ஒரு பயணம் – ஒரு ராத்திரி – ஒரு மணி நேரம் – நாலு கோவில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 9,394 
 
 

வாரம் முழுக்க வேலையில் மூழ்கி முத்தெடுத்து சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பும்போது இவள் சொன்னாள் : ” மதியம் ரெண்டு மணிக்குக் கும்பகோணம் போகணும்..நினைவிருக்கில்லே?”

“ஆபீஸிலிருந்து நேரா எழும்பூர் வந்திடறேன்”

“எக்மோர் எதுக்குப் போறது? வீடியோ பஸ். வீட்டு வாசல்லேயே ஏறிக்கலாம். சாயந்திரம் ஆறரை ஏழு மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நேரத்துக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்”

வீடியோ பஸ். நினைத்தாலே வயிற்றில் ஒரு சங்கடம். முட்டிக் கொண்டு வரும்போது நிறுத்த மாட்டார்கள். ஏதோ கண் காணாத இடத்தில் “பத்து மினிட் வண்டி நிக்கும் சார்..காப்பி குடிக்கறவங்க குடிச்சுக்கலாம்” என்று அறிவித்து ஒரு பெருங்கூட்டத்தை அற்பசங்கைக்காக இடம் தேடி ஓட வைப்பார்கள். வண்டிக்குள் சதா உச்ச ஸ்தாயியில் அலறும் சினிமா. மலேய மொழிபெயர்ப்பில் கீழே தொடர்ந்து, ‘அபாங்க்…அதாங்க்..” என்று ஏதோ ஓடிக் கொண்டிருக்க பாச மழை பொழிந்து கூட்டுக் குடும்பம் பிரியும். வெனீஸில் கனவுக்கு ஆடி விட்டு, கொட்டாம்பட்டியில் ஆப்பம் சாப்பிடுவார்கள்.

“கார்லே போயிடலாம்”

எடுபடவில்லை. மழை காலத்தில் நானூறு கிலோமீட்டர் போக காரை எடுக்க வேண்டாம். பஸ் தான் சரி.

இரண்டு மனிக்கு சொகுசு பஸ்ஸில் உட்கார்ந்தபோது ஏகப்பட்ட பேர் விசாரித்தபடி இருந்தார்கள் “என்ன படம் இன்னிக்கு?”

நடத்துனரும் அடுத்தாளும் மர்மப் புன்னகையோடு எல்லோரிடமும் கர்மசிரத்தையாகக் கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். அதாவது நான், என் மனைவி, கல்யாணத்துக்கு வரும் மாமிகள், முந்திய சீட் பாய், பர்தாவில் அவங்க வீட்டம்மா, நாலைந்து சேட்டு வீட்டுக் கிழவிகள், சட்டைப் பையில் சிகரெட் பாக்கெட் எட்டிப் பார்க்கும் இரண்டு இளைஞர்கள் இன்னும் யாராரோ ஒன்றாகச் சேர்ந்து சுற்றுலா பஸ்ஸில் கும்பகோணம் இன்பச் சுற்றுலா போகிறோமாம்.

சட்டம் கழுதை என்பது எத்தனையாவது தடவையாகவோ நிரூபணம் ஆகிறது.

“வீடியோ போடுங்கப்பா”…”ரிப்பேருங்க”..”ஏன் சொல்லலே?”..”நீங்க கேக்கலே”..”பாட்டாவது போடுங்க”..

கையில் கொண்டு வந்த புத்தகத்தை விரிக்கிறேன். தரவாட்டு நாயர் ஸ்திரியின் அதிசௌந்தர்யத்தைக் கேள்விப்பட்டு தம்புரான் ஆளனுப்பி கோலோத்து அரண்மனைக்குக் கூட்டி வரச் சொல்கிறார். இருண்ட மண்டபங்களின் வழியே மெல்ல நடந்து உள்ளே போகிற சுந்தரிப் பெண்குட்டி. வயதான தம்புரான் ஜயண்ட் சைஸ் சாய்வு நாற்காலியில் இரண்டு பக்கத்திலும் இறக்கை மாதிரி மரக்கைகளை நீட்டி வைத்து அதில் காலமர்த்திக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட அதே நிலையில் புஷ்பேக் இருக்கையில் நானும். தூங்கிப் போகிறேன்.

விழித்தபோது பண்ருட்டி, மீன்சுருட்டி, சேத்தியாதோப்பு என்று ஒவ்வொன்றாகக் கடந்து போகிறது.

தமிழகத்தில் ஒரு ஊருக்கும் மற்றதுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது.

எல்லா ஊரிலும் கடை வீதியில் வரிசையாகக் கடைகளில் டியூப் லைட் வெளிச்சத்தில் மும்முரமாகப் புரோட்டா சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடைகளில் எல்லா வயது ஆண்களும் எச்சில் கையோடு அடுத்த புரோட்டாவுக்காகக் காத்திருக்கிறார்கள். இவர்கள் ராத்திரி வீட்டில் ஏதாவது சாப்பிடுவார்களா இல்லை தூக்குச் சட்டியில் வாங்கிப் போய்விடுவார்களா என்று தெரியவில்லை.

பேசாமல் புரோட்டாவைத் தமிழ்நாட்டின் தேசிய உணவாக அறிவித்து விடலாம்.

புரோட்டாக்கடை வைத்தது போக மீதி இடத்தில் பேன்ஸி ஸ்டோர் கடைகள் – தமிழகத்தின் கலாசார சின்னமான நீல நிற பிளாஸ்டிக் குடங்கள் வரிசையாக அடுக்கி வைத்திருப்பது கண்ணில் படுகிறது. அப்புறம் கோல்ட் கவரிங் கடைகள். எல்லாச் சுவர்களிலும் நகராட்சி, பஞ்சாயத்துத் தேர்தலுக்காக இலை, சூரியன், சைக்கிள்…கேஸ் சிலிண்டர் சின்னத்தில் கோவிந்தராஜனுக்கு ஓட்டுப் போடுங்கள்.

காதி வஸ்திராலயத்தில் அழுக்குப் பழுப்பு விளக்கு வெளிச்சத்தில் ஒரு செய்தித்தாளில் வறுத்த கடலையைக் குவித்து வைத்து மென்றபடி மூன்று பேர் காந்தி படத்துக்குக் கீழே சுவாரசியமாக விவாதித்துக் கொண்டிருப்பது பின் லாடனா? தீபாவளி அட்வான்ஸா?

வண்டி சுமார் வேகத்துடன் நகர, டாப்ளர் எபக்டில் ஒலிபெருக்கிச் சத்தம் – “வள்ளல் பெருமான் அவதரித்த ஊரில் காண்ட்ராக்ட் ஊழல் என்றால் என் நெஞ்சம் கொதிக்கிறது”

அண்ணே..ஆத்திரப் படாதீங்க.. கொஞ்சம் இப்படி உட்காருங்க..யாருப்பா அங்கே..அண்ணனுக்கு சூடா ரெண்டு புரோட்டா, சால்னா, சின்னதா ஒரு மராமத்து காண்ட்ராக்ட் ஏற்பாடு பண்ணுங்க..

ஒரு வழியாகக் கும்பகோணம்.

சைக்கிளில் போகிற சாஸ்திரிகள் மணியடித்துக் கொண்டே போகிறார்.

“அன்னிய தேசம் க்ருதம் பாவம் வாரணாசிம் வினச்:யதி
வாரணாசிம் க்ருதம் பாவம் கும்பகோணம் வினச்:யதி
கும்பகோணம் க்ருதம் பாவம் கும்பகோணே வினச்:யதி”

(வேறு எங்காவது பாவம் செய்தால் காசியில் விமோசனம். காசியில் பாவம் செய்தால் கும்பகோணத்தில் விமோசனம். கும்பகோணத்தில் பாவம் செய்தால் கும்பகோணத்தில் தான் விமோசனம்).

தி.ஜானகிராமனின் “மோகமுள்” நாவலில் இரண்டாம் பக்கத்தில் வாசனை விடயம் மென்று கொண்டு சுலோகம் சொல்லும் சாஸ்திரிகள் நினைவுக்கு வருகிறார்.

ஒரு ராத்திரிக்குள் கும்பகோணத்தில் பாவம் பண்ண முடியாது. விடயம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.

மேலக் காவேரி பாணாத்துறை வடக்கு வழியாகப் போய்ச் சேர்ந்து, சாப்பிட்டு, வார்த்தை சொல்லிக் கொண்டிருந்து விட்டு, மொட்டை மாடியில் நட்சத்திரங்களுக்குக் கீழே பாய் விரித்துப் படுக்கிறேன். சுற்றித் தென்னைமரங்கள், மலை வேம்பு, மா மரங்கள், எலுமிச்சை, தேக்கு மரம், நந்தியாவட்டை..எங்கேயோ மாதுளம்பூ விரியும் வாசம்.

“ராத்திரியில் திடீர்னு மரத்துலே பட்சி எல்லாம் ஒரு தினுசாக் கத்தும். எழுந்து பார்த்தா, சில சமயம் ஒரு மரத்திலிருந்து இன்னொண்ணுக்கு பாம்பு தாவும்..”

மைத்துனன் சுவாரசியமாகச் சொல்கிறான். தென்னை மரங்களை நிமிர்ந்து பார்க்கிறேன். ஒரு சத்தமும் இல்லை.

நீட்டி நிமிர்ந்து மல்லாக்கப் படுக்க, தலைமாட்டில் யாரோ கொசுவர்த்திச் சுருள் ஏற்றி வைக்கிறார்கள். வரிசையாகப் பாய் விரித்துப் படுத்த ஆண்கள். எல்லோர் தலைமாட்டிலும் ஊதுபத்தி போல் கொசுவர்த்தி என்று கொஞ்சம் அமானுஷ்யமான சூழல்.

பாதி ராத்திரியில் விழித்தபோது மரத்தில் ஆந்தை உட்கார்ந்து வெறித்துக் கொண்டிருப்பது கண்ணில் படுகிறது. ஒரு கூட்டம் மின்மினிப் பூச்சிகள் மாமரத்தைச் சுற்றி ஒளி வளையம் இட்டுப் பறந்து கொண்டிருக்கின்றன. குளிரக் குளிர ஒரு காற்று மெல்லக் காது மடலைச் சிலிர்க்க வைக்கிறது.

இந்த ராத்திரி இப்படியே நீண்டு போகட்டும் என்று நினைத்தபடித் திரும்பக் கண் அயர்கிறேன்.

ஜோதிகா ஆட்டத்தோடு பொழுது விடிகிறது. கே டிவியை யாரோ கர்ம சிரத்தையாக விடிந்து அஞ்சரை மணிக்குப் போட, கே சானலில் அந்தம்மா தரிசனம்.

சானல் மாற்றி ஜெயாவில் தமிழ் சுப்ரபாதத்தோடு திருமலை. தினசரி வருகிற ஒரே உற்சவத்தில், நரைமீசையும், தொப்பையுமாக கருப்பாக ஒரு பட்டாச்சாரியார் பெருமாளோடு புஷ்கரணியில் முழுகிக் கொண்டிருக்கிறார்.

தினமலரில், தஞ்சையில் பிக்பாக்கெட் அடித்துப் பிடிபட்ட நான்கு பெண்களின் புகைப்படம். முதல் பக்கத்தில் ஜெ-வுக்கு ஈமெயிலில் வந்த மிரட்டல்.

“குளிச்சிட்டு வாங்க..முகூர்த்தம் ஆரம்பிக்கறதுக்குள்ளே போகணும்”

கும்பகோணம் தெரு பூவாடையும் சாண வாடையும், வெங்காய மண்டி வாடையுமாக விரிகிறது. யமுனாவும், பாபுவும் தி.ஜானகிராமனும் நடந்த தெருக்கள்..எம்.வி.வெங்கட்ராம் ‘காதுகள்’ பற்றி யோசித்தபடி நடைபோட்ட வீதிகள்.. நண்பர் ‘பறை’ பொதியவெற்பன் இங்கே தான் எங்கேயோ இருக்கிறார்.. எங்கே?

முகூர்த்தம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. பசியாறிவிட்டுக் கடியாரத்தைப் பார்க்கிறேன். ஒரு மணி நேரத்துக்கு மேல் இருக்கிறது.

வழியில் போகிற ஆட்டோவை நிறுத்துகிறேன். “கோயிலுக்கு எல்லாம் போகணும்..”

“முகூர்த்தத்துக்கு லேட் யிடும்” பட்டுப் புடவையில் இவள் வேண்டாம் என்கிறாள். “பக்கத்துலே ராகவேந்திரா கோவில் இருக்காம்..அங்கே வேணா போய்ட்டு வந்திடலாம்”

ராகவேந்திரரை அப்புறம் தரிசித்துக் கொள்ளலாம். கும்பேசுவரரும், பெருமாள்களும் வரச் சொல்லித் தாக்கீது பிறப்பித்திருக்கிறார்கள்.

ஆட்டோ கிளம்புகிறது.

கும்பேசுவரர் கோவில். வழக்கமான ‘கைலி அணிந்து கோவிலுக்குள் வரக்கூடாது’ அறிவிப்புப் பலகைக்குப் பக்கத்தில், “பால் பாக்கெட் அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை”

பாங்காக்கில் இரவு விடுதி வாசலில் புத்தர் விக்ரகத்துக்குக் கீழே தகரக் குடுவையில் கோக்கோ கோலா படையலாக வைத்திருப்பது நினைவு வருகிறது.

சுவரில் திருப்பதிகங்களில் மூழ்குகிறேன். இவள் கடியாரத்தைப் பார்க்கிறாள்.

“கூடிக்கூடி உன்னடியார்
குனிப்பார் சிரிப்பார் களிப்பாராய்
வாடிவாடி வழியற்றேன்
வற்றல்மரம் போல் நிற்பேனே”

“இங்கேயே நின்னுட்டிருந்தா எப்படி? சரசரன்னு முடிச்சுட்டுக் கல்யாண மண்டபம் போக வேணாமா?”

பாரதியின் ‘ஞானரதம்’ கதையில் கிரணத்தைப் பிடித்துப் போகிறவன் போல் உணர்கிறேன். இவள் “பொதிமாட்டைப் போன்ற ஸ்திரி” இல்லை. அன்புக்குரிய மனைவி.

சுவரில் ஞானசம்பந்தர் அருளிச் செய்த திரு எழுகூற்றிருக்கை ரத பந்தமாக வரையப்பட்டிருக்கிறது.

உள்ளே பிரகாரத்தில் சுந்தரர் ‘விழிநோய் நீக்க வழி கூறிப் பாடிய பதிகம்’. இடக்கண்ணுக்கான பதிகத்தைப் பதம் பிரித்துப் படித்து முடித்து அடுத்த கண்ணுக்கு வருவதற்குள், “வாங்க போகலாம்.. ஊஞ்சல் ஆரம்பிச்சுடும்”

கும்பேசுவரர் கோவிலிலிருந்து புறப்பட்டு ஆட்டோ ராமசாமி கோவிலில் நிற்கிறது. “பத்தே நிமிஷம்”.. ஓடுகிறேன்.

தூணில் புடைப்புச் சிற்பமாக மூரிச்சிலைத் தடக்கையோடு கம்பீரமான ராமபிரான். நெடிய அந்தத் திருமேனி முழுக்க எண்ணெய் முழுக்காட்டி வைத்திருக்கிறார்கள்.

தூணின் அந்தப் பக்கத்தில் பிராட்டி. தூக்கிக் கட்டிய அழகான தலையலங்காரத்துக்கு மேலே ஒட்டடை படிந்திருக்கிறது. எம்பி நீக்குகிறேன். அடுத்த பக்கத்தில் அனுமன். அழுக்குப் புரண்ட திரு உருவம். நாலாவது பக்கத்து இலக்குவன் இருட்டிலும் தூசியிலும் பாதிதான் கண்ணில் படுகிறான்.

அடுத்த தூணில் ஒய்யாரமாக அன்ன வாகனத்தில் சாய்ந்திருக்கும் பெண்ணின் சிற்பம். லேடி காடிவா போன்ற திண்ணென்ற உருவம். யார் அது? யட்சியா?

பட்டாச்சாரியார் திருவிளக்கு வெளிச்சத்தில் பெருமாளையும் பிராட்டியையும் சேவிக்கக் காட்டுகிறார். வலது புறத்தில் கையில் வீணையும் ராமாயணமுமாக அனுமன் கண்ணை ஈர்க்கிறான். வீணை வாசிக்கும் அனுமன் வேறு எங்காவது உண்டா என்று தெரியவில்லை. ராமாயணத்தில் வீணைக் கொடியுடைய ராவணன் மட்டும்தான் இசைஞானி என்று இத்தனை நாள் நினைத்திருந்தேன்.

“தொட்டிலில் குழந்தையாகப் பெருமாள். எடுத்துக் கையில் ஏழப் பண்ணினா, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்”

பட்டாச்சாரியார் உன்னிப்பாகப் பார்க்கிறார். என் பிள்ளைகள் வீட்டில் இருப்பதைச் சொல்ல வேண்டுமோ?

வாசலுக்கு வந்து ஆட்டோவில் ஏற, பக்கத்துப் பெட்டிக் கடையில் சத்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் – “கம்ப்யூட்டர் லேசுப்பட்டதில்லே…பேக்டீரியான்னு கிருமி இருக்கு பாரு..அது கூட கம்ப்யூட்டர் மூல்யமாப் பரவுதாம்”

கம்ப்யூட்டர் கிருமியை மனதிலிருந்து அகற்றி விட்டு, சாரங்கபாணி கோவிலில் இறங்குகிறேன்.

கம்பீரமான விண்ணகரம். யானை இழுக்கும் கல்தேர் போல் பிரம்மாண்டமான மண்டபம். தேர் நகர்வது போல் தெரிகிறது. பிரகாரச் சுவர்களில் வரிசையாக ஓவியங்களில் ராமாயணம். நாயக்கர் பாணியிலிருந்து ‘குமுதம்’ பத்திரிகையில் வரைந்த ‘வர்ணம்’ பாணி வரை இருக்கிறது. ஜெயராஜ் பட சாயலில் யாரும் தட்டுப்படவில்லைதான்.

இந்தக் கோயில் சுவரிலும் ரதபந்தனம். “திருக்குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடரவமளியில் அணிதுயில்’ திருமாலைக் குறித்துத் திருமங்கை ழ்வார் பாடியது.

இயல்பான கவிஞர்களான சம்பந்தரையும், திருமங்கை மன்னனையும் கிராஸ்வேர்ட் புதிர் போல் எழுத்து எண்ணிச் சதுரத்தில் அடைத்து ரதபந்தமும், பசுமூத்திர பந்தமும் மற்றதும் பாட வைத்த புண்ணியவான்கள் யார்? ‘கொட்டாவி விட்டதெல்லாம் கூறு தமிழ்ப் பாட்டாச்சே” என்று இடைக்காலப் புலவர்களைப் பற்றி எழுந்த எரிச்சல் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் மட்டும்தானா?

“ஊஞ்சல் முடிந்து மாலை மாற்று ஆரம்பித்திருக்கும்”

சக்ரபாணி கோயில். குடமுழுக்கு கி வண்ணம் மினுக்கிக் கொண்டிருக்கும் கோவிலில் நுழைந்ததும் நடுநாயகமாக ஏழு வண்ணம் கசிய சுதை உருவத்தில் புதியதாக உருவாக்கிய பெருமாள். கோடம்பாக்கம் செட் போல் இருக்கிறது அந்த இடம்.

பக்கத்தில் மரத்தாலான ஒரு பழைய பூத வாகனம், “போங்கடா நீங்களும் உங்க குடமுழுக்கும்” என்று முதுகைக் காட்டிக் கொண்டு சுவரைப் பார்த்து உட்கார்ந்திருக்கிறது. அதன் பக்கத்தில் வேறு ஏதோ மரச் சிற்பத்தின் கையும், காலும் தனித்தனியாகச் சிதறிக் கிடக்கின்றன.

பழையதைப் பேணிவிட்டுக் குடமுழுக்கு நடத்தினால் குறைந்து போய்விடுமோ என்று தெரியவில்லை.

சந்நிதிக்குப் போகும் வழியில் கம்பீரமான அந்த வெண்கல விக்கிரகம் கருத்தை ஈர்க்கிறது. அடுக்கடுக்காகப் பட்டாடை விரிய உயர்ந்து நிற்கும் மனிதர். பக்கத்தில் அவர் இடுப்பு உசரத்துக்கு ஒரு பெண்.

“சரபோஜியும் அவா ஆத்துக்காரியும்”

பட்டாச்சாரியார் சடாரி சாதித்தபடி சொல்கிறார். இங்கேயும் தொட்டில் பெருமாள் கையில் ஏழப் பண்ண (எழுந்தருளப் பண்ண)த் தயாராகக் குட்டித் தொட்டிலில் இருக்கிறார். அவரை அப்புறம் கொஞ்சலாம் என்று இவள் கையைப் பிடித்து இழுத்துப் போய் ஆட்டோவில் ஏற்றுகிறாள்.

சோலையப்பன் தெருவில் கல்யாணமண்டப வாசலில் வண்டி நிற்கிறது. விதவிதமான சாயம் தோய்த்த சோற்று உருண்டைகள் உள்ளே இருந்து வந்து காலில் படுகின்றன.

“ஊஞ்கல் ஆரம்பிச்சாச்சு” அரக்கப் பரக்க இவள் உள்ளே ஓட, நான் வாசலில் நாற்காலியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

– 2001ல் எழுதியது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *