கொழும்பு கோட்டைப் புகையிரத ஸ்தானத்துக்குள் ஓடி வந்த ஆறு முகம்பிள்ளை, அவதியாக காங்கேசன் துறை நோக்கிக் காலை புறப்படு யாழ்தேவியில் மூன்றாம் வகுப்புப் பெட்டி ஒன்றில் ஏறி ஒரு மூலை சீட்டில் உட்கார்ந்தார். தன் கையில் வைத்திருந்த பார்சலைத் தனக்குப் பக்கத்தில் வைத்து விட்டார்.
‘கொழும்பிலும் மனுஷன் சீவிக்க முடியுமா’ என்று மனதுக்குள் எரிந்து கொண்டார். புகையிரதத்தில் ஏறியதும் யாழ்ப்பாணம் வந்து விட்டது போன்ற நிம்மதி.
அவருக்குக் கொழும்பு வாழ்க்கை மிக அருவருப்பாகவும் வெறுப்பாகவும் இருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து மாற்றலாகி கொழும்புக்கு வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை . ஒவ்வொரு கிழமையும் யாழ்ப்பாணம் போயே தீருவார். திரும்பவும் யாழ்ப்பாணத்துக்கு மாற்றம் பெற்றுச் செல்வதற்குத் தமிழ் எம்பிக்களின் பின்னால் பலமுறை அலைந்து முயற்சித்துப் பார்த்தார். காரியம் முடியவில்லை.
வேறொன்றுமில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள வாழ்க்கை அமைப்பும் ஒழுங்கும் கொழும்பில் எந்த மூலையிலும் இல்லை. தொழிலாளியும் சரி பெரிய உத்தியோகத்தரும் சரி, மேற் சாதிகாரனும், கீழ்ச்சாதிகாரனும் சரி எல்லோரும் பொது இடங்களில் ஒன்றாகக் கணிக்கப்படுகிறார்கள். கடைகளிலோ காரியாலயங்களிலோ, கோயில்களிலோ எங்கும் யாழ்ப்பாணத்திற் போல் சாதி, அந்தஸ்துப் பார்த்து அவரவரை அவரவர் இடங்களில் வைத்து நடத்தாமல் ஒன்றாகச் சமமாகக் கணிக்கப்படுகிறார்கள். அதைப்பற்றி யாரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. அதனால் அவருக்கு அங்கு மதிப்பாக, கௌரவமாக வாழமுடியவில்லையே என்ற கவலை.
அவர் இருக்கிற போர்டிங்கிலும், அவர் சாப்பிடுகிற சைவக் கடையிலும் அவருக்குத் தெரிந்த,யாழ்ப்பாணத்தில் உள்ள கீழ்ச்சாதிப் பள்ளர், பறையர், நளவர்களும் அவரோடு சமமாகவே இருக்கிறார்கள். அது அவருக்குப் பெரும் தலையிடி. படித்து லோங்சும், கோட்டும் போட்டு தான் பார்க்கும் உத்தியோகம் செய்தாலும் கீழ்ச்சாதி கீழ்ச்சாதி தான் என்பது அவருடைய அசைக்க முடியாத கொள்கை.
தன் எண்ணங்களைக் கொழும்பில் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் மனதுக்குள் எரிச்சல்தான்.
அவர் கொள்கையோடு ஒத்துப் போகும் நண்பர்கள் இருவர் வெள்ளவத்தையில் இருக்கிறார்கள். மாலை நேரங்களில் அவர்களைச் சந்தித்து தனது வயிற்றெரிச்சலை அவர்களோடு கலந்து கொண்டால் அவருக்குப் பெரும் ஆறுதல்.
இன்று அவர் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் கொடியேற்றத்துக்காகப் போகின்றார். அப்போது அங்கு அவர் இருப்பது அவசியம் என்று ‘சைவப் பெரியோர்கள்’ கடி ம் எழுதியுள்ளார்கள்.
‘என்னடா இது புறப்படுகிதில்லையே’ என்று தன் கைமணிக்கூட்டைப் பார்த்துக் கொண்டார்: தான் ஏறியதும் யாழ்தேவி புறப்பட்டிருக்க வேண்டுமென்பது அவருடைய ஆசை.
தான் இருக்கும் பெட்டியில் ஏறு பவர்களின் முகங்களை வெறுப்போடு நோக்கியவாறு இருந்தார். தன் அருகில் யாரும் அமர வந்தால் ‘ஆள் இருக்கு’ என்று தான் வைத்த பார்சலைக் காட்டிவிடுவார். ஆனால் பலர் அப்பெட்டியில் ஏறிக்கொண்டேயிருந்தார்கள். புகையிரதம் புறப்படும்தற்குச் சற்று முன்னதாக வந்த இளைஞன் அவர் வைத்த பார்சலை எடுத்துக் கீழே வைத்து விட்டு அதில் அமர்ந்தான். ‘ஆள் இருக்கு’ என்று அவனுக்குக் கூறினார். ஆள் வந்தால் பார்ப்போம் என்று அவன் கூறிவிட்டான். அவருக்கு ஒன்றும் கூற முடியவில்லை. முகம் கடுத்தவாறு பார்சலைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டார்.
புகையிரதம் புறப்பட்டது.
அவர் இருந்த ‘சீட்டில்’ அந்த இளைஞனும், ஒருகிழவனும், கிழவியும் இன்னும் ஒருவரும் இருந்தனர். முன் சீட்டின்’ மூலையில் ஒரு கறுத்த இளைஞன் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். இன்னும் மூன்றுபேர் அதில் இருந்தனர்.
அவர் நிமிர்ந்து எல்லோரையும் ஒரு நோட்டம் விட்டார். கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஒரு சிங்களவரையும் காணாததால் சிறு திருப்தி. சிங்களவரை அவருக்குக் கண்ணிலும் காட்டக் கூடாது. ஏனென்றால் அவர்கள்தான் கொழும்பில் உள்ள சமத்துவத்துக்குக் காரணம் என்பது அவர் முடிவு.
‘இதற்குள்ளும் கீழ்ச் சாதிகள் இருக்கும்’ என்று உள்ளே எண்ணிக் கொண்டு, தன்னைச் சுற்றி அமர்ந்திருந்த ஒவ்வொருவரையும் காலிலிருந்து தலைவரை அவதானித்தார். ஒவ்வொருவரின் உடுப்பு, உடுத்தியிருக்கும் பாணி, தமிழ் பேசும் முறை, முகத்தில் உள்ள செழிப்பு, சகலவற்றையும் கணக்குப் போட்டார்.
அவரால் யாரையும் இலேசாக இனங் கண்டு கொள்ள முடியவில்லை. அவரின் சொந்த ஊரான மாவிட்ட பரத்தில் என்றால், ஒவ்வொருவரையும் எந்தச் சாதி, என்ன பேர், எந்தக் குறிச்சி என்றெல்லாம் சொல்லி விடுவார். அங்கு யாரைக் கண்டாலும், விசாரித்து ஆளைக் கண்டு பிடித்து விடுவார்.
அவர் நெஞ்சு நிமிர்த்திவாழ்வது அங்குதான். சைவ சமயத்தையும், அதன் உயர்வையும், புனிதத்தையும் கட்டிக்காத்து வரும் உயர் வேளாளர் மரபில் வந்தவராம். அவருடைய தகப்பன் கதிரேசம் பிள்ளை பெரிய நிலப்பிரபு. அவர் நிலத்தில், அவருடைய குடும்பப் பரம்பரைக்கு அடிமை, குடிசைத் தொழில் செய்து வாழும் கீழ்சாதிப் பஞ்சமர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்களாம். அவர்கள் சொன்ன இடத்தில் சொன்னபடி நிற்பார்களாம்.
தான் சும்மா இருந்து சாப்பிடக் கூடிய நிலப்பிரபுவாக இருந்தாலும் உத்தியோகம் பார்ப்பது ஒரு கௌர்வத்துக்காக என்று அடிக்கடி கூறிக் கொள்வார்.
யாழ்தேவி பொல்காவளையைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது.
அவருக்குப் பேசாமல் சும்மா இருக்க முடியவில்லை. பக்கத்தில் உள்ளவர்களோடு பேசி அவர்களின் ஊர், சாதி என்பவற்றை அறிய விருப்பமாகத் தான் இருந்தது. ஆனால், அவர்கள் அவரோடு பேசும் சூழ் நிலையில் இல்லை. அதனால் முன்னால் இருந்த இளைஞனிடம் இருந்த தமிழ்த் தினசரி ஒன்றைக் கேட்டு வாங்கிப் படிக்கத் தொடங்கினார்.
பத்திரிகையின் முன்பக்கத்தில் சிறுபான்மைத் தமிழர்கள் மாவிட்டபுரம் கந்தசாமிக் கோவிலுக்குள் செல்வதற்கு ஆயத்தமாகிறார்கள் என்ற செய்தி இருந்தது. அவசரப்பட்டு முழுவதையும் வாசித்து முடிந்த அவருக்கு சிறு பான்மைத் தமிழரைப் பிடித்துத் தின்கின்ற ஆத்திரம் உள்ளே.
“என்ன பேந்தும் இவை கோயிலுக்கை போகத்திட்டம் போடினை போலயிருக்கு” என்று சொன்னார். மற்றவர்களுக்குக் கேட்கவில்லை. இன்னும் சத்தமாகக் கூறினார்.
‘ஓம், ஓம்’ அவங்களும் ஏதோ உள்ளே போறதெண்டு தான் நிற்கிறாங்கள்’ என்றார் அதே சீட்டிலிருந்த கிழவர். ஆறுமுகம்பிள்ளைக்கு அதைக் கேட்டதும் உற்சாகமாகப் போய்விட்டது.
“இந்தமுறையும் உந்தப் பஞ்ச மற்றை இது சரிவராது, அங்கை பெரிய தொண்டர் படை ஆயத்தமாக இருக்கு. இவைக்கேன் உந்த ஆசை, இவ்வளவு காலமும் செய்த மாதிரி வெளியில் நின்று கும்பிட்டா என்ன என்றார்.
“அதுதானே அவைக்கி என்ன குறைஞ்சிடப் போகுது? இப்ப பாருங் கோ கடைசியா இவங்கள் தமிழனுக்கு அவமானம் ஏற்படுத்தினது தான் மிச்சம்”!
முன்சீட்டில் இருந்த லோங்ஸ் அணிந்த, தலை நரைத்தவர் கூறினார்.
மூலையில் இருந்த இளைஞன் கண்களை நிமிர்த்தி அவர்களைப் பார்த்து விட்டு இருந்தான்.
“சிங்களவர் எங்களை இருக்க விடு கிறாங்களில்லைப் பாருங்கோ ! கேலி பண்றாங்கள்” என்றார் ஆறுமுகம் பிள்ளை மனவருத்தத்தோடு.
“இவங்களுக்கு உந்த உஷார் எப்படி வந்ததென்று தெரியேல்லை?”
“வேறை ஆர்? சிங்களவர் கொடுத்தது தான். அதோட இந்த கொம் யூனிஸ்டு களும்தான். சீனக் கொம்யூனிஸ்டுகள்; பொல்லாத ராஸ் கல்ஸ்’. கிழவர் கேட்டதற்குப் பதில் கூறினார் ஆறுமுகம்பிள்ளை.
“அவையிடை கோலமும், அசிங் கமான உடுப்பு, ஊத்தை நாத்தம், அதுக்குள்ளே மற்றவர்களோட சமமா கோயிலுக்குள்ளையும் போக வேணு மாம்” அவர் தொடர்ந்து தனக்குள் ளே புறுபுறுத்துக் கொண்டிருந்தார்.
மூலையில் இருந்த இளைஞன் அவர் முகத்தைக் குறிப்பாகப் பார்த்து விட்டு இருந்தான்.
“கடவுளை வணங்குகிற இடத்தில உதெல்லாம் பாக்கக்கூடாது, காலம் மாறிக்கொண்டு போகும்போது நாங்களும் மாறவேணும். அவர்களையும் உள்ளுக்கு விட்டா அதில் என்ன வந்துட்டுது”
முன் சீட்டில் இருந்த ஒருவர் மிக ஆறுதலாகக் கூறினார். ஆறுமுகம் பிள்ளை சட்டெனத் திரும்பி அவரைப் பார்த்தார்.
“நீங்கள் என்ன புதுக்ககை பேசுறீங்க. காலங்காலமா கீழ்ச்சாதி களை கோயிலுக்கிள்ளை வடாமல் தடுத்து வைத்தவர்களெல்லாரும் மடையர்களே! அது அவங்களை விடப்படாது. விட்டா காலகதியல எங்கடை பிள்ளையளை கலியாணம் முடிக்கவும் கேட்பாங்கள். கோயில் கடவுள் இருக்கிற புனிதமான இடம். உந்த நாய்களை அங்கு விடப்படாது, என்று வெடுவெடுப்பாகக் கூறி முடித்தார்.
“அவர்களைத் தடுத்து வைத்தவர்கள் மடையர்கள். சாதி வெறி பிடித்த பிற்போக்குவாதிகள். அவர்களை உள்ளே விட்டால் என்ன?”
இதுவரையும் மெளனமாக மூலையில் உட்கார்ந்திருந்த இளைஞன் நிமிர்ந்திருந்து கொண்டு கூறினான்.
ஆறுமுகம்பிள்ளை அவனுடைய முகத்தை அவதானமாகப் பார்த்தார். இளைஞன் அவரைப் பார்த்துச் சொன்னான்.
“அவர்களை உள்ளை விடுகிறதினால் கடவுள் பாதிக்கப்படுவாரா? அல்லது கடவுள் கோபித்துக் கொள்வாரா?”
ஆறுமுகம் பிள்ளைக்கு ஒன்றும் கூறமுடி யவில்லை. அவனுடைய முகத்தைப் பார்க்கக் கொஞ்சம் உள்ளூரப் பயமா கவும் இருந்தது.
“நல்லூர்க் கந்த சாமிக் கோயி லைத் திறந்து விட்டு எல்லோரும் உள்ளே போய்க் கும்பிடுகிறார்கள். கடவுள் ஓடி விட்டாரா? அல்லது கோயில் இடிந்து விட்டதா? அல்லது உயர் ஜாதி மக்கள் எதிர்த்துக் கிளம் பினார்களா?”
“தம்பி சொல்வதில் நியாயம் இருக் குத்தான்” அவன் இருக்கும் சீட்டில் இருந்த ஒருவர் சொன்னார்.
”கீழ்ச் சாதி என்று கூறப்படுகிற மக்கள் கோயிலுக்குள்ள போவதைக் கடவுளும் எதிர்க்கவில்லை, மக்களும் எதிர்க்கவில்லை. அவர்களை உள்ளே விடுவதால் காலங்காலமாகத் தங்க ளுக்கு இருந்த போலிக் கௌரவம், மதிப்புப் போய்விடும் என்று எண்ணு கின்ற சாதி வெறிபிடித்த சில படு பிற் போக்கு வாதிகள் தான் எதிர்க்கிறார் கள். அவர்களால் தான் தமிழ் மக்க ளுக்கு அவமானம். அவர்களைச் சமூகத் திலிருந்து அடித்து, உதைத்து விரட்ட வேணும்” என்று கூறிய இளைஞன் ஆறு முகம் பிள்ளையைப்பார்த்தான். அவர் கேட்காதவர் போல் வெளியில் பார்த்துக்கொண்டு இருந்தார்.
ஒருவரும் ஒன்றும் பேசவில்லை.
புகையிரதம் மாகோவில் வந்து சின்றது. அந்தப் பெட்டியில் மூன்று சிங்களவர்கள் ஏற வந்தார்கள். ஆறு முகம்பிள்ளை அவர்களைப் பார்த்து விட்டுச் சற்று இடமும் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கால் களைச் சற்று அகட்டி இடம் பிடித்து இருந்து கொண்டார்.
அனுராதபுரத்தைப் புகையிர தம் தாண்டும் மட்டும் அவர் மௌனமாகவே இருந்தார். அவருக்கு அந்த இளைஞன் மேல் சந்தேகம். கட்டாயம் அவன் கீழ்ச்சாதியாக இருப்பான் என்ற முடிவு – எப்படியும் அவனை அறிய வேண்டுமென்ற ஆசை.
அவனைப் பார்த்துக்கொண்டிருந்து அவன் அவரைப் பார்க்கும் போது சிரித்தார். அவனும் உதட்டில் சிரிப் பைக் காட்டினான்.
புகையிரதம் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.
“தம்பி யாழ்ப்பாணத்தில் எந்த ஊர்?”
“நான் சாவகச்சேரி! ‘ ‘
“சாவகச்சேரி எண்டால் சர சாலையோ?”
“இல்லை; மட்டுவில்!”
“மட்டுவிலா, மட்டுவில, என்ரை சொந்தக்காரர் இருக்கிறார்கள்.”
“பழைய விதானையார் சுப்பிரமணியத்தைத் தெரியுமோ?”
“இல்லை!”
“அவைதம்பி, மட்டுவில் தெற்கு? நீங்கள்?”
“நான் மட்டுவில் வடக்கு”
“மட்டுவில் வடக்கென்றால் எனக் குத் தெரியும். நான் அந்தப் பக்கம் நல்லாப் புழங்கியிருக்கிறன்!”
‘நான் இருக்கிறது மானாவளை!”
மானாவளை என்றதும் அவருக்கு உள்ளே தன் விசாரணை பலன் கொடுப்பதாக எண்ணிக் கொண்டார்.
“தேம்பி உங்களுடைய தகப்பன் பேர் என்ன தம்பி?”
“கந்தன்!”
“கந்தனோ! முழுப்பேர்?”
அரைகுறைப் பெயர்கள் கீழ்ச்சாதி மக்களுக்குத் தான் உண்டு. உயர் சாதி நிலப்பிரபுக்கள், அவர்களின் பெயர்களைக் கந்தன், பூதன், பட்டன் என்று அரையாக்கித்தான் வழங்கி வந்தார்கள்.
“கந்தன் தான்!”
ஆறுமுகம் பிள்ளைக்கு அவன் இருக்கும் குறிச்சியும், அவனுடைய சாதியும் நன்றாகப் புரிந்து விட்டது.
“அட அப்ப …. ”
அவனுக்குச் சுற்றி வளைத்து விசாரிப்பது என்னத்துக்கு என்று நன்றாகத் தெரியும்.
“ஏன் நீங்கள் சுற்றி வளைக்கிறீங்கள். நானே சொல்றேன். நான் பறையர் என்று கூறப்படுகிற சாதியைச் சேர்ந்தவன். என்ரை தகப்பன் மேளம் அடித்தவர்!”
ஆறுமுகம் பிள்ளைக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது.
“சீச்சீ, நான் அதுக்காகக் கேக்க வில்லை” என்றார். மற்றவர்களும் அவனை அதிசயமாகப் பார்த்தார்கள். அவன் தைரியமாக இருந்தான்.
புகையிரதம் இரைந்து கொண்டிருந்தது. ஆறுமுகம்பிள்ளை தான் உயர் வேளாளன் என்ற திமிருடன் நிமிர்ர் திருந்தார். அந்த இளைஞன் பற்றிய அபிப்பிராயம் அவர் மனதில் நன்றாகக் குறைந்துவிட்டது.
சற்று நேரத்தின் பின் அவர் மீண்டும் அவனுடன் பேசினார்.
“உன்ரை பேர் என்ன ?”
அவர் கேட்ட முறை அவனுக்குப் பிடிக்கவில்லை. பொல்லாத கோபம். என்றாலும் அடக்கிக்கொண்டான்.
“என் பெயர் முத்துக்குமார்”
“நீ இங்கை கொழும்பிலை எங்கே …”
திடீரென எழுந்த அவன் ஆறுமுகம் பிள்ளையின் கன்னத்தில் பளார். பளாரென ஆத்திரத்தோடு அடித்தான்.
அந்தச் சீட்டுகளில் இருந்தவர்கள் திகைத்து விட்டார்கள். மற்ற சீட்களில் இருந்தவர்களும் அடிச்சத்தம் கேட்டு எழுந்து பார்த்தார்கள்.
“ஏன் தம்பி அடிச்சனீர்?” என்று அதே சீட்டில் இருந்த கிழவர் கேட்டார்.
“அடிக்கிறதில்லை, இவனை உதைக்க வேணும்! இவ்வளவு நேரமும் என்னோடை நீங்கள், தம்பி என்று மரியாதையாகப் பேசிக்கொண்டு வந்தவன், நான் என்ரை சாதியைக் கூறின உடனே ‘நீ’ என்று மரியாதை இல்லாமல் பேசுறான். ஆனால் நான் மரியாகத்தான் இவனோடை பேசினன். இவனுக்கு நான் என்னத்தில் குறைஞ்சனான். நானும் மனிதன் தான், இவனும் மனிதன் தான்”
“எண்டாலும் தம்பி….”
“என்னங்கோ எண்டாலும்…. இவ்வளவு நேரமும் இவன் என்னத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்தான் எண்டு உங்களுக்குத் தெரியும். இது ஒரு பொது இடம். இங்கே எல்லாரும் வருவார்கள். இந்த இடத்திலயே சாதித்திமிரில தான் பேசிக் கொண்டு வந்தவன். இவன் ஒரு சாதி வெறி பிடித்த நாய்ப்பயல் சயஞ் சொல்லுது, படிச்ச படிப்பு சொல்லுது, பெரியார்கள் சொல்கிறார்கள் சாதி பேசக்கூடாது என்று. அதற்குப் பிறகும் திருந்தாத இவனுக்கு நான் அடிச்சதில என்ன பிழை! மனிதனை மனிதனாக மதிக்கத் தெரிய வேணும்.”
அவன் உட்கார்ந்து கொண்டான்.
“தம்பி செய்தது சரிதான்!
அந்தக் கிழவரே கூறினார்.
“இவருக்குக் குடுக்கத் தான் வேணும்”
என்று ஆறுமுகம்பிள்ளைக்குப் பக்கத்தில் இருந்த இளைஞன் கூறினான்.
ஒருவரும் அடித்ததற்காக அவனைக் குற்றம் சொல்லவில்லை. பலர் நாம் ஏன் பிறர் விஷயத்தில் வீணாகத் தலையிட வேணும், என்ற வழக்கமான யாழ்ப்பாணத்தமிழர் பண்பாட்டு உணர்வோடு அபிப்பிராயம் கூறாது மௌனம் சாதித்தனர்.
ஆறுமுகம்பிள்ளை அவமானத்தால் முகத்தை நிமிர்த்தமுடியாமல் தலை குனிந்தவாறு இருந்தார். ஒருவர் தானும், முதலில் தன்னோடு ஆதரவா கப் பேசியவர்களும் கூட தனக்குச் சார்பாக ஒரு வார்த்தையும் கூறவில்லையே என்று மனதுக்குள் எரிந்து வெடித்துக் கொண்டிருந்தார்.
புகையிரதம் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. இளைஞன் ஆறுமுகம் பிள்ளையை நோக்கியவாறு உட்கார்ந்திருந்தான்.
– அஞ்சலி மாத சஞ்சிகை – மார்ச் 1971
“இந்தக் கீழ் ஜாதி-மேல் ஜாதி புகைச்சலும், சண்டையும் இந்திய உப-கண்டத்திலிருந்து ஸ்ரீ லங்காவிற்கும் பரவி விட்டதோ? கொழும்புவில் எல்லோரும் சரி சமமாகவே பாவிக்கப் படுகின்றார்கள் என்பது மிகவும் திருப்தியே.
இந்த உணர்வு இலங்கை பூராவும் நிலவவேண்டும் என்பது என் அவாவாகும். அது நிறைவேறுமா? சிங்களவர்களும், கம்யூனிஸ்டுகளும் (இந்தச் சீனக் கம்யூனிஸ்டுக்களையும் சேர்த்துத் தான் நான் சொல்லுகின்றேன்.) கவிஞர் திரு. தாயுமானவ ஸ்வாமிகள் சொன்ன அழகிய
கூற்று மிகவும் பொருத்தமானது போலத்தான் எனக்குத் தோன்றுகின்றது. அது என்னவெனில் : “எல்லோரும் மன மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கவேண்டும் என்று நினைப்பதவுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே !” என்னே அவர் உயர்ந்த, பரந்த நோக்கு.
“ம.கி.சுப்ரமணியன்.”
சூளைமேடு, சென்னை,. (தமிழ் நாடு.)