கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2024
பார்வையிட்டோர்: 382 
 
 

அத்தியாயம் 1-4 | அத்தியாயம் 5-8 | அத்தியாயம் 9-12

அத்தியாயம்-5

“சின்னக்கா…”

கூடத்துக்குள் நுழையும் போதே குரல் கொடுப்ப வளைக் கொல்லையில் இருக்கும் தாயம்மா புரிந்து கொண்டு விரைந்து வருகிறாள்.

வெயில் சுட்டெரிக்கிறது. “ஆயா, உள்ளே கீழே விழுந்திருக்கும் மாங்காயெல்லாம் எடுத்துக் கிடலாமா?” என்று பின் பக்கம் வேலிக்கப்பாலிருந்து ஒரு குழந்தை கேட்டது. எண்ணெய் கண்டு யுகமான முடி. புழுதி படிந்த மேனி. இடுப்பில் ஒரு அழுக்குக் குழந்தையுடன் இன்னொரு சிட்டு…

அந்தக் குழந்தைகள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் என்று அறிய வேண்டும் என்ற ஆவலுடன் “அதுக்கென்ன, எடுத்துத்தாரேன்…” என்று சொல்லும்போது, மேலிருந்து ஏதோ அவள் கையில் விழுந்ததும் நெருப்புத்துண்டு பட்டாற் போல் உறைத்ததும் திடுக்கிட்டு, கையைத் தேய்த்துக் கொண்டாள். அப்போதுதான் அந்தக் குரல் அவளை இழுக்கிறது. அவள் கிணற்றுக்கரை தாண்டி வரும்போது, ராசம்மாளே பின் நடை கடந்து வந்து விடுகிறாள். அவளுடன் ஒரு இளம் பெண், பேரப் பெண்ணா? தெரியவில்லையே?

“எப்ப வந்தே ராசம்மா? இது பரிமளத்தின் மூத்த மகளா?”

“இல்ல, சின்னக்கா. இது. இவதா மூணாவது, மேகலா…”

“அடே. மேகலாவா? என்ன இப்படி வத்தக் குச்சியா, கறுத்து… வா… வாங்க..”

கிணற்றுக் கரையில் வாளியில் இருந்து, தண்ணிரை எடுத்துத் தேய்த்துக் கொள்கிறாள். “என்னமோ பூச்சி விழுந்தாப்பல கடிச்சிச்சி, எரிச்சலா எரியிது… நேத்தே ரங்கசாமி சொன்னா, மாமரத்துல பூச்சி புடிச்சிருக்குன்னு. பிஞ்செல்லாம் உதிருது; எலெயெல்லாம் சருகாக் காயுது. இத்தன நாள்ள, இப்படி ஒரு பூச்சி வந்ததில்ல.”

“பெரிம்மா.. இதபாருங்க, உங்க வெள்ளச்சீலை. பச்சையா புழு போல..” என்று மேகலா, அவள் மேல் மாராப்பில் ஒட்டி இருக்கும் சிறு புழுக்ளை எடுத்துப் போட்டுக் காலால் தேய்க்கிறாள்.

கழுத்தண்ட சுரீல்னு. “அய்யோ, இந்தப் புழுவா இப்பிடிக் கொட்டுது?…” என்று அவளே எடுத்துப் போடுகிறாள். மாராப்பை உதறுகிறாள்.

“இந்த வருசம் எங்குமே மா சரியில்ல. தை அறுப்பும் போது மழ கொட்டிச்சி. மாம்பூவெல்லாம் நாசமாச்சி. காஞ்சு காஞ்சு, குறுவைய நாஸ்தியாக்கிச்சி. ஆத்துல தண்ணியே இல்ல. கிராமத்துல, மனிசங்க இருக்கவே தோதில்லாம ஆகுது சின்னக்கா. பஞ்சாயத்துத் தேர்தல் வருமின்னயே சாதிச்சண்ட காலனிப் பொண்ணு ஒண்ணுகூட, தெக்குத் தெரு மேச்சாதிப் பையன் ஓடிட்டான். கேபிள் டி.வி. வச்சிருந்தவ. காதல். ஒடிடிச்சின்னு சொல்லிக்கிட்டாங்க. அது ஒடல. அப்படியே தோப்புல வெட்டிப் போட்டிருந்தாங்க..”

அவள் செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.

“முருகா…!”

“எப்டிப்படியோ ஆயிட்டது சின்னக்கா. சாமியில்லன்னு சொன்னதும் சாதியில்லேன்னு சொன்னதும் புள்ளார ஒடச் சதும், பூணுால அறுத்ததும் ஒரு காலம். இப்ப சாதி மட்டுமில்ல. சாமி மட்டுமில்ல. எத்தினியோ கட்சிங்களும் சனங்களக் கூறுபோட்டுக் கிட்டிருக்கு சின்னக்கா…”

கீழ்த்தஞ்சையின் ஆற்றுப்பாசனத்தில் வேலி வேலியாக நிலம். அந்தப் பெரிய வீட்டில் ராசம்மா கல்யாணம் கட்டி வந்தது அவளுக்குத் தெரியும். இந்த அய்யாவும், ராசம்மா மாமனாரும் சம வயதுக்காரர்கள். அவருடைய அண்ணன் மூத்தார் ஒருத்தரைப் பற்றி உயர்வாகப் பேசுவார்கள். அன்னிபெசன்ட் அம்மை அவர்கள் ஊரில் வந்து தங்க, அவர் கிராமத்தில் அழகாக ஒரு கட்டிடம் கட்டினாராம். தாயம்மாளும் அதைப் பார்த்திருக்கிறாள்…

ராசம்மாவின் புருசன் அந்தக் கலத்தில் காசியில் படிக்கப் போனான். நெடுநெடு என்று உயரம். நல்ல சிவப்பு. சுருட்டை சுருட்டையான முடி படிப்பை முடிக்கு முன்பே இவர்களின் அஹிம்சைக்கு மாற்றான புரட்சி ஆயுதம் என்ற கிளைக்குத் தாவினான். துப்பாக்கியை எடுத்துக் கொண்டு புலியூர் மிராசைச் சுட்டான். மூட்டை மூட்டையாக நொய் – அரிசி எல்லாம் குடிபடைகளுக்கு அளந்துவிட்டான். போலீசின் கண்களுக்குப் படாமல் ஓடி ஒளிந்து, கடைசியில் பிடிபட்டான். அரசுத் துரோகக் குற்றம் சாட்டி, அவனுக்குத் தண்டனை விதிக்குமுன், அவனுக்குத் துக்குத் தண்டனை வந்து விடுமோ என்று அஞ்சி, பெற்றவர்கள், அவனுக்கு மூளை சரியில்லை என்று பொய்யாக ஒரு ‘டாக்டர் சர்ட்டி பிகேட்’ காட்டி, அவனுக்கு ஆயுள் தண்டனைக்கு மாற்றாக, பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லச் செய்தார்கள்.

ராசம்மா… பட்டணத்துக்கு, மாமன் மாமியுடன் வரும் போதெல்லாம் அவர்கள் வீட்டில்தான் தங்குவார்கள். ராதாம்மாவுக்கு ஏழெட்டு வயசிருக்கும். கீழ்ப்பாக்கத்து ஆஸ்பத்திரியில் இருந்து, ஓரிரவு அழைத்து வந்து, ஊருக்குக் கூட்டிச் சென்றார்கள்…

அதற்குப் பிறகு இவள் ஐந்து பேறு பெற்றிருக்கிறாள். ஆனால், பையன் குடிகாரனானதும், தாயாதி பங்காளிச் சண்டைகளில் குடும்பம் சிதறிச் சின்னாபின்னமானதும் காணப் பொறுக்காமலே மனமுடைந்து பெரியவரும், மனைவியும் போய்விட்டார்கள்…

வேர்க்க விருவிருக்க வெயிலில் வந்திருக்கிறாள். எங்கிருந்து நடந்து வந்தாள்?

இடையில் ஒரு எண்பது ரூபாய் நைலக்ஸ் சீலை. தாலிச் சரடு மட்டுமே உடம்பில் இருக்கும் நகை நெற்றி, கன்னமெல்லாம் சுருக்கங்கள். இவள் கண்கள் துளும்ப உற்றுப் பார்க்கையில், அவள் “சின்னக்கா..!” என்று தழுவிக் கொள்கிறாள். விடுவித்துக் கொண்டு பானையில் இருந்து செம்பில் நீர் மொண்டு கொண்டு வருகிறாள்.

“உக்காரு, தாயி… கண்ணு உக்காரு…” ராசம்மா கண்களைத் துடைத்துக் கொள்கிறாள், சீலை முன்றானையால் துடைத்தவாறு.

“இது சனிய, துடைச்சிக்கக்கூட உதவாது.” என்று சொல்லிக் கொண்டு செம்பு நீரைப் பருகி ஆசுவாச மடைகிறாள். “கண்ணு, பானையிலேந்து, இன்னுங் கொஞ்சம் தண்ணி கொண்டுவா…” என்று செம்பை மகளிடம் கொடுத்து விட்டு, சின்னக்கா, நீங்க உக்காருங்க!” என்று அந்த பெஞ்சில் உட்கார்த்துகிறாள்.

“காலம, எட்டு மணிக்கு நானும் இவளும் குடப்பேரி தாசில்தாராபீசுக்கு வந்தம்..” என்று சொல்லிவிட்டு அந்தச் செம்பு நீரில் பாதியைக் குடிக்கிறாள் – மீதியை, “நீ குடிச்சிக்கம்மா?” என்று சொல்லும்போது கண்களில் கரகர வென்று கண்ணிர் சுரந்து கன்னத்தில் வடிகிறது. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘குடப்பேரி தாசில்தாராபீசா?… இங்கியா? மெயின் ரோடுக்கப்பால… பஸ்ஸ்டாண்டு தாண்டி..? அங்கதானே அந்த ஆபீசெல்லாம் இருக்குன்னு ரங்கசாமி சொன்னா?”

“ஆமா, சின்னக்கா. இவளுக்கு ஒரு சர்ட்டிபிகேட்டுக்காக வந்தே…”

“என்ன சர்ட்டிபிகேட்?”

“வேலைக்குத்தா. அது சம்பந்தமாத்தா, உங்களையும் பாக்க வந்தோம், சின்னக்கா?… உங்க குருகுல வித்யாலயாவில ஒரு டீச்சர் வேலைக்குன்னு நப்பாசையோட வந்தம். நம்ம புதுக்குடி கருமுத்து தெரியுமில்ல? அவப்பாருகூட, சுதந்தரப் போராட்டத்துல அடிபட்டு, செயில்லியே செத்துப் போனாரு…”

இவளுக்கு வெறுப்பாக வருகிறது.

“ராசம்மா, சொதந்தரப் போராட்டம்னு சொல்லாத, சொதந்தரம் வந்து என்ன வாழுது? அந்தப் போலீசு தேவல. இப்ப லாக்கப்புல அடிபட்டு சாவுறது மட்டுமா? போலிசுடே சன்க, பொம்புள மானம் குலைக்கிற எடங்களாகவே ஆயிட்டுது. புருசனக் கொண்டிட்டுப் போறது, அவன அடிச்சிக் குத்துசிராக்குது. பெறகு, பொண்சாதியக் கூட்டிட்டு விசாரணைங்கற பேரில அவன் முன்னாடியே இந்தத் தடியங்க அதைக் கதறக்கதறக் குலைக்கிறது. பெறகு அத்தளிெயே விடுறது. அது வூட்டுக்கு வந்து, காகிதம் எழுதி வச்சிட் டுத் தூக்கு மாட்டிக்கிச்சி. இப்படிக் கொஞ்ச நாமின்ன ஒரு பாதகத்தை எதித்து, பொம்புளங்க போராட்டம் வச்சாங்க. ‘மனிச உரிமை’ன்னு பேசுனாங்க. மின்ன மாதிரியா ராசம்மா? இப்ப எத்தினி வக்கீலு, டாக்டரு, பெரிய பெரிய ஆபீசரு பொம்புளங்க இல்ல? போலீசிலயே பொம்புளங்க இருக்காங்க. நம்ம கிஷ்னாம்மா இல்ல?. பழைய சர்வோதயக்காரங்க? அவங்க கூட வந்தாங்க. உண்ணாவிரதம்னு போனே. நானும், அய்யா போன பிறகு இந்த மாதிரி போராட்டம்னா, வந்து கூப்பிடுவாங்க. போயிட்டிருந்தே. . இப்ப அந்தக் கதையெல்லாம் எதுக்கு? நீ தாசில்தார் ஆபிசுக்கு என்ன சர்ட்டிபிகேட் வாங்க வந்த? அத்தச் சொல்லு?”

“எத்தச் சொல்ல? இதுன் எதிர்காலம் என்ன, எப்பிடின்னு ஒண்ணும் புரியல. அண்ணன் புள்ளன்னு கலியாணம் கட்டி வச்சேன். அந்தப்பாவி இத்த நிர்க்கதியா நிறுத்திப்பிட்டு, இன்னொருத்திகூட இருக்கிறான்.”

“நிசந்தானா ராசம்மா, நான் கேள்விப்பட்டது?”

“நெசந்தா. பம்பாயில, நல்லா சம்பாதிக்கிறான்; ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு கட்டி வச்சேன். அண்ணி உக்கி உடஞ்சி போயிட்டா. கோர்ட்டுல போட்டு ஜீவனாம்சம் வாங்கலாம்னா, அவன் என்ன வேல செய்யிறான், எங்கே இருக்கிறான்னு ஒரு வெவரமும் தெரியல. நாலு நா. முன்ன மதுரையிலிருந்து சிங்காரம் வந்திருந்தான். அண்ணியோட தங்க புருசன். அவன் சொல்லுறான், அந்தப் பொண்ணயும் வச்சிக்கல, அவன் துபாய்கோ எங்கோ போயிட்டாப் புலன்னு சொல்லுறான். அது நர்சாயிருக்காம். ரெண்டு புள்ளிங்க. வாஷில இவன் பார்த்தானாம். எங்க போயி இந்தப் பாவத்தக் கொட்டிக்க, சின்னக்கா?”

“தீர விசாரியாம கலியாணம் கட்டிருக்கக் கூடாது. ஒறவாவது ஒட்டாவது? பத்து மாசம் வயித்தில வச்சி நோவும் நொம்பரமும் அநுபவிச்சி, ஒழுக்கமும், சீலமுமா இருக்கிற ஒரு எடத்துல வளத்த பயிரே நச்சுப்பயிரா, மண்டி யிருக்கு.”

“ஒண்ணுமே தோணல சின்னக்கா. அவ லீவுல வந்ததும், இது அப்படியே அவன் வாங்கிட்டு வந்த சீலை, பவுடர் அது இதுன்னு குடுத்து உறவாடியதிலை இவந்தா புருசன்னு மயங்கியதும் அண்ணி முன்னால நின்னு எதோ போட்டதப் போடுன்னு கட்டி வைச்சதும். பம்பாயில ஆடு கிடைக்கலன்னு, ஆறு மாசம் குடும்பமில்லாம ஆட்டோடயே கழிஞ்சி போச்சி. பெறகுதா விசயம் புரிஞ்சிச்சி. இந்த. தியாகி அய்யாவோட பங்காளி வூட்டு மணிசர், சரவணன், ஆடுதேடிவந்து குட்டை உடைச்சாரு அவுரு எங்க மூத்தாரு வகையில ஏதோ ஒறவு. “அம்மா, அவன் ஏற்கெனவே ஒரு நர்சுகூடத் தொடர்பு வச்சிட்டு ஒரு குழந்தையும் இருக்கும்மா. ரெண்டு பேரும் ஒரே பிளாட்டிலதா இருக்காங்க. நான் கண்டு திட்டினேன். பாவி, இப்படி அநியாயமா ஒரு பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்திட்டியேன்னு. மாமா, மாமா, வூட்டுக்குச் சொல்லாதீங்க, இவள நான் கட்டிக்கல. அந்தப் புள்ளங்க- அவ முதப் புருசனுக்குப் பிறந்ததுங்க. அவன் ஆக்ஸிடன்ட்ல செத்திட்டான். எரக்கப்பட்டு ஆதரவு குடுத்தேன், அவ்வளவுதான். மணிய கூடிய சீக்கிரம் கூட்டிட்டு வந்து குடும்பம் வைக்கிறேன்”னானாம்! அன்னைக்கே கூரை இடிஞ்சி விழுந்திடிச்சி, சின்னக்கா!” என்று அழுகிறாள்.

அந்தப் பெண் மரமாக நிற்கிறாள்.

இவளுக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை.

“வெறும் எஸ்.எஸ்.எல்.ஸிதான் படிச்சிருந்தா. பிறகு மேலே சேர்த்து படிக்க வச்சாச்சி. அண்ணாமலையில ஒரு பி.எட்டும் முடிச்சிருக்கா. ஆனா ஒழுங்கா ஒரு வேலை கிடைக்கல. சன்னாநல்லூர்ல ஒரு அஞ்சுமாசம், தீபங்குடில ஒரு எட்டுமாசம்னு காலேல வீட்டவிட்டு ஏழு மணிக்குக் கிளம்பி, ஒரு பஸ் ரெண்டு பஸ் புடிச்சிப் போயிட்டு வந்தா. எல்லா வியாபாரம் பண்ணுற ஸ்கூல். ஆயிரம் ரூபாய்க்கு கையெழுத்து வாங்கிட்டு, கையில எழுநூறுதான் கொடுத்தான். ஸ்கூல் நடத்துறவங்க எல்லாருமே பெருச்சாளிங்கதா. ஒரு நல்ல சில நாலு வாங்கிக் குடுக்கக் கூட முடியல. சாந்தா வீட்டிலேந்துதா படிச்சா, பி.ஏ. அவ புருசன் சரியில்ல. அக்கா தங்கைக்குள்ள பிரச்னை வரக்கூடாது, நான் போக மாட்டேன்னிட்டா. புதுக்குடியில ஒரு ஸ்கூல்ல சேந்தா. ஆறுநூறு தான் குடுத்தான் கையில. பெரீ…ய தர்மஸ்தாபனம் நடத்துற ஸ்கூல். ஒருநா, அட்டென்டரா வேலை பார்த்த பொண்ணேட மாராப்புச் சீலயப்புடிச்சு இழுத்திட்டு லாப் கதவைச் சாத்திட்டானாம் அந்தச் சண்டாளன். புதுக்குடியே அல்லோல கல்லோலப் பட்டிச்சி. நானே நீ இனிமே அந்த ஸ்கூல்ல வேல பாக்கப் போவாணாம்னிட்டேன், சின்னக்கா…”

“உம் புருசன் எப்படி இருக்கிறான்?”

“இருக்கிறா. எனக்குத் தாலிக்கயிறும் பொட்டும் இருக்கு. இந்த ஆளு இருக்கிறது தா இப்ப பாரம். அண்ணன்னைக்கு மாட்டுவாகடக்காரன் வரலேன்னா, போடுற கூச்சல் சொல்லி முடியாது. முதுகில பொளவ வந்தது. என் உயிரை வாங்கினாரு சின்னக்கா, நா ஒருத்தி எதுக்குப் பொண்ணாப் பெறந்தேன்? இப்பல்லாம் பொண்ணு பெறந்ததுமே எருக்கம் பால ஊத்திக் கொல்லுறாங்களாம். அது ரொம்ப சரின்னு தோணுது…”

இவள் மனம் தாளாமல் அவள் தோள்களைப் பற்றி ஆதரவாகக் கண்களைத் துடைக்கிறாள்.

“அழாத ராசம்மா, நீயே இப்படி அழுதா, இந்தச் சிறிசுக்கு என்ன கதி? கண்ணைத் துடை காலம் சாப்பிட்டீங்களா, இல்லையா?”

அவள் கண்களை மேலும் மேலும் துடைத்துக் கொள் கிறாள். கண்கள் சிவந்து மூக்கு நுனி சிவந்து…

செவிகளிலும் இரண்டு மூக்கிலும் வயிரங்கள் பூரிக்க, இளமையின் பால் கொஞ்சும் முகம், இன்று எப்படியாகி விட்டது? உள்ளும் வெளியுமாகச் சூறாவளியில் சிக்குண்டு அலைபடும் ஒரு குடும்பப் பெண்…

“ஏம்மா, மணிமேகல, காலம எதாச்சும் சாப்புட்டீங்களா இல்லியா?”

“உம். சாப்பிட்டம்.”

“எங்க வந்து தங்கியிருக்கிறீங்க?…”

“சம்பக அண்ணியோட தங்கச்சி வீட்டில.. மாம்பலத்தில. அங்கதா தங்கிட்டு நேத்து குருகுல வித்யாலயா போனம்…”

அவள் துணுக்குற்றுப் பார்க்கிறார். “குருகுலத்துக்கா போனிங்க?”

“ஆமா சின்னக்கா. சம்பகம்தா சொன்னா. குருகுல வித்யாலயா, மூணு இடத்துல பிரான்ச் வச்சிருக்காங்க.உங்களுக்கு, ரொம்ப வேண்டப்பட்டவங்கன்னு சொல்வீங்களே? போயி ஒரு வேலை கேளுங்க. இந்தக் காலத்துல உக்காந்திருந்தா, வேல தானா மடில வந்து வுழாது… ன்னா… கண்ணன் சவுதிலேந்து அங்கதா பணம் குடுக்கிறான். நாகபட்டணம் போயி படிகுடுன்னு அவகிட்ட கேட்டுப் போறதுக்கே குன்னிப் போறோம். சின்னவன் ராசு, அந்தக் கட்சி இந்தக்கட்சின்னு ஒரு பத்து பைசாக்குப் புண்ணியமில்லாம திரியிறான். பத்தாவதே தேறல. அப்பனிடம் வந்து சவடால் பேசுறான்…”

எங்கே தொடக்கம், எங்கே முடிவு என்ற தொடர்பு தெரியாமல் நிலை குலைந்திருக்கிறாள்.

“ரெண்டுபுள்ள இருந்தும், வழிவழியாக வந்த சொத்தொண்ணும் மிஞ்சல. ஏசண்டு சோத்துக்கு நாலுமூட்டை அரிசி குடுக்கவே ஆயிரம் கணக்குச் சொல்லுறான். வூடு பூச்செல்லாம் வுழுந்து படைபடையா சுவர் பொள்ளை, தரை பொள்ளைன்னு சிலோன்னு இருக்கு மாடி மிச்சூடும் வெளவால் தொங்கிட்டுக் கெடக்கு. இங்க வந்தா, எல்லாம் சரியாயிரும்னு கோட்டை கட்டிட்டு வந்தோம். அந்தத் தலைவரைப் பார்க்கவே முடியல..” விரக்தியில் வேதனை கூடுகிறது.

“யாரு பராங்குசத்தையா சொல்ற குருகுலம் நல்லாத் தானே நடக்குது?”

“அவரு அங்க வாரதே இல்லியாமே? பெரிய கட்டிடம், மூணுமாடி காம்பெளண்ட் சுவரே மதில் போல இருக்கு. வெளியே கூர்க்கா யாரு என்னன்னு ஆயிரம் கேள்வி கேக்குறான். அந்தக் காலத்துல எப்பவோ நாங்க போன எடம் இல்ல அது. போன உடனே ஒரு ஆலமரம் இருக்குமே? எனக்கு அதுதான் ஞாபகம். அதெல்லாம் வெட்டிட்டாங்க. நீளக்கூரை போட்ட எடங்கள் எதுமே இல்ல. மின்னாடிதான் ஆபீஸ்னு இருந்திச்சி. எல்லாம் அந்தப் பொம்புள கையில தான் இருக்கு அவுரு அங்க வாரதே இல்லையாம். சோத்துப்பரக்கத்துக் கந்தாண்ட யாரோ சாமியாமே? அங்கதான் இருப்பாராம். இன்ஜினிரிங்காலேஜ், சயன்ஸ் காலேஜ், பாலி டெக்னிக்னு ஏகப்பட்ட காலேஜ் வச்சிட்டாங்க. இதுக்குள்ளயே ஸ்கூல், அதா குருகுல வித்யாலயா, டெக்னிகல் இன் ஸ்டிட்யூட், கம்ப்யூட்டர் மையம், எல்லாம் கட்டியாச்சி. நீங்க இருந்த ஆடு, குளம், மரங்கள், கிரவுண்டு, எதும் இல்ல. மாடி மாடியா கட்டிடம். அடையாளமே தெரியல. இவளுக்குப் பேச்சே எழும்பவில்லை.

“அந்தப் பொம்புளன்னா யாரு செங்கமலமா ? அவளுக்கு அம்புட்டுப் படிப்பு ஒண்ணும் கிடையாதே? பாகீரதியம்மா வீட்டுல கூடமாட சமையல் செய்திட்டிருந்திச்சி. அப்படியே அய்யா முதமுதல்ல குருகுலத்துக்குக் கூட்டி வந்தாங்க, படிக்க. பாக்க நல்லாயிருப்பா. பராங்குசத் துக்குக் கட்டி வச்சாங்க. எனக்குத் தெரிஞ்சு ஒரு பொம்புளப் புள்ளயும் ஆம்புளப்புள்ளயும் பொறந்திச்சி. சாதுவான குணம்…”

“அதென்னமோ, இப்ப இந்தப் பொம்புளயத்தா சொல்றாங்க…” என்று குரலை இறக்குகிறாள் ராசம்மா.

“டாக்டர் எமிலின்னு பேரு. கிறிஸ்தவங்க. இவங்கதா எல்லா நிர்வாகமும். வெளிரூம்ல காத்துக் காத்து உள்ள போனம். அங்க சுவரில அய்யா, அம்மா, காந்தி படம் மாட்டிருக்காங்க. ஒரு சின்னப்பலகையிலே ஊது வத்தி, பூ எல்லாம் வச்சிருந்தாங்க. மத்தப்படி வெளி ரூம்ல, சுவருபூர, அந்த வித்யாலயத்துக்கு வந்த பெரிய. மனிசங்க, ஸ்டாருங்க, அரசியல் வாதிகள், மந்திரிகள். உங்க மகன் கூட மாலை போட்டுக்கிட்டு வருகை தந்தது பட்டமளிப்பு விழா நடத்தியது. எல்லாத்திலும் இந்த அம்மாதான் முதலா இருக்காங்க அவரும் இருக்காரு. அவுரு சேர்மன்… இவங்கதான் எல்லாம். எத்தனையோ வெளிநாட்டுக்காரங்க… சேவாதிலகம்னு சாமி பட்டம் குடுத்திருக்காரு…”

கேட்கக் கேட்கத் தலை சுற்றுவது போல் இருக்கிறது.

“அப்ப, பராங்குசத்தை நீ பாக்கவே இல்லையா?”

“அதா சொன்னனே ? அவுரு மடம், சாமின்னு என்னமோ ஆராய்ச்சி அது இதுன்னு பேசுறாங்க மாசத்துல ஒருக்க வருவாராம். தாடி, முடி, காவி சட்டை, உருத்தி ராட்சம் போட்டுட்டு சேவாதிலகம் பட்டம் வாங்குறபடம் இருந்திருச்சி. இந்த எமிலி அம்மாதா பக்கத்துல…”

“பட்டம் குடுத்தது ஆரு?”

“அது எனக்குத் தெரியல. ஒரு தாடிவச்ச வெள்ளக்காரர்…”

“இந்தக் கத கெடக்கட்டும், நீ வந்த காரியம் என்ன ஆச்சி?”

“முதல்லயே சம்பகத்தின் தங்கச்சி, அப்ளிகேசன் ஃபார்ம் வாங்கி அனுப்பிச்சிருந்தா, அதை எழுதி, ஒரு ஏழெட்டு சர்ட்டிபிகேட்டோட இணைச்சி, சாதிச்சான்று, அப்பா, தாத்தா தெரிஞ்சவங்ககிட்ட வாங்கினது, நன்னடத்தைக்கு வேலை செஞ்ச இடங்களில் வாங்கினது எல்லாம் அனுப்பி ரிஜிஸ்தர்ல அனுப்பியது உள்பட முந்நூறு ரூபா ஆச்சி. ஒண்ணும் வரலேன்னு தான் நேர கூட்டிட்டு வந்தேன். அங்க ஹிஸ்டரி டீச்சருக்கு இடம் இல்லையாம். பாடனி எம்.எஸ்.ஸின்னாத்தான் பார்க்கலாமாம். சின்னக்கா, இஸ்டரின்னா, சாபக்கேடா? ஊரில, இப்ப ஸ்கூல் இல்லாம இல்லை. நாலு கிண்டர் கார்டன் இருக்கு. எங்க ஏசண்டு, ஆறுமுகம், ஒண்ணுமில்லாம, மாமா முன்னாடி வந்து நின்னு, “தேங்கா எறக்களாங்களா? காயப்போட்டுடலாம், நூறுநூறா திருட்டுப் போகுது”ன்னு கேப்பான். ஆறு புள்ளங்க. வருசா வருசம் பெத்துப் போடுவா. எல்லாம் இங்கேந்து வளந்தது தா. இன்னைக்கு, அவவ, கழுத்து கொள்ளாம நகை என்ன, வயிரம், பட்டுன்னு, கிராமத்திலேந்து டாக்சில போறாங்க, வராங்க. டிராக்டர் நிக்கிது. ஒரு பயல் விவசாயம் படிச்சி ஆடுதுறையில் ஆபீசரா இருக்கிறான். எங்கனாலும் கல்யாணம் காட்சின்னா, ஏங்கிட்டேந்து சங்கிலி, வளைன்னு வாங்கிட்டுப் போவா. இப்ப அத்தனியும் தோத்துட்டு நா, தலைகுனிஞ்சி அவங்ககிட்டப் போயி, நூறுக்கும் இருநூறுக்கும் கையேந்துறேன். சத்தியமா இந்த இவ இல்லன்னா, நா. உசுர விட்டிருப்பேன்… வூட்டுல ஒரு ரேடியோ இருந்திச்சி. அத்தக்கூட அந்த மாட்டுவாகடம் எடுத்துப் போயிட்டா, பாவி. அன்னாடம் இவருக்குக் குடி சப்ளை பண்ணுறான்ல? சிலப்பா, ராவுல, கழுத்த நெறிச்சுக் கொன்னிட்டு, போலிசில போய் விழுந்திருவமான்னு தோணும்… ஆனா, இந்தப் புள்ளய ஓரிடத்துல சேக்கணும்… இதை நினைச்சிப் பொறுக்கிறேன்…”

“ஏம்மா, படிச்ச பொண்ணுதானே? இப்பல்லாம் டூசன் எடுக்கலாமே? இப்பதா- ரங்கசாமி கூடச் சொல்லுறான் ஏழை பாழை, வயித்துக்கில்லாததுங்க கூட, ஸ்கூல் படிப்புக்கே ஒண்ணொன்னும் டூசன் இல்லாம சரிப்படலியே? இதா ரோட்டுப் பக்கம் ஒவ்வொரு தெருவிலும், கம்ப்யூட்டர், டூசன்னு புள்ளங்க போகுதுங்க. ரங்கசாமி அவம்புள்ளங்களுக்கு, அஞ்சாம்கிளாஸ், ஆறாங்கிளாசுக்கு மாசம் தலா நூறு ரூவா குடுத்து டூசன்னு சொல்றா. படிப்பு என்னமோ இலவசங்கறாங்க. ஆரம்பத்துல எழுநூறு எண்ணுறு கட்டனும். பின்னால மரத்திலேந்து மாங்காயும், தென்னமரத்துத் தேங்காயும் கொண்டு வித்தெடுத்துக்கிறான். போகட்டும்னு நானும் எதும் கேட்டுக்கிறதில்ல… டூசன் எடுக்கலாமேம்மா ?”

இது புதிய வயிற்றெரிச்சலைக் கிளப்பி விடுகிறது.

“அதையேன் கேக்குறீங்க சின்னக்கா? இவ படிப்பு, பத்தாதாம். ‘மாத்ஸ்’ அதா கணக்கு பி.எஸ்ஸி, எம்.எஸ்ஸி படிச்சிருக்கணுமா. இவ, அப்ப அதுதா கெடச்சது. படிச்சா. பர்ஸ்ட் கிளாஸ்தா, பி.ஏ. அதுக்கு ஒரு மதிப்பு இல்ல. ஒண்ணும் வாணாம், ஏசண்டு ஆறுமுகத்தின் மக பரமேசுவரி, டூசன், மட்டுமே எடுக்குறா. சின்னவ. அவ புருசன் காலேஜ் புரொபசர். புதுக்குடிக்குப் போயிட்டுவரான். பைக் வச்சிருந்தான். எட்டு லச்சமாம். காரு வாங்கியாச்சி. அவ ‘மாத்ஸ் பி.எஸ்ஸிதா மாடில கொட்டாய் போட்டு, டூசன் எடுக்கிறா. மாசம் ஏழாயிரம் எட்டாயிரம் வருதாம். பொறந்தவூட்டோடதா இருக்கா. இவளுக்கு, பி.ஏ. படிப்புக்கு, பி.எட் படிப்புக்கும், அஞ்சாவது ஆறாவது கணக்குக் கூடவா சொல்லிக் குடுக்க முடியாது? நா எட்டாவதுதா படிச்சே, அந்த காலத்துல. கண்ணன், பரிமளா, ஏ, இவளுக்குக்கூட நாந்தா சின்னக்கிளாசில வீட்டுப்பாடம் சொல்லிக் குடுப்பேன். இப்ப இப்பிடி இந்தப் படிப்பு உதவாக்கரையாயிடும்னு புரியல…”

“அது சரி, நீ என்னமோ தாசில்தார் சர்ட்டிபி கேட்னியே? அது எதுக்கு?”

“நா வேலைக்கு மட்டும் கேக்கல. அவுங்க ஒரு தர்ம ஆஸ்டல் வச்சிருக்காங்க. எஸ்.கே.ஆர். அய்யா காலத்துலியே இருந்தது தானாமே அது? இவ எங்கனாலும், கிளார்க், ரிசப்ஷனிஸ்ட்னு வேல செஞ்சிக்கிட்டு அதுல தங்கிக் கலாம்ங்கறதுக்காகக் கேட்டோம். அதுக்குத்தான் இவ புருசனில்லாதவ, ஆருமில்லன்னு சர்ட்டிபிகேட் வேணும்னாங்க என்ன எழவு சர்ட்டிபிகேட்டோ? வெவரம் புரியாம போயி நின்னோம். ஆபீசா அது? முதல்ல போரப்பவே ப்யூன் புடிச்சிக்கிறான். யாரு, எதுக்கு, தாழ்த்தப்பட்ட சாதிச் சான்றிதழா? நிலமா, சொத்தா, வாரிசு உரிமையா’ன்னு கேட்டு பணம் புடுங்கறாங்க. அந்த எடத்துல எத்தினி ஆபீசர் கள் இருக்காங்கன்னு புரியல. கோவாலுன்னு எங்கூர்க்காரப் பய்யன் அங்க பாத்தான். “எங்கக்கா இங்க..?”ன்னு மணிய விசாரிச்சான். அவனுக்கு அரசியல் கட்சித் தொடர்பு. “போயி நீங்க, டெஸர்டட் வைஃப்னு போட்டு சான்றிதழ் வாங்கிடுங்க போதும்.”னு அவனே ஃபாரம் வாங்கிட்டு வந்தான். நூறு ரூபா குடுத்தாப் போதும்னான். அங்கியே எழுதி எடுத்திட்டு அவன் முன்னே போயி, அந்த ஆபீசருக்கு முன்ன எங்களையும் கூட்டிட்டு நுழைஞ்சான். அவுரு மேசையச்சுத்திப் பெரிய கூட்டம். அங்கே ஒரு ஆளப்புடிச்சி இவ, நூறு ரூபாயையும் தாளையும் குடுத்தா…

“அவன் அவரு பக்கமா நின்னிட்டிருக்கையில, ஒரு வயசான அம்மா, நிக்கிறாங்க. பின்னால ரெண்டு பேர். துண்டு போட்டவ, போடாதவன்னு ஒரெழவும் புரியல. அந்தம்மாகிட்ட, “ஏம்மா, உங்க புருசருக்கு, இன்னொரு சம்சாரம் இல்லேங்கறது. நிச்சியமா?” ன்னு கேக்குறான் அந்தத் தாசில்தார்.

“இல்லீங்கையா… நிசமாலும் இல்ல…”ன்னு நடுங்கிக் கிட்டே அவுங்க சொல்றாங்க.

“ஏம்மா, உங்களுக்கோ புள்ள இல்ல. அப்ப அவருவேறு ஒரு கலியாணம் செய்து கொண்டிருக்க மாட்டாருன்னு எப்பிடி நம்புறது? நாளைக்கு அவுங்க வேற, பென்சன் ‘க்ளைம்’ பண்ண வந்தா எங்களுக்குப் பிரச்னையாயிடுமே? ஆமா… உங்களுக்குத்தான் ஒண்ணுமில்ல. நீங்களே உங்க புருசருக்கு இன்னொரு கலியாணம் பண்ணி வச்சிருக்க வேண்டிதுதான?”ன்னு கேட்டாம் பாரு, அப்பவே எனக்கு அந்தச் சண்டாளன அடிச்சி நொறுக்கணும் போல இருந்தி ருச்சி, “ஏ, கோவாலு? இங்க வா!”ன்னு கத்தினே. எனக்கு இங்க ஒரு சர்ட்டிபிகேட்டும் எழவும் வாணாம்” ன்னிட்டு வெளிய வந்தேன்.

“ஏன் பெரிம்மா? அவங்கிட்ட நூறு ரூபாயும். ஃபார்மும் குடுத்தாச்சி. அஞ்சே நிமிசத்துல வந்திடும்…” ன்னா. அதுக்குள்ள அம்மாக்குப் பொறுக்கல. அந்தப் பொறுக்கி, எம் மகள இதுபோல எதானும் கேக்கமாட்டான்னு என்ன நிச்சயம்? படுபாவிக…

“சாதிச் சான்றிதழ் பெற ஒரு இருளப் பொம்புள வந்து நிக்கிது. அஞ்சுநூறு குடுத்திருக்காம். பாம்பு கொண்டாறேன், புடிச்சிக் காட்டுறியான்னு கேட்கிறானாம் தடியன்.” என்று தாசில்தார் அலுவலகக் காட்சிகளை விரிக்கிறாள்.

“சரிம்மா, உள்ள வாங்க. கஞ்சியும் சோறுமா ஏதோ ஆக்கி வச்சிருக்கிறேன்…” என்று அவர்களைச் சமையல் அறைக்குள் அழைத்துச் செல்கிறாள்.

அத்தியாயம்-6

காலையில் சாணிகரைத்து வாசலைத் தெளித்துப் பெருக்கிக் கொண்டிருக்கையில், விடாதே, பிடிபிடி… என்ற கூச்சலும், ஒலமுமாக ஒரு கூட்டம் தெருவில் புகுந்து வருகிறது. இந்தத் தெருவில் ஒரு காலத்தில் இந்த பங்களாவே பாதி இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது. பின் பக்கம் மட்டும் குளம் இல்லை, எதிரிலும் பெரிய நீர் நிலை இருந்தது; மரங்கள் இருந்தன; பன மரங்கள் உண்டு. பெரிய சாலையைத் தொடும் இடத்தில் ஜட்ஜ் பங்களா இருந்தது. ஜட்ஜ் யாரென்று தெரியாது. வில்வண்டி இருந்தது. கடுக்கன் போட்டுக் கொண்டு சிவப்பாக ஒரு ஐயர் வருவார். அவருடைய தாயார் பத்மாசனி அங்கே இருந்தார். அந்த அம்மை இறந்த பிறகு அவர்கள் யாரும் வரவில்லை. அதை அடகுக் கடைக்கார சேட் வாங்கி, முழுதுமாகத் தகர்த்து, வீடுகள் கட்டினார். அதேபோல் எதிர்ச்சாரியிலும் வீடுகள்… குளம் தூர்ந்து குப்பை மேடான போது, சீராக்கி, மறுபடி மரங்கள் வைத்தார். சிவப்புப்பூக்கள் பூக்கும் மரங்கள், வேம்பு, எல்லாம் நட்டார். இடது கைப்பக்கம் தள்ளி, பொட்டலாக இருந்த இடங்களில் கற்கள் நட்டு, பிளாட் போட்டுவிட்டார்கள். ஒவ்வொரு ஊராக முளைத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பக்கம் தான் குஞ்சும் குழந்தையும் குடும்பமுமாக எங்கிருந்தோ பெயர்ந்து வந்து பிழைக்கிறது. பழைய காலங்களில் வெள்ளைக்கார துரை கட்டிய பங்களா என்று ஒன்று இருந்தது. இப்போது அதையும் இடிக்கிறார்கள். அங்கு யாரோ சாமியார் மண்டபம் கட்டப் போகிறாராம். பின்புறம் வேலிப் பக்கம் நின்று மாம்பிஞ்சு கேட்ட குழந்தைகள் அந்தக் கும்பலில் இருந்துதான் வந்தார்கள்…

“யம்மா, இப்பிடி ஒரு பய கருப்புக் கட்டம் சட்டை பேன்ட் போட்டுட்டு தொப்பி வச்சிட்டு ஓடினானா?” என்று விர்ரென்று வந்து நிற்கும் மோட்டார் சைகிள்காரன் கேட்கிறான். அவன்பின் உட்கார்ந்து வந்த பெண், “பாவி, சங்கிலிய அத்திட்டுப் போயிட்டான், டாலர் தாலியோட ஏழு சவரன் மா? ஆட்டு வாசல்ல கோலம் போட குனிஞ்சிருந்தேன், ஒரு நிமிசமா வந்தது தெரியாம அத்திட்டுப் போயிட்டா. அவன் கையில புத்து வைக்க, வெளங்காம போக…” மோட்டார் சைகிள் பாய்ந்தோடுகிறது.

“நெதமும் நடக்குறது தா, இவளுவ, சயினும் டாலரும் தெரியும்படி எதுக்குப் போட்டுக்கணும்?”

“வாயக்கட்டி வயித்தைக் கட்டி சீட்டு நாட்டுப் போட்டு குருவி சேர்க்கிறாப்பல பணம் சேத்து நகை வாங்குறத இப்படிக் கொள்ளை கொடுக்கணும்னா வயிறு எரியாதா?…”

“பவுன் வெல ஆகாசத்துக்குப் போவுது, ரெண்டுவேள சோத்துக்கு உத்தரவாதமில்ல. எப்பிடியோ வாங்கிப் போட்டுக்கிறாளுவ…” ஆளாளுக்குப் பேசிக் கொண்டு போகிறார்கள்.

“தங்கம் தங்கம்” என்று ஒரு வெறியே எல்லோரையும் பிடித்து ஆட்டுவதாகப் படுகிறது. மோட்டார் சைகிள் காரனை எங்கோ பார்த்த நினைவு வருகிறது. ரங்கசாமி வருகிறான். “மைனாவதி ஆசுபத்திரிப் பக்கம் இவ புருசன் இளநீரு விக்கிறான். அன்னாடம் குடிச்சிட்டு வருவான். இவ தம்பிக்காரன்தான் கழட்டிட்டு ஒடிருக்கிறா…” என்று விவரம் சொல்கிறான்.

மேலே கேட்கவில்லை அவள். துடைப்பத்தைத் தட்டி விட்டு சுவர் பக்கமாகப் பின் பக்கம் செல்கிறாள். சாணம் ஒட்டியிருந்த வாளியைக் கழுவி வைக்கிறாள். கொட்டிலில் ஒரே ஒரு கிடாரிக்கன்று தான் இருக்கிறது. பதத்துக்கு வரவில்லை. இதன் தாய் சென்ற வருசம் கழிச்சல் கண்டு இறந்து போயிற்று. இப்போதெல்லாம் ஊசிக்கரு செலுத்தித் தான் கருவடையச் செய்கிறார்கள். இதன் அம்மா லட்சுமி குருட்டுக் கன்றை ஈன்றது. அது தடுக்கித் தடுக்கி விழும் போது இவள் வயிறு துடிக்கும். தாயிடம் பால் குடிக்கக் கூடவிட வேண்டும். மழை பெய்து, எதிரே, பசுமையாக இருந்தது. பசுவையும் கன்றையும் காலாற மேய விடுவதாக நினைத்து நின்று கொண்டிருந்தாள். அப்போ பார்த்து, மோட்டார் சைகிளில் சிவலிங்கம் குறுக்கே வர, கன்று பயந்து மிரண்டு தடுக்கித்தாவ, அது சக்கரத்தில் அடிபட்டுச் செத்தது.

“அடாடா.. ஸாரி, ஸாரிம்மா…” என்று வண்டியை நிறுத்தி இறங்கினான், சிவலிங்கம்… சிவலிங்கம்தான் இப்போது சென்றவன். சட்டென்று நினைவு வருகிறது. அன்று கன்றை நசுக்கிய போது இப்படித்தான். அவன் கோலத்தைப் பார்த்த போது ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அய்யா படுத்திருந்த நாட்களில், ஒரு வெள்ளிக்கிழமை பஜனையின் போது வந்தமர்ந்தான். அந்த சிவலிங்கம், மாறி மாறித் தோன்றுகிறான்.

“பையன் யாரு? ஏம்ப்பா? எங்க படிக்கிற?”

“இங்கதான் ஸார், நகராட்சி ஸ்கூலில. அப்பா அம்மா யாருமில்ல. பாத்திரக் கடையில வேலைக்குன்னு வந்தேன். அவங்க வீட்டு மாடில தான் கடைப் பையன்களுக்கு சமையல் சாப்பாடெல்லாம். ஊரில நைன்த் படிச்சிட்டிருந்தேன். அப்பதா எங்க பாட்டியும் செத்துப் போச்சி. இங்க வேலைன்னுதான் அழச்சிட்டு வந்தாங்க. ஆனா எனக்குப் படிக்கணும்னு இருக்கு. ஹெல்ப் பண்ணுங்க ஸார்!” என்று அப்படியே காலில் விழுந்து, காலைப் பற்றிக் கொண்டான்.

“டேய், எழுந்திரு. இங்க வீட்ல இருந்திக்க! தாயம்மா. இவ இங்கியே இருக்கட்டும். வீடு எவ்வளவு பெரிசு? உனக்கு இடமிருக்கு நல்லா படி!” என்று தட்டிக் கொடுத்தார். அந்த வருசம் முடிந்து பத்தில் எட்டு முன் அவர் இறந்து போனார்.

அய்யா, அய்யா என்று விழுந்து புரண்டான். “பையன் இங்கேயே இருக்கட்டும் தாயம்மா? உனக்கு ஒரு ஊன்று கோலா இறைவன் அனுப்பி இருக்கிறான். “தம்பி, அப்பா அம்மா இல்லேன்னு நினைக்காதே. நீ நல்லபடியா, புதுப் பயிரா வளரணும். இந்த அரசியல் சேற்றிலும் நல்ல பயிர் வரும் என்று நம்புறேன். உழைச்சுப் பிழைக்கணும்; பொய், சூது எதுவும் ஒட்டக்கூடாது.” என்று அவன் தலையில் கை வைத்து, ஏதோ ஒர் அமைதி வந்தாற் போல் பேசுவார். அவன் வந்த பிறகு அவனே மலசலப் பீங்கான்களைக் கொண்டு கொட்டிக் கழுவுவான். ஒருநாள் பாத்திரக் கடை நாடார் இவரை விசாரிக்க வருவது போல் வந்து, பெருத்த குரலெடுத்துக் கடிந்தார்.

“ஏலே, நீ பாட்டுக்குச் சொல்லாம கொள்ளாம வந்திட்டா என்ன அருத்தம்? கடையில ஆளில்லாம சங்கட்டமா இருக்கு…? ஸார், இவன நாங்க படிக்க வைக்கிறோம்னுதான் சொல்லிக் கூட்டி வந்தோம். இவனுக்குத் துட்டு வேணும். படிப்பு வாணாம், கடையில வேலைக்கிருக்கிறேன்னா. இப்ப. நீங்கல்லாம் என்ன நினப்பீங்க ஸார்?”

“அப்படி ஒண்ணுமில்லிங்க. நீங்க தப்பா நினைக்காதீங்க. வேலை செய்துக்கிட்டுப் படிக்கிறத வாணான்னு சொல்லமாட்டேன். காலம எட்டு மணிக்கு ஸ்கூல் போய் விட்டு, ஒருமணியோடு முடிந்து, பையன்கள் வேலையும் செய்யவேணும்ங்கறது என் கருத்து…” என்றார்.

“எலேய், சாயங்காலம் வூட்டுக்கு வந்திடு. அங்கேயே சாப்பிட்டுட்டு ஸ்கூல் போகலாம்!” என்று சொல்லிவிட்டுப் போனார்.

பையன் அவர் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுதான். “அம்மா, அவங்க வீட்டுக்கு அனுப்பிச்சிடாதீங்க! நான் அத்தினி பேருக்கும் சமையல் செய்து, பாத்திரம் கழுவி வீடு துடைச்சி. ரா படுக்குமுன்ன பன்னண்டாயிடும். காலம நாலுமணிக்கு எழுப்பிடுவாங்க. இவங்க பெரியாத்தா அடிக்கும். அம்மா, நா இங்கியே இருக்கிறன், அனுப்பிடாதீங்க. உங்க மகன் போல நினைச்சிக்குங்க. நான் பெத்த தாயப் பாத்ததில்ல, நீங்க தாயி…” இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தான். அய்யா இறந்த பிறகு, அவனைக் கையோடு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

நாலைந்து வருடங்கள் அவனைப் பார்க்கவில்லை. பிறகு ஒருநாள் தேர்தல் களேவரத்தில், கூட்டம் கூட்டமாக வாக்காளரைச் சந்திக்க வந்த கரை வேட்டிக் கூட்டத்தில் இவன் தென்பட்டான். இவள் மகன் எம்.எல்.ஏ.வாக இருந்த நாட்கள். தடாலென்று இவள் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக வந்து விழுந்தான்.

இவள் துணுக்குற்று நின்றாள். “ஏம்ப்பா? சிவலிங்கமா?” அரசியலுக்கு வந்திட்டியா?… நீ நல்லாப் படிச்சி, உழைச்சி வாழனும்னு அய்யா சொன்னாரே! கடையில வேலை செய்திட்டு. கடேசில அரசியல்…?”

“ஆமாம்மா, அரசியல் நல்லதில்லையா? முழுநேர தொண்டனாயிட்டே-உங்க… மக புரவலர்கட்சிலதாங்க தொண்டனாயிருக்கிற, ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா ?” எனறான்.

அவள் வாயடைத்துப் போனாள்.

பிறகு அவன் கல்யாணம் செய்து கொண்டதாகச் சொல்லி ஒரு பெண்ணை அழைத்து வந்தான். “காலிலவுழுந்து கும்பிடு, சுந்தரி. நம்ம தலைவர் முன்னிலையில்தான் கட்டிக்கிட்டேன்.” என்றான்.

“உங்க ஆசீர்வாதத்துல நல்லா இருக்கிறேன். ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணுறேன்…” என்றான்.

அதற்குப் பிறகு கன்றை நசுக்கிவிட்டு, “ஸாரி” சொல்லும்போது தான் தட்டுப் பட்டிருக்கிறான். சலவை வேட்டி, வெள்ளைச் சட்டையில் இரத்தத் துளிகள் தெளித்த கோலத்துடன் தலைகுனிந்தவாறு, “தெரியாம நடந்திட்டதும்மா.” என்றான். “மன்னிச்சிடுங்க..” என்றவன் ரங்கனைப் பார்த்து, “அண்ணே, பார்க் பக்கம் மண்ணாங்கட்டி அண்ணே இருப்பாரு, அவுரக் கூட்டிட்டு வந்து, இதை அப்புறப்படுத்தி சுத்தம் செய்திடச் சொல்லுங்க. நா அவுசரமாப் போயிட்டு இருக்கிற. இல்லாட்டி…”

அவள் அவன் வேட்டி மடிப்பில் இருந்து அவனிடம் ரூபாய் நோட்டுக் கொடுப்பதைக் கண்டும் காணாதவளாகி, லட்சுமியையும், இந்த முதற்கன்றையும் ஒட்டிக் கொண்டு கொல்லைப்புறம் சென்றாள்.

‘ரியல்எஸ்டேட் பிஸினஸ்’ என்பது, புறம்போக்கு நிலங்களை வளைத்து, ஆட்சியாளரின் பைகளுக்குக் காசு சேர்க்கும் தொழில் என்று சாயபு சொல்வான்.

அவன் பெண்சாதியைத்தான் அன்று சாயபு மரணத்துக்குச் சென்ற அன்று பர்த்தாள். ஆனால் அவன் பின் நகையைப் பறி கொடுத்துப் பிரலாபித்துக் கொண்டு சென்ற பெண், அன்று பார்த்த அவன் மனைவியாகத் தெரியவில்லையே?

ஒன்றும் புரியவில்லை. இதுவும். அரசியல் கட்சித் தலைவரின் ‘அடி’யைப் பின்பற்றும் தொண்டோ? பின்பக்கம்மா பெருத்தாலும் காம்பு பழுத்து வளைந்தும் நெளிந்தும் உதிர்ந்திருக்கின்றன. சருகுகளில் நெருப்பு வைத்துப் புகை காட்டியதாலோ?… பூச்சிக்கு மருந்தடிக்க வேண்டும் என்று ரங்கனிடம்தான் சொல்ல வேண்டும். அவனுக்கு இவள் நடப்பு, போக்கு ஒன்றுமே புரியவில்லை. “இத்தே பெரிய வூட்ட சும்மா போட்டு வச்சிருக்கிறீங்க. மூவாயிரம் போல வாடகை வரும்..” என்று அடிக்கடி சொல்கிறான். அந்த வீட்டில் அவள் இருக்க உரிமை இல்லை என்பதை உணர்த்துவது போல் தோன்றுகிறது. இருக்கட்டும், இவன் யார்? நாளைக்கு இதில் ஒரு ஒட்டல், சாராயக்கடை என்று திறந்து விட்டால்? பெண்களை வைத்துச் சம்பாதிக்க ‘லாட்ஜ்’ கட்டினால்? அவள் அய்யா அம்மாவின் நிழலில் இருந்து, அவர்கள் உப்பை உட்கொண்ட நன்றிக்கு, நீசத்தனமான காரியங்களுக்கு இடம் கொடுக்கலாகாது.

ராதாம்மாவின் பையன் அமெரிக்காவில் இருப்பதாக நிகொலஸ் பையன் ஜார்ஜ் சொன்னதாக சாயபுவே சொல்லி இருக்கிறார். மருமகனும் வேலையில் இருந்து ஒய்வு பெற்று, எங்கோ இமாலயத்தில் இருப்பதாகச் சொன்னார். அவர்களில் யாரேனும் இந்த வீட்டுப் பக்கம் நிச்சயமாக வருவார்கள் என்று நம்புகிறாள். குருகுல வித்யாலயம் தொடங்கி ஐம்பது வருசம் கொண்டாடினார்கள். பெரிய விழா நடந்தது. அதற்கு ராஷ்டிரபதி வந்தார், அவர் வந்தார், இவர் வந்தாரென்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் இந்தப் பராங்குசம் அவளுக்கு ஒர் அழைப்பிதழ்கூட வைக்கவில்லை. அவளும் அப்போது சோகமாக இருந்தாள். பக்கத்தில், அந்த மிலிடரிக்காரத் தம்பி காம்பு ஒடிந்து சாய்ந்தாற்போல் திடுமென்று போய்விட்ட புதிசு. அவளால் ஏற்றுக் கொள்ளவே முடிந்திருக்கவில்லை… எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். இந்தத் தோட்டத்தை எவ்வளவு அழகாக வைத்திருந்தாள்! சனி ஞாயிறு நாட்களில் அந்தப் பஞ்சாபி சிநேகிதர் சம்சாரமும், இரண்டு குழந்தைகளும் வருவார்கள். வரிசையாகப் பல நிறங்களில் பூத்திருந்த அடுக்குக்காசித்தும்பைப்பூவை அழகாக வாழை நாரில் தொடுத்து, பெண் குழந்தைக்குக் கொடுப்பார். இவள் இந்தப் பக்கத்தில் நின்று அதை அவர் தொடுக்கும் அதிசயத்தைப் பார்ப்பாள். ஒருநாள் காசித்தும்பை மலர்களை இந்த வீட்டில் படத்தின்முன் அழகாக ஒரு கிண்ணத்தில் நிரூற்றி அதில் பரப்பிக் கொண்டிருக்கையில், “ஏன் தம்பி? இந்தப் பூக்களை எப்படி நீங்க இவ்வளவு அழகாகத் தொடுக்கிறீங்க? ஜாதிமல்லி, முல்லை, அரளி எல்லாம் தொடுக்கலாம். அதுகூட முல்லையும் மல்லியும் காம்பு நீளமில்ல. இதில காம்பே தெரியாது தொடறப்பவே உதிந்து போயிடுது. அந்தப்புள்ளங்க ரெண்டு சடையிலும் வச்சிட்டிருந்தாங்க. நானே கண்ணு போடக் கூடாது. நீங்க நல்லாயிருக்கணும் தம்பி.” என்றாள் மனம் துளும்ப.

மீசையைக் கடித்துக் கொண்டு ஒரு சிரிப்பைச் சிந்தியது இப்போது போல் இருக்கிறது.

ரங்கனுக்கு அவர் ஒரு முள் போல இருந்தார்.

“அந்த ஆள் மிலிடரி இல்ல, குடிக்கிறாரு! ராத்திரி வாசப்புறம் ஈசிசேரில சாஞ்சிட்டு அவரு குடிச்சத நான் பார்த்தேன்.” என்றான் ஒருநாள். “சும்மா பழி சொல்லாத, யார் மேல வாணாலும் எதுவும் சொல்லுறதா?” என்று அவள் கடிந்தாள்.

இரவில் நட்சத்திரங்களைப் பார்த்த வண்ணம் அவர் அப்படி உட்கார்ந்திருந்த நாட்கள் உண்டு. வேலியில் மயில் மாணிக்கக் கொடி தாறுமாறாகப் படர்ந்திருந்ததை ஒருநாள் இரவு ஒழுங்கு செய்து காண்டிருந்தார். குடிசைக்கு வெளியே ஒரு மின்விளக்கு உண்டு. இவரை நாம் எதற்காகக் கண் காணிக்கிறோம் என்று தெரியாமலே அவள் பார்த்தாள். ஒருநாள் இரவு ரங்கன் கூறியதுபோல் அவர் பட்டையான சிறு பாட்டிலில் இருந்து குடிப்பதைக் கவனித்தாள். என்றாலும் அவளுள் அவர் மீது இருந்த மரியாதை போகவில்லை.

ஒரு வருசமோ என்னமோ அவர் இருந்த காலத்தில், முன்னும் பின்னும் இருந்திராதபடி, பஜனை நிகழ்ந்தது. முடிவில் அவர் தாம் ஓம்… சாந்தி… சாந்தி… என்று பாடுவார். அனைவரும் கண்களை மூடி இலயித்திருப்பார்கள். அதில் சில வார்த்தைகள் இன்னும் அவள் நினைவில் மின்னுகின்றன. பிருதிவி சாந்தி… ஆப… சாந்தி… அந்தரிகூடிம் சாந்தி… இந்தப் பாட்டைச் சொல்லுமுன் இதன் பொருளை அவர் எடுத்துச் சொன்னார். “எல்லாம் உலகத்தில் சாந்தியடையணும். நீர் நிலைகள், கடல், மரங்கள், வளங்கள், மூலிகைகள், ஆகாசம், எல்லாமே அமைதியாக இருக்க வேணும். பசு, பட்சி மட்டுமில்லாமல். இதற்கெல்லாமும் உயிர், துடிப்பு, உணர்வு எல்லாம் இருக்கு. மனிதனுக்கு ஆண்டவன் பகுத்தறிவு கொடுத்திருக்கிறான். நாம் இணக்கமாக வாழ்ந்து, அமைதியாக, யாருக்கும் தீமை கொடுக்காமல் இயற்கையை நேசிக்க வேணும். ஒரு போர் ஏன் வருகிறது?… மனிதன் இந்த விதியை பகுத்தறிவினால் மீறி, இம்சை செய்கிறான்…”

அவர் சொற்கள் இனிய நாதம் போல் விழுகின்றன.

‘தம்பி? உன்னை ஏன் அந்த ஆண்டவன் இப்படி எடுத்துக் கொண்டான்? ‘நிர்வாண தேசத்தில் ஒரு கையகலத் துணி கொண்டு மானம் மறைத்தவன் பைத்தியக்காரனா? நீ அப்படித்தான் யமனுக்குப் பிடித்தவனானாயா? அவளாகக் காலையில் அவர் எழுந்திருப்பதற்கு முன் அந்த முன் வாயிலில் சாண நீர் தெளித்துப் பெருக்க முனைந்த போது அவர் வெளியே வந்து “அம்மா, இருங்க; நீங்க என்ன இதெல்லாம் செய்ய?..” என்று துடைப்பத்தைப் பிடுங்கினார்.

“விடுங்கையா, அந்த முன் வாசல் தெளிச்சுப் பெருக்குறேன், அதோடு இதையும்…”

“வாணாம், விடுங்க. நீங்க தாய். நான் இங்க வெட்டியா இருக்கிறேன்.” அன்று அது போராட்டமாக இருந்தது. அவள் வென்றாள் என்றாலும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.

“அம்மா, நீங்க முன் வாசல்ல அழகாகக் கோலம் போடுறீங்க. எனக்கு அந்த மாதிரி இழை, சன்ன இரட்டை இழை வர்றதில்ல… இங்க கோலம் போடுங்க…” என்று ஒத்துக் கொண்டார். அவளுக்குப் புள்ளி சுற்றும் சுழிக்கோலங்கள் நிறையத் தெரியும். ராதாம்மா முதலில் இவளிடம் கற்றுக் கொண்டு, அவளுடைய கல்வியறிவு கொண்டு அந்தக் கோலங்களில் பல்வேறு வடிவங்களும் மாதிரிகளும், புள்ளிகளின் எண்ணிக்கைகளைக் கோர்த்தும் பிரித்தும் போடுவதற்கான நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தாள். குருகுலத்துப் பிரார்த்தனை மண்டபத்தில், அவை அழகுற வடிவம் பெறும். மார்கழி மாதம் வந்தால், புதிய புதிய கோலங்கள் வகுப்பறை முற்றங்களிலேயே விரியும். பஞ்சமிக்குக் கொஞ்சம் ஆர்வம் உண்டு. அடுத்தவளுக்குச் சுத்தமாக இதில் ஈடுபாடு இல்லை.

ஒருநாள் பஞ்சாபி நண்பர்கள் கோலத்தைப் பார்த்துவிட்டு, அவளிடம் வந்தார்கள். “மாதாஜி, அந்தக் கோலம் போடக் கத்துக் குடுங்க?” என்றாள். “அட என்னம்மா? அந்தத் தம்பி சொன்னாரா?…”

அவள் கணவன் உடனே கொச்சைத் தமிழில் “தேவாவுக்கு ஆகாசத்தில் தான் கோலம் போடத் தெரியும், இங்க தெரியாது, பூமிலன்னேன். இவ நம்பல. பிறகுதான் கேட்டோம், நீங்க ரொம்ப நல்லா வரஞ்சிருக்கிறீங்க..” என்றான். அந்தத் தம்பி வழக்கம்போல் மீசையைக் கடித்துக் கொண்டு சிரித்தார்.

“ஆகாசத்துக் கோலம், அழிவு. நாசம். இது அழகு. சுபம் அமைதி. அதை இவங்க செய்யிறாங்க!” அது என்ன பேச்சுத் திறமை ?

அதனால் குடிக்கிறாரோ என்ற குறுகுறுக்கும் உறுத்தல், நெஞ்சில் தோன்றியிருந்தது. ஒருநாள் கிணற்றடியில் ஒரு நாய்க்குட்டி வந்திருந்தது. ஒரு மாசமான தெருநாய்க்குட்டி. அதன் கழுத்திலே காயம் இருந்தது.

“அடாடா!…” என்று அதைத் துரக்கிக் கொண்டு போய் மருந்து போட்டு, வைத்தியம் செய்தார். அதற்கு நாள் தோறும் பால் ஊற்றுவார்; ரொட்டி, பிஸ்கோத்து என்று கொடுத்தார். பஞ்சாபி சிநேகிதர் குழந்தைகள் வந்து விளையாடும். பந்து போட்டால் கவ்வி வரும். அதற்கு ‘சக்தி’ என்று யெர். “சக்திமான் ! டேய் சக்தி பேப்பர்காரன் வரான், வாங்கிட்டுவா. கோலத்தை அழிக்கக்கூடாது!” என்றெல்லாம் பேசுவது காதில் விழும். பஜனையின் போது உள்ளே வந்து ஒரமாக இருக்கும். ஓம் சக்தி, சாந்தி சொல்லும் போது எழுந்து அசையாமல் நிற்கும். அதை அழைத்துக் கொண்டு காலையிலும் மாலையிலும், நடக்கப் போவார். பகலுணவுக்குச் செல்லும் போதும் செல்லும்.

ஒருநாள் அதிகாலையில் எப்போதும் போல் அவர் நடக்கச் சென்றிருக்கிறார். நாயும் கூடச் சென்றிருக்கிறது. அப்போதெல்லாம் கிழக்குப் பக்கம் வீடுகள் எழும்பி இருக்கவில்லை. ஏரிக்கரை வரையிலும் செல்வார் என்று நினைப்பாள். அவர் ஓடி வரும் போது அதுவும் தாவித்தாவி ஓடி வரும். இவளுக்கு இதெல்லாம் ரசிக்கும்படி இருக்கும். இவர்கள் முன்பாக சாணமிட்டுப் பெருக்கிக் கொண்டி ருப்பாள். இப்போதெல்லாம் அவர் குடிசை வாசலுக்கும் அவளே நீர் தெளித்துப் பெருக்கிவிடுகிறாள்.

வீடு திரும்பும் போது கிழக்கில் ஒளி உதயமாயிருக்கும். சிறிது நேரம் இளைப்பாறுவார். நாய்க்குப் பாலும் ரொட்டியும் கொடுப்பார். அவரும் கிணற்றடியில் நீராடித் துணி தோய்த்து உலர்த்திவிட்டு, வெளியேறி கிளம்புவார். நாலைந்து மாதங்களில் நாய் நன்றாக வளர்ந்து, குரல் அச்சுறுத்துமளவுக்குக் குலைக்கத் தொடங்கிவிட்டது.

தெருமுனையில் யாரேனும் பழக்க மில்லாதவர் தென்பட்டாலே அதன் குரல் வித்தியாசமாகக் கேட்கும். “ம்… சக்தி…உறுமாதே!… யார் அங்கே?” என்று அவருடைய குரலும் தொடரும். அவளும் வெளியே வந்து பார்ப்பாள். அன்று அவர் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்தார்.

கடைப்பையனாக இருந்து, படிக்க வேண்டும் என்று ஒதுங்கிய பின் மீண்டும் கடைக்குச் சென்ற சிவலிங்கம் அந்த வளைவில் வந்திருந்தான். அவனுடைய உடல் வளர்த்தி, அவனை அடையாளம் தெரிந்து கொள்ள முடியாமல் மாற்றியிருந்தது.

“சிவலிங்கமாப்பா? அடையாளமே தெரியல? எங்கே இந்தப் பக்கம்?”

“எங்க முதலாளி இவங்களப்பாக்க அனுப்பிச்சாங்க…”

நாய்விடாமல் குலைத்தது. “குலைக்காதே சக்தி. நம்ம பைய தெரிஞ்சவதா” என்று சொல்லிவிட்டு, “இன்னும் அதே கடையில் தானிருக்கிறியா?” என்றாள்.

“இல்லீங்க. இது வேற கடையிங்க..” என்றான். அதற்குள் அவர் வந்துவிட்டார். அங்கு நின்று கேட்பது நாகரிகம் இல்லை என்றுணர்ந்தவளாக வீட்டுப் பக்கம் வந்து விட்டாள்.

அன்று அவள் ஒயர்பை போட, அளவெடுத்துக் கத்திரிக்கும் போது ரங்கன் வந்தான். “புரிஞ்சிட்டிங்கல்ல? அந்தப் பயல், ஒயின் ஷாப்லதான் வேலை செய்யிறான். இவுரு மிலிட்டரி கான்டீன்லேந்து வாங்கித் தாராரு, சல்லிசு வெலக்கி…”

உண்மையில் அவளுக்குக் குத்துப்பட்ட வேதனை உண்டாயிற்று. அப்படியும் இருக்குமோ? இந்த வேதனை, அவருடைய நடத்தையில் ஒரு குத்து உறுதியானதால் ஏற்பட்டதா? அல்லது, கவடறியாத பிள்ளை, படித்து ஒழுக்கப் பாதையில் முன்னேற முடியாதபடி ‘ஒயின்’ கடைக்கு வந்து, கள்ள வாணிபம் பழகுவதால் ஏற்பட்டதா என்று வரையறுக்க முடியவில்லை. அவர் வழக்கம் போல் பஜனைக்கு வந்தார்; எல்லோரும் வந்தார்கள்; பாடினார்கள்; பழகினார்கள். ஆனாலும் கருநீலம் படிந்தாற்போல்தான் இருந்தது.

இதனால் அவள் வாசல் தெளித்துக் கோலம் போட்டு விட்ட பிறகு அதிகமாக அந்தப் பக்கம் கவனிப்பதில் ஆர்வமும் சந்தோசமும் கொள்ளவில்லை. எப்போதேனும் தட்டுப் பட்டால், உதிர்க்கும் இரண்டொரு செற்களைத் தவிரப் பேசுவதில்லை.

வைகாசிக்கடைசியில், கோடையின் வறட்சி புழுக்கமாக இரவுகளில் தூக்கம் பிடிக்காமல் வதைத்த ஒரு நாளில், விடியற்காலையில் அவள் அயர்ந்து வெளித்திண்ணையில் உறங்கியிருந்தாள். ‘ஊ’ என்று நாயின் அழுகை அவள் புலன்களை உசுப்பி எழுப்பியது. கண்களைத் திறந்து பார்க்கையில் காலை புலர்ந்தது தெரிந்தது. அவசரமாகச் சாவி எடுத்து, வாயில் கம்பிக் கதவைப் பூட்டைத் திறந்து கொண்டு போனால், நாய்தான் அழுகிறது என்று புரிந்தது.

“டேய், சக்தி ஏண்டா? ஏனழுற?.” மூங்கில் பிளாச்சுக் கதவைக் கொக்கியை அகற்றித் திறந்து கொண்டு அவள் சென்றபோது, அது அவளுக்கு முன் சென்று வீட்டுக்குள் நுழைந்தது. உயரக்கதவுதான் என்றாலும், திறந்தே இருந்தது; சாய்வு நாற்காலியில் அவர் படுத்திருந்தார். விளக்கு, மேசை விளக்கு எரிந்தது. அதுவரையிலும் அவள் உள்ளே சென்று பார்த்ததில்லை. வெள்ளையடித்த சுவரில் ஒரு மாசுமருவில்லை. மடக்கக்கூடிய கட்டிலில், படுக்கைவிரிப்பு, தலையணை கசங்கவில்லை. மடக்கு மேசையில், புத்தகங்கள் நலைந்து ஒழுங்காக மடக்குப்பலகையில் வைக்கப்பட்டிருந்தன. துணி வைத்துக் கொள்ளும் அலமாரியும் மூடியில்லாததுதான். அதன்மேல் சிறு கைப் பெட்டி அவர் குடை அவர் தாளம் வாசிக்கும் பானை கவிழ்த்தியிருக்கிறது. பழைய பேப்பர் அடுக்கு… ரேடியோ…

“ஐயா. ஐயா?…”

அவள் குரலில் அழுகை தழுதழுத்தது. நாய் சுற்றிச் சுற்றி வந்து குலைத்தது. அவள் சேலையைப் பற்றி இழுத்தது. “ஐயா, தம்பி.?”

தோளைப்பற்றி உலுக்கினாள். எப்போதும் போன்ற ஓர் அரைக்கை பனியன்; வேட்டி தூங்குவதுபோல் இருந்தார்.

அவள் அலறிக் கொண்டே வந்தாள். அப்போதுதான் ரங்கன் வந்து கொண்டிருந்தான்.

“ரங்கா, ரங்கா… என்ன ஆச்சுன்னு தெரிலயப்பா, அவுரு அந்தத் தம்பி.”

அவன் சலனமில்லாமல் உள்ளே வந்து பார்த்து விட்டுப் போனான். இடி இறங்கின மாதிரி இருந்தது.

பத்து மணிக்குள் எல்லோரும் கூடிவிட்டார்கள். பராங்குசம் காரைப் போட்டுக் கொண்டு வந்தான். நிக்கொலசு, சாயபு, ஜானகியம்மா, கடைக்கார நாடார், இன்னும் யார் யாரோ, பெருங்கூட்டம் கூடிவிட்டது. யார்யாரோ ராணுவத்தினர் கூட வந்திருந்தனர்.

துரும்பாக அவள் அலைபாய்ந்தாள்.

மாலைக்குள் எல்லாம் அடங்கிப் போயிற்று. பஞ்சாபி நண்பர்கள், நாயை அழைத்துச் சென்றனர். அவருடைய கட்டில், அலமாரி, புத்தகங்கள் எல்லாமே கொண்டு போனார்கள். சடங்கு என்று புரோகிதர் யாருமே வரவில்லை. வண்டி வந்து உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்றது. நிக்கொலசுதான் கொள்ளி வைத்தாகச் சொன்னார். அடுத்த நாள் பெரிய பிரார்த்தனை கூட்டம் எப்போதும் போல் அவர்கள் வீட்டுக் கூடத்தில் நடந்தது. அப்போது, அவருக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த அலமேலும்மா வந்து கதறி அழுதாள். ஒரு வண்டியில், பொங்கல், வடை, சுண்டல் எல்லாம் வந்து இறங்கியது. வீடு காலிபண்ணுமுன், ஒரு பக்கம் பழைய பேப்பர் கட்டுடன், இரண்டு சிறிய பிராந்தி பாட்டில்களோ எதுவோ இருந்ததாம். ரங்கன் வெந்த புண்ணில் வேல் செருகும் நியாயத்தைச் சொன்னான்.

“என்னமோ, இல்ல இல்லன்னிங்களே? குடி… அதான் மாரடச்சி உசிர் போயிடிச்சி, மக்க மனிசங்க யாரும் வரவில்ல…”

அவனை எரித்து விடுபவள் போல் பார்த்தாள். “இப்ப என்னத்துக்கு இந்த நியாயம்? அவுரு எப்படிப் போனா என்ன? போயிட்டாரு…” என்றாள்.

அன்றைய பஜனையில், அவரைப் பற்றி பஞ்சாபிக்காரர், நிக்கொலசு, சாயபு எல்லோருமே பேசினார்கள்.

“சுதந்தர நாட்டின் உண்மையான தேசியவாதி. பல வகையான ஆற்றல், திறமை, வீரம், துணிவு எல்லாம் கூடிய அற்புத மனிதர். உயிர்களைக் கொல்லும் ஒரு சேவையில் தாய்நாட்டுக்குச் சேவையில் இருந்து, வீரம் காட்டி வென்றும் பணியைத் தொடராமல், அஹிம்சை வழி வந்தவர். உலகம் முழுவதும், போர்ப்படைகள் இல்லாமல் ஒருவருக்கொருவர் என்று வாழனும்னு சொல்வார்’ ….. என்றெல்லாம் நிக்கொலஸ் பேசினார். அவரும் இராணுவத்தில் இருந்தவர். அவர் பையன் டாக்டராகத் தொழில் செய்பவன். அவன் கூடப் பேசினான். “அங்கிள், நீங்கள் அதிகமாக ஃபிஸிகல் ஸ்ட்ரெயின் பண்ணிக்கக் கூடாதுன்னு சொன்னேன். அவர் எதையும் பொருட்படுத்தியதில்லை. “இதபாரு ஜார்ஜ், நான் நினைக்காமலே எனக்கு மரணம் ஒரு இனிமையான முடிவாக இருக்கணும், கர்நாடக சங்கீதத்தில் – மும்மணிகள்னு சொல்லுவாங்க. அதில் ஒருத்தர் முத்துசுவாமி தீட்சிதர். அவர் எட்டையபுரத்தில்தான் அமரரானதாகச் சொல்றாங்க. பாரதியின் ஜன்ம பூமி. அவர், தமக்கு முடிவு வரும்னு முன்னமேயே அறிந்திருந்தார்னு சொல்றாங்க. சீடர்களெல்லாம் இருக்க, பாடிட்டே இருந்தாராம். “மீனாட்சி மேமுதம்னு, பாட்டு, “மீனலோசனி, பாசமோசனி.”ன்னு குரலெழுப்பிப் பாடறப்ப, சமாதியாயிட்டாராம். ‘பாசம்’ விடுபட்டு, அம்பிகையின் மடிக்குப் போயிட்டார்னு சொன்னாரு ஒருநாள். அவர் கண்களில் அப்படியே தண்ணி வழிஞ்சிச்சி..” என்று கூறும்போதே கண்ணிர் தழுதழுக்க நின்றான்.

“அங்கிள் வந்தா, அவர் பேசறதக் கேட்டுக்கிட்டே இருக் கணும்னு தோணும். “டெய்ஸி, இப்ப ஒரு ஆர்க்கெஸ்ட் ரான்னா எத்தினி வாத்தியம் இருக்கு: காத்து வாத்தியம், தோல்வாத்தியம் கம்பி வாத்தியம்னு எத்தினி இருக்கு. அதெல்லாமும் சேர்ந்துதானே ‘ஹார்மனி’ உண்டாகுது? அதுபோல உலகத்து மனிசங்களெல்லாம் ஒண்ணா, குத்து வெட்டு, பகை இல்லாம, ‘ஹார்மனி’ங்கறது வராதா என்ன? இப்ப மேல் நாட்டு சங்கீதம், இந்துஸ்தானி, கர்நாடகம்னு எல்லாத்தையும் சேத்து… ஒரு தனி இசை வரல?”ம்பாரு. அத்தை எதானும் பேசி, நான் வாட்டமா இருந்தா உடனே கண்டு பிடிச்சிடுவாரு ரெண்டு பேரையும் சேத்துவச்சி. ‘ஹார்மணிம்பாரு..” என்று நிக்கொலசின் மருமகள் அழுதாள்.

‘ஹார்மனி என்றால் என்னவென்று பொருள் தெரியவில்லை அவளுக்கு. ஆனால் மனசுக்குப் புரிந்தது.

பின்னால் வாழைகள் செழித்திருந்தன. இலை அறுத்துக் கொண்டு அலமேலு செல்கையில், இவளுக்கு அந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளக் குடைந்தது. அவளே புரிந்து கொண்டாற்போல், “சாயபு சாரும், சந்தானம் சாரும் வந்து, இந்த ஏற்பாட்டைச் செய்யச் சொன்னாங்க பணம் குடுத்தாங்க. எனக்குக் கூடப் பிறந்து, ஒட்டுறவெல்லாம் முள்ளுகதா. ஆனா… இப்படி ஒரு மனுசர் ஞானி. அதிர்ந்து பேசாமல் ஒரு சிரிப்பு. மீசை வச்சிண்ட மிலிடரிக்காரன், குடிப்பனோ என்னமோன்னு, ரொம்ப பயப்பட்டேன். உருத்திராட்சம் சந்தனக்கீத்தெல்லாம் போட்டுண்டு, ஒரு கடன் வரும். மருந்துக் கடைக்காரன். பார்வையே நன்னாருக்காது. கிட்டப் போனாலே அந்த வாடை வரும். அவனை வராதேன்னு சொல்ல முடியாது. ஏன்னா, அந்தக் கட்டிடத்துச் சொந்தக் காரன். குடும்பம் செங்கல்பட்டாம். ஞாயித்துக்கிழமை கடைய மூடிட்டுப் போவான். “ஏமாமி, சாம்பாரா இது? பாலாத்துத் தண்ணின்னாலும் தாகம் அடங்கும்… கத்திரிக்காப் பொறியல் கசக்குது… நீ எப்ப ருசியா எல்லாம் போடப்போற?”ம்பான், கடங்காரன்.

“அப்ப இவர்தான் ஒரு சிரிப்புச் சிரிச்சிட்டே, ‘சுவாமி, நீங்க சாப்பாடு நல்லாயில்லன்னா, இங்கேயே ஏன் வரீங்க? பேசாம, அட்சயா ஒட்டல்ல சாப்பாட்ட வச்சிக்கிறது?.’ ம்பாரு. அந்தாள் சிரிச்சிட்டே இல்லே… என்னன்னாலும் ஐயர் மாமி சமையல் பண்ணிப்போடுதுன்னா… அது ஒரு… இது தானே?”ன்னாரு.

“அதென்ன சுவாமி, இது?…”ன்னு எந்திரிச்சி அவன் உருத்திராட்சத்தைப் புடிச்சி இழுத்தாரு வெலவெலத்துப் போயிட்டான். அவர் வந்து சாப்பிட உக்காந்தார்னா ஒரு பய பேசமாட்டான்…

“ராத்திரில சாப்பாட்டுக்கு உக்காரமாட்டார். வந்து ரண்டு இட்டிலியோ, ஒரு சப்பாத்தியோ வாங்கிட்டுப் போவார். அங்கே எதிரே படுபாவிங்க ஒயின் கடையத் திறந்து வச்சிருப்பாங்க. கூட்டமா இருக்கும். ராத்திரி சாப்பாடுன்னு வர பாவி ஒருத்தன் பாட்டிலெடுத்திட்டே வந்தான். அந்தக் கடைய அங்கேந்து எடுக்கணும்னு முனிசி பாலிட்டிக்குப் போயி எழுதிக்குடுத்தாரு.. அவருக்கு மிளகு சீரகம் பூண்டு தட்டிப் போட்டு ரசம்னா புடிக்கும். டிஃப்னோடு ரசமும் பாட்டில்ல ஊத்திக்குடுப்பேன். பிளாஸ் டிக் பை புடிக்காது. சின்ன சம்புடம் – அதை ஒரு துணிப்பையில் போட்டுட்டு போவார். நாய்க்கும் ரெண்டு இட்டிலி இருக்கும்.”

“அப்ப… பாட்டில்ல ரசம்தா குடுப்பீங்களாம்மா ?”

“ஆமாம்.?. அவர் வரதுக்கு மின்ன சில தடியங்க பாட்டிலப் பதுக்கிட்டே வருவாங்க – ஒண்ணுக்கும் விளங்காத புருசனையும், ஸ்கூலில் படிக்கும் குழந்தைகளையும் காப்பாத்த நான் பிழைக்கனுமேம்மா? பாட்டில் கடக்கும் மூலையில். அப்படி ஒண்ணைக் கழுவி, சின்னதா பட்டையா இருக்குன்னு ரசம் ஊத்திக் குடுத்தப்ப, சிரிச்சாரு, பிறகு போயிட்டாரு. ராத்திரி நான் சூடா டிபன் போடும் வரை இருப்பார். எவனாலும் குடிச்சிட்டு வரான்னு தெரிஞ்சா சட்டையப் புடிச்சி இழுத்துத் தள்ளிடுவார். எனக்கு அது பெரிய பலமா இருந்தது. இப்படிப் போயிட்டாரே!…”

அந்த சந்தேகக் கரும்புள்ளிகளை அவளுடைய ஒவ்வொரு சொல்லும் அறைந்து கலைத்தன.

அத்தியாயம்-7

அவர் போனபின் அந்தக் குடிலும், தோட்டமும் பராமரிப்பார் இல்லாமல் பாழாயின. கரையான் புற்றும் காடாய் மண்டிய செடிகளுமாக ஆயின. சில நாட்களில் அவள், அதெல்லம் சுத்தம் செய்து அவர் நினைவாக விளக்கேற்றி வைக்கலாம் என்று நினைப்பாள். வெள்ளிக்கிழமை காந்திபஜனை அவருக்குப் பின் களை கட்டவேயில்லை. பிறகு ஒருநாள் பராங்குசமே வந்தான். அவன் வந்தால் பேச்சு ரங்கனுடன்தான். அவளை முறைத்துப் பார்த்துவிட்டு மாடிக்குப் போவான். “தாயி!” என்று அதட்டலாகக் கூப்பிடுவான். ‘தாயம்மா’ கூடக் கிடையாது. “மாடிப்படியெல்லாம் சுத்தமாப் பெருக்கித் துடைக்கிறதில்ல?… வா, மாடியெல்லாம் பெருக்கித் துடை” என்பான். அவள் தெய்வமாகக் கருதிய அந்த ஆண்டைகூட அவளை அப்படி ஏவியதில்லை. அவள் முத்துதிர்க்காமல், அல்மாரி, புத்தகங்கள், பத்திரிகைக்கட்டுகள் புகைப்படங்கள் எல்லாம் வைத்திருந்த அடுக்குத் தட்டுகள், எல்லாவற்றையும் தட்டிப் பெருக்குவாள். இரண்டு மணி நேரமேனும் ஆகும். அதுவரையிலும் அவன் அலமாரியைத் திறந்து காகிதங்கள், ஃபைல்கள் என்று பார்ப்பான். அவளுக்கு, ஏதோ ஓர் அரிய புதையலை அவன் களவாடிச் செல்வது போல் தோன்றும்.

அந்தத் தடவை அவனை வெகுநாட்களுக்குப் பிறகு பார்த்ததால் போலும், ஆள் மாறி இருந்தான். மினுமினுவென்று சதைபிடிக்க, வெள்ளையும் கருப்புமாகத் தாடியும், தங்க பிரேம் கண்ணாடியுமாகக் காட்சி அளித்தான். முடி மட்டும் கரேலென்று பிடரியில் தொங்கியது. ஒரு பழுப்பு நிற கதர் ஜிப்பா போட்டிருந்தான். அதன்மேல் ஒரு உருத்திராட்ச மாலை தெரிந்தது. ஆட்களைக் கூட்டி வந்து பக்கத்துக்குடில், தோட்டமெல்லாம் சுத்தம் செய்யப் பணித்தான். தலை மறையச் சற்றுச்சுவர் எழும்பியது. உள்ளே ஒரு கொட்டகை போட்டார்கள். பெரிய சாலையில், ‘ஹார்ட்வேர்’ கடை வைத்திருந்தவர்களுக்கு அது கிடங்கறையாக இருந்தது. ஏதோ தகராறு வந்து, அதுவும் காலியாகிவிட்டது. வெளிப் பூட்டுத் துருப்பிடித்து, கதவும் துருப்பிடிக்க, கொடிகளும் புல்புதர்களும் மண்ட, சுவரேறிக் குதித்து சீட்டாடுபவர்களுக்கும், குடிப்பவர்களுக்கும், தப்புக்காரியங்கள் செய்பவர்களுக்கும் இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வீட்டு எல்லையில் இருக்கும் மாமரம், அந்த உறவை விடவில்லை. கிளைகளைச் சுவருக்கு மேல் பரப்பி, உரிமை கெண்டாடுகிறது. ரங்கன் மரத்தின் மேலேறி, அந்தப் பக்கம் இறங்குகிறான்.

“நாரத்தைமரம் ஒண்ணு பெரி…சா வளந்து காச்சுத் தொங்குது?” என்று பறித்து வருகிறான். அந்தப் பக்கம் ஓர் ஏணியே சாத்தி இருக்கிறான். இவளுக்கு எந்த உரிமையும் இல்லை. ரங்கனை அவள் எதுவுமே கேட்பதில்லை. அவன் எஜமான நிலையில் இருந்து அவளை அதிகாரம் செய்வதில்லை. ஆனால், அந்த வீட்டில் அவள் வாழ்கிறாள். ஒயர்பை பின்னுகிறாள். அவளுக்கென்று ஒரு தொகை வங்கியில் அய்யா கட்டியிருக்கிறார். அதன் வட்டி மாசத்தில் ஆயிரம் ரூபாய் போல் வரும். அவள் தனக்கென்று எந்தச் செலவும் செய்ய வேண்டி இருக்கவில்லை. மெயின் ரோடில் நெருக்கடியான சந்தைப் பகுதியில் மாடியில் வங்கி இருக்கிறது. முன்பு அவளுக்குப் பரிசயமாக இருந்த ஆட்கள் யாருமே இப்போது இல்லை. மாசம் பிறந்தால் பணம் செலவுக்கு எடுத்துக் கொண்டு, கேழ்வரகு, அரிசி, பருப்பு, காய் என்று வாங்கி வந்து விடுகிறாள். அய்யா, அம்மா எல்லோரும் இருந்த காலத்தில், கிணற்றில் இருந்து நீர் இறைக்கும் பம்புசெட் – குழாய் எல்லாம் இருந்தன. மாடியில் உள்ள குளியலறைக்கும் நீர் போகும். முதன் முதலாக இந்த வீட்டில்தான் அந்தக் காலத்திலேயே பின்புறம் ‘செப்டிக் டாங்க்’ கட்டி, இது போன்ற கழிவறை கட்டினார்கள். அவளுக்குத் தெரிந்து சுமார், பத்து வருசங்கள் போல் அந்த மலக்குழி நிரம்பியதாகத் தெரியவில்லை. அதுவும் வீட்டை விட்டு அப்பால் பின் பக்கம் கொட்டில் தாண்டி, இருந்தது. அதிலிருந்து நீர் வெளியேறும் குழாயும், அது மண்ணுக்கடியில் வடியும் புதை குழியும் அமைத்திருந்தார்கள்.

ராதாம்மா இறந்து போவதற்கு முன், வீட்டில் வந்து தங்கியிருந்த கோவாலு, “தாயம்மா, செப்டிக்டாங்க் நிரம்பி மேலே ஈரம் வருது எப்ப எடுத்தாங்க?” என்று கேட்டான். அவன் மதுரை காந்தி கிராமத்தில் இருந்து வந்திருந்தான்.

“எனக்குத் தெரியலியேய்யா? அப்பிடிக்கூட ஆகுமா?”

“ஆமா, இங்கே ஏது பாதாள சாக்கடை ? அது பட்டணத்துலதானிருக்கு…”

அவளும் பார்த்தாள். கோவாலு மண்ணைத் தள்ளி, சிமிட்டிப் பலகை மூடலைக் கண்டு பிடித்தான். நிரம்பித் துளும்பி அழுக்குக் கசிந்தது…

“அய்யே! இது ரொம்ப மோசமில்ல? அன்னன்னைக்கு எடுத்திட்டுப் போறது கொடுமையின்னா, அத்தவிட இது பெரிய கொடுமையா இருக்குமே? இந்தக் குழிய, பத்துவருசக் கசடுகளை எப்படி எடுப்பாங்க?…”

அவள் கேட்கவில்லை. தோட்டம் துரவு என்று போவார்கள். மலம் அள்ளும் கொடுமையே, டவுன் நாகரிக வசதிகளை அநுபவிப்பவர் பெருகிய பிறகுதான் வந்திருக்கிறது. கோவாலுவே, அப்போதைய பஞ்சாயத்தில் சொல்லி, சாக்கடைக் கழிவு நீர் வண்டியும் ஆட்களுமாகக் கொண்டு வந்தான். இரண்டு ஆட்களும் நன்றாகக் குடித்துவிட்டு வந்திருந்தார்கள். ஒரு அரை டின் கிரஸினை அந்தக் குழியில் ஊற்றிக் கலக்கி, கம்பி வேலிக்கப்பால் வண்டியை நிறுத்தி ஒருவன் வாளிவாளியாக எடுத்துக் கொடுக்க, மற்றவன் வண்டியிலுள்ள பீப்பாயில் ஊற்றினான்.

“தாயம்மா, கதவசாத்திக்குங்க, நீங்க வராதீங்க?” என்று கோவாலு கத்தினாலும் அவளால் உள்ளே இருக்க முடிய வில்லை. அப்போதெல்லாம் இந்தப் பக்கம் பொட்டலாக இருந்ததால் எங்கோ பள்ளத்தில் வண்டி வண்டியாகக் கொட்டிவிட்டு வந்தார்கள். சாயுங்காலம் ஐந்து மணியுடன் துப்புரவு செய்து, பழைய சாக்குக் கந்தல்களால் துடைத்து, ஏழெட்டடி ஆழமுள்ள குழிக்குள் நின்றவனைப் பார்த்து தாயம்மாளுக்கு அன்று இரவெல்லாம் உறக்கம் வரவில்லை. அங்கே வந்த பிறகு, குப்பை கூட்டுபவர்களையும், வாளிகளில் மலம் சுமந்து வண்டியில் ஏற்றிக் கொண்டு செல்லும் தொழிலாளரையும் பார்த்திருக்கிறாள். நானும் இந்த சாதி தான் என்ற உணர்வு முட்டும்.

நாகரிகம் பெருகப் பெருக, டவுன்கூட்டம் நெருங்க நெருங்க, வெளிமலக்குழிகளுடன், சமுதாயத்தின் உள் மலக்குழிகளும் பெருகிவிட்டன.

கழிவறையைத் தேய்த்துக் கழுவுகையில் அங்கு கிடந்த பீடித்துண்டுகள் அவளைப் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. இதற்கு முன் இங்கு புகை பிடிப்பவர்களே வந்ததில்லை என்று சொல்ல முடியாது. வெற்றிலை பாக்கு புகையிலை போடுபவர்கள், புகை குடிப்பவர்கள் எல்லாருமே வந்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் கூடம் அவளுக்குத் தெரிந்து புனிதமானதாகவே இருந்திருக்கிறது. அந்த நிழலே அவளுக்கு மற்றவர்களிடம் ஒரு மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

சொர்ணம் குரல் கொடுத்துக் கொண்டே வருகிறாள்.

“என்னம்மா, வூடு திறந்து ஜிலோன்னிருக்கு, நீங்க இங்க இருக்கீங்க?”

‘வாம்மா, என்ன விசயம் ? குடமும் கையுமா வந்திருக்க?”

“ஒரு குடம் தண்ணி எடுத்திட்டுப் போறம்மா? பாவம், நா, வேல செய்யிற வூட்டுல கெணறு வத்திப் போயிடிச்சி. அய்யா வேற துபாயிலிருந்து வராங்க. இந்த வருசம் புதுசாக் கட்டின வூடெல்லாம் கெணறு வத்தி தண்ணியில்லாம போச்சு. ஒரு மழ பெய்யல. துரு வாருனா தண்ணி ஊறும்னு, சுகுணா ஸ்டோர்ஸ் காரங்க வூட்டுல வாரு ணாங்க. உள்ளதும் போயிட்டது. போர் போடுறாங்க. லாரி தண்ணி தா ஒரு வாரமா வாங்குறாங்க. குடிக்க ஒதவாது…”

“யாரு, அன்னக்கு, புள்ளய ஸ்கூல்லேந்து அழச்சிட்டுப் போனியே அந்த வூடா?”

“ஆமாம்மா. பங்களாவூட்டுக் கெணறு, எப்பவும் வத்தாது. தோட்டக்கெணறு. அத்த இடிச்சி ஃபிளாட் கட்டுறாங்க. அந்தப் பக்கம் காஞ்சிபுரம் ரோடு வருதாம். இடிச்ச வங்க, முதல்ல கேணில கண்டதையும் போட்டுத்துத் துட்டாங்க… கொடும…”

“சரி, சரி, நீ தண்ணி எடுத்திட்டுப் போ!”

ராட்டினம் கிரீச் கிரீச் சென்று சத்தமிடுகிறது.

“சொர்ணம், எண்ணெய்த் துணி கொண்டாரேன், கொஞ்சம் போடு. கேணிச் சுவரில ஏறிப் போட பயமாயிருக்கு நின்ன வாக்குல எட்டல.”

உள்ளே சென்று, விளக்கெண்ணெய்க்குப்பியை எடுத்து ஒரு கிழிந்த துணியில் ஊற்றிக் கொண்டு வருகிறாள். சொர்ணம் தண்ணிரைக் குடத்தில் ஊற்றி, அதில் ஒரு மூடியைப் போட்டு அப்பால் வைத்துவிட்டு ஏறி நின்று எண்ணெய் போடுகிறாள்.

“பத்திரம்மா, பத்திரம்…”

கீழே இறங்கி, சோப்புத்துண்டைத் தடவிக் கையைக் கழுவிக் கொள்கிறாள்.

“அவுரு. இல்லையா?.”

“யாரு?…”

“அதா, காரியக்காரரு… நார்த்தங்கா வோணுமான்னு கேட்டாரு. அம்மா என்ன வெலன்னு கேட்டுட்டுவரச் சொன்னாங்க. பத்து ரூபாக்கு ஆறுகான்னு மார்க்கெட்டில வச்சிருக்கா. இது புதிசா இருக்கும், வாங்கியான்னு அம்மா சொன்னாங்க. அதா கேட்டே… இங்கே எங்க நார்த்த மரம் இருக்கு ?”

“அவுரு வருவாரு, அவருகிட்டயே கேளு” என்று சொல்லி அனுப்புகிறாள். சற்றைக்கெல்லாம் ரங்கன் வருகிறான்.

“ஏம்மா, அந்தப் பொம்புள இங்கேருந்தா தண்ணி எடுத்திட்டுப் போவுது?”

“ஆமா, புதுசா வந்திருக்கிற காலனில ஒரு வீட்ல வேலை செய்யிறா. குடிக்கத் தண்ணி இல்ல, ஒரு குடம் எடுத்திட்டுப் போறேன்னா…”

“அப்படீன்னா, விட்டுடறதா?…” விழிகள் உருள அவன் குரலின் ஏற்றம் ஒரு எசமானனுக்குரிய தோரணை காட்டுகிறது.

“ஏம்ப்பா, இந்த வீட்டு நிழல்ல ஒதுங்கி, கேணி நிறைய ஆண்டவனருளால நல்ல தண்ணி இருக்கறப்ப தாகத்துக்குக் குடிக்கப் பிச்சை கேட்டாப்பல வரவங்ககிட்ட இல்லேன்னு சொல்லச் சொல்லுறியா? அது என்னால முடியாது.”

“அந்தப் பொம்புள அதைப் பாக்கெட் போட்டுவிக்குது, பெரிய பஸ் ஸ்டாப்புல ஒரு குடத்துக்கு இருநூறு முந்நூறு சம்பாதிக்கும்?”

இவளுக்குப் புரிகிறது. திரும்பிப் பார்த்துக் கொண்டு “நீயும் வாணா, எடுத்து வித்துக்க. நான் தடையா இருக்கல.”

அவன் எதுவும் பேசவில்லை.

அத்தியாயம்-8

இவள் மனம் அமைதியிழக்கிறது. இந்த வீட்டைக் கட்டிக் காத்துக் கொண்டு இவள் எதற்காக இருக்க வேண்டும்?. ஆனால் எங்கே போவது? நிழலிலேயே இருந்து பழகிவிட்டால் என்ன? சொந்த நிழல் என்றோ, சொந்தமில்லாத நிழல் என்றோ ஒன்று கிடையாது. எல்லாம் மனசைப் பொறுத்தது. அவள் ‘மகன்’ அன்று வந்து கெஞ்சினான். போகப் பிடிக்கவில்லை. ஏன்? ஏன்?

வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது.

காந்தி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போன போதுகூட அந்த வீட்டில் அப்படி ஒரு துயரம் வந்து கவ்வவில்லை. ஊர் உலகமே அழுதது. ரகுபதிராகவ ராஜாராம், ஈசுவர அல்லா தேரே நாம் என்று, ஆங்காங்கு பிரார்த்தனைக் கூட்டம் கூடினார்கள். உண்ணாவிரதம் இருந்து துக்கம் காத்தார்கள். ஆனால் துக்கம் என்பது, அப்படிப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இல்லாமல், குறிபார்த்துச் சேதப்படுத்தும் அம்பாக, இம்சையாக வந்து விடிந்தது.

சுதந்தரம் வந்த பிறகு, எஸ்.கே.ஆர். தேர்தலில் நிற்க வேண்டும் என்று, கட்சித் தலைவர்கள் பலரும் அவரைக் குருகுலம் வீட்டில் வந்து பார்த்தார்கள்; வற்புறுத்தினார்கள். அவருக்குத் தொகுதி ஒதுக்கினார்கள்.

“பதவி இல்லாத மக்கள் சேவையே இதுவரையிலும் நான் செய்தது. இனியும் எனக்குப் பதவி வேண்டாம்…” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். அவள் புருசனுக்குத்தான் மிகுந்த ஏமாற்றம்.

“என்ன ஆளு இவுரு? நேரு ஐயா தூதனுப்பிக்கூட வானாம்ன்னு சொல்றாரு?” என்று முண முனுப்பான்.” “பொழுதுக்கும் இந்தத் தோட்ட வேலை எடுபிடி வேலைன்னு பவுசில்லாம கிடக்கிறதுக்கு, நம்ம ஊரு நாட்டுல போயி பிழைச்சிக்கலாம்..” என்பான். அப்படியும் போகவில்லை. அந்த வளைவில்தான், மூன்று குழந்தைகளையும் அவளையும் விட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தான். குடித்துவிட்டு இசைகேடாக விழுந்து மண்டையில் அடிபட்டுப் போனான்.

நேரு இறந்து போவதற்கு முன்புகூட அவரை எல்லோரும் வந்து கேட்டார்கள். சீனாவோடு போர் வந்தது. ராதாம்மாகூட வளையல்களைக் கழற்றித் தங்கம் கொடுத்தார்கள். தங்கத்துக்கு மாற்றுக் குறைந்தது. காங்கிரசுக்காரன், தமிழ்ப் பெண்ணின் ‘தாலியை’ப் பற்றி இழுப்பது போல் நோட்டீஸ் அச்சடித்து ஒட்டினார்கள்…

ஆனால் இது, நடந்த நாள் குடியரசு தினம். வித்யாலயத்துச் சுவர்களில் இந்தி ஒலிக, தமிழ் வால்க என்று எழுதியிருந்ததைப் பார்த்து விட்டு உள்ளே வந்து சுப்பய்யா, பராங்குசம் எல்லோரிடமும் வந்து சொன்னார். ‘இதைக்கூட ஒழுங்காக எழுதத் தெரியவில்லை!’ என்று சுப்பய்யா, மையை எடுத்துக் கொண்டு போய்த் திருத்தினான். ‘ஒலிக’ன்னா, நேர் மாறாகப் பொருள்…” என்று சிரித்தது அவளுக்கு நினைவு இருக்கிறது.

கொடியேற்றிவிட்டு, வேறு பல பள்ளிக்கூடங்களில் அவர் கொடியேற்றிக் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளப் போனார். அப்போது ராதாம்மா அங்கு இருந்தாள். குழந்தை ‘விக்ரம்’ மூணுநாலு வயசிருக்கும். பள்ளிக்கூட வளாகத்தில், பாட்டு, பேச்சு, நாடகம் என்று தொடங்கி நடந்து கொண்டிருந்தது.

அப்போதுதான் போலீசு வண்டியும் கூட்டமுமாக உள்ளே நுழைந்தது. அம்மாவும் சுசீலா டீச்சரும் திடுக்கிட்டு ஓடினார்கள். இந்தி கலவரம் அப்போதெல்லாம் அதிகமாகவே இருந்தது. இந்தி பிரசார சபாவில் நுழைந்து, புத்தகங்களை நாசம் செய்தது.

தீ வைத்து, உள்ளிருந்தவர் சட்டையைக் கிழித்தார்கள் என்றெல்லாம் செய்தி கேள்விப்பட்டார்கள். ஆனால் அது இந்த அய்யாவுக்கே வரும் என்று அவள் நினைத்திருக்கவில்லை.

குருகுலம் வீடு, பள்ளிக் கொட்டகைகள், மரங்கள் ஆகிய சூழலில், தனியாக, பழைய கால மச்சுவீடாகத் தெரியும். முன்புறம் ஒரு பெரிய வேப்பமரம் கிளைகளை விரித்து நிழல் பரப்பும். வாயில் வராந்தாவின் குட்டைச்சுவரில் ராதாம்மா உட்கார்ந்து புத்தகம் படிப்பாள். வராந்தவைக் கடந்த பெரிய கூடத்தில்தான் தேசத்தலைவர்களின் படங்கள் இருந்தன. கீழே அமர்ந்து தான் பேசுவதோ, நூற்பதோ, பிரார்த்தனைக் கூட்டம் நடத்துவதோ செய்வார்கள். அங்கே தான் அவரை வண்டியிலிருந்து இறங்கிக் கூட்டி வந்தார்கள்.

முதன் முதலில் உள்ளிருந்த அவள்தான் விரைந்து வநதாள்.

“தாயம்மா, பேசினில் தண்ணிர் கொண்டு வா!” என்று சொல்லி அம்மா, அவர் காயங்களைத் துடைக்கப் பஞ்சும் துண்டும் கொண்டு வந்தார். ஒரு சாய்மான் திண்டைக் கொடுத்து உட்கார வைத்தார்கள். கதர்ச் சட்டை தாராகக் கிழிந்து தொங்க, உள்ளே இரத்தக் காயம்… சமையல் செய்து கொண்டிருந்த ருக்குமணி, இவள் மருமகன் பாப்பு, பஞ்சமி புருசன்… அவனை ஏனோ பாப்பு என்று கூப்பிடுவார்கள். கந்தசாமி ‘எலக்ட்ரிக்’ வேலை தெரிந்தவன்.

எந்த தீபாலங்காரமும் ஒயர் இழுந்து அவன் செய்வான். அவன்தான் கூட்டத்தை விலக்கி, டாக்டர் வர வழி செய்து, மருந்து வாங்கி வந்து, உதவினான். அன்று அவன் குடியரசு நாளை முன்னிட்டு, கூடத்தில் இருந்த படங்களுக்கு ஸூரீயல் பல்ப் வேலையில் இருந்தான். ஸ்டூலில் அவன் நின்ற போதுதான் எதிர்பாராதது நடந்திருக்கிறது.

‘அய்யா, ஒரு ஈ குஞ்சுக்குக் கூடத் தீம்பு பண்ண மாட்டாரே? அவருக்கு இது எப்படி நடந்தது? இப்ப சுயராச்சிய ஆட்சிதான நடக்குது? …” என்று புலம்பினான்.

“ஸார், கம்ப்ளெயின்ட் புக் பண்ணி, எஃப்.ஐ.ஆர். போட்டுடறோம்” என்று போலீசு அதிகாரியே சொன்னது கேட்டது.

“அப்பா, நீங்கதா இந்த அரசியலும் வோனாம் மண்ணாங்கட்டியும் வாணாம்னு ஒதுங்கியிருக்கிறீங்களே? இப்படி எதுக்கு அங்கிரமம் பண்ணாங்க?” என்று ராதாம்மா ஆற்றாமைப்பட்டாள்.

“நாட்டுக்கு சுதந்தரம்னு உங்ககாலத்தில் கனவு கண்டது நடந்தாச்சு. இங்கேயே கொண்டாடிய குடியரசு தின விழா இல்லாமல் வேறெ இடங்களுக்குப் போக வேணுமா?…”

“பிரிட்டிஷ் ஆட்சியில் கூட உங்களுக்கு இப்படி எதுவும் நேரல. காலில்தான் சாட்டையடி விழுந்தது. சட்டையைக் கிழித்து, கீறி கல்லடி கொடுத்து… இந்தி படிக்காட்டி போகட்டும். இப்படி ஒரு வன்முறையில் ஈடுபடணுமா?… இன்னும் கேஸ், கீஸென்று போனால் என்னென்ன நடக்குமோ தெரியலியே?…” என்று அம்மா புலம்பினார்.

“இல்லீங்கம்மா, இந்தக் கும்பல் கொள்ளி எடுத்திட்டு திரிவது, வெறும் ஸ்கூல் பிள்ளைகளின் எதிர்ப்பு இல்ல. திட்டமிட்டு பிள்ளைகள் மனசில் விஷம் விதைச்சு, இந்த சந்தர்ப்பத்தை நெருக்கடியாக்கியிருக்காங்க. நேத்து தெற்கே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை அடித்துப் போட்டு எரிக்க முயற்சி நடந்திருக்கு. அய்யா உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிருக்கலாம். இத இப்படி சும்மா விடக்கூடாது. கேஸ் புக்பண்ணி…” என்று போலீசுக்காரர் சொன்ன போது, அய்யா அவர் கையைப் பற்றிக் கொண்டார். “கேசும் வானாம், ஒண்னும் வாணாம். இந்த நாட்டு அரசியல் இப்படித் தாறுமாறாக் குழம்பும்னு நான் நினைக்கல. எல்லாரும் துடிப்புடைய பள்ளிப் பிள்ளைகள். குமரப் பருவத்து வேகம். அவர்களுடைய எதிர்காலம் கெடக் கூடாது. கொள்ளி எடுத்தவன், கொளுத்தியவன், கொலை செய்ய வன்முறையில இறங்கியவன்னு நம் கண்களிலேயே நாம் திராவகம் ஊத்திக் கொள்ளுற செய்கை- எதிர்வினை வேணாம். அவர்கள் அமைதி வழியில் செல்லாததற்கு நாமே காரணம்னு உறுதிபடுத்தக் கூடாது. குழந்தை தீயின் பக்கம் உட்கார்ந்து குச்சி கொளுத்துகிறது. அம்மா அதை வாங்கித் திருப்பிச் சூடுபோடுவாளா? விடுங்கள். நாம்தான் இப்ப பாடம் கற்றுக் கொள்ள வேணும். எப்படி இந்த எழுச்சியைச் சமாளிக்கலாம்னு பார்க்கணும்…”

“இது எழுச்சி இல்லை ஐயா. இது ஒர் அரசியல் கட்சியின் சூழ்ச்சி. பிள்ளைகளைத் துருப்புச் சீட்டாக்குகிறார்கள்.”

“இருக்கட்டும். எப்படியும் வன்முறைக்கு வன்முறை தீர்வு அல்ல…”

கூட்டம் கலைந்து போயிற்று. அந்தப் போலீசு அதிகாரி இப்போது ஒய்வு பெற்றிருப்பார். எங்கிருக்கிறாரோ, என்னமோ?

அந்த இரத்தக்கரை படிந்த வேட்டி, கிழிந்த சட்டை எல்லாவற்றையும் அவள்தான் சோப்புப் போட்டுத் துவைத்து உலர்த்தினாள்.

அய்யா அன்று முழுதும் பச்சைத் தண்ணீர் அருந்தவில்லை. “யாரும் என்னை வந்து பார்க்க வேண்டாம் என்று சொல்லம்மா.” அலுவலக அறையில் தொலைபேசியின் பக்கம் சுப்பய்யாதான் உட்கார்ந்திருந்தான்.

எதிரே, காந்தி படம், கஸ்தூரிபா அம்மையின் படம்… பக்கச் சுவர்களில் அப்போதைய தேசத்தலைவர்களின் படங்கள். ஸீரியல் பல்ப் எரிய இணைப்புக் கொடுக்கவில்லை.

கண்களில் நீர்வழிய விம்மினார். அப்படி அவர் துயரத்தை வெளிப்படுத்தி அவர்கள் கண்டதில்லை.

“அப்பா, வெறுமே பட்டினி இருக்கக் கூடாது. கொஞ்சம் கஞ்சி குடியுங்கள்…”

“வேண்டாம்மா…’என்று சைகை காட்டினார்.

“ராதா, நீ வேணா, தம்புரா வச்சிட்டு ஹரிதுமஹரோ பாடு!” என்றார் அம்மா. அவள் தம்புரை எடுத்து வந்து உட்கார்ந்ததும் விக்ரம் ஓடி வந்து விட்டது. “நானும்… நானும்…”

தம்புரை அவள் மீட்ட முடியாமல் தொந்தரவு செய்யவே “தாயம்மா, குழந்தையை மரத்தடிப் பக்கமோ தோட்டத்துக்கோ கொண்டு போய் விளையாட்டுக் காட்டு!” என்றார் அம்மா.

குழந்தை கையையும் காலையும் உதறிக் கொண்டு முரண்டு பிடித்தான். அவள் அவனைப் பற்றி வளாகத்தில் கொண்டு சென்றாள். பசு, கன்று, மற்ற பிள்ளைகளின் கொஞ்சல், எதுவுமே அவனை மாற்றவில்லை. அவள் பின்னாலிருந்த தங்கள் குடிலுக்குத் துரக்கிச் சென்றாள். கிணறு, துளசி மடம், மல்லிகைக் கொடி என்ற பசுமையான சூழல், பஞ்சமி அப்போது கடலூர் பக்கம் கிராம சேவிகாவாக இருந்தாள். பாப்பு வந்து வந்து போவான். சந்திரி எஸ்.எஸ்.எல்.ஸி. முடித்து, ஆஸ்பத்திரி பயிற்சிக்குச் சேர்ந்திருந்தாள். குருவிகளைக் காட்டிக் கொண்டு, அரிசி நொய்யை முற்றத்தில் இறைத்தாள்.

‘அய்யாவுக்கு இப்படிச் செஞ்சவுங்க யாரு தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டே பாப்பு நின்றான்.

மனதில் சந்தேகம் குத்திட அவள் விழித்துப் பார்த்தாள்.

“அவங்க ஸ்கூல்தா…”

அவள் திகைத்துப் போனாள்.

ஒன்பது, பத்து என்று தேறாமல் அரசியல் பேசிக் கொண்டு திரிந்தது அவள் உணர்வில் படிந்தது. அடுக்குத் தமிழ் பேச்சு, பாட்டு, நாடகம், சினிமா என்று பாதி நாட்கள் வீட்டுக்கே வருவதில்லை.

வந்தாலும், சோத்தைப் போடு என்ற அதட்டல்தான். சந்திரி டிரெயினிங் சேர்ந்த பிறகு வாரத்தில் ஒருநாள்தான் வருவாள். பஞ்சமியும் இல்லை. இவள் அநேகமாக சாப்பாட்டுக் கூடத்தில் இருப்பாள். இவன் ஒருத்தனுக்கு சில நாட்களில் அந்தச் சாப்பாடே கொண்டு வந்து வைத்திருப்பாள். வெறுமே தான் வாயிற்கதவைச் சாத்தியிருப்பாள். “இதென்னம்மா சோறு? எனக்கு வாணாம் போ!”என்று கோபித்துக் கொண்டு போவான். தட்டைத் தள்ளியிருப்பான்.

சந்திரி பூப்போட்ட சில்குச் சேலை உடுத்திக் கொண்டு எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தாள் அன்று.

“எங்கடீ?”

“ஆஸ்பத்திரிக்குத்தா. இன்னிக்கு நைட். தெரியுமில்ல?”

“அதுக்கு ரெண்டு மணிக்கே சீவிச்சிங்காரிச்சிக்கிட்டுக் கிளம்புற?”

“ஃபிரன்ட்ஸ் கூட சினிமாக்குப் போறோம்மா, அஞ்சறைக்கு முடிஞ்சதும் ஏழுமணி ட்யூட்டிக்கு அப்படியே போயிடுவேன். மிட்லன்ட்…”

“நீ காலைல கூடச் சொல்லாம, இன்னிக்குப் பாத்து என்ன சினிமா? ஊரே அல்லோலமாயிருக்குது?…”

“என் ஃபிரன்ட் டிக்கெட் வாங்கி வச்சிருக்காம்மா. காலையில இங்க கொடியேத்தம், பிறகு கலவரம், பேச முடியல. கலவரம்னா, நேர ஆஸ்டலுக்குத்தா போவே…” என்று கூறிவிட்டுப் போகிறாள். குழந்தை பாப்புவிடம் விளையாடிக் கொண்டிருந்தான். இவளுக்கு மனம் கொள்ளவில்லை.

அனுசுயாவும் சுசீலா டீச்சரும் விழா நடந்த இடத்தில் போடப்பட்ட விரிப்புகளைச் சுருட்டிக் கொண்டிருந்தார்கள்.

“தாயம்மா, பாப்பு எங்கே? இங்கே அஞ்சாறு பிள்ளங்க வெளில போகவே பயப்படுதுங்க. லஸ், குளத்தங்கரைப் பக்கம் தான் வீடாம். அவனக் கொண்டுவிட்டுட்டு வரச் சொல்லு…”

“ஏம்மா? அவ்வளவுக்கு கலவரமா ?”

“இல்ல ஆயா, வெளியே சில பாய்ஸ், வந்து நாங்க இந்தி படிக்கிற ஸ்கூல்ன்னு, தாலியக் கட்டிடுவோம்னு மஞ்சக்கயிறு வச்சிட்டு நிக்கிறாங்க. இந்தி நோட்டெல்லாம் வாங்கிக் கிழிக்கிறாங்க…”

“அட பாவிகளா? எவன்டாவன்? குலைய உருவிப் போடுறே? இவனுவ வாணா படிக்க வானாம்? அதுக்குன்னு ஏ, ஊரைக் கொளுத்தறானுவ? நீங்க வாங்கம்மா, உங்க வீடுகள்ள நான் பத்திரமா சேக்குறேன் ? ஏன் பயப்படுறீங்க?… தாலியா கட்டுறானுவ?”… அடிவயிற்றிலிருந்து கிளர்ந்து வந்தது. அந்தக் குழந்தைகளை அவள் அன்று நடத்திக் கொண்டு வீடுகளில் சென்று சேர்த்தாள். ஆங்காங்கு போக்கற்ற விடலைகள் நின்று கொண்டிருந்தார்கள். எங்கே பார்த்தாலும், சுவர்களில் தட்டிகளில் கரிக்கோட்டால் இந்தி அரக்கி! போட்டு அடிப்பதுபோல் படம். திரும்பி வரும் போது, கொடும்பாவி கட்டி இழுத்துக் கொண்டு, தேனாம்பேட்டைச் சந்தொன்றில் கோசம் போட்டுக் கொண்டி ருந்தார்கள். எங்கு பார்த்தாலும், இந்திக்குப் பாடை; தமிழுக்கு மேடை தமிழுக்கு உயிர் இந்திக்கு மயிர் என்பது போல் கொச்சையான வசவுகளும், எதிர்ப்பதங்களுமாகச் சுவர்கள் அசிங்கப்படுத்தப்பட்டிருந்தன. தேசியக் கொடிகளும்கூட கவுரவம் பெற்றிருக்கவில்லை.

கப்பலே கவிழ்ந்த துயரத்துடன் திரும்பி வந்தாள். அடுத்த வாரம் பஞ்சமி வந்த போது, இவள் கண்ணிர் வடித்தாள். இந்தித் தீ, மாநில மெங்கும் பற்றி எரிந்தது.

“எம்மா, உங்கப்பாரு, திருட்டுச் சாராயத்தக் குடிச்சிட்டு இப்பிடிப் பின்பக்கமா நுழைவாரு. ‘இப்பிடி பால் வாத்த இடத்துல நஞ்சக் குடிச்சிட்டு வரீங்களே’ன்னு அடிச்சிப்பேன். போலீசு புடிச்சிட்டுப் போயிடும். “தாயம்மா, போ, ஜாமின் கட்டிட்டுக் கூட்டியா”ம்பாரு. கடசில அஞ்சும் குஞ்சுமா விட்டுட்டுச் செத்தாரு உங்க மூணு பேரையும் இந்த நிழல்லதா வளர்த்தேன். அவன் எப்படி இப்படியானான்?

இங்க வந்தா, “இதென்ன சோறு, மனிசன் திம்பானா? இந்த வீட்டுல, ஒரு “பண்டம் ருசியா, கிடையாது. சாதில பெரிய… அய்யிருன்னு நெனப்பு. இங்க யாரும் உசந்ததில்ல. எல்லாம் கோழியடிச்சி, ஆடடிச்சிக் கறி தின்னவங்க வேசம் போடுறாங்க. எங்கப்பாரே உன்னாலதா செத்தாருன்னு எல்லாரும் சொல்றாங்க” என்று கத்திக்கச்சை கட்டினான். மீசை அரும்பித்துளிர்க்க, அடங்காத காளையாக கைமாறிப் போனான்.

மெல்ல மெல்ல அவனாகவே துண்டித்துக் கொண்டான். அந்த அடியில் இருந்து அய்யா தேறவேயில்லை.

அன்றாடம் கத்தலும் கோசமும், பள்ளிக் கூடங்களை அடைக்கச் சொல்லி, கறுப்புக் கொடிகாட்டுதலும் அங்கே அரங்கேறின. அவள் மைந்தன் தலைமையிலேயே காலிக் கும்பல் வித்யாலயத்துள் நுழைந்தது.

உள்ளேயே இருந்த விடுதிச் சிறுவர் சிறுமியர் பலரும் பெற்றோரற்றவர்கள். சுப்பய்யாவும் மருதமுத்துவும் வன் முறையைச் சந்தித்தார்கள். பள்ளி மூடப்பட்டது.

அந்த வருசம் பாடங்கள் சரியாக நடக்கவில்லை. கோடை விடுமுறையோடு, அய்யா குடும்பம், பெயர்ந்து இந்த இடத்துக்கு வந்தது. பராங்குசம், நிர்வாகியானான்.

அவர் வைத்திருந்த காரை அன்றே காலிக் கும்பல் நசுக்கி உடைத்துவிட்டது. அதற்குப் பிறகு அவர் கார் எதுவும் வாங்கவில்லை. இங்கே வந்த பிறகு, சைகிள் ரிக்சாவில், தாம்பரம் ரயில் நிலையம் சென்று, மாம்பலத்தில் இறங்கிப் பள்ளியைப் பார்வையிட நடந்தே செல்வார். சில நாட்களில் வெளியூர் பஸ்களில் ஏறிச் சென்றும் இறங்கிக் கொள்வார். அப்போது, யார் யாரெல்லாமோ அந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

அப்போது… ராதாம்மா குழந்தையுடன் பம்பாயில் இருந்ததாக நினைவு. அவள் பையன் அந்த வீட்டுக்குள் வந்தான்.

– தொடரும்…

– உத்தரகாண்டம் (சமூக நாவல்), முதற்பதிப்பு: டிசம்பர் 2002, தாகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *