ஒண்ணுக்கு நாலு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 13,524 
 
 

“”கோபால் சார்… கோபால் சார்…” என்று வாசலில் குரல் கேட்டது.
குளித்துவிட்டு வந்து, பூஜை செய்து கொண்டிருந்த கோபாலின் செவிகளில், அவரை யாரோ வீட்டு வாசலில் நின்று கூப்பிடுவது கேட்டது.

“”சரசு… வாசல்லே யாரோ என்னை கூப்பிடற சத்தம் கேட்கறது. பூஜை செஞ்சுண்டிருக்கேன். சித்த போயி யாருன்னு பாரு…” என்றார் கோபாலன்.

சமையலில் ஈடுபட்டிருந்த அவர் மனைவி சரசுவதி, அடுப்பை அணைத்துவிட்டு, புடவைத் தலைப்பை இழுத்து, கழுத்தை மூடிக் கொண்டு வெளியில் வந்து பார்த்தாள்.

ஒண்ணுக்கு நாலு

ஏழெட்டு பேர், நின்று கொண்டிருந்தனர். ராமன், தங்கப்பன், வெங்கடேசன், ஜாபர், டேனியல், ஆராவமுது, காவேரி!

எல்லாரது முகத்திலும், லேசான கோபம் தெரிந்தது.

“”கோபால் சார் இருக்காராம்மா?” என்று கேட்டான் தங்கப்பன்; கை வண்டியில் வாழைப்பழம், சப்போட்டா, திராட்சை, சாத்துக்குடி ஆகியவைகளை வைத்து, தெருத் தெருவாக சென்று விற்பவன்.

“”பூஜை பண்ணிண்டிருக்கார்…. சித்த இருங்கோ… இப்ப வந்துடுவார்,” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு, உள்ளே வந்தாள் சரசு.

“”ஸ்கூல் கட்ட கமிட்டி போட்டிருக்கே… அவாள்ளாம் கும்பலா வந்திருக்கா… பார்த்தா, கொஞ்சம் கோபமா இருக்கிற மாதிரி தெரியறது!” என்றாள், கணவரிடம்.

“”கோபமா இருக்கிற மாதிரி இருக்காளா?” என்று கேட்டபடி பூஜையை முடித்து வந்த கோபாலன், “”வாங்கோ… வாங்கோ… என்ன கமிட்டி மெம்பர்ஸ் எல்லாம் ஒண்ணா சேர்ந்து வந்திருக்கேள்?” என்றார், அவர்களைப் பார்த்து.

“”கோபால் சார்… நீங்க கொஞ்சம் எங்க கூட இப்போ வரணும்!” என்றார் வெங்கடேசன்.

“”ஸ்கூல் பில்டிங் கட்ட பணமில்லாம கஷ்டப்படறோம்… யாராவது டொனேஷன் தரேன்னு சொல்லியிருக்காளா?”

“”இல்லை… சட்டையை போட்டுகிட்டு கொஞ்சம் வாங்க கோபால் சார்!” என்றார் ஜாபர்.

எல்லாரும் ஏதோ கோபத்திலிருக்கின்றனர் என்பது புரிந்தது கோபாலுக்கு. என்ன சமாச்சாரம், என்ன கோபம் என்றெல்லாம் இப்போது விசாரித்துக் கொண்டிருப்பதைவிட, கூடப் போய், என்னவென்று பார்த்து விடுவது தான் நல்லதென்று தோன்றிற்று கோபாலுக்கு. சட்டையை மாட்டிக்கிட்டு, அவர்களுடன் புறப்பட்டார்.

வழியில் எவரும், அவருடன் பேசவில்லை.

ஸ்கூல் கட்டடம் கட்டிக் கொண்டிருக்கும் இடத்துக்கு எல்லாரும் வந்து சேர்ந்தனர்; நின்றனர். “ஏன் என்னை இங்கே அழைச்சுக்கிட்டு வந்தீங்க, சொல்லுங்க?’ என்பது போல அவர்களைப் பார்த்தார் கோபாலன்.

“”பில்டிங்கை பாருங்க கோபாலன் சார்,” என்றார், ஆராவமுது.
பார்த்தார் கோபாலன்.

பேஸ்மெண்டோடு நின்று கொண்டிருந்தது ஸ்கூல் பில்டிங்.

“”பணம் இல்லைன்னு வேலையை நிறுத்தி வைச்சிருக்கோம்… அதனாலே, பேஸ்மென்ட்டோட பில்டிங் நிக்குது…”

“”அதுக்கு என்ன இப்போ?” என்றார் கோபாலன்.

அந்த கிராமத்தில் ஐந்தாம் வகுப்போடு முடிகிற ஒரு சின்ன ஸ்கூல் தான் இருந்தது. எட்டாவது வகுப்பு, பத்தாவது வகுப்பு வரை குழந்தைகள் படிக்க ஒரு ஸ்கூல் இல்லை.

நான்கு கி.மீ., தள்ளி இருக்கிற ஸ்கூலுக்குத் தான், குழந்தைகள் போக வேண்டியிருந்தது. பஸ் கிடையாது; சாலைகளும் குண்டு குழியும் தான். ஸ்கூல் பேக், டிபன் கூடையோடு நடந்து தான், குழந்தைகள் போய் கொண்டிருந்தனர்.

கோபாலுக்குத் தான், உள்ளூரிலேயே ஒரு ஸ்கூல் ஆரம்பித்தால் என்னவென்று முதலில் தோன்றியது.

ராமன், தங்கப்பன், வெங்கடேசன், ஜாபர், டேனியல், ஆராவமுது என்று ஊரின் பலதரப்பட்ட மக்களில் ஒரு சிலரை அழைத்து, ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் இருந்தாக வேண்டிய அவசியத்தை வற்புறுத்திப் பேசினார்.

எல்லாருக்கும் அவர் பேசியது பிடித்திருந்தது.

“பணத்துக்கு எங்கே போறது?’ என்றார் டேனியல்.

“மொதல்ல ஒரு கமிட்டி போடுவோம்… அப்புறம் டொனேஷன் கேட்போம் எல்லார் கிட்டேயும்!’ என்றார் கோபாலன்.

“அப்புறம் கவர்ன்மெண்டு உதவுமா?’ என்றார் ராமன்.

“கவர்மென்டுக்கு பெட்டிஷன் கொடுப்போம்… கலெக்டரை போய் பார்ப்போம்….’ என்றார் கோபாலன்.

“நீங்களே கமிட்டி தலைவரா இருங்க கோபாலன் சார்… நாங்களெல்லாம் கமிட்டி மெம்பர்களாக இருக்கோம்!’ என்றனர் எல்லாரும்.
கமிட்டி அமைக்கப்பட்டது.

சின்ன மிராசுவைப் போய் பார்த்தனர். அவர், “நல்ல காரியம் பண்றீங்க… ஒரு ஏக்கர் நிலம் தரேன்…’ என்று சொல்லிக் கொடுத்தார்.

ஆளாளுக்கு நூறு, ஐநூறு, ஆயிரம் என்று கொடுத்தனர்.

செங்கலும், சிமென்ட்டும் வந்திறங்கிற்று; கொத்து வேலைக்காரர்கள் வந்தனர்.
ஒரு நல்ல நாளில் வானம் தோண்டப்பட்டு, அஸ்திவாரம் போடப்பட்டு, கட்டட வேலை தொடங்கிற்று. இப்படி திரும்பி பார்ப்பதற்குள், கட்டடம் பேஸ்மெண்ட் வரை வந்துவிட்டது.

அதற்கு மேல் கட்டட வேலை நடக்க பணமில்லாமல், வேலை பாதியிலேயே நின்றுவிட்டது.

“”பாத்தீங்களா கோபால் சார்… பில்டிங் பாதியிலேயே நிக்குது…” என்றார் ஜாபர்.

“”பணம் இல்லை; நிக்குது,” என்றார் கோபாலன்.

“”பணமில்லாம நிக்கலே கோபால் சார்…”

“”பின்னே?”

“”உங்க முரட்டு பிடிவாதத்தால் நிக்குது!”

“”என்னாலா, என் பிடிவாதத்தாலா?” என்று பதறியபடி கேட்டார் கோபாலன்.

“”ஆமாம்… உங்க பிடிவாதத்தால தான் பாதியிலே நிக்குது… பணத்தை அள்ளிக் கொடுக்க கனகசபை ரெடியா இருக்கார்… நியாயம், உண்மை, நேர்மை, சத்தியம் ஆகியவற்றை மாணவர்களுக்கு போதிக்கிற ஸ்கூல் இருக்கிற கட்டடம் நியாயமான, உண்மையான, நேர்மையான, சத்தியமான வழியிலே வந்த பணத்தாலே கட்டப்பட்டதா இருக்கணும்…

“”அப்போது தான் அங்கே படிக்கிற குழந்தைகள், ஒழுக்கமானவங்களா வருவாங்க… அதனாலே பாவமான வழிகள்ல பணம் சம்பாதிக்கிற கனகசபைக்கிட்டேயிருந்து ஒரு சல்லி காசு கூட வாங்கக் கூடாதுன்னு பிடிவாதம் பிடிக்கிறீங்க; எங்களையும் தடுக்கறீங்க… அதனாலே ஸ்கூல் கட்டடம் பாதியிலேயே நிக்குது… அது தான் உங்க மேலே எங்களுக்கெல்லாம் கோபம்!” என்றார், வெங்கடேசன்.

“”அதையே தான் இப்ப சொல்றேன்; எப்பவும் சொல்வேன். ஊர்க்காரங்க எல்லாம் கனக சபையோட பெரிய மளிகைக் கடையிலே அரிசி, பருப்பு எண்ணெய் எல்லாம் வாங்கறோம்… ஒண்ணுக்கு பத்து விலை வைச்சு விக்கறான் கனக சபை. வாய்மூடிக்கிட்டு வாங்கறோம்.

“”அவரோட ஜவுளிக்கடை, பார்மசி, பேன்சி ஸ்டோர், ரெடிமேட் ஷாப், டிபார்ட்மென்டல் ஸ்டோர்ல எல்லாம் கொள்ளை விலை வைச்சு விக்கிறான். நல்லாத் தெரியுது அவன் நல்ல வழியிலே தொழில் பண்ணலேன்னு… அது தெரிஞ்சும் அவன் கடைகள்லேயே போயி எல்லாரும், எல்லாம் வாங்கறோம்…

“”அப்படிப்பட்டவன் கிட்ட பணம் வாங்கி, ஸ்கூல் பில்டிங் கட்டறதை விட, நம்ம குழந்தைங்க பக்கத்து மீனாட்சிபுரத்துக்கு கால் வலிக்க, கால் தேய நடந்து போயி, படிச்சுட்டு வர்றது எவ்வளவோ மேல்…” என்றார் கோபாலன், “படபட’வென.

“”உங்க முடிவை மாத்திக்க மாட்டீங்களா கோபாலன் சார்,” என்றார் டேனியல்.

“”மாட்டேன்!”

“”நிச்சயமா…”

கோபாலின் முன் வந்தார், வெங்கடேசன்,

“”எங்களை மன்னிச்சுடுங்க சார்… ஒரு தனிப்பட்ட மனிதரை விட, ஒரு ஸ்கூல் பில்டிங் கட்டி முடிக்கிறது தான் எங்களுக்கு முக்கியம்… உங்களை கமிட்டித் தலைவர் பதவியிலேருந்து நீக்கறோம். ஜாபரை தலைவராப் போடறோம்… வாங்க எல்லாரும்!” என்று சொல்லிவிட்டு நடந்தார் வெங்கடேசன்.

“இதைத் தவிர எங்களுக்கு வேற வழி தெரியலே சார்…’ என்பது போல கோபாலை திரும்ப திரும்ப பார்த்தபடி சென்றனர் மற்றவர்கள்.

“”என்ன சொன்னார் கோபாலன் சார்… நான் கொடுக்கற பணம் வேண்டாம்ன்னு சொன்னாரா?” என்றார் கனகசபை.

“”ஆமாம்…” என்றனர்.

“”ஏன்?”

“”உங்கள் பணம் வேண்டாமாம்… அது நியாயமான முறையிலே நீங்க சம்பாதிக் கவில்லையாம்… உங்கள் கடைகள்ல பொருட்களுக்கெல்லாம் விலையை நிறைய வைச்சு எங்களுக்கு வித்து சம்பாதிச்ச பணமாம்!” என்றார் ராமன்.

கனகசபை திரும்பி, கணக்குப் பிள்ளையைப் பார்த்தார்.

“”ஐயா…” என்று உடம்பை வளைத்து, அவர் முன் வந்து நின்றார்.

“”கையிலே கேஷா எவ்வளவு இருக்கு கணக்குப் பிள்ளை.”

கண்களை மூடி வலது கை ஆட்காட்டி விரல் அப்படி இப்படி ஆட்டி, பிறகு விரல்களை ஒவ்வொன்றாக மடக்கி, பிரித்து, “”அம்பதாயிரம்… இல்ல, அறுபதாயிரம் இருக்கும் ஐயா!” என்றார் கணக்குப் பிள்ளை.

“”அவ்வளவையும் அப்படியே அள்ளி லெதர் பேக்ல போட்டு கொண்டு வாங்க!” என்றார் கனகசபை.

கொண்டு வந்து நீட்டினார் கணக்குப்பிள்ளை. அதை வாங்கி, கக்கத்தில் வைத்து, கமிட்டி மெம்பர்களை பார்த்து, “”வாங்க போகலாம்!” என்றார்.

“”எங்கே சார்?” என்றார் ராமன்.

“”கோபாலன் சாரை பார்க்கத் தான்,” என்றார் கனகசபை.

“”லெதர் பேக்ல பணம்?”

“”ஸ்கூல் பில்டிங் கட்ட கொடுக்கத் தான்,” என்றார் கனகசபை.

“”உங்கள் பணத்தை வாங்க மாட்டேன்னு கோபாலன் சார் பிடிவாதமா இருக்காரே சார்?”

“”வந்து பாருங்க…” என்றபடி, முன்னே நடந்தார் கனகசபை. நடப்பது என்னவென்று தெரியாமல் அவருடன் மற்றவர்களும் நடந்தனர்.

அரைகுறையாக இருக்கும் ஸ்கூல் கட்டடத்தின் முன் குவித்து வைத்திருந்த மண் குவியலின் மீது உட்கார்ந்து, முழுமை பெறாத ஸ்கூல் கட்டடத்தையே கண்களில் கண்ணீர் பளபளக்க பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலன்.

“”கோபாலன் சார்… ஸ்கூல் பில்டிங்கை கட்டி முடிக்க முதல் தவணையாக பணம் அறுபதாயிரம் ரூபாய் இந்தாங்க…” என்று நீட்டினார் கனகசபை.

“”வேண்டாம் உங்க பணம்…” என்றார் கோபாலன்.

“”இது என் பணமில்லை கோபாலன் சார்… மக்கள் பணம்; உங்கள் எல்லாருடைய பணம்…” என்றார் கனகசபை.

“”என்ன சொல்றீங்க கனகசபை?”

“”இந்த ஊர் மக்கள் எல்லாம், தங்களுக்குத் தேவையான பொருட்களை என்னுடைய பல்வேறுபட்ட கடைகள்ல வருஷக் கணக்கா வாங்கறாங்க… ஒண்ணுக்கு நாலு விலை வைச்சு அவங்களுக்கு வித்துச்கிட்டு வரேன்… ஒண்ணு எனக்கு, மத்த மூணு விலையும் அவங்களுடையது தான். அது தான் இந்த பணம்…

“”இது என் பணமில்லை கோபாலன் சார்… நம்ம ஊர் மக்களுடைய பணம்… ஸ்கூல் பில்டிங்கை என் பணத்தாலே இல்லை, மக்கள் பணத்தாலேயே கட்டுங்க; முடிங்க… ஸ்கூலுக்கு லைப்ரரி, லேபரேட்டரி கட்ட எல்லாம் இன்னும் பணம் தரேன்… அதுவும் மக்கள்கிட்டேயிருந்து, நான் ஒண்ணுக்கு நாலு விலை சொல்லி வித்த பணம் தான்…”

கோபாலன் எழுந்து, கனகசபை கொடுக்கும் பணத்தை கண்ணை மூடி பெற்றுக் கொண்டார்.

– ஜூலை 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *