எதைத்தான் தொலைப்பது?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 12,005 
 
 

எதைத்தான் தொலைப்பதென்ற விவஸ்தையே கிடையாதா?

நண்பன் பதட்டத்தோடு ஓடிவந்து சொன்னபோது, நான் நம்பவில்லை. இராணுவம் ஆக்கரமித்த மண்ணில் மரணம் எப்படிச் சாதாரண நிகழ்வாய்ப் போய்விட்டதோ, அதேபோல கற்பைத் தொலைப்பதுகூட ஒரு சாதாரண நிகழ்வாயப் போய்விடுமோ என்ற அச்சத்தோடு தங்கள் சொந்த மண்ணில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்ற அனாதைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், நண்பன் ஓடி வந்து இப்படி ஒரு குண்டைத் தூக்கிப்போடுவான் என்று நான் நினைக்கவில்லை.

திடீரென நண்பன் தனது ஊருக்குப் போவதாகவும் என்னையும் தன்னுடன் துணைக்கு வரும்படி வருந்தி வேண்டிக் கொண்டதால்தான் நானும் அவனுடன் இங்கே வந்தேன். இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தனியே வெளிக்கிட்டுத் திரிவதில் ஒரு சங்கடம் இருந்தது. இளைஞனாகவும், வாட்டசாட்டமாயும் இருந்தால் சோதனைச் சாவடியில் கட்டாயம் மாட்டிக் கொள்வார்கள். துணைக்கு யாராவது வந்தால் விசாரித்தபின் போதிய ஆதாரம் இல்லாவிட்டால், விட்டு விடுவார்கள். ஆனால் தனியே சென்று மாட்டிக் கொண்டால், உங்கள் கதி அவ்வளவுதான். தொலைந்து போனவர்கள் பட்டியலில் எழுதிவிட்டு, உறவுகள் சிவனே என்று காத்திருக்க வேண்டியதுதான். இல்லை, மழை பெய்தால், புதிய மண்கும்பி ஒன்று எங்கேயாவது கரையும்போது உங்கள் கையோ, காலோ மர்மப்படங்களில் வருவதுபோல சட்டென்று வெளியே நீட்டலாம். அப்போதாவது உங்கள் நிலைமை என்ன, உங்களுக்கு என்ன நடந்திருக்கிறது என்பதையாவது மற்றவர்கள் கண்டு கொள்ளலாம். இறந்து போனவர்களின் உறவுகளுக்கு இருக்கும் வலியைவிட, தொலைந்து போனவர்களின் உறவுகளுக்கு இருக்கும் வலி சொல்ல முடியாதது. உறவுகளைத் தொலைத்து விட்டு அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களுக்குத்தான் உண்மையிலேயே அந்த முடிவில்லாத வலி புரியும்.

நண்பனின் வீடுவளவைப் பார்ப்பதற்கு என்று, எவ்வளவோ கஷ்டப்பட்டு இராணுவத்திடம் உத்தரவு வாங்கிக் கொண்டு வந்த எங்களுக்கு வீட்டின் முன் சுவரைப் பார்த்ததுமே அதிர்ச்சியாக இருந்தது. துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு, எது வரினும் அசைய மாட்டேன் என்பதுபோல வீட்டின் முன் சுவர் நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது. ஆனாலும் அதன் காயங்களைப் பார்க்கும்போது எப்படிப்பட்ட வேதனையில் அது துடித்துக் கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குச் சொல்லாமலே ஓரளவு புரிந்தது. ஆக்கிரமிப்பு இராணுவத்தைக் கண்டதும், தன்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டு, குடியிருந்தவர்கள் தப்பிப் போய்விட்டார்களே என்ற வேதனைகூட அதன் மனசுக்குள் இருந்திருக்கலாம். இத்தனை காலமாய் தனித்துப்போன நண்பனின் அந்தவீடு எங்களுக்கு முறையிடுவதற்கென்றே நிறைய விடையங்களைத் தனக்குள் சேகரித்து வைத்திருந்தது. சில வருடங்களாகக் கவனிப்பாரற்றுக் கிடந்ததால் வளவெல்லாம் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடந்தது. பாம்பு பூச்சிகள்கூட அங்கே குடி கொண்டிருக்கலாம் என்ற பயம் எங்களுக்குள் இருந்தது.

எதற்கும் நல்லது என்று நான் முன் எச்சரிக்கையாக வாசலிலேயே நின்று கொண்டேன். நண்பன் மட்டும் ஆர்வம் காரணமாக தனித்து உள்ளே சென்றான். வாசலில் நின்றபடி உள்ளே எட்டிப் பார்த்தேன். செல்விழுந்த கூரை ஆங்காங்கே உடைந்து போயிருந்ததால், பெரிதும் சிறிதுமாய் சூரியக் குஞ்சுகள் கேட்பாரற்று, சுதந்திரமாய் அறைகளுக்குள் விளையாடிக் கொண்டிருந்தன. யார் இந்தப் புதிய விருந்தினர் என்று ஓணான் ஒன்று உடைந்துபோன கண்ணாடி யன்னலுக்கால் என்னை எட்டி எட்டிப் பார்த்து தலை ஆட்டிவிட்டு, வயதுவந்த பருவப் பெண்போல வெட்கப்பட்டுத் தலை சாய்த்துக் கொண்டது.

நல்லகாலம் நான் துணைக்குவந்தது, இல்லாவிட்டால் சொந்தவீட்டிற்கே, இப்படியானவர்களின் விருந்திராக வரவேண்டிய நிலை குறித்த விரக்தியில் நிச்சயமாக நண்பன் மனமுடைந்து போயிருப்பான்.

கொல்லைப் பக்கம் சென்ற நண்பனை இன்னும் காணவில்லையே என்று நான் தேடிப்பார்க்க முனைந்தபோது, அவன் என்னை நோக்கி வேகமாக ஓடி வந்தான்.

வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்த வேகத்தில் மூச்சிரைத்தது. பேய், பிசாசுகளுக்கெல்லாம் நண்பன் பயந்தவனல்ல, ஏதாவது பிணத்தையோ, மண்டை ஓட்டையோ, அல்லது மனித எலும்புக் கூட்டையோ கண்டிருக்கலாம் அதுதான் பயந்துபோய் ஓடி வருகிறான் என்று நினைத்தேன். அந்த மண்ணிலே இதெல்லாம் ஒரு சாதாரண, அடிக்கடி நிகழும் நிகழ்வாய் இப்போது இது இருந்தாலும், நண்பனுக்குப் புதிதாக இருந்திருக்கலாம்.

‘என்ன, என்ன..?’ என்று அவனை ஆசுவாசப் படுத்தினேன்.

‘எல்லா இடமும் தேடிப் பார்த்திட்டேன், காணவில்லை’ என்றான்.

பேயறைந்தது போல என்று சொல்வார்களே, அது போல அவனது முகம் உணர்ச்சிற்று வெளிறிப் போயிருந்தது. அதற்குக் காரணமிருந்தது. எதுவெல்லாம் தொலைந்து போகாது என்ற நம்பிக்கையோடு அவன் அசட்டையாக இருந்தானோ அதெல்லாம் தொலைந்து போனதில் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தொலைந்து போனது ஒன்றும் சாதாரண பொருள் அல்ல, அவர்களது வீட்டுப் பாவனைக்காக பின் வளவில் தோண்டப்பட்டிருந்த நன்னீர்க் கிணறுதான்!

‘உண்மையாவா, கவனமாய் பார்த்தியா?’ நம்பமுடியாமல் மீண்டும் கேட்டேன்.

‘ஆமா, நான் இப்ப தேடிப் பார்த்திட்டுத்தான் வர்றேன், காணோம்!’

‘அங்கே பின் பக்கத்தில், அடி வளவெல்லாம் தேடிப் பார்த்தியா?’

‘பார்த்திட்டேன், அங்கேயில்லை!’

அவன் பதில் சொன்ன தோரணையில் இருந்து, இன்னமும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பது புரிந்தது. அந்த வீடு இருந்த கோலத்தில் இருந்தே இது தனது வீடுதானா என்ற சந்தேகம் அங்கே நாங்கள் காலடி வைத்த நேரத்தில் இருந்தே அவனிடம் இருந்து கொண்டிருந்தது என்பது எனக்குத் தெரியும்.

‘பற்றைகள், புதர்கள் என்று வளர்ந்து கிணற்றை மூடிமறைச்சிருக்குமோ என்று எனக்குச் சந்தேகமாயிருக்கு’ என்று எனது சந்தேகத்தைச் சொல்ல முற்பட்டேன்.

‘எல்லா இடமும் பார்த்திட்டேன், அங்கே இல்லை, இல்லை, இல்லை!’

நான் நம்பவேமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதாகவோ, அல்லது தன்னைப் பயித்தியமாக்குகின்றேன் என்றோ அவன் நினைத்திருக்கலாம், அதனால் தான் அவன் திருப்பித் திருப்பி ‘கிணறு அங்கே இல்லை’ என்று உறுதியாக மறுத்துச் சொன்னான்.

ஒரு கிணறு தொலைந்து போவது என்பது யாழ்ப்பாணத்தில் சாதாரண விடயமல்ல. நதியோ, ஆறோ அந்த மண்ணை வளம் படுத்தவில்லை. மழையைத் தவிர வேறு எந்த விதத்திலும் நன்னீர் கிடைப்பது அரிதாகையால் குடிநீருக்காக அந்தக் கிணற்று நீரை நம்பித்தான் அனேகமான குடும்பங்கள் இருந்தன. மனிதர்கள் மட்டுமல்ல, கால்நடைகள் பயிர்கள், செடிகள், மரங்கள் என்று அந்தக் கிணற்றின் இழப்பை நிவர்த்தி செய்வதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. கிணற்றைக் காணவில்லை என்று நண்பன் ஓடிவந்து முறைப்பாடு செய்தபோது, அந்த இக்கட்டான சூழ்நிலையிலும், சின்னவயதில் எனக்குப் பாட்டி சொன்ன பழைய கதை ஒன்று உடனே ஞாபகம் வந்தது. ஏனென்றால் அந்த மண்ணின் சரித்திரத்தில் கிணறு ஒன்று காணாமல் போனதாக எங்கேயும் எந்த ஒரு குறிப்பும் இதுவரை பதியப்பட்டு இருக்கவில்லை.

ஒரு முட்டாள் அரசன் வேட்டையாடக் காட்டுக்குச் சென்றானாம். பாதை தவறிப்போகவே அவனும் பரிவாரங்களும் நெடுந்தூரம் அலைந்தார்களாம். தாகத்தால் வாடிய அவனுக்கு அங்கே இருந்த கிணறு ஒன்றில் தண்ணிர் அள்ளிப் பருகக் கொடுத்தார்களாம். தாகத்தில் நாவறண்டு போயிருந்த அரசனுக்கு அந்தத் தண்ணீர் தேவாமிர்தம் போல இருந்ததாம். எப்படியோ சரியான பாதையைக் கண்டுபிடித்து அரண்மனைக்கு வந்து சேர்ந்த அரசனுக்கு அந்தத் தண்ணீரைத் தினமும் அருந்த வேண்டும் என்ற ஆசை வந்ததாம்.

மறுநாள் ‘அந்தக் கிணற்றுத் தண்ணீர்தான் வேண்டும்’ என்று அரசன் கேட்டபோது மந்திரி என்ன சொல்வது என்ற தெரியாமல் தயங்கினானாம்.

‘மன்னா, மிகவும் தொலைவில் உள்ள அந்தக் கிணற்றில் இருந்து எப்படி தினமும் தண்ணீர் கொண்டு வருவது?’ என்று மந்திரி தயக்கத்தோடு கேட்டானாம்.

‘அது ஒன்றும் பெரிய காரியமில்லை, அந்தக் கிணற்றையே கொண்டு வந்து இங்கே உள்ள அந்தப்புரத்தில் வையுங்கள்,’ என்று ஆணையிட்டானாம் மன்னன்.

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்பதுபோல, அந்தக் கிணற்றைத் தோண்டி, இங்கே காவிக் கொண்டுவர, உடனே பரிவாரங்கள் கடப்பாரை, கம்பு, கயிற்றோடு கிளம்பினார்களாம்.

பாட்டி சொன்ன கதையில் வந்த முட்டாள்கள் போல, யாராவது நன்னீர் அருந்திப் பழகிய விசுவாசிகள் இந்தக் கிணற்றையே காவிக்கொண்டு போக வந்திருப்பார்களோ?

சிறுபிள்ளைத்தனமாய் இப்படியான யோசனை வரவே எனக்குள் சிரிப்பு வந்தது. எங்களுடைய சில புராணக் கதைகளை, புகலிடம் தேடிவந்த எங்கள் இந்தத் தலைமுறையினருக்குச் சொன்னால் அவர்கள் எங்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். கேள்விமேல் கேள்வி கேட்டு ஏற்றக் கொள்ள மறுக்கிறார்கள். தப்பு எங்கள்மேலா அல்லது அவர்கள்மேலா என்றில்லை. சில சமயங்களில் காலமும், இடமும் மாறும் போது சரியானதை பிழையாகவும், பிழையானதை சரியானதாகவும் எண்ணத் தோன்றும். அதே போலத்தான் அன்று பாட்டி சொன்ன சில கதைகள் சிந்திக்க வைத்தன, அதுவே இன்று என்னைச் சிரிக்க வைத்தது.

யாழ்ப்பாணத்தில் சில விடயங்கள் தேசவழமைச் சட்டத்திற்கேற்ப நடைமுறைப் படுத்தப்பட்டன. ஒரு பெரிய வளவுக்குள் இரண்டு, மூன்று வீடுகள் கட்டப்படும் போது, ஒரு கிணறுதான் பொதுவாக இருந்தால் அந்தக் கிணறு இரண்டு, மூன்று வீடுகளுக்கும் சொந்தமாகும் முறை நடைமுறையில் இருந்தது. பங்குக் கிணறு என்று இதைச் சொல்லுவார்கள்.

நண்பன் சொன்னது உண்மைதானா என்று நானும் அவனுடன் கொல்லைப்பக்கம் சென்று கிணற்றைத் தேடிப்பாரத்தேன். ஏதாவது காரணம் கருதி இராணுவமே புல்டோசரால் மண் அள்ளிக் கொட்டிக் கிணற்றை நிரப்பி மூடியிருக்கலாம். ஏனென்றால் காணாமல் போனவர்களின் உடல்களை இப்படியான கிணறுகளில் போட்டு, ஊருக்கும் உலகிற்கும் மூடிமறைத்த சம்பவங்கள் அந்த மண்ணிலே நிறைய உண்டு. அந்த இடத்தில் செடி கொடிகள் முளைத்து கிணறு இருந்த இடத்தையே அடையாளம் இல்லாமல் மூடி மறைத்திருக்கலாம்.

அடி வளவில் இருந்து பார்க்கும்போதே, அடுத்த வீட்டு வாழைமரங்கள் எல்லாம் செழிப்பாக நிமிர்ந்து நிற்பது தெரிந்தது. நிச்சயமாக அங்கே யாரோ மீளக் குடி வந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நண்பனிடம் விசாரித்தேன்.

நண்பன் ஒரு வேண்டாத வார்த்தை சொல்லி அவர்களைத் திட்டினான்.

‘ஏன்டா அப்படித் திட்டுறாய்?’ என்றேன்.

‘ஆக்கரமிப்பு இராணுவத்தோடு சேர்ந்து எங்களைக் காட்டிக் கொடுக்கிறது இவங்களைப் போன்ற அயோக்கியர்கள்தான், அவங்க சகவாசமே வேண்டாம் என்றுதானே நாங்க வீடுவாசலை விட்டுக் கிளம்பிப்போனோம்.!” என்று தனது மனசுக்குள் புகைந்து கொண்டிருந்த உள்ளக் கிடக்கையைக் கொட்டித் தீர்த்தான்.

பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நல்ல அபிப்பிராயம்தான் வைத்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டேன். எப்படி கணவன் மனைவிக்கு இடையில் புரிந்துணர்வு இல்லாவிட்டால் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போய்விடுகிறதோ, அதேபோலத்தான் அயலவர்கள் சரியாக அமையவில்லை என்றாலும் நிம்மதியைப் பறித்துவிடும். ஒருவேளை இவர்களுக்குள் வேலிச்சண்டை ஏதாவது இருந்திருக்குமோ?

எல்லையில் போடப்படும் வேலி காரணமாக, சில ஊர்களில் வேலிச் சண்டையும் அடிக்கடி நடைபெறும். சில சமயங்களில் இப்படியான சண்டையின்போது, கத்தி வெட்டுக்கூட இடம் பெறும். பெதுவாக வேலி நகர வெளிக்கிட்டால் இப்படியான சண்டை தொடங்கி விடும். சண்டை என்றால் எம். ஜி. ஆர் படங்களில் பார்ப்பது போன்ற வாள் சண்டை அல்ல, அந்த நாட்களில் ஆகப் பெரிய ஆயுதம் என்றால் கொடுவாக் கத்திதான். சில நேரம் பாளைக் கத்தியும் பாவிப்பார்கள். அது உருவத்தில் சின்னன் என்றாலும் பயங்கர சேதத்தை விளைவிக்கும். பக்கத்து காணிக்காரர் கண்ணுக்குள் எண்ணெய் விட்டுக் கொண்டிருக்காவிட்டால் அவர்களது எல்லையில் உள்ள வேலி மெல்ல மெல்ல அவர்களின் காணிப்பக்கம் நகர்ந்துவிடும். திட்டமிட்டு காரண, காரியத்தோடுதான் அப்படி வேலி நகர்த்தப்படும். ஒரு அடி தூரம் நகரப் பல வருடங்கள்கூட எடுக்கலாம். ஆனாலும் அதன் மூலம் நகர்த்தியவர்களுக்குக் கிடைக்கும் பலன் அதிகமாகவே இருக்கும்.

எல்லையில் இருந்த கிடுகு வேலியில் கால் வைத்து ஏறி, அடுத்த வளவை எட்டிப் பார்த்தேன். வேலிக்கு அப்பால் அங்கேயும் ஒரு கிணறு இருந்தது.

‘இங்கேயும் ஒரு கிணறிருக்கே’ என்றேன்.

நண்பன் ஆச்சரியமாய் என்னைப் பார்த்தான்.

‘கிணறா..? அவங்க வீட்டில கிணறில்லையே’ என்றபடி அவனும் எட்டிப் பார்த்தான்.

தொலைந்து போன கிணறு அடுத்த வளவிற்குள் பத்திரமாய் இருந்தது.

எப்படி கிணறு அங்கே போயிற்று? நான் ஆச்சரியமாய் அவனைப் பார்த்தேன்.

‘பாவி, எத்தனை வருடமாய் சாண் சாணாய்; நகர்த்திய எல்லை வேலியை, நாங்கள் இல்லை என்ற துணிவில், ஒரே நாளில் இந்தப் பக்கம் கொண்டு வந்து போட்டுவிட்டானே, போட்டதுதான் போட்டான் எங்க கிணற்றையுமல்லவா அந்தப் பக்கம் கவர்ந்து விட்டான். கண்முன்னாலே பகற்கொள்ளையடிக்கும் இவனெல்லாம் உருப்படுவானா? இவனைப் போன்றவர்கள் இருந்தால் எங்க மண் உருப்படுமா?’ என்று ஆத்திரம்தீரத் திட்டித் தீர்த்தான் நண்பன்.

தொலைந்து போன கிணற்றைக் கண்டுபிடித்துக் கொடுத்த சந்தோஷத்தில் நான் மிதந்தாலும், கிணற்றைத் திட்டமிட்டுக் கொள்ளையடித்த அடுத்த வீட்டுக்காரனின் சாமர்த்தியத்தை நினைக்க வியப்பாக இருந்தது. நல்லகாலம், அந்த மண்ணின் சரித்திரத்தில் கிணறு ஒன்று தொலைந்து போய்விட்டதாகப் பதியப்பட இருந்த குறிப்பு ஒன்று சாமர்த்தியமாய் தவிர்க்கப்பட்டது.

– மார்ச் 2011

Print Friendly, PDF & Email

1 thought on “எதைத்தான் தொலைப்பது?

 1. இறந்து போனவர்களின் உறவுகளுக்கு இருக்கும் வலியைவிட, தொலைந்து போனவர்களின் உறவுகளுக்கு இருக்கும் வலி சொல்ல முடியாதது. உறவுகளைத் தொலைத்து விட்டு அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களுக்குத்தான் உண்மையிலேயே அந்த முடிவில்லாத வலி புரியும்.
  இப்படி வலியோடும் வேதனையோடும் இருப்பவர்களுக்கு தன் இனத்தாரே செய்யும் துரோகம். அண்டிக் கெடுத்தல், அபகரித்தல் போன்ற செயல், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் அவலம்.
  சிறப்பான காட்சிகள், வர்ணணைகள்.
  பாட்டி சொன்ன கதையை கிணறு தொலைந்த கதையோடு இணைத்தபோது உண்மையிலேயே, சோகத்தில் நடுவிலும் சிரிப்பு வந்தது.
  வளமான எழுத்து.
  எல்லாவற்றையும் நேரில் பார்த்துப் பார்த்து உள் வாங்கி, விரவிய எழுத்து
  Spontanious overflow of powerfull feelings ராணுவக் கதைகளில் காட்சிகளாய்த் தெரிகிறது.
  வாழ்த்துக்கள்
  பாராட்டுக்கள்
  ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *