நான் தொலைக்காட்சியை வெறித்தேன். கடல் போன்று றோஜாக்களை அற்பணித்து மக்கள் கவலையைச் சொரிந்தனர். பேதங்கள் மறந்து மக்கள் பின்னிப் பிணைந்தனர். தங்கள் மார்பில் சன்னம் துளைத்ததாய் அவர்கள் புழுவாய் துடித்தனர், துவண்டனர், கண்ணீர் சிந்தினர், கவலையில் மூழ்கினர். அன்பால் வெறுப்பை வெல்லுவோம் என்றனர்.
‘ஒரு மனிதனிடம் இவ்வளவு வெறுப்பு இருக்கும் என்றால் நாங்கள் எல்லோரும் எவ்வளவு அன்பைப் பொழியலாம்’ என்றொரு நோர்வே மாணவி கூறினாள். உலகப் பிரசித்தம் பெற்ற வசனமாகிற்று அது. ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெகுண்டு எழுந்தான். ஏழைக் கவிஞ்ஞன் வரிகள். யாருக்கும் அது இப்பொழுது ஞாபகம் இருப்பதில்லை.
தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொடர்ந்தது. அதில் வாடிய றோஜாக்களும் பொம்மைகளும் பொக்கிசமாய் பாதுகாக்கப்படுகின்றன. உயிர் உள்ள அகதிகள் மட்டும் கொலைக்களத்திற்கு அனுப்பப்படுகின்றனர். கொலைகள் கண்முன்னே நடவாதவரை நாங்கள் மனிதநேயத்தின் பாதுகாவலர்கள். அன்பால் வெறுப்பை வென்றவர். அகதியாய் வந்தவரை துரத்துவதில் வெற்றி கண்டவர்கள். அடைக்கலம் கேட்டு வந்தவனைத் துரத்திவிட்டால் பகைவனால் அவனுயிர் போகுமா? மானம் போகுமா? எங்களுக்கு அது பற்றிக் கவலை இல்லை. வாக்கைப் பெறுவதற்கான மனிதநேய நடவடிக்கைகள்… வாக்கைப் பெறுவதற்காக மனித நேயப் புறக்கணிப்புகள். கிட்லரின் காலத்தில் யூதரைக் கைதுசெய்து அனுப்பியதற்காய் இப்போது மன்னிப்புக் கேட்பவர்கள் எங்களுக்காக எப்போதாவது மன்னிப்புக் கேட்பார்களா?
பகைவனிடம் சரணாகதி அடைவது தன்னுயிரைப் போக்கிக் கொள்ள முடியாத கோளை செய்யும் காரியம். சரணடைந்த பின்பு, மானம் என்பது எள்ளவும் மிச்சமிருக்காது. உயிர் என்பது ஏதிரியிடும் பிச்சையைப் பொறுத்தது. போவது போகட்டும். அது நோர்வேயில் நடவாத சம்பவம். நாங்கள் அன்பால் வெறுப்பை வெல்லுவோம். இங்கு நடக்கும் கொலைகள் மட்டும் எங்கள் அரசியலில் கணக்கு வைத்துக்கொள்ளப்படும்
அடைக்கலமாய் வந்தவனை எதிரியிடம் அனுப்பி வைப்பது பற்றி எவராவது பேசியதுண்டா? எனக்குத் தெரியாது. உங்களுக்கு? எந்த உயிர்கள் எங்கே பலியிடப்பட வேண்டும் என்பதை அரசியலாக்கிவிட்ட விந்தை உலகு இது. எங்களை வெளியே அனுப்பும்போது அவர்களின் வாக்காளர்கள் உள்ளே வருகிறார்கள். மனிதம்கூட ஏழைப்பட்டவனை எட்டி உதைக்கின்றது. வாக்கு வேட்டையில் நாங்கள் பலியாடுகள். தயவுசெய்து வந்த இடத்தைப் பார்த்துத் திரும்பிச் செல்லுங்கள் என்கிறார்கள்
எனக்கு எதுவும் செய்யப் பிடிக்கவில்லை. தங்கைக்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை. தனியே இருந்த பெண்ணவள். அவளுக்கு என்ன நடந்தது? சட்டங்கள் தோற்றுப் போன நாட்டில் பிறந்த பாவத்திற்காய் பெண்மையை அழித்து, உயிரைப் பறித்து விட்டார்களா? எனது மூத்த அண்ணன் இயக்கத்தில் இருந்து மாவீரன் ஆனான். அதற்காக எங்களின் குடும்பத்திற்கு இலங்கையில் வாழும் உரிமை பறிக்கப்பட்டுவிட்டதா?
இலங்கையில் நடந்ததைப் போராட்டம் என்கிறார்கள் ஒருபகுதி தழிழர்கள். இல்லைப் பயங்கரவாதம் என்கிறார்கள் ஒருபகுதி சிங்களமக்கள். கேள்வி கேட்கத் தேவையில்லை என்கிறது சிங்கள அரசு. சித்திரம் ஒன்றானாலும் நோக்குபவனின் கோணத்தில் அதன் சித்தரிப்பு வேறு வேறு ஆகும் அல்லவா? எல்லா அரசுகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அவர்கள் அகராதியில் போராளிகளுக்குப் பெயர் பயங்கரவாதிகள். போராட்டத்திற்குப் பெயர் கலவரம்
நான் இங்கு வந்த பின்பு சிறிது ஆறுதல் அடைந்தேன். சிலகாலத்தில் தங்கையை எடுத்துவிடலாம் என்று கனவு கண்டேன். சட்டங்கள் தோற்றுப் போய்விட்ட நாட்டில் கொலைகளுக்குத் தண்டனை இல்லை. இயக்க விரோதம் தசைப்பசியாக மாறி இருக்க வேண்டும். அல்லது இராணுவத்தின் கண்கள் பட்டிருக்க வேண்டும். தனிமையில் இருந்தாள் என் தங்கை. சந்தேகத்தில் கொலை செய்வது இலங்கை மரபாகிவிட்டது. என்தங்கை அந்த அநியாயத்திற்குப் பலியாகிப் போனாளா? காமத்திற்குப் பலியானாளா? என்னைப் புரிந்து கொண்டு என்னையே நம்பி வாழ்ந்த உயிரவள். அவள் போன பின்பு நான் தனித்து இந்த உலகில் என்ன செய்ய முடியும்?
தொலைக்காட்சியில் ‘அன்டர்ஸ் பிறேவீக்’ செய்த கொலைகள் பற்றிக் காட்டினர். எனக்கு அதைப் பார்க்கப் பார்க்க அழுகை அழுகையாக வந்தது. என்ன கொடுமை? எப்படி அவனால் செய்ய முடிந்தது அதை? இலங்கையில் எப்படி மனிதர்களை நாய்கள் போலச் சுட்டுத்தள்ள முடிகிறது? இவனால் எப்படி இளம் பிள்ளைகளை எந்தத் தயவு தாட்சணியம் இன்றிச் சுட்டுத்தள்ள முடிந்தது? இனவெறியா? மனோவியாதியா? அரசியல் பழிவாங்கலா? ஏன் இந்த மனங்களில் இரக்கமற்றுப் போனது? அது ஏன் உயிர் வதையில் கிறக்கம் காண்கிறது?
தொலைக்காட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனோதத்துவ மருத்துவரிடம் கதைப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற வாதம் முன்வைக்கப்பட்டது. நானும் பல கொலைகளைப் பார்த்த பின்பு இங்கு வந்தவள். நிச்சயம் செய்ய வேண்டும். இறந்து விழுந்த சகதோழனின் இரத்தவாடை நாசியில் ஒட்டியிருப்பதன் வேதனையை அனுபவித்தவனால் மட்டுமே உணரமுடியும். எனக்கு இன்றும் அந்த வெடில் ஞாபகமாய் இருக்கிறது. இப்போதுகூட என் நாசியில் அந்த நாற்றம் ஏறுகிறது. தலை சுற்றுகிறது
நிச்சயம் அவர்கள் நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும். என்னால் சிந்திக்க முடிகிறது. அவர்கள் வேதனை என்னிதயத்தை அறுக்கிறது. இதற்கு ஏன் இவர்கள் இழுபறி செய்ய வேண்டும்? எனக்கு அதை நினைக்க அழுகை வந்தது. ஊத்தொய்யாவில் இறந்தவர்கள் ஒவ்வொருவரின் உருவத்திலும் நான் என்தங்கையைக் கண்டேன். அதற்கு மேல் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் ஓவென வாய்விட்டு அழுதேன். பின்பு மகனை எண்ணி அதை அடக்கிக்கொண்டேன். மகன் நிம்மதியாகத் தூங்க வேண்டும். என்கண்கள் இடைவிடாது கண்ணீரைச் சொரிந்தன. நாசியின் நாற்றம் மயக்கம் தந்தது
நான் அகதி முகாமிற்குள் ஒளித்துக் கொண்டுவந்த மண்ணெண்ணைய் போத்தலை எடுத்துப் பார்க்கிறேன். நிறமற்று நீர் போல தேன்றிய திரவம். தீப்பிடிக்கும் என்கின்ற அபாயக்குறி மஞ்சள் நிறத்தில் போடப்பட்ட பிளாஸ்ரிக் போத்தல். நான் கண்ணை மூடிக்கொண்டேன். என்தங்கை என்னைப் பார்த்து அழுதாள். அக்கா என்னைக் காப்பாற்று எனக் கெஞ்சினாள். என்னால் முடியவில்லை. நானும் முடியவில்லை. எத்தினை இரணமான வாழ்க்கை இது? ஐரோப்பா செல்வது சுவற்கத்திற்குக் கொடுக்கப்பட்ட நுளைவுச் சீட்டு என்று எண்ணி அல்லவா இங்கு வந்தேன். சுவர்க்கத்தில்கூடச் சிலருக்குத் தண்டனை தரப்படும் என்பதை நான் இங்கு வந்த பின்பு புரிந்து கொண்டேன்
நான் அந்தப் போத்தலை படுக்கையின் கீழ் வைத்தேன். மகனை ஒருமுறை பார்த்தேன். அவன் எந்தக் கவலையும் இல்லாது தூங்கினான். தூங்கட்டும். மூச்சை ஆழமாக இழுத்து விடட்டும். இந்த உலகின் மூச்சுக் காற்று எங்களுக்குத் தேவையில்லையென வெறுத்துவிடட்டும். இன்னும் நான்கு மாதங்களில் இவனுக்கு இரண்டாவது பிறந்தநாள் வரப்போகிறது. இந்த நாட்டிற்கு வந்து ஆறுவருடங்கள் ஆகிவிட்டன. ஆறுவருடங்கள் அகதிமுகாமின் நாலு சுவருக்குள். அகதி விண்ணப்பம் மீண்டும் மீண்டும் நிரகரிக்கப்பட்டது. நிராகரிப்பது என்பதை முடிவு செய்தபின்பு நீ என்ன சொல்லுகிறாய் என்பது ஒரு கண்துடைப்பு. கடைசியாக வெளியேறச் சொல்லி நாட்குறித்துக் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். சம்மதித்து கொலைக்களம் சென்றால் கையில் காசுதந்து அனுப்பி வைப்பார்கள். இது புதுவிதமான அரசியல். இல்லாவிட்டால் காவல் வரும். எங்களை அழைத்துச் சென்று, விலங்கிட்டு, விமானத்தில் ஏற்றிக் கொழும்பிற்கு அனுப்பி வைக்கும். அங்கே என்னையும் மகனையும் எங்கு கொண்டு செல்வார்கள்? நாலாம் மாடிக்கு கொண்டு சென்று, நிர்வாணமாக்கி, சித்திரவதை செய்து, கற்பழித்து, கொலை செய்து… யாரும் எதுவும் கேட்கமுடியாது. இலங்கையில் தமிழர் என்பதற்கு இப்போழுது மறுபெயர் அடிமைகள்தானே? அடிமையாகப் பிறந்துவிட்ட என்னைப் போன்ற விலங்குகளை யாரும் எதுவும் செய்யலாம்
அவர்கள் என்னை உயிரோடு விட்டாலும் தங்கையைக் கொலை செய்தவர்கள் எனக்காகக் காத்திருப்பார்கள். யாருமற்ற என்னை எதுவும் செய்யலாம். அதில் இருந்து தப்பினால்கூட வயிற்றுப் பிழைப்புக்கு நான் என்ன செய்ய முடியும்? ஆண்துணையின்றி ஒரு பிள்ளையுடன் யாழில் வாழும் கொடுமை ஐரோப்பியருக்குப் புரியப் போவதில்லை. விதவைகளின் விபச்சாரப் பட்டியலில் எனது பெயரும் இணைந்து கொள்ளுமா? உயிரோடு இருக்கும் மகனுக்காக யாழ்பாணத்தில் உடலை வித்துப் பிழைப்பேனா? இதுதான் எனக்கு இந்த உலகு கொடுக்கும் வாழ்க்கையா? மனிதர்கள் இருக்கும் இந்த உலகில் மனிதத்தை மட்டும் காணோம் என்பதான உண்மை புரிகிறது. இயற்கை கொடுத்த வளங்களை தனக்கு மட்டும் என்கின்ற மனிதர்களின் சட்டத்திற்கு அடிபணிந்து, மீண்டும் நான் இலங்கை செல்ல வேண்டும். சித்திரவதைகளுக்குப் பின்பு உயிர்வாழ்ந்தால் உடலைவிற்றுப் பிழைக்க வேண்டும்.
நான் திடீரெனச் சிரித்தேன். மனிதம் மரித்த மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டேன். மீண்டும் ஊத்தொய்யாவை எண்ணினேன். அதன்பின்பு நடந்த மனிதத்தை உலுக்கிய மனித எழுர்ச்சி எனது ஞாபகத்திற்கு வந்தது. எனக்கு மீண்டும் அழுகை வந்தது. எனது தங்கையைத் தேடி ஊத்தொய்யா செல்ல வேண்டும் போல் இருந்தது
நான் எனது அறையைப் பார்த்தேன். எனது தங்கையின் ஆவி ஏதாவது ஒரு மூலையில் இங்கு இருந்து அழுகிறதா என்று தேடிப் பார்த்தேன். அதைக் காணவில்லை. மனிதக் கண்களுக்கு ஆவிகள் புலப்பட மாட்டாதென எண்ணிக் கொண்டேன். நேரம் பத்து மணியாகி இருந்தது. அதிகாலை காவலர்கள் வருவார்கள். எனக்கும் மகனுக்கும் விலங்கிட்டு விமான நிலையம் கொண்டு செல்வார்கள். பாவம் ஊதொய்யாவில் கொல்லப்பட்டவர்கள். அவர்களை இழந்து தவிக்கும் பெற்றோர்கள். என்தங்கையும் இலங்கை என்னும் ஊத்தொய்யாவில் கொல்லப்பட்டு… நானும் அதே ஊத்தொய்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு… உங்கள் வேதனை புரிகிறது. பாறுவாய் இல்லை… என்னைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். நான் தமிழனாய் பிறந்ததிற்கான தண்டனை இது. என்றாலும் ஊத்தொய்யா வேண்டாம். யாருக்கும் இந்த உலகில் அது வேண்டாம். தயவு செய்து ஊத்தொய்யாக்களை அழித்துவிடுங்கள். மீண்டும் மீண்டும் கொலைக்களங்களுக்கு மனிதரை அனுப்பி வைக்காதீர்கள். நான் அழுதேன். விக்கி விக்கி அழுதேன். பின்பு நான் சாளரத்தினுடே வெளியே பார்த்தேன். போக்குவரத்து அடங்கி இருந்தது. காலை விரைவாக வரப்போகிறது. காவலர்கள் கைவிலங்கோடு வருவார்கள். பூசாவிலா? யாழ்பாணத்தில் விபச்சரியாகவா? அப்பனற்ற பிள்ளை என்று என்மகன் அவச் சொல் கேட்பதாக?
எனது முடிவு நல்ல முடிவாக இல்லை. இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லை. இரக்கமற்று நரகத்தில் தள்ளும் பொழுது இந்த முடிவில் வெட்கப்பட ஏதுமில்லை. மனிதம் மரித்த உலகில் மனிதருக்குப் பாரமில்லாது போவதில் தவறில்லை
காலை கைவிலங்கோடு காவலர்கள் வரப்போகிறார்கள். நான் முடிவு செய்து கொண்டேன். எனக்கு ஊத்தொய்யாவை எண்ண எண்ணக் கவலையாக இருந்தது. தங்கையின் நினைவு அடிக்கடி வந்தது. தயவு செய்து ஊத்தொய்யாக்களை அழித்துவிடுங்கள்
நான் மண்ணெண்ணெய் போத்தலை எடுத்தேன். எம் நரகத்தையாவது நாம் தெரிவு செய்து கொள்வோம் என நான் சொல்லிக் கொண்டேன். என் நினைவெல்லாம் என் தங்கை ஊத்தெய்யாவில் கொல்லப்படுவதாய் சுழன்றது. நான் மீண்டும் அழுதேன். அழுது அழுது மண்ணெண்ணெய்யில் நானும் நனைந்து எனது மகனையும் நனைத்தேன். நித்திரையில் அவன் முணுகினான். பின்பு திரும்பிப் படுத்துக்கொண்டான். நான் கதவை வெளியில் இருந்து யாரும் திறவாது மேசை கதிரைகளை முட்டுக் கொடுத்தேன்.
மீண்டும் ஊத்தொய்யாவை எண்ண எனக்கு அழுகைவந்தது. எங்கள் நரகங்களையாவது நாங்கள்தெரிவு செய்து கொள்வோம் என்று எண்ணியவண்ணம் தீக்குச்சியை எடுத்தேன். யாருக்கும் ஊத்தொய்யாவில் நடந்தது போல் நடக்ககூடாது என்பது எனது கடைசி ஆசையாகும். நாங்கள் இனி எந்த ஊத்தொய்யாவுக்கும் போகப் போவதில்லை என்பது எமது இறுதி முடிவாகும். தயவுசெய்து, இயலும் என்றால், ஊத்தொய்யாக்களை அழித்துவிடுங்கள்.
– திசெம்பர் 7, 2015