்போது காணவில்லை. அவர்களுக்கும் பின்னே வருபவர்களையும் காபந்துபண்ணிக் கூட்டிச்செல்லவேண்டுமென்கிற கவனம் அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை.  பயணமுகவனும் அந்தவள்ளத்தில் இருக்கிறானா அல்லது அனைவரையும் அம்போவென விட்டுவிட்டுத் தன்பாட்டுக்குச் சென்றுவிட்டானா என்று  பயணிகள் எவருக்கும்  தெரியவில்லை.

இவர்களது வள்ளத்தை ஒருவாறு ஓட்டப்பயின்றவனுக்கு இப்போது எந்தத்திசையில் எதைநோக்கி ஓட்டுவதென்று தெரியவில்லை. தடுமாறிக்கொண்டிருந்தான். இரண்டு அலைகள் ஒன்றன்பின்னொறாக வந்து வள்ளத்தை அரைப்பனை உயரத்துக்குத் தூக்கிப்போட்டன, இருந்தும் நல்வாய்ப்பாக  வள்ளம் நீரினுள் அமுங்கவில்லை. தப்பித்துக்கொண்டார்கள். இப்போது முன்னரைவிடவும்  பிரகாசமான வெளிச்சம் வேறொரு இடத்திலிருந்து தெரிந்தது. அதைநோக்கிசெலுத்தினான் இளவல். இப்போதும் பெரிய அலையொன்று வள்ளத்தைநோக்கிய திசையில் வந்தது. அலைகள் அடிக்கடி வருவதால் நாம் கரையை அண்மித்திருக்கவேண்டுமென சுதாஸும் பரிசித்தும் நினைக்கலாயினர், நோக்கிவந்த அலையின் பிரமாண்டத்தைக் கண்ட அனுபவமற்ற ஓட்டுனன் அலையின் திசையில் சென்றிருந்தால் ஒருவேளை அது வள்ளத்தைத்தூக்கிப் போட்டுவிட்டுக் கடந்திருக்கும். இவனோ திடுப்பென வள்ளத்தைக் அலைக்குக் குறுக்காகத்திருப்பினான். வள்ளத்தின் பக்கவாட்டில் அடித்த பேரலை எழும்பிக்கீழ் விழுகையில் வள்ளம் முழுவதையும் நீர் நிறைக்கவும் நொடியில் அவர்களைச் சுமந்துவந்த வள்ளம் தாண்டது.   பயணிகள் அனைவரும் கடலில் மிதந்து தத்தளிக்கத்தொடங்கினர். மிதக்கும் ஜக்கெட்டின் (Life Jacket) உதவியால் மிதந்தவர்கள். லேசாக நீந்தத்தலைப்பட்டனர். இம் மரணாவலத்தைவிடவும் ஒரேயடியாகக் கரும்புலியாய்ப்போய் மடிந்திக்கலாமென  சுதாஸ்  இப்போது நினைத்தான். பரிசித்து கடற்றொழில் அனுபவமுள்ள மீனவன்,  நீந்தத் தெரிந்தவன்  சுதாஸுக்கு நீச்சல் அனுபவங்கள் கிடையாது. ஜக்கெட்டின் உதவியால் தவளைபோல் மிதந்துகொண்டிருந்தான்.  கையைக்காலை லேசாகவேனும் அசைக்காமலிருந்தால் தசைகள் (Cramping) கெட்டியாகி வலிக்கத்தொடங்கின. அதனால் லேசாக அசைத்து அசைத்து முடிந்தவரையில் நீந்தமுயன்றுகொண்டிருந்தான். பிறகு வந்த அலைகள் வெளிச்சமிருந்த திசையில் அவனைத்தள்ளிச் செல்வதுபோலிருந்தது. இவனைப்போல் மிதந்துகொண்டிருப்பவர்கள் எவரும் எவருக்கும் உதவிசெய்யும் நிலையில் இல்லை, அவரவர் தம்முயிர் காக்கப் பரிதவிக்கையில் ஒருவரிலிருந்து ஒருவர் பிரிந்துகொண்டிருந்தனர்.

சுதாஸ் அருகில் நீந்தியவர்களின் முகங்களைக் கூர்ந்து கூர்ந்து பார்த்தான், அவர்களில் எவனும் பரிசித்து இல்லை. குரலெடுத்து  “பரிசித்து…டேய்” என்று கத்தினான். யாரும் எதிர்க்குரல் கொடுக்கவில்லை. வானத்தின் கருமைகுறைந்து சற்றே சாம்பலும் மென்நீலமும் செந்நிறமும் தோன்றவும் நெளிந்துகொண்டிருக்கும் அலைகள் மினுங்கத்தொடங்கின. பெரிய வெளிச்சம் வந்த இடத்தில் பல சின்னச்சின்ன வெளிச்சங்கள் ஒரேயிடத்தில் தோன்றத்தொடங்கின. சுதாஸ் முதலில் அது ஒரு கப்பலாக இருக்கலாமென நினைத்தான், கடலில் ஏதோ தாவரத்தின் இலைகளும் மிதப்பது தெரிந்தன. சிறுவெளிச்சங்களை நெருங்க நெருங்க அது கப்பல் இல்லை தரைதான் எனப்புலப்பட்டது. தொடர்ந்து நீந்தி ஒருவாறு கரையை அடைந்தான். கைகால்களை உதறியபடி உடம்பைக்கொஞ்சம் சூடாக்கலாமேயென்று கால்போனதிசையில் நடந்தான்.  ஒரு விருந்தகத்தைப்போல ஒரு கட்டிடம் தெரிந்தது. அதன் முன்னால் போடப்பட்டிருந்த மேசைகளில் ஒரு ஜாக்கெட்டின் செம்மஞ்சள் தெரியவும் ஓடிப்போய்ப்பார்த்தான். அம்மேசைகளில் ஒன்றில் பரிசித்து உதறிநடுங்கியபடி படுத்திருந்தான். இருவரும் ஆனந்தமிகுதியால் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக்கொண்டனர். சிரியன் அகதிகளிலும் நாலைந்துபேர் கரையேறி நடுங்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் வள்ளத்தைச் செலுத்திவந்த இளவலை மட்டும் காணவில்லை. இவர்களுக்கு முன்னே பாய்ந்துவந்த வள்ளத்திலிருந்தவர்கள், ஆபத்தின்றிக் கரைசேர்ந்துவிட்டார்களா, அல்லது அவர்களது வள்ளத்தையும் அலைகள் தாக்கினவா, அவர்களுக்கு  என்ன  நடந்ததென்றும்  தெரியவில்லை.

இனி எத்திசையில் செல்வதென்று  தடுமாறிக்கொண்டிருக்கையில் ஒரு சிறிய ரகவாகனம்  அவ்விருந்தகம் இருந்த வீதியால் மெதுவாக வந்தது. இவர்களைக்கண்டதும் வாகனம் அவர்கள் அருகில் வந்துநின்றது. இவர்கள் தாங்கள் வந்த வள்ளம் கவிழ்ந்ததையும் தாங்கள் நீந்திக்கரையேறி நிற்பதைச் சொல்லவும் அவர்கள் எடுப்புத்தொலைபேசியில் காவல்த்துறைக்குத் தகவல் சொன்னார்கள். ஒரு மணிநேரம் கழித்து கருநீலநிறப் பேருந்தில் காவல்துறையினர் வந்து சேரவும் பொழுதும் மெல்லமெல்ல வெளுக்க ஆரம்பித்தது.  (நொவெம்பர் 2.) இவர்கள் குளிர்தாங்காமல் அணிந்திருந்த லைஃப் ஜாக்கெட்டோடு சேர்த்து ஈரமான பெனியன்கள், ஷேர்ட்டுக்கள், மேலாடைகள் அனைத்தையும் கழற்றி வீசினார்கள். அவர்கள் சூரியன் விரைந்தெழுந்து தம்மீது காயாதாவென ஏங்கினர்.  குளிர் வருத்துவது தணிய அல்லது பழகிப்போகவும் மெல்லத்  தாகமும் பசியும் வருத்த ஆரம்பித்தன. தங்களது வள்ளத்தில்  கூடவந்தவர்களில் எவராவது நீந்தமுடியாமல்  செத்துப்போயிருப்பார்களோ என்று  நினைக்கையில்  வருத்தம்  மேலிட்டது.

இவர்கள் வந்தடைந்த இடம் கிரேக்கத்துக்குச் சொந்தமான Aegina  எனும் ஒரு தீவு.  கோடைகாலத்தில் மட்டும் உல்லாசப்பயணிகள் உலாசித்துப்போகும் கிரேக்கத்தின் பல தீவுகளில் அதுவும் ஒன்று. அங்கே குளிர்காலத்தில் மக்கள் நடமாட்டம்  எதுவும் இருக்காது.  விபத்தைப்பற்றிய  தகவல் சொன்ன பின்னரும் கிரேக்கத்தின் எந்தப்படையினரும் பாய்ந்துவந்து கடலில் தேடுதல் நிகழ்த்தவில்லை.

அதுக்காக வந்தவர்களைப்போல வந்த காவல்துறை அங்கு உயிர்தப்பி நின்றிருந்த ஒவ்வொருவருக்கும் விலங்கு மாட்டினார்கள். அவர்களுக்கு  “அடே…உயிர்தப்பிப்பிழைத்து வந்திருக்கோம்டா…எதுக்கடா எங்களுக்கு விலங்கை மாட்டுகிறீர்கள், மனிதாபிமானமற்ற விலங்குகளா…” என்று கத்தவேண்டும்போலிருந்தது. அவர்களுக்குத்தெரிந்த ஒரு மொழியிலுந்தான் அவர்களுக்கு அவ்வாறு ஒரு வசனத்தைக்கோர்க்க  முடியவில்லை. “யாரடா உங்களை வரச்சொன்னா…எதுக்கடா வந்தீங்க” என்று அவர்களும் பதிலுக்குக் கத்தலாம் என்றும் மனங்கள் எதிர்த்தர்க்கம் செய்ததுடன் விட்டுவிட்டன.  

எல்லோருக்கும் விலங்கிட்டபின் ஒவ்வொருவரும் வரிசையாகப் பேருந்தினுள் ஏற்றப்பட்டனர். அந்தப் பேருந்தே ஒரு   சிறைச்சாலையைப்போல் கொட்டுக்களாகப் (Cells) பகுக்கப்பட்டிருந்தது. கைதிகளாக விலங்கிடப்பட்டவர்கள் எதிரெதிராக இருந்த ஒவ்வொரு கொட்டுக்குள்ளும் செம்மறிகள்போல அடைத்துக்கொண்டுபோய் இன்னொரு கடற்படைக்குச்சொந்தமான சிறிய கப்பலொன்றில் ஏற்றினார்கள், அப்பயணம் ஆறு அல்லது ஏழு மணியிருக்கலாம், அக்கப்பல் கரையை வந்தடைந்ததும் மீண்டும் தயாராகவிருந்த ஒரு பேருந்தில் ஏற்றினார்கள், அதுவும் கொட்டுக்களாகப் பகுக்கப்பட்டிருந்தது. அப்பேருந்து அவர்களை   Kastoria வில் உள்ளதொரு பெரியசிறைச்சாலையில்  கொண்டுவந்திறக்கினார்கள். எல்லாரையும் விசாரித்தபின் காலையுணவு கொடுத்துப்  பெரியகொட்டுக்களில் அடைத்தார்கள். அச்சிறையில் பரிசித்தும், சுதாஸும் 6 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டனர்.  மிகவும் மட்டமான உணவு, மாலையில் ஒரு காப்பி கிடைக்கும். 50 பேருக்கு ஒரு பொதுவான கழிப்பறை. அதிகாலை 3 மணிக்கே எழுந்தால்த்தான் பத்தாவது நபராக கழிப்பறைக்குள் நுழையமுடியும். எல்லா அசௌகரியங்களுடனும் 6 மாதங்களைக் கழித்தபின் வேறொரு நகரத்துக்கு அழைத்துப்போய் அங்குள்ள சிறையொன்றில் வைத்து ஒவ்வொருவரையும் தனித்தனியே மீண்டும் விசாரித்தார்கள். விசாரணைகள் முடிந்தபின் ஒரு பத்திரத்தில் 6 மாத விஸாதந்து அவர்களை “எங்கேயாவது போய்த்தப்பித்துக் கொள்ளுங்கள், மீண்டும்  எம்மிடம் இங்கே அகப்பட்டீர்களாயின் ஆண்டுக்கணக்கில் உள்ளுக்கு இருக்கவேண்டியிருக்கும் ஜாக்கிரதை” என்று எச்சரித்து விடுதலை செய்தார்கள்.

அங்கிருந்து ஒரு  பேருந்தில் 4 மணிநேரம் பயணித்து Voula வை  அடைந்தனர். அங்குசற்று ஓய்வெடுத்துக்கொண்டு  மீண்டுமொரு  பேருந்துப்பயணத்தில் Khalk ஊடாக ஏதென்ஸை அடைந்தனர்.

ஏதென்ஸில் பரிசித்தையும் சுதாஸையும் விட்டுத் தனியாகக் கமல்ராஜ் கழன்றுபோய்  யார்மூலமோ ஒரு  ஃப்ரான்ஸ் நாட்டுவிஸாவுள்ள கடவுச்சீட்டு ஒன்றை எடுப்பித்துக்கொண்டு தலையை மாற்றியோ மாற்றாமலோ   ஃப்ரான்ஸுக்குப் பறந்துவிட்டான்.

 தனித்துப்போன சுதாஸும் பரிசித்தும் மீண்டும் ஒரு எளியரக விடுதியில் தங்கினர். அங்கிருந்து டெலிகார்ட்டுகள் வாங்கி ஃப்ரான்ஸிலுள்ள நண்பர்களுக்குத்தம் நிலமையைச்சொல்லிப் போன் பண்ணியபோது ஏதென்ஸிலிருந்து ஆட்களை ஏனைய ஐரோப்பியநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் ஒரு சிங்களப்பெண் முகவரின் போன் இலக்கம் அவர்களுக்குத் தந்தனர். அந்த இலக்கத்துக்குத் தொடர்புகொண்டபோது  அப்பெண்ணே பேசினாள்.

 “தோழர்களே…இலங்கைத்தோழர்கள் நீங்கள் இப்படி வந்து நடுவழியில் அல்லாடுகிறீர்களே என்பதை நினைக்க மனசுக்குக்கஷ்டயிருக்கு. ஆனால் இப்போ நிலமைகள் எல்லாம் முன்னைப்போல இல்லை. எல்லாம் செம ரைற்…புத்தகங்களில் மாற்றங்கள் செய்வதையெல்லாம் இப்போ இலகுவாகக் கண்டுபிடிக்கிறார்கள், ஆனால் நம்பகமான சில ஆட்களைக்கொண்டுதான் காரில் இரகசியத்தடங்களில் உங்களைப் பரீஸுக்கோ சுவிஸுக்கோ கூட்டிச்செல்லவைக்கலாம்…ஆனால் அந்தவழிக்குத் தலைக்கு 2000 $ செலவாகும்” என்றாள். இவர்கள்  “நாங்கள் ஏற்கெனவே அலைஞ்சுலைஞ்சுவாறம், இத்தனை பணம் இன்னும் செலவழிக்கிற நிலமையிலும் நாங்கள் இல்லை”  எனவும் இவர்கள்மேல்  அனுதாபித்து   நான் உங்களுக்கு வேணுமின்னா ஒரு ஃபேவர் மட்டும் செய்யலாம்…சரி  தோழர்கள் இப்போ எங்கே தங்கியிருக்கிறீர்கள்.”

இவர்கள்  தங்களின்  ஹொட்டல்  விலாசத்தைச்சொல்லவும்

“இரண்டு மணிநேரம் கழித்து ஹொட்டலுக்கு வெளியே நில்லுங்கள், நான் வந்து உங்களைப் பார்த்து எல்லாம் நேர்ல சொல்றேன்” என்றுவிட்டுப் போனை அணைத்தாள்.

தந்த வாக்குறுதிப்படியே  இரண்டு மணிநேரத்தில் வந்தாள்.  வந்ததும்

“நான்தான் நிலானி” எனும் அறிமுகத்துடன் இருவருக்கும் கைலாகு தந்தாள். முப்பது அகவைகளைக் கடந்திருக்கக்கூடிய கௌரவமான அவளது உடையும், தோற்றமும், உடல்மொழியும், தோழர் தோழர் என்று அவர்களை விளித்துப்பேசியதும் அவள் மேல் இவர்களுக்கும்  ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தின.

“நீங்கள் இரண்டுபேரும் விரும்பினால் புறப்படும்வரையில் என் வீட்டிலேயே தங்கலாம், தேவையான பணத்தைத் தாமதமில்லாமல் எங்கிருந்தாவது  எடுப்பியுங்கள், என்னால என்னபண்ணமுடியுமோ அதை தோழர்களுக்கு நான் நல்லபடியாய்ச் செய்துதாறன்” எனவும் அவர்களுக்கும் அது நல்ல பேரமாகப் படவும், இருவரும் புறப்பட்டுப்போய் அவளுடன் தங்கலாயினர்.  ஒரு வாரம் வரையில் ஏதென்ஸில் நிலானியுடன் தங்கியிருந்த நேரத்தில் சந்தித்த வேறு தமிழர்கள் சிலரும் அவள் முன்னரும் ஏதோ ஒரு தடத்தில் ஆட்களை அனுப்பி அவர்கள் வெற்றிகரமாகப் போய்ச்சேர்ந்திருக்கிறார்களென  நம்பிக்கைச் சான்றிதழ்  நல்கினர்.

பெண் என்றால் அவள் எத்தனை மோசமானவளாக இருந்தாலும், அவளிடம் ஒரு தாய்மைக்குணமும் இருக்கும். தான் அழைத்துப்போகும் தோழர்ப்பசங்கள் காய்ந்துபோயிருக்கிறார்கள் என்பதை   உணர்ந்துகொண்டு வழியில் இருவருக்கும்    தானியங்கியில்  கோப்பி   அடித்துக்கொடுத்தாள்.

நகரின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில்  இரண்டு படுக்கையறைகள்கொண்ட எளிமையானதொரு வீட்டுக்கு இவர்களை நிலானி அழைத்துப்போனாள். அவ்வீட்டின் கதவில் நிலானி, கிரிஷாந், அனுரா என்று மூன்று பெயர்கள் இருந்தன.

வீட்டுக்கு வந்ததும் நிலானி நொடியில் உடையைமாற்றிக்கொண்டு  “ நீங்கள் குளிப்பதானால் குளிக்கலாம்” என்று குளியலறைக் காட்டிவிட்டுச் சமையலறைக்குள்  நுழைந்தவள் சாடின் (ரின்) மீனில் பிஞ்சுமிளகாய் வெங்காயம் தூக்கலாகச் சேர்த்தொரு குழம்பும், மிளகுக்குருணல் கலந்தொரு காரட் சம்பலும், சோறும் ஒரு மணிநேரத்தில் சமைத்துக்கொடுத்தாள். இத்தனை சீக்கிரம் சோற்றின் தரிசனத்தை ஏதென்ஸில் எதிர்பாராதிருந்த தோழர்களுக்கு கண்களில்  நீர்  வரப்பார்த்தது.

இரவானதும் தோழர்களில்  ஒருவரை அங்கிருந்த மென்னிருக்கையிலும் மற்றவரை விருந்தினருக்கான ஒரு மடக்குக்கட்டிலையும்  விரித்துத் தூங்கச்சொன்னாள்.

பரிசித்தும், சுதாஸும் தாங்கள் பாரிஸிலிருந்தும், ஜெர்மனியிலிருந்துந்தான் பணம் நண்பர்களிடமிருந்து வருவிக்கவேண்டும் என்று தெரிவித்தபோது   “நல்லதாய்ப்போச்சு உங்களைக் கடத்திப்போகும் Schlepper (இழுவைப் படகு)    முகவனும் ஃப்ரான்ஸிலிருந்துதான் வருவான் நீங்கள் அவனிடமே பணத்தைக் கொடுத்தாலும் சரிதான்” என்றாள். இவர்களுக்கும் அவளை நம்புவதைத் தவிர வேறுவழியிருக்கவில்லை.

பாரீஸில் நிலானி தெரிவித்த முகவனிடம் பணம் கைமாறப்பட்டது. ஒரு மாதமாகியும்     அவர்களை அழைத்துப்போக  யாரும் வருவதாயில்லை.

ஒரு இரவு  கோழியிறைச்சியும் பாலடை சேர்த்த மிளகுச்சுண்டக் குழம்புடனுமான (Sauce)  பாஸ்ட்டா இரவுச் சாப்பாட்டின்போது நிலானி சீரகத்தில் வடிக்கப்படும் Sambooca வை எல்லோருக்கும் பரிமாறினாள். அதைக் குடிப்பதில் ஒரு முறை இருக்கிறது. Sambooca வை சிறிய கிளாஸில் ஊற்றி நிரப்பிவிட்டு அதனுள் மூன்று / நான்கு வறுத்த கோப்பிவிதைகளைப் போட்டுவிட்டு மிதக்கும் அவ்விதைகளை சுவாலை ஒன்றினால் பற்றவைத்தாள். சுவாலை நீலமாய் வளர்ந்து ஒளிர்வதை நிறுத்தவும் எல்லோரும்  தூக்கிச் ‘சியேர்ஸ்………’ சொல்லிக்கொண்டு சுவைத்தார்கள். அன்று மிகையாகக் குடித்துவிட்ட  நிலானி தனக்கு ரம்புக்கண கிராமத்தில் பேரிளம்பருவத்திலேற்பட்ட சிலகாதல் அனுபவங்களை இவர்களுடன் மீட்டுஅசைபோடலானாள்.  தசைக்கான வேட்கையோடுமட்டும் வந்த காதல்கள், சம்பத்துகளே இல்லாத பராரியான தன்னோடு தொடரமுடியாதென இடையில் விட்டுச்சென்ற காதல்கள் என்றுஞ்சொல்ல ஆரம்பித்தாள்,

“அப்போது நாட்டில் சுமாரான வாழ்க்கையை நடத்தவேண்டின் குறைந்தது ஒரு வீடும், மாதாந்த வருமானமும், உடுதுணியும்,  கொஞ்சமாவது நகைகளும், சேமிப்பும் தேவைப்பட்டன. இப்போது எல்லாமும் உண்டு மனிதர்களைத்தான் காணவில்லை” என்று அவள் சொல்லிமுடிக்கையில்  எருதின் கண்களைப்போல்  ஈரலிப்பில் பளபளத்த அவளது கண்களை மேல் சொருகியபடி தன் பால்யகாலத்தில் சற்றுநேரம் திளைத்திருந்தாள். பின்  திடீரென ‘ வாழ்க்கை கொடூரமானது,  அதுதான் என்னையும் சவூதிவரையில்விரட்டிற்று…நானும் ஷேக் ஒருத்தனின் வளமனையில்  இரண்டு வருடங்கள் செமையாக மட்டையடித்தவள்தான்’ என்று தன் வாழ்க்கையின் கடினமான பகுதிகளையும் மேம்போக்காகச் சொன்னாள், பொதுவாக ஷேக்குகள்  தம் வளமனைகளைப் பராமரிப்புச் செய்யவென வைத்திருக்கும் இளம்பெண்களை இரவுகளில்  படுத்தும் அக்கப்பாடுகளை அறிந்தவர்களாதலால் அவள் சொல்லச்சொல்ல  பரிசித்தும் சுதாஸும் ஒருவரை ஒருவர் ஆயாசத்துடனும், பரிதாபத்துடனும் பார்த்துக்கொண்டனர்.  இதுபோன்ற  நெகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில்  இவர்கள் இலங்கையின் இனப்பிரச்சனைபற்றிப் பொதுவாகப் பேசிக்கொண்டாலும் எந்த சந்தர்ப்பத்திலும் சுதாஸின் இயக்க வரலாற்றை மட்டும் நிலானிக்குத் தெரியப்படுத்தவேயில்லை,  ஒருவேளை அவள் பயந்து  ‘நீங்கள் இனிமேல் வேறிடத்தில் தங்குங்கள்’ என்றுசொல்லி இவர்களுக்குத் தன்   ஜாகையை அடைத்தும் விடலாம்.

நிலானியின் சிறிய வீட்டில் வேறும் இரண்டு இளைஞர்கள்  வாழ்ந்தனர்.   அவர்களில் கிரிஷாந் மீன்பிடி றோலரில் உதவியாளாகப் பணிசெய்துகொண்டிருந்தான்,  வாரவிடுமுறைகளில் மட்டும் வீட்டுக்கு வருவான், அனுரா மரக்கறிகளும் பழங்களும் இறக்குமதிசெய்து  சில்லறை வியாபாரக் கடைகளுக்கு விநியோகம் செய்வதாகச் சொன்னான். அனுராவும் தினமும் வரமாட்டான், வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள்தான் அங்கே வருவான், வரும்போது தேவைக்கும் மிஞ்சிய அளவில் மரக்கறிகளும், பழங்களும் கொண்டுவந்து  சேர்ப்பான். கொடுதலை விருந்தாளிகள்போலத் தங்கிய இருவருக்கும்  அவளின்  மஞ்சத்திலும்  அவ்வப்போ  இடமிருந்தது. அவர்கள் எல்லோரும் தமக்குள் உரசல்கள் முறுகல்களின்றி நட்பாகவே இருந்தார்கள், கடைசிவரையிலும் அவர்களில் யார் அவளது புருஷன் என்றோ அல்லது எவருமே புருஷன் அல்லவென்றோ  இத்தோழர்களால் கணிக்க  முடியவில்லை. 

ஒருநாள் எவருடனோ சிங்களத்தில் போன்பேசிக்கொண்டிருந்த நிலானி “ எனக்கொரு குறையுமில்லை……….. இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு என்னை ஒரு இளவரசிமாதிரிக் கவனித்துக்கொள்கிறார்கள்…. நீயும் Twin Motor போட்டு ஓடிப்பார்த்தால்த்தான் அதன் Comfort தெரியும் போடீ” என்றவள் சுதாஸைக் கண்டதும்  விஷயத்தை கொழும்புவுக்கு பார்சல் அனுப்புவது பற்றியதாக மாற்றிக்கதைக்க ஆரம்பித்தாள். நிலானி எதுக்கு ஏதென்ஸில் தொங்கிக்கொண்டிருக்கிறாள் என்பதைத் தோழர்களாலும் ஊகிக்க முடியாமலிருந்தாலும்,    ஏதோவொரு விதத்தில் அவளும்    வாழ்வியலின் அகதிதான்   என்பது   மட்டும் புரிந்தது.  இருந்தும் தினமும் விகசித்த முகத்துடன்  ‘பயப்பிடாதேயுங்கோ தைரியமாயிருங்கோ,  எப்படியும் Schleppers   வந்து உங்களைக் கூட்டிப்போவாங்கள்’ என்று இவர்களைத்  தேற்றிக்கொண்டிருந்தாள்.

நாளாகவாகத் தோழர்களுக்கு நிலானி வைக்கும் மீன்டின் குழம்பு சவுத்துப்போய் நாக்குகள் மரக்க ஆரம்பித்தன.  நிலானியும் தோழர்களிடம்  ‘நீங்கள் உங்கள் இஷடத்துக்கு வேறேதாவது வாங்கிவந்து சமைப்பதனாலும் சமைத்துகொள்ளலாம்…எனக்கு ஆட்சேபனை இல்லை’ என்று சொல்லிவிட்டிருந்தாள். ஆனால் தோழர்களின் வல்லுவங்கள் (Purses) வித்தியாசமாக  வாங்கிச்சமைக்கவோ சாப்பிடவோ முடியாதபடி கனதியற்றிருந்தன.   நிலானியிடம் சாப்பாட்டுக்குத் தங்கியிருப்பது அவர்களின் சுயமரியாதைக்கு உவப்பல்லவாயினும் அவர்களுக்கு மாற்று  மார்க்கமுமிருக்கவில்லை.

ஏதென்ஸிலேயே அகதியாக விண்ணப்பித்தால் ஐ.நா வழங்கும் சமூகஉதவிப்பணம் கொஞ்சம் கிடைக்குமென்றாள் நிலானி. அவ்வாறான வேளைகளில் நிஜமாக இவர்களுக்காக அனுதாபப்டுகிறவளைப் போலவுமிருந்தாள்,  முற்றாகச் சந்தேகப்படவும் முடியவில்லை.  அவள் ஏமாற்றுப்பேர்வழியல்ல நல்லவள், Schleppers தான் ஏதோ பிரச்சனை பண்ணுறாங்கள்    என்றும்   சமாதானமாகினார்கள்.

நிலானியின் Schleppers யாரும் வருவதாகவில்லை. ஒதுங்கவொரு கூரையும் போசனமுந்தந்து ஆதரிப்பவளைத் தோழர்களாலுந்தான்  எப்படிக் கடியமுடியும்? மூன்றாவது மாதமும் ஏதென்ஸில் கழிந்து அவர்களது மொத்தப் பொறுமையும் ஆவியாகிவிட்டிருக்க    மாற்றுவழிகள்பற்றிச்    சிந்திக்கலாயினர்.

ஏதென்ஸில் அவ்வப்போ கப்பலில்வேலை, இல்லாதபோது சிறியளவில் ஹஷீஷ், கஞ்சாவன்ன  வணிகங்களோடு குப்பைகொட்டிக்கொண்டிருந்த மாந்தே, ரஹூஃப் என்கிற அல்லக்கைகளின் பரிச்சயமும் இப்போது தோழர்களுக்கு   ஏற்படலாயிற்று.  அவங்களெல்லாம் மினி மாஃபியாக்கள் அவர்களோடு அதிகம் பழகவேண்டாமென நிலானியும் எச்சரித்தாள்.  இருந்தும் அவர்களில் எவரோ ஏற்பாடுசெய்து கொடுத்தபடி மசடோனியாவுக்குப் கால்நடையாகப்போகவிருந்த சிறுகுழு ஒன்றுடன் சேர்ந்து  இவர்களும் புறப்பட்டார்கள்.  3 நாட்கள் நடந்தபின் மசடோனியாவின் எல்லைக்காவல்துறையினரிடம் வகையாகப் பிடிபடவும் அவர்கள் திரும்பவும் இவர்களை வண்டியிலேற்றி கிரேக்கத்தின் எல்லையில் கொண்டுவந்து இறக்கிவிட்டார்கள். அங்கே காத்திருந்தும், சுற்றித்திரிந்தும் சிலநாட்களைக் கழித்தபின்  இன்னொரு குழுவுடன் சேர்ந்து மீண்டும் வேறுவழியினூடாக மசடோனியாவினுள்  நுழைந்தனர். நடக்கையில் அடிக்கடி சுதாஸ் சிரித்துக்கொண்டுவருவதைக் கவனித்த பரிசித்து  “இப்போ எதுக்கு இளிக்கிறாய்” என்று கேட்டான். “ இல்லப்பா மஹா சக்கரவர்த்தி அலெக்ஷான்டரின் நாட்டினூடாக நடக்கின்றோமாம், அவனது பல்லாயிரம் குதிரைகளில் இரண்டு இருந்தால் நம் பயணத்துக்கு எத்தனை சௌகரியமாக இருக்கும் என நினைத்தேன், சிரிப்பு அதுவாய் வந்தது” என்றான்.  மேலும் .10 நாட்கள் மெல்லமெல்ல கால்நடையாகவே மெசடோனியாவின் 300 km தூரத்தையும்  நடந்து  நடந்து   சேர்பியாவை அடைந்தனர்.

இவர்கள் தேர்ந்துகொண்ட தரைவழிப்பாதையினூடாக  ஜெர்மனியின் எல்லையைத்தொட  2300 km  நீண்ட சேர்பியாவையும் கடக்கவேண்டும். அதையும் தாண்டிவிட்டால்   ஹங்கேரியில்   இன்னும் 200 km  தூரமும் இருந்தன.  

சேர்பியா  பொருளாதாரத்தில் வரட்சியான நாடு. உலகவங்கியின் வறுமைநிரலில்  70வது இடத்திலிருப்பது. இவர்கள் கடந்துவந்த வழிகளில் இவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கக்கூடிய  கடைகளோ, சிற்றுண்டிச்சாலைகளோ அதிகம் இருக்கவில்லை. வழியில் தோட்டங்களில் கிடைத்தகாய்கறிகளில் முடிந்தவற்றைப் பச்சையாக உண்டும் ஊருணிகள், வாய்க்கால்களில் இருந்த வெள்ளத்தைக்குடித்தும் உயிர்பிழைத்தனர். இவர்களைப்போலவே சேர்பியாவைக் குறுக்கறுத்து, விஸாவோ,  கடவுச்சீட்டுக்களோ இல்லாத சிரிய அகதிகளும், சில சிந்திய / றோமா  நாடோடிகளும் ஆஸ்திரியா, ஹங்கேரியாகிய நாடுகளை நோக்கிக் கால்நடையாகச் செல்வதுண்டு.  இந்நாடோடிகளுக்குப் புவிப்பந்தில் சொந்தமாக ஒரு நாடும் இல்லையாதால் அவர்களை ஐரோப்பிய நாடுகள் எதுவும் விரட்டப்படாது என்று ஐ.நா.சபையில் தனிச்சட்டமே உண்டு. அகதிகளைக் கைது செய்தால் அவர்கள் அங்கே தஞ்சம்கோருவார்கள், தஞ்சம்கோரும் அனைவரையும் வைத்துத்தாபரிக்கும் பொருண்மிய நிலையில் சேர்பியாவோ இல்லை, தாபரித்தாலும் ஐ.நாவின் அகதிகள் ஆணையம், ஐரோப்பியன் யூனியன் எதிர்பார்க்கும் தரத்துக்கு உண்டி உறையுள் கொடுத்துப் போஷிக்கவேண்டும். பரதேசிகளையும், நாடோடிகளையும், ஏதிலிகளையும் காவல்த்துறையாலோ  இராணுவத்தாலோ  குறுக்கீடுகள் செய்யாமல் அவர்களைத் தம்பாட்டுக்கு   நாட்டைக் கடந்துசெல்ல விட்டுவிடுவதே  சேர்பியாவுக்குச்   சிலாக்கியம்.

நடக்கத் தொடங்கிவிட்ட  தோழர்களுக்கு ஆரம்பித்தில் ஒரு நாளைக்கு 20 கி.மீட்டருக்கும்மேல் நடக்க முடியவில்லை. மூட்டுக்களில் வலியும் பாதங்களில் எரிவும் ஏற்பட்டன.  சேர்பியாவில் வீதிகளின்   அழுத்தமும் எல்லா இடங்களிலும்  ஒரேமாதிரி இருக்கவில்லை.  போருக்கு முன்னரான நம் தேசத்தின் வீதிகளை நினைவூட்டின பலபாட்டைகள். நெடுந்தூரம் போகும் வாகனங்களின் ஓய்விடங்களில் அமரக்கூடிய விதத்தில் வாங்குகளும், கழிப்பறை வசதிகளும், சிலவிடங்களில் சிற்றுண்டிக்கடைகளும் இருந்தன. அவ்வாறான ஒரு இடத்தில் ஓய்வாக அமர்ந்திருக்கும்போது இவர்களுக்கு  புல்லுக்குள்  18 செ.மீட்டர் நீளத்தில் ஒரு சமையலறைக்கத்தி இருப்பது தென்பட்டது. இவர்களுக்கும் முன்னர்வந்து அவ்விடத்தில் சமையல் செய்த யாரோ அதை மறந்துவிட்டுப் போயிருக்கலாம்.  எதற்கும் இருக்கட்டுமென்று சுதாஸ் அதைத்தன் முதுகுப்பையினுள்   வைத்துக்கொண்டான்.

நடைப்பயணம் தொடர்ந்தது, அடுத்த ஐந்தாறு கிலோ மீட்டர் கடந்திருப்பார்கள். ஒரு வயலில் விளைந்த சீனிக்கிழங்குகளை அறுவடை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களிடம் 2 கிழங்குகளைப் பெற்றுக்கொண்டு மேல் நடக்கவும் ஒரு பண்ணைக்கொட்டாரம்  வந்தது. அக்கொட்டாரத்தில் கோடைகாலத்தில் மாடுகளைக் காட்டுவார்கள். அதற்குள் இப்போது மாடுகள் எதுவும் இல்லாமலும் நல்ல சுத்தமாகவும் இருந்தது. இவர்களிடம் வட்டவடிவிலான   Danish butter cookies பிஸ்கெட் டின் ஒன்றிருந்தது, சீனிக்கிழங்கின் தோலைச்சீவி அதைத்துண்டுகளாக நறுக்கி அந்த டின்னினுள் போட்டு அவித்தார்கள். வள்ளிக்கிழங்கைப்போல கரணைகளோடிருந்த அக்கிழங்கின் அவியலோடு அன்றைய இரவுச்சாப்பாடு நிறைவுகண்டது. பெரு நகரங்களை இணைக்கும் சேர்பியாவின் வீதிகள் எதிலும் வீதிவிளக்குகளும் இருக்கவில்லையாதலால் அம்மாட்டுக் கொட்டாரத்தில் ஒருவாறு  இரவைக்கழித்துவிட்டு அதிகாலையிலே எழுந்து பொழுது புலரமுதலே நடக்கத்தொடங்கினார்கள்.

சேர்பியாவுக்குள்  நடக்க ஆரம்பித்ததும் வழிவழியே  அங்கங்கே சில பியேர்ஸ், ஆப்பிள், அப்பிறிகொஷ், செறி, பிளௌமன்  போன்ற பழத்தோட்டங்கள் தென்பட்டன. அவற்றைப்பறிக்காதே எனச்சொல்லவோ, இவர்களை விரட்டிவிடவோ யாரையும் காணவில்லை. பறித்து உண்டவைபோக அவர்களால் காவக்கூடிய அளவுக்கு  கனிகளைத் தம் முதுப்பைகளில் நிரப்பிக்கொண்டு நடந்தார்கள். அன்றுமாலை சீக்கிரம் வந்துவிட்டது. மரங்களுக்கப்பால் சூரியன் சரிந்து மறையத்தொடங்கினான். வானமும் முகில்கள் இல்லாமல் கருமைபட்டுமிருந்தது. ஒருசிறு மழை இறங்கினாலும் இறங்கலாம். இரவைக்கழிக்க கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஏதாவது தாவார விருட்சத்தைத்தேடித் தொடர்ந்து நடக்கையில் ஒரு சூரியகாந்தி இலைகளைப்போல பெரிய இலைகளாலான செடிகளைக்கொண்ட சிறிய ஆனால் அடர்த்தியான காடு ஒன்று வந்தது.  ஊரில் சாரணர் பயிற்சி முகாம்களில் செய்ததைப்போன்று கையில் எடுத்துவந்த துணியாலான பையைக் கத்தியினுதவியோடு கீலங்கீலமாகக் கிழித்து  அச்செடிகளின் அங்குரப்பகுதியை  ஒரு கூடாரமாக வளைத்துக்கட்டிவிட்டுத்  தரையில் தமது படுக்கைத்துணியை விரித்துத்தூங்கி  இரவைக்கழித்து உயிர்தரித்தனர்.  நாரைகளை விளித்துத் தூதுஅனுப்பலாம், ஆனால் யாருக்கு என்னதூது என்பதும் புரியவில்லை. குளிர்கையில் இன்னும் நாலு பாக்கெற்று சிகரெட்டுக்களை எடுத்துவந்திருக்கலாம் என்று சுதாஸ் நினைத்தான். பொழுது விடியவிடிய அப்பிரதேசத்தின் குளிரும் அதிகரிக்கத்தொடங்கியது, நடந்து ஓய்ந்த காற்தசைகள் கல்லாகக்கெட்டித்தன. சூடெழும்ப ஒருவர்காலை ஒருவர் தேய்த்துவிட்டுக்கொண்டனர். மேலும் தூங்க முடியவில்லை, எழுந்து நடப்பதைத்தவிர வேறு வழியில்லை, எழுந்து நடக்கையில் வழியில் ஒரு கண்மாயும் அதன் அடியில் ’கிளுக்’ ’கிளுக்’ கென்று தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பதைக்கண்டதும் அதிலேயே பற்களைத் துலக்கி முகங்களைக் கழுவிக்கொண்டு நடக்கலாயினர்.  ஐந்தாறு கி.மீட்டர் கடந்திருப்பார்கள்

இவர்களின்  பின்னாலிருந்து  ஒரு சிற்றுந்து (Truck) வந்தது.  இவர்கள் சும்மாவொரு நப்பாசையில் கையைக்காட்டி அதை மறித்துப் பார்த்தனர். வண்டி அவர்களையும் 100 மீட்டர் அப்பால் தாண்டித் தொலைவாகப்போய் நின்றது. ஒருவேளை எல்லைக்காவற்படையினர்தான் குடிசார் உடையில் வருகிறார்களோ என்கிற பயம் லேசாகவரவும் சந்தேகத்துடன் இவர்கள் நிறுத்தப்பட்டிருந்த அவ்வண்டியைத் தம்பாட்டுக்குக் கடந்துபோனார்கள். கடைப்பார்வையை அதற்குள்வீசியபோது அவ்வுந்தின்  கூண்டினுள் 25 வயது மதிக்கக்கூடிய ஒரு இளைஞனும், மாலை வயதாகிவிட்ட  இன்னொருவரும் இருந்து இவர்களைக் காட்டி தமக்குள் ஏதோ தர்க்கித்துக்கொண்டிருக்கவும், மெல்ல அவர்களை நெருங்கி  “ Bonjour (வணக்கம்) நாங்கள் ஹங்கேரியின் திசையில் போய்க்கொண்டிருக்கிறோம், உங்களால் முடிந்தளவு தூரம் எங்களையும் இட்டுச்செல்லமுடியுமா” என்று விநயமாகக்கேட்டார்கள். இவர்களின் தோற்றத்தைப் பார்த்துவிட்டு இருவரும் ஒரு முடிவுக்கு வந்தவர்களாக அவர்களை   வண்டியினுள்  ஏற்றிக்கொண்டனர். 8 மணிநேர ஓட்டத்தின் பின்   Novi Sad எனும் இடத்தில் தாம் இனி வேறுதிசையில் போவதாகச்சொல்லி  அவர்களை இறக்கிவிட்டுச் சென்றனர்.

சிற்றுந்துக்காரரின் சகாயத்தில் நீண்ட சேர்பியாவின்  பாதித்தூரத்தைக் கடந்தாயிற்று.  பகல்பொழுது கழிந்துவிட மீண்டும் மாலை வந்தது. முதுகுப்பையிலிருந்த பழங்களை இயலுமானவரை சாப்பிட்டுவிட்டு எம்மைக் கடந்து சென்றுகொண்டிருந்த ஒவ்வொரு வாகனத்தையும் அபயம் அருள்வார்களென்ற நம்பிக்கையுடன் திரும்பித்திரும்பி பார்த்தபடி மெல்ல நடந்துகொண்டிருந்தவர்களை எவனாவது நிறுத்தவோ, ’யாரடா நீங்கள்,’ ’எங்கடா போகிறீர்கள்’ என்று அக்கறைப்படவோ இல்லை.

இருபுறமும் குளிர்வலயக் காடுகளிருந்த சாலையில் மரங்கள் அடர்த்திகுறைந்த வெட்டையொன்று வந்தது. அதன் கிழக்குப்பக்க எல்லைபோல் உயரமான செடிகள் வரிசையாக வளர்ந்திருந்த இடத்தையொட்டி யாரோ போட்டுவிட்ட பந்தலைப்போலவும் நம்மவூர் வைக்கோல் சூடுபோலவும் ஒரு குவியல் தெரிந்தது. நெருங்கிப்போய்ப் பார்த்தார்கள். தொங்கிக்கொண்டிருந்த  கொடிகளை விலக்கித் தலையை நுகைச்சு இருட்டுள் விட்டால் உள்ளே என்ன இருக்கென்றே தெரியவில்லை.

சுதாஸ் துணிச்சலாக ஒருகாலை உள்ளேவைத்து  புகுரமுயலுகையில் பரிசித்து “ உள்ள பாம்பு பூரான் கிடந்து கொத்தினாலும்…விசர்வேலை பாக்காதை, வெளியவா…” என்று அலறவும் அதற்குள்ளிருந்து ஏழெட்டு முயல்கள் வெளியே பாய்ந்து ஓடின.

“…ம் ம் ம் நாங்கள் அதுகளின் இடத்தை அபகரித்தால், அதுகளும் பாவம் இராவைக்கு அந்தரிச்சுப்போடும்…. ” என்றுவிட்டுத்தொடர்ந்து நடந்தனர். சாலையிலிருந்த அறிவிப்புப்பலகையொன்று  இன்னும் 1500 மீட்டர் தொலைவில் வாகனங்களுக்கான தரிப்பிடமொன்று வருவதாக அறிவித்தது.

 அவ்விடத்தின்  தரிப்பிடத்தில் கியோஸ்க் வகையிலான கடைகளோ, அருந்தகமோ எதுவும் இருக்கவில்லை. நெடுந்தூரம் பயணிக்கும் பாரவூர்திகள் தங்கி ஓய்வெடுத்துச்செல்லும் அவ்விடத்திலிருந்த    ஆசனங்களில் இவர்கள்  ஓய்வாக அமர்ந்திருந்தபோது  தனது  பாரவுந்தை ஒரு சிற்றுந்தைப்போல  ஒடித்துமடக்கி லாவகமாகத் திருப்பி அதற்கான தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு ஒரு உதைபந்தாட்டாக்காரரைப்போல கட்டைக்களிசானும், டீ-ஷேர்ட்டும் அணிந்திருந்த  சாரதி தன் இருக்கையிலிருந்து கதவைத்திறந்துகொண்டு கீழே குதித்தாள். குதித்தவள்  ஐந்து நிமிஷங்கள்  நின்றநிலையில் நிலை மெதுவோட்டம் (ஜொக்கிங்) செய்தாள். பின் சாவகாசமாக ” Bonjour ” சொல்லியபடி  இவர்கள் அருகிலிருந்த வாங்கில் வந்தமர்ந்து  சிகரெட் ஒன்றை எடுத்து அதை அனுபவித்துப் புகைத்தவள், ஏதோ நினைத்துக்கொண்டவள்போல அப் பாக்கெற்றை இவர்களுக்கும் நீட்டி  ‘வேண்டுமா’ என்று அபிநயித்தாள். சுதாஸ் மகிழ்ச்சியுடன் ஒன்றை வாங்கிப்புகைத்தான். புகை நெஞ்சுக்குள் இறங்கியதும் அவனது மூளை விவேகத்துடன்  இயங்கத்தொடங்கவும் அப்பாரவுந்தின் இலக்கத் தகட்டினை ஆராய்ந்தான். அது ஹங்கேரியில் பதிவுசெய்ததாயிருக்கவும்  முகத்தில் ஒரு புன்னகை சேர்த்துக்கொண்டு அவளிடம்  “Madam………. Can you speak English?” என்று கேட்டான்.

“Very  little” என்று சாரதி புன்னகைக்கவும்

“Madam….. we go to Almania, (ஜெர்மனி) Could you please take us with you?”

சற்று நேரம் யோசித்தவள் “ Okay………Guys,  I am not going to Almania…… but I can take you as far as I can” என்றுவிட்டு பாரவுந்தின் கூண்டினுள்  இவர்களை  ஏற்றிக்கூட்டிவந்தாள். அடிக்கடி போய்வரும் வாகனமாதலால் ஹங்கேரியின் நுழைவுஎல்லையில் சோதனைகளோ, வேறெந்தக் கக்கிசங்களோ இருக்கவில்லை. 10 மணிநேரவோட்டத்தில் ஓய்வுக்காக நிறுத்திய இடங்களில் எல்லாம் கோப்பியும் சிற்றுண்டியும் அவர்களுக்கு வாங்கிக்கொடுத்தாள். “இப்படிச் சரளமாக ஆங்கிலம் பேசுகிறீர்களே…..” என்று அவர்கள் வியந்தபோது தான் 3 x அரையாண்டுகள் Warsaw வில் ஆங்கிலம் படித்ததாகச்சொன்னாள்.  கடைசியாக ஹங்கேரியின் Budapest ஐ அண்மிக்கவும் பாரவுந்துகள் சந்திக்கும் பிரதான ஓய்விடமொன்றில் நிறுத்திவிட்டு  இவர்களுக்குக் கோப்பியும் முந்திரிவத்தல்சேர்த்த பண்ணும் வாங்கித்தந்தாள். இவர்கள்  அவளது பேருதவிக்குப்  பகரமாக 100 $ பணத்தை எடுத்து நீட்டவும் வாங்க மறுத்தாள்.   “இனி Almania போகும் பேருந்துகள் எதிலாவது முயன்று பாருங்கள், ஜெர்மனிக்கு இன்னும் 600 km இக்குள்ளாகத்தான் இருக்கும்.  நல் வாய்ப்புக்கள் மேலும் அமையட்டும்” என்று வாழ்த்தி விடைபெற்றாள். என்ன நாங்களா இவ்வளவு தூரத்தைப் பயணிக்கிறோம்? நடப்பதெல்லாம் ஏதோ கனவில் நிகழ்வதைப் போலிருந்தன அவர்களுக்கு.

அவ்விடத்தில் நின்று ஜெர்மனி செல்லும் பாரவுந்தின் சாரதிகள் பலரிடமும் தம்மையும் கூட்டிச்செல்லும்படி கேட்டுப்பார்த்தனர், எவரும் சம்மதிக்கவில்லை. சிலர் பேசவே விரும்பவில்லை. போலந்துகாரன்போலத் தோன்றிய ஒருவன் மட்டும்   “இடர்கழி மிகுந்த சமாச்சாரம் இது ……… ஆளுக்கு 500 € இயூரோ  தருவீர்களாயின் அதுபற்றிச் சிந்திக்கலாம்” என்றான் கறாராக அவர்கள் கண்களை  நோக்காமலே.   அவ்விடத்திலும் அரைநாள் கழிந்தது.

Budapest இன் புறநகரத்தில் நின்று இனி ஒரு பிரயோசனமும் இல்லை. நகரத்துட் சென்றாலாவது மேற்கொண்டு என்னசெய்வதென்று யாரையும் தொடர்புகொண்டு ஆலாசனைகள் கேட்கலாம். இருவரினதும் Sneaker சப்பாத்துகளும்  பாதங்கள் தேய்ந்ததோடு மேற்பாதம் மடியுமிடத்தில் மடிந்து மடிந்து வெடித்துச் சிரிக்கத்தொடங்கியிருந்தன. இனி ஒரு உள்ளாடை வாங்குவதானாலும் அது ஜெர்மனியில்த்தான் என இருவரும் உள்ளூர மானசீகமாக பிரதிக்னை எடுத்திருந்தவர்கள் நகரத்தைநோக்கி நடக்கலாயினர். எங்கள் ஊர்களிலாயின் நாம் மிதியுந்தில் செல்லும்போது ஒருவர் வீதியில் தனியாக நடந்துபோய்க்கொண்டிருந்தால் நிறுத்தி அவரை விசாரிப்போம், முடிந்தால் சிறிது தூரத்துக்காவது அவரையும் ஏற்றிமிதித்துக்கொண்டு செல்வோமல்லவா?  இங்கே சாலையில் நிமிடத்துக்கு 100 வண்டிகள் ‘ஸ்க்’ ‘ஸ்க்’ என்று அவர்களை விலத்திக்கொண்டு தம்பாட்டுக்கு முன்னேறிச் சென்றுகொண்டிருந்தன, இருந்தும் எவனுக்காவது எவன் நடக்கிறான், எவன் விந்திறான், எவன் தவழுகிறான் என்கிற கவலைகள் இல்லை. Budapest இல் மலிவான வாடகையில் இரண்டுநாட்கள் Caritas அமைப்பின் விடுதியொன்றில் தங்கமுடிந்தது. அங்கிருந்தும் வெளியேறி ஒருவாரம்  பல இடங்களிலும் தங்கியொரு விருந்தினர் விடுதியொன்றில்  அறைக்காகப் பதிந்துவிட்டுக்  காத்திருந்தபோது  காவல்த்துறையினர் வந்து ஏதோ கிறிமினல் குற்றவாளிகளைப்போல அவர்களின் கையிலும் கழுத்திலும் கம்பிவளையங்களை   மாட்டிக்கூட்டிச்சென்றனர்.

Budapest இல் தமிழ் மொழிபெயர்ப்பாளர் எவரும் கிடையாததில் ஒரு அரபு மொழிபெயர்ப்பாளருடன் ஆங்கிலத்திலும் அரபிலும் சமாளித்தனர்.  ‘நீங்கள் அரசிடம் அரசியல்தஞ்சத்துக்கு விண்ணப்பிக்கலாம், அல்லது அடுத்த விமானத்தில் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்படுவீர்கள்’ என்று அவர்களைப்  பயங்காட்டினான் மொழிபெயர்ப்புக்கு வந்திருந்த அரபுக்காரன். அங்கே அரசியல் தஞ்சம் விண்ணபித்தபின்னும் காரணம் சொல்லாமல் 5 மாதங்கள் திறந்த வெளிச்சிறையில் வைக்கப்பட்டனர். அதொரு வித்தியாசமான சிறைச்சாலை. அங்கிருக்கும் கைதிகளுக்கு வெளியில்  சென்றுவர அனுமதி இருந்தது,  ஆனால் இவர்களுக்கு எங்கேபோய், யாரைச்சந்திப்பது என்பது மட்டும் தெரியவில்லை. இவர்களால் துருக்கியிலிருந்தும், கிறீஸிலிருந்தும் தொடர்புகொள்ள வாய்ப்பிருந்ததைப்போல அங்கிருந்து ஃப்ரான்ஸில், ஜெர்மனியில் இருக்கும் உறவுகள் நட்புக்கள் எவரையும் தொடர்புகொள்ளவோ அவர்களுக்கு   ‘உங்களுக்கு அருகாகத்தான் ஒரு நாட்டில் சிறையிலிருக்கிறோம்’ என்று தெரிவிக்கவோ முடியவில்லை.

இவர்களைப்போல் அச்சிறையில் இருந்தவர்களில் ஒரு பங்களாதேஷ்காரரின் ஏற்பாட்டில் ஒரு இரவில் தலைக்கு 100 € இயூரோ கொடுத்து சிற்றுந்தொன்றில்  45 பேரை அடைத்து இரவிரவாக வயல்காடுகளுக்கு டிராக்டர் / அறுவடை வண்டிகள் போய்வருவதற்காக  அமைக்கப்பட்டிருந்த  கரடுமுரடான பாதைகளில் ஐந்தாறு மணித்தியாலங்கள் ஓடி ஜெர்மனிக்குள் கொண்டுவந்து இறக்கிவிடப்பட்டனர். (15. 07.2016)

அதிவேக விரைவுச்சாலையிலிருந்து  (Autobahn) மாநகரச்சாலை (Bundesbahn) கிளைக்கும் ஒரு இடத்தில் (Ausfahrt / Exit / Sortie)  ஜனசஞ்சாரமற்றதொரு காட்டுப்பிரதேசத்தில்  இவர்களை இறக்கிவிட்ட சிற்றுந்து கணமும் தாமதிக்காமல் திரும்பிப்பறந்தது.

ஜெர்மனிக்குள் காலடி எடுத்துவைத்ததும் போர்மேகங்களும், பொலீஸ் துரத்தல்களும் இல்லாத ஒரு தேசத்தில் அவர்களால் பாதங்களைப் பரப்பிவைத்து நின்று நிம்மதியாக மூச்சை  ஆழமாக இழுத்துவிடமுடிந்தது.  ஒரு வகையிலான   சுதந்திரக்காற்று  அது!

இவர்களுக்கு இது எந்த இடம், இனி எங்கே எந்நகரத்தின் திசையில் செல்லவேண்டும் என்பதெல்லாம் தெரியவில்லை. நடைமேடை இல்லாத விரைவுச்சாலையோரமாக நடக்கப்படாது என்கிற விபரமே தெரியாமல் நடக்கத்தொடங்கினர். அவ்வீதியால் சென்ற வாகனம் ஏதோ இவர்களின் பாதயாத்திரைபற்றிக் காவல்த்துறைக்கு அறிவித்திருக்கவேண்டும். அரைமணிநேரத்துக்குள்ளாக இரண்டு பேருந்துகளில் காவல்துறையினர் வந்து அனைவரையும் அள்ளிச்சென்றனர். இவர்களை ஒரு காவல்நிலையத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனி படம்பிடித்து, விரல் அடையாளங்களையும் பதிவுசெய்தபின், ஒவ்வொருவருக்கும் 2 வாரவதிவிட அனுமதிவழங்கி அனைவரையும் பேருந்துகளிலேற்றி Schwalbach என்னுமிடத்திலுள்ள அகதிகள் முகாமில் கொண்டுபோய்ச்சேர்த்தனர். அது ஜெர்மன் அரசின் Karlsruhe விலுள்ள சமூகநீதி & மனித உரிமைகளுக்கான தீர்ப்பாயத்தால் நேரடியாகக் கண்காணிக்கப்படும் அகதிகள் முகாம்,  ஆதலால் கவனிப்புகள் பிரமாதமாக இருந்தன.  மதியம் 11:00 மணியளவில் அனைவருக்கும் பாணும் (ரொட்டி) தேநீரும் வெண்ணெய் / பாற்கட்டிகளும், ஜாமும் பழங்களும் தாராளமாக வழங்கப்பட்டன. உடனே அனைவருக்கும் உணவுஅட்டையும்  வழங்கப்பட்டது. அதில் இவர்கள் தமக்கான உணவுகளைத் தாமே தேர்வுசெய்ய வகை செய்யப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு மணிநேரத்தில் அனைவரையும் நீண்ட உணவுக்கூடத்தினுள் அழைத்துப்போய் மதிய உணவாக குலாஷ் சூப்பும், அவித்த பச்சைப்பட்டாணியும்,  காய்கறிகளும்,    முட்டைகளும்,  கெட்டித்தயிரும்,  வழங்கப்பட்டன.

20 வரையிலான இலங்கையருட்பட உலகவரைபடத்திலுள்ள அனைத்துத் தேசத்திலிருந்தும் அங்கே 300 வரையிலான அகதிகள் குடும்பங்களாகவும் , தனியனாகவும் இருந்தனர். ‘ஓ………… ஏதிலிகள் நாம் மட்டுமல்ல இன்னும் இருக்கிறார்கள் எம் மக்கள் குழுமத்துக்கு பலம் சேர்க்க’ என்றொரு தெம்பும் மனதில் பிறந்தது. எல்லோருக்கும் வசதியான அறைகளும் கட்டில்களும் அன்றே வழங்கப்பட்டன.  அறையில்போய் அமர்ந்ததும் இருவரும் சாவகாசமாக ஊருக்கு   இலிகிதங்கள்  எழுதி அஞ்சல்  செய்தனர்.

Schwalbach அகதிகள் முகாமும் ஒரு வகையிலான திறந்தவெளி முகாம்தான், அவர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளிருப்பவர்கள் வெளியிலும், வெளியிலிருப்பவர்கள் வந்து உள்ளே இருப்பவர்களையும் பார்த்துச்செல்லவும் அனுமதிக்கப்படுவர்.  அகதிகளின் கைச்செலவுக்கு அவர்களுக்குப் பிரதிவாரமும் 25 € இயூரோ தரப்பட்டது.

Karlsruhe இலிருந்து நாலைந்து அதிகாரிகள்  தினமும்வந்து புதுவரவாளர்களாகிய அவர்களை மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் விசாரித்தனர். பரிசித்திடமும்  சுதாஸிடமும் விசாரித்து புறப்பட்டதிலிருந்து இற்றைவரையுள்ள முழுக்கதையையுமாக அவர்கள் சொன்னவற்றைப்  பக்கம்பக்கமாக எழுதிக்கொண்டுபோனார்கள்.

தோழர்களின்  Schwalbach முகாம் வாழ்க்கை  மூன்று மாதங்களே தொடர்ந்தன.

அங்கிருந்தும் இவர்களோடு 15 / 20 பேரைச் சேர்த்து  Karlsruhe விலுள்ள வேறொரு  முகாமுக்குச்செல்லும்படி  ஒரு மாத தற்காலிக விஸாவும் தொடரிக்கான பயணச்சீட்டுந்தந்து அனுப்பினார்கள். அம்முகாமில் ஸ்ரீலங்காகாரர்களை தாவரபோஷணிகளென நினைத்து அவர்களை மட்டும் பொதுச்சமையலறையில் தம்பாட்டுக்குச் சமைத்துக்கொள்ள அனுமதித்தனர். அவர்களை மாலையில் கிரிகெட் விளையாட மன்னாரைச்சேர்ந்த பாஸ்டர் ஒருவர்வந்து  வெளியே கூட்டிச்செல்வார்.

அங்குவாழ்ந்த காலத்தில் அறைகளைத் துப்புரவாக்குதல். படுக்கைகளுக்கு புது/சலவை விரிப்புக்கள் விரித்தல், இடர்க்காப்பு சேவை (செகியூரிட்டி) , பார்வையாளர்கள் வருவதைக் கண்காணித்தல், உணவு விநியோகவிடத்தில் உண்டாகும் அடிதடிகளைச் சமரசம் பண்ணுதல் போன்ற சோஷியல் வேலைகளைச் செய்தனர், அதற்காகத் தனியாகச்சம்பளம் தந்தார்கள். அதையே சேமித்து அவர்களுக்கு கிறீஸுக்கும், குர்திஸ்தானுக்கும் பணம் அனுப்பிய உறவுகளின் கடன்களை அடைத்தனர். நிலானிக்கும் போன்பேசி அவளின் சுகம் விசாரித்தார்கள். அவளிடம் கொடுத்த இயூரோ பற்றி எதுவும்பேசி  மனதைப்புண்படுத்த விரும்பவில்லை. அம்முகாமிலும் 6 மாத வாழ்க்கை கழிந்தது.   அங்கிருந்தபோது நண்பர்கள் மூலம் வேறு ஜெர்மன் தமிழர்களின்  தொடர்புகளும்  ஊடாட்டமும்  நட்பும் அதிகரித்தன.

மாதங்கள் செல்ல முகாமிலிருக்கும்போதே 2017 – 2019 சுதாஸுக்கு ஒரு ஜெர்மன் உணவகத்திலும், பரிசித்துக்கு செய்திப்பத்திரிகை விநியோகிக்கும் வேலையும் கிடைத்துவிட இருவருமாக  Rosenheim எனுமிடத்தில் குறைவான வாடகையில் ஒரு வீட்டை வாடகைக்கு  எடுத்துக்குடியேறி அதில்   வதியலாயினர்.

– தொடரும்…

இக்கதை 2021 பேசும் புதியசக்தி சஞ்சிகை எழுத்தாளர் ‘ராஜகுரு’ நினைவாக நடத்திய சிறுகதைபோட்டியில் முதாலாவதாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *