கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 14,050 
 

மணி என்ன? கேசவனிடம் ‘ரிஸ்ட் வாட்ச்’ கிடையாது. சுரீரென்று அடித்த வெயிலும், வயிற்றைக் கிள்ளிய பசியுந்தான் மணி இரண்டிருக்கும் என்று உணர்த்தியது. கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்தான். சாம்பார் சாதத்தை மடமடவென்று சாப்பிட்டு முடித்தான். காலை 9 மணி முதல் ‘ஸைன்போர்டு’ எழுதி, வாடி வதங்கியிருந்த அவனுக்கு வயிறு நிறைந்ததும் கண்கள் தாமாகச் சொக்கின. வழக்கம்போல் எதிர்காலம் பற்றிய பிரகாசமான கனவுகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. ‘ஸைன்போர்டு’ எழுதிப் பெற்ற அனுபவம், ஓவியக் கல்லூரியில் இடம் கிடைத்தல், பட்டதாரியாதல், வங்கியில் நிதியுதவி, சொந்த அலுவலகம், ‘கேசவன் ஆர்ட்ஸ்’ என்ற பெயர்ப்பலகை, அதன்கீழ் ‘விளம்பரங்கள் வரைந்து தரப்படும்’ என்ற வரி…… இவ்வாறு அவன் பகற்கனவு தொடர்ந்தது. பெரியதாக வீசிய ஒரு காற்று அவன் தோளில் தொங்கிய துண்டை முகத்தில் படியச்செய்து அவனை விழிக்க வைத்தது.

முகத்தைத் துடைத்துக் கொண்டு தன்னையே ஒருமுறை பார்த்துக் கொண்டான். அவனுடைய முதலாளி பரமசிவத்தை முதன்முதலில் சந்தித்ததையும், வேலை கிடைத்ததையும் நினைத்துப் பார்த்தான்.

மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, காலில் செருப்புக்கூட இல்லாமல் கைவண்டி இழுக்கும் முருகேசனின் மகன் கேசவன். பள்ளிப்படிப்பை முடித்திருந்த அவனுக்கு அதற்கு மேலும் படிப்பைத் தொடர்வது என்பது நினைக்க முடியாத ஒன்று. வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான்.

ஒருநாள், சில்லரைச் சாமான்கள் வாங்கக் கடைக்குச் சென்றவன், கடைக்காரர் சாமான்களைக் கட்டித் தரும் வரை காத்திருந்த போது, அருகிலிருந்த ‘விலைப்பட்டியல்’ எழுத வைத்திருந்த கரும்பலகையைப் பார்த்தான். கீழே கிடந்த ஒரு சாக்கட்டியையெடுத்து, காலியாக இருந்த அந்தக் கரும்பலகையில் கடைக்காரர் முகத்தை அப்படியே வரையத் தொடங்கினான்.

கடைக்கு முன்னால் கார் ஒன்று வந்து நின்றது. காரிலிருந்து கீழே இறங்கி வந்தார் ஒருவர். கையிலிருந்த சீட்டைக் காட்டி அந்த முகவரி இருக்குமிடத்தைக் கடைக்காரரிடம் கேட்க வந்த அவர், கேசவன் வரையும் உருவத்தையும் கடைக்காரரையும் மாறி மாறிப் பார்த்து வியந்து போனார். கேட்க வந்ததை மறந்து கேசவனை அருகில் அழைத்தார்.

”ஏம்ப்பா! உன் பேரென்ன? நன்னா வரைஞ்சி ருக்கியே, ஓவியம் வரையப் படிச்சிருக்கியா?”

”இல்லீங்க ஐயா! ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ரொம்பவும் ஆசைதான். ஆனா, எங்க குடும்ப நிலையிலே அதெல்லாம் நடக்காதுன்னு பள்ளிப் படிப்போடே நின்னுட் டேன். சின்ன வயசிலேர்ந்து எதையாவது கிறுக்கிக்கிட்டேயிருப்பேன். அதான் இப்பவும் பலகையைப் பார்த்தவுடன் வரையற ஆசை. கை சும்மா இருக்கலை”. வேடிக்கையாகக் கூறினான் கேசவன்.

”இப்போ எங்கேயாவது வேலை செஞ்சுண்டிருக்கியா?”

”வேலை தேடற வேலையத்தான் செஞ்சுண்டிருக்கேன்”. குரலில் வேதனை தெரிந்தது.

”என்கூட வர்ரியா? நான் உனக்கு வேலை தர்ரேன்” ஸன் ஆர்ட்ஸ் என்ற விளம்பர போர்டுகள் பெரிய பெரிய சாலைகளில் நிக்கறதைப் பார்த்திருக்கியா? அதெல்லாம் என்னோடதுதான். எங்கிட்டே அஞ்சாறு பேர் வேலை செய்யறாங்க. அவங்களோட சேர்ந்து போர்டு எழுதற, வரையற வேலையக் கத்துக்கோ, மாசம் 200 ரூபாய் தர்றேன். வேலயக் கத்துண்டதுக்கப்புறமா அவங்களை மாதிரியே நீ தனியா எழுத ஆரம்பிச்சுடு. அப்புறம் அவங்களுக்குக் கொடுக்க மாதிரி உனக்கும் சம்பளம் தர்றேன். சரியா? சம்மதம் எதிர்பார்த்துக் கேட்டார். அவனிடம் ஒளிந்திருக்கும் ஆற்றலை நன்றாக எடைபோட்டிருந்தார்.

கசக்குமா கேசவனுக்கு, பிடித்தமான தொழில்; முன்னேற வாய்ப்பு; மாதச்சம்பளம் உடனே ஒப்புக் கொண்டான்.

வேலையில் சேர்ந்து மூன்று மாதங் களாகின்றன. நன்றாகவே தொழிலைக் கற்றுக் கொண்டு விட்டான். ஓவியத்திறமையில் அவனுடைய கற்பனை வளமும் சேர்ந்தது. அவனுடைய வண்ணப் பலகைகள் மட்டும் தனிச்சிறப்புடன் காணப்படலாயின. அவனு டைய அயரா உழைப்பும் தன்னம்பிக்கையும் சம்பளத்தை மேலும் உயர்த்தின.

பழைய நினைவுகளிலிருந்து மீண்டான் கேசவன். மடமடவென்று வேலையை முடிப்பதில் மும்முரமானான். திடீரென்று ‘டமால்’ என்ற பலத்த ஓசை. என்னவென்று பார்க்கத் திரும்பிய கேசவன் கால் தடுமாறி 20 அடி உயரத்தி லிருந்து கீழே விழுந்தான். நல்லகாலம், கீழேயிருந்த ஒரு மணல் குவியலில் விழுந்ததால் உயிர் பிழைத்தான். ஆனால வலது கால் மட்டும் சிமெண்ட் பிளாட்பாரத்தில் மோதி முழங்காலில் நல்ல அடி. காலை மடக்கவோ திருப்பவோ முடியவில்லை. எலும்பு முறிவு என்பது புரிந்துவிட்டது.

சற்று தூரத்தில் முதலாளி பரமசிவத்தின் கார் விளக்குக் கம்பத்தில் மோதிய நிலையில் நின்று கொண்டிருந்தது. ஸ்டியரிங் மீது முதலாளியின் முகம் பதிந்திருந்தது. கார் மோதிய ஓசை தான் அவனைக் கால் தடுமாறச் செய்திருக்கிறது. அது நகரத்தின் முக்கியமான சாலைதான் என்றாலும் விளம்பரப்பலகை இருக்கும் அந்த இடத்தில் அப்போது ஆள் நடமாட்டம் இல்லை. வாகனங்கள் மட்டுமே பறந்து கொண்டிருந்தன. கேசவன் வேலையை எந்த அளவு முடித்தி ருக்கிறான் என்பதைப் பார்க்க வந்த பரமசிவம் நிமிர்ந்து பார்த்தபடியே வந்ததால் ஏற்பட்ட விபத்து.

முதலாளியின் நிலையைப் பார்த்த கேசவன் பரபரத்தான். ஆனால் காலை மடக்கவோ, எழுந்திருக்கவோ முடியவில்லை. உட்கார்ந்த படியே நீட்டிய காலுடன் சாலையின் ஓரத்திற்க நகர்ந்து வந்தான். சாலையில் வருகின்ற கார்களை நிறுத்த முயன்றான். வேகமாகப் பல கார்கள் பறந்த விட்ட போதிலும், மனிதா பிமானமுள்ள ஒருவர் மட்டும் காரை நிறுத்தினார். அதிர்ஷ்டவசமாக அவரிம் ‘செல்போனும்’ இருந்தது. (செல்போன் கண்டுப்பிடித்தவர் வாழ்க) முதலாளி வீட்டுத் தொலைபேசி எண்ணைச் சுழற்றச் சொல்லி போனை வாங்கிக் கொண்டான். முதலாளியின் மனைவி பவானி அம்மாதான் பேசினாள்.

”அம்மா ! நான் கேசவன் பேசறேன்” என்று சொல்லி விபத்து பற்றியும் கார் நிற்குமிடத் தையும் விவரமாகச் சொல்லி ஓர் ஆம்புலன்ஸ் வண்டியையும் அழைத்துக் கொண்டு வரச் சொன்னான். செல்போனைத் திரும்ப பெற்றுக் கொண்டு அவர் காரைக் கிளப்பிக் கொண்டு போனார்.

அடுத்த, பத்து நிமிடங்களில் ஆம்புலன்ஸ் பின் தொடர பவானி அம்மாள் காரில் வந்திறங் கினார். ஆம்புலன்ஸ் ஆட்கள் பரமசிவத்தை மெதுவாக வண்டிக்குள் ஏற்றியவுடன் வண்டி புறப்பட தயாராயிற்று. அதற்குப் பின்னால் தானும் காரில் ஏறப் போன பவானி அம்மாளை, ”அம்மா’ என்றழைத்து நிறுத்தினான் கேசவன். திரும்பி பார்த்த அவளிடம், ”அய்யாவோட கார் மோதின சத்தம் கேட்டு கீழே விழுந்திட்ட எனக்கு இப்போ எழுந்திருக்கக்கூட முடியல்லே” என்று தழுதழுத்தான்.

அவசரஅவசரமாகக் கைப்பையைத் திறந்து நூறு ரூபாய் நோட்டு ஒன்றை உருவி அவன் கையில் திணித்து, ”ஆட்டோ ஒண்ணைப் புடிச்சு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் போ அவங்கள்ளாம் எனக்காகக் காத்திண்டிருக் காங்க” என்று சொல்லியபடி காருக்குள் பாய்ந்து டிரைவரை ”வண்டியை எடுப்பா” என்றாள். அப்போலோ மருத்துவமனையை நோக்கிக் கார் விரைந்தது.

உயிரின் விலையை நிர்ணயிக்கும் தராசு கேசவனுக்குப் புரிந்தது. பாவம் கேசவன். ஆட்டோவுக்குக் காத்திருந்தான்.

– மே 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *