இலுப்பைப் பூ ரகசியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 6,898 
 

பண்ருட்டி வழியாகப் போகும்போது காற்றில் சிறகு கட்டி அலைந்த இலுப்பைப் பூவின் வாசம் ஏனோ அமுதாவை நினைவு படுத்தியது. அமுதாவும் நானும் அந்தப் பெண்கள் விடுதியைவிட்டு வெளியேறியது ஒரு துரதிர்ஷ்டம் சார்ந்த சுவாரஸ்யமான அனுபவம்.

ஓர் அதிகாலையில், எங்கள் அறைக்குள் இருவர் நின்றிருந்தனர்.அன்றைக்கு நான் 12 மணிக்கு மேல் தூங்கியதாக ஞாபகம். எங்கள் அறையிலிருந்த காமாட்சிதான் முதலில் அவர்கள் இருவரையும் பார்த்துச் சத்தம் போட்டாள். அப்போது மணி 1 இருக்கலாம். தொடர்ந்து, அறையிலிருந்த ஆறு பேரும் சத்தம் போட்டதில், அந்த இரண்டு பேரும் ஷெல்பிலிருந்த வாட்ச், மோதிரம் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மெள்ள நடந்து வெளியே போய், எங்களை உள்ளே வைத்துக் கதவைக் தாழிட்டனர்.

உண்மையில் என்ன நடக்கிறதென்று தெளிவாகத் தெரியாமல்தான் அதிர்ச்சியில் தன்னிச்சையாக நான், பொம்மி, ஷர்மி எல்லோருமே கூச்சலிட்டு இருக்கிறோம் என்பது மெதுவாகவே தெரிந்தது, யார் யார் ஷெல்பிலிருந்து என்னென்ன பொருட்கள் திருடு போயிருக்கின்றன என்பதைப் பார்த்தபோதுதான் எனது ஷெல்பில் புடவைகள் காணாமல் போயிருப்பது தெரிந்தது. விடுதி வார்டனுக்கு நான் போன் செய்து, அவர்கள் வந்து கதவைத் திறந்துவிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு மேலாகியிருந்தது.

அதைவிடவும் ஆச்சர்யம்… ஏதோ விக்கிர மாதித்தன் கதையைக் கேட்பது போலொரு பாவனையில், ‘‘சரி, தூங்குங்க’’ என்று சொன்னது தான். வார்டனின் கணவர் எங்கள் அறையை ஒரு சி.பி.ஐ. அதிகாரி போல் பார்த்துவிட்டு வெளியேறினார்.

‘‘இப்படிச் சொன்னா எப்படி? போலீஸைக் கூப்பிடுங்க’’ என்றாள் அமுதா.

‘‘காலைல பாத்துக்கலாம்மா! இது அவசரப் படுற விஷயமில்ல. பொண்ணுங்க ஹாஸ்டல்!’’ என்றபடி, மேலும் பேச விருப்பம் இல்லாதது போல் வார்டன் நடந்தார்.

கதவைப் பூட்டிவிட்டு, அமுதா சுவரில் காலை எட்டி உதைத்தாள். இந்தக் கோபம் அமுதாவிடம் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று. எதைச் சொல்லவேண்டுமோ அதை அமைதியாகவே சொல்லிக்கொண்டு போகிறவள் கோபப்படும் தருணங்கள் அழகானவை!

அமுதாவும் நானும் ஒரு வானொலி நிலை யத்தில் முதலில் பணியாற்றிக்கொண்டு இருந்தோம். சந்தோஷமற்ற வாழ்க்கையின் பிரதிபலிப்பாய் நிகழ்வுகள் என் வாழ்வின் நடந்தபடி இருக்க, அமுதா எனக்கு மிகவும் நெருக்கமானாள். தனிமையின் கொடூரத்தில் நான் சிக்கித் தவித்த தருணங்களில் அவள் என் மடியில் படுத்துக் கொண்டு, சிண்ட்ரெல்லா கதை கேட்டிருக்கிறாள். என் மகனை இழந்து நான் தவித்தபோது, ‘‘நான் தான் அவனாம்’’ என்று என் கன்னங்களை ஏந்தியபடி சொல்லியிருக் கிறாள். தாஸ்தாயெவ்ஸ் கியின் அல்யூஷா மாதிரி, ‘நான் மரித்த பிறகு என் கல்லறையின் மீது ரொட் டித் துண்டை வைத்துவிடு. அதைச் சாப்பிட வரும் பறவைகளின் இரைச்சல் என் தனிமையைக் கிழிக் கட்டும்’ என்றபோது அவள் கன்னத்தில் கோடு களாய் கண்ணீர் இறங்கி யிருக்கிறது.

கிட்டத்தட்ட என் நிழல் போலிருந்த அமு தாவை நான் பிரிவேன் என்று நினைத்ததில்லை. ஆனால், நினைப்பது போல் அமைவதில்லையே வாழ்க்கை? சந்தர்ப்பங்களின் வலையில் எல்லோ ரும்சரிவதுண்டு. அப்படித்தான் நானும் அவளும் சரிந்து விரோதத்தை வாரியணைத்துக் கொண் டோம்.

விடுதியில் திருட்டுப்போன பொருட் களைப் பற்றி நான் அலுவலகத்தில் தற்செயலாகச் சொன்னேன். அப்போது நான் ஒரு தினசரியில் வேலை பார்த் துக்கொண்டு இருந்தேன். ரிப்போர்ட் டராக இருந்த நண்பர் அதை ஏரியா போலீஸில் சொல்ல, நான் அலுவல கத்தைவிட்டு விடுதிக்குச் செல்லும் முன்பே போலீஸ்காரர்கள் விடுதிக்குச் சென்றிருக்கிறார்கள். அப்போது அமுதா ஒரு தொலைக்காட்சியில் பொறுப்பாளராக இருந்தாள். போலீஸ் வந்தது குறித்து அவளுக்குச் சந்தோஷம்.

போலீஸ் வந்த பிறகுதான், அந்த விடுதிக்கு லைசென்ஸே இல்லை என்பது தெரியவந்தது. வார்டனும் வார்டன் கணவரும் எங்களை விரோதியைப் போலப் பார்த்து, போலீஸ் போனவுடன், ‘‘உங்க மீடியா திமிரைக் காட்டுறீங்களா? கேஸ் போட்டு உங்களை உள்ள வைக்கிறோம் பாருங்க’’ என்றனர்.

வார்த்தைகளின் சூடு எங்களைப் பொசுக்க, நான் மறுபடியும் ரிப்போர்ட் டர் நண்பரைத் தொடர்பு கொண் டேன். அரைமணி நேரத்தில் போலீஸ் மீண்டும் வந்து ஹாஸ்டல் முழுக்கச் சோதனை போட்டார்கள். ‘‘வாய் பேசுறியா நாயே? ஜட்டியோட நடக்க வெச்சு இழுத்துட்டுப் போவேன். லேடீஸ் ஹாஸ்டல் நடத்துற லட்ச ணமா இது?’’ என்று கத்த, வார்டன் கணவர் நடுங்கினார்.

‘‘திருட்டுப் போன சாமானுக்கான பணத்தைக் கொடுத்துடுறோம்’’ என்று பவ்வியமாகப் பேசி, அவர்கள் முன் எங்களிடம் கையெழுத்துப் போட்டு வாங்கிக்கொண்டு பணத்தைக் கொடுத்தனர்.

அதற்குப் பிறகு எங்களால் அந்த விடுதியில் தங்க முடியவில்லை. உடனடியாக அதைக் காலி செய்து விட்டு எங்கு போக என்றும் தெரியவில்லை. எங்கும் தங்க வழியில்லாமல் அமுதா, பொம்மி, நான் மூன்று பேரும் இரண்டு நாள் ஓட்டல் அறையில் தங்கியிருந்தோம்.

எனக்கும் அமுதாவுக்கும் இடையில் கோடு போட்டது பொம்மி தான். பொம்மி ஒரு வகையில் அமுதாவுக்கு நெருங்கின சொந்தம் என்றாலும், அமுதா என்னுடன் நெருக்கமாக இருந்தது அவளுக்கு சங்கடமாக இருந்திருக்குமோ என்று இப்போது தோன்றுகிறது. அப்போது அமுதா இல்லாத நேரங்களில் பொம்மி அமுதா பற்றியும், அமுதாவின் அம்மா பற்றியும் மோசமாகப் பேசியது எனக்குப் பிடிக்காததால், எதுவுமே சொல்லாமல் இருந்தேன்.

‘‘நான் சொல்றது கேக்கா? அம்மு வுக்குப் பசங்க மேல ஒரு கிரஷ் உண்டு.’’

அமுதா எங்களுடன் வேலை செய்த ஒருவரைக் காதலித்தது எனக்குத் தெரியும்; அதைவிட பொம்மி இரவு நேரம் விடுதிப் படுக்கையில் போர்வையைப் போர்த்திக்கொண்டு ‘செல்’லில் நாலைந்து பேருடன் கதைத்ததும் எனக்குத் தெரியும் என்பதால், நான் அமைதியாகவே இருந் தேன். என் வாழ்க்கையும் மறுபடியும் முதலிலிருந்து தொடங்க இருப்பது அமுதாவுக்கும் தெரியும். ஏதோ ஒரு பனிப்போர்வையை எனக்கும் அமுதாவுக்கும் இடையில் பொம்மி விரிக்கத் தொடங்கியது, நாங்கள் மூன்று பேரும் ராயப்பேட்டையில் ஒரு வீடு எடுத்துத் தங்கினபோது புலப்படத் தொடங்கியது.

நாங்கள் பிரிந்தபோது அமுதாவும் நானும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. பின்னர், அந்த வீட்டிலிருந்து என் சாமான்களை எடுக்கவும், வீட்டுக்காக நான் கொடுத்த அட்வான்ஸை வாங்கவும் நான் என் சித்தியோடு போனபோது, என் சாமான்களைத் தனியாக அநாதைப் பிணம் போல் சுருட்டி வைத்து, அதனோடு நான் அமுதாவுக்கு வாங்கிக் கொடுத்திருந்த துணிகளையும் வைத்திருந்தாள். அந்த நிராகரிப்பின் வலி என்னை மின்னல் கிளையாய் ஆக்கிரமிக்க, நொடியில் அந்தத் தவற்றைச் செய்தேன்.

அறையில் நான் ஒட்டி வைத்திருந்த அழகான போஸ்டரை சட்டென்று கிழித்தேன். அவள் என் சித்தியிடம் கணக்குகளை விவரித்துக்கொண்டு இருந்தாள். பொம்மியும் கனத்த பார்வையுடன் சாதித்த உணர்வுடன் நின்றிருந்தாள். பொம்மிக்கு தி.நகரில் ஒரு செருப்பு வாங்கி வந்தது ஞாபகம் வந்தது. என் சித்தியைப் பார்த்து, ‘‘கூட 300 ரூபாயைக் கழிச்சிக்குங்க. செருப்பு வாங்கியிருக்கு’’ என்றேன்.

பொம்மி எரிக்கிற மாதிரி என்னைப் பார்த்தாள். சாகும்வரை அவளை மன்னிக்க மாட்டேன் என்று தோன்றியது. லாயிட்ஸ் ரோடு அருகே வரும் போது, ‘வீட்டு சாவியைத் தரவும்’ என்று பொம்மி எஸ்.எம்.எஸ். அனுப்பினாள். கொண்டுபோய்க் கொடுத்துவிடலாமா என்று ஒரு நிமிடம் தோன்றியது. இரண்டு பேரைப் பிரித்த யாரும் நன்றாகவே இருக்க மாட்டார்கள் என்று சபித் தேன்.

என் ஆற்றாமையை அமுதாவின் அத்தைப் பையனிடமும், அவளது அம்மாவிடமும் தொலைபேசியில் கொட்டித் தீர்த்தேன். பிரிவின் விளக்கங்கள் புரிந்தும் புரியாமலும் நாட்கள் ஓடினபடியே இருந்தன. சித்தி வீட்டில் கொஞ்ச நாள் இருந்தேன். மெள்ள மெள்ள தனிமையும் ஏமாற்றங்களும் என்னைக் கவிந்தபடியே இருந்தன. மின்விசிறி சுழலும் ஒலிகூட என்னை மிரட்சியடைய வைக்குமளவுக்குத் தனிமை என்னை ஆக்கிரமித்தது.

சுயலாபங்களுக்காகக் கைகளை விட்டுச் செல்லும் யாருக்காகவும் வருத்தப்படக் கூடாது என்று தீர்மானித்த தருணம், அந்த வீட்டு சாவியை கூரியரில் அனுப்பிவைத்தேன். அது கிடைத்ததா இல்லையா என்பது தெரி யாமல் போனாலும், அமுதாவைப் பற்றிய சேதிகள் யார் மூலமாவது என்னை வந்த டைந்துகொண்டுதான் இருந்தன. அவள் தற்சமயம் பணிபுரியும் வானொலியில் பணியாற்றும் என் தோழி, அவள் என்னை ரொம்பத் தேடுகிறாள் என்றும், என் குரலைக் கேட்கணும் போலிருக்கு என்கிறாள் என்றும் சொன்னபோது, லேசாகப் புன்னகைத்தேன். நம்பிக்கைகளற்று என் கால்கள் ஆடின.

பொம்மிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று காவ்யா சொன்னாள். அவளது காதலர்களின் வரிசை என் கண்முன் வந்து சென்றது. ஒரு முறை சென்னைக்குச் சென்ற போது, நான் பயணித்த காரில் அமுதாவின் வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்தது. மூக்கடைத்தாற்போல மாறியிருந்தது அவள் குரல். வரவழைக்கப்பட்ட உற்சாகத் துடன் நிகழ்ச்சிக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணைச் செயற்கையாகச் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

காரை ஓட்டின என் நண் பர், என்ன காரணத்தாலோ வேறொரு வானொலி நிகழ்ச்சிக்கு மாற்றி, அதில் ஒலிபரப்பான பாடலை லேசாகமுணு முணுத்தபடி காரை ஓட்டினார். என்றாலும், ஒரு காற்று போல அமுதாவின் குரல் என்னை ஸ்பரிசிக்காமலே என்னைச் சூழ்ந்துகொண்டது. சிறகு முளைக்கும் குரலின் பட படப்பு என்னைக் கவ்வி விடுமோ என்கிற பயத்தில், நான் நகர்ந்து உட்கார்ந்தேன். ஆனாலும், சிறகுகளின் பட படப்போடு ரொட்டித்துண்டு களைக் கொத்தித் தின்னும் பட்சிகளின் பரபரப்பான இரைச்சல் என்னைச் சூழ்ந்தது.

சிக்னல் விழுந்து சிவப்பு விளக்கின் அடியில் கார் நின்றது… ரொட்டித் துண்டுகள் காலியான பிறகு பறவைகளின் இரைச்சல்களற்று உருவாகும் வெற்றிடத்தின் நிசப்தம் போல!

– 21st பெப்ரவரி 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *