ஊதா நிறச் சட்டையில்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 9,254 
 
 

காரை நிறுத்தப் பல இடங்கள் காலியாக இருந்தன. ஒன்றே ஒன்றில் மட்டும் நிழல் விழுந்தது. அந்த இடத்தில் சூரன் காரை நிறுத்தினான். மார்ச் மாதத்திற்கு வெயில் சற்று அதிகம்தான். நிழல் தேவைப் பட்டது. மூன்றரைக்குத் தான் வார்ம்-அப், பிறகு நான்கு மணிக்கு மாட்ச். சாலையில் எந்த விதத் தடங்கலும் இல்லாததால் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே வந்து விட்டான். அவன் பள்ளியைச் சேர்ந்த மற்ற பையன்களைக் காணோம். அவர்கள் வரும் வரையில் காரிலேயே உட்கார முடிவு செய்தான்.

க்ரீன் ஹில்ஸ் அகடெமி பணக்காரப் பள்ளி என்று அதன் டென்னிஸ் சென்டரைப் பார்த்தே சொல்லி விடலாம். இரண்டு வரிசைகளில் சீராகப் பராமரிக்கப் பட்ட பத்து கோர்ட்டுகள். எந்த வலையிலும் தொய்வு இல்லை, தரையில் எங்கும் விரிசல் கிடையாது. நடுவில் ஒரு பெரிய தெற்கத்திய லைவ் ஓக் மரம், அதை ஒட்டிய ஒரு கட்டிடம். மரத்தடியில் உட்கார்ந்து மாட்ச் பார்ப்பதற்காக ஒரு உயர்ந்த படி பெஞ்ச். அந்தப் பள்ளியின் அடையாளமாகச் சிவப்புச் சட்டை அணிந்த பையன்கள் பந்தடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் மார்க் ஆன்டர்சன் நிச்சயம் இருப்பான். மற்றவர்களைப் பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. எல்லாம் பணக்காரக் கும்பல்கள். அரசாங்கப் பள்ளியோடு விளையாடுவது கௌரவக் குறைவு என்று நினைக்கிற அலட்சியம். கணக்கு, விஞ்ஞானம், பேச்சு என்று பல போட்டிகளுக்கு அழைத்த போதெல்லாம் ஏதோ காரணம் காட்டி வர மறுத்து விட்டார்கள். டென்னிஸ் போட்டிக்கு மட்டும் ஒப்புக் கொள்கிறார்கள். நிச்சயம் ஜெயித்து விடுவோம் என்கிற நம்பிக்கை. இந்த முறை அவர்களுக்குப் பாடம் கற்பித்தாக வேண்டும்.

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் அந்த டென்னிஸ் சென்டருக்கு வருகிறான். ஒன்பது மாதங்கள்தானா ஏதோ பல காலம் கடந்துவிட்டது போல் தோன்றுகிறது. சென்ற முறை இங்கு வந்த தேதி கூட நினைவிருக்கிறது, ஜூன் மாதம் பத்தாம் தேதி. எப்படி அந்த நாளை மறக்க முடியும் ? இந்த கோர்ட்டுகளில் நடந்த இரண்டாவது முக்கியமான நிகழ்ச்சி ஆயிற்றே அது. முதலாவது ஏழு ஆண்டுகளுக்கு முன் பத்து வயதில் அந்த ஊருக்கு வந்த புதிதில் நடந்தது. அது வரையில் சில சில்லரை டோர்னமென்ட்டுகளை ஜெயித்துத் தான் ஒரு காலத்தில் சாம்ப்ராஸ் போலவோ, அகாஸி போலவோ ஒரு பெரிய டென்னிஸ் ஆட்டக்காரனாக விளங்கப் போவதாகக் கனவு. அவர்களுடன் ஒப்பிடத் தக்க ப்ரையன் பேக்கருடன் விளையாடிய போதுதான் அந்தக் கனவு கலைந்தது. பதினைந்து நிமிட மாட்ச். இரண்டு செட்டுகளில் அவனுக்கு எண்ணி நான்கு பாய்ன்ட்டுகள். அதிலும் இரண்டு டபில் ஃபால்ட் மூலம்;.

கடைசியாக இங்கு விளையாட வந்த போது சூரன் டென்னஸியில் பத்தில் ஒரு ஆட்டக் காரன். ஒன்பது மாதங்கள் டோர்னமென்ட்டில் ஆடாததால் இப்போதைய ராங்க்கிங் நூற்றுக்குள் இருந்தால் அதிசயம். அந்த வீழ்ச்சிக்கு டேய்டன் ஊரிலிருந்து வந்த பையன் தூண்டு கோல் ஆனான். அவனுடைய முந்தைய மாட்ச்சைப் பார்த்த சூரனின் தந்தை சாமி, ‘உன் விளையாட்டை நீ ஆடும் வரை அவனால் உனக்கு இடையூறு வராது’ என்று தைரியம் கொடுத்திருந்தார். மாட்ச் தொடங்கும் முன் அந்தப் பையன் பிரார்த்தனை செய்தான். அரை நிமிட மௌனம், பிறகு மெல்லிய குரலில் சொன்னாலும் சூரன் காதில் தெளிவாக விழுந்தது. ‘இறiவா! இந்த மாட்ச் விளையாட நீ வாய்ப்பு தந்ததற்கு நன்றி. என்னுடன் இருந்து எனக்கு நீ வழி காட்ட வேண்டும்.’ எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஆறு, ஒன்று என்று முதல் செட் முடிந்தது. ‘இரண்டாவது செட்’ என்று அறிவித்த சூரன் சர்வ் செய்தான். ‘லாங்க்’ அந்தப் பையன் தடுத்த பந்து திரும்பி வந்து வேலியின் பக்கம் சென்றது. சூரன் பையிலிருந்து இன்னொரு பந்தை எடுத்துத் தரையில் மூன்று முறை தட்டி எடுத்து மேலே எறிந்து அதை அடிக்கத் தயாரானான். வேலியில் பட்ட பந்து மெதுவாகத் திரும்பி அவனுக்குப் பின்னால் வந்து நின்றது. அதைச் சூரன் கவனிக்கவில்லை. பந்து அந்தப் பையன் கண்ணில் பட்டிருக்க வேண்டும். அவன் சூரனை நிறுத்தச் சொல்லி தரையில் இருக்கும் பந்தை அகற்றிய பிறகுதான் விளையாட்டைத் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. அது மட்டுமல்ல. சூரனின் இரண்டாவது சர்வைப் பந்து நிற்கும் திசையில் அடித்தான். சூரன் அதைத் திரும்ப அடிக்க வேகமாக நகர்ந்த போதுதான் தரையில் கிடக்கும் பந்து அவன் கண்ணில் பட்டது. அதை மிதிக்காமல் தவிர்க்க முயன்று முடியாமல் கால் மடங்கக் கீழே விழுந்தான். எழுந்திருக்க முயன்ற போது உடலின் சுமை வலது காலுக்கு அதிகமாகப் பட்டது. காலை உதறி விட்டு நடக்கப் பார்த்தான். அது இயலாதது என்று தோன்றியது. அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

சற்று தள்ளி நின்று மாட்ச்சைக் கவனித்துக் கொண்டிருந்த அவன் தந்தை வேகமாக வேலிக்கு அருகில் வந்து, “ஆர் யூ ஆல் ரைட் ?” என்று கேட்டார். சூரன் தலையை அசைத்து மறுத்தான். அதற்குள் டோர்னமென்ட் அதிகாரி ஒருவர் கோர்ட்டின் கதவைத் திறந்து கொண்டு அவனருகில் வந்தார். “வேண்டுமானால் இன்ஜூரி டைம் அவுட் எடுத்துக் கொள்கிறாயா ?” அழுகையை அடக்கிக் கொண்டு அவரிடம் சூரன், “வேண்டாம். என்னால் தொடர்ந்து விளையாட முடியும் என்று நான் நினைக்க வில்லை. இத்துடன் நான் மாட்ச்சை முடித்துக் கொள்கிறேன்” என்றான். எதிராக விளையாடிய பையன் ஒதுங்கி நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம், “குட் லக் இன் யுவர் நெக்ஸ்ட் மாட்ச்” என்றான்.

“ஐயாம் சாரி”

‘யூ ஆர் நாட்’ என்று கத்த வேண்டும் போலிருந்தது. ஆனால் பதில் சொல்லவில்லை. ஒருவேளை செய்த தவறுக்கு உண்மையிலேயே அவன் மனம் வருந்தினால்… கோர்ட்டுக்குள் வந்த அவன் தந்தையின் தோளைப் பிடித்துக் கொண்டு காருக்கும், பிறகு மருந்தகத்திற்கும் சென்றது, எக்ஸ்-ரே எடுத்தது எல்லாம் கெட்ட கனவாகத் தோன்றியது. ஸ்ட்ரெஸ் ஃப்ராக்சர், இரண்டு மாதம் டென்னிஸ் ஆடாமல் இருந்தால் சரியாகி விடும். இரண்டு மாதமா ?

‘கோ ரெட்! கோ ரெட்! கோ ரெட்!’ என்ற கூவலுடன் பயிற்சி முடிந்தது. சிவப்புச் சட்டைகள் சிறு சிறு கும்பலாகக் கோர்ட்டுகளிலிருந்து வெளியே வரத் தொடங்கின. சூரனின் காரைக் கண்டு கொண்ட மார்க் அதை நோக்கி வந்தான். சூரனும் காரிலிருந்து இறங்கிப் பின் சீட்டில் இருந்த டென்னிஸ் பையை எடுத்துக் கொண்டு காரைப் பூட்டினான்.

“ஹாய் சூரன்!”

“ஹாய் மார்க்! முன்பு பார்த்ததற்கு சற்று உயர்ந்திருக்கிறாய்.”

“உன்னளவு இல்லாவிட்டாலும் ஆறடிக்கு இந்தப் பக்கம் இருந்தால் போதும். மற்றவர்கள் எங்கே ?”

“நான் வீட்டிலிருந்து வருகிறேன். மற்றவர்களைக் கோச் பள்ளி வண்டியில் அழைத்து வருவார்.”

இருவரும் மரத்தடிக்கு வந்தார்கள்.

“ஏன் வீட்டிலிருந்து வருகிறாய் ? ஏதாவது மறந்துவிட்டாயா ?”

“இல்லை ஒரு முக்கியமான கடிதத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”

“நான்தான் ஹைஸ்கூல் சீனியர். கனமான கடித உறை என் பெயருக்கு இருக்கிறதா என்று மார்ச் மாதத்தில் ஒவ்வொரு நாளும் தபால் பெட்டிக்குள் பார்க்கிறேன். நீ ஜூனியர் தானே. உனக்கு என்ன அவசரம்?”

“டென்னஸி க்வாலிஃபயரில்; நான் அடி பட்டது உனக்கு நினைவிருக்கிறதா ?”

“இருக்கிறது. நாம் அதில் டபில்ஸ் விளையாடுவதாக இருந்தோம். அப்புறம் விளையாடவில்லை.”

“இரண்டு மாதங்களுக்கு டென்னிஸ் ஆட முடியாது என்று அறிந்த போது ஏமாற்றமாக இருந்தது. அதுவும் விடுமுறையின் போது. எப்படி பொழுது போக்குவது என்று தெரியவில்லை. என் அப்பா அவர் லாபில் வந்து வேலை செய்கிறாயா என்று கேட்டார். அந்த கோடையில் அவரிடம் வேலை செய்வதற்காக ஒரு காலேஜ் மாணவன் வர இருந்தான். அவனுக்காக அவர் ஒரு ப்ராஜக்ட் தயார் செய்து வைத்திருந்தார். அவன் தலை காட்டவில்லை. அதனால் அந்த ப்ராஜக்ட்டை எனக்குத் தந்தார். பைபெட் செய்வதிலிருந்து எல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். பிகின்னர்ஸ் லக் எனக்கு நிறைய இருந்;தது. நல்ல ரிசல்ட் வந்து கொண்டே இருந்தது. லாபில் வேலை செய்வது மிகவும் சுவாரசியமாக இருந்தது. டென்னிஸ் கூட கொஞ்ச நாளைக்கு மறந்துவிட்டது. நான் கீழே விழுந்ததற்கு அர்த்தம் இருக்குமோ என்று கூட நினைக்கத் தொடங்கினேன். அந்த ப்ராஜக்ட்டில் கிடைத்த ரிசல்ட்டை ஒரு போட்டிக்கு அனுப்பி இருக்கிறேன். அவர்கள் பதிலை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”

“டென்னிஸ் ?”

“ஒரு மாதமாகத்தான் சீரியசாக ஆட ஆரம்பித்திருக்கிறேன். என் ராங்கிங் கீழே இறங்கி விட்டதால் கோச் ஐந்தாவது இடத்தில்தான் என்னைப் போட்டிருக்கிறார்.”

“நீ அதை விடச் சிறந்த ஆட்டக் காரன். என்னைக் கேட்டால் நீ மூன்றாவது இடத்தில் இருப்பவனை சாலஞ்ச் செய்ய வேண்டும் என்று சொல்வேன்.”

“இன்று விளையாடிய பிறகு அதைப் பற்றி யோசிக்கிறேன். உன் அணியில் நீ முதலாவது இடத்தில் இருக்க வேண்டும். சென்ற ஆண்டு உனக்கு மேல் இருந்தவர்கள் எல்லோரும் படித்து முடித்து விட்டுப் போய் விட்டார்களே.”

“கரெக்ட். உன் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கிறானே டேனியல் கார்சியா, அவன் கூட போட்டிக்கு வரவில்லை.”

“முன்பெல்லாம் அந்த கார்சியாவின் அம்மா கெஞ்சிக் கேட்டதற்காக அவனுடன் பல தடவை பந்தடித்திருக்கிறேன். போன மாதத்தில் இரண்டு முறை அவனை டெலிஃபோனில் கூப்பிட்ட போது அவன் அம்மாதான் பதில் சொன்னாள். அவனோடு விளையாட எனக்குத் தகுதி இல்;லையாம்.”

“அவன் ஒரு மாதிரிதான். என்னோடு கூட அவன் சரியாகப் பழகுவதில்லை. இன்று நான் யாருடன் விளையாட வேண்டும் ?”

“எரிக் ஜான்சன்.”

“இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவனுடன் ஆடியிருக்கிறேன். இப்போது அவன் எப்படி ?”

“போன சம்மரின் போது அவன் சௌத் கரோலைனாவில் ஒரு டென்னிஸ் அகடெமிக்குப் போனான். ஆட்டத்தில் முன்னேற்றம் இல்லா விட்டாலும் ஆள் மத மத என்று ஆகிவிட்டான்.”

“அங்கே ஸ்டிராய்ட்ஸ் சாப்பிட்டிருப்பானோ ?”

“இருக்கலாம்.”

“நீ எங்கள் அணியில் மாத்யூவுடன் விளையாட வேண்டும். நீ நன்றாக விளையாடுவாய். உன் இடது கை சர்வ் உனக்கு உதவி செய்யும். கவலைப் படாதே.”

“குட் லக் உனக்கு மட்டும். மற்றவர்களுக்குக் கிடையாது.”

மார்க் சிரித்துக் கொண்டே அகன்றான்.

அப்போது சிடி ஹைஸ்கூல் என்று போட்ட வண்டி ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மற்ற ஆட்டக்காரர்களுடன் சூரன் சேர்ந்து கொண்டான். ஐரிஷ் தொப்பி அணிந்த கோச் வண்டியின் பின்னால் கொண்டு வந்தி;ருந்த பெரிய அட்டைப் பெட்டியை வெளியே எடுத்து வந்தார். அதில் பள்ளியின் அடையாளமான ஊதா நிறத்தில் சட்டைகள். அவர் அவர்களின் பெயரைப் பார்த்துச் சட்டைகளை அணிந்து கொண்டார்கள். பிறகு அவர்களைக் காலியாக இருந்த கோர்ட்டுகளுக்குக் கோச் அழைத்துச் சென்றார்.

————-

சாமி காரில் ஏறிக் கிளம்பும் போது மணி நான்கு பதினைந்து. எப்போதும் போல் வியாழன் மீட்டிங் நான்கு மணிக்கு முன்பே முடிந்திருந்தால் இந்நேரம் சூரனின் மாட்ச்சைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். பல மாத இடைவெளிக்குப் பிறகு அவன் எப்படி விளையாடுகிறான் என்று அறிய ஆவல். ஆனால் தலைக்குத் தலை ஒவ்வொருவரும் எதையோ பேசி இழுக்கடித்து விட்டார்கள். க்ரீன் ஹில்ஸ் அகடெமிக்கு ஒரு மைல்தான் என்றாலும் நடுவில் ஏகப்பட்ட போக்கு வரத்து விளக்குகள். மாலை நெரிசல் வேறு. அங்கே போவதற்குள் மாட்ச் முடிந்திருக்கலாம். இந்த சீசனுக்கு இதுதான் முதல் போட்டி. அதனால் சூரனையும், அவன் அணியைச் சேர்ந்தவர்களையும் ஊக்குவிக்க ஆசை.

பள்ளிக்காக சூரன் விளையாட வேண்டும், அப்போது மற்ற மாணவர்கள் அவனை உயர்வாக மதிக்க வேண்டும் என்பதற்காகச் சிறு வயதிலிருந்தே அவனைத் தேர்ந்த டென்னிஸ் ஆட்டக் காரனாக சாமி பழக்கி இருந்தான். அதன் பலன் சூரன் எட்டாவது படிக்கும் போது கிடைத்தது. மத்திய பள்ளிகளுக்கான ரீஜனல் iஃபனல் வரை சூரன் தன் அணியை எடுத்துச் சென்றான். இறுதிப் போட்டி நடந்த அன்று சூரனுக்கு எதிராக ஆட வேண்டிய பையன் அரை மணி கழித்துத்தான் வந்தான். அதற்குள் மற்றவர்கள் விளையாடத் தொடங்கி விட்டார்கள். சூரனின் மாட்ச் கடைசியில் தான் ஆரம்பித்தது. ஆளுக்கு மூன்று கேம் என்றிருக்கும் போது கோச் சூரனைத் தனியே அழைத்து, “மற்ற நான்கு மாட்ச்சுகளும் முடியப் போகின்றன. நாம் இரண்டு ஜெயித்திருக்கிறோம், அவர்களுக்கு இரண்டு;. உன் மாட்ச்தான் சாம்பியன்ஷிப்பைத் தீர்மானிக்கும்” என்றார். அதற்குப் பிறகு சூரன் மிகக் கவனமாக விளையாடத் தொடங்கினான். இரண்டு பக்க அணியைச் சேர்ந்த மற்ற பையன்களும் ஆட்டத்தைப் பார்க்க வந்து விட்டார்கள். “கோ சூரன்! கோ மாத்யூ!” என்று கூச்சல். ஒவ்வொரு பாய்ன்ட் முடிவிலும் கை தட்டல். அடுத்த ஐந்து கேம்களிலும் மிக அபாரமாக விளையாடி சூரன் மாட்ச்சை ஜெயித்துத் தன் பள்ளிக்குச் சாம்பியன்ஷிப்பைப் பெற்றுத் தந்தான். அந்த மாட்ச்சை அசை போட்ட படி சாமி க்ரீன் ஹில்ஸ் அகடெமியின் டென்னிஸ் சென்டரில் காரை நிறுத்தி விட்டு மரத்தடிக்கு வந்தான்.

ஒரு மேஜையின் சிவப்பு விரிப்பின் மேல் க்ரனோலா துண்டுகள், பவரேடு புட்டிகள். அவற்றுக்கு நடுவில் சில வாழைப் பழங்கள். மேஜைக்குப் பின்னால் சிவப்பு சட்டையில்; சின்டி ஆன்டர்சன்.

“ஹாய்! சின்டி! இன்று உணவுக் கடை உன் பொறுப்பு போலிருக்கிறது.”

“ஹாய் சாம்! நாம் பார்த்து சில காலம் ஆகிவிட்டது, எப்படி இருக்கிறீர்கள் ?”

“சாராவும் நானும் iஃபன். மார்க்கும் எமிலியும் எப்படி இருக்கிறார்கள் ?”

“மார்க் வீட்டை விட்டுப் போகத் துடித்துக் கொண்டிருக்கிறான். எமிலி இரண்டாவது க்ரேடில் இருக்கிறாள்.”

“மார்க் வெளியே சென்ற பிறகும் உனக்கு எமிலி இருக்கிறாள். சூரன் காலேஜிற்குப் போய்விட்டால் எங்கள் வீடு காலி. நான் இரண்டு பவரேட் பாட்டில் வாங்குகிறேன்.”

அவற்றை எடுத்துக் கொண்டு படி பெஞ்சின் பக்கம் வந்தான். ஆட்டக் காரர்களின் பெற்றோர் கும்பலில் தெரிந்த முகமாக எதுவும் இல்லை. மேல் படிகளில் சூரனின் சக ஆட்டக்காரர்கள். ஒவ்வொரு பையனும் போட்டிருந்த ஊதா நிற சட்டையில் மஞ்சள் வட்டங்கள் வளைவாக வந்து ஒரு கோட்டில் பட்டுச் சிதறின. அந்த சட்டைக்காக பதினைந்து டாலருக்குச் செக் எழுதியது நினைவிருக்கிறது. சூரன் அணிந்து பார்த்ததாக நினைவில்லை. இன்றுதான் புதிதாக வந்திருக்க வேண்டும். யார் டிசைன் செய்தார்கள் என்று தெரியவில்லை. கண்ணைப் பறித்தது. கோச்சிடம் மிச்சம் இருந்தால் எனக்குக் கூட ஒன்று வாங்கிக் கொள்ள வேண்டும். இரண்டாவது தட்டில் உட்கார்ந்த சாமியின் பார்வை ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை அளந்தது. உயரமான கருப்பு உருவம் எந்த கோர்ட்டிலும் இல்லை. சூரன் மாட்ச் முடிந்திருக்க வேண்டும். முதல் கோர்ட்டின் இந்தப் பக்கத்தில் மார்க் சர்வ் செய்யத் தயாராக நின்றிருந்தான். எதிர்ப் புறத்தில் ஊதா சட்டை அணிந்த ஒரு பையன் வேலிக்கு அருகில் வெளியில் இருந்த இருவருடன் பேசிக் கொண்டிருந்தான். அந்த இருவரில் ஐரிஷ் தொப்பி அணிந்த கோச். மற்றவன் சூரன். மார்க்குக்கு எதிராக விளையாட இருவரும் அறிவுரை கொடுக்கிறார்கள் போலிருக்கிறது.

“மார்க்கின் பலவீனம் என்ன ?” எரிக் ஜான்சன் கேட்டான்.

“பெரிய பலவீனம் ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியாது.”

“நீ பல தடவை அவனுடன் விளையாடி அவனை ஜெயித்திருக்கிறாய்.”

“அதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால். சமீபத்தில் இல்லை.”

“அப்போது அவன் விளையாட்டில் நீ ஏதாவது குறை கண்டிருக்க வேண்டும்.”

“கவனித்ததில்லை.”

“மார்க்குடன் சேர்ந்து பல வருடங்கள் இரட்டையர் ஆட்டம் ஆடியிருக்கிறாய். அப்படி விளையாடும் போது எதிராளிகள் அவனுடைய பலவீனத்தைப் பயன் படுத்திக் கொள்ளாதபடி மறைத்திருப்பாய். அது என்ன ?”

“…..”

“நேரம் ஆகிறது.”

“என்னுடைய சர்வ் ஒன்றுதான் அவனுக்கு எதிராக இருந்திருக்கிறது.”

“என் வலது கையால் எப்படி இடது கை சர்வ் செய்ய முடியும் ?” என்று சற்று எரிச்சலுடன் கேட்டான் எரிக்.

“நீ எங்களுக்கு உதவி செய்யவில்லை.” கோச் குறை சொன்னார்.

அவர் அங்கேயே நின்றார். சூரன் மட்டும் கோர்ட்டைச் சுற்றிக் கொண்டு மரத்தடிக்கு வந்தான். அவன் முகத்தில் வருத்தம் கலந்த ஏமாற்றத்தைச் சாமி கவனித்தான். ஒரு வேளை அவன் நன்றாக விளையாட வில்லையோ ? மாட்ச்சைப் பற்றி அவனிடம் எதுவும் கேட்கக் கூடாது. “ஹாய்! சூரன்!”

“ஹாய்! டாட்!” என்று சொன்ன சூரன் படி ஏறி அவனுடைய பள்ளித் தோழர்கள் பக்கத்தில் போய் உட்கார்வான் என்று சாமி எதிர் பார்த்தான். அவன் அப்படி செய்வதுதான் வழக்கம். அதுதான் சாமியின் விருப்பமும். ஆனால் இன்று டென்னிஸ் பையை முதல் படியில் வைத்து விட்டு அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தான். சாமி அவனிடம் ஒரு பவரேட் பாட்டிலைத் தந்தான்.

சாமி கேட்காமலேயே, “நான் என் மாட்ச்சை ஒரு வழியாக ஜெயித்தேன். ஆனால் மாட்ச் பரம தண்டம்” என்று தனக்குத் தெரிந்த இரண்டு தமிழ் வார்த்தைகளால் சூரன் முடித்தான்.

“அதனால் என்ன ? வெற்றி வெற்றிதான். உன் அணிக்கு ஒரு டபிள்யூ.”

“எங்கள் பள்ளிக்கு அது ஒன்றுதான் போலிருக்கிறது. மற்ற யாருக்கும் இது வரை வெற்றி கிடைக்கவில்லை. அந்தப் பையனை நான் சென்ற ஆண்டில் 0, 0 என்று தோற்கடித்திருக்கிறேன். இன்று என்னால் பாய்ன்ட்டுகளை முன் போல் சுலபமாக முடிக்க முடியவில்லை. என் சர்வ் உதவி செய்யாதிருந்தால் ஜெயித்திருக்கக் கூட முடியாது.”

“கொஞ்ச கால இடைவெளிக்குப் பிறகு விளையாடுகிறாய். பயிற்சி செய்தால் பழைய நிலைக்கு வரலாம்.”

சூரனின் மௌனத்தில் அவநம்பிக்கை.

மார்க்கின் மாட்ச் தொடர்ந்தது. இரண்டு பக்கத்திலும் ஆரவாரம். சூரன் அந்த மாட்ச்சில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. அதில் அவனை ஈடு படுத்த விரும்பிய சாமி, “மார்க்கின் எதிர்ப் பக்கம் விளையாடுவது யார் ? இங்கிருந்து எனக்குத் தெரியவில்லை.” என்றான்.

“எரிக் ஜான்சன்.”

“எரிக்கா ? கடந்த ஆண்டில் நிறைய வளர்ந்து விட்டான் போலிருக்கிறது. கோச்சும் நீயும் அவனுடன் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் ?”

“எரிக் முதல் செட்டைத் தோற்று விட்டான். இரண்டாவது செட் ஆரம்பிக்கும் முன் கோச்சும் அவனும் என்னை அழைத்து மார்க்கின் பலவீனம் என்ன என்று கேட்டார்கள்.” அது என்ன என்று அவர்கள் இருவருக்கும் தெரியும். பதினொரு வயதில் சூரன் மார்க்குடன் முதன் முதலாக விளையாடிய போது அதைக் கண்டு பிடித்து அதைப் பயன் படுத்திக் கொண்டது சாமியின் நினைவுக்கு வந்தது.

“நான் அதைச் சொல்ல வில்லை.”

“க்ரீன் ஹில்ஸ் அகடெமியைத் தோற்கடிக்க மிகவும் ஆசைப்படுவாய் என்று எதிர் பார்த்தேனே.”

“எரிக் எப்படி ஆட வேண்டும் என்று கோச் கேட்டிருந்தால் யுக்தி எதாவது சொல்லியிருப்பேன். இருவரும் மார்க்கின் பலவீனம் என்ன என்று கேட்டது அவனுக்கும், எனக்கும் ஆறு ஆண்டுகளாக இருக்கும் நட்பை அவமதிப்பது போல் எனக்குப் பட்டது.”

அதை ஒப்புக் கொள்வது போல் சாமி மௌனமாக இருந்தான்.

இரண்டாவது செட்டையும் மார்க் வென்ற போது க்ரீன் ஹில்ஸ் அகடெமி மாணவர்களின் வெற்றி கோஷம் காதை; துளைத்தது.

இரண்டு கோச்சுகளும் தனித் தனியே தங்கள் அணியின் ஆட்டக்காரர்களைக் கோர்ட்டின் நடுவில் ஒன்று சேர்த்துப் பேசினார்கள். வெற்றி பெற்ற அணியின் கூட்டம் விரைவில் முடிந்து விட்டது. மாட்ச் வென்றவர்களுக்குப் பாராட்டுகள். தோற்றவர்களுக்கு அடுத்த தடவை இருக்கவே இருக்கிறது. தனியாகவோ, பெற்றோருடனோ கார்களை நோக்கி அவர்கள் நடந்தார்கள். மார்க் மரத்தடிக்கு வந்த போது சின்டி விற்காத சாமான்களைப் பைகளில் வைத்துக் கொண்டிருந்தாள்.

“மாம்! என் உதவி வேண்டுமா ?”

“என் வேலை கிட்டத்தட்ட முடிந்து விட்டது. நீ போய் மிஸ்டர் சாமிடம் ஹலோ சொல்.”

பெஞ்சில் உட்கார்ந்தி;ருந்த சாமியின் பக்கம் வந்தான். “ஹாய் மிஸ்டர் சாம்!”

“ஹாய் மார்க்! எப்படி இருக்கிறாய் ? பார்த்து வெகு நாளாகி விட்டது.”

“ஐயாம் iஃபன்.”

“எந்த காலேஜ் போகிறாய் என்று தெரியுமா ?”

“இன்னும் தெரியவில்லை. நார்த் கரோலைனா செல்ல ஆசை.”

“நான் டியூக் ரசிகன். ஆனாலும் படிப்பு, டென்னிஸ் இரண்டிற்கும் அது நல்;ல இடம் என்று சொல்வேன். உனக்கு அங்கே நிச்சயம் கிடைக்கும். உன் மாட்ச்சின் இரண்டாவது செட்டைப் பார்த்தேன். நீ திறமையாக ஆடுகிறாய். கடந்த இரண்டு ஆண்டுகளில் உன் ஆட்டம் வெகுவாக முன்னேறி இருக்கிறது.”

“தாங்க்யூ! மிஸ்டர் சாம்.”

“உன் மாட்ச் நடக்கும் போது உன் பலவீனம் என்ன என்று சூரனை எரிக்கும், கோச்சும் கேட்டிருக்கிறார்கள்.”

“அந்த மூவரும் கூடிப் பேசியதிலிருந்து நானும் அதை எதிர் பார்த்தேன்.”

“சூரன் உன் பலவீனத்தைச் சொல்லவில்லை.”

“சூரன் ஒரு மிகச் சிறந்த நண்பன், சந்தேகமே இல்லை.”

“அவன் சொல்லி இருந்தாலும் நீ ஜெயித்திருப்பாய்.”

“அது வேறு விஷயம். அவன் சொல்லாதது அவன் கேரக்டரைக் காட்டுகிறது. நீங்கள் சூரனின் தந்தை என்பதற்காக மிகவும் பெருமைப் படவேண்டும், மிஸ்டர் சாம்!”

“நிச்சயமாக.”

தோல்வி அடைந்த குழு கலைந்து கொண்டிருந்தது. அதில் மற்றவர்கள் சென்ற பிறகும் சூரனை நிறுத்தி வைத்து கோச் ஏதோ சொன்னார். அதை மார்க்கும், சாமியும் கவனிக்கத் தவறவில்லை.

“மார்க்! கோச் சூரனிடம் என்ன சொல்கிறார் என்று ஊகிக்க முடிகிறதா ?”

“ஏன் ஊகிக்க வேண்டும் ? என்ன என்று நிச்சயமாகவே எனக்குத் தெரியும்.”

“என்ன ?”

“சூரன் போட்டிருக்கிறானே ஊதா நிறச் சட்டை மஞ்சள் வட்டங்களுடன். அதை இனி மேல் அவன் அணிய மாட்டான்.”

– மே 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *