ஒரு பாதையின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 2,841 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இன்றைய மாலைப் பொழுது எங்கள் எல்லோ ருக்கும் ஒரு இனிய மாலைப் பொழுதுதான். வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ மாலைப் பொழுதுகளை நாம் சந்தித்துவிட்டோம்; இனி மேலும் சந்திப்போம். கடந்து போன எத்தனையோ மாலைப் பொழுதுகள் உங்கள் மனதில் இனிய ஞாபகங்களைக் கிளர்த்தலாம். ஏதோ வொரு மாலைப்பொழுதில் உங்களுக்கு திருமணம் நடந்திருக்கலாம். ஏதோவொரு மாலைப்பொழுதில் நீங்கள் உங்கள் மனங்கவர்ந்தவரை முதன் முதலில் சந்தித்திருக்கலாம். எப்போதோ ஒரு மாலைப்பொழுதில் உங்கள் முதலாவது மகனை நீங்கள் பிரசவித்து இருக்கலாம்.”

“எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது. இன்றைக்கு இருபத் தியேழு வருடங்களுக்கு முந்தி, வளர்பிறைப் பருவத்து ஒரு மாலைப் பொழுதில் தான் அவன் பிறந்தான். எனது தோட்டத்தில் உழுது கொண்டிருந்த அவன் தந்தைக்கு அவன் பிறந்த செய்தியை யாரோ கொண்டு வந்தார்கள். முகமெல்லாம் பல்லாக என் முன்னால் வந்த அவன் தந்தை ‘நயினார் எனக்கு மகன் பிறந்திருக்கிறான். நான் வீட்டுக்கு போகவேணும்’ என்று சொன்னது எனக்கு நல்ல ஞாபகமாகத்தான் இருக்கிறது. ‘மகன் பிறந்தால் என்னடா , நீயே போய் மருத்துவம் பார்க்கப் போறாய்?; செய்த வேலையைச் செய்து முடித்துப் போட்டுப் போடா’ என்று சொன்னதும் ஞாபகமிருக்கிறது. அதைக் கேட்ட அவன் மகிழ்ச்சி யெல்லாம் மறைய அவன் முகம் கறுத்திருண்டதுவும் ஞாபக மிருக்கிறது. அதைப் பார்க்க சகிக்காத நான் ‘போடா போ’ என்று அவனை அனுப்பி வைத்ததும் ஞாபகமிருக்கிறது.”

“இப்போது எனக்கு அறுபது வயது. தலை நரைத்து விட்டது. குரல் தழுதழுத்து விட்டது. மூப்பின் அனுபவ ரேகைகள் என்னைப் பதப்படுத்திவிட்டன. மனிதனைப்பற்றி, அவனது ஆசைகளைப்பற்றி, நல்ல வாழ்க்கை பற்றிய அவனது இலட்சியங்களைப் பற்றி நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அந்த நாட்களிலெல்லாம் நான் இப்படிப் பண்பட்டிருந்தது கிடையாது. ஏராளமான சொத்துக்களின் சுகபோக மிதப்பில் ஒரு கௌரவமான பிரபுபோல பயமறியாத இளங்கன்றாகத் துள்ளித் திரிந்த அந்த இளமை நாட்கள்… வீணே கழிந்துவிட்ட அந்த நாட்களை நினைத்து இப்போது மனவருத்தப்படுகிறேன். அப்போது நான் எத்தனை எத்தனை கூத்துகள் ஆடினேன் : எத்தனை எத்தனை அநியாயங்கள் செய்தேன்; எத்தனை பேரின் வாழ்வைச் சிதைத்திருக்கிறேன்.”

“இந்த இனிய நேரத்தில் என்னைப் பற்றிய அவதூறுகளை நானே சொல்வது உங்களுக்கு வினோதமாகப் படலாம். ஆனால் நான் அதையிட்டு கொஞ்சமும் வெட்கப்படவில்லை மாறாக இந்தச் சந்தர்ப்பத்தில் அவற்றைக் கூறுவது பொருத்தமானது என்றுதான் நினைக்கிறேன். உங்களில் பலர் படித்தவர்கள்; நாகரிகமான உத்தியோகம் பார்ப்பவர்கள், பெரிய பெரிய மனிதப் போர்வைகளில் மறைந்து கிடக்கும் கபடங்களையும், வஞ்சகங்களையும், தன்னலங்களையும் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் ; உங்களில் பலர் வெளுத்ததெல்லாம் பாலென்று நினைக்கும் அப்பாவிகள் – உழைப்பாளிகள்; உங்களில் பலர் வாழ்க்கையோடு போராடிப் போராடி உரம் பெற்றவர்கள். நீங்ளெல்லாம் ஒரு கறைபடிந்த வாழ்க்கை வாழ்ந்த மனிதன். எப்படிப் புனிதப்படுத்தப்பட்டான் என்பதை அறிவது நல்லதுதான். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் அவற்றையெல்லாம் சொல்லி உங்கள் மனத்தைச் சோர்வடையச் செய்ய நான் விரும்பவில்லை.”

“அன்றும் ஒரு மாலைப் பொழுது தான். அவன் என்னிடம் வந்தான். அன்று சனிக்கிழமையாக இருக்கவேண்டும். எண்ணெய் தேய்த்துத் தோய்ந்திருந்தேன். மதுபானம் அருந்திச் சாப்பிட்டுவிட்டு தூங்கி விழித்திருந்தேன். ஏதோ வொரு அலுப்பு. கருக்கல் பொழுது. முற்றத்தில் சாய்மனைக் கதிரையைப் போட்டு கிழக்கே வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். யார்மேலேயோ வஞ்சம் தீர்த்து. கருவறுத்து குடியெழுப்புதற்கான திட்டம் தீட்டிக் கொண்டிருந்தேன்”.

“அப்போதுதான் அவன் என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்தான். சைக்கிளை முற்றத்து முல்லைப்பந்தற்காலில் சாத்திவிட்டு என்னருகில் வந்து நின்றான் அவன். வெள்ளை வேட்டி கட்டியிருந்தான்; வெள்ளைச் சேட்டுப் போட்டிருந்தான் ; அரும்பு மீசை விட்டிருந்தான். முகத்தில் ஒரு சாந்த பாவம்; எவரையும் கவரும் புன்சிரிப்பு”.

“நீங்களெல்லாம் அவனை நன்கு அறிவீர்கள். நான் அவனைப் பற்றி இங்கு வர்ணிக்கத்தேவையில்லைத்தான். ஆனால் குடிவெறி அடங்கிக் கொண்டிருந்த ஒரு மயக்க நிலையில் – மாலை நேரத்தில் அவனை முதன் முதலில் சந்தித்ததை என்னால் மறக்க முடியாது, அதற்கு முன் பல பொழுதுகளில் அவனை நான் கண்டிருந்தாலும் அன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் அன்றைய சந்திப்பின்போதுதான் நான் அவனுடன் முதன் முதலில் கதைத்தேன்; அன்றைய சந்திப்பில்தான் நான் அவனால் – அவன் கொள்கைகளால் கவரப்பட்டேன். அன்றைய சந்திப்பின் பின்தான் நான் மனிதனாகத் தொடங்கினேன்.”

“நான் திரும்பத் திரும்ப என்னைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் எல்லார் மனத்திலும் அவனது நினைவுகள் பொங்கிப் பிரவகிக்கும் போது நானும் அவனோடு தொடர்புடைய எனது நினைவுகளைச் சொல்வது தவிர்க்க முடியாதது என்று நினைக்கிறேன். இந்த இனிய நேரத்தில் அது பொருத்தமானதுவும், ஒருவகையில் அவனுக்குச் செய்யும் அஞ்சலியுமாகுமென்றும் நினைக்கிறேன்.”

“அந்த மாலையில் அவன் என்னைச் சந்தித்தபோது வணக்கம்’ என்று சொல்லிப் பேச ஆரம்பித்தான். நான் பதிலுக்கு ‘வணக்கம்’ சொல்லவில்லை. அவனை உட்காரக் கூடச் சொல்லவில்லை. எனக்கு அப்போது ஒருவித திமிர். ஊரிலுள்ள சங்கங்களெல்லாவற்றுக்கும் நான்தான் கௌரவத் தலைவர். அப்போதைய சூழலில் அவனைப் பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் எனக்கு விரும்பத் தக்கவையாக இருக்கவில்லை. நான் அவனை வெறுப்புடன் பார்த்தேன்.”

அவன் அவையொன்றையும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மாறாத, அதே புன்னகையுடன் சொன்னான். “ஐயாவுடன் நான் சில விடயங்களைப் பற்றிப்பேசவேணும்.”

“அந்தக் காலத்தில் தான் ஊரின் வட அந்தத்திலிருந்து கிராமத்தை ஊடறுத்து, தெற்கே பிரதான வீதியை வந்தடையும் இந்த வீதியைப் பற்றிய திட்டங்களை அவன் தீட்டியிருப்பான் என்று நினைக்கிறேன். நான் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருக்க அவன் சொல்லத் தொடங்கினான். ஆரம்பத்திலிருந்து முடிவுவரை அங்கமங்கமாக விஸ்தாரமாகவே சொன்னான். மனத்திரையில் வரைந்த அந்த வீதியில் நடமாடி நடமாடி அனுபவித்தது போன்றதோர் மயக்க நிலையில் அவன் சொல்லிக்கொண்டே போனான்.”

“இதைச் சொல்லும் போது எனக்குத் துக்கம் நெஞ்சை அடைக்கிறது. நீங்களும் கவலைப்படுவதை உங்கள் முகங்கள் எனக்குக் காட்டுகின்றன. உங்களில் யாரிடமோ இருந்து எழுந்த கேவல் சத்தம் எனக்குக் கேட்கிறது. உங்களில் பலர் கண்களைத் துடைத்துக் கொள்கிறீர்கள். இந்த மாலைப் பொழுதில் அவன் நினைவுகள் உங்களுக்குத் துக்கத்தைத் தந்தாலும் அவனின் கனவொன்று நனவாகி விட்டதே யென்று நீங்கள் மகிழ்ச்சி அடையத்தான் வேண்டும். ஏதோ மாபெரும் இழப்பு நேர்ந்துவிட்டதாகவும், எல்லாமே அழிந்துவிட்டதாகவும் நீங்கள் கவலைப்பட்டுக்கொண்டிருப்பது அவனுக்கே பிடிக்காத ஒன்று என்பதை நீங்களும் அறிவீர்கள் தானே.”

“அந்தச் காலத்தில் நல்ல வழியாலோ, கெட்ட வழி யாலோ இந்தக்கிராமத்தின் அரைப்பங்கு நிலம் எனக்குத்தான் சொந்தமாக இருந்தது. எனது தகப்பனாரிடம் இருந்து எனக்கு முதுசமாகக் கிடைத்தது அது. அந்தச் சொத்துக்களுக்கெல் லாம் நானே அதிபதி ; தனிக்காட்டு ராஜா; நான் வைத்ததே சட்டம் …….. அப்படிக் கொடி கட்டிப் பறந்த காலத்தில் தான் அவன் என்னைப் பார்க்க வந்திருந்தான். எனது காணிகளை ஊடறுத்து அவன் போட நினைத்திருந்த பாதையைப் பற்றி அவன் சொல்லிக் கொண்டே போனான். நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன். அப்படியொரு மயக்கம் ; அப்படியொரு கவர்ச்சி”.

“தர்க்க நியாயங்களுடன் அவன் பேசினான். வாழ்க்கை யைப் பற்றி வாழவேண்டிய முறைகளைப் பற்றி அவன் எடுத்துச் சொன்னான். இன்னல் படுகின்ற மனிதர்களின் துயரங்களை அவன் எடுத்துக் காட்டினான். ஒரு குடம் தண் ணீர் பெறுவதற்காக எனது மேட்டு நிலங்களில் வாழும் குடிசனங்கள் படும் பாட்டை எல்லாம் அவன் எடுத்து விளக் கினான். இந்தத் துன்பங்களெல்லாம் நிரந்தரமானவையல்ல; இவை களையப்படவேண்டும்; இவை களையப்பட முடியும். இந்தத் துன்பங்கள் இல்லாமற் போகும் போது அந்தச் சனங்கள் அடையப்போகின்ற ஆனந்தத்தை எண்ணிப்பாருங்கள்.’ என்று அவன் சொன்ன போது உண்மையில் நான் என்னை மறந்து தான் இருந்தேன்.”

‘அவன் பிறந்த செய்தியைக் கேள்விப் பட்டபோது முகமெல்லாம் பல்லாக என் முன்னால் வந்து நின்ற அவன் தந்தையின் முகம் தான் எனக்கு ஞாபகம் வந்தது. அர சாங்கப் பணத்தில் மேட்டுக் குடிசனங்களுக்கு என்ற சாட்டில் எனது காணியில் பொதுக்கிணறு ஒன்றை வெட்டியபோது ‘தங்கமான கமக்காரன்’ என்று மகிழ்ச்சியால் பூரித்த அந்த அப்பாவிச் சனங்களின் முகங்கள் தான் எனக்கு ஞாபகம் வந்தது.”

“இப்போது நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அவன் பேச ஆரம்பித்தபோது எனக்கு ஏற் பட்ட வெறுப்பு எப்படி மறைந்தது என்று எனக்கே புரிய வில்லை. அந்த நேரக் குடிபோதை மயக்கத்தில் அவனின் பேச்சு எனக்கு இரம்மியமாகப் பட்டது என்றும் சொல்ல முடியாது. பேச்சினால், பேச்சில் இழையோடும் தர்க்க நியாயங்களினால், சக மனிதனின் துயர் கண்டு பொறுக்க முடியாத ஆழ்ந்த மனித நேயத்தால் அவன் எவரையும் கவர்ந்து நின்றான். ஓரொரு சமயங்களில் வினோபா. காந்தி, லெனின் போன்ற தலைவர்களுடன் நான் அவனை ஒப்பிட்டுப் பார்ப் பதுண்டு. அதற்கு அவன் பொருத்தமானவன் தான் என்பதை நீங்களும் மறுக்கமாட்டீர்கள். உண்மையில் துன்பப்படுகின்ற மக்களை விமோசனத்திற்கான பாதையில் வழி நடாத்தும் ஒரு தலைவனாக அவன் மாறித்தானிருப்பான்”.

‘நடந்து முடிந்த சோக நினைவுகளில் மறுகுவதில் எது வித பயனுமில்லை என்பதை நானும் அறிவேன் தான். ஆனால் நடந்து முடிந்தவை என்பதற்காக அவனை, அவனோடு தொடர்புடைய நினைவுகளை மறக்க முடியுமா?”

”நான் ஏதோவெல்லாம் சொல்லிக்கொண்டே போகின் றேன். இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் நான் இவற்றை யெல்லாம் உங்களுக்குச் சொல்ல வேறு சந்தர்ப்பம் கிடைக்க முடியாது. உங்களில் பலர் என்னை ஏதோ பெரிய கொடை யாளி என்று சொல்லிப் போற்றுவதாக அறிகிறேன்… நான் பெரிய கொடையாளியுமில்லை ; மகானுமில்லை. ஒரு சாதாரண மனிதன் தான். முன்பு மனிதத் தன்மையில்லாதவனாக இருந்து பின் மனித நேயம் கொண்ட மனிதனாக மாறிய ஒரு சாதாரணன். அவன் என்னை மனிதனாக்கியபோது அவனின் வேண்டுதலின் பேரில் நான் எனது சொத்துக் களின் பெரும் பகுதியை பொதுக் காரியங்களுக்காகச் செல விட்டேன். எனது காணிகளில் ஒரு பகுதியை இந்த வீதி அமைப்பதற்காக ஒதுக்கிக் கொடுத்தேன். இதற்கெல்லாம் நானும் நீங்களும் அவனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.”

ஒருவகையில் பார்க்கப்போனால் இதற்கெல்லாம் எனது கொத்துக்களென்று நான் உரிமை பாராட்டுவது தவறென்பதை நான் அறிவேன். ஒரு மனிதனின் தேவைக்கதிகமாக அவனிடம் இருக்கும் சொத்துக்கள் சமூக உடமை ஆக்கப்படவேண்டும் என்று அவன் சொல்வான். எத்தனை எத்தனையோ இலட்சம் சனங்கள் உண்ணவும் உடுக்கவும் நிறைவான வாழ்க்கை வாழவும் வழியின்றித் தவிக்கும் போது இயற்கையின் செல்வங்களை தமக்கென முடக்கி, சுகபோக வாழ்வு வாழ்பவர்கள் சமூகத்தின் கயவர்கள் என அவன் ஆத்திரத்துடன் சொல்வான். எல்லாரும் நிறைவான வாழ்க்கை வாழப்போகும் ஒரு காலம் வரத்தான போகிறது; அந்தக் காலத்தை நாங்கள் தோற்றுவிக்கத் தானே போகின் றோம்’ என்றும் சொல்வான்’

நீங்கள் பரபரப்படைகிறீர்கள். உங்களுக்கும் இங்கு பேச வந்திருக்கும் மற்றவர்களுக்குமிடையில் நெடுநேரம் நிற்பதை நான் விரும்பவில்லை. இந்த வீதித்திறப்பு விழாவில் தலைமையுரையாற்றக் கிடைத்தது எனக்குக் கிடைத்த பெரும் பேறெனவே கருதுகிறேன். எனது உரையை முடிக்கு முன் இந்தப் பாதையின் உருவாக்கத்திற்காக உழைத்த அவனைப் பற்றிய இன்னும் சில விடயங்களை நான் கூறா விட்டால் எனது பேச்சு பூரணத்துவமாகாது. இனிமேல் இந்த வீதியில் நீங்கள் நடமாடப் போகிறீர்கள். பனங்கூடல்களையும், தோட்டவெளிகளையும், சிறிய பற்றைக் காடுகளையும், சிறிய சிறிய குடியிருப்பு மனைகளையும் ஊடறுத்துச் செல்லும் இந்த வீதி இனிமேல் உங்களுக்குப் பயன்படப்போகிறது. உங்களில் பலரின் தேவையில்லாத வசதியீனங்கள் அகலப் போகின்றன. நீங்கள் இனிமேல் ஒரு தபால் போடு வதற்காக ஒன்றரை மைல் நடக்கத் தேவையில்லை. உங்கள் வீதியின் அருகில் கம்பத்தில் தொங்கும் சிவத்தப் பெட்டியில் நீங்கள் தபால் போடுவீர்கள். பிரசவ வேதனை கொண்ட பெண்ணை, பிரதான வீதிக்கு இட்டுச் செல்ல வேண்டிய தேவையின்றி உங்கள் வீதியிலிருந்தே அவளைக் காரிலேற்றி வைத்தியசாலைக்கு கொண்டு செல்வீர்கள். உங்கள் துன்பங்களையெல்லாம் கண்டு கண்டுருகி, இவற்றைப் பற்றியெல லாம் முதன் முதலில் கனவு கண்டவன் அவன் ; திட்டம் தீட்டியவன் அவன் ; உழைத்தவன் அவன்: இதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தவன் அவன்.”

“கிராமத்தை ஊடறுக்கும் இந்தப் பாதை அழகாக நீண்டு வளைந்து செல்கின்றது. உங்களில் சிறியவர்களைத் தவிர மற்றவர்கள். இது ஒற்றையடிப் பாதையாய் இருந்த காலத்தில் இதன் இலட்சணங்களை அறிந்திருப்பீர்கள். கள்ளி யும், காரையும் கொழுவி இழுக்கும் கருமுட்களைக் கொண்ட காண்டையும் கொண்ட இந்தப் பாதையை பெருப்பித்து. விரிவாக்கி, செப்பனிட அவன் ஒருவனே முன்னின்று உழைத் தான். நாளடைவில் அவனோடு அவனை யொத்த வாலிபர்கள் ஐந்தாறுபேர் சேர்ந்தார்கள். இப்போது தபால் பெட்டி இருக்கும் அந்த இடத்தில் தான் அவனுக்கு அந்தக் காயம் ஏற்பட்டது. சிறியகாயம் தானே என்று அசட்டையாய் இருந்துவிட்டான்.”

“நிலைமை விபரீதமான காலத்தின்போது ஒருநாள் அவன் எனக்குச் சொன்னவற்றை நான் உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டவன். உங்களுக்கும் எனக்கும் அவன் கடைசியாகச் சொன்ன செய்தி இதுதான். ‘நான் இனிப் பிழைக்கமாட்டேன் ஐயா’. அந்தக் காலத்திலிருந்து இறக்கும் வரைக்கும் அவன் என்னை ஐயாவென்றுதான் அழைத்தான். ‘நான் சாவதால் விமோசனத்தை நோக்கிய இந்த யாத்திரை முடிந்துவிட்டதாக, யாரையும் கருதவேண்டாமென்று சொல்லுங்கள். விமோசனத்தை அடையும் வரையும் இந்த யாத்திரை நடந்து கொண்டுதானிருக்கும் என்றும் சொல்லுங்கள். இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிசனும் சந்தோஷமான. நிறைவான வாழ்க்கை வாழக் கூடிய நிலை ஏற்படுமட்டும் இந்த யாத்திரைக்கு முடிவு ஏற்படாது என்றும் சொல்லுங்கள்”

“அவன் சொன்னதைக் கேட்டபோது உண்மையில் என் கண்கள் நிரம்பித்தான் விட்டன. உங்கள் கண்களும் கலங்குகின்றன போலும். எப்படித்தான் வைராக்கியமாக இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் அழவும் வேண்டித்தானிருக்கிறது.”

– 1973 – கோடுகளும் கோலங்களும் – அலை வெளியீடு – மார்கழி 1976

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *