ஆனைக்கல் வலசில் ரோட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. காண்ட்ராக்டர் நல்லமுத்து அப்போதுதான் வெளியே எங்கோ போயிருந்தார். வேலன், கந்தசாமி, ராமன், அன்பான் நால்வரும் வேலை செய்து கொண்டிருந்தனர். வேலியின் ஓரமாக உள்ள மண்ணைப் பறித்து தார்ச்சாலையின் கங்குகளில் இடுவதுதான் வேலை.
முகிலனூர் யூனியனுக்கு உட்பட்ட காண்ட்ராக்ட் அது. முகிலனூரில் யூனியன் ஆஃபிஸ் இருந்தது. காவல் நிலையம் இருந்தது. நமக்கு இங்கு உதவாத வேறு சிலவும் இருந்தன.
தட்டான் காட்டு ஓரமாக வேலியருகே குழி பறிக்கும் போதுதான் அது தட்டுப்பட்டது. புதையல்.
முன்காலத்தின் தங்கச் சில்லுகள்-சல்லிகள்.
ஒரு மண் கலயத்துள் அவை இருந்தன. எத்தனை நூற்றாண்டுக்கு முந்தியதோ அது. ஒரு காட்டுப் பகலில் நாலு பேரை குபேரனாக்கிவிட்டது. காண்ட்ராக்டர் நல்ல முத்துக்குக்கூட விஷயம் தெரியாது அமுக்கி விட்டார்கள். நால்வரும் சுணக்காமோ சடைவோ கொள்ளாமல் பிரித்துப் பங்கிடும்படி தங்க வட்டங்கள் நான்கால் வகுபடும் இரட்டைப் படையில் இருந்தன.
ஆனால் கிராமத்தில் ரகசியத்தைப் பாதுகாப்பது ராணுவ ரகசியத்தைக் காப்பதைவிட சிரமமானது. நால்வரில் வேலன்தான் சாயங்கால போதை மிதப்பில் முகிலனூரில் ‘சின்னு’விடம் உளறியது. கேள்விப்பட்ட உடன் ‘சின்னு’ தன் முக்கிய நண்பர்கள் சிலரைத் தேடிப் போனார். அவர்கள் கூட்டுச் சதி தீட்டினர்.
அந்தக் கும்பல் இரவு பத்து மணிக்கு நாலு பேரையும் தேடிக் காரில் போனதுபோது சின்னு காரில் இல்லை. பயங்கர விவரமேட்டிக் அவர். மற்றபடி காரில் போன கும்பலில் இரண்டு பேர் போலீஸ் சீருடை அணிந்திருந்தனர். அவர்கள் எப்படியோ அந்தச் சீருடையையும் சிவப்புத் தொப்பியையும் ஏற்பாடு செய்துவிட்டனர்.
(இக்குறிப்பிலிருந்து காலம் இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதிக்கும் கடைசிப் பகுதிக்கும் இடைப்பட்டது என அறிக).
ரோட்டு வேலை செய்த நால்வரும் பிரிட்டிஷ், இந்தியா என யார் ஆட்சி செய்தாலும் போலீஸ் என்றால் நடுங்கத்தான் வேண்டுமென மரபு அணுக்களில் செய்தி கொண்டவர்கள்.
போலீஸ் உடுப்பைப் பார்த்ததும் கிடுகிடுவென நடுநடுங்கி உடனடியாக தங்கத்தை ஒப்படைத்தனர். தங்கத்தைப் பெற்றுக் கொண்டு கார் ஏறுகிற நேரம் சீருடைக்காரரான ராமலிங்கம்,
“காலைல ஸ்டேஷனுக்கு வாங்கடா!” என அதட்டினார். பிறகு கார் விரைந்து மறைந்துவிட்டது. மறுநாள் காலை..
ஸ்டேஷனில் வேலன், கந்தசாமி இவர்களைப் பார்த்த எஸ்.ஐ.
“என்னய்யா?” என்றார்.
“சமூகந்தானுங்க வரச் சொன்னீங்க”
“நானா. எப்போ?”
எஸ்.ஐ. குழம்பினார். நால்வரும் விளக்கினர். பிறகென்ன காவல்துறை துரிதமானது. வலை தூண்டில் இவைகளை வீசித் தேடி சின்னு, ராமலிங்கம் இதரர்களைக் கைது பற்றினர்.
நம்மைப் போல் வேஷமிட்டுப் போய் இவர்கள் ஏமாற்றுவதா என்ற கடுப்பு வேறு காவல்துறைக்கு. இந்தக் கேஸில் வம்பாடுபட்டது சின்னு (எ) சின்னதுரையின் கோஷ்டி. முதன்முதலாக விராடபுரம் கோர்ட்டுக்குப் போகும்போது காரின் பின்ஸீட்டிலிருந்த ராமலிங்கத்தின் பிடரியில் சின்னு ‘பொடங்’ கென ஒன்று போட்டார்.
“காரியத்தக் கெடுத்த பாவி! நடிக்கறதுன்னாலும் அளவாத்தான் நடிக்கணும்டா.”