ஏசு நாதரின் வாக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,565 
 
 

வழக்கம்போல் காலை எட்டு மணிக்கெல்லாம் தம்முடைய ‘நர்ஸிங் ஹோ’மிலிருந்த நோயாளிகளைப் பார்வையிடுவதற்காக ஞானப்பிரகாசம் கிளம்பிக் கொண்டிருந்தபோது, “இன்னும் எத்தனை நாட்கள்தான் உங்கள் நர்ஸிங் ஹோமையும் வீட்டையும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டாள், அவருடைய மனைவி அற்புதம்.

“பொழுது விடிந்தால் இந்தப் பல்லவிதானா?” என்றார் டாக்டர், தம்முடைய வழுக்கைத் தலையைத் தாமே தடவிப் பார்த்து ரசித்தபடி!

“உங்களுக்கென்ன தெரியும்?-நேற்றுக்கூட என்னை ஒரு நோயாளி கேட்டார், ‘நீங்கள் எத்தனை நாட்களாக இங்கே இருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வியாதி?’ என்று!” என்றாள் அவள், அங்கிருந்த நோயாளிகளோடு தானும் ஒரு நோயாளியாக இருக்க விரும்பாமல்.

“இவ்வளவுதானே, நாளைக்கே வீட்டை மாற்றி விட்டால் போச்சு!” என்றார் அவர். “இப்படித் தான் உங்கள் அப்பா கண்ணை மூடும் வரை உங்களுடைய அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாராம்!” என்றாள் அவள்.

அவர் விடவில்லை; “இப்படித்தான் என் அம்மா கண்ணை மூடும் வரை என்னுடைய அப்பாவை நச்சரித்துக் கொண்டிருந்தாளாம்!” என்று பதிலுக்குப் பதில் பழி வாங்கிவிட்டுப் படியை விட்டுக் கீழே இறங்கினார்.

“இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!” என்று அலுத்த படி அவள் உள்ளே செல்ல, அவருடைய மகன் அருளானந்தன் வெளியே வந்து, “அப்பாப்பா! உங்கள் ‘போர்’டைப் பார்த்தீர்களா, அப்பா? ‘டாக்டர் ஞானப் பிரகாசம் ‘எம்.பி., பி. எஸ்.’ ஸு-க்குக் கீழே ‘ஏஜண்ட், எமதர்மராஜன்’ என்று யாரோ எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள், அப்பா!” என்றான் கண்களில் குறுநகைதேங்க.

“போடா போக்கிரி, எல்லாம் உன் வேலையாய்த்தான் இருக்கும்!” என்று அவனைச்செல்லமாகக் கடிந்து கொண்டே டாக்டர் ஞானப்பிரகாசம் நர்ஸிங் ஹோமை நோக்கி நடையைக் கட்டினார்.

***

டாக்டர் பாக்கியநாதனின் ஒரே மகன் டாக்டர் ஞானப்பிரகாசம். ‘கொடுப்பவனாயிரு; வாங்குபவனாயிருக்காதே!’ என்ற ஏசுநாதரின் வாக்கைச் சிரமேற்கொண்டு மிஸ்டர் பாக்கியநாதன் தான் வாழ்ந்து மறைந்ததால் அவருக்குப் பின் அவருடைய வீட்டில் எஞ்சியிருந்ததெல்லாம் புகழ் ஒன்றுதான். அந்தப் புகழுக்கும் ஒர் இழுக்கு இருந்தது.அதாவது, ‘டாக்டர் பாக்கியநாதனின் மரணம் இயற்கை மரணம் அல்ல; செயற்கை மரணம்’ என்பதே அந்த இழுக்கு!

அவர் என்ன செய்வார், பாவம்!-உலகத்தினிடம் அவர் இரக்கம் காட்டிய அளவுக்கு உலகம் அவரிடம் இரக்கம் காட்டவில்லை. பரோபகாரியாக வாழ்ந்ததின் பலன், கடன்காரர் உருவிலே வந்து அவருடைய கழுத்தை நெரித்தது-ஜப்தி, வாரண்ட் என்று பல ஜபர்தஸ்துகள்; செத்தால் தலை முழுகுவதைத் தவிர வேறொன்றும் செய்ய விரும்பாத உறவினர்கள்; ‘நன்றாயிருக்கிறான்’ என்று தெரியும் வரை நாய்போல் வளைய வந்து, ‘கெட்டுவிட்டான்’ என்று தெரிந்ததும் ஒநாய்போல் ஒடி ஒளியும் நண்பர்கள்!-பார்த்தார்; கடைசி நிமிஷத்தில் தம்முடைய மானத்தைக் காத்துக்கொள்ள வழி என்னவென்று பார்த்தார்-ஒரேவழி, பிறருடைய ஏச்சும் பேச்சும் செவி வழி புகுந்து இதயத்தை ஊடுருவாத அந்த ஒரே வழி-தற்கொலை! ஆம், தற்கொலை தான்!-அக்கம் பக்கம் தெரியாமல் அதைச் செய்து கொண்டு, அமைதி கண்டுவிட்டார்.அவர்

இந்தச் சம்பவம் தம்முடைய வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத சம்பவமாயிருந்தாலும், முதலில் தம்மையும் தம் தந்தையின் புகழுக்கு உரியவராக்கிக் கொண்டு விடவேண்டும் என்றுதான் டாக்டர் ஞானப்பிரகாசமும் நினைத்தார். ஆனால் அந்தப் புகழைக் கொண்டு ஒரு கப் காபிகூடச் சாப்பிட முடியாமற் போனதோடு, அவர் கண்ட உலகமும், ‘எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்னதருவாய்?’ என்பதுபோல் ‘ஒன்வே டிராபிக்’காக இருக்கவே, வாழ்க்கையை வரவு-செலவுக் கணக்காக அமைத்துக்கொண்டு, ‘இட்டார்க்கு இடு; செத்தார்க்கு அழு!’ என்று தம் தந்தைக்கு நேர் விரோதமாக ‘அழ ஆரம்பித்துவிட்டார்’ அவர்!

இதனால், ‘ஏழைகளிடம் இரக்கம் காட்டுவது கூட ஏமாளித்தனம்’ என்ற அளவுக்கு அவருடைய ஞானம் பிரகாசமடைந்துவிட்டது!-அடையாதா, ஆதாயம் ஏதாவது கிடைக்குமென்றால், ஆனானப் பட்ட பணக்காரர்களே ஏழைகளாக நடிக்கத் தயாராயிருக்கும்போது?

***

அன்று நோயாளிகள் அனவரையும் பார்த்துவிட்டு டாக்டர் ஞானப்பிரகாசம் தம்முடைய அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, “ஐயா, காப்பாற்றுங்கள்! தயவு செய்து காப்பாற்றுங்கள்! யாரோ ஒரு பாவி என் மகன்மேல் காரை ஏற்றிவிட்டுக் காற்றாய்ப் பறந்துவிட்டான்!-காப்பாற்றுங்கள் ஐயா, தயவு செய்து என் மகனைக் காப்பாற்றுங்கள் ஐயா!” என்ற அவலக் குரல் கேட்டு நின்றார்.

தலைவிரி கோலமாக இருந்த யாரோ ஒரு தாய், பலத்த காயங்களுக்குள்ளான பத்து வயதுப் பாலகன் ஒருவனைக் கைகளில் ஏந்தியபடி, கண்ணீரும் கம்பலையுமாக அவரை நோக்கித் தலை தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தாள்.

“இது ஆஸ்பத்திரி இல்லை அம்மா, நர்ஸிங் ஹோம்! இங்கே யாருக்கும் இனாமாக வைத்தியம் செய்யமாட்டார்கள்; போ, ஆஸ்பத்திரிக்குப் போ!”என்றார் டாக்டர், அவளைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு.

“ஆஸ்பத்திரிக்குப் போகும் வரை என் மகன் உயிர் தரித்திருக்க மாட்டான் போலிருக்கிறது; காப்பாற்றுங்கள் ஐயா, தயவு செய்து காப்பாற்றுங்கள்!”என்று ‘கெஞ்சு, கெஞ்சு’ என்று கெஞ்சினாள் தாய்.

“அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? போபோ, ஆஸ்பத்திரிக்குப் போ!”

டாக்டர் தம் இதயத்தை இரும்பாக்கிக்கொண்டு மேலே நடந்தார்.

“நில்லுங்கள்; இந்த ரத்தப் பெருக்கையாவது முதலில் நிறுத்துங்கள்!” என்றாள்.தாய், தன்கண்களைக் குளமாக்கிக்கொண்டு.

டாக்டர் திரும்பினார்.

“பணம் வைத்திருக்கிறாயா, பணம்?”

“பணமா? காய்கறி விற்பவள் நான்;என்னிடம் ஏது ஐயா பணம்? உங்களுக்குப் புண்ணியமுண்டு, பெருகி வரும் இந்த ரத்தத்தை மட்டும் எப்படியாவது நிறுத்திவிடுங்கள்; அதற்குப் பிறகு வேண்டுமானால் இவனை நான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்விடுகிறேன்!”

“பைத்தியக்காரி!வாழ்க்கையில் வரவு வைப்பது பாவம்; செலவு வைப்பது புண்ணியம். இதுகூடத் தெரியாதா, உனக்கு? போபோ, ஆஸ்பத்திரிக்குப் போ!” “போகிறேன்; ரத்தத்தை நிறுத்துங்கள்! அதற்காக இதோஎன்னிடமுள்ள காசு!” என்று தன் மடியிலிருந்த இருபது பைசாக்களை எடுத்து அவரிடம் நீட்டினாள் தாய்.

டாக்டர் சிரித்தார்; சிரித்துவிட்டுச் சொன்னார்:

“இந்தக் காசை நீயே வைத்துக்கொள்; வெற்றிலை பாக்குப் புகையிலைக்கு உதவும்!”

தன்னைத்தான் பரிகசிக்கிறார் என்றால், தன்னுடைய ஏழ்மையையும் இல்லாமையையுமல்லவா பரிகசிக்கிறார், இந்த டாக்டர்?-அந்த இருபது காசு, இருபது காசாகத்தான் தெரிகிறதே தவிர, அதிலுள்ளதாய்மை உணர்ச்சி தெரியவில்லையே, இவருக்கு?

இப்படி நினைத்தாளோ இல்லையோ, அதுவரை பசுவாயிருந்த அவள் இப்போது புலியானாள்; புலியாகிச் சொன்னாள்:

“அட, பாவி பிள்ளை-குட்டி பெறாதவனா, நீ? ஈவு, இரக்கம் என்பதே கிடையாதா, உனக்கு?”

“கிடையாது; என்னிடம் ஈவு, இரக்கம் என்பதே கிடையாது!-உலகம் என்னிடம் ஈவு, இரக்கம் காட்டாதபோது, அதனிடம் நான் மட்டும் ஏன் காட்ட வேண்டுமாம்?-கிடையாது; என்னிடம் ஈவு, இரக்கம் என்பதே கிடையாது!”

அழுத்தந் திருத்தமாக இதைச் சொல்லிவிட்டுத் தம் அறைக் கதவைப் ‘பட்’டென்று அடைத்துக் கொண்டுவிட்டார் டாக்டர்:

அப்போதுதான் அந்த அழுகைச் சத்தம்- தமது மகன் அருளானந்தத்தின் அழுகைச் சத்தம் அவருடைய காதில் விழுந்தது-சாளரத்தின் வழியாக எட்டிப் பார்த்தார்.

‘காவ், காவ்’ என்று கத்தும் கால் ஒடிந்த நாய்க்குட்டியுடன் அவன் அழுதபடி அவரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

“ஏண்டா, அழுகிறாய்?”

“யாரோ ஒரு மடையன் இந்த நாய்க்குட்டியின் மேல் ஸைக்கிளை ஏற்றிவிட்டுப் போய்விட்டான், அப்பா!”

“அதற்கு நீ ஏன் அழவேண்டுமாம்?”

“போப்பா!’உருவம் எப்படியிருந்தாலும் உயிர் எல்லா வற்றுக்கும் ஒன்றே!’என்று நம் பாதிரியார் சொல்லவில்லையா? அதனால் இதன் உயிர் துடிக்கும் போது என்னுடைய உயிரும் துடிக்கிறது!”

“துடித்தால் துடிக்கட்டும்; நீ அதைத் தூக்கித்தூர எறிந்துவிட்டுப் பள்ளிக்கூடத்துக்குப் போ!”

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *